Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளை அவருடைய நிபந்தனைகளின்பேரில் வணங்குங்கள்

கடவுளை அவருடைய நிபந்தனைகளின்பேரில் வணங்குங்கள்

கடவுளை அவருடைய நிபந்தனைகளின்பேரில் வணங்குங்கள்

இயேசு ஜெபத்தில் கடவுளிடம் பின்வருமாறு கூறினார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் உட்கிரகித்து வருவதே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) என்ன வகையான அறிவு? “எல்லா மனுஷரும் இரட்சிப்பைப் பெறவும் சத்தியத்தை அறிகிற முற்றறிவை [திருத்தமான அறிவை, NW] அடையவும் வேண்டுமென்பது அவருடைய [கடவுளுடைய] சித்தம்.” (1 தீமோத்தேயு 2:4, தி.மொ.) விரிவாக விளக்கப்பட்ட பைபிள் (ஆங்கிலம்) பிற்பட்ட சொற்றொடர்களை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “[தெய்வீகச்] சத்தியத்தைச் சரிநுட்பமாயும் திருத்தமாயும் அறிவதே.”

ஆகையால் கடவுள், தெய்வீகச் சத்தியத்துக்கு இசைவாக, தம்மையும் தம்முடைய நோக்கங்களையும் நாம் திருத்தமாய் அறியவேண்டுமென்று விரும்புகிறார். கடவுளுடைய வார்த்தையாகிய, பரிசுத்த பைபிளே அந்தச் சத்தியத்தின் ஊற்றுமூலம். (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17) கடவுளைப்பற்றி பைபிள் சொல்வதை ஆட்கள் திருத்தமாய்க் கற்கையில், ரோமர் 10:2, 3-ல் “கடவுள்பேரில் வைராக்கியமிருந்தது; ஆனால் திருத்தமான அறிவுக்கேற்றபடி இல்லை,” என்று சொல்லப்பட்டிருப்போரைப்போல், அல்லது “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்,” என்று இயேசு அவர்களிடம் சொன்ன அந்தச் சமாரியரைப்போல் இருப்பதைத் தவிர்ப்பார்கள்.—யோவான் 4:22, NW.

ஆகையால், கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமென்றால், நம்மைநாமே பின்வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்: கடவுள் தம்மைப்பற்றி என்ன சொல்கிறார்? தாம் எவ்வாறு வணங்கப்படும்படி அவர் விரும்புகிறார்? அவருடைய நோக்கங்கள் யாவை, அவற்றோடு நாம் எவ்வாறு பொருந்தவேண்டும்? சத்தியத்தைப்பற்றிய திருத்தமான அறிவு இத்தகைய கேள்விகளுக்குச் சரியான விடைகளை நமக்குக் கொடுக்கிறது. அப்பொழுது நாம் கடவுளை அவருடைய விதிமுறைகளின்படி வணங்க முடியும்.

கடவுளை அவமதித்தல்

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்,” என்று கடவுள் சொல்கிறார். (1 சாமுவேல் 2:30) எவரையாவது அவருக்குச் சமமானவராக அழைப்பது கடவுளைக் கனப்படுத்துகிறதா? புதிய கத்தோலிக் என்ஸைக்ளோபீடியாவில் சொல்லியிருக்கிறபிரகாரம், மரியாளைத் “தெய்வத்தாய்” என்றும் “சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிகளுக்கும் இடையில் மத்தியஸ்துவம் செய்பவள்” என்றும் அழைப்பது அவரைக் கனப்படுத்துகிறதா? இல்லை, இந்த அபிப்பிராயங்கள் கடவுளை அவமதிக்கின்றன அவருக்குச் சமமானவர் ஒருவருமில்லை; அவருக்கு மாம்சப்பிரகாரமான தாயும் இல்லை. ஏனெனில் இயேசு கடவுள் அல்ல; “மத்தியஸ்துவம் செய்பவளும்” இல்லை, ஏனெனில் கடவுள் ஒரே மத்தியஸ்தரையே நியமித்திருக்கிறார். “தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே,” அவரே இயேசு.—1 தீமோத்தேயு 2:5; 1 யோவான் 2:1, 2.

சந்தேகத்துக்கு இடமில்லாமல், இந்தத் திரித்துவ கோட்பாடு, கடவுளுடைய உண்மையான நிலையை மக்கள் விளங்கிக்கொள்வதைக் குழப்பமாக்கி முக்கியத்துவம் குறையச் செய்திருக்கிறது. சர்வலோக ஈடற்றப் பேரரசராகிய யெகோவா தேவனைத் திருத்தமாய் அறிவதிலிருந்தும், அவருடைய நிபந்தனைகளின்பேரில் அவரை வணங்குவதிலிருந்தும் இது ஜனங்களைத் தடுத்துவைக்கிறது. இறையியல் வல்லுநர் ஹான்ஸ் கூங் சொன்னபடி: “கடவுளுடைய ஒருமையும் ஈடிணைவற்றத் தனித்தன்மையும்பற்றிய எண்ணத்துடன், அந்த ஒருமையையும் ஈடிணைவற்றத் தனித்தன்மையையும் முக்கியத்துவம் குறைத்து அல்லது மதிப்பில்லாததாக்கும் எதையாவது கூட்ட எவராவது ஏன் விரும்பவேண்டும்?” இதையே திரித்துவத்தில் நம்பிக்கை வைப்பது செய்திருக்கிறது.

திரித்துவத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் “கடவுளைத் திருத்தமான அறிவில் பற்றிக்கொண்”டில்லை. (ரோமர் 1:28, NW) அந்த வசனம் மேலும் சொல்வதாவது: “தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.” ‘கொலை, வாக்குவாதம், உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாமை, இரக்கமில்லாமை’ ஆகியவற்றைப்போன்ற ‘தகாத’ காரியங்களை 29-லிருந்து 31 வரையான வசனங்கள் வரிசையாய்க் கொடுக்கின்றன. திரித்துவத்தை ஏற்கும் மதங்கள் இதே காரியங்களைப் பழக்கமாய் நடப்பித்து வருகின்றன.

உதாரணமாக, திரித்துவக் கோட்பாட்டாளர், திரித்துவக் கோட்பாட்டை ஏற்க மறுத்தவர்களை அடிக்கடி துன்புறுத்தியும் கொன்றுமிருக்கின்றனர். இதற்குமேலுங்கூட அவர்கள் சென்றிருக்கின்றனர். போர்க் காலத்தில் தங்கள் உடன்தோழரான திரித்துவக் கோட்பாட்டாளர்களையும் அவர்கள் கொன்றனர். கத்தோலிக்கர் கத்தோலிக்கரைக் கொல்வதையும், ஆர்த்தடாக்ஸ் மதத்தினர் ஆர்த்தடாக்ஸ் மதத்தினரைக் கொல்வதையும், புராட்டஸ்டன்டினர் புராட்டஸ்டன்டினரைக் கொல்வதையும்—எல்லாம் அதே திரித்துவக் கடவுளின் பெயரில் செய்ததுமான இதைப் பார்க்கிலும் ‘தகாதது’ என்ன இருக்க முடியும்?

எனினும், இயேசு மிகத் தெளிவாய்ப் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) கடவுளுடைய வார்த்தைப் பின்வருமாறு சொல்லி இதை விரித்துரைக்கிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.” தங்கள் ஆவிக்குரிய சகோதரரைக் கொல்வோரை அது “பொல்லாங்கனால் [சாத்தானால்] உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீ”னுக்கு ஒப்பிடுகிறது.—1 யோவான் 3:10-12.

இவ்வாறு, கடவுளைப் பற்றிய குழப்பமான கோட்பாடுகளின் போதகம் அவருடைய சட்டங்களை மீறும் செயல்களுக்கு வழிநடத்தியிருக்கிறது. நிச்சயமாகவே, டேனிஷ் இறையியல் வல்லுநர் செரென் கியர்க்கிகார்ட் விவரித்ததே கிறிஸ்தவமண்டலம் முழுவதிலும் நடந்திருக்கிறது: “கிறிஸ்தவமண்டலம் தான் செய்வது இன்னதென்று சற்றும் அறியாமலே கிறிஸ்தவத்தை முழுவதும் தள்ளிவிட்டது.”

கிறிஸ்தவத்தின் ஆவிக்குரிய நிலைமை அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினதோடு பொருந்துகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.”—தீத்து 1:16.

சீக்கிரத்தில், கடவுள் இந்தத் தற்போதைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையை அதன் முடிவுக்குக் கொண்டுவருகையில், திரித்துவக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவமண்டலம் பதில் சொல்லும்படி அழைக்கப்படும். கடவுளை அவமதித்த அதன் செயல்களுக்காகவும் கோட்பாடுகளுக்காகவும் அதற்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்படும்.—மத்தேயு 24:14, 34; 25:31-34, 41, 46; வெளிப்படுத்துதல் 17:1-6, 16; 18:1-8, 20, 24; 19:17-21.

திரித்துவக் கொள்கையைத் தள்ளிப்போடுங்கள்

கடவுளுடைய சத்தியங்களோடு சமரச விட்டுக்கொடுப்பு கிடையாது. ஆகையால், கடவுளை அவருடைய நிபந்தனைகளின்பேரில் வணங்குவது திரித்துவக் கோட்பாட்டைத் தள்ளிப்போடுதலைக் குறிக்கிறது. அது, தீர்க்கதரிசிகள், இயேசு, அப்போஸ்தலர்கள் மற்றும் பூர்வக் கிறிஸ்தவர்கள் நம்பினதற்கும் கற்பித்ததற்கும் நேர்மாறாக இருக்கிறது. கடவுள் தம்முடைய சொந்த ஏவப்பட்ட வார்த்தையில் தம்மைப்பற்றிச் சொல்வதற்கு நேர்மாறாய் அது இருக்கிறது. ஆகவே, அவர்: “நான் ஒருவரே கடவுள், எனக்கு ஒப்பானவர் வேறொருவருமில்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்,” என்று அறிவுரை கூறுகிறார்.—ஏசாயா 46:9, TEV.

கடவுளைக் குழப்பமும் விளங்காதப் புதிருமாக்குவதால் அவருடைய அக்கறைகள் சேவிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மக்கள் எவ்வளவு மிகக் குழப்பமடைகிறார்களோ அவ்வளவு மிக அதிகமாய் அது கடவுளுடைய எதிரியாகிய, ‘இவ்வுலகத்தின் தேவன்’ பிசாசான சாத்தானுக்குச் சாதகமாகிறது. அவனே, ‘அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குவதற்கு’ இத்தகைய பொய்க் கோட்பாடுகளை முன்னேற்றுவிக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) மேலும் ஜனங்கள்மீது தங்கள் பிடியை விடாது காத்துவைத்திருக்க விரும்பும் பாதிரிமார்களின் அக்கறைகளையும் இந்தத் திரித்துவக் கோட்பாடு சேவிக்கிறது, எப்படியெனில் அதை இறையியல் வல்லுநர் மாத்திரமே புரிந்துகொள்ளக்கூடும் என்று தோன்றும்படி அவர்கள் செய்கிறார்கள்.—யோவான் 8:44-ஐ பார்க்கவும்.

கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு பெரும் விடுதலையைக் கொண்டுவருகிறது, அது, கடவுளுடைய வார்த்தையோடு முரண்படுகிற போதகங்களிலிருந்தும் விசுவாசத் துரோகஞ்செய்த அமைப்புகளிலிருந்தும் நம்மை விடுதலையாக்குகிறது. இயேசு சொன்னபிரகாரம்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.

ஈடற்ற உன்னதராகக் கடவுளுக்கு உயர்மதிப்புக் கொடுத்து அவருடைய நிபந்தனைகளின்பேரில் அவரை வணங்குவதனால், விசுவாசத்துரோகியான கிறிஸ்தவமண்டலத்தின்மீது அவர் சீக்கிரத்தில் கொண்டுவரவிருக்கும் நியாயத்தீர்ப்பை நாம் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, இந்த ஒழுங்குமுறை முடிவடைகையில் கடவுளுடைய தயவைப்பெற நாம் ஆவலோடு எதிர்பார்க்கலாம்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.

[பக்கம் 31-ன் படம்]

பிரான்ஸிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான இந்தச் சிற்பவேலை, திரித்துவம் “கன்னி” மரியாளை முடிசூட்டுவதாகத் தீட்டிக் காட்டுகிறது. திரித்துவ நம்பிக்கை மரியாளைத் “தெய்வத் தாய்” என வணங்குவதற்கு வழிநடத்தினது