நீங்கள் இதை நம்பவேண்டுமா?
நீங்கள் இதை நம்பவேண்டுமா?
ஆட்கள் தாங்கள் திரித்துவத்தை நம்புவதாக அடிக்கடி சொல்கின்றனர், எனினும் அதைப் புரிந்துகொள்வதில் அவர்கள் வேறுபடுகின்றனர்.
உண்மையில், திரித்துவம் என்பதென்ன?
பைபிள் இதைக் கற்பிக்கிறதா?
இயேசு கிறிஸ்து சர்வவல்லமையுள்ள கடவுளும் திரித்துவத்தின் பாகமுமானவரா?
திரித்துவத்தை நீங்கள் நம்புகிறீர்களா? கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பான்மையர் நம்புகின்றனர். எவ்வாறாயினும், இது சர்ச்சுகளின் மையக் கோட்பாடாகப் பல நூற்றாண்டுகள் இருந்துவருகிறது.
இதனால், அதைப்பற்றி எவ்விதச் சந்தேகமும் இருக்க முடியாதென நீங்கள் நினைக்கலாம். ஆனால் சந்தேகமுண்டு, மேலும் சமீபத்தில் அதன் ஆதரவாளருங்கூட இந்தக் கருத்து மாறுபாட்டுக்கு ஆதரவாக மேலும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றனர்.
இதைப்போன்ற ஒரு பொருள் ஏன் கண்டும் கவனியாமற் விடுவதற்குரிய ஒன்றல்ல? ஏனெனில் இயேசுதாமே பின்வருமாறு கூறினார்: “நித்திய ஜீவன் இதுவே: ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவரான இயேசு கிறிஸ்துவையும் அறிவதே.” ஆகவே கடவுளின் உண்மையான இயல்பை அறிவதன்பேரில் நம்முடைய முழு எதிர்காலமும் தீர்வாய்ச் சார்ந்திருக்கிறது. இது இந்தத் திரித்துவ கருத்து மாறுபாட்டின் மூலகாரணத்தைக் கண்டாராய்வதைக் குறிக்கிறது. ஆகையால், நீங்கள்தாமே இதை ஆராயலாமல்லவா?—யோவான் 17:3, கத்தோலிக் ஜெருசலெம் பைபிள் (JB)
பல்வேறு திரித்துவ கருத்துகள் இருந்துவருகின்றன. ஆனால் பொதுவாக கடவுள்-தன்மையில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆட்கள் இருக்கின்றனர்; எனினும், ஒன்றாக அவர்கள் ஒரே கடவுளே என்பது திரித்துவ போதகம். அந்த மூவரும் சமமானவர்கள், சர்வவல்லவர்கள், சிருஷ்டிக்கப்படாதவர்கள், தெய்வத்-தன்மையில் நித்தியமாய் இருந்துவருபவர்கள் என்று இந்தக் கோட்பாடு சொல்லுகிறது.
எனினும், மற்றவர்கள், திரித்துவ கோட்பாடு பொய் எனவும், சர்வவல்லமையுள்ள கடவுள் தனித்தவரும், நித்தியரும், சர்வ-சக்தியுள்ளவருமாய்த் தனித்து நிற்கிறார் எனவும் சொல்லுகின்றனர். இயேசு தாம் மனிதனாவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையில், தூதர்களைப்போல், கடவுள் சிருஷ்டித்த ஒரு தனி ஆவி ஆளாக இருந்தார், மேலும் இந்தக் காரணத்தினால் அவருக்கு ஒரு தொடக்கம் இருந்திருக்கவேண்டும் என இவர்கள் சொல்லுகின்றனர். இயேசு எந்தக் கருத்திலும் சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமாக ஒருபோதும் இல்லை; அவர் எப்பொழுதும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்தார் இன்னும் அவ்வாறே இருக்கிறாரென இவர்கள் கற்பிக்கின்றனர். மேலும் பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல ஆனால் கடவுளுடைய ஆவி, அவருடைய செயல்நடப்பிக்கும் சக்தியே எனவும் இவர்கள் நம்புகின்றனர்.
திரித்துவம் மதப் பாரம்பரியத்தில் மட்டுமல்ல பைபிளிலும் ஆதாரங்கொண்டிருக்கிறதென திரித்துவத்தை ஆதரிப்போர் சொல்லுகின்றனர். இந்தக் கோட்பாட்டைக் குற்றங்கண்டுபிடிப்போர், இது பைபிள் போதகமல்ல என்கின்றனர். “[திரித்துவம்] முழுமையாய்ப் புறமதத்திலேயே தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது” என்றும் ஒரு சரித்திர மூலாதாரம் சொல்லுகிறது.—நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமத நம்பிக்கைகள் (The Paganism in Our Christianity).
திரித்துவம் உண்மையெனில், இயேசு தாம் கடவுளின் பாகமாக கடவுளுக்குச் சமமாக ஒருபோதும் இல்லையென சொல்வது அவருக்கு மதிப்புக் கேடாயிருக்கும். ஆனால் திரித்துவம் பொய்யெனில், சர்வவல்லமையுள்ள கடவுள் எவரையாவது தமக்குச் சமமானவராக அழைப்பது, இன்னும் மோசமாக மரியாளை “தெய்வத்தின் தாய்” என அழைப்பது அவருக்கு அவமதிப்புண்டாக்கும். திரித்துவம் பொய்யெனில், கத்தோலிக்க மதம் (Catholicism) என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டபடி சொல்வது கடவுளை அவமதிப்பதாய் இருக்கும்: “[ஜனங்கள்] இந்த விசுவாசத்தை முழுமையாயும் தூய்மைக்கெடாத வண்ணமும் கடைப்பிடித்தால்தவிர, சந்தேகமில்லாமல் [அவர்கள்] நித்தியமாய் அழிந்துபோவார்கள். மேலும் கத்தோலிக்க விசுவாசம் இதுவே: நாம் ஒரே கடவுளை திரித்துவத்தில் வணங்குகிறோம்.”
அப்படியானால், திரித்துவத்தைப்பற்றிய உண்மையை அறிய நீங்கள் ஏன் விரும்பவேண்டுமென்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் தொடக்கத்தையும் சத்தியமென்னும் அதன் உரிமைபாராட்டுதலையும் சோதித்தாராய்வதற்கு முன்னால், இந்தக் கோட்பாட்டை மேலுமதிகத் திட்டவட்டமாய் விரித்துரைப்பது உதவியாயிருக்கும். திரித்துவம் என்பது உண்மையில் என்ன? அதை ஆதரிப்போர் எவ்வாறு அதை விளக்குகின்றனர்?
மொழிபயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை
[பக்கம் 2-ன் படங்கள்]
இடதுபுறம்: ராம்ஸீஸ் II, அம்மன்-ரா, மற்றும் நட்-டின் திரித்துவம் (பொ.ச.மு.) இரண்டாவது ஆயிர ஆண்டுகளின் எகிப்திய சிற்ப வேலை. வலதுபுறம்: இயேசு கிறிஸ்து, பிதா, மற்றும் பரிசுத்த ஆவியின் திரித்துவ சிற்ப வேலை, (பொ.ச.) பதிநான்காம் நூற்றாண்டுக்குரியது. மூன்று ஆட்கள், ஆனால் நான்கு கால்கள் மட்டுமே இருப்பதைக் கவனிக்கவும்.