பரிசுத்த ஆவி—கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி
பரிசுத்த ஆவி—கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி
திரித்துவ கோட்பாட்டின் பிரகாரம், பரிசுத்த ஆவி கடவுளிலுள்ள மூன்றாவது ஆள், பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர். நம்முடைய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ விசுவாசம் என்ற ஆங்கில புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி: “பரிசுத்த ஆவி முற்றிலும் கடவுள்.”
எபிரெய வேத எழுத்துக்களில், “ஆவி” என்பதற்கு மிக அடிக்கடி பயன்படுத்தியுள்ள சொல் ரூஅக் ஆகும், இதன் பொருள் “மூச்சு; காற்று; ஆவி,” என்பதே. கிரேக்க வேத எழுத்துக்களில், இந்தச் சொல் ப்னியூமா என்பதாகும், அதே பொருளுடையது. இந்தச் சொற்கள் பரிசுத்த ஆவி திரித்துவத்தின் பாகமென குறிப்பிட்டுக் காட்டுகின்றனவா?
செயல் நடப்பிக்கும் சக்தி
பைபிள் “பரிசுத்த ஆவி” என்ற பதத்தை பயன்படுத்தும் முறை, அது, யெகோவா தேவன் தம்முடைய பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வல்லமையெனக் காட்டுகிறது. ஓரளவுக்கு இதை, மிகப் பல்வேறு செயல்வகைகளை நடப்பிக்கும்படி தக்கவாறு மாற்றியமைக்கக்கூடிய மின்சாரத்துக்கு ஒப்பிடலாம்.
பைபிளில், ஆதியாகமம் 1:2-ல் “கடவுளின் ஆவியோ [“செயல் நடப்பிக்கும் சக்தி,” (எபிரெயுவில், ரூஅக்)] தண்ணீர்மீது அசைவாடிக்கொண்டிருந்தது,” (தி.மொ.) என்று சொல்லியிருக்கிறது. இங்கே, கடவுளுடைய ஆவி பூமியை உருப்படுத்தியமைக்க வேலைசெய்துகொண்டிருந்த அவருடைய செயல் நடப்பிக்கும் சக்தியேயாகும்.
கடவுள் தம்மைச் சேவிப்போருக்குக் கற்பித்து அறிவொளியூட்ட தம்முடைய ஆவியைப் பயன்படுத்துகிறார். தாவீது பின்வருமாறு ஜெபித்தான்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்; நீரே என் கடவுள்; உமது நல்ல ஆவி [ரூஅக்] என்னைச் செம்மையான இடத்தில் நடத்துவதாக.” (சங்கீதம் 143:10, தி.மொ.) மோசேக்கு உதவிசெய்ய திறமைவாய்ந்த 70 ஆண்கள் நியமிக்கப்பட்டபோது, கடவுள் அவனிடம் பின்வருமாறு சொன்னார்: “உன்மேல் இருக்கிற ஆவியைப் [ரூஅக்] பகிர்ந்து அவர்கள்மேலும் வைப்பேன்.”—எண்ணாகமம் 11:17, தி.மொ.
கடவுளுடைய மனிதர் “பரிசுத்த ஆவியினாலே [கிரேக்கில், ப்னியூமா] ஏவப்பட்டுப் பேசி”னபோது பைபிள் தீர்க்கதரிசனம் பதிவுசெய்யப்பட்டது. (2 பேதுரு 1:20, 21) இம்முறையில் பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [ஏவப்பட்டது],” இதற்குக் கிரேக்கச் சொல் தியோப்னியுஸ்டாஸ், இதன் பொருள் “கடவுள்-ஊதினார்” என்பதே. (2 தீமோத்தேயு 3:16) மேலும் தரிசனங்களைக் காண அல்லது தீர்க்கதரிசன சொப்பனங்களைப் பெறும்படி பரிசுத்த ஆவி சில ஆட்களை வழிநடத்தினது.—2 சாமுவேல் 23:2; யோவேல் 2:28, 29; லூக்கா 1:67; அப்போஸ்தலர் 1:16; 2:32, 33.
இயேசுவின் முழுக்காட்டுதலுக்குப் பின் வனாந்தரத்துக்குச் செல்லும்படி பரிசுத்த ஆவி அவரைத் தூண்டியது. (மாற்கு 1:12) கடவுளுடைய ஊழியருக்குள் இந்த ஆவி தீயைப்போல் இருந்தது, இந்தச் சக்தி அவர்களை ஊக்கமூட்டி பலப்படுத்தியது. இது அவர்கள் பயமில்லாமல் தைரியமாய் வெளியிட்டுப் பேசும்படி செய்வித்தது.—மீகா 3:8; அப்போஸ்தலர் 7:55-60; 18:25; ரோமர் 12:11; 1 தெசலோனிக்கேயர் 5:19.
ஏசாயா 30:27, 28; 59:18, 19) மேலும் கடவுளுடைய ஆவி எல்லா இடங்களையும் எட்டி, ஆட்களின் சார்பாக அல்லது எதிராகச் செயல்பட முடியும்.—சங்கீதம் 139:7-12.
கடவுள் தம்முடைய ஆவியைக்கொண்டு, மனிதர்மீதும் தேசங்களின்மீதும் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுகிறார். (‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமை’
“இயல்பானதற்கு அப்பாற்பட்ட வல்லமை”யையும் கடவுளுடைய ஆவி கடவுளைச் சேவிப்போருக்கு அருளமுடியும். (2 கொரிந்தியர் 4:7, NW) இது விசுவாசக் கடுஞ்சோதனைகளைச் சகித்து நிலைத்திருக்க அல்லது தாங்கள் மற்றப்படி செய்யமுடியாதக் காரியங்களை அவர்கள் செய்ய இயலும்படி செய்கிறது.
உதாரணமாக, சிம்சோனைக் குறித்து, நியாயாதிபதிகள் 14:6-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “யாவேயின் ஆவி அவன்மேல் வல்லமையோடு இறங்கினது, அவன் தன் கையில் ஆயுதம் வைத்திராதபோதிலும் அந்தச் சிங்கத்தைத் துண்டுகளாகக் கிழித்துப்போட்டான்.” (JB) ஒரு தெய்வீக ஆளே சிம்சோனில் உண்மையில் நுழைந்து அல்லது இறங்கி, அவன் செய்ததைச் செய்ய அவனுடைய உடலைக் கையாண்டாரா? இல்லை, உண்மையில் “கர்த்தரின் வல்லமை[யே] சிம்சோனைப் பலப்படுத்தியது.”—TEV.
இயேசு முழுக்காட்டப்பட்டபோது, பரிசுத்த ஆவி, மனித உருவைப்போல் அல்ல, புறாவைப்போல் தோன்றி அவர்மீது இறங்கினதென பைபிளில் சொல்லியிருக்கிறது. (மாற்கு 1:10) கடவுளின் செயல் நடப்பிக்கும் இந்தச் சக்தி, இயேசு நோயுற்றோரைச் சுகப்படுத்தவும் மரித்தோரை உயிர்த்தெழுப்பவும் கூடும்படி செய்தது. லூக்கா 5:17-ல் சொல்லியுள்ளபடி: “கர்த்தரின் [கடவுளின்] வல்லமை அவருடைய [இயேசுவின்] சுகப்படுத்தும் செயல்களுக்குப் பின்னாலிருந்தது.”—JB.
மேலும் கடவுளுடைய ஆவி, அற்புதமான காரியங்களைச் செய்யும்படி இயேசுவின் சீஷர்களுக்கும் வல்லமையளித்தது. பெந்தெகொஸ்தே அன்று சீஷர்கள் ஒன்றாய்க் கூடிவந்திருந்தபோது “வேகமாய் அடிக்கிற பலத்த காற்றுபோல் வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி . . . அவர்கள் . . . யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; தாங்கள் வசனிக்கும்படி ஆவியருளியவாறே இதர பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்,” என்று அப்போஸ்தலர் 2:1-4-ல் கூறியிருக்கிறது.
ஆகையால் மனிதர் சாதாரணமாய்ச் செய்ய முடியாததைச் செய்யும்படி பரிசுத்த ஆவி இயேசுவுக்கும் கடவுளின் மற்ற ஊழியருக்கும் வல்லமையளித்தது.
ஆள் அல்ல
எனினும், ஆளைக் குறிப்பிடும் சொற்களில் பரிசுத்த ஆவியைப்பற்றிப் பேசியிருக்கும் பைபிள் வசனங்கள் இருக்கின்றனவல்லவா? ஆம், ஆனால் மூவரொருவரான கடவுள் என்ற ஆங்கில புத்தகத்தில் கத்தோலிக்க இறையியல் வல்லுநர் எட்மண்ட் ஃபோர்ட்மன் சொல்வதைக் கவனியுங்கள்: “ஆளைக் குறிப்பிடும் சொற்களில் இந்த ஆவி அடிக்கடி விவரிக்கப்படுகிறபோதிலும், [எபிரெய வேத எழுத்துக்களின்] பரிசுத்த எழுத்தாளர் இந்த ஆவியைத் தனி ஆளாக ஒருபோதும் எண்ணவோ குறித்துக்காட்டவோ இல்லையென்பது மிகத் தெளிவாயிருப்பதாகத் தோன்றுகிறது.”
வேத எழுத்துக்களில் எதையாவது ஆளுருவாக்கிப் பேசுவது அசாதாரணமல்ல. ஞானம் பிள்ளைகளைக் கொண்டிருக்கிறதென சொல்லியிருக்கிறது. (லூக்கா 7:35) பாவமும் மரணமும் அரசர்களென அழைக்கப்படுகின்றன. (ரோமர் 5:14, 21) ஆதியாகமம் 4:7-ல் புதிய ஆங்கில பைபிள் (NE): “பாவம் வாசலில் பதுங்கிக்கொண்டிருக்கும் பேய்” என்று சொல்லுகிறது. பாவத்தைக் காயீனின் வாசலில் பதுங்கிக்கொண்டிருக்கும் பொல்லாத ஆவியென ஆளுருவாக்கிக் காட்டுகிறது. ஆனால், நிச்சயமாகவே, பாவம் ஓர் ஆவி ஆளல்ல; பரிசுத்த ஆவியை ஆளுருவாக்குவதும் அதை ஓர் ஆவி ஆளாக்குவதில்லை.
1 யோவான் 5:6-8-ல் (NE) ஆவி மட்டுமேயல்ல “நீரும், இரத்தமும்” “சாட்சிகளாக” இருக்கின்றன எனவும் சொல்லியிருக்கிறது. ஆனால் நீரும் இரத்தமும் தெளிவாகவே ஆட்களல்ல, பரிசுத்த ஆவியும் ஓர் ஆளல்ல.
அவ்வாறே,“பரிசுத்த ஆவியை” ஜலத்துடனும் அக்கினியுடனும் இணைவாக்கியிருப்பதைப்போன்று, ஆளைக்குறிக்காத முறையில் பைபிள் அதைப் பொதுவாய்ப் பயன்படுத்துவது இதற்கு ஒத்திசைவாய் இருக்கிறது. (மத்தேயு 3:11; மாற்கு 1:8) திராட்ச மதுபானத்துக்குப் பதில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களாகும்படி ஆட்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். (எபேசியர் 5:18) அவர்கள் ஞானம், விசுவாசம், சந்தோஷம் ஆகியவற்றைப்போன்ற பண்புகளால் நிரப்பப்படுவதைப்போன்றே பரிசுத்த ஆவியிலும் நிரப்பப்படுவதாகப் பேசப்படுகின்றனர். (அப்போஸ்தலர் 6:3; 11:24; 13:52) மேலும் 2 கொரிந்தியர் 6:6-ல் பல பண்புகளோடுகூட பரிசுத்த ஆவியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவி உண்மையில் ஓர் ஆளாயிருந்தால் இத்தகைய சொல்லமைப்புகள் அவ்வளவு சாதாரணமாயிரா.
பின்னும், ஆவி பேசுகிறதென பைபிள் வசனங்கள் சில சொல்கையில், அது உண்மையில் மனிதரின் அல்லது தூதரின் மூலம் பேசப்பட்டதென மற்ற வசனங்கள் காட்டுகின்றன. (மத்தேயு 10:19, 20; அப்போஸ்தலர் 4:24, 25; 28:27b; எபிரெயர் 2:2) இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆவியின் செயல், வானொலி அலைகள் செய்திகளை ஒருவரிடமிருந்து தூரத்திலுள்ள மற்றொருவருக்கு அனுப்புவதுபோலிருக்கிறது.
மத்தேயு 28:19-ல் “பரிசுத்த ஆவியின் நாமத்திலே” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் “நாமம்” அல்லது பெயர், கிரேக்கிலாயினும் ஆங்கிலத்திலாயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் தனி ஆளின் பெயரைக் குறிக்கிறதில்லை. “சட்டத்தின் பெயரில்,” என்று சொல்கையில் நாம் ஓர் ஆளைக் குறிக்கிறதில்லை. சட்டம் குறித்து நிற்கிறதை, அதன் அதிகாரத்தையே நாம் கருதுகிறோம். ராபர்ட்ஸனின் புதிய ஏற்பாட்டில் சொல் விளக்க வருணிப்புகள் என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இங்கே பெயரின் (onoma, ஓனோமா) உபயோகம் செப்டுவஜின்ட்டிலும் பப்பைரியிலும் வல்லமைக்கு அல்லது அதிகாரத்துக்குப் பொதுவாய்ப் பயன்படுத்தும் ஒன்றே.” ஆகையால் ‘பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ முழுக்காட்டுதல், ஆவியின் அதிகாரத்துவத்தை, அதாவது, அது கடவுளிடமிருந்து வருகிறது மேலும் தெய்வீகச் சித்தத்தின்படி செயலாற்றுகிறது என்பதைத் தெரிந்து ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது.
“சகாயர்”
இயேசு பரிசுத்த ஆவியைச் “சகாயர்” (தி.மொ.) எனக் குறிப்பிட்டுப் பேசி, அது போதிக்கும், வழிநடத்தும், பேசும் எனக் கூறினார். (யோவான் 14:16, 26; 16:13) சகாயர் என்பதற்கு அவர் பயன்படுத்தின கிரேக்கச் சொல் பாரக்ளிட்டாஸ் ஆண்பாலில் இருக்கிறது. ஆகையால் சகாயர் செய்யப்போவதை இயேசு குறிப்பிட்டபோது, அவர் ஆண்பால் சுட்டுப் பெயர்களைப் பயன்படுத்தினார். (யோவான் 16:7, 8) மற்றப்படி, ஆவி என்பதற்கு அஃறிணை கிரேக்கச் சொல் (ப்னியூமா) பயன்படுத்தியிருக்கையில், அஃறிணை சுட்டுப் பெயர் “அது” சரியாகவே பயன்படுத்தியிருக்கிறது.
திரித்துவக் கோட்பாட்டாளரான மொழிபெயர்ப்பாளர் பெரும்பான்மையர் இந்த உண்மையை மறைக்கின்றனர், யோவான் 14:17-ஐக் குறித்து கத்தோலிக்க புதிய அமெரிக்கன் பைபிள் (ஆங்கிலம்) பின்வருமாறு ஒப்புக்கொள்கிறபடி: ‘ஆவி’ என்பதற்கான கிரேக்கச் சொல் அஃறிணையில் இருக்கிறது, ஆங்கிலத்தில் ஆள் சுட்டுப் பெயர்களை (‘அவர்,’ ‘அவருடைய,’ ‘அவரை’) நாம் பயன்படுத்துகையில் பெரும்பான்மையான கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் (MSS) ‘அது’ என்பதைப் பயன்படுத்துகின்றன.”
ஆகையால் யோவான் 16:7, 8-ல் பாரக்ளிட்டாஸ் சம்பந்தமாக பைபிளில் ஆண்பால் ஆள் சுட்டுப் பெயர்கள் பயன்படுத்துகையில், அது கோட்பாட்டைத் தெரிவிப்பதில்லை, இலக்கண விதிகளுக்கு ஒத்திருக்கவே செய்கிறது.
திரித்துவத்தின் பாகமல்ல
பரிசுத்த ஆவி திரித்துவத்தின் மூன்றாவது ஆள் என்ற இந்த எண்ணத்தை பைபிள் ஆதரிக்கிறதில்லை என பல்வேறு ஆராய்ச்சிமூலங்கள் ஒப்புக்கொள்கின்றன. உதாரணமாக:
கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா: “பழைய ஏற்பாட்டில் ஓரிடத்திலும் ஒரு மூன்றாவது ஆளைப்பற்றிய தெளிவான குறிப்பு எதையும் நாம் காண்கிறதில்லை.”
கத்தோலிக்க இறையியல் வல்லுநர் ஃபோர்ட்மன்: “யூதர்கள் இந்த ஆவியை ஓர் ஆளாக ஒருபோதும் கருதவில்லை; பழைய ஏற்பாட்டின் எழுத்தாளர் எவராவது இந்தக் கருத்தைக் கொண்டிருந்தனரென்பதற்கும் எவ்விதத் திடமான அத்தாட்சியுமில்லை. . . . பரிசுத்த ஆவி பொதுவாய் சுவிசேஷங்களிலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் தெய்வீகச் சக்தி அல்லது வல்லமையாகக் காட்டப்பட்டிருக்கிறது.”
புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா: “தெளிவாக ப[ழைய] ஏ[ற்பாடு] கடவுளுடைய ஆவியை ஓர் ஆளாகக் கருதுகிறதில்லை. . . . கடவுளுடைய ஆவி வெறுமென கடவுளுடைய வல்லமையே. அது கடவுளிலிருந்து தனியாகச் சில சமயங்களில் குறிக்கப்பட்டிருந்தால், அது யாவேயின் மூச்சு வெளிப்புறமாகச் செயல்படுவதனாலாகும்.” அது மேலும் கூறுவதாவது: “பு[திய] ஏ[ற்பாட்டின்] பொரும்பான்மையான வசனங்கள் கடவுளுடைய ஆவியை ஒருவர் என்றல்ல, ஒன்று என்றே வெளிப்படுத்துகின்றன; இது கடவுளின் ஆவிக்கும் வல்லமைக்குமுள்ள இணைவுநிலையில் முக்கியமாய்க் காணப்படுகிறது.”—தடித்த எழுத்து எங்களுடையது.
ஒரு
கத்தோலிக்க அகராதி: “மொத்தத்தில், புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாட்டைப்போல், இந்த ஆவியைத் தெய்வீகச் சக்தி அல்லது வல்லமை என பேசுகிறது.”இவ்வாறு, யூதர்களோ பூர்வக் கிறிஸ்தவர்களோ பரிசுத்த ஆவியை திரித்துவத்தின் பாகமாகக் கருதவில்லை. இந்தப் போதகம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தது. ஒரு கத்தோலிக்க அகராதி குறிப்பிடுகிற பிரகாரம்: “இந்த மூன்றாவது ஆள் 362-ல் அலெக்ஸாந்திரியா ஆலோசனை சபையிலும் . . . முடிவில் 381-ன் கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனை சபையிலும் ஏற்று உறுதிசெய்யப்பட்டது.” இது பெந்தெகொஸ்தே அன்று பரிசுத்த ஆவி சீஷர்களை நிரப்பினதற்கு ஏறக்குறைய மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பின்னாகும்!
இல்லை, பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல ஒரு திரித்துவத்தின் பாகமுமல்ல. பரிசுத்த ஆவி, கடவுள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தும் அவருடைய செயல் நடப்பிக்கும் சக்தியே. அது கடவுளுக்குச் சமமாயில்லை அது எப்பொழுதும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையிலும் இருக்கிறது.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
“மொத்தத்தில், புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாட்டைப்போல், இந்த ஆவியைத் தெய்வீக சக்தி அல்லது வல்லமைஎன பேசுகிறது.”—ஒரு கத்தோலிக்க அகராதி
[பக்கம் 21-ன் படங்கள்]
ஒரு சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி புறாவைப்போல் தோன்றிற்று. மற்றொரு சந்தர்ப்பத்தில் அக்கினிமயமான நாவுகள்போல் தோன்றிற்று—ஒருபோதும் ஆளாக அல்ல