Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துநில்லுங்கள்

பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துநில்லுங்கள்

அதிகாரம் 12

பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துநில்லுங்கள்

தம்முடைய முழுக்காட்டுதலுக்குப் பின் உடனடியாக, இயேசு கிறிஸ்து ஜெபிப்பதற்காகவும் தியானம் செய்வதற்காகவும் யூதேய வனாந்தரத்துக்குள் சென்றார். அங்கே பிசாசாகிய சாத்தான் அவரை கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்விக்க முயற்சிசெய்தான். என்றபோதிலும், இயேசு பிசாசின் சோதனையை நிராகரித்துவிட்டார், அவனுடைய கண்ணியில் அவர் மாட்டிக்கொள்ளவில்லை. இயேசு பூமியில் தாம் செய்த ஊழியத்தின்போது மற்ற பொல்லாத ஆவிகளை எதிர்ப்பட்டார். என்றபோதிலும், திரும்பத் திரும்ப, அவர் அவற்றைக் கடிந்துகொண்டு எதிர்ப்பவராக இருந்தார்.—லூக்கா 4:1-13; 8:26-34; 9:37-43.

2 அந்தச் சந்திப்புகளைப் பற்றிய பைபிள் பதிவுகள், பொல்லாத ஆவிகள் உண்மையில் இருப்பதை நாம் நம்பும்படியாகச் செய்யவேண்டும். அவை மக்களை மோசம்போக்க முயலுகின்றன. என்றபோதிலும், இந்தப் பொல்லாத ஆவிகளை நாம் எதிர்க்க முடியும். ஆனால் பொல்லாத ஆவிகள் எங்கிருந்து தோன்றின? அவை மக்களை வஞ்சிப்பதற்கு ஏன் முயற்சிசெய்கின்றன? தங்கள் குறிக்கோள்களை முயன்று அடைவதற்கு அவை என்ன முறைகளைப் பயன்படுத்துகின்றன? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிப்பது, பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்து நிற்பதற்கு உங்களுக்கு உதவிசெய்யும்.

பொல்லாத ஆவிகள்—அவற்றின் ஆரம்பமும் குறிக்கோளும்

3யெகோவா தேவன் மனிதர்களைப் படைப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே திரளான ஆவி சிருஷ்டிகளை உண்டாக்கினார். (யோபு 38:4, 7) அதிகாரம் 6-ல் விளக்கப்பட்டுள்ளபடி, இந்தத் தூதர்களில் ஒருவன் மனிதர்கள் யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக தன்னை வணங்கவேண்டும் என்ற ஒரு ஆசையை வளர்த்துக்கொண்டான். அந்தக் குறிக்கோளைப் பின்தொடருபவனாக, இந்தப் பொல்லாத தூதன் படைப்பாளரை எதிர்த்து, பழிதூற்றி, கடவுள் ஒரு பொய்யர் என்பதாகவும்கூட முதல் மனுஷியிடம் சொன்னான். அப்படியென்றால், இந்தக் கலகக்கார ஆவி சிருஷ்டி, பிசாசாகிய (பழிதூற்றுபவன்) சாத்தான் (எதிர்ப்பவன்) என்பதாக அறியப்படலானது பொருத்தமாகவே இருக்கிறது.—ஆதியாகமம் 3:1-5; யோபு 1:6.

4பின்னால், மற்ற தேவதூதர்கள் பிசாசாகிய சாத்தானின் பக்கமாக சேர்ந்துகொண்டனர். நீதிமானாகிய நோவாவின் நாட்களில், இவர்களில் சிலர் பரலோகத்தில் தங்களுடைய சேவையை விட்டுவிட்டு பூமியிலுள்ள பெண்களோடு பாலின உறவுக்கான தங்களுடைய ஆசையை திருப்திசெய்துகொள்வதற்காக மாம்ச உடல்களை எடுத்துக்கொண்டனர். அந்தத் தேவதூதர்கள் அந்தக் கீழ்ப்படியாத போக்கைப் பின்பற்றுவதற்கு அவர்கள்மீது சாத்தான் செல்வாக்கு செலுத்தினான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இது கொடூரமான கொடுமைக்காரர்களாக ஆன நெபிலிம் என்றழைக்கப்பட்ட கலப்பின பிள்ளைகளுக்கு அவர்கள் தகப்பன்களாவதற்கு வழிநடத்தியது. யெகோவா பெரிய ஜலப்பிரளயத்தை கொண்டுவந்தபோது, அது சீர்கெட்ட மனிதவர்க்கத்தையும் கீழ்ப்படியாத தூதர்களின் இந்த இயற்கைக்கு மாறான சந்ததியாரையும் அழித்துப்போட்டது. கலகக்கார தேவதூதர்கள் தங்கள் மாம்ச உடலைக் களைந்துபோட்டுவிட்டு ஆவி மண்டலத்திற்கு திரும்பிச்செல்வதன் மூலம் அழிவைத் தப்பினர். ஆனால் ஆவிக்குரிய இருளிலே வாசம் செய்யும் நிராகரிக்கப்பட்டவர்களாக அவர்களை நடத்துவதன் மூலம் இந்தப் பேய்களை கடவுள் அடக்கிவைத்தார். (ஆதியாகமம் 6:1-7, 17; யூதா 6) இருப்பினும், “பிசாசுகளின் தலைவனாகிய” சாத்தானும் அவனுடைய பொல்லாத தேவதூதர்களும் தொடர்ந்து கலகம்செய்துவந்திருக்கின்றனர். (லூக்கா 11:15) அவர்களுடைய குறிக்கோள் என்ன?

5யெகோவா தேவனுக்கு எதிராக மக்களைத் திருப்புவதே சாத்தான் மற்றும் பேய்களின் தீய குறிக்கோளாகும். ஆகவே, இந்தப் பொல்லாத ஆவிகள் மனித வரலாறு முழுவதிலுமாக மக்களை மோசம் போக்கியும், பயமுறுத்தியும் தாக்கியும் வந்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:9) நவீன நாளைய உதாரணங்கள், பேய்களின் தாக்குதல் எப்போதிருந்ததையும்விட இப்போது அதிக கொடியதாக இருப்பதை உறுதிசெய்கின்றன. மக்களை சிக்கவைப்பதற்கு பேய்கள் எல்லா வகையான ஆவியுலக தொடர்புகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. பேய்கள் எவ்வாறு இந்தக் கண்ணி இரையைப் பயன்படுத்துகின்றன, நீங்கள் உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்?

பொல்லாத ஆவிகள் உங்களை எவ்வாறு மோசம்போக்க முயற்சிசெய்கின்றன

6ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன? அது நேரடியாகவோ அல்லது ஒரு மத்தியஸ்தர் மூலமாகவோ பேய்கள் அல்லது பொல்லாத ஆவிகளோடு கொள்ளும் ஈடுபாடாக இருக்கிறது. கண்ணியில் வைக்கப்படும் இரை வேட்டையாடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; அதாவது அது வேட்டையாடப்படும் பிராணியை கவர்ந்திழுக்கிறது. அதைப் போலவே ஆவியுலகத் தொடர்பும் பேய்களுக்கு உதவுகிறது. ஒரு வேட்டைக்காரன் விலங்குகளைத் தன் கண்ணிக்குள் இழுப்பதற்கு பல்வகையான கண்ணி இரைகளைப் பயன்படுத்துவதுபோலவே, பொல்லாத ஆவிகள் மனிதர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு பல்வேறு வகையான ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகின்றன. (சங்கீதம் 119:110-ஐ ஒப்பிடுக.) குறிசொல்லுதல், மந்திர வித்தை, சகுனம் பார்ப்பது, சூனியம், வசிய சக்தியால் கட்டிவைத்தல், ஆவி மத்தியஸ்தர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் இறந்தோருடன் தொடர்புகொள்ளுதல் ஆகியவை இவற்றின் சில வகைகள் ஆகும்.

7இந்தக் கண்ணி இரை வேலைசெய்கிறது, ஏனென்றால் ஆவியுலகத் தொடர்பு உலகம் முழுவதிலுமுள்ள ஆட்களைக் கவர்ந்திழுக்கிறது. காட்டுப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் பூசாரிகளிடம் செல்கின்றனர், நகரங்களில் அலுவலகத்தில் பணிபுரிவோர் ஜோதிடர்களை கலந்தாலோசிக்கின்றனர். கிறிஸ்தவ நாடுகள் என்றழைக்கப்படுகிறவற்றிலும்கூட ஆவியுலகத் தொடர்பு தழைத்தோங்குகிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, ஒன்றுசேர்ந்து 1,00,00,000 பிரதிகளுக்கு மேலாக விநியோகம் செய்யப்படும் சுமார் 30 பத்திரிகைகள் பிரத்தியேகமாக பல்வேறு வகையான ஆவியுலகத் தொடர்பைப் பற்றியதாக இருப்பதை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. பிரேஸில் நாட்டவர் ஒவ்வொரு ஆண்டும் ஆவியுலகத்தோடு தொடர்புடைய பொருட்களை வாங்க 50 கோடி டாலருக்கும் மேலாக செலவழிக்கின்றனர். என்றபோதிலும், அந்தத் தேசத்தில் ஆவியுலகத் தொடர்புடைய மையங்களுக்குச் செல்லும் 80 சதவீதத்தினர் சர்ச் பூசையிலும்கூட ஆஜராக இருக்கும் ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கராவர். மதகுருமாரில் சிலர் ஆவியுலகத் தொடர்பை அப்பியாசிப்பதன் காரணமாக, மதப் பற்றுள்ள அநேக ஆட்கள் அதை அப்பியாசிப்பதை கடவுள் அங்கீகரிக்கிறார் என்பதாக நினைக்கின்றனர். ஆனால் அது அவ்விதமாக இருக்கிறதா?

பைபிள் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தை ஏன் கண்டனம் செய்கிறது

8ஒருசில வகையான ஆவியுலகத் தொடர்பு நல்ல ஆவிகளோடு தொடர்புகொள்வதற்கான வழிமுறைகள் என்பதாக உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தால், ஆவியுலகத் தொடர்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கற்றறியும்போது நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். யெகோவாவின் மக்கள் இவ்வாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர்: “அஞ்ஞனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (வேலியராகமம் 19:31; 20:6, 27) “சூனியக்காரர் [“ஆவியுலகத் தொடர்பை அப்பியாசிக்கிறவர்கள்,” NW] இரண்டாம் [நித்திய] மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்,” என்பதாக பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் எச்சரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:8; 22:15) எல்லா வகையான ஆவியுலகத் தொடர்பும் யெகோவா தேவனால் அங்கீகரிக்கப்படாததாகும். (உபாகமம் 18:10-12) அது ஏன் அவ்விதமாக இருக்கிறது?

9பைபிள் எழுதிமுடிக்கப்படுவதற்கு முன்பாக சில மனிதர்களோடு பேசுவதற்கு யெகோவா நல்ல ஆவிகளை அல்லது நீதியுள்ள தேவதூதர்களை அனுப்பினார். ஆனால் கடவுளுடைய வார்த்தை எழுதிமுடிக்கப்பட்டது முதற்கொண்டு, யெகோவாவை ஏற்கத் தக்க முறையில் வணங்குவதற்கு மனிதர்களுக்குத் தேவையான வழிநடத்துதலை அவருடைய வார்த்தை அளித்துவந்திருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17; எபிரெயர் 1:1, 2) மத்தியஸ்தம் செய்பவர்களுக்கு செய்திகளைக் கொடுப்பதன் மூலம் அவர் தம் பரிசுத்த வார்த்தையை ஒருபுறம் ஒதுக்கிவிடுவது கிடையாது. இன்றைய நாளில் ஆவி உலகத்திலிருந்து வரும் இத்தகைய எல்லா செய்திகளும் பொல்லாத ஆவிகளிடமிருந்தே வருகின்றன. ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்ளும் பழக்கம் பேய்களால் அலைக்கழிக்கப்படுவதற்கு அல்லது பொல்லாத ஆவிகளால் பீடிக்கப்படுவதற்கும்கூட வழிநடத்தக்கூடும். ஆகவே, எந்தவிதமான ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களிலும் உட்பட்டுவிடாதபடிக்கு கடவுள் அன்பாக நம்மை எச்சரிக்கிறார். (உபாகமம் 18:14; கலாத்தியர் 5:19-21) மேலுமாக, ஆவியுலகத் தொடர்பை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட பிற்பாடும் நாம் அதைத் தொடர்ந்து அப்பியாசிப்போமானால், கலகத்தனமான பொல்லாத ஆவிகளோடு சேர்ந்துகொள்பவர்களாகவும் கடவுளுக்கு சத்துருக்களாகவும் இருப்போம்.—1 சாமுவேல் 15:23; 1 நாளாகமம் 10:13, 14; சங்கீதம் 5:4.

10ஆவியுலகத் தொடர்பின் வகைகளுள் பிரபலமான ஒரு வகை குறிசொல்லுதலாகும்—இது ஆவிகளின் உதவியோடு எதிர்காலத்தை அல்லது அறியப்படாதவற்றைப் பற்றி அறிந்துகொள்ள செய்யப்படும் முயற்சி. ஜோதிடம், குறிசொல்லுவதற்கு ஆற்றலை உண்டுபண்ண பளிங்குக் கோளத்தை உற்றுப் பார்த்தல், கனவுகளுக்கு அர்த்தஞ்சொல்லுதல், கைரேகைப் பார்த்தல் மற்றும் சீட்டுக்கட்டு சீட்டுகளை உபயோகித்து குறிசொல்லுவது ஆகியவை குறிசொல்லுதலின் ஒருசில வகைகளாகும். அநேகர் குறிசொல்லுதலை தீங்கற்ற விளையாட்டாக கருதுகின்றனர், ஆனால் குறிசொல்லுபவர்களும் பொல்லாத ஆவிகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவர்களாக இருப்பதை பைபிள் காண்பிக்கிறது. உதாரணமாக, “குறிசொல்லுகிற” கலையை அப்பியாசிக்க ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவிசெய்த “குறிசொல்ல ஏவுகிற ஆவியை”ப்பற்றி அப்போஸ்தலர் 16:16-19 குறிப்பிடுகிறது. என்றபோதிலும், அந்தப் பேய் துரத்தப்பட்டபோது எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அவளுடைய திறமை இழக்கப்பட்டது. பிசாசுகள் தங்கள் கண்ணிக்குள் மக்களை கவர்ந்து சிக்கவைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு கண்ணி இரையாக குறிசொல்லுதல் இருப்பது தெளிவாக இருக்கிறது.

11அன்பான குடும்ப அங்கத்தினர் அல்லது ஒரு நெருக்கமான நண்பரின் மரணத்தைக் குறித்து நீங்கள் துக்கித்துக்கொண்டிருந்தால், நீங்கள் மற்றொரு கண்ணி இரையினால் எளிதில் வசீகரிக்கப்படலாம். ஆவி மத்தியஸ்தம் செய்யும் ஒருவர் விசேஷித்த தகவலை உங்களுக்குக் கொடுக்கவோ அல்லது இறந்துபோன நபருடையதைப் போன்றிருக்கும் ஒரு குரலில் பேசவோ கூடும். எச்சரிக்கையாயிருங்கள்! இறந்தோருடன் தொடர்புகொள்ள செய்யப்படும் முயற்சிகள் ஒரு பொறியினுள் வழிநடத்தக்கூடும். ஏன்? ஏனென்றால் இறந்தோரால் பேசமுடியாது. ஒருவர் இறந்துபோகையில் “அவன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,” என்பதாக கடவுளுடைய வார்த்தை தெளிவாக சொல்வது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம். இறந்தோர் “ஒன்றும் அறியார்கள்.” (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 10) மேலுமாக, உண்மையில் பேய்கள்தான் இறந்தவர்களின் குரலைப் போல பேசுவதாகவும் இறந்துபோன ஒருவரைப்பற்றி ஆவி மத்தியஸ்தம் செய்பவருக்குத் தகவல்கொடுப்பதாகவும் அறியப்பட்டிருக்கின்றன. (1 சாமுவேல் 28:3-19) ஆகவே “செத்தவர்களிடத்தில் குறிகேட்கிற” எவரும் பொல்லாத ஆவிகளால் கண்ணியில் பிடிக்கப்படுகிறார், அவர் யெகோவா தேவனின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுகிறார்.—உபாகமம் 18:11, 12; ஏசாயா 8:19.

கவர்ந்திழுப்பவையிலிருந்து தாக்குபவையாக

12ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமாக நீங்கள் கடவுளுடைய வார்த்தையின் புத்திமதிக்கு இசைவாக நடக்கையில், பேய்களின் கண்ணி இரையை நிராகரித்துவிடுகிறீர்கள். (சங்கீதம் 141:9, 10; ஒப்பிடுக: ரோமர் 12:9.) பொல்லாத ஆவிகள் உங்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதை நிறுத்திவிடும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை! மூன்று தடவை இயேசுவிடம் முயற்சிசெய்துவிட்டு, சாத்தான் “சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.” (லூக்கா 4:13) அதேவிதமாகவே, பிடிவாதமுள்ள ஆவிகள் மக்களை கவர்ந்திழுப்பது மாத்திரமல்லாமல் அவர்களைத் தாக்கவும் செய்கின்றன.

13கடவுளுடைய ஊழியக்காரனாகிய யோபுவின்மீது சாத்தானின் தாக்குதலைப் பற்றிய நம்முடைய முந்தைய கலந்தாலோசிப்பை நினைத்துப்பாருங்கள். பிசாசு, அவர் தன்னுடைய கால்நடைகளையும் தன்னுடைய வேலைக்காரர்களில் பெரும்பாலானவர்களையும் இழக்கும்படியாகச் செய்தான். சாத்தான் யோபுவின் பிள்ளைகளையும்கூட கொன்றுவிட்டான். அடுத்து, யோபுவையே மிகுந்த வேதனைதரும் நோயினால் தாக்கினான். ஆனால் யோபு கடவுளுக்குத் தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டார், அதனால் அவர் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டார். (யோபு 1:7-19; 2:7, 8; 42:12) அப்போது முதற்கொண்டு, பேய்கள் சில ஆட்களை ஊமையராக அல்லது குருடராக ஆக்கி மனிதர்களின் துன்பத்தில் தொடர்ந்து களிப்படைந்து வந்திருக்கின்றன. (மத்தேயு 9:32, 33; 12:22; மாற்கு 5:2-5) இன்று, பேய்கள் சில ஆட்களை பாலினம் சம்பந்தமாக தொந்தரவுசெய்வதாகவும் மற்றவர்களைப் பித்துப்பிடித்த நிலைக்கு ஆக்கிவிடுவதாகவும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. அவை இன்னும் மற்றவர்களை கடவுளுக்கு எதிரான பாவங்களாக இருக்கும் கொலை அல்லது தற்கொலை செய்யத் தூண்டுகின்றன. (உபாகமம் 5:17; 1 யோவான் 3:15) இருந்தபோதிலும், ஒரு சமயம் இந்தப் பொல்லாத ஆவிகளால் சிக்கவைக்கப்பட்டிருந்தவர்கள் தங்களை அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு எவ்விதமாக கூடிய காரியமாக இருந்திருக்கிறது? அத்தியாவசியமான படிகளை எடுப்பதன் மூலம் இதை அவர்கள் செய்திருக்கின்றனர்.

பொல்லாத ஆவிகளை எதிர்ப்பது எப்படி

14பொல்லாத ஆவிகளை எதிர்த்து உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும் அவற்றின் கண்ணிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குரிய ஒரு வழி என்ன? விசுவாசிகளாவதற்கு முன்பாக ஆவியுலகத்தோடு தொடர்பு வைத்திருந்த எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உறுதியான படிகளை எடுத்தனர். “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்,” என்பதாக நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 19:19) நீங்கள் ஆவியுலகத் தொடர்பை அப்பியாசித்திராவிட்டாலும்கூட, ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தபட்டதாக தோன்றும் எதையும் ஒழித்துவிடுங்கள். புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோக்கள், சுவரொட்டிகள், இசைப் பதிவுகள் மற்றும் ஆவியுலகத் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை இது உட்படுத்துகிறது. இது விக்கிரகங்கள், தாயத்துக்கள் மற்றும் பாதுகாப்புக்காக அணியப்படும் மற்ற பொருட்களையும் ஆவியுலகத் தொடர்பை அப்பியாசிக்கிறவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசு பொருட்களையும்கூட உட்படுத்தும். (உபாகமம் 7:25, 26; 1 கொரிந்தியர் 10:21) இதை விளக்க: தாய்லாந்திலுள்ள திருமணமான ஒரு தம்பதியினர் நீண்ட காலமாக பேய்களால் தொந்தரவு செய்யப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் அகற்றிவிட்டனர். விளைவு என்ன? அவர்கள் பேய்களின் தாக்குதலிலிருந்து விடுபட்டு அதற்குப் பின் உண்மையான ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்தனர்.

15பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்பதற்கு கடவுள் கொடுக்கும் ஆவிக்குரிய கவசமாகிய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளும்படியான அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியைப் பின்பற்றுவது மற்றொரு அவசியமான படியாகும். (எபேசியர் 6:11-17) கிறிஸ்தவர்கள் பொல்லாத ஆவிகளுக்கு எதிராக தங்கள் தற்காப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் படி எதை உட்படுத்துகிறது? “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்,” என்று பவுல் சொன்னார். ஆம், உங்களுடைய விசுவாசம் பலமாக இருக்கையில், பொல்லாத ஆவி சேனைகளை எதிர்ப்பதற்கு உங்களுடைய திறமை அதிகமாக இருக்கும்.—மத்தேயு 17:14-20.

16உங்கள் விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பலப்படுத்திக்கொள்ளலாம்? பைபிளைத் தொடர்ந்து படித்து அதன் புத்திமதிகளை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்துவதன் மூலம் அதைச் செய்யலாம். ஒருவருடைய விசுவாசத்தின் பலம் பெருமளவில் அதன் அஸ்திவாரத்தின்—தேவனை அறியும் அறிவின்—உறுதியின்பேரில் சார்ந்திருக்கிறது. பைபிளை படிக்கையில் நீங்கள் பெற்றுக்கொண்டு கருத்தாக இருதயத்தில் பதித்திருக்கும் திருத்தமான அறிவு உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்களா? (ரோமர் 10:10, 17) ஆகவே, இந்தப் படிப்பைத் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஆஜராயிருப்பதை உங்களுடைய பழக்கமாக்கிக்கொள்ளும்போது, உங்கள் விசுவாசம் இன்னும் அதிகமாக பலமுள்ளதாகும் என்பதில் சந்தேகமில்லை. (ரோமர் 1:11, 12; கொலோசெயர் 2:6, 7) அது பேய்களின் தாக்குதல்களுக்கு எதிராக பலமுள்ள பாதுகாப்பாக இருக்கும்.—1 யோவான் 5:5.

17பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்து நிற்க தீர்மானமாயிருக்கும் ஒரு நபர் என்ன கூடுதலான படிகளை எடுக்கமுடியும்? எபேசிய கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு தேவையாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் பேய் தொடர்பு அதிகமாயிருந்த ஒரு பட்டணத்தில் வாழ்ந்துவந்தனர். ஆகவே பவுல் அவர்களிடமாக சொன்னார்: ‘எந்தச் சமயத்திலும் ஆவியினாலே ஜெபம் பண்ணிக்கொண்டிருங்கள்.’ (எபேசியர் 6:18) பேய்கள் நிறைந்துள்ள ஒரு உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதால், பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்பதற்கு கடவுளுடைய பாதுகாப்புக்காக ஊக்கமாக ஜெபிப்பது அத்தியாவசியமாகும். (மத்தேயு 6:13) கிறிஸ்தவ சபையின் நியமிக்கப்பட்ட மூப்பர்களின் ஆவிக்குரிய உதவியும் ஜெபங்களும் இதன் சம்பந்தமாக பயனுள்ளதாய் இருக்கிறது.—யாக்கோபு 5:13-15.

பொல்லாத ஆவிகளுக்கு எதிரான உங்கள் போராட்டத்தை தொடருங்கள்

18என்றபோதிலும் இந்த அடிப்படை படிகளை எடுத்தபின்னும்கூட, சிலர் பொல்லாத ஆவிகளால் தொந்தரவு செய்யப்படுகின்றனர். உதாரணமாக, கோட் டிவோரில் ஒரு மனிதர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து தன்னுடைய எல்லா தாயத்துக்களையும் அழித்துவிட்டார். அதற்குப்பின், அவர் நல்ல முன்னேற்றம் செய்து யெகோவாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார், பின்பு முழுக்காட்டப்பட்டார். ஆனால் அவர் முழுக்காட்டப்பட்டு ஒரு வாரம் சென்றபின், பேய்கள் அவரை மறுபடியுமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்தன, புதிதாய் அவர் கண்டுபிடித்திருந்த விசுவாசத்தைக் கைவிடும்படியாக குரல்கள் அவரிடம் கூறின. இது உங்களுக்குச் சம்பவித்தால், நீங்கள் யெகோவாவின் பாதுகாப்பை இழந்துவிட்டீர்கள் என்பதை இது அர்த்தப்படுத்துமா? அப்படி இருக்கவேண்டியதில்லை.

19பரிபூரண மனிதராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தெய்வீக பாதுகாப்பு இருந்தபோதிலும், பொல்லாத ஆவி சிருஷ்டியாகிய பிசாசாகிய சாத்தானின் குரலை அவர் கேட்டார். இப்படிப்பட்ட சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை இயேசு காண்பித்தார். அவர் பிசாசிடம் சொன்னார்: “அப்பாலே போ சாத்தானே.” (மத்தேயு 4:3-10) அதேவிதமாகவே, ஆவி உலகிலிருந்து வரும் குரல்களைக் கவனித்துக்கேட்க நீங்கள் மறுத்துவிட வேண்டும். உதவிக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவதன் மூலம் பொல்லாத ஆவிகளை எதிர்த்து நில்லுங்கள். ஆம், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தி சப்தமாக ஜெபியுங்கள். நீதிமொழிகள் 18:10 சொல்கிறது: “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.” கோட் டிவோரில் இருந்த கிறிஸ்தவ மனிதர் அதைச் செய்தார், பொல்லாத ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டன.—சங்கீதம் 124:8; 145:18.

20யெகோவா பொல்லாத ஆவிகள் இருக்கும்படியாக அனுமதித்திருக்கிறார், ஆனால் அவர் தம்முடைய வல்லமையை, விசேஷமாக அவருடைய ஜனங்களின் சார்பாக காண்பிக்கிறார், அவருடைய பெயர் பூமி முழுவதிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. (யாத்திராகமம் 9:16) நீங்கள் கடவுளோடு நெருக்கமாக இருந்தால், பொல்லாத ஆவிகளைக் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. (எண்ணாகமம் 23:21, 23; யாக்கோபு 4:7, 8; 2 பேதுரு 2:9) அவற்றின் வல்லமை ஓரளவுக்கே இருக்கிறது. அவை நோவாவின் நாளில் தண்டிக்கப்பட்டன, சமீப காலங்களில் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டன, இப்பொழுது கடைசி நியாயத்தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. (யூதா 6; வெளிப்படுத்துதல் 12:9; 20:1-3, 7-10, 14) உண்மையில் அவை வரவிருக்கும் அழிவைக் குறித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன. (யாக்கோபு 2:19) ஆகவே பொல்லாத ஆவிகள் ஏதோவொரு கண்ணி இரையினால் உங்களைக் கவர்ந்திழுக்கவோ அல்லது ஏதாவது ஒரு வழியில் தாக்கவோ முயன்றாலும் சரி, நீங்கள் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். (2 கொரிந்தியர் 2:11) எல்லா வகையான ஆவியுலகத் தொடர்பையும் தவிர்த்துவிடுங்கள், கடவுளுடைய வார்த்தையின் புத்திமதியைப் பின்பற்றுங்கள், யெகோவாவின் அங்கீகாரத்தை நாடுங்கள். இதைத் தாமதமின்றி செய்யுங்கள், ஏனென்றால் உங்களுடைய உயிர் பொல்லாத ஆவி சேனைகளை நீங்கள் எதிர்த்துநிற்பதன் பேரில் சார்ந்திருக்கிறது!

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

பொல்லாத ஆவிகள் எவ்வாறு மக்களை மோசம் போக்க முயற்சிக்கின்றன?•

ஆவியுலகத் தொடர்பை பைபிள் ஏன் கண்டனம் செய்கிறது?

பொல்லாத ஆவி சேனைகளிடமிருந்து ஒரு நபர் எவ்வாறு விடுவித்துக் கொள்ள முடியும்?

பொல்லாத ஆவிகளை நீங்கள் ஏன் தொடர்ந்து எதிர்த்து நிற்க வேண்டும்?

[கேள்விகள்]

1. பொல்லாத ஆவிகளை எதிர்ப்பட்டபோது இயேசு எவ்விதமாக பிரதிபலித்தார்?

2. நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

3. பிசாசாகிய சாத்தான் எவ்வாறு தோன்றினான்?

4. நோவாவின் நாளில் சில தேவதூதர்கள் எவ்வாறு பாவம் செய்தனர்?

5. சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் குறிக்கோள் என்ன, மக்களை சிக்கவைப்பதற்கு எதை அவர்கள் பயன்படுத்துகின்றனர்?

6. ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன, அவற்றின் சில வகைகள் யாவை?

7. ஆவியுலகத் தொடர்பு எத்தனை பரவலாக உள்ளது, கிறிஸ்தவ நாடுகள் என்றழைக்கப்படுகிறவற்றிலும்கூட அது ஏன் தழைத்தோங்குகிறது?

8. ஆவியுலகத் தொடர்பு பற்றிய வேதாகம கருத்து என்ன?

9. இன்றைய நாளில் ஆவி உலகத்திலிருந்து வரும் செய்திகள் யெகோவாவிடமிருந்து வருவது கிடையாது என்பதாக நாம் ஏன் முடிவுசெய்யலாம்?

10. குறிசொல்லுதல் என்றால் என்ன, நாம் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்?

11. இறந்தோருடன் தொடர்புகொள்ள செய்யப்படும் முயற்சிகள் எவ்வாறு ஒரு நபரை ஒரு கண்ணியினுள் வழிநடத்துகின்றன?

12, 13. பேய்கள் மக்களைக் கவர்ந்திழுப்பதிலும் தொந்தரவு செய்வதிலும் விடாப்பிடியாக இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

14. முதல் நூற்றாண்டு எபேசிய கிறிஸ்தவர்களின் முன்மாதிரிக்கு இசைவாக, நீங்கள் எவ்வாறு பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்கலாம்?

15. பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்து நிற்பதில் மற்றொரு அவசியமான படி என்ன?

16. உங்கள் விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பலப்படுத்திக் கொள்ளலாம்?

17. பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்து நிற்பதில் என்ன கூடுதலான படிகள் அவசியமாயிருக்கலாம்?

18, 19. பேய்கள் மறுபடியுமாக ஒரு நபரை தொந்தரவு செய்கையில் என்ன செய்யப்படலாம்?

20. சுருக்கமாக, பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்க நீங்கள் என்ன செய்யலாம்?

[[பக்கம் 110-ன் படம்]

பல்வேறு வகைகளாக இருக்கும் ஆவியுலகத் தொடர்பை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?