Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது

தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது

அதிகாரம் 19

தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது

புகழ்பெற்ற ஒரு ஓவியர் மிகச் சிறப்பான ஒரு ஓவியத்தை அப்போதுதான் வரைந்து முடித்திருப்பதாக வைத்துக்கொள்வோம். சரியாகவே அது மிகவும் நன்றாக இருப்பதாக—தலைசிறந்த ஒரு படைப்பாக அவர் கருதுகிறார்! ஆனால் ஒரே இரவுக்குள் பொறாமையுள்ள எதிரி ஒருவன் அதன் அழகைக் கெடுத்துவிடுகிறான். இது ஓவியருக்கு அதிகமான வேதனையை உண்டுபண்ணும் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த நாசக்காரன் சிறைப்படுத்தப்படுவதைக் காண அவர் எவ்வளவு ஆவலாயிருக்கிறார்! மேலும் அந்த ஓவியர் தன்னுடைய படைப்பை அதனுடைய முன்னிருந்த அழகுக்குத் திரும்பக் கொண்டுவருவதற்கு எத்தனை ஆர்வமுள்ளவராக இருக்கிறார் என்பதை உங்களால் கற்பனை செய்யமுடியும்.

2அந்த ஓவியரைப் போல, யெகோவா பூமியை உண்டுபண்ணி அதில் மனிதவர்க்கத்தை வைக்கையில் ஒரு தலைசிறந்த படைப்பைச் செய்தார். மனுஷனையும் மனுஷியையும் படைத்தப்பின், அவர் தம்முடைய பூமிக்குரிய வேலை அனைத்தும், “மிகவும் நன்றாயிருந்தது,” என்பதாக அறிவித்தார். (ஆதியாகமம் 1:31) ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய சொந்த பிள்ளைகளாக இருந்தனர், அவர்களை அவர் நேசித்தார். அவர்களுக்காக அவர் மகிழ்ச்சியுள்ள, மகிமையான ஒரு எதிர்காலத்தைக் கற்பனைசெய்து வைத்திருந்தார். உண்மைதான், சாத்தான் அவர்களைக் கலகத்துக்குள் வழிநடத்தினான், ஆனால் கடவுளுடைய அதிசயமான படைப்பு சரிசெய்யப்பட முடியாதளவுக்கு சேதமடைந்துவிடவில்லை.—ஆதியாகமம் 3:23, 24; 6:11, 12.

3காரியங்களைச் சரிசெய்ய கடவுள் தீர்மானம் செய்திருக்கிறார். அவர் ஆதியில் நோக்கங்கொண்டிருந்த விதமாக நாம் வாழ்வதைப் பார்க்க அவர் வெகுவாக விரும்புகிறார். தொல்லைகள் நிறைந்த நம்முடைய குறுகிய வாழ்க்கை “மெய்யான வாழ்க்கை” அல்ல, ஏனென்றால் யெகோவா மனதில் வைத்திருப்பதோடு ஒப்பிட இது மிகவும் தரக்குறைவானதாகும். நமக்காக கடவுள் விரும்பும் அந்த “மெய்யான வாழ்க்கை” பரிபூரண நிலைமைகளின்கீழ் ‘நித்திய ஜீவனாகும்.’—1 தீமோத்தேயு 6:12, 19, NW.

4தேவனை அறியும் அறிவு யெகோவாவுக்கு முன்பாக உத்தரவாதமுள்ளவர்களாக்குகிறது. (யாக்கோபு 4:17) ஆனால் அந்த அறிவைப் பொருத்திப் பிரயோகித்து நித்திய ஜீவனுக்காக முயற்சிசெய்தால் நீங்கள் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களை எண்ணிப்பாருங்கள். தம்முடைய வார்த்தையாகிய பைபிளில், யெகோவா தேவன் மிகவும் சமீபத்தில் இருக்கும் பரதீஸிய பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அழகான ஒரு விவரிப்பைக் கொடுத்திருக்கிறார். நிச்சயமாகவே, யெகோவாவின் மக்களாக நாம் ஒரு வெகுமதியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையினால் மட்டுமே கடவுளைச் சேவிப்பதில்லை. நாம் கடவுளை நேசிப்பதால் அவரை சேவிக்கிறோம். (மாற்கு 12:29, 30) மேலுமாக, யெகோவாவை சேவிப்பதன் மூலம் நாம் ஜீவனை சம்பாதிப்பதில்லை. நித்திய ஜீவன் என்பது தேவனுடைய பரிசாக இருக்கிறது. (ரோமர் 6:23) இப்படிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து தியானம் செய்வது நமக்கு நன்மையாக இருக்கும், ஏனென்றால் பரதீஸிய நம்பிக்கையானது யெகோவா எவ்வகையான ஒரு கடவுள்—‘தம்மைத் தேடுகிறவர்களுக்கு அன்பாக பலன் அளிக்கிறவர்’—என்பதைக் குறித்து நமக்கு நினைப்பூட்டுகிறது. (எபிரெயர் 11:6) நம்முடைய மனங்களிலும் இருதயங்களிலும் கொழுந்துவிட்டெறியும் நம்பிக்கை சாத்தானுடைய உலகில் கஷ்டங்களைச் சகித்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும்.—எரேமியா 23:20.

5எதிர்கால பூமிக்குரிய பரதீஸில் பைபிள் ஆதாரமுள்ள நித்திய ஜீவனைப்பற்றிய நம்பிக்கையின்மீது நம்முடைய கவனத்தை இப்போது ஒருமுகப்படுத்துவோமாக. தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்?

அர்மகெதோனுக்குப்பின்—ஒரு பரதீஸிய பூமி

6முன்பு காண்பிக்கப்பட்டபடி, யெகோவா தேவன் சீக்கிரத்தில் தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழித்துவிடுவார். பைபிள் ஹார்மகதோன் அல்லது அர்மகெதோன் என்றழைப்பதை உலகம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வார்த்தை சிலரை, போர் செய்யும் தேசங்கள் கொண்டுவரும் ஒரு அணு ஆயுத போரைப் பற்றி சிந்திக்கும்படியாகச் செய்யக்கூடும், ஆனால் அர்மகெதோன் நிச்சமாகவே அப்படிப்பட்ட ஒன்றல்ல. வெளிப்படுத்துதல் 16:14-16 காண்பிப்பது போலவே, அர்மகெதோன் என்பது ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்.’ அது “பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை” அல்லது தேசங்களை உட்படுத்தும் ஒரு போராகும். யெகோவா தேவனின் குமாரனாகிய நியமிக்கப்பட்ட ராஜா சீக்கிரத்தில் அர்மகெதோன் யுத்தத்திற்குள் பிரவேசிப்பார். முடிவு முற்றிலும் நிச்சயமாகவே இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்த்து சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறையின் பாகமாக இருக்கும் அனைவரும் நீக்கப்படுவர். யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள் மாத்திரமே தப்பிப்பிழைப்பர்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 19:11-21.

7அந்தப் பேரழிவை நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதாக கற்பனைசெய்துபாருங்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட புதிய உலகில் பூமியின்மீது வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்? (2 பேதுரு 3:13) நாம் ஊகிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் பைபிள் நமக்குச் சொல்கிறது, மேலும் அது சொல்வது கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. சாத்தானும் அவனுடைய பேய்களும் செயலற்றவர்களாக ஆக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது செயலற்ற நிலைமையான அபிஸிற்குள் அடைத்து வைக்கப்படுவர். இனிமேலும் அந்தப் பொல்லாத, கொடிய சிருஷ்டிகள் மறைந்திருந்து, தொந்தரவுகளை ஊக்குவித்து கடவுளுக்கு எதிராக உண்மையற்ற செயல்களை நடப்பிக்கும்படியாக நம்மை தூண்டிவிடமாட்டா. என்னே ஒரு நிம்மதி!—வெளிப்படுத்துதல் 20:1-3.

8காலப்போக்கில் எல்லா வகையான நோய்களும் மறைந்துவிடும். (ஏசாயா 33:24) அப்போது சப்பாணிகள் எழுந்து நிற்பார்கள், நடப்பார்கள், ஓடுவார்கள் மற்றும் ஆரோக்கியமான பலமுள்ள கால்களில் நடனமாடுவார்கள். பல ஆண்டுகள் மெளனமான உலகில் சஞ்சரித்துவந்தப்பின், செவிடர் தங்களைச் சுற்றி சந்தோஷமான சப்தங்களைக் கேட்பார்கள். குருடர் தங்களுடைய கண்களுக்கு மிக அழகான வர்ண உலகமும் உருவங்களும் தெரியும்போது பிரமிப்பில் திணறுவார்கள். (ஏசாயா 35:5, 6) கடைசியாக, அவர்கள் தங்களுடைய அன்பானவர்களின் முகங்களைக் காண்பார்கள்! ஒருவேளை அப்பொழுது அவர்களுடைய பார்வை ஆனந்தக் கண்ணீரினால் மட்டுமே கணநேரம் மங்கலாகிவிடலாம்.

9சற்று சிந்தித்துப்பாருங்கள்! இனிமேலும் மூக்குக்கண்ணாடிகள் இல்லை, மூடவனின் ஊன்றுகோலும் கைத்தடியும் இல்லை, மருந்துகள் இல்லை, பல் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவமனைகள் இல்லை! இனி ஒருபோதும் உணர்ச்சிப்பூர்வமான நோய்களும் மனச்சோர்வும் மனிதரின் மகிழ்ச்சியைப் பறித்துவிடாது. பிள்ளைப்பருவம் நோய் பீடிப்பினால் அழிந்துவிடாது. முதிர்வயதின் நாசங்கள் தலைகீழாக மாற்றப்படும். (யோபு 33:25) நாம் ஆரோக்கியமுள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் ஆவோம். ஒவ்வொரு காலையும் புதுப்பிக்கப்பட்ட சக்தியோடு, புதிய நாளில் சுறுசுறுப்பாக வாழவும் மனநிறைவான வேலையைச் செய்யவும் உற்சாகமும் ஆர்வமும் நிரம்பியவர்களாய் புதுத்தெம்பை அளித்த இரவின் தூக்கத்திலிருந்து விழித்தெழுவோம்.

10அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் செய்வதற்கு மகிழ்ந்து அனுபவிக்கத்தக்க வேலை அதிகமாக இருக்கும். அவர்கள் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றுவார்கள். தூய்மைகெட்ட பழைய ஒழுங்குமுறையின் மிச்சமுள்ள எதுவும் அகற்றிவிடப்படும். சேரிகளும் பாழாக்கப்பட்ட நிலங்களும் பூங்காக்களும் தோட்டங்களும் தோன்றும். அனைவரும் வசதியான இன்பம் தரும் வீடுகளில் குடியிருப்பர். (ஏசாயா 65:21) நாளடைவில், பூமியின் அந்தப் பரதீஸிய பகுதிகள் ஏதேன் தோட்டத்தில் படைப்பாளர் வைத்திருந்த அழகின் தராதரத்தை பூமி முழுவதும் பூர்த்திசெய்யும் வரையாக வளர்ந்து ஒன்றுசேரும். அந்தப் புதுப்பிக்கும் வேலையில் பங்குகொள்வது எவ்வளவு திருப்தியளிப்பதாய் இருக்கும்!

11சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காதபடி இவை அனைத்தும் தெய்வீக வழிநடத்துதலின்கீழ் செய்து முடிக்கப்படும். மனிதர்கள் மிருகங்களோடு சமாதானமாயிருப்பார்கள். வேண்டுமென்றே அவற்றை கொல்வதற்குப் பதிலாக, மனிதன் பூமியின்மீது பொறுப்புள்ள காப்பாளர் வேலையைத் திரும்ப எடுத்துக்கொண்டு அவற்றை நல்லவிதமாக கவனித்துக்கொள்வான். ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும், சிங்கங்களும் கன்றுக்குட்டிகளும் கூடி மேய்வதைக் கற்பனை செய்துபாருங்கள்—வீட்டு விலங்குகள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கின்றன. காட்டு மிருகங்களைக் குறித்து ஒரு சிறு பிள்ளையும்கூட பயப்படுவதற்கு எதுவுமிருக்காது, அல்லது இரக்கமில்லாத கொடூரமான ஆட்களால் புதிய உலகத்தின் அமைதி குலைக்கப்படாது. (ஏசாயா 11:6-8) அது என்னே சமாதானமுள்ள ஒரு புதிய உலகமாக இருக்கும்!

மனிதவர்க்கத்தினர் மாறிவிடுகிறார்கள்

12பூமி முழுவதிலும் ஏன் எந்தத் தீங்கும் செய்யப்படாது என்பதை ஏசாயா 11:9 நமக்குச் சொல்கிறது: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” இது மனிதர்களைக் குறிப்பிடுவதாக இருக்கிறது, ஏனெனில் மிருகங்கள் இயல்புணர்ச்சியால் கட்டுப்படுத்தப்படுவதால் அவை ‘கர்த்தரை அறிகிற அறிவை’ எடுத்துக்கொண்டு மாற்றங்களைச் செய்யமுடியாது. ஆனால் நம்முடைய படைப்பாளரைப் பற்றிய அறிவு உண்மையாகவே ஆட்களை மாற்றுகிறது. சந்தேகமின்றி நீங்களும்கூட உங்களுடைய வாழ்க்கையில் தேவனை அறியும் அறிவைப் பொருத்தியதன் விளைவாக சில மாற்றங்களை ஏற்கெனவே செய்திருப்பீர்கள். இலட்சக்கணக்கானோர் இவ்விதமாகச் செய்திருக்கிறார்கள். ஆகவே, இந்தத் தீர்க்கதரிசனம் யெகோவாவைச் சேவிப்பவர்களில் ஏற்கெனவே நிறைவேற ஆரம்பித்துவிட்டது. என்றபோதிலும், உலகம் முழுவதிலுமுள்ள ஆட்கள் எந்தவித மிருகத்தனமான அல்லது கொடூரமான பண்புகளையும் களைந்துபோட்டு என்றுமாக சமாதானமுள்ளவர்களாக மாறப்போகும் ஒரு காலத்தைக்கூட அது சுட்டிக்காட்டுகிறது.

13தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது அது எத்தனை மகத்தானதாக இருக்கும்! ராஜாவாகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய 1,44,000 உடன் அரசர்களின் வழிநடத்துதலின்கீழ் விரிவான ஒரு கல்வித் திட்டம் செயல்படும். புதிய “புஸ்தகச் சுருள்கள்” உபயோகத்துக்கு வரும். பூமியின் குடிமக்களுக்கு கல்விபுகட்டுவதற்கு ஒரு ஆதாரமாக சேவிக்கும் கடவுளின் எழுதப்பட்ட அறிவுரைகளாக இவை இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 20:12, NW) மனிதவர்க்கத்தினர் போரை அல்ல, சமாதானத்தைக் கற்றுக்கொள்வர். அழிவுண்டாக்கும் எல்லா கருவிகளும் இனியொருபோதும் இல்லாமல் போய்விடும். (சங்கீதம் 46:9) புதிய உலகத்தின் குடிமக்கள் தங்கள் உடன் மனிதரை அன்போடும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தும்படி கற்பிக்கப்படுவர்.

14மனிதவர்க்கம் ஐக்கியப்பட்ட ஒரு குடும்பமாக ஆகிவிடும். ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் எந்தத் தடையும் இருக்காது. (சங்கீதம் 133:1-3) திருடர்கள் வராதபடிக்கு எவருடைய வீடும் பூட்டப்பட வேண்டியிருக்காது. ஒவ்வொரு இருதயத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் சமாதானம் ஆளுகைச் செய்யும்.—மீகா 4:4.

சந்தோஷமான உயிர்த்தெழுதல்

15அந்த ஆயிர வருட ஆட்சியின்போது, உயிர்த்தெழுதல் நடைபெறும். பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டுக்கு அல்லது வழிநடத்துதலுக்கு எதிர்மாறாக மனந்திரும்பாமல் செயல்படுவதன் மூலம் கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு அல்லது செயல்நடப்பிக்கும் சக்திக்கு எதிராக வேண்டுமென்றே பாவம் செய்தவர்கள் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். (மத்தேயு 23:15, 33; எபிரெயர் 6:4-6) நிச்சயமாகவே அவ்விதமாக பாவம் செய்தவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பது கடவுளே. ஆனால் தெளிவாக இரண்டு தொகுதியினர் உயிர்த்தெழுப்பப்படுவர்—‘நீதிமான்களும் அநீதிமான்களும்.’ (அப்போஸ்தலர் 24:15) சரியான ஒரு கிரமம் அங்கு இருக்கப்போவதால், யெகோவாவை உண்மையுடன் சேவித்த நீதிமான்களே முதலாவதாக பூமியின்மீது திரும்ப உயிரோடு வரவேற்கப்படுவார்கள் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கிறது.—எபிரெயர் 11:35-39.

16போர்கள், விபத்துக்கள் மற்றும் மரணத்தைப்பற்றிய செய்திகளைக் கேட்பதற்குப் பதிலாக யெகோவாவின் ஊழியர்கள் உயிர்த்தெழுதலைப்பற்றிய அதிசயமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், யோபு, மோசே, ராகாப், ரூத், தாவீது, எலியா, எஸ்தர் போன்ற உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் திரும்ப வந்திருப்பதைப் பற்றிக் கேட்பது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும். அநேக பைபிள் பதிவுகளின் பின்னணி விவரங்களை அவர்கள் கொடுக்கும்போது என்னே கிளர்ச்சியூட்டும் சரித்திர உண்மைகளை அவர்கள் சொல்லுவார்கள்! அவர்களும் அதிக சமீப காலங்களில் இறந்திருப்பவர்களும் சாத்தானிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றியும் யெகோவா எவ்விதமாக தம்முடைய புனித பெயரை பரிசுத்தப்படுத்தி தம்முடைய உன்னத அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்தார் என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ள அதேவிதமாகவே ஆவலாயிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

17உயிர்த்தெழுதலின் அடுத்தக் கட்டத்தின்போது கோடிக்கணக்கான ‘அநீதிமான்கள்’ மரணத்தின் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுகையில் இந்த உண்மையுள்ளவர்கள் எத்தனை உதவியாக இருப்பர்! பெரும்பாலான மனிதவர்க்கத்தினருக்கு ஒருபோதும் யெகோவாவைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது. சாத்தான் ‘அவர்களுடைய மனங்களைக் குருடாக்கியிருந்தான்.’ (2 கொரிந்தியர் 4:4) ஆனால் பிசாசின் வேலைகள் துடைத்தழிக்கப்படும். அநீதிமான்கள் அழகான மற்றும் சமாதானமுள்ள ஒரு பூமிக்கு திரும்ப வருவார்கள். யெகோவாவையும் ஆளுகை செய்யும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்க நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஜனத்தினால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கானோர் தங்கள் படைப்பாளரை அறியவந்து அவரை நேசிக்க ஆரம்பிக்கையில் யெகோவாவைப் பற்றிய அறிவு முன்னொருபோதும் இராத வகையில் பூமியை நிரப்பிடும்.

18உயிர்த்தெழுதல் நம்முடைய இருதயங்களுக்கு என்னே மகிழ்ச்சியைக் கொண்டுவரும்! நம்முடைய சத்துருவாகிய மரணத்தினால் வேதனை அனுபவிக்காதவர் யார்? ஆம், நோய், முதிர்வயது, விபத்து அல்லது வன்முறை போன்ற காரணங்களின் விளைவாக அன்பான ஒருவர் இறப்பதால் அன்பு அல்லது நட்பின் பிணைப்பு தகர்க்கப்படும்போது யார்தான் முழுவதும் இடிந்துபோனது போன்று உணராதிருக்கிறார்? அப்படியென்றால் பரதீஸில் மறுபடியும் ஒன்றுசேரும் சந்தோஷத்தை கற்பனை செய்துபாருங்கள். அம்மாக்களும் அப்பாக்களும், மகன்களும் மகள்களும், நண்பர்களும் உறவினர்களும் ஓடி ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு சந்தோஷத்தில் சிரிக்கவும் அழவும் செய்வர்.

கடைசியாக பரிபூரணம்!

19ஆயிரம் வருட ஆட்சி முழுவதிலுமாக அதிசயமான ஒரு அற்புதம் நடைந்தேறிக்கொண்டிருக்கும். மனிதவர்க்கத்துக்கு, இது ஒருவேளை கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் அதிக கிளர்ச்சியூட்டும் அம்சமாக இருக்கும். விசுவாசமும் கீழ்ப்படிதலுமுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மீட்கும் பலியின் நன்மைகளை பொருத்திப்பிரயோகிக்கும்படியாக யெகோவா தம்முடைய குமாரனை வழிநடத்துவார். அதன் மூலமாக, எல்லா பாவமும் நீக்கப்பட்டுவிடும், மனிதவர்க்கம் பரிபூரணத்துக்கு உயர்த்தப்படும்.—1 யோவான் 2:2; வெளிப்படுத்துதல் 21:1-4.

20பரிபூரணம்! அது எதை அர்த்தப்படுத்தும்? ஆதாமும் ஏவாளும் யெகோவா தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கு முன்பாக அனுபவித்து மகிழ்ந்த விதமான வாழ்க்கைக்குத் திரும்புவதை அது அர்த்தப்படுத்தும். சரீரப்பிரகாரமாயும், மனதின்பிரகாரமாயும், உணர்ச்சிப்பூர்வமாயும், ஒழுக்கப்பிரகாரமாயும், ஆவிக்குரியபிரகாரமாயும்—நினைத்துப்பார்க்க முடிகிற ஒவ்வொரு வழியிலும்—பரிபூரண மனிதர்கள் கடவுளுடைய தராதரங்களை முழுமையாக பூர்த்திசெய்வார்கள். ஆனால் அப்பொழுது எல்லா ஆட்களும் ஒரே மாதிரியாக இருப்பார்களா? நிச்சயமாக இல்லை! யெகோவாவின் படைப்புகள்—மரங்கள், மலர்கள், மிருகங்கள்—அவர் பல்சுவையை விரும்புவதை நமக்கு கற்பிக்கின்றன. பரிபூரண மனிதர்கள் பல்வேறு ஆளுமைகளையும் தனித்திறமைகளையும் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் கடவுள் விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அனுபவித்து களிப்பர். வெளிப்படுத்துதல் 20:5 சொல்கிறது: “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டத்தைப் போல, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் பாவமில்லாத பரிபூரண நிலையை அடையும்போது முழுமையான அளவில் உயிருள்ளவர் ஆவர்.

21பரிபூரண மனிதர் முடிவான ஒரு சோதனையை எதிர்ப்படுவர். ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில், சாத்தானும் அவனுடைய பேய்களும் கொஞ்ச காலத்துக்கு அபிஸிலிருந்து விடுவிக்கப்பட்டு மனிதர்களை யெகோவாவிடமிருந்து விலகிப்போகச் செய்வதற்கு கடைசியாக ஒருமுறை முயற்சிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு சிலர் கடவுளை நேசிப்பதைக் காட்டிலும் தவறான ஆசைகளுக்கு மேலான இடத்தைக் கொடுப்பர், ஆனால் இந்தக் கலகத்தனம் துண்டிக்கப்படும். யெகோவா, தன்னலம் பாராட்டுகிற இவர்களைச் சாத்தானோடும் அவனுடைய எல்லா பேய்களோடும்கூட சேர்த்து அழித்துவிடுவார். தவறுசெய்பவர்கள் அனைவரும் ஒருபோதும் இல்லாமல் போய்விடுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:7-10.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

22யெகோவா தேவனை நேசித்து பரதீஸிய பூமியில் வாழ்பவர்களுக்கு முன்னால் நித்தியமான எதிர்காலம் இருக்கும். அவர்களின் சந்தோஷத்தை நம்மால் கற்பனை செய்யமுடியாது, ஆனால் நீங்களும்கூட இதில் பங்குகொள்ளலாம். இசை, கலை, கைத்திறன் வேலை—ஏன், பரிபூரண மனிதவர்க்கத்தின் சாதனைகள் பழைய உலகிலிருந்த மிகச் சிறந்த கலைவல்லுநர்களின் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளையும் விஞ்சிவிடும்! மனிதர்கள் பரிபூரணராயும் தங்களுக்கு முன்னால் எல்லையற்ற காலத்தை உடையவர்களாயும் இருப்பார்களே. ஒரு பரிபூரண மனிதனாக நீங்கள் என்ன செய்யக்கூடும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். நீங்களும் உடன் மனிதர்களும் யெகோவாவின் படைப்பைப் பற்றி—சர்வலோகத்தில் பரவியிருக்கும் கோடிக்கணக்கான பால்வீதி மண்டலங்களிலிருந்து அணுவின் மிகச் சிறிய பகுதிகள் வரையாக—என்ன கற்றுக்கொள்வீர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். மனிதவர்க்கம் சாதிக்கும் அனைத்தும் நம்முடைய அன்புள்ள பரலோக தந்தையாகிய யெகோவாவின் இருதயத்தை மேலுமாக சந்தோஷப்படுத்தும்.—சங்கீதம் 150:1-6.

23வாழ்க்கை அப்பொழுது சலிப்புத்தட்டாது. காலம் செல்ல செல்ல அது அதிகமதிகமாக சுவாரசியமாக ஆகும். தேவனை அறியும் அறிவுக்கு முடிவே இல்லை. (ரோமர் 11:33) நித்திய காலம் முழுவதிலுமாக எப்பொழுதும் கற்றுக்கொள்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். (பிரசங்கி 3:11) நீங்கள் யெகோவா தேவனைப் பற்றி தொடர்ந்து கற்றுவருகையில், நீங்கள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்—வெறுமனே சில வருடங்களுக்கு அல்ல, ஆனால் என்றுமாக!—சங்கீதம் 22:26.

24ஒரு பரதீஸிய பூமியில் மகிழ்ச்சியான ஒரு எதிர்காலம் நாம் செய்யக்கூடிய எந்த முயற்சிக்கும் அல்லது தியாகத்துக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறதல்லவா? நிச்சயமாகவே இருக்கிறது! ஆம், அந்த மிகச் சிறந்த எதிர்காலத்துக்குரிய திறவுகோலை யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்தத் திறவுகோல் தேவனை அறியும் அறிவாகும். நீங்கள் அதைப் பயன்படுத்துவீர்களா?

25நீங்கள் யெகோவாவை நேசித்தால், அவருடைய சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். (1 யோவான் 5:3) அந்தப் போக்கை நீங்கள் பின்தொடரும்போது, நீங்கள் என்னே ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்! நீங்கள் தேவனை அறியும் அறிவைப் பொருத்திப் பயன்படுத்தினால், அது தொல்லைகள் நிறைந்த இந்த உலகிலும்கூட மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை உங்களுக்குக் கொண்டுவரக்கூடும். எதிர்கால பலன்கள் அளவிட முடியாதவையாகும், ஏனென்றால் இது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவாகும்! நீங்கள் செயல்படுவதற்கு இப்பொழுதே சாதகமான காலம். தேவனை அறியும் அறிவுக்கு இசைவாக வாழ தீர்மானமாயிருங்கள். யெகோவாவுக்கான உங்களுடைய அன்பை நடைமுறைப்படுத்திக் காண்பியுங்கள். அவருடைய பரிசுத்த பெயரைக் கனப்படுத்தி சாத்தானை ஒரு பொய்யனாக நிரூபியுங்கள். மாறாக, உண்மையான ஞானத்துக்கும் அறிவுக்கும் ஊற்றுமூலராக இருக்கும் யெகோவா தேவன் தம்முடைய உயர்ந்த மற்றும் அன்புள்ள இருதயத்தில் உங்களைக் குறித்து களிகூருவார். (எரேமியா 31:3; செப்பனியா 3:17) மேலும் அவர் உங்களை என்றுமாக நேசிப்பார்!

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

“மெய்யான வாழ்க்கை” என்பது என்ன?

அர்மகெதோனுக்குப் பிறகு, பூமியில் என்ன நடந்தேறும்?

பூமியின்மீது யார் உயிர்த்தெழுப்பப்படுவர்?

மனிதவர்க்கத்தினர் எவ்விதமாக பரிபூரணராகி கடைசியாக சோதிக்கப்படுவர்?

பரதீஸைப் பற்றி உங்களுடைய நம்பிக்கை என்ன?

[கேள்விகள்]

1, 2. யெகோவாவின் படைப்பு எவ்விதமாக சேதமடைந்தது?

3. “மெய்யான வாழ்க்கை” என்பது என்ன?

4, 5. (அ) பரதீஸிய நம்பிக்கை எவ்விதமாக நிறைவேறும்? (ஆ) நாம் ஏன் எதிர்காலத்துக்கான நம்முடைய நம்பிக்கையைப்பற்றி சிந்திக்க வேண்டும்?

6. அர்மகெதோன் என்பது என்ன, மனிதவர்க்கத்துக்கு அது எதை அர்த்தப்படுத்தும்?

7. கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது சாத்தானும் அவனுடைய பேய்களும் எங்கே இருப்பார்கள், இது எவ்வாறு மனிதவர்க்கத்துக்குப் பிரயோஜனமாயிருக்கும்?

8, 9. புதிய உலகில் துன்பங்கள், நோய் மற்றும் முதிர்வயதுக்கு என்ன நேரிடும்?

10. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் என்ன வேலை நியமிப்பை ஏற்றுச்செய்வர்?

11. பூமியின் சுற்றுச்சூழலோடும் மிருக ஜீவன்களோடும் மனிதவர்க்கத்தின் எதிர்கால உறவு என்னவாக இருக்கும்?

12. ஏசாயா 11:9 இன்று எவ்விதமாக நிறைவேற்றமடைந்து வருகிறது, பரதீஸில் அது எவ்விதமாக நிறைவேறும்?

13. பூமியின்மீது என்ன கல்வித் திட்டம் செயல்படும்?

14. மனிதவர்க்கம் ஐக்கியப்பட்ட ஒரு குடும்பமாக இருக்கும்போது உலகம் எவ்விதம் வித்தியாசமாக இருக்கும்?

15. எந்த இரண்டு தொகுதியினர் பூமியின்மீது உயிர்த்தெழுப்பப்படுவர்?

16. (அ) பூமியின்மீது உயிர்த்தெழுப்பப்படும் ‘நீதிமான்கள்’ மத்தியில் யார் இருப்பார்கள்? (ஆ) பண்டைய காலங்களைச் சேர்ந்த உண்மையுள்ள ஆட்களில் விசேஷமாக யாரைச் சந்திக்க நீங்கள் விரும்புகிறீர்கள், ஏன்?

17. உண்மையுள்ளவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட மற்றவர்களுக்கு என்ன உதவியைக் கொடுப்பர்?

18. உயிர்த்தெழுப்பப்பட்ட அன்பானவர்களை வரவேற்கும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

19. ஆயிர வருட ஆட்சியின்போது என்ன அற்புதம் நடந்தேறும்?

20. (அ) பரிபூரணராயிருப்பது எதை அர்த்தப்படுத்தும்? (ஆ) அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களும் எப்போது முழுமையான அளவில் உயிருள்ளவர்களாக வாழ ஆரம்பிப்பார்கள்?

21. (அ) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் என்ன சம்பவிக்கும்? (ஆ) சாத்தானுக்கும் அவனை ஆதரிக்கும் அனைவருக்கும் கடைசியாக என்ன சம்பவிக்கும்?

22. பரதீஸில் என்ன செய்வதற்கு நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கியவர்களாயிருக்கிறீர்கள்?

23. பரதீஸில் வாழ்க்கை ஏன் ஒருபோதும் சலிப்புத்தட்டுவதாக இருக்காது?

24, 25. தேவனை அறியும் அறிவுக்கு இசைவாக நீங்கள் இப்பொழுது ஏன் வாழவேண்டும்?

[பக்கம் 188, 189-ன் படம்]

கடவுளை அறியும் அறிவினால் பூமி நிரம்பி இருக்கும்போது, பரதீஸில் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?