இது தெளிவாகவே பைபிள் போதகமா?
இது தெளிவாகவே பைபிள் போதகமா?
திரித்துவம் உண்மையெனில், அது தெளிவாயும் முரண்பாடில்லாமலும் பைபிளில் விளக்கப்பட்டிருக்கவேண்டும். ஏன்? ஏனெனில், அப்போஸ்தலர்கள் உறுதிசெய்தபடி, பைபிள், கடவுள் மனிதவர்க்கத்துக்குத் தம்மைப்பற்றிக் கொடுத்துள்ள வெளிப்படுத்துதலாகும். கடவுள் ஏற்கத்தகுந்த முறையில் அவரை வணங்குவதற்கு நாம் அவரைப்பற்றி அறியவேண்டுமாதலால், அவர் யார் என்று சொல்வதில் பைபிள் தெளிவாயிருக்கவேண்டும்.
முதல் நூற்றாண்டு விசுவாசிகள் வேத எழுத்துக்களைக் கடவுளின் அதிகாரப்பூர்வமான வெளிப்படுத்துதலென ஏற்றனர். அது அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மூலாதாரமாக, இறுதியான அதிகாரத்துவமாக இருந்தது. உதாரணமாக, பெரோயா பட்டணத்தில் அப்போஸ்தலன் பவுல் ஜனங்களுக்குப் பிரசங்கித்தபோது, “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.”—அப்போஸ்தலர் 17:10, 11.
அக்காலத்தில் முக்கிய நிலையிலிருந்த கடவுளுடைய மனிதர் எதைத் தங்கள் அதிகாரத்துவமாகப் பயன்படுத்தினர்? அப்போஸ்தலர் 17:2, 3-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “பவுல் தன் வழக்கப்படியே அவர்களிடம் போய் . . . வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி . . . அவர்களுக்கு [(வேத எழுத்துக்களிலிருந்து) மேற்கோள்களைக்கொண்டு நிரூபித்து, NW] விளக்கிக் காட்டினான்.”
இயேசுதாமே, “எழுதியிருக்கிறதே,” என்று திரும்பத்திரும்பச் சொல்லி, வேத எழுத்துக்களைத் தம்முடைய போதகத்துக்கு மூலாதாரமாகப் பயன்படுத்துவதில் முன்மாதிரியை வைத்தார். “வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.”—மத்தேயு 4:4, 7; லூக்கா 24:27.
இவ்வாறு இயேசுவும், பவுலும், முதல்-நூற்றாண்டு விசுவாசிகளும் வேத எழுத்துக்களைத் தங்கள் போதகத்துக்கு ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகள்,” என அவர்கள் அறிந்திருந்தார்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17; இவற்றையும் பாருங்கள்: 1 கொரிந்தியர் 4:6; 1 தெசலோனிக்கேயர் 2:13; 2 பேதுரு 1:20, 21.
பைபிள் ‘சீர்திருத்தவுங் கூடும்’ என்றால், அவ்வளவு அடிப்படையானதென விவாதிக்கப்படுகிற திரித்துவத்தைப்போன்றக் காரியத்தைப்பற்றிய தகவலை அது தெளிவாக வெளிப்படுத்தவேண்டும். ஆனால் அது தெளிவாய் பைபிள் போதகமென இறையியல் வல்லுநர்களும் சரித்திராசிரியர்களும்தாமே சொல்கிறார்களா?
“திரித்துவம்” பைபிளில் இருக்கிறதா?
ஒரு புராட்டஸ்டன்ட் பிரசுரம் பின்வருமாறு கூறுகிறது: “திரித்துவம் என்ற இந்தச் சொல் பைபிளில் காணப்படுகிறதில்லை . . . 4-ம் நூற்றாண்டு வரையில் இது சர்ச்சின் இறையியலில் கோட்பாடாக ஓர் இடத்தை கண்டடையவில்லை”. (படவிளக்கத்தைக் கொண்ட பைபிள் அகராதி) மேலும், திரித்துவம் “நேரடியாயும் உடனடியாயும் கடவுளின் வார்த்தை . . . அல்ல” என்று ஒரு கத்தோலிக்க அதிகாரத்துவம் சொல்லுகிறது.—புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா.
இந்தக் கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா மேலும் குறிப்பிடுவதாவது: “வேத எழுத்துக்களில் இந்த மூன்று தெய்வீக ஆட்களை ஒன்றாய்க் குறித்துக்காட்டும் தனி பதம் எதுவும் இதுவரையில் இல்லை. τριας [டிரையாஸ்] (லத்தீன் டிரினிட்டாஸ் இதன் ஒரு மொழிபெயர்ப்பு) முதன்முதல் பெரும்பாலும் கி. பி. 180-ல் அந்தியோகியாவின் தியோஃபிலஸின் எழுத்துக்களில் காணப்படுகிறது. . . . இதற்குச் சற்றுப் பின் டிரினிட்டாஸ் என்ற அதன் லத்தீன் சொல்லமைப்பில் டெர்ட்டுல்லியனின் நூல்களில் அது தோன்றுகிறது.”
எனினும் டெர்ட்டுல்லியன் திரித்துவத்தைக் கற்பித்தான் என்பதற்கு இதுதானேயும் நிரூபணம் அல்ல. உதாரணமாக, கத்தோலிக்க நூலாகிய டிரினிட்டாஸ்—பரிசுத்த திரித்துவத்தின் ஓர் இறையியல் கலைக்களஞ்சியம் (ஆங்கிலத்திலுள்ளது), பின்னால் மற்றவர்கள், திரித்துவத்தை விவரிக்க டெர்ட்டுல்லியனின் சொற்கள் சிலவற்றைப் பயன்படுத்தினரென குறிப்பிடுகிறது. பின்பு அது பின்வருமாறு எச்சரிக்கிறது: “அவன் அந்த
வார்த்தைகளை உபயோகிப்பதன் காரணமாக, ஆராயாமல் பதற்றமாய் முடிவுகள் செய்ய முடியாது, ஏனெனில் அவன் அந்தச் சொற்களை திரித்துவ கோட்பாட்டைப் பற்றிய இறையியலுக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறதில்லை.”எபிரெய வேத எழுத்துக்களின் அத்தாட்சி
“திரித்துவம்” என்ற சொல் பைபிளில் காணப்படுகிறதில்லையெனினும், திரித்துவத்தின் அபிப்பிராயமாவது அதில் தெளிவாய்க் கற்பிக்கப்படுகிறதா? உதாரணமாக, எபிரெய வேத எழுத்துக்கள் (“பழைய ஏற்பாடு”) என்ன வெளிப்படுத்துகின்றன?
மத என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “எபிரெய பைபிளில் திரித்துவக் கோட்பாடு அடங்கியில்லை என்று இறையியல் வல்லுநர் இன்று ஒப்புக்கொள்கின்றனர்.” புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியாவும் இவ்வாறு கூறுகிறது: “பரிசுத்தத் திரித்துவக் கோட்பாடு ப[ழைய] ஏ[ற்பாட்டில்] கற்பிக்கப்படுகிறதில்லை.
இவ்வாறே, மூவரொருவரான கடவுள் என்ற தன் புத்தகத்தில் ஜெஸ்யுட் எட்மன்ட் ஃபோர்ட்மன் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிற மூவரொருவரான ஒரு கடவுளைப்பற்றி பழைய ஏற்பாடு . . . வெளிப்படையாகவோ அல்லது காரணத்தோடு மறைமுகமாகவோ நமக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லை. . . . கடவுளில் ஒரு [திரித்துவம்] இருக்கலாமென பரிசுத்த எழுத்தாளர் எவராவது சந்தேகித்தனரென்பதற்குங்கூட ஓர் அத்தாட்சியுமில்லை. . . . [“பழைய ஏற்பாட்டு”] குறிப்பான தெரிவிப்புகளில் அல்லது நிழலாக முன்குறிப்பவற்றில் அல்லது ‘மறைபொருளைக்கொண்ட அடையாளங்களில் திரித்துவ ஆட்களைக் காண்பது, பரிசுத்த எழுத்தாளர்களின் சொற்களையும் எண்ணங்களையும் மீறி அப்பாற்செல்வதாகும்”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
எபிரெய வேத எழுத்துக்களைத்தாமே ஆராய்ந்து பார்ப்பது இந்தக் குறிப்புரைகளை உண்மையென காட்டும். ஆகவே, தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேத எழுத்துக்களின் உண்மையான ஏட்டுத் தொகுப்பை உண்டுபண்ணும் பைபிளின் முதல் 39 புத்தகங்களில் திரித்துவத்தைப்பற்றித் தெளிவான போதகம் எதுவுமில்லை.
கிரேக்க வேத எழுத்துக்களின் அத்தாட்சி
அப்படியானால், கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்கள் (“புதிய ஏற்பாடு”) திரித்துவத்தைப்பற்றித் தெளிவாய்ப் பேசுகின்றனவா?
மத என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “புதிய ஏற்பாடும் திரித்துவத்தைப்பற்றித் தெளிவான கோட்பாட்டைக் கொண்டில்லையென இறையியல் வல்லுநர் ஒப்புக்கொள்கின்றனர்.”
ஜெஸ்யுட் ஃபோர்ட்மன் கூறுவதாவது: “புதிய ஏற்பாடு எழுத்தாளர் . . . திரித்துவத்தின் விதிமுறையான அல்லது திட்டமாக எடுத்துறைக்கப்பட்ட கோட்பாட்டையும், அல்லது ஒரே கடவுளில் மூன்று சரிசமமான தெய்வீக ஆட்கள் இருக்கிறார்களென்ற எந்தத் தெளிவான போதகத்தையும் நமக்குக் கொடுக்கிறதில்லை. . . . அதே கடவுளில் தெய்வீக வாழ்க்கையின் மற்றும் நடவடிக்கையின் மூன்று தனிவேறுபட்ட ஆட்களின் எந்தத் திரித்துவ கோட்பாட்டையும் நாம் காண்கிறதில்லை.
புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “திரித்துவம் என்ற சொல்லோ திட்டவட்டமான கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை.”
கிறிஸ்தவ கோட்பாட்டின் சுருக்கமான ஒரு சரித்திரம் (ஆங்கிலம்) என்பதில் பெர்னார்ட் லோஹசி பின்வருமாறு சொல்லுகிறார்: “புதிய ஏற்பாட்டைக் குறித்தவரையில், அதில் ஒருவர் உண்மையில் திரித்துவக் கோட்பாட்டைக் காண்கிறதில்லை.”
இதே விதமாக, ஆங்கிலத்திலுள்ள புதிய ஏற்பாடு இறையியலின் புதிய சர்வதேச அகராதி பின்வருமாறு சொல்லுகிறது: “படிப்படியாக தோன்றிய திரித்துவ கோட்பாட்டைப் பு[திய] ஏ[ற்பாடு] கொண்டில்லை. ‘பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி சம உள்ளியல்புடையவர்கள் என்று வெளிப்படையாய்க் கூறும் அறிவிப்பு பைபிளில் இல்லை’ [என்று புராட்டஸ்டன்ட் இறையியல் வல்லுநர் கார்ல் பார்த் சொன்னார்].
ஏல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் E. உவாஷ்பர்ன் ஹாப்கின்ஸ் பின்வருமாறு உறுதிகூறினார்: “இயேசுவும் பவுலும் திரித்துவ கோட்பாட்டை அறியவில்லையென தெரிகிறது; . . . அவர்கள் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லுகிறதில்லை.”—மதத்தின் ஆரம்பமும் படிப்படியான வளர்ச்சியும்.
சரித்திராசிரியன் ஆர்த்தர் உவீகால் குறிப்பிடுவதாவது: “இத்தகைய ஒரு வினோதத்தை இயேசு கிறிஸ்து ஒருபோதும் குறிப்பிடவில்லை, மேலும் புதிய ஏற்பாட்டில் ஓரிடத்திலும் ‘திரித்துவம்’ என்ற இந்தச் சொல் காணப்படுகிறதில்லை. நம்முடைய கர்த்தரின் மரணத்துக்கு முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பே இந்த அபிப்பிராயத்தைச் சர்ச் ஏற்றது.”—நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமத நம்பிக்கைகள் (ஆங்கிலம்).
இவ்வாறு, எபிரெய வேத எழுத்துக்களின் 39 புத்தகங்களோ கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் தொகுப்பாகிய தேவாவியால் ஏவப்பட்ட 27 புத்தகங்களோ திரித்துவத்தைப்பற்றி எவ்விதத் தெளிவான போதகத்தையும் அளிக்கிறதில்லை.
பூர்வ கிறிஸ்தவர்களால் கற்பிக்கப்பட்டதா?
பூர்வ கிறிஸ்தவர்கள் திரித்துவத்தைக் கற்பித்தார்களா? சரித்திராசிரியரும் இறையியல் வல்லுநரும் சொல்லும் குறிப்புகளைக் கவனியுங்கள்:
“பழங்கால கிறிஸ்தவம், விசுவாசப்பிரமாணத்தில் பின்னால் விரிவாக்கப்பட்டதைப்போன்ற தெளிவான திரித்துவக் கோட்பாட்டைக் கொண்டில்லை.”—புதிய ஏற்பாடு இறையியலின் புதிய சர்வதேச அகராதி.தி நியு இன்டர்நாஷனல் டிக்ஷனரி ஆஃப் நியு டெஸ்டமென்ட் தியாலொஜி
எனினும், பூர்வ கிறிஸ்தவர்கள், தங்கள் சொந்த விசுவாசத்தோடு [திரித்துவ] அபிப்பிராயத்தைப் பொருத்திப் பயன்படுத்த முதன்முதல் எண்ணவில்லை. அவர்கள் தங்கள் பக்தியைப் பிதாவாகிய கடவுளுக்கும், கடவுளின் குமாரனான இயேசு கிறிஸ்துவுக்கும் செலுத்தினர், பரிசுத்த ஆவியை . . . ஒப்புக்கொண்டனர்; ஆனால் இந்த மூவர் உண்மையில் திரித்துவமாக, சரிசமமாயும் ஒருவராய் ஒன்றிணைந்தும் இருப்பதன் எண்ணம் எதுவும் இல்லை.”—நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமத நம்பிக்கைகள் (ஆங்கிலம்).
“முதன்முதலில் திரித்துவம் கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு பாகமாயிருக்கவில்லை. . . . பு[திய] ஏ[ற்பாட்டிலும்] மற்றப் பூர்வ கிறிஸ்தவ எழுத்துக்களிலும் காட்டப்படுகிறபடி, அப்போஸ்தலர் மற்றும் அப்போஸ்தலர் காலத்துக்கு அடுத்தக் காலங்களில் அவ்வாறு இல்லை.—மதம் மற்றும் ஒழுக்கநெறியின் என்ஸைக்ளோபீடியா.
“
நான்காம் நூற்றாண்டின் முடிவுக்கு முன்னால், ‘மூன்று ஆட்களில் ஒரே கடவுள்’ என்ற விதிமுறை உறுதியாய் நிலைநாட்டப்படவில்லை, நிச்சயமாகவே கிறிஸ்தவ வாழ்க்கைக்குள்ளும் அதன் விசுவாச அறிக்கைக்குள்ளும் முற்றிலும் இணைக்கப்படவில்லை. . . . அப்போஸ்தல பிதாக்களுக்குள், இத்தகைய மனப்போக்கு அல்லது உளக் காட்சி மிகச் சிறிதாயினும் தோன்றிவரக் காண எதுவுமில்லை.”—புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா.நைசீனுக்கு முற்பட்ட கால பிதாக்கள் கற்பித்தது
இந்த நைசீனுக்கு முற்பட்ட கால பிதாக்கள், கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னான தொடக்க நூற்றாண்டுகளில் முதன்மையான மதப் போதகர்களாயிருந்தனரென ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் கற்பித்தது அக்கறையைக் தூண்டுகிறது.
ஏறத்தாழ பொ.ச. 165-ல் மரித்த, ஜஸ்டின் மார்டர், மனிதனாவதற்கு முன்னிருந்த இயேசுவை, “எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளல்லாமல் வேறு ஒருவரான” சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தூதன் என அழைத்தான். இயேசு கடவுளுக்குக் கீழ்ப்பட்டவர், மேலும் “அவர் செய்யும்படியும் சொல்லும்படியும் . . . சிருஷ்டிகர் சித்தங்கொண்டதைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் செய்யவில்லை,” என்று அவன் சொன்னான்.
மனிதனாவதற்கு முன்னிருந்த இயேசு கடவுளிடமிருந்து தனிவேறான வாழ்க்கையைக் கொண்டிருந்தார் கடவுளைவிடத் தாழ்ந்தவராயிருந்தார் என்று ஏறத்தாழ பொ.ச. 200-ல் மரித்த ஐரீனியஸ் சொல்லுகிறான். “எல்லாருக்கும் மேலாக ஈடற்ற உன்னதரும் அவரைத்தவிர வேறொருவரும் இல்லாத” “உண்மையான ஒரே ஒருவரும் ஒரே கடவுளுமானவ”ருக்கு இயேசு சமமானவரல்லவென அவன் காட்டினான்.
ஏறத்தாழ பொ.ச. 215-ல் மரித்த அலெக்ஸாந்திரியாவின் கிளெமென்ட், இயேசுவை அவர் மனிதனாவதற்குமுன் வாழ்ந்த வாழ்க்கையில் “ஒரு சிருஷ்டி” என அழைத்தான். ஆனால் கடவுளை “சிருஷ்டிக்கப்படாதவரும் அழிவில்லாதவரும் ஒரே உண்மையான கடவுளும்,” என அழைத்தான். குமாரன் “ஒரே எல்லாம் வல்ல பிதாவுக்கு அடுத்தப்படியாக இருக்கிறார்” ஆனால் அவருக்குச் சமமாயில்லை என்று அவன் சொன்னான்.
ஏறத்தாழ பொ.ச. 230-ல் மரித்த டெர்ட்டுலியன், கடவுளுடைய ஈடற்ற உயர்நிலையைக் கற்பித்தான். அவன் குறிப்பிட்டதாவது: “பிதா மேலும் பெரியவராதலால், பிறப்பிக்கிறவர் பிறப்பிக்கப்பட்டவரிலிருந்து வேறுபட்டவராதலால், அனுப்புகிறவர் அனுப்பப்பட்டவரிலிருந்து வேறுபட்டவராதலால், அவர் (மற்றொருவரான) குமாரனிலிருந்து வேறுபட்டவர்.” அவன் மேலும் கூறினதாவது: “குமாரன் இல்லாத ஒரு காலம் இருந்தது. . . . எல்லாவற்றிற்கும் முன்னால் கடவுள் தனிமையாயிருந்தார்.”
ஏறத்தாழ பொ.ச. 235-ல் மரித்த ஹிப்போலிட்டஸ், கடவுள் “ஒரே கடவுள், முதலும் ஒரே ஒருவரும், உண்டாக்கினவரும் எல்லாருக்கும் கர்த்தரும்” ஆனவர், “அவருடன் சமவயதான ஒன்றும் இல்லை . . . ஆனால் அவர் ஒருவரே, தாமே தனிமையில் இருந்தார்; அவர், அதைச் சித்தங்கொண்டு, முன்பு இல்லாததை இருக்கும்படி செய்தார்,” மனிதனாவதற்கு முன்னாலிருந்த சிருஷ்டிக்கப்பட்ட இயேசுவைப் போன்றவரை உண்டாயிருக்கச் செய்தார்.
ஏறத்தாழ பொ.ச. 50-ல் மரித்த ஆரிஜன், “பிதாவும் குமாரனும் இரண்டு வஸ்துக்கள் . . . அவர்களுடைய உள்ளியல்புகளைக் குறித்ததில் இரண்டு பொருட்கள்,” மேலும் “பிதாவுடன் ஒப்பிட, [குமாரன்] வெகு சிறிய ஒளியே” எனக் கூறினான்.
முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆல்வன் லாம்சன், சரித்திரப்பூர்வ அத்தாட்சிகளைச் சுருக்கித் தொகுத்துப் பின்வருமாறு சொல்கிறார்: “தற்காலத்தில் பொதுவாய் மதிப்புப் பெற்றுள்ள இந்தத் திரித்துவக் கோட்பாடு . . . ஜஸ்டினுடைய [மார்டர்] மொழியிலிருந்து எந்த ஆதரவையும் பெறுகிறதில்லை: இந்தக் கூற்று நைசீனுக்கு முற்பட்ட காலத்துப் பிதாக்களெல்லாருக்கும், அதாவது, கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னான மூன்று நூற்றாண்டுகளிலிருந்த கிறிஸ்தவ எழுத்தாளர்கள் எல்லாருக்கும் பொருந்தும். பிதா, குமாரன், மேலும் . . . பரிசுத்த ஆவியைப்பற்றி அவர்கள் பேசுவது உண்மையே, ஆனால் சரிசமமானவர்களாக அல்ல, ஒரே எண் உள்ளியல்புடையோராக அல்ல, ஒருவரில் மூவராக அல்ல, இப்பொழுது திரித்துவக் கோட்பாட்டாளர் ஏற்றுள்ள எந்தக் கருத்திலும் அல்ல. இதற்கு முற்றிலும் நேர்மாறானதே உண்மையாயிருக்கிறது.”
இவ்வாறு பைபிள் காலங்கள் முழுவதிலும் அதற்குப் பின்னான பல நூற்றாண்டுகளாகவும் இந்தத் திரித்துவம் அறியப்படவில்லையென பைபிளின் மற்றும் சரித்திரத்தின் அத்தாட்சி தெளிவாக்குகிறது.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“கடவுளில் ஒரு [திரித்துவம்] இருக்கலா மென பரிசுத்த எழுத்தாளர் எவராவது சந்தேகித்தனரென்பதற்குங்கூட ஓர் அத்தாட்சியுமில்லை.”—மூவரொருவர் கடவுள்.