கடவுள் எப்பொழுதும் இயேசுவுக்கு மேலானவரா?
கடவுள் எப்பொழுதும் இயேசுவுக்கு மேலானவரா?
இயேசு தாம் கடவுளென ஒருபோதும் உரிமைபாராட்டவில்லை. தம்மைப்பற்றி அவர் சொன்ன எல்லாம், அவர் தம்மை எவ்வகையிலும் கடவுளுக்குச் சமமென கருதவில்லையென்று காட்டுகிறது—வல்லமையிலுமல்ல, அறிவிலுமல்ல. வயதிலுமல்ல.
அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு காலப்பகுதியிலும், பரலோகத்திலாயினும் பூமியிலாயினும், அவருடைய பேச்சும் நடத்தையும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதையே பிரதிபலிக்கின்றன. கடவுளே எப்பொழுதும் மேலானவர், இயேசு தாழ்ந்தவர் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்.
இயேசு கடவுளிலிருந்து வேறுபட்டவர்
மறுபடியும் மறுபடியுமாக இயேசு, தாம் கடவுளிலிருந்து வேறுபட்ட ஒரு சிருஷ்டியெனவும், இயேசுவாகிய தமக்குமேல் தாம் வணங்கும் ஒரு கடவுள், “பிதா” என்று தாம் அழைக்கும் ஒரு கடவுள் இருக்கிறார் எனவும் காட்டினார். கடவுளிடம் அதாவது, பிதாவிடம் ஜெபத்தில், இயேசு: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மை,” என்று சொன்னார். (யோவான் 17:3) யோவான் 20:17-ல் அவர் மகதலேனா மரியாளிடம்: “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்,” என்று சொன்னார். (RS, கத்தோலிக்கப் பதிப்பு) 2 கொரிந்தியர் 1:3-ல் அப்போஸ்தலன் பவுல் இந்த உறவை உறுதிப்படுத்துகிறான்: “நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமானவர் ஸ்தோத்திரத்துக்குரியவர்.” (தி.மொ.) இயேசுவுக்குத் தம்முடைய பிதாவான ஒரு கடவுள் இருப்பதால், அவர்தாமே அதேசமயத்தில் அந்தக் கடவுளாக இருக்க முடியாது.
இயேசுவையும் கடவுளையும் தெளிவாய் வேறுபட்ட ஆட்களாகக் குறிப்பிட்டுப்பேசுவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுலுக்கு எத்தகைய தயக்கமும் இல்லை: “நமக்கோ பிதாவாகிய ஒரே கடவுள் இருக்கிறார். . . . இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் இருக்கிறார்.” (1 கொரிந்தியர் 8:6, JB) அப்போஸ்தலன் பவுல், “கடவுளின், கிறிஸ்துவின் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட தூதரின் முன்னிலையில்,” என்று குறிப்பிடுகையில் இந்த வேறுபாட்டைக் காண்பிக்கிறான். (1 தீமோத்தேயு 5:21, RS, Common Bible) பரலோகத்தில் இயேசுவும் தூதர்களும் வெவ்வேறு ஆட்களாயிருப்பதாகப் பவுல் பேசுவதைப்போலவே இயேசுவும் கடவுளும் வெவ்வேறு ஆட்களாயிருக்கின்றனர்.
யோவான் 8:17, 18-லுள்ள இயேசுவின் வார்த்தைகளும் தனிக் கவனிப்புக்குரியவை: “இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார்.” இங்கே தாமும் பிதாவும், அதாவது, சர்வவல்லமையுள்ள கடவுளும், இரண்டு வேறுபட்ட ஆட்களாக இருக்கவேண்டுமென இயேசு காட்டுகிறார், எப்படியெனில், மற்றப்படி எவ்வாறு உண்மையில் இரண்டு சாட்சிகள் இருக்கமுடியும்?
மேலும் இயேசு: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே,” என்று சொல்வதாலும் தாம் கடவுளிலிருந்து வேறுபட்ட ஆளெனக் காட்டினார். (மாற்கு 10:18, JB) ஆகவே கடவுள் நல்லவராயிருப்பதுபோல் வேறு எவரும், இயேசுதாமேயும் இல்லை என இயேசு சொன்னார். இயேசுவிலிருந்து தம்மை வேறுபடுத்தும் ஒரு முறையில் கடவுள் நல்லவர்.
கடவுளுடைய பணிவுள்ள ஊழியன்
அவ்வப்போது இயேசு, பின்வருபவற்றைப்போன்ற கூற்றுகளைக் கூறினார்: “குமாரன் தன் சொந்த விருப்பப்படி எதையும் செய்ய முடியாது, தன் பிதா செய்ய அவர் காண்பவற்றை மாத்திரமே அவர் செய்ய முடியும்.” (யோவான் 5:19, பரிசுத்த வேதாகமம், மதகுரு R. A. Knox இயற்றியது) “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.” (யோவான் 6:38) “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” (யோவான் 7:16) அனுப்பினவர் அனுப்பப்பட்டவரைவிட மேலானவர் அல்லவா?
இந்த உறவு திராட்சத் தோட்டத்தைப்பற்றி இயேசு சொன்ன உவமையில் தெளிவாய்த் தெரிகிறது. அவர் கடவுளை, தம்முடைய பிதாவை, திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரருக்கு ஒப்பிட்டார். அவர் அதைக் குடியானவர்களின் பொறுப்பில் விட்டு, தாம் புறதேசத்துக்குச் சென்றார். குடியானவர்கள் யூத மதகுருக்களுக்கு அடையாளமாக இருந்தனர். பின்னால் அந்தத் திராட்சத்தோட்டத்தின் கனிகள் சிறிதளவைப் பெற்றுவரும்படி சொந்தக்காரர் ஓர் அடிமையை அனுப்பினபோது, அந்தக் குடியானவர்கள் அந்த அடிமையை அடித்து வெறுமையாக அனுப்பிவிட்டனர். பின்பு அந்தச் சொந்தக்காரர் இரண்டாவது ஓர் அடிமையை அனுப்பினார், பின்னால் மூன்றாவது ஆளையும் அனுப்பினார். இந்த இருவரும் அவ்வாறே நடத்தப்பட்டனர். முடிவில், அந்தச் சொந்தக்காரர்: ‘என் அருமையான குமாரனை [இயேசுவை] அனுப்புவேன், ஒருவேளை அவனை மதிப்பார்கள்,’ என்று சொன்னார். ஆனால் அந்தக் கெட்ட குடியானவர்கள்: “இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோமென்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.” (லூக்கா 20:9-16, தி.மொ.) இவ்வாறு இயேசு, தம் சொந்த நிலையை, ஒரு தகப்பன் கீழ்ப்படிதலுள்ள குமாரனை அனுப்புவதுபோல், கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி கடவுளால் அனுப்பப்பட்டவரென விளக்கிக் காட்டினார்.
இயேசுவைப் பின்பற்றினவர்கள், அவரைக் கடவுளுக்குச் சமமானவராக அல்ல, கடவுளுடைய கீழ்ப்படிதலுள்ள ஊழியராகவே அப்போஸ்தலர் 4:23, 27, 30, RS, கத்தோலிக்கப் பதிப்பு.
எப்பொழுதும் கருதினர். “நீர் அபிஷேகஞ்செய்த, உம்முடைய பரிசுத்த ஊழியனாகிய இயேசு, . . . உம்முடைய பரிசுத்த ஊழியனாகிய இயேசுவின் பெயரின் மூலம் அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்படுகின்றன,” என்பதாக அவரைப்பற்றி அவர்கள் கடவுளிடம் ஜெபித்தார்கள்.—கடவுள் எல்லாக் காலங்களிலும் மேலானவர்
இயேசுவின் ஊழியத்தின் தொடக்கத்தில், அவர் தாம் முழுக்காட்டப்பட்ட தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, பரலோகத்திலிருந்து கடவுளுடைய குரல் பின்வருமாறு சொன்னது: “இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்தேன்.” (மத்தேயு 3:16, 17, NW) தாமே தம்முடைய சொந்தக் குமாரன், தம்மையே தாம் அங்கீகரித்தார் எனவும், தம்மையே தாம் அனுப்பினாரெனவும் கடவுள் சொன்னாரா? இல்லை, தாம் மேலானவராக, கீழானவரான தம்முடைய குமாரன் இயேசுவை, முன்னாலுள்ள வேலைக்காகத் தாம் அங்கீரித்தாரெனவே சிருஷ்டிகராகிய கடவுள் சொன்னார்.
இயேசு பின்வருமாறு சொன்னபோது தம்முடைய பிதா மேம்பட்டவரென்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “யெகோவாவின் ஆவி என்மீதிருக்கிறது, ஏனெனில் தரித்திரருக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அபிஷேகஞ்செய்தார்.” (லூக்கா 4:18, NW) அபிஷேகஞ்செய்வது என்பது மேலானவர், ஏற்கெனவே அதிகாரம் இல்லாத ஒருவருக்கு அதிகாரத்தை அல்லது தனிபொறுப்பை அளிப்பதாகும். இங்கே தெளிவாகக் கடவுளே மேலானவர், ஏனெனில் அவரே இயேசுவை அபிஷேகஞ்செய்தார், இதற்கு முன் அவருக்கு இராத அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தார்.
தம்முடைய இரண்டு சீஷர்களின் தாய், இயேசு தம்முடைய ராஜ்யத்துக்குள் வருகையில் அவளுடைய குமாரர்கள் ஒருவன் வலதுபுறத்திலும் மற்றொருவன் இடதுபுறத்திலும் உட்கார்ந்திருக்கச் செய்யவேண்டுமென கேட்டபோது, இயேசு தம்முடைய பிதாவின் மேலான நிலையைத் தெளிவாக்கினார். இயேசு பின்வருமாறு பதிலளித்தார்: “என் வலது பாரிசத்திலோ இடது பாரிசத்திலோ இருப்பிடங்களைக் குறித்ததில், அவற்றை அளிப்பது என்னுடையதல்ல; அவற்றை என் பிதா [கடவுள்] யாருக்காகக் குறிப்பிட்டு வைத்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை உரியவை.” (மத்தேயு 20:23, JB) இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளாயிருந்தால், அந்த இருப்பிடங்களைக் கொடுப்பதற்கு அவை அவருக்கு சொந்தமாயிருந்திருக்கும். ஆனால் அவற்றை இயேசு கொடுக்க முடியவில்லை, ஏனெனில் அவை கடவுளுடையதே, அவரே அதைக் கொடுக்க முடியும். ஆனால் இயேசு கடவுளல்ல.
இயேசுவின் சொந்த ஜெபங்கள்தாமே அவருடைய கீழ்ப்பட்ட நிலைக்கு வல்லமைவாய்ந்த உதாரணங்களாயிருக்கின்றன. இயேசு மரிக்கவிருந்த சமயத்தில், பின்வருமாறு ஜெபிப்பதனால் யார் மேலானவர் என அவர் காட்டினார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” (லூக்கா 22:42) அவர் யாரிடம் ஜெபித்தார்? தம்முடைய ஒரு பாகத்தினிடமா? இல்லை, முற்றிலும் வேறான ஒருவரிடம், தம்முடைய பிதாவாகிய கடவுளிடம் ஜெபித்தார், அவருடைய சித்தமே மேலானதும் தம்முடைய சொந்தச் சித்தத்திலிருந்து வேறுபட்டதுமாகும், அவர் ஒருவரே “இந்தப் பாத்திரத்தை . . . நீங்கும்படி செய்ய” முடியும்.
பின்பு, தாம் மரணத் தறுவாயை அடைந்தபோது, இயேசு: “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சத்தமிட்டுக் கூறினார். (மாற்கு 15:34, JB) யாரை நோக்கி இயேசு சத்தமிட்டுக் கூப்பிட்டார்? தம்மையே நோக்கியா அல்லது தம்முடைய ஒரு பாகத்தை நோக்கியா? நிச்சயமாகவே, “என் தேவனே,” எனக் கூப்பிட்டது தன்னைத்தான் கடவுளாகக் கருதின ஒருவரிடமிருந்து வரவில்லை. இயேசு கடவுளாயிருந்தால், அவரைக் கைவிட்டவர் யார்? தாமே தம்மைக் கைவிட்டாரா? அது பொருளற்றதாயிருக்கும், மேலும், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்றும் இயேசு சொன்னார். (லூக்கா 23:46) இயேசு கடவுளாயிருந்தால், என்ன காரணத்துக்காக அவர் தம் ஆவியைப் பிதாவிடம் ஒப்புவிக்க வேண்டும்?
இயேசு மரித்தப் பின்பு, மூன்று நாட்பகுதிகளாக அவர் அந்தக் கல்லறையில் இருந்தார். அவர் கடவுளாயிருந்தால், “என் கடவுளே, என் பரிசுத்தரே, நீர் மரிப்பதில்லை,” என்று ஆபகூக் 1:12-ல் (NW) சொல்லியிருப்பது தவறு. ஆனால் இயேசு உண்மையில் மரித்தார், மேலும் கல்லறையில் உணர்வற்றிருந்தார் என்று பைபிள் சொல்லுகிறது. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினவர் யார்? அவர் உண்மையில் மரித்திருந்தால், அவர் தம்மைத்தாமே உயிர்த்தெழுப்பியிருக்க முடியாது. மறுபட்சத்தில், அவர் உண்மையில் மரிக்கவில்லையென்றால், மரித்ததுபோல் அவர் பாசாங்கு செய்தது ஆதாமின் பாவத்துக்காக மீட்பின் கிரயத்தைச் செலுத்தியிருக்க முடியாது. ஆனால் தம்முடைய உண்மையான மரணத்தினால் அவர் நிச்சயமாய் அந்த விலைக்கிரயத்தை முழுமையாய்ச் செலுத்தினார். ஆகவே, “தேவன் அவருடைய [இயேசுவினுடைய] மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்.” (அப்போஸ்தலர் 2:24) மேலானவரான, சர்வவல்லமையுள்ள கடவுள், கீழானவரான, தம்முடைய ஊழியனாகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
ஆட்களை உயிர்த்தெழுப்பினதைப்போன்ற, அற்புதங்களை நடப்பிக்க இயேசுவுக்கு இருந்தத் திறமை, அவர்
கடவுள் எனக் குறிப்பிட்டுக் காட்டியதா? அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளான எலியாவுக்கும் எலிசாவுக்கும் அந்த வல்லமை இருந்தது, ஆனால் அது அவர்களை மனிதரைவிட மேம்பட்டவர்களாக்கவில்லை. கடவுள், தாம் அவர்களை ஆதரிப்பதைக் காட்ட, அற்புதங்களை நடப்பிக்கும் சக்தியைத் தீர்க்கதரிசிகளுக்கும், இயேசுவுக்கும், அப்போஸ்தலருக்கும் கொடுத்தார். ஆனால் இது அவர்கள் எவரையும் ஒரு பன்மை கடவுளின் பாகமாக்கவில்லை.இயேசு வரம்புக்குட்பட்ட அறிவைக் கொண்டிருந்தார்
இயேசு இந்தக் காரிய ஒழுங்குமுறையைப் பற்றித் தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தபோது, பின்வருமாறு கூறினார்: “ஆனால் அந்த நாளை அல்லது அந்த மணிநேரத்தை ஒருவரும் அறியார், பரலோகத்திலுள்ள தூதர்களும், குமாரனுங்கூட அறியார்கள், பிதா ஒருவரே அறிந்திருக்கிறார்.” (மாற்கு 13:32, RS, கத்தோலிக்கப் பதிப்பு) இயேசு கடவுளின் சரிசமமான குமாரன்-பாகமாக இருந்தாரென்றால், பிதா அறிந்திருப்பதை அவரும் அறிந்திருப்பார். ஆனால் இயேசு அறியவில்லை, ஏனெனில் அவர் கடவுளுக்குச் சமமாயில்லை.
அவ்வாறே எபிரெயர் 5:8-ல், தாம் “பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்”டாரென நாம் வாசிக்கிறோம். கடவுள் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டுமென நாம் கற்பனை செய்ய முடியுமா? இல்லை, ஆனால் இயேசு கற்றுக்கொண்டார், ஏனெனில் கடவுள் அறிந்துள்ள எல்லாவற்றையும் அவர் அறியவில்லை. மேலும் கடவுள் ஒருபோதும் கற்றுக்கொள்ள வேண்டியிராத ஒன்றை—கீழ்ப்படிதலை—இயேசு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கடவுள் ஒருவருக்கும் ஒருபோதும் கீழ்ப்படிய வேண்டியதில்லை.
இயேசு கடவுளுடன் இருக்கும்படி பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டபோதும் கடவுள் அறிந்ததற்கும் கிறிஸ்து அறிந்ததற்குமிடையில் வேறுபாடு இருந்தது. பைபிளின் கடைசி புத்தகத்தின் முதல் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினது, இதைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.” (வெளிப்படுத்துதல் 1:1, RS, கத்தோலிக்கப் பதிப்பு) இயேசுதாமே கடவுளின் பாகமாயிருந்தால் கடவுளின் மற்றொரு பாகமான—கடவுள்—அவருக்கு வெளிப்படுத்தலைக் கொடுக்கவேண்டுமா? நிச்சயமாகவே அவர் அதைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருப்பார், ஏனெனில் கடவுள் அறிந்திருந்தார். ஆனால் இயேசு அறியவில்லை, ஏனெனில் அவர் கடவுளல்ல.
இயேசு தொடர்ந்து கீழ்ப்பட்டிருக்கிறார்
மனிதனானவதற்கு முன்னான தம்முடைய வாழ்க்கையிலும், தாம் பூமியிலிருந்தபோதும், இயேசு கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்தார். தாம் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்னும், அவர் தொடர்ந்து கீழ்ப்பட்ட, இரண்டாவது இடத்திலேயே இருக்கிறார்.
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதைக் குறித்துப் பேசினபோது, பேதுருவும் அவனோடிருந்தவர்களும்: “கடவுள் இவரை [இயேசுவை] . . . தம்முடைய வலது பாரிசத்துக்கு உயர்த்தினார்,” என்று யூத ஆலோசனை சபையினிடம் கூறினார்கள். (அப்போஸ்தலர் 5:31, NW) பவுல்: “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி”னார் என்று சொன்னான். (பிலிப்பியர் 2:9) இயேசு கடவுளாயிருந்தால், இயேசுவை எப்படி உயர்த்தியிருக்க முடியும், அதாவது, அவர் முன்னால் அனுபவித்து மகிழ்ந்ததைவிட மேலான ஒரு நிலைக்கு எவ்வாறு உயர்த்த முடியும்? அவர் ஏற்கெனவே திரித்துவத்தின் உயர்ந்த பாகமாக இருந்திருப்பார். தாம் உயர்த்தப்படுவதற்கு முன்னால், இயேசு கடவுளுக்குச் சமமாயிருந்தால், அவரை இன்னும் மேலாக உயர்த்துவது கடவுளைவிட அதிக உயர்ந்தவராக்கியிருக்கும்.
மேலும் பவுல், கிறிஸ்து “நமக்காகக் கடவுளுடைய உண்மையான சமுகத்தில் தாம் தோன்றக்கூடும்படி, பரலோகத்துக்குள்தானே” பிரவேசித்தார் என்றும் சொல்லுகிறான். (எபிரெயர் 9:24, JB) நீங்கள் வேறு ஒருவருடைய சமுகத்தில் தோன்றினால், நீங்கள் எப்படி அந்த ஆளாக இருக்கமுடியும்? அவ்வாறு நீங்கள் இருக்க முடியாது. நீங்கள் வேறுபட்ட மற்றும் தனி ஆளாகவே இருக்கவேண்டும்.
அவ்வாறே, இரத்தச்சாட்சியாக மரித்த ஸ்தேவான், கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு முன்னால், “வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான்.” (அப்போஸ்தலர் 7:55) தெளிவாகவே, அவன் இரண்டு வெவ்வேறு தனி ஆட்களைக் கண்டான்—அவன் பரிசுத்த ஆவியை காணவில்லை, திரித்துவக் கடவுளைக் காணவில்லை.
வெளிப்படுத்துதல் 4:8-லிருந்து 5:7 வரையுள்ள விவரப்பதிவில், கடவுள் தம்முடைய பரலோகச் சிங்காசனத்தில் வீற்றிருப்பவராய்க் காட்டப்படுகிறார். ஆனால் இயேசு அவ்வாறு காட்டப்படவில்லை. அவர் கடவுளுடைய வலது கரத்திலிருந்து ஒரு சுருளை ஏற்க கடவுளிடம் அணுகிவர வேண்டியிருந்தது. இது பரலோகத்தில் இயேசு கடவுளல்ல கடவுளிலிருந்து வேறுபட்டவரெனக் காட்டுகிறது.
முன் சொன்னதற்கு ஒத்தவாறு, இங்கிலாந்தில், மான்ச்செஸ்டரிலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூல்நிலையத்தின் வெளியீட்டில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பட்ட பரலோக வாழ்க்கையில், இயேசு, பூமியில் உலகினராயிருந்த இயேசு தம்முடைய வாழ்க்கையில் கொண்டிருந்ததுபோல், கடவுளிலிருந்து எல்லா நுட்ப அம்சத்திலும் வேறுபட்டும் தனிப்பட்டும் இருக்கும் சொந்தத் தனித்தன்மையை விடாது கொண்டிருப்பதாக வருணிக்கப்பட்டிருக்கிறார். கடவுளுடைய குமாரனாக, அவர் வேறுபட்ட வகையினராய், மேலும் அவர்களுக்கு மிக மேலான உயர்படிநிலையில் இருக்கிறபோதிலும்—கடவுள் பக்கத்தில் மற்றும் கடவுளோடு ஒப்பிட, அவர், தூதர்கள் இருப்பதுபோல், கடவுளுடைய பரலோகப் பிரகாரத்தில் இன்னும் மற்றொரு பரலோக ஆளாக நிச்சயமாகவே தோன்றுகிறார்.—பிலிப்பியர் 2:11-ஐ ஒத்துப்பாருங்கள்.
இந்த வெளியீடு மேலும் சொல்வதாவது: “எனினும், பரலோகக் கிறிஸ்துவாக அவருடைய வாழ்க்கையையும் வேலைகளையும்பற்றிச் சொல்லப்படுபவை, தெய்வீக நிலையில் அவர் கடவுளுடன்தானே சரிசம நிலையிலும் முழுமையாய்க் கடவுளாகவும் நிற்கிறாரென பொருள்படுவதுமில்லை மறைமுகமாக உணர்த்துவதுமில்லை. அதற்கு மாறாக, பரலோக ஆளாக அவரையும் அவருடைய
ஊழியத்தையும் பற்றிய புதிய ஏற்பாட்டுக் காட்சியில், கடவுளிலிருந்து வேறுபட்டும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டும் இருக்கும் ஓர் ஆளையே நாம் காண்கிறோம்.”பரலோகத்தில் நித்திய எதிர்காலத்தில், இயேசு தொடர்ந்து வேறுபட்ட, கடவுளின் கீழ்ப்பட்ட ஊழியனாக இருப்பார். பைபிள் இதைப் பின்வருமாறு வெளிப்படுத்திக் கூறுகிறது: “அதன் பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் [பரலோகத்திலுள்ள இயேசு] . . . தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். . . . தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.—1 கொரிந்தியர் 15:24, 28.
இயேசு தாம் கடவுளென ஒருபோதும் உரிமைபாராட்டவில்லை
பைபிளின் நிலை தெளிவாயிருக்கிறது. சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா, இயேசுவிலிருந்து வேறுபட்ட ஆளாக இருப்பதுமட்டுமல்லாமல், சதா காலங்களிலும் அவருக்கு உயர்ந்தவராயும் இருக்கிறார். இயேசு எப்பொழுதும் வேறுபட்டவராயும் தாழ்ந்தவராயும், கடவுளின் பணிவான ஊழியராயும் காட்டப்படுகிறார். இதனிமித்தம் பைபிள், “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்”கிற அதே முறையில் “கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்,” என்று வெளிப்படையாய்ச் சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 11:3) இதனால் இயேசுதாமேயும் பின்வருமாறு கூறினார்: “பிதா என்னிலும் பெரியவர்.”—யோவான் 14:28, RS, கத்தோலிக்கப் பதிப்பு.
உண்மை என்னவெனில், இயேசு கடவுளல்ல தாம் கடவுளென அவர் ஒருபோதும் உரிமைபாராட்டவுமில்லை. இதை மேலும் மேலும் பல அறிஞர் ஒப்புக்கொள்கின்றனர். ரைலண்ட்ஸ் வெளியீட்டில் சொல்லியிருக்கிற பிரகாரம்: “புதிய ஏற்பாட்டின் பேரில் கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் ஆராய்ச்சி, பெருகும் எண்ணிக்கையான மதிப்புவாய்ந்த புதிய ஏற்பாட்டு அறிஞர்களை, இயேசு . . . தாம் கடவுளென நிச்சயமாகவே ஒருபோதும் நம்பவில்லை என்ற முடிவுக்கு வழிநடத்திக்கொண்டிருக்கிறது என்னும் இந்த உண்மையை எதிர்ப்படவேண்டும்.”
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப்பற்றி இந்த வெளியீடு மேலும் சொல்வதாவது: “ஆகையால், அவர்கள் [இயேசுவுக்கு] கிறிஸ்து, மனுஷகுமாரன், தேவனுடைய குமாரன் மற்றும் கர்த்தர் என்ற இத்தகைய உயர்மதிப்பான பட்டப் பெயர்களைக் கொடுத்தபோது, இவை அவர் கடவுள் என்று அல்ல, ஆனால் அவர் கடவுளுடைய வேலையைச் செய்தாரென்றே சொல்லும் முறைகளாயிருந்தன.”
இவ்வாறு, இயேசு கடவுள் என்ற இந்த எண்ணம் பைபிளின் முழு சாட்சியத்தையும் எதிர்க்கிறதென மத அறிஞர் சிலரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில், கடவுள் எப்பொழுதும் உயர்வானவர், இயேசு பணிவுள்ள ஊழியன்.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
‘இயேசு தாம் கடவுளென நிச்சயமாகவே ஒருபோதும் நம்பவில்லை என்ற முடிவுக்கு வரும்படி புதிய ஏற்பாட்டு ஆராய்ச்சி மேலும் மேலும் பெருகும் அறிஞர்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.’—ஜான் ரைலண்ட்ஸ் நூல் நிலையத்தின் வெளியீடு
[பக்கம் 17-ன் படம்]
“என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்,” என்று இயேசு யூதரிடம் சொன்னார்.—யோவான் 6:38
[பக்கம் 18-ன் படம்]
“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று இயேசு சத்தமிட்டுக் கூறினபோது, தாம் கடவுளென அவர் நிச்சயமாகவே நம்பவில்லை