கடவுளையும் இயேசுவையும் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
கடவுளையும் இயேசுவையும் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
மக்கள் திரித்துவத்தைப் பற்றி முன்னதாகவே உருவாக்கிவைத்துள்ள எண்ணம் எதுவும் இல்லாமல், பைபிளை முதலிலிருந்து முடிவுவரை முழுவதும் வாசித்தால், தாங்கள் சொந்தமாய் அத்தகைய கருத்தை அடைவார்களா? இல்லவே இல்லை.
கடவுள் ஒருவரே சர்வவல்லவர், சிருஷ்டிகர், வேறு எவரிலிருந்தும் தனித்தவர் மேலும் தனிவேறுபட்டவராக விளங்குபவர் எனவும், மேலும் இயேசு, மனிதனாவதற்கு முன்னான தம்முடைய வாழ்க்கையிலும், தனித்தவரும் வேறு எவரிலுமிருந்து தெளிவாக வேறுபட்டவரும், சிருஷ்டிக்கப்பட்டிருப்பவரும், கடவுளுக்குக் கீழ்ப்பட்டவருமானவர் எனவும், பாரபட்சமில்லாத வாசகருக்கு வெகு தெளிவாய் விளங்குகிறது.
கடவுள் ஒருவரே, மூவரல்ல
கடவுள் ஒருவரே என்ற இந்தப் பைபிள் போதகம் ஆங்கிலத்தில் மோனோதீயிஸம் (ஒரே கடவுள் கோட்பாடு) எனப்படுகிறது. ஒரே கடவுள் கோட்பாடு அதன் தூய்மையான முறையில் திரித்துவத்துக்கு இடமளிப்பதில்லையென சர்ச் சம்பந்தப் பேராசிரியர் L. L. பேய்ன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பழைய ஏற்பாடு கண்டிப்பாய் ஒரே கடவுள் கோட்பாட்டைக் கொண்டது. கடவுள் தனி ஆளாயிருக்கிறார். அதில் திரித்துவம் காணப்படுகிறதென்ற எண்ணம் . . . முற்றிலும் ஆதாரமற்றது.”
இயேசு பூமிக்கு வந்த பின் இந்த ஒரே கடவுள் கோட்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? பேய்ன் பதிலளிப்பதாவது: “இந்தக் குறிப்பில் பழைய ஏற்பாட்டுக்கும் புதியதற்குமிடையில் எந்தப் பிளவும் இல்லை. ஒரே கடவுள் கோட்பாட்டு பாரம்பரியம் தொடருகிறது. இயேசு யூதராயிருந்தார், யூதப் பெற்றோரால் பழைய ஏற்பாட்டு வேத எழுத்துக்களில் பயிற்றுவிக்கப்பட்டார். அவருடைய போதகம் உள்ளூடாக யூத மயமாயிருந்தது; நிச்சயமாகவே ஒரு புதிய சுவிசேஷம், ஆனால் ஒரு புதிய இறையியல் அல்ல. . . . மேலும் யூத ஒரே கடவுள் கோட்பாட்டின் இந்தப் பெரிய மூலவாக்கியத்தைத் தம்
சொந்த நம்பிக்கையாக அவர் ஏற்றார்: “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”இவ்வார்த்தைகள் உபாகமம் 6:4-ல் காணப்படுகின்றன. கத்தோலிக் புதிய ஜெருசலெம் பைபிளில் (NJB) பின்வருமாறு இருக்கிறது: “இஸ்ரவேலே, கவனி: நம்முடைய கடவுளாகிய யாவே ஒருவரே, ஒரே யாவே.” a இந்த வசனத்தின் இலக்கணத்தில், “ஒருவரே” என்ற இந்தச் சொல் ஒரு தனியாளை மட்டுமே குறிக்கிறது. வேறு எதையாகிலும் குறிக்கிறதென மறைமுகமாய் உணர்த்தவும், பன்மை திரிபு உண்டுபண்ணும் எதுவும் இல்லை.
இயேசு பூமிக்கு வந்த பின்னும், கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல், கடவுளின் இயல்பில் எந்த மாற்றத்தையும் குறிப்பிடவில்லை. “தேவனோ ஒருவர்,” என்று அவன் எழுதினான்.—கலாத்தியர் 3:20; 1 கொரிந்தியர் 8:4-6-ஐயும் பாருங்கள்.
கடவுள் ஒரே ஆள் என, பைபிள் முழுவதிலும் ஆயிரக்கணக்கான தடவைகள் பேசப்பட்டிருக்கிறது. அவர்தாமே பேசுகையில், பிரிந்திராத ஒரே தனி ஆளாகவே பேசுகிறார். இதன்பேரில் பைபிள் இதைவிட தெளிவாய் இருக்கமுடியாது. கடவுள் சொல்லுகிற பிரகாரம்: “நானே யெகோவா, என் நாமம் இதுவே; என் மகிமையை மற்றவர்களுக்கும் . . . கொடேன். (ஏசாயா 42:8, தி.மொ.) “உன் கடவுளாகிய யாவே நானே . . . என்னைத் தவிர வேறு கடவுட்களை நீ கொண்டிருக்கக்கூடாது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.)—யாத்திராகமம் 20:2, 3, JB.
கடவுள் உண்மையில் மூன்று ஆட்களாக இருந்தால், கடவுள்தாமே ஏவின பைபிள் எழுத்தாளர்கள் எல்லாரும் ஏன் அவரை ஒரே ஆளாகக் குறிப்பிட்டுப் பேசுவார்கள்? இது ஜனங்களைத் தவறாக வழிநடத்துவதைத் தவிர, என்ன நோக்கத்தைச் சேவிக்கும்? நிச்சயமாகவே, கடவுள் மூன்று ஆட்களாலாகியவராயிருந்தால், அவர் தம் பைபிள் எழுத்தாளர்கள் அதைப்பற்றி எத்தகைய சந்தேகமுமிராதபடி, அதை மிக அதிகத் தெளிவாக்கும்படி செய்திருப்பார். கடவுளுடைய சொந்தக் குமாரனோடு நேரடியான தொடர்புகொண்ட கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் எழுத்தாளராவது அவ்வாறு செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
அதற்குப்பதில், கடவுள் ஒரே ஆள்—ஈடிணையற்றவர், பிரிந்திராதவர் அவருக்குச் சமமானவர் இல்லை என்றே பைபிள் எழுத்தாளர்கள் நிச்சயமாய் மிக அதிகத் தெளிவாக்கியுள்ளனர்: “நானே யெகோவா, வேறொருவருமில்லை; என்னைத் தவிர வேறே தெய்வம் இல்லை.” (ஏசாயா 45:5, தி.மொ.) “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.”—சங்கீதம் 83:17.
பன்மைக் கடவுளல்ல
இயேசு கடவுளை “ஒன்றான மெய்த் தேவன்,” என அழைத்தார். (யோவான் 17:3) கடவுளைப் பல ஆட்களடங்கிய தேவன் என அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. இதனிமித்தமே பைபிளில் ஓரிடத்திலும்கூட யெகோவாவைத் தவிர வேறொருவரும் சர்வவல்லமையுள்ளவரென அழைக்கப்பட்டில்லை. மற்றப்படி, “சர்வவல்லமையுள்ளவர்” என்ற சொல்லின் கருத்தைப் அர்த்தமற்றதாக்குகிறது. இயேசுவோ பரிசுத்த ஆவியோ ஒருபோதும் அவ்வாறு அழைக்கப்பட்டில்லை, ஏனெனில் யெகோவா ஒருவரே ஈடற்ற உன்னதர். ஆதியாகமம் 17:1-ல் அவர்: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்,” என்று அறிவிக்கிறார். “யெகோவா எல்லா தேவர்களிலும் பெரியவர்,” என்று யாத்திராகமம் 18:11-ல் சொல்லியிருக்கிறது.
எபிரெய வேத எழுத்துக்களில் எலோஹா (கடவுள்) இரண்டு பன்மை அமைப்புகளைக் கொண்டிருக்கிறது, அவையாவன, எலோஹிம் (கடவுட்கள்) எலோஹே (-இன் கடவுட்கள்). இந்தப் பன்மை அமைப்புகள் பொதுவாய் யெகோவாவைக் குறிப்பிடுகின்றன, இவற்றில் அவை “கடவுள்” என ஒருமையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பன்மை அமைப்புகள் திரித்துவத்தைக் குறிக்கின்றனவா? இல்லை, அவை குறிப்பதில்லை. பைபிளின் ஓர் அகராதி என்ற ஆங்கில அகராதியில், உவில்லியம் ஸ்மித் பின்வருமாறு சொல்லுகிறார்: “[எலோஹிம்] கடவுளில் திரித்துவ ஆட்களைக் குறிப்பிட்டதென்ற மனக்கற்பனை இப்பொழுது அறிஞருக்குள் பெரும்பாலும் ஆதரவைக் காண்கிறதில்லை. இது மாட்சிமைக்குரிய பன்மை என்று இலக்கணப்புலவர்கள் அழைப்பதாக இருக்கிறது, அல்லது தெய்வீகப் பலத்தின் நிறைவை, கடவுள் வெளிப்படுத்தும் வல்லமையின் முழுமைத்தொகுதியைக் குறித்துக் காட்டுகிறது.”
செமிட்டிக் மொழிகளின் மற்றும் இலக்கியங்களின் அமெரிக்கன் பத்திரிகை என்ற ஆங்கில பத்திரிகை எலோஹிமைப் பற்றிப் பின்வருமாறு சொல்கிறது: “இது பெரும்பாலும் ஒருமை வினைச்சார்ந்த பயனிலையோடு மாறாது இணைந்து பொருள்கொள்கிறது, மேலும் ஒருமை பெயரடையான பண்பை ஏற்கிறது.” இதை விளக்கும் உதாரணமாக, இந்தப் பட்டப் பெயரான எலோஹிம் சிருஷ்டிப்பு விவரத்தில் தனியே 35 தடவைகள் தோன்றுகிறது, ஒவ்வொரு தடவையும் கடவுள் சொன்னதையும் செய்ததையும் விவரிக்கும் வினைச்சொல் ஒருமையிலிருக்கிறது. (ஆதியாகமம் 1:1–2:4) இவ்வாறு, இந்த வெளியீடு பின்வருமாறு முடிக்கிறது: “[எலோஹிம்] மேலும் அதிகமாக, மேன்மையையும் மாட்சிமையையும் குறித்துக்காட்டும் பொருளை வலியுறுத்தும் பன்மை என விளக்கப்பட வேண்டும்.”
எலோஹிம் என்பதன் பொருள், “ஆட்கள்” அல்ல, “கடவுட்கள்” என்பதே. ஆகவே, இந்தச் சொல் திரித்துவத்தை உணர்த்துகிறதென விவாதிப்போர் தங்களை பல தெய்வ வணக்கத்தாராக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுட்களை வணங்குபவர்களாக ஆக்கிக்கொள்கின்றனர். ஏன்? ஏனெனில் அந்தத் திரித்துவத்தில் மூன்று கடவுட்கள் இருந்தனரென அது குறிக்கும். ஆனால் பெரும்பாலும் திரித்துவ ஆதரவாளர் எல்லாரும் அந்தத் திரித்துவம் மூன்று தனி கடவுட்களாலாகியது என்ற கருத்தை மறுக்கின்றனர்.
விக்கிரகப் பொய்க் கடவுட்கள் பலவற்றைக் குறிப்பிடுகையிலும், பைபிள் எலோஹிம், எலோஹே என்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. (யாத்திராகமம் 12:12; 20:23) ஆனால் வேறு சமயங்களில், பெலிஸ்தர் “தங்கள் தேவனாகிய [எலோஹே] தாகோனைக்” குறிப்பிடுகையில் செய்ததைப்போல், அது ஒரு தனி பொய்க் கடவுளைக் குறிப்பிடலாம். (நியாயாதிபதிகள் 16:23, 24) பாகால் “ஒரு கடவுள் [எலோஹிம்]” என அழைக்கப்படுகிறது. (1 இராஜாக்கள் 18:27, NW) கூடுதலாக, இந்தப் பதம் மனிதருக்கும் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 82:1, 6) மோசே, ஆரோனுக்கும் பார்வோனுக்கும் “தேவனாக” [எலோஹிம்] சேவிக்கவேண்டுமென அவனுக்குச் சொல்லப்பட்டது.—யாத்திராகமம் 4:16; 7:1.
தெளிவாகவே, எலோஹிம், எலோஹே என்ற பட்டப் பெயர்களைப் பொய்க் கடவுட்களுக்கும், மனிதருக்குங்கூட பயன்படுத்துவது, ஒவ்வொன்றும் கடவுட்களின் பன்மையை உணர்த்துகிறதென குறிக்கிறதில்லை; எலோஹிம் அல்லது எலோஹே என்பவற்றை யெகோவாவுக்குப் பயன்படுத்துவதும் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள் என குறிக்கிறதில்லை. முக்கியமாய் இந்தப் பொருளின்பேரில் பைபிளின் மீதிபாகத்தின் அத்தாட்சியை நாம் கருதுகையில் அவ்வாறில்லை என்று காண்போம்.
இயேசு தனி சிருஷ்டிப்பு
பூமியில் இருந்தபோது, இயேசு மனிதனாயிருந்தார், எனினும் கடவுளே இயேசுவின் உயிர்-சக்தியை மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றியிருந்ததால் பரிபூரணராயிருந்தார். (மத்தேயு 1:18-25) ஆனால் அவர் தொடக்கம் அவ்வாறில்லை. தாம் “பரலோகத்திலிருந்திறங்கினவ”ரென அவர்தாமே அறிவித்தார். (யோவான் 3:13) ஆகவே, தம்மைப் பின்பற்றினோரிடம்: “மனுஷகுமாரன் [இயேசு] தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?” என்று பின்னால் அவர் சொன்னது இயல்பானதே.—யோவான் 6:62.
இவ்வாறு, இயேசு பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார். ஆனால் சர்வவல்ல, நித்திய திரித்துவ கடவுளிலடங்கிய ஆட்களில் ஒருவராகவா? இல்லை, ஏனெனில், தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையில், இயேசு, தூதர்கள் கடவுள் சிருஷ்டித்த ஆவி ஆட்களாயிருந்ததுபோல், சிருஷ்டிக்கப்பட்ட ஆவி ஆளாயிருந்தாரென பைபிள் தெளிவாய்க் கூறுகிறது. தூதர்களோ இயேசுவோ தாங்கள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னால் இருக்கவில்லை.
இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையில், “சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு” ஆக இருந்தார். (கொலோசெயர் 1:15, NJB) அவர் “கடவுளுடைய சிருஷ்டிப்பின் தொடக்கம்.” (வெளிப்படுத்துதல் 3:14, RS, கத்தோலிக்க பதிப்பு). “தொடக்கம்” [கிரேக்கில், (அர்க்கே)] என்பதை இயேசு கடவுளுடைய சிருஷ்டிப்பைத் ‘தொடங்கினவர்’ என்று பொருள்கொள்ளும்படி விளக்குவது சரியல்ல. யோவான், தன் பைபிள் எழுத்துக்களில் அர்க்கே என்ற கிரேக்கச் சொல்லின் பற்பல உருவகைகளை 20-க்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான், இவை எப்பொழுதும் “தொடக்கம்” என்ற இந்தப் பொதுவான பொருளையே கொண்டிருக்கின்றன. ஆம், இயேசு கடவுளுடைய காணக்கூடாத சிருஷ்டிகளின் தொடக்கமாகக் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார்.
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில், உருவகமான “ஞானம்” கூறும் சொற்களோடு இயேசுவின் தொடக்கத்தைக் குறிப்பிடும் இந்த மேற்கோள் குறிப்புகள் எவ்வளவு நெருங்க ஒன்றுக்கொன்று இணைகிறது என்பதைக் கவனியுங்கள்: “தமது சிருஷ்டிகளில் யெகோவா [யாவே, NJB] என்னையே முதல்முதல் படைத்தார். மலைகள் நிலைபெறுமுன்னும் குன்றுகள் உண்டாகுமுன்னும் பூமியும் வெளிகளும் பூமியின் முதல் மண்பொடியும் [மூலப்பொருட்களும், NJB] அவரால் உருவாகுமுன் நான் ஜெநிப்பிக்கப்பட்டேன்.” (நீதிமொழிகள் 8:12, 22, 25, 26, தி.மொ.) கடவுள் சிருஷ்டித்தவரை உருவகஞ்செய்ய “ஞானம்” என்ற பதம் பயன்படுத்தியிருக்கையில், அது உண்மையில் தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னால் ஆவி சிருஷ்டியாக இருந்த இயேசுவுக்குச் சொல்லணியென அறிஞர் பெரும்பான்மையர் ஒப்புக்கொள்கின்றனர்.
தம்முடைய மனிதவாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கையில் “ஞானம்” என்பவராக இயேசு, தாம் “அவருடைய [கடவுளுடைய] பக்கத்தில், கைதேர்ந்தத் தொழிலாளனா”யிருந்தார் என மேலும் தொடர்ந்து கூறுகிறார். (நீதிமொழிகள் 8:30, JB) கைதேர்ந்த தொழிலாளனாக அவர் வகித்த இந்தப் பாகத்துக்கு ஒத்திசைய, கொலோசெயர் 1:16-ல் இயேசுவைக் குறித்து “அவர்மூலம் கடவுள் வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்” என சொல்லியிருக்கிறது.—டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன் (TEV).
ஆகவே, தமக்குக் கீழ்ப் பணியாற்றுபவர் என்பதுபோல், இந்தக் கைதேர்ந்த வேலையாளனைக் கொண்டு சர்வவல்லமையுள்ள கடவுள் மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். பைபிள் இந்தக் காரியத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிறது: “நமக்குப் பிதாவாகிய ஒரே கடவுள் இருக்கிறார், அவரிலிருந்தே சகலமும் உண்டாயிருக்கின்றன . . . ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார், அவர்மூலம் சகலமும் உண்டாயிருக்கின்றன.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.)—1 கொரிந்தியர் 8:6, RS. கத்தோலிக்கப் பதிப்பு.
இந்தக் கைதேர்ந்தத் தொழிலாளனிடமே கடவுள்: “நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக,” என்று சொன்னதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 1:26) இந்தக் கூற்றில் “நமது,” “உண்டாக்குவோம்” என்ற சொற்கள் திரித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றனவென சிலர் விவாதித்திருக்கின்றனர். ஆனால், ‘நமக்காக ஏதாயினும் ஒன்றைச் செய்வோம்,’ என்று நீங்கள் சொன்னால், இது பல ஆட்கள் ஒருங்கிணைந்து உங்கள் உட்புறத்தில் ஒருவராக இருப்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறதென ஒருவரும் பொதுவாய் விளங்கிக்கொள்ளமாட்டார்கள். வெறுமென இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட ஆட்கள் ஏதோவொன்றில் ஒன்றாய்ச் சேர்ந்து உழைப்பார்கள் என்றே நீங்கள் பொருள்கொள்கிறீர்கள். அவ்வாறே, கடவுள் “நமது” “உண்டாக்குவோம்” என்பவற்றைப் பயன்படுத்தினபோது, அவர் வெறுமென மற்றொரு ஆளை, தம்முடைய முதல் ஆவி சிருஷ்டியை, அந்தக் கைதேர்ந்தத் தொழிலாளனை, மனிதனாவதற்கு முன்னாலிருந்த இயேசுவை, நோக்கிப் பேசினார்.
கடவுளைச் சோதிக்க முடியுமா?
மத்தேயு 4:1-ல், இயேசு “பிசாசினால் சோதிக்கப்ப”ட்டாரென சொல்லியிருக்கிறது. இயேசுவுக்கு “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” காண்பித்தப் பின்பு, சாத்தான்: “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” என்று சொன்னான். (மத்தேயு 4:8, 9) இயேசு கடவுளுக்கு உண்மைத்தவறும்படி செய்ய சாத்தான் முயன்றான்.
ஆனால் இயேசுதாமே கடவுளாயிருந்தால் அது உண்மைத்தவறாமையைப் பரீட்சிக்கும் என்ன சோதனையாயிருக்கும்?
கடவுள் தமக்கு எதிராகத் தாமே கலகம் செய்யக்கூடுமா? இல்லை, ஆனால் தூதர்களும் மனிதரும் கடவுளுக்கு எதிராகக் கலகஞ்செய்ய முடியும், அவ்வாறே செய்தார்கள். இயேசு கடவுளாக இல்லாமல், ஒரு தூதன் அல்லது மனிதனைப் போன்று, தம்முடைய சொந்தத் தெரிவு செய்ய சுயாதீனத்தையுடைய, மற்றும் தாம் தெரிந்துகொண்டால் உண்மைத் தவறக்கூடிய ஒரு தனி ஆளாக இருந்தால் மட்டுமே அந்தச் சோதனைக்கு ஏதாவது உட்கருத்து இருக்கும்.மறுபட்சத்தில், கடவுள் பாவஞ்செய்ய முடியும் மற்றும் தமக்குத்தாமே உண்மைத்தவற முடியுமென்பது கற்பனைசெய்து பார்க்க முடியாதது. “அவர் கிரியை உத்தமமானது; . . . சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) ஆகவே இயேசு கடவுளாயிருந்தால், அவரைச் சோதித்திருக்க முடியாது.—யாக்கோபு 1:13.
இயேசு கடவுளல்லாததனால், அவர் உண்மைத்தவறியிருக்க முடியும். ஆனால் அவர் பின்வருமாறு சொல்லி உண்மையுடன் நிலைத்திருந்தார்: “அப்பாலே போ, சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்கவேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செலுத்தவேண்டும்,’ என்று எழுதியிருக்கிறதே.”—மத்தேயு 4:10.
மீட்பின் கிரயம் எவ்வளவு?
இயேசு பூமிக்கு வந்ததன் முக்கிய காரணங்களில் ஒன்றும் திரித்துவத்தின்பேரில் நேர்முக சம்பந்தத்தைக் கொண்டிருக்கிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே; இவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு. இவரே எல்லாரையும் மீட்கும்பொருளாகத் [சரியீடான மீட்கும்பொருளாக, NW] தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்.”—1 தீமோத்தேயு 2:5, 6, தி.மொ.
பரிபூரண மனிதனுக்குக் குறைவுபடாத மற்றும் மேற்படாத இயேசு, ஆதாம் இழந்ததை—பூமியில் பரிபூரண மனித வாழ்க்கைக்கு உரிமையை—நுட்பமாய்ச் சரியீடுசெய்த மீட்கும் பொருளானார். ஆகவே இயேசுவைக் “கடைசி ஆதாம்” என அப்போஸ்தலன் பவுல் சரியாக அழைக்க முடிந்தது. அதே சூழமைவில் அவன் பின்வருமாறு சொல்கிறான்: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோலக் கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:22, 45, தி.மொ.) இயேசுவின் பரிபூரண மனித உயிர், தெய்வீக நீதி கட்டளையிட்ட “சரியீடான மீட்கும் பொருளா”யிருந்தது—அதிகமுமல்ல, குறைவுமல்ல. செலுத்தப்படும் கிரயம் செய்த குற்றத்துக்குப் பொருந்த இருக்கவேண்டுமென்பது மனித நீதியின் அடிப்படை நியமமாயும் இருக்கிறது.
எனினும், இயேசு, கடவுளின் பாகமாயிருந்தால் அந்த மீட்கும் கிரயம் கடவுளுடைய சொந்த சட்டம் கட்டளையிட்டதைப் பார்க்கிலும் வரம்பற்ற மிக உயர்வானதாயிருக்கும். (யாத்திராகமம் 21:23-25; லேவியராகமம் 24:19-21) கடவுளல்ல, பரிபூரண மனிதன் ஆதாமே ஏதேனில் பாவம் செய்தான். ஆகவே, இந்த மீட்கும் பொருள், கடவுளுடைய நீதியோடு உண்மையில் ஒத்திருக்க, கண்டிப்பாய்ச் சமமதிப்புள்ள ஒன்றாக—பரிபூரண மனிதனாக, “கடைசி ஆதாமாக” இருக்கவேண்டும். இவ்வாறு, கடவுள் இயேசுவை மீட்கும் பொருளாகப் பூமிக்கு அனுப்பினபோது, நீதியைத் திருப்திசெய்யும் முறையில் அவர் இயேசுவை இருக்கச் செய்தார், அவதாரமாக அல்ல, கடவுள்-மனிதனாக அல்ல, ஆனால் பரிபூரண மனிதனாக, “தேவதூதரிலும் சிறியவராக” இருக்கச் செய்தார். (எபிரெயர் 2:9; சங்கீதம் 8:5, 6-ஐ ஒத்துப்பாருங்கள்.) சர்வவல்லமையுள்ள கடவுளின் பாகமாயிருப்பதாகச் சொல்லப்படும்—பிதாவோ, குமாரனோ, பரிசுத்த ஆவியோ—எவ்வாறு தூதர்களிலும் சிறியவராக இருக்க முடியும்?
எவ்வாறு “ஒரேபேறான குமாரன்”?
இயேசுவை “ஒரேபேறான குமாரன்” என பைபிள் அழைக்கிறது. (யோவான் 1:14; 3:16, 18; 1 யோவான் 4:9) கடவுள் நித்தியராதலால், கடவுளுடைய குமாரனும் நித்தியர் என திரித்துவக் கோட்பாட்டாளர் சொல்கின்றனர். ஆனால் ஒருவர் எவ்வாறு குமாரனாய் இருந்து அதேசமயத்தில் தன் தகப்பனின் வயதையுடையவருமாயிருக்க முடியும்?
இயேசுவின் காரியத்தில், “ஒரேபேறு” என்பது “பெற்றெடுப்பது” அதாவது, “தகப்பனாக மகவுபெறுவது” என்ற (வெப்ஸ்டரின் ஒன்பதாவது நியு காலிஜியேட்) அகராதியின் (Webster’s Ninth New Collegiate Dictionary) பொருள்விளக்கத்தைப் போன்றதல்லவென திரித்துவக் கோட்பாட்டாளர் விவாதிக்கின்றனர். இயேசுவின் காரியத்தில் இது “பிறப்பிக்கப்படாத உறவுக்குரிய கருத்து,” பெற்றெடுக்கப்படாத ஒருவகை ஒரே குமாரன் உறவைக் குறிக்கிறதென அவர்கள் சொல்கின்றனர். (வைன் இயற்றிய பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி)(Vine’s Expository Dictionary of Old and New Testament Words) இது பகுத்தறிவுக்குப் பொருத்தமாய் உங்களுக்குத் தொனிக்கிறதா? ஒருவன் மகனைப் பெறாமல் மகனின் தந்தையாக முடியுமா?
மேலும் (விளக்கம் எதுவுமில்லாமல் வைன் ஒப்புக்கொள்ளுகிறபடி) ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் இருந்த உறவை விவரிக்க “ஒரேபேறான” என்பதற்குரிய அதே கிரேக்கச் சொல்லை பைபிள் ஏன் பயன்படுத்துகிறது? எபிரெயர் 11:17-ல் (19, தமிழ் UV) ஈசாக்கு ஆபிரகாமின் “ஒரேபேறானவன்” என பேசியிருக்கிறது. ஈசாக்கின் காரியத்தில், இயல்பான கருத்தில் அவன் ஒரேபேறானவன், காலத்திலோ நிலையிலோ தன் தகப்பனுக்குச் சமமாயில்லை என்பதில் எவ்விதச் சந்தேகமும் இருக்கமுடியாது.
இயேசுவுக்கும் ஈசாக்குக்கும் பயன்படுத்தியுள்ள “ஒரேபேறான” என்பதற்குரிய அடிப்படையான கிரேக்கச் சொல் மோனோஜீனெஸ் மோனோஸ், “ஒரே” என பொருள்படுகிறது, ஜீனோமய், “பிறப்பிப்பது,” “உண்டாவது (உயிருருவாகி வருதல்)” என்று பொருள்கொள்ளும் வேர்ச் சொல், என ஸ்டிராங்ஸ் தீர்வாய்வான கன்கார்டன்ஸ் கூறுகிறது. ஆகவே, மோனோஜீனெஸ் “ஒரே பிறப்பு, ஒரே பேறான, அதாவது, ஒரே ஒரு பிள்ளை” என பொருள் விளக்கப்பட்டிருக்கிறது.—(ஆங்கிலத்தில்) E. ராபின்ஸன் இயற்றிய புதிய ஏற்பாட்டின் கிரேக்க மற்றும் ஆங்கில அகராதி.
ஆங்கிலத்தில் ஜெர்ஹார்ட் கிட்டல் இயற்றிய புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதியில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “[மோனோஜீனெஸ்] ‘ஒரே தலைமுறையான,’ அதாவது, சகோதரர்களோ சகோதரிகளோ இல்லாமல் என பொருள்படுகிறது.” மேலும், யோவான் 1:18; 3:16, 18; 1 யோவான் 4:9 ஆகியவற்றில், “இயேசுவின் உறவு ஒரே பிள்ளைக்கு அதன் தகப்பனிடம் இருக்கும் உறவோடு வெறுமென ஒப்பிட்டு மாத்திரமே இல்லை. அது பிதாவிடம் ஒரேபேறானவருக்கு மெய்யாகவே இருந்துவரும் உறவு” எனவும் இந்தப் புத்தகம் கூறுகிறது.
ஆகவே ஒரேபேறான குமாரனாகிய இயேசு, தம்முடைய வாழ்க்கைக்கு ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தார். மேலும் ஆபிரகாமைப் போன்ற, பூமிக்குரிய ஒரு தகப்பன் ஒரு குமாரனைப் பிறப்பிக்கும் அதே கருத்தில், சர்வவல்லமையுள்ள கடவுள், இயேசுவைப் பிறப்பித்தவர் அல்லது அவருடைய தகப்பன் என சரியாகவே அழைக்கப்படலாம். (எபிரெயர் 11:17, 19) ஆகையால், கடவுளை இயேசுவின் “பிதா”வென பைபிள் பேசுகையில், அது சொல்வதையே அதாவது—அவர்கள் இரு தனி ஆட்கள் என்பதையே அது கருதுகிறது. கடவுள் முற்பட்டவர், இயேசு—காலத்திலும், பதவியிலும், வல்லமையிலும், அறிவிலும் பிற்பட்டவர்.
இயேசு, பரலோகத்தில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளின் ஒரே ஆவி குமாரன் அல்லவென்பதைக் கவனிக்கையில், அவருடைய காரியத்தில் “ஒரேபேறான குமாரன்” என்ற பதம் பயன்படுத்தியிருப்பதன் காரணம் தெளிவாகிறது. சிருஷ்டிக்கப்பட்ட எண்ணற்ற ஆவி ஆட்களாகிய தூதர்களும், ஆதாம் அழைக்கப்பட்ட அதே கருத்தில், “தேவ புத்திரர்” என அழைக்கப்படுகின்றனர், ஏனெனில், ஜீவஊற்றாகிய, அல்லது உயிரின் மூலகாரணராகிய யெகோவா தேவனிடத்திலிருந்தே அவர்களுடைய உயிர்-சக்தி தோன்றியது. (யோபு 38:7; சங்கீதம் 36:9; லூக்கா 3:38) ஆனால் இவர்களெல்லாரும் “ஒரேபேறான குமாரன்” மூலம் சிருஷ்டிக்கப்பட்டனர், இவர் ஒருவரையே கடவுள் நேரடியாய்ப் பிறப்பித்தார்.—கொலோசெயர் 1:15-17.
இயேசு கடவுள் என கருதப்பட்டாரா?
பைபிளில் இயேசு கடவுளின் குமாரன் என அடிக்கடி அழைக்கப்படுகிறபோதிலும், முதல் நூற்றாண்டில் ஒருவரும் அவரை குமாரனாகிய கடவுள் என ஒருபோதும் எண்ணவில்லை. “தேவன் ஒருவர் உண்டென்று . . . விசுவாசிக்கிற” பிசாசுகளும், ஆவி மண்டலத்தில் தங்கள் அனுபவத்திலிருந்து இயேசு கடவுளல்லவென அறிந்திருந்தன. ஆகவே, அவை திருத்தமாய் இயேசுவை தனி ஆளாக “தேவனுடைய குமாரனே” என அழைத்தன. (யாக்கோபு 2:19; மத்தேயு 8:29) மேலும் இயேசு மரித்தபோது, அருகில் நின்றுகொண்டிருந்த புறமத ரோம போர்வீரர்கள், இயேசுவைப் பின்பற்றினோரிடமிருந்து தாங்கள் கேள்விப்பட்டது நிச்சயமாய்ச் சரியாயிருக்கவேண்டுமென்று சொல்ல, அதாவது, இயேசு கடவுள் என்றல்ல, ஆனால் “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்று சொல்ல, போதியளவு அறிந்திருந்தனர்.—மத்தேயு 27:54.
ஆகவே, “தேவனுடைய குமாரன்” என்ற இந்தச் சொற்றொடர் இயேசுவைத் திரித்துவத்தின் பாகமாக அல்ல, சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தனி ஆளாகவே குறிப்பிடுகிறது. கடவுளுடைய குமாரனான அவர், கடவுள்தாமேயாக இருக்க முடியாது, ஏனெனில் யோவான் 1:18-ல் “கடவுளை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை,” என்று சொல்லியிருக்கிறது.—RS, கத்தோலிக்கப் பதிப்பு.
சீஷர்கள் இயேசுவை கடவுள்தாமே என்றல்ல, ‘கடவுளுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரான ஒருவரே’ என கருதினர். (1 தீமோத்தேயு 2:5) சொற்பொருள் விளக்கத்தின்படி, ஒரு மத்தியஸ்தர் மத்தியஸ்துவம் தேவைப்படுவோரிலிருந்து தனிப்பட்டவராதலால், இயேசு தாம் ஒப்புரவாக்க முயற்சி செய்யும் அந்த இரு தரப்பினரில் எவருடனும் ஒரே உள்பொருளாக இருப்பது நேர் மாறுபாடாகும். இது தான் உண்மையில் இராத ஒருவராகப் பாசாங்கு செய்வதாக இருக்கும்.
இயேசுவுக்குக் கடவுளிடம் இருக்கும் உறவைப் பற்றி பைபிள் தெளிவாகவும் முரண்பாடில்லாமல் நிலையாகவும் இருக்கிறது. யெகோவா தேவன் ஒருவரே சர்வவல்லவர். மனிதனாவதற்கு முன்னிருந்த இயேசுவை அவர் தாமே நேரடியாக சிருஷ்டித்தார். இவ்வாறு, இயேசுவுக்கு ஒரு தொடக்கம் இருந்தது, வல்லமையிலோ நித்தியத்துவத்திலோ கடவுளுடன் அவர் ஒருபோதும் சமமாயிருக்க முடியாது.
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய பெயர் சில மொழிபெயர்ப்புகளில் “யாவே” என்றும் மற்றவற்றில் யெகோவா என்றும் கொடுக்கப்படுகிறது.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
இயேசு கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதால், காலத்திலும், வல்லமையிலும், அறிவிலும் இரண்டாந்தர நிலையில் இருக்கிறார்
[பக்கம் 15-ன் படம்]
கடவுளின் காணக்கூடாத சிருஷ்டிகளின் தொடக்கமாகத் தம்மைக் கடவுள் சிருஷ்டித்ததால், மனிதனாவதற்கு முன்னால் தாம் வாழ்ந்தாரென இயேசு சொன்னார்