Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்!

நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்!

அதிகாரம் 1

நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்!

நீங்கள் நேசிக்கும் ஒருவரின் அனலான தழுவல். பிரியமான நண்பர்களோடு நல்ல உணவை உட்கொள்ளும்போது உள்ளங்கனிந்த சிரிப்பு. உங்கள் பிள்ளைகள் குதூகலமாக விளையாடுவதைப் பார்க்கையில் ஏற்படும் இன்பம். இது போன்ற நேரங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சமயங்களாகும். என்றபோதிலும், அநேகருக்கு, வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக கவலைக்குரிய பிரச்சினைகளே வந்துகொண்டிருப்பதாக தோன்றுகிறது. அது உங்கள் அனுபவமாக இருந்திருந்தால், தைரியம் கொள்ளுங்கள்.

2நீங்கள் அற்புதமான சுற்றுச்சூழலில் மிகவும் நேர்த்தியான நிலைமைகளின்கீழ் நிலையான மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம். இது வெறும் கனவல்ல, ஏனென்றால் கடவுள் உண்மையில் இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்துக்குரிய திறவுகோலை உங்களுக்குத் தருகிறார். அந்தத் திறவுகோலே அறிவு.

3மனித ஞானத்தைவிட மிக உயர்ந்த விசேஷித்த வகையான ஒரு அறிவைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவே ‘தேவனை அறியும் அறிவு.’ (நீதிமொழிகள் 2:5) சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பைபிள் எழுத்தாளர் சொன்னார்: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் பெற்றிருக்கக்கூடிய அறிவைப் பற்றி எண்ணிப்பாருங்கள்! கடவுள் எல்லா நட்சத்திரங்களையும் எண்ணி பெயரிட்டு அழைக்கிறார் என்பதாக பைபிள் சொல்கிறது. நம்முடைய சொந்த பால்வீதி மண்டலத்திலேயே பத்தாயிரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதால் இதை எண்ணிப்பார்க்கையில் எத்தனை ஆச்சரியமூட்டுவதாய் இருக்கிறது, வானாராய்ச்சியாளர்கள் வேறே இன்னும் சுமார் பத்தாயிரம் கோடி பால்வீதிமண்டலங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர்! (சங்கீதம் 147:4) நம்மைப் பற்றியும்கூட கடவுளுக்கு எல்லாம் தெரியும், ஆகவே, வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு வேறு யாரால் மேம்பட்ட பதில்களைக் கொடுக்கமுடியும்?—மத்தேயு 10:30.

4தங்கள் கார்களைப் பழுதுபார்க்க முயற்சிசெய்துகொண்டிருக்கும் இரண்டு மனிதர்களைக் கற்பனை செய்துபாருங்கள். வெறுப்படைந்தவனாய் ஒரு மனிதன் தன்னுடைய எல்லா கருவிகளையும் வீசிவிட்டு சென்றுவிடுகிறான். மற்றவன் அமைதியாக கோளாறைச் சரிசெய்து, இயந்திரத்தை முடுக்கிவிட்டு, எஞ்சின் கிளம்பி தடைகள் இல்லாமல் ஓடுகையில் அவன் புன்முறுவல் செய்கிறான். இரண்டு மனிதர்களில் யார் உற்பத்தியாளரின் கையேட்டை வைத்திருந்தார் என்பதை ஊகிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்காது. வாழ்க்கையில் நம்மை வழிநடத்துவதற்கு கடவுள் அறிவுரைகளை வழங்குவார் என்பது அர்த்தமுள்ளதாக இல்லையா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் விதமாகவே, பைபிள் துல்லியமாக அவ்விதமாகவே—தேவனை அறியும் அறிவை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டு நம்முடைய படைப்பாளரிடமிருந்து வரும் அறிவுரையும் வழிநடத்துதலும் அடங்கிய ஒரு புத்தகமாகவே—இருப்பதாக உரிமைபாராட்டுகிறது.—2 தீமோத்தேயு 3:16.

5பைபிளின் உரிமைபாராட்டுதல் உண்மையாக இருக்குமானால், அந்தப் புத்தகத்தில் என்னே அறிவு புதையல்கள் அடங்கியிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்! நீதிமொழிகள் 2:1-5-ல், அது நம்மை ஞானத்தைத் தேடும்படியாக, மறைந்திருக்கும் புதையலுக்காக நாம் தேடுவதைப் போல தோண்டும்படியாக—மனித சிந்தனை என்ற மண்ணில் அல்ல, ஆனால் கடவுளுடைய சொந்த வார்த்தையில்—அதைத் தேடும்படியாக ஊக்குவிக்கிறது. நாம் அங்கே தேடினால், ‘தேவனை அறியும் அறிவை கண்டடைவோம்.’ நம்முடைய வரையறைகளையும் தேவைகளையும் கடவுள் புரிந்துகொள்வதன் காரணமாக, அமைதியான மகிழ்ச்சியுள்ள வாழ்கையை வாழ்வதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடிய அறிவுரைகளை அவர் நமக்குத் தருகிறார். (சங்கீதம் 103:14; ஏசாயா 48:17) மேலுமாக, தேவனை அறியும் அறிவு கிளர்ச்சியூட்டும் நற்செய்தியை நமக்கு அளிக்கிறது.

நித்திய ஜீவன்!

6நன்கு அறியப்பட்ட சரித்திரப்பூர்வமான நபராகிய இயேசு கிறிஸ்து தேவனை அறியும் அறிவின் இந்த அம்சத்தை தெளிவாக விளக்கினார். அவர் சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (யோவான் 17:3) கற்பனை செய்துபாருங்கள்—நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு!

7நித்திய ஜீவன் வெறும் ஒரு கனவு என்பதாக விரைந்து முடிவுசெய்துவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, மனித உடல் உண்டாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பாருங்கள். அது சுவைக்கவும், கேட்கவும், நுகரவும், காணவும், உணரவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய புலன்களுக்கு மகிழ்வளிப்பதற்கு எவ்வளவோ பூமியில் இருக்கின்றன—சுவையான உணவு, மகிழவைக்கும் பறவையின் பாட்டு, நறுமண மலர்கள், அழகான இயற்கைக் காட்சிகள், மகிழ்ச்சிதரும் தோழமை! நம்முடைய அதிசயமான மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைவிட சிறந்ததாக இருக்கிறது, ஏனென்றால் இப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் போற்றவும் அனுபவிக்கவும் நமக்கு உதவிசெய்கிறது. நாம் மரித்துப்போய் இந்த எல்லாவற்றையும் இழந்துபோவதை நம்முடைய படைப்பாளர் விரும்புவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நாம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்ற முடிவுக்கு வருவதே அதிக நியாயமானதாக இருக்குமல்லவா? ஆம், தேவனை அறியும் அறிவு அதைத்தான் உங்களுக்கு அர்த்தப்படுத்தக்கூடும்.

பரதீஸில் வாழ்க்கை

8பூமிக்கும் மனிதவர்க்கத்துக்கும் இருக்கும் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதை ஒரே வார்த்தையில் சுருக்கிச் சொல்லலாம்—பரதீஸ்! மரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனிடமாக, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்,” என்று சொன்னபோது இயேசு கிறிஸ்து அதைப்பற்றி பேசினார். (லூக்கா 23:43) பரதீஸ் பற்றி சொன்னது சந்தேகமில்லாமல் அந்த மனிதனுக்கு நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளின் மகிழ்ச்சியான நிலைமையை மனதுக்குக் கொண்டுவந்தது. கடவுள் அவர்களைப் படைத்தபோது பரிபூரணராயிருந்தனர், படைப்பாளர் வடிவமைத்து உருவாக்கியிருந்த தோட்டம்போன்ற ஒரு பூங்காவில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். பொருத்தமாகவே அது இன்பத்தைக் குறிக்கும் பெயராகிய ஏதேன் தோட்டம் என்றழைக்கப்பட்டது.

9அந்தத் தோட்டம் எத்தனை மகிழ்ச்சிநிரம்பியதாய் இருந்தது! அது உண்மையாகவே ஒரு பரதீஸ். அதனுடைய அழகான விருட்சங்களில் சுவைமிக்க பழம் தரும் விருட்சங்கள் இருந்தன. ஆதாமும் ஏவாளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிராந்தியத்தை ஆய்வுசெய்தபோது, அதன் தித்திப்பான தண்ணீர்களிலிருந்து பருகினர், அதனுடைய விருட்சங்களிலிருந்து பழங்களைச் சேகரித்தனர், கவலைப்படுவதற்கோ பயப்படுவதற்கோ எந்தக் காரணமும் அவர்களுக்கு இருக்கவில்லை. விலங்குகளும்கூட அவனுக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை, ஏனென்றால் கடவுள் அவை அனைத்தையும் அன்பாக ஆண்டுகொள்ளும்படி மனுஷனையும் அவனுடைய மனைவியையும் வைத்திருந்தார். கூடுதலாக, முதல் மனித தம்பதியினர் துடிப்பான ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தனர். கடவுளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தவரை நித்தியமான, மகிழ்ச்சியான ஒரு எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருந்தது. அவர்கள் தங்களுடைய அதிசயமான பரதீஸ் வீட்டை பராமரிக்கும் மனநிறைவளிக்கும் வேலை கொடுக்கப்பட்டனர். மேலுமாக, “பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படு”த்தும்படியான கட்டளையை ஆதாம் ஏவாளுக்கு கடவுள் கொடுத்திருந்தார். நம்முடைய முழு கிரகமும் அழகும் மகிழ்ச்சியுமுள்ள ஒரு இடமாக ஆகும்வரையாக அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பரதீஸின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டியவர்களாக இருந்தனர்.—ஆதியாகமம் 1:28.

10என்றபோதிலும், பரதீஸ் பற்றி இயேசு குறிப்பிடுகையில், மரித்துக்கொண்டிருந்த மனிதனிடம் தொலைவான கடந்தகாலத்தைப்பற்றி யோசிக்கும்படியாக அவர் சொல்லவில்லை. இயேசு எதிர்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்! நம்முடைய முழு பூமிக்குரிய வீடும் ஒரு பரதீஸாக மாறும் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்படியாக மனிதவர்க்கத்துக்கும் நம்முடைய பூமிக்கும் கடவுள் வைத்திருந்த அவருடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவார். (ஏசாயா 55:10, 11) ஆம், பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும்! அது எதைப்போன்று இருக்கும்? கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் பதிலளிக்கட்டும்.

திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்க்கை

11 வியாதி, முதிர்வயது, மரணம் இனிமேலும் இராது. “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) ‘தேவன்தாமே அவர்களோடேகூட [மனிதவர்க்கத்தோடுகூட] இருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.

12 குற்றச்செயல், வன்முறை, அக்கிரமம் என்றுமாக ஒழிந்துவிட்டிருக்கும். “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; . . . இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து”க்கொள்வார்கள். (சங்கீதம் 37:9-11) “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.

13 பூமி முழுவதிலும் சமாதானம் இருக்கும். “அவர் [கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்.” (சங்கீதம் 46:9) “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.

14 பாதுகாப்பான வீட்டுவசதியும் திருப்தியளிக்கும் வேலையும் இருக்கும். “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும் அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை.”—ஏசாயா 65:21-23.

15 ஆரோக்கியமான உணவு ஏராளமாக கிடைக்கும். “பூமியிலே திரளான தானியமிருக்கும்; மலைகளின் உச்சியில் பொங்கிவழியும்.” (சங்கீதம் 72:16, NW) “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 67:6.

16 பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன் மகிழ்ச்சிதருவதாய் இருக்கும். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.”—ஏசாயா 35:1.

அறிவும் உங்கள் எதிர்காலமும்

17பரதீஸில் வாழ்க்கை உங்கள் மனதைக் கவருவதாக இருந்தால், தேவனை அறியும் அறிவைப் பெற்றுக்கொள்வதிலிருந்து எதுவும் உங்களைத் தடைசெய்ய அனுமதியாதீர்கள். அவர் மனிதவர்க்கத்தை நேசிக்கிறார், பூமியை ஒரு பரதீஸாக்குவதற்கு தேவையான மாற்றங்களை அவர் கொண்டுவருவார். என்ன இருந்தாலும், உலகில் இவ்வளவு பரவலாக இருக்கும் துயரத்தையும் அநீதியையும் முடிவுக்குக்கொண்டுவர உங்களுக்கு வல்லமை இருந்தால், அதை நீங்கள் செய்யமாட்டீர்களா? கடவுள் அதைவிட குறைவாக செய்வார் என்று நாம் எதிர்பார்ப்போமா? சண்டைகள் நிறைந்த இந்த ஒழுங்குமுறையை நீக்கிப்போட்டு அதற்குப் பதிலாக பரிபூரணமான, நீதியுள்ள ஆட்சியைக் கடவுள் கொண்டுவரப்போகிற ஒரு காலத்தைப்பற்றி பைபிள் உண்மையில் மிகத் தெளிவாக பேசுகிறது. (தானியேல் 2:44) ஆனால் இவை அனைத்தையும் பற்றி சொல்வதைக் காட்டிலும் பைபிள் அதிகத்தைச் செய்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட கடவுளுடைய புதிய உலகிற்குள் நாம் எவ்வாறு தப்பிப்பிழைக்கலாம் என்பதை அது நமக்குக் காண்பிக்கிறது.—2 பேதுரு 3:13; 1 யோவான் 2:17.

18தேவனை அறியும் அறிவு உங்களுக்கு இப்பொழுதேகூட அதிக நன்மையைக் கொண்டுவரக்கூடும். வாழ்க்கையின் மிகவும் ஆழமானதும் மன அமைதியை அதிகம் குலைப்பதுமான கேள்விகளுக்கு பைபிள் விடையளிக்கிறது. அதன் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வது கடவுளோடு ஒரு உறவை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்யும். என்னே ஒரு மகத்தான சிலாக்கியம்! மேலும் இது கடவுள் மாத்திரமே கொடுக்கக்கூடிய சமாதானத்தை அனுபவித்துக்களிக்க உங்களுக்கு உதவிசெய்யும். (ரோமர் 15:13, 33) இன்றியமையாத இந்த அறிவை நீங்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கையில், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் அதிக முக்கியமான மற்றும் பலனுள்ள ஒரு முயற்சியில் இறங்குகிறீர்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற தேவனை அறியும் அறிவை பெற்றுக்கொண்டதற்காக நீங்கள் ஒருபோதும் மனஸ்தாபப்படமாட்டீர்கள்.

19தேவனை அறியும் அறிவையுடைய புத்தகமாக பைபிளை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். என்றபோதிலும், அது மனித ஞானம் அடங்கிய புத்தகம் அல்ல, ஆனால் அதைவிட மிக அதிக உயர்வானது என்பதை நாம் எவ்வாறு அறிவோம்? இந்தக் கேள்வியை நாம் அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம்.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

தேவனை அறியும் அறிவு ஏன் நித்திய மகிழ்ச்சிக்கு உங்களை வழிநடத்தக்கூடும்?

வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும்?

தேவனை அறியும் அறிவை இப்பொழுது எடுத்துக்கொள்வதினால் நீங்கள் ஏன் நன்மையடைவீர்கள்?

[கேள்விகள்]

1, 2. உங்களுடைய படைப்பாளர் நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்?

3. என்ன அறிவு மகிழ்ச்சிக்குத் திறவுகோலாக இருக்கிறது, கடவுள் அந்த அறிவை அளிக்க முடியும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

4. கடவுள் நம்மை வழிநடத்துவதற்கு அறிவுரைகளை வழங்குவார் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம், எந்தப் புத்தகம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்கிறது?

5. பைபிளில் அடங்கியிருக்கும் அறிவு எவ்வளவு மதிப்புள்ளது?

6. தேவனை அறியும் அறிவின் சம்பந்தமாக இயேசு கிறிஸ்து என்ன உறுதியை அளித்தார்?

7. நாம் மரிக்க வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமல்ல என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

8. மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

9. ஆதி பரதீஸில் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது?

10. பரதீஸைப் பற்றி இயேசு பேசுகையில், அவருடைய மனதிலிருந்தது என்ன?

11. திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில், வியாதி, முதிர்வயது மற்றும் மரணத்துக்கு என்ன சம்பவிக்கும்?

12. எதிர்கால பரதீஸில் எந்தக் குற்றச்செயலும் வன்முறையும் அக்கிரமமும் இருக்காது என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

13. கடவுள் எவ்வாறு சமாதானத்தைக் கொண்டுவருவார்?

14, 15. திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வீட்டுவசதி, வேலை மற்றும் உணவு பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

16. பரதீஸில் வாழ்க்கை ஏன் மகிழ்ச்சி தருவதாய் இருக்கும்?

17. (அ) பரதீஸில் வாழ்க்கை உங்கள் மனதைக் கவருவதாக இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுள் பூமியின்மீது பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

18. தேவனை அறியும் அறிவு உங்களுக்கு இப்பொழுது என்ன செய்யக்கூடும்?

19. என்ன கேள்வியை நாம் அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம்?