திரித்துவக் கோட்பாடு எவ்வாறு தோன்றிற்று?
திரித்துவக் கோட்பாடு எவ்வாறு தோன்றிற்று?
இந்தத் தறுவாயில் நீங்கள் ஒருவேளை பின்வருமாறு கேட்கலாம்: ‘திரித்துவம் பைபிளில் அடங்கிய போதகமல்லவெனில், அது எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடாயிற்று?’ பொ.ச. 325-ல் நடந்த நைசியா ஆலோசனை சபையில் அது உருவாக்கியமைக்கப்பட்டதென பலர் எண்ணுகின்றனர்.
எனினும், இது முற்றிலும் திருத்தமானதல்ல. கிறிஸ்து கடவுளைப்போன்ற அதே தன்மைவாய்ந்தவரென அந்த நைசியா ஆலோசனை சபை நிச்சயமாகவே வலியுறுத்தினது, இது பின்னால் திரித்துவ இறையியலுக்கு ஆதாரத்தைப்போட்டது. ஆனால் அது திரித்துவத்தை நிலைநாட்டவில்லை, ஏனெனில் அந்த ஆலோசனை சபையில் பரிசுத்த ஆவி திரித்துவக் கடவுளின் மூன்றாவது ஆள் என்ற குறிப்பு எதுவும் சொல்லப்படவில்லை.
நைசியாவில் கான்ஸ்டன்டீன் வகித்தப் பாகம்
இயேசு கடவுள் என புதிதாகத் தோன்றி பெருகிக்கொண்டிருந்த எண்ணத்துக்குப் பைபிள் அடிப்படையின்பேரில் மிகுந்த எதிர்ப்புப் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. இந்தச் சச்சரவைத் தீர்க்க முயன்று, ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் எல்லா பிஷப்புகளையும் நைசியாவுக்கு வரும்படி கட்டளையிட்டான். மொத்தத்தில் ஒரு சிறு பகுதியான, ஏறக்குறைய 300 பேரே உண்மையில் வந்திருந்தனர்.
கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனல்ல. வாழ்க்கையில் பின்னால் அவன் மதம் மாறினானென கருதப்படுகிறது, ஆனால் அவன் சாகும் தறுவாயில் படுக்கையில் கிடக்கும் வரையில் பாப்டிஸம் கொடுக்கப்படவில்லை. பூர்வ சர்ச் என்ற ஆங்கில புத்தகத்தில் ஹென்ரி சட்விக் அவனைக்குறித்துப் பின்வருமாறு சொல்லுகிறார்: “கான்ஸ்டன்டீன், தன் தகப்பனைப்போல், வெல்லப்படாத சூரியனை வணங்கினான்; . . . அவன் மதமாறினது தேவ அருளின் ஓர் உள்ளான அனுபவமாக பொருள்படுத்தப்படக்கூடாது . . . அது இராணுவக் காரியம். கிறிஸ்தவ கோட்பாட்டை அவன் ஒருபோதும் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. ஆனால் போரில் வெற்றி கிறிஸ்தவர்களின் கடவுளுடைய அருள்கொடையில் சார்ந்திருந்ததென அவன் நிச்சயமாயிருந்தான்.”
பாப்டிஸம் பெறாத இந்தப் பேரரசன் நைசியா ஆலோசனை சபையில் என்ன பாகத்தை வகித்தான்? என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு கூறுகிறது: “கான்ஸ்டன்டீன் தலைமைதாங்கி, முழு ஈடுபாடுடன் கலந்தாலோசிப்புகளை தானே வழிநடத்தினான். கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் உறவை எடுத்துக்காட்டும் ஆலோசனை சங்கம் கூறின ‘பிதாவுடன் ஒரே வஸ்து’ என்ற முக்கியமான பிரமாணத்தை அவன் தானே முன்கொண்டுவந்தான். . . . இருவர் மாத்திரமே நீங்கலாக, அந்தப் பிஷப்புகள், பேரரசனால் மட்டுமீறி அதிர்ச்சியடைந்து, அந்த விசுவாசப்பிரமாணத்துக்குக் கையெழுத்திட்டனர், அவர்களில் பலர் தங்கள் மனவிருப்பத்துக்கு மிக மாறாக அவ்வாறு செய்தனர்.”
ஆகவே, கான்ஸ்டன்டீன் தீர்மானமெடுக்கும் ஒரு பங்கை வகித்தான், இரண்டுமாத மூர்க்கமான மத வாக்குவாதத்துக்குப் பின், இந்தப் புறமத அரசியலாளன் தலையிட்டு, இயேசு கடவுள் என்று சொன்னவர்களின் சார்பாகத் தீர்மானித்தான். ஆனால் ஏன் அவ்வாறு தீர்மானித்தான்? நிச்சயமாகவே, எவ்வகையிலும் பைபிளில் குறிப்பிடப்பட்டதிலிருந்து மெய்ப்பித்து உறுதிசெய்ததனால் அல்ல. “கிரேக்க இறையியலில் கேட்கப்பட்ட கேள்விகளைக் குறித்து கான்ஸ்டன்டீனுக்கு அடிப்படையாய் ஒன்றுமே விளங்கவில்லை,” என்று கிறிஸ்தவ கோட்பாட்டின் ஒரு சுருக்கச் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் சொல்லுகிறது. மத பிரிவினை தன்னுடைய பேரரசுக்கு ஆபத்தாயிருந்ததென்பதை மாத்திரமே அவன் உண்மையில் விளங்கிக்கொண்டான், ஆகவே தன் ராஜ்யத்தை பலப்படுத்திக்கொள்ள அவன் விரும்பினான்.
எனினும், நைசியாவில் அந்தப் பிஷப்புகள் ஒருவரும் திரித்துவத்தை சிபாரிசு செய்யவில்லை. இயேசுவின் இயல்பை மாத்திரமே அவர்கள் தீர்மானித்தனர், பரிசுத்த ஆவி வகித்தப் பாகத்தை அல்ல. திரித்துவம் தெளிவான பைபிள் சத்தியமாயிருந்தால், அவர்கள் அதை அச்சமயத்தில் ஏற்கும்படி முன்கொண்டுவந்திருக்க வேண்டுமல்லவா?
மேலுமான வளர்ச்சி
நைசியாவுக்குப் பின், இந்தப் பொருளின்பேரில் வாக்குவாதங்கள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தன. இயேசு கடவுளுக்குச் சமமானவரல்லவென நம்பினவர்கள், சிறிது காலம் ஆதரவான நிலைக்குங்கூட திரும்பவந்தனர். ஆனால் பின்னால் பேரரசன் தியோடோசியஸ் அவர்களுக்கு எதிராகத் தீர்மானித்தான். நைசியா ஆலோசனை சபையின் விசுவாசப் பிரமாணமே தன் ராஜ்யத்தில் ஏற்புடைய கோட்பாடென அவன் நிலைநாட்டி, இந்தக் கொள்கைமுறையைத் தெளிவுபடுத்த பொ.ச. 381-ல் கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனை சபையைக் கூட்டினான்.
இந்த ஆலோசனை சபை, பரிசுத்த ஆவியைக் கடவுளும் கிறிஸ்துவும் இருக்கும் அதே சமநிலையில் வைக்க ஒப்புக்கொண்டது. முதல்தடவையாக, கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவம் உருத்தோற்றத்துக்கு வரத் தொடங்கினது.
எனினும், கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனை சபைக்குப் பின்னும், திரித்துவம் விரிவாய் ஏற்கப்பட்ட விசுவாசப் பிரமாணமாகவில்லை. பலர் அதை எதிர்த்தனர் இவ்வாறு தங்கள்மீது கொடுமையான துன்புறுத்தலைக் கொண்டுவந்தனர். பிற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இந்தத் திரித்துவம் அமைவுபெற்ற விசுவாசப்பிரமாணங்களில் திட்டமான கோட்பாடாக எடுத்துரைக்கப்பட்டது. என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு
குறிப்பிடுகிறது: “திரித்துவக் கோட்பாட்டின் முழு வளர்ச்சி மேற்கில், இடைநிலைக்காலங்களின் மத நுணுக்க முறையில் ஏற்பட்டது, அப்பொழுது தத்துவத்தின் மற்றும் உளநூலின் மூலமாகவும் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது.”அதனேசியன் விசுவாசப்பிரமாணம்
இந்தத் திரித்துவம் அதனேசியன் விசுவாசப்பிரமாணத்தில் அதிக முழுமையாய் விளக்கியுரைக்கப்பட்டது. நைசியாவில் கான்ஸ்டன்டீனை ஆதரித்த சர்ச் மதகுருவின் பெயர் அதனேசியஸ். அவனுடைய பெயரைக் கொண்டுள்ள இந்த விசுவாசப்பிரமாணம் பின்வருமாறு அறிவிக்கிறது: “நாங்கள் ஒரே கடவுளைத் திரித்துவத்தில் வணங்குகிறோம் . . . பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள்; எனினும் அவர்கள் மூன்று கடவுட்களல்லர், ஒரே கடவுளே.”
எனினும், அதனேசியஸ் இந்த விசுவாசப்பிரமாணத்தை இயற்றவில்லையென நன்றாய்க் கற்றுணர்ந்த அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இந்த விசுவாசப்பிரமாணம் 12-வது நூற்றுண்டு வரையில் கிழக்கத்திய சர்ச்சுக்கு அறியப்படாமலிருந்தது. 17-வது நூற்றாண்டு முதற்கொண்டு, அறிஞர்கள், அதனேசியன் விசுவாசப்பிரமாணம் (373-ல் மரித்த) அதனேசியஸால் எழுதப்படவில்லை ஆனால் 5-வது நூற்றாண்டின்போது தென் ஃபிரான்ஸில் ஒருவேளை இயற்றப்பட்டிருக்கலாமென பொதுவாய் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். . . . இந்த விசுவாசப்பிரமாணத்தின் பாதிப்பு முதன்முதல் 6-ம் 7-ம் நூற்றாண்டுகளில் தென் ஃபிரான்ஸிலும் ஸ்பேய்னிலும் இருந்ததெனத் தெரிகிறது. 9-ம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் சற்றுப் பின்னர் ரோமிலும் சர்ச்சின் பொது ஆராதனையில் பயன்படுத்தப்பட்டது.”
ஆகவே, திரித்துவம் கிறிஸ்தவமண்டலத்தில் விரிவாய் ஏற்கப்பட்டதாவதற்கு, கிறிஸ்துவின் காலத்திலிருந்து கணக்கிட, பல நூற்றாண்டுகள் எடுத்தன. இந்த எல்லாவற்றிலும், தீர்மானங்களை எது வழிநடத்தினது? கடவுளுடைய வார்த்தையா, அல்லது சர்ச் குருத்துவத்தின் மற்றும் அரசியலின் சலுகைகளா? மதத்தின் தொடக்கமும் படிப்படியான வளர்ச்சியும் என்ற ஆங்கில புத்தகத்தில் E. W. ஹாப்கின்ஸ் பதிலளிப்பதாவது: “திரித்துவத்தின் முடிவாய் ஏற்கப்பட்ட பொருள்விளக்கம் பெரும்பாலும் சர்ச்சுக்குள்ளே இருந்த கட்சிப் பிரிவினைகளால் தீர்மானிக்கப்பட்ட ஒரு காரியமாயிருந்தது.”
விசுவாசத் துரோகம் முன்னறிவிக்கப்பட்டது
திரித்துவத்தின் இந்தக் கெளரவமற்ற சரித்திரம் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் தங்கள் காலத்தைப் பின்தொடர்ந்து என்ன வருமென முன்னறிவித்ததோடு சரியாய்ப் பொருந்துகிறது. விசுவாசத் துரோகம், உண்மை வணக்கத்தைவிட்டு விலகுதல், வீழ்ந்துபோதல் கிறிஸ்துவின் திரும்பி வருகை வரையில் இருக்குமெனவும், அப்பொழுது இந்தக் காரிய ஒழுங்குமுறையின் அழிவுக்குரிய கடவுளுடைய நாளுக்கு முன்னால் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுமெனவும் அவர்கள் சொன்னார்கள்.
அந்த “நாளைக்” குறித்து அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னான்: “விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, . . . பாவ [அக்கிரம, தி.மொ.] மனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.” (2 தெசலோனிக்கேயர் 2:3, 7) பின்னால், அவன் பின்வருமாறு முன்னறிவித்தான்: “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி [தங்கள் உதடுகளில் போலி சத்தியத்துடன், JB] மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:29, 30) அதன் ‘அக்கிரம’ பாதிரி வகுப்பாருடன்கூடிய இந்த விசுவாசத் துரோகத்தைப்பற்றி இயேசுவின் மற்ற சீஷர்களும் எழுதினார்கள்.—உதாரணமாக, 2 பேதுரு 2:1; 1 யோவான் 4:1-3; யூதா 3, 4, ஆகியவற்றைப் பாருங்கள்.
பவுல் பின்வருமாறும் எழுதினான்: “அவர்கள் ஆரோக்கியகரமான உபதேசத்தைச் சகிக்காமல் செவித்தினவுள்ளவர்களாகித் [மிக நவீன புதிய கூறுகளுக்குப் பேராவலுள்ளவர்களாகி, JB] தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் திரட்டிக் கூட்டிக்கொண்டவர்களாய்ச் சத்தியத்துக்குச் செவியை விலக்கிக் கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.”—2 தீமோத்தேயு 4:3, 4, தி.மொ.
உண்மையான வணக்கத்தைவிட்டு விலகிப்போதலின் பின்னால் இருந்ததை இயேசுதாமே விளக்கினார். தாம் நல்ல விதைகளை விதைத்தாரெனவும் ஆனால் சத்துருவான சாத்தான், அந்த வயலில் களைகளை அதன்மேல் விதைப்பானெனவும் அவர் கூறினார். ஆகவே கோதுமையின் முதற் தாள்களோடுகூட, களைகளும் தோன்றின. இவ்வாறு அறுப்புக் காலம் வரையில் தூய்மையான கிறிஸ்தவத்திலிருந்து விலகுதலும் எதிர்பார்க்கப்படவேண்டும், அறுப்புக்காலத்தில் கிறிஸ்து காரியங்களைச் சரிசெய்வார். (மத்தேயு 13:24-43) என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “நான்காம் நூற்றாண்டு திரித்துவக் கோட்பாடு கடவுளுடைய இயல்பைக் குறித்தப் பூர்வ கிறிஸ்தவ போதகத்தைத் திருத்தமாய் எடுத்துக் காட்டவில்லை; அதற்கு நேர்மாறாக அது, இந்தப் போதகத்தைவிட்டு விலகுதலேயாகும்.” அப்படியானால், இந்த விலகுதல் எங்கிருந்து தோன்றியது?—1 தீமோத்தேயு 1:6.
எது அதன்பேரில் செல்வாக்குச் செலுத்தியது
பூர்வ உலகம் முழுவதிலும், பாபிலோனியாவின் காலமளவாக, புறமத கடவுட்களின் வணக்கம் மும்மூன்றாகத்
தொகுக்கப்பட்டது, அல்லது மும்மூர்த்திகள் இருப்பது பொதுவாயிருந்தது. இந்தப் பாதிப்பு எகிப்திலும், கிரீஸிலும், ரோமிலும் கிறிஸ்துவுக்கு முன்னான, அவர் இருந்த, மற்றும் அவருக்குப் பின்னான நூற்றாண்டுகளில் பரவியிருந்தது. அப்போஸ்தலரின் மரணத்துக்குப் பின் இத்தகைய புறமத நம்பிக்கைகள் கிறிஸ்தவத்துக்குள் நுழையத் தொடங்கின.சரித்திராசிரியன் உவில் டியூரன்ட் பின்வருமாறு கூறினார்: “கிறிஸ்தவம் புறமதக் கோட்பாட்டை அழிக்கவில்லை; அதை இது தனதாக ஏற்றுக்கொண்டது. . . . எகிப்திலிருந்து தெய்வீகத் திரித்துவத்தின் அபிப்பிராயங்கள் வந்தன.” எகிப்திய மதம் என்ற ஆங்கில புத்தகத்தில், சீக்ஃபிரீட் மோரென்ஸ் குறிப்பிடுவதாவது: “திரித்துவம் எகிப்திய இறையியல் வல்லுநர்களின் கவனத்தை முழுவதும் கவர்ந்துள்ள பெரும் சிந்தனைப் பொருளாகும் . . . மூன்று கடவுட்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே ஆளாகப் பாவித்து நடத்தப்படுகின்றனர், ஒருமையில் குறிப்பிட்டழைக்கப்படுகின்றனர். இம்முறையில் எகிப்திய மதத்தின் ஆவிக்குரிய சக்தி கிறிஸ்தவ இறையியலுடன் நேரடியான இணைப்பைக் காட்டுகிறது.”
இவ்வாறு, எகிப்தில் அலெக்ஸாந்திரியாவில், மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட மற்றும் நான்காவது நூற்றாண்டுக்கு முற்பட்ட காலங்களில் இருந்த, அதனேஸியஸைப்போன்ற சர்ச் ஆட்கள், திரித்துவத்துக்கு வழிநடத்தின அபிப்பிராயங்களைத் தாங்கள் திட்டமாக எடுத்துரைக்கையில் இந்தச் செல்வாக்கைப் பிரதிபலித்தனர். அவர்களுடைய சொந்தச் செல்வாக்கும் பரவினது, ஆகவே மோரென்ஸ் “அலெக்ஸாந்திரிய இறையியலை எகிப்திய மத பாரம்பரியத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடைநிலைப்பட்டதென கருதுகிறார்.”
கிறிஸ்தவத்தின் சரித்திரம் என்ற எட்வர்ட் கிப்பன்ஸின் ஆங்கில புத்தகத்துக்குரிய முகவுரையில், நாம் வாசிப்பதாவது: “கிறிஸ்தவம் புறமதத்தை வென்று கீழ்ப்படுத்திவிட்டதென்றால், புறமதம் கிறிஸ்தவத்தைக் கறைப்படுத்தியிருப்பதும் சரிசமமான உண்மை. முதல் கிறிஸ்தவர்களின் தூய்மையான கடவுள் உண்மை கோட்பாட்டை . . . புரிந்துகொள்ள முடியாத திரித்துவக் கோட்பாட்டுக்கு ரோமின் சர்ச் மாற்றியது. எகிப்தியர் உருவாக்கியவையும் பிளேட்டோ மிக உயர்வுபடுத்திக் கூறியவையுமான புறமதக் கோட்பாடுகள் பல, விசுவாசிப்பதற்குத் தகுந்தவையாகத் தொடர்ந்திருக்க வைக்கப்பட்டன.”
மத அறிவு அகராதி என்ற ஆங்கில அகராதியில், திரித்துவம் “புற மதங்களிலிருந்து கடன்வாங்கப்பட்ட ஒரு சீர்கேடு என்றும் மற்றும் அது கிறிஸ்தவ விசுவாசத்துக்குள் பொருந்தவைக்கப்பட்டது,” என்றும் பலர் சொல்லுகின்றனரென குறிப்பிடுகிறது. மேலும் நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமத நம்பிக்கைகள் என்ற ஆங்கில புத்தகம்: “[திரித்துவத்தின்] தொடக்கம் முற்றிலும் புறமதமே.” என்று அறிவிக்கிறது.
இதனால், மதம் மற்றும் ஒழுக்கநெறியின் என்ஸைக்ளோபீடியா என்பதில் ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இந்திய மதத்தில், உதாரணமாக, திரித்துவத் தொகுதியாகிய பிரமன், சிவன், விஷ்ணுவையும்; எகிப்திய மதத்தில் திரித்துவத் தொகுதியாகிய ஆஸிரிஸ், ஐஸிஸ், ஹோரஸையும் நாம் காண்கிறோம்; . . . கடவுள் திரித்துவமாகக் கருதப்படுவதைச் சரித்திரப் பூர்வ மதங்களில் மாத்திரமே நாம் காண்பதில்லை. முக்கியமாய் உன்னதமான அல்லது கடைநிலை மெய்ம்மையைப்பற்றிய நியோ-பிளேட்டோனிய கருத்துக்கள் ஒருவருடைய நினைவுக்கு வருகிறது,” அது “மும்மூர்த்தியாகக் குறித்துக்காட்டப்பட்டிருக்கிறது.” கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோவுக்குத் திரித்துவத்தோடு சம்பந்தம் என்ன?
பிளேட்டோனிய கோட்பாடு
பிளேட்டோ, கிறிஸ்துவுக்கு முன் 428-லிருந்து 347 வரையில் வாழ்ந்தானென எண்ணப்படுகிறது. அவன் திரித்துவத்தை அதன் தற்போதைய முறையிலுள்ளபடி கற்பிக்காவிடினும், அவனுடைய தத்துவங்கள் அதற்கு வழியைத் தயார் செய்தன. பின்னால், மூவரொருவர் நம்பிக்கைகள் உட்பட்ட தத்துவ இயக்கங்கள் தோன்றின, இவை கடவுளையும் இயற்கையையும் பற்றி பிளேட்டோ கொண்டிருந்த அபிப்பிராயங்களால் செல்வாக்குச் செலுத்தப்பட்டன.
ஃபிரெஞ்ச் மொழியில் எல்லாமடங்கிய புதிய அகராதி என்ற பொருள்கொண்ட தலைப்பையுடைய அகராதி பிளேட்டோவின் செல்வாக்கைப்பற்றிப் பின்வருமாறு சொல்லுகிறது: “பிளேட்டோனிய திரித்துவம், அதுதானேயும், முன்னால் மிகப் பூர்வகாலத்துக்குச் செல்லும் அதற்கும் பழமையான திரித்துவங்களின் வெறும் திரும்பச் சரிசெய்யப்பட்ட ஒழுங்காயிருக்க, கிறிஸ்தவ சர்ச்சுகள் கற்பித்துள்ள மூன்று திரித்துவ ஆட்களை அல்லது தெய்வீக ஆட்களைப் பிறப்பித்த ஆராய்ச்சிக்குப் பொருந்தாத தத்துவ ஞானத்துக்குரிய திரித்துவ இயல்பண்புகளாகும். . . . தெய்வீகத் திரித்துவத்தைப்பற்றிய இந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் கருத்து . . . பூர்வ [புற] மதங்கள் எல்லாவற்றிலும் காணப்படக்கூடும்.”
மத அறிவின் புதிய ஸ்காஃப்-ஹெர்ஸாக் என்ஸைக்ளோபீடியா (The New Schaff-Herzog Encyclopedia of Religious Knowledge)என்ற மத அறிவுக்குரிய கலைக்களஞ்சியத்தில் இந்தக் கிரேக்கத் தத்துவத்தின் செல்வாக்குக் காட்டப்பட்டிருக்கிறது: “லோகாஸையும் திரித்துவத்தையும் பற்றிய கோட்பாடுகள் தங்கள் உருவைக் கிரேக்கப் பிதாக்களிடமிருந்து பெற்றன, இவர்கள் . . . பிளேட்டோனிய தத்துவத்தால், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வெகுவாய்ச் செல்வாக்குச் செலுத்தப்பட்டனர் . . . இந்தத் தோற்றுமூலத்திலிருந்து பிழைகளும் சீர்கேடுகளும் சர்ச்சுக்குள் மெல்லப் புகுந்ததென்பதை மறுதலிக்க முடியாது.”
முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற ஆங்கில புத்தகம் சொல்வதாவது: “இந்தத் திரித்துவக் கோட்பாடு படிப்படியாயும் மற்றவற்றோடு ஒப்பிட பிந்தியும் உருவானதாகும்; . . . இது யூத மற்றும் கிறிஸ்தவ வேத எழுத்துக்களுக்கு முற்றிலும் புறம்பான ஒரு தோற்றுமூலத்தில் அதன் தொடக்கத்தைக் கொண்டிருந்தது; . . . இது வளர்ச்சியடைந்து, பிளோட்டோனிய மதத் தத்துவப் பிதாக்களின் மூலம் கிறிஸ்தவத்துக்குள் பொருந்தவைக்கப்பட்டது.”
பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் முடிவுக்குள், “கிறிஸ்தவமும்” இந்தப் புதிய பிளேட்டோனிய தத்துவங்களும் பிரிக்கமுடியாதவண்ணம் இணைக்கப்பட்டவையாயின. கோட்பாட்டு சரித்திரத்தின் சுருக்கக் குறிப்புகள் என்ற ஆங்கில புத்தகத்தில் அடால்ஃப் ஹார்னக் கூறுகிறபடி, சர்ச் கோட்பாடு “ஹெலனிஸத்தின் [புறமத கிரேக்க எண்ணத்தின்] மண்ணில் உறுதியாய் வேரூன்றப்பட்ட”தாகிவிட்டது. இதன்விளைவாகக் கிறிஸ்தவர்களின் மிகப் பெரும்பான்மையருக்கு அது விளங்கா மர்மமாகிவிட்டது.”
அதன் புதிய கோட்பாடுகள் பைபிளில் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்டவையென சர்ச் உரிமைபாராட்டினது. ஆனால் ஹார்னக் கூறுவதாவது: “உண்மையில் அது அதன் மத்தியில் ஹெலனிய யூகக் கோட்பாட்டெண்ணங்களையும், குருட்டு நம்பிக்கைக்குரிய கருத்துக்களையும், புறமத மர்ம-வணக்கப் பழக்கவழக்கங்களையும் சட்டப்படி ஏற்புடையதாக்கியிருக்கிறது.”
காரணங்களின் விவர அறிவிப்பு என்ற ஆங்கில புத்தகத்தில்
ஆண்ட்ரூஸ் நார்டன் திரித்துவத்தைப்பற்றிப் பின்வருமாறு சொல்கிறார்: “இந்தக் கோட்பாட்டின் சரித்திரத்தை நாம் தடம் பின்பற்றி ஆராய்ந்து, அதன் தோற்றுமூலத்தை, கிறிஸ்தவ வெளிப்படுத்தலில் அல்ல, ஆனால் பிளேட்டோனிய தத்துவத்தில் கண்டுபிடிக்கலாம் . . . திரித்துவம் கிறிஸ்துவின் மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் கோட்பாடல்ல, பின்னால் பிளேட்டோவைப் பின்பற்றினோருடைய கற்பனைக் கருத்தேயாகும்.”இவ்வாறு, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் முன்னறிவித்த விசுவாசத் துரோகம் பொ.ச. நான்காம் நூற்றாண்டில் அதன் முழுநிறைவுக்கு வந்தது. திரித்துவத்தின் வளர்ச்சி இதன் ஓர் அத்தாட்சியேயாகும். விசுவாசத் துரோகச் சர்ச்சுகள், நரக அக்கினி, ஆத்துமா அழியாமை, உருவச் சிலை வணக்கம் போன்ற மற்றப் புறமத எண்ணங்களையும் ஏற்கத் தொடங்கினர். ஆவிக்குரியப் பிரகாரமாய்ச் சொன்னால், கிறிஸ்தவமண்டலம், பெருகிக்கொண்டேபோகும் பாதிரி வகுப்பான “அக்கிரம மனுஷனால்” ஆதிக்கம் செலுத்தப்பட்டு, அதன் முன்னறிவிக்கப்பட்ட இருள் சகாப்தங்களுக்குள் பிரவேசித்துவிட்டது.—2 தெசலோனிக்கேயர் 2:3, 7, தி.மொ.
கடவுளுடைய தீர்க்கதரிசிகள் ஏன் அதைக் கற்பிக்கவில்லை?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் ஒருவருமே ஏன் அவருடைய ஜனங்களுக்குத் திரித்துவத்தைப்பற்றிக் கற்பிக்கவில்லை? பிந்திய காலத்திலாவது, இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குத் திரித்துவத்தைத் தெளிவாக்க பெரிய போதகராக தம்முடைய திறமையைப் பயன்படுத்தியிருக்கலாமல்லவா? திரித்துவம் விசுவாசத்தின் “மையக் கோட்பாடு” என்றால், வேத எழுத்துக்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கடவுள் ஏவி, எனினும் இந்தத் திரித்துவத்தைக் கற்பிக்க இந்தப் போதனையில் எதையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவாரா?
கிறிஸ்துவுக்கும் மற்றும் பைபிள் எழுதப்படுவதை ஏவிமுடித்ததற்கும் பல நூற்றுண்டுகளுக்குப் பின், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தம்முடைய ஊழியருக்கு அறியப்படாதிருந்த ஒரு கோட்பாட்டை, “புரியாத மர்மமான” “மனித பகுத்தறிவுக்கு எட்டாத” ஒன்றை, புறமத பின்னணியுடையதென ஒப்புக்கொள்ளப்பட்டதும் “பெரும்பாலும் சர்ச்சுக்குள்ளே இருந்த கட்சிப் பிரிவினைகளால் தீர்மானிக்கப்பட்ட ஒரு காரியமாயிருந்தது”மான ஒன்றைக் உருவாக்கியமைப்பதைக் கடவுள் ஆதரிப்பாரென கிறிஸ்தவர்கள் நம்பவேண்டுமா?
சரித்திரத்தின் அத்தாட்சி தெளிவாயிருக்கிறது: திரித்துவப் போதகம் சத்தியத்திலிருந்து விலகுதலும், அதிலிருந்து வழுவி விசுவாசத்துரோகம் செய்தலும் ஆகும்.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
‘நான்காம் நூற்றாண்டு திரித்துவக் கோட்பாடு பூர்வ கிறிஸ்தவ போதகத்திலிருந்து விலகிப் போதலேயாகும்.’—தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா
[பக்கம் 9-ன் பெட்டி]
அந்த முதன்மையான தெய்வங்களின் மும்மை”
கிறிஸ்துவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன், பூர்வ பாபிலோனியாவிலும் அசீரியாவிலும் தெய்வங்களின் மும்மைகள், அல்லது திரித்துவங்கள் இருந்தன. ஃபிரெஞ்ச் “லரோசி என்ஸைக்ளோபீடியா ஆஃப் மித்தாலஜி” அந்த மெசொப்பொத்தாமிய நிலப் பகுதியில் இருந்த அத்தகைய மும்மை ஒன்றைக் குறிப்பிடுகிறது: “இந்தச் சர்வலோகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, அவற்றின் ஒவ்வொன்றும் ஒரு கடவுளின் ஆட்சி எல்லையாயிற்று. வானம் அனுவின் பங்கானது. பூமி எனில்லுக்குக் கொடுக்கப்பட்டது. இயா தண்ணீர்களை ஆளுபவனானான். ஒன்றுசேர்ந்து அவர்கள் அந்த முதன்மையான தெய்வங்களின் மும்மையாக அமைந்தார்கள்.”
[பக்கம் 12-ன் பெட்டி]
இந்து திரித்துவம்
“இந்து தெய்வங்களின் மற்றும் சடங்குமுறைகளின் குறியீட்டமர்வுகள்,” என்ற ஆங்கில புத்தகத்தில், கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்த ஓர் இந்து திரித்துவத்தைக் குறித்துப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சிவன் திரித்துவத்தின் தெய்வங்களில் ஒருவன். அவன் அழிக்கும் தெய்வமென சொல்லியிருக்கிறது. மற்ற இரு தெய்வங்கள் பிரம்மன், சிருஷ்டிக்கும் தெய்வம், விஷ்ணு, காப்பாற்றும் தெய்வம். . . . இந்த மூன்று செயல்பாங்குகளும் ஒன்றே என குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே அந்த மூன்று தெய்வங்களும் ஒரே உருவில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.”—A. பார்த்தசாரதி என்பவரால் பிரசுரிக்கப்பட்டது, பம்பாய்.
[பக்கம் 8-ன் படம்]
“கிரேக்க இறையியலில் கேட்கப்பட்ட கேள்விகளைக் குறித்து கான்ஸ்டன்டீனுக்கு அடிப்படையாய் ஒன்றுமே விளங்கவில்லை.”—கிறிஸ்தவ கோட்பாட்டின் ஒரு சுருக்கச் சரித்திரம்
[பக்கம் 10-ன் படங்கள்]
1. எகிப்து. ஹோரஸ், ஆஸிரிஸ், ஐஸிஸ் திரித்துவம், பொ.ச.மு. 2-வது ஆயிரம்
2. பாபிலோன். இஷ்டார், சின், ஷாமாஷ் திரித்துவம், பொ.ச.மு. 2-வது ஆயிரம்
3. பல்மைரா. சந்திரக் கடவுள், வானுலக ஆண்டவன், சூரியக் கடவுள் திரித்துவம், ஏறக்குறைய பொ.ச. முதல் நூற்றாண்டு
4. இந்தியா. இந்து மும்மூர்த்தி தெய்வம், ஏறக்குறைய பொ.ச. 7-வது நூற்றாண்டு
5. கம்ப்பூச்சியா. புத்தத் திரித்துவத் தெய்வம், ஏறக்குறைய பொ.ச. 12-வது நூற்றாண்டு
6. நார்வே. திரித்துவம் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி), ஏறக்குறைய பொ.ச. 13-வது நூற்றாண்டு
7. ஃபிரான்ஸ். திரித்துவம், ஏறக்குறைய பொ.ச. 14-வது நூற்றாண்டு
8. இத்தாலி. திரித்துவம், ஏறக்குறைய பொ.ச. 15-வது நூற்றாண்டு
9. ஜெர்மனி. திரித்துவம், ஏறக்குறைய பொ.ச. 19-வது நூற்றாண்டு
10. ஜெர்மனி. திரித்துவம், 20-வது நூற்றாண்டு