Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அர்மகெதோனுக்குப் பின்பு, ஒரு பரதீஸான பூமி

அர்மகெதோனுக்குப் பின்பு, ஒரு பரதீஸான பூமி

அதிகாரம் 19

அர்மகெதோனுக்குப் பின்பு, ஒரு பரதீஸான பூமி

“அர்மகெதோன்” என்பது பலருக்குத் திகிலுண்டாக்கும் சொல்லாக இருக்கிறது. உலகத் தலைவர்கள் இதை ஏற்படக்கூடிய மூன்றாம் உலகப் போரைக் குறிப்பிட அடிக்கடி பயன்படுத்துகின்றனர். என்றபோதிலும், பைபிள், அர்மகெதோனை, கடவுள் போரிடும் ஒரு நீதியுள்ள போருக்குரிய இடமாகப் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) கடவுளுடைய இந்தப் போர் நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்குக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

2 நல்லோரையும் தீயோரையும் ஒன்று போல் கொல்லும் மனிதரின் போரைப் போலிராமல், அர்மகெதோன் தீயோரை மாத்திரமே அழிக்கும். (சங்கீதம் 92:7) யெகோவா தேவனே நியாயாதிபதியாயிருப்பார், தம்முடைய நீதியுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படிய, வேண்டுமென்றே மறுக்கிற எவரையும் அவர் நீக்கிப் போடுவார். இன்று, வேசித்தனம், வெறிக்கக் குடித்தல், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் ஆகிய இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்ததில் தவறு எதுவும் இருப்பதாகப் பலர் காண்கிறதில்லை. ஆனால், கடவுளுடைய பார்வையில், இந்தக் காரியங்கள் தவறே. ஆகவே இவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறவர்களை அவர் அர்மகெதோனில் பாதுகாத்து வைக்கமாட்டார். (1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8) இப்படிப்பட்ட கெட்ட காரியங்களில் பழக்கமாய் ஈடுபட்டு வருகிற ஆட்கள், இந்தக் காரியங்களின் பேரில் கடவுளுடைய சட்டங்களை அறிகிறவர்களாய்த் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

3 அர்மகெதோனுக்குப் பின்பு இந்தப் பொல்லாத உலகத்தின் எந்தப் பாகமும் மீந்திராது. கடவுளைச் சேவிக்கிற ஆட்கள் மாத்திரமே தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். (1 யோவான் 2:17) இயேசு கிறிஸ்து இதை நோவாவின் நாளிலிருந்த நிலைமைக்கு ஒப்பிட்டார். (மத்தேயு 24:37-39; 2 பேதுரு 3:5-7, 13; 2:5) அர்மகெதோனுக்குப் பின்பு கடவுளுடைய ராஜ்யமே இந்தப் பூமியின்மேல் ஆளும் ஒரே அரசாங்கமாயிருக்கும். சாத்தானும் அவனுடைய பேய்களும் ஒழிந்து போய்விட்டிருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 20:1-3) கீழ்ப்படிதலுள்ள மக்கள் அனுபவித்து மகிழ்வார்கள் என்று பைபிள் தெரிவிக்கிற ஆசீர்வாதங்களில் சிலவற்றைப் பின்தொடரும் பக்கங்களில் கவனித்துப் பாருங்கள்.

மனிதவர்க்கத்தார் யாவரும் சமாதானமாயிருக்கின்றனர்

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் . . . சமாதானப்பிரபு எனப்படும் . . . அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7, தி.மொ.

“அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.”—சங்கீதம் 72:7, 8.

இனிமேலும் போர் கிடையாது

“யெகோவாவின் செயல்களை வந்து பாருங்கள்; அவர் பூமியிலே எவ்வளவு பயங்கரமானவைகளைச் செய்திருக்கிறார்! பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:8, 9, தி.மொ.

எல்லோருக்கும் நல்ல வீடுகளும் மகிழ்ந்து அனுபவிக்கக்கூடிய வேலையும்

“வீடுகளைக் கட்டி, குடியிருப்பார்கள் . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; . . . தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”—ஏசாயா 65:21-23, NW.

குற்றச்செயலும், வன்முறையும், பொல்லாங்கும் ஒழிந்துபோய்விட்டன

“பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; . . . இன்னுங் கொஞ்சநேரந்தான் அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.”—சங்கீதம் 37:9, 10.

“துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.

பூமி முழுவதும் ஒரு பரதீஸ்

“நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 23:43.

“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.

உண்பதற்கு எல்லோருக்கும் ஏராளமான நல்ல பொருட்கள்

“சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே கொழும் பதார்த்தங்களும் பழந்திராட்சரசமும் நிறைந்திருக்கும்; கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை.”—ஏசாயா 25:6, தி.மொ.

பூமியில், “மலையின் உச்சியிலும், திரள் தானியமிருக்கும்.” “பூமி தன் பலனைத் தந்தது; கடவுளாகிய எங்கள் கடவுளே எங்களை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 72:16; 67:6, தி.மொ.

4 முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட்ட அந்தத் தோட்டத்தைப் போன்ற அந்தப் பரதீஸான பூமியில் நிச்சயமாகவே நீங்கள் வாழ விரும்புவீர்கள். (ஆதியாகமம் 2:8; லூக்கா 23:43) இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்—போர், குற்றச்செயல் அல்லது வன்முறை இனிமேலுமிராது. நீங்கள் எங்கேயும் பகலிலாயினும் இரவிலாயினும் எந்த நேரத்திலும் தீங்கு செய்யப்படும் எவ்வித பயமுமில்லாமல் உலாவக்கூடியவர்களாக இருப்பீர்கள். பொல்லாதவர்கள் இனிமேலும் இரார்கள்.—சங்கீதம் 37:35-38.

5 மக்களை ஒடுக்க நேர்மையற்ற அரசியல்வாதிகளும் பேராசைக் கொண்ட வியாபாரத் தலைவர்களும் அங்கே இரார்கள் என்று இது அர்த்தப்படுகிறது. மேலும் இராணுவ போராயுதங்களுக்காக உயர்ந்த வரிகளைச் செலுத்தும்படியும் மக்கள் பாரஞ்சுமத்தப்பட மாட்டார்கள். இனி ஒருபோதும் எவரும், பணமில்லாததன் காரணமாக நல்ல உணவோ வசதியான வீடோ இல்லாமல் இரார். வேலையின்மை, பணவீக்கம், விலையுயர்வு ஆகியவை இனிமேலும் இருப்பதில்லை. இன்று குடும்பங்களுக்குத் துன்பத்தை உண்டுபண்ணும் தொல்லைகள் இனிமேலும் இருப்பதில்லை. செய்வதற்கு இன்பந்தரும் வேலையை எல்லோரும் உடையவர்களாயிருப்பார்கள், தங்கள் உழைப்புகளின் பலன்களைக் காணவும் அனுபவித்து மகிழவும் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

6 அர்மகெதோனைத் தப்பிப் பிழைக்கிறவர்கள், முதலாவதாக, இந்தப் பழைய ஒழுங்குமுறையின் பாழாக்கப்பட்டுக் கிடப்பவற்றையெல்லாம் நீக்கி இந்தப் பூமியைச் சுத்தம் செய்யும் வேலையை உடையவர்களாக இருப்பார்கள். பின்பு, ராஜ்ய ஆட்சியின் வழிநடத்துதலின் கீழ், இந்தப் பூமியைப் பண்படுத்தி, வாழ்வதற்கு ஓர் அழகிய இடமாக அதைச் செய்யும் சிலாக்கியம் அவர்களுக்கு இருக்கும். ஆ, அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி தரும் வேலையாக இருக்கும்! செய்யப்படும் எல்லாவற்றையும் கடவுள் ஆசீர்வதிப்பார். பயிர்களை விளைவிக்கவும், ஆடு மாடு முதலியவற்றை வளர்க்கவும் ஏற்ற வகையான தட்ப வெப்ப நிலையை அவர் அளித்து, அவை நோயினின்றும் தீங்கினின்றும் பாதுகாக்கப்படும்படி அவர் பார்த்துக் கொள்வார்.

7 பைபிளில் சங்கீதக்காரனின் மூலமாய்ப் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிற, அன்புள்ள சிருஷ்டிகரின் இந்த வாக்கு நிறைவேற்றப்படும்: “நீர் உம்முடைய கையைத் திறந்து உயிருள்ள ஒவ்வொன்றின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:16) ஆம், கடவுளுக்குப் பயப்படும் ஆட்களின் சரியான வாஞ்சைகள் யாவும் முழுமையாய்த் திருப்தியாக்கப்படும். பரதீஸான பூமியில் வாழ்க்கை எவ்வளவு அதிசயமாய் இருக்குமென்பதை நாம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பதற்கான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றி சொல்பவனாய், அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு எழுதினான்: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13; ஏசாயா 65:17; 66:22.

8 இந்தப் “புதிய வானங்கள்” யாவை? இவை இயற்கையான புதிய வானங்கள் அல்ல. தம்முடைய இயற்கையான வானங்களைக் கடவுள் பரிபூரணமாய் உண்டாக்கினார். அவை அவருக்கு மகிமையைக் கொண்டு வருகின்றன. (சங்கீதம் 8:3; 19:1, 2) இந்தப் “புதிய வானங்கள்” பூமியின் பேரில் ஆளப்போகும் ஒரு புதிய ஆட்சியைக் குறிக்கிறது. இப்பொழுதிருக்கிற “வானங்கள்” மனிதனால்—உண்டுபண்ணப்பட்ட அரசாங்கங்களாலாகியவை. அர்மகெதோனில் இவை அழிந்துபோகும். (2 பேதுரு 3:7) இவற்றினிடத்தை ஏற்கப்போகும் இந்தப் “புதிய வானங்கள்” கடவுளுடைய பரலோக அரசாங்கமாயிருக்கும். இயேசு கிறிஸ்துவே இதன் அரசாராக இருப்பார். என்றாலும் அவரை உண்மையுடன் பின்பற்றினவர்களாலாகிய 1,44,000 பேர் இந்தப் “புதிய வானங்களின்” பாகமாக அவரோடுகூட அரசாளுவார்கள்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.

9 அப்படியானால், அந்தப் “புதிய பூமி” எது? அது ஒரு புதிய கிரகம் அல்ல. மனிதர் தொடர்ந்து வாழ்வதற்கென்றே பொருத்தமாகக் கடவுள் இந்தக் கிரகமாகிய பூமியை உண்டாக்கினார், இது என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பது அவருடைய சித்தமாயிருக்கிறது. (சங்கீதம் 104:5) அந்தப் “புதிய பூமி”யானது ஒரு புதிய மக்கள் தொகுதியை அல்லது சமுதாயத்தைக் குறிக்கிறது. “பூமி” என்ற சொல்லை இவ்வகையில் பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. உதாரணமாக, “பூமியெங்கும் [மக்களுக்குள் என்று பொருள்படுகிறது] ஒரே பாஷை . . . இருந்தது,” என்று அது சொல்லுகிறது. (ஆதியாகமம் 11:1) அழிக்கப்படப்போகிற அந்தப் “பூமி” இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் பாகமாகத் தங்களை ஆக்கிக் கொள்ளுகிற மக்களேயாவர். (2 பேதுரு 3:7) அவர்களுடைய இடத்தை ஏற்கப்போகிற அந்தப் “புதிய பூமி” இந்தப் பொல்லாத மக்களாலாகிய உலகத்திலிருந்து தங்களைத் தனியே பிரித்துக் கொண்டிருக்கிற கடவுளுடைய உண்மையான ஊழியராலாகியதாயிருக்கும்.—யோவான் 17:14; 1 யோவான் 2:17.

10 இந்தப் “புதிய பூமி”யின் பாகமாகப் போகிற எல்லா மரபினரையும் தேசத்தாரையும் சேர்ந்த மக்கள் இப்பொழுதுதானேயும் இந்தக் கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் இருந்துவருகிற ஒற்றுமையும், சமாதானமும், அர்மகெதோனுக்குப் பின்பு பரதீஸான பூமியில் வாழ்க்கையை அப்பேர்ப்பட்ட இன்பமாக்கப் போவதன் வெறும் ஒரு சிறிய முன் காட்சியேயாகும். எந்த மனித அரசாங்கமும் செய்வதற்கு எண்ணவுங்கூட முடியாததைக் கடவுளுடைய ராஜ்யம், மெய்யாகவே, நிறைவேற்றும். இப்படிப்பட்ட ஒரு சில ஆசீர்வாதங்களைப் பின்வரும் பக்கங்களில் கவனித்துப் பாருங்கள்.

மனிதவர்க்கம் முழுவதையும் கொண்ட ஓர் அன்புள்ள சகோதரத்துவம்

“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

“இதோ, ஒருவரும் எண்ண முடியாத திரள் கூட்டம். இவர்கள் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்தவர்கள் . . . இவர்கள் இனிப் பசித்து வருந்தார்கள், தாகித்து வருந்தார்கள்.”—வெளிப்படுத்துதல் 7:9, 16, தி.மொ.

மனிதருக்கும் மிருகங்களுக்குமிடையில் சமாதானம்

“அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.”—ஏசாயா 11:6; ஏசாயா 65:25.

நோயோ, முதுமையோ, மரணமோ இனிமேலும் இல்லை

“அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 35:5, 6.

“தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

மரித்தோர் திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகின்றனர்

“அந்த மணிநேரம் வருகிறது. அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருக்கிற அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியில் வருவார்கள்.”—யோவான் 5:28, 29, NW.

“சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் ஹேடீஸூம் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.”—வெளிப்படுத்துதல் 20:13, NW.

11 கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் அந்தப் பரதீஸ், இந்தப் பழைய ஒழுங்குமுறை கொண்டுவரக்கூடிய எதையும் பார்க்கிலும், ஆ, எவ்வளவு மேம்பட்டதாயிருக்கும்! இன்று சிலர் தாங்கள் வாழும் இடத்தைப் பரதீஸைப்போல் தோன்றும்படி செய்திருக்கிறார்கள் என்பது மெய்யே. ஆனால் இந்த இடங்களில் ஒன்று சேர்ந்து வாழும் மக்கள் கஞ்சத்தனமுள்ளவர்களாயும், தன்னலக்காரராயும், ஒருவேளை ஒருவரையொருவர் பகைக்கிறவர்களாயும் கூட இருக்கலாம். மேலும், காலப்போக்கில், அவர்கள் நோயுற்று, முதுமை அடைந்து சாகிறார்கள். அர்மகெதோனுக்குப் பின்போவெனில், பூமியிலுள்ள அந்தப் பரதீஸ் வெறும் அழகிய வீடுகளையும், தோட்டங்களையும், பூங்காக்களையும் பார்க்கிலும் மிக அதிகம் அடங்கியதாயிருக்கும்.

12 இதை நினைத்துப் பாருங்கள். எல்லா மரபினரும் தேசத்தாருமான மக்கள் சகோதரர் சகோதரிகளாலாகிய ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்து வாழக் கற்றுக் கொள்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிப்பார்கள். ஒருவரும் தன்னலமுள்ளவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ இரார். ஒருவருடைய மரபு, நிறம் அல்லது அவனுடைய ஊர் ஆகியவற்றின் காரணமாகத்தானே ஒருவர் மற்றொருவரைப் பகைக்கமாட்டார்கள். காரணமில்லாமல் தப்பெண்ணங்கொள்வது இனி இராமல் நின்றுபோகும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவருடைய உண்மையான நண்பரும் அயலாருமாவர். மெய்யாகவே, ஆவிக்குரிய பிரகாரமாய் அது ஒரு பரதீஸாக இருக்கும். அந்தப் “புதிய வானங்களின்” கீழ் இந்தப் பரதீஸில் வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பமா?

13 இன்று மக்கள், சமாதானமாய் ஒன்றுசேர்ந்து வாழ்வதைப் பற்றிப் பேரளவாய்ப் பேசுகிறார்கள், ஒரு “ஐக்கிய நாட்டு” அமைப்பையுங்கூட ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்றபோதிலும் மக்களும் தேசங்களும் முன்னொருபோதுமிராத வண்ணமாய்ப் பிரிவுற்றவர்களாய் இருக்கின்றனர். என்ன வேண்டியதாய் இருக்கிறது? மக்களின் இருதயங்கள் மாறவேண்டியதாய் இருக்கிறது. இப்படிப்பட்ட ஓர் அற்புதத்தை நடப்பிப்பது இவ்வுலகத்தின் அரசாங்கங்களுக்கு முற்றிலும் கூடாதக் காரியம். என்றபோதிலும், கடவுளுடைய அன்பைப் பற்றிய பைபிளின் செய்தி இதை நிச்சயமாகவே செய்து கொண்டிருக்கிறது.

14 இந்த நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையைப் பற்றிக் கற்றறிகையில், பல ஆட்களின் இருதயங்கள் கடவுளை நேசிக்கும்படி தூண்டப்பட்டு வருகின்றன. ஆகவே, கடவுள் செய்கிறதைப்போலவே, மற்றவர்களிடமாக அன்புள்ள ஒரு முறையில் நடந்துகொள்ள அவர்கள் தொடங்குகிறார்கள். (1 யோவான் 4:9-11, 20) இது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. கொடிய மிருகங்களைப்போல் அற்ப புத்தியுள்ளவர்களாயும் பகைக்கிறவர்களாயும் இருந்தவர்கள், இவ்வாறாக சாந்தமும் சமாதானமும் உள்ளவர்களாகியிருக்கிறார்கள். கீழ்ப்படிதலுள்ள செம்மறியாடுகளைப்போல், அவர்கள் கிறிஸ்தவ மந்தைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்.

15 1,900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக, இந்தச் “சிறு மந்தை”யாகிய, கிறிஸ்துவுடன் ஆளப்போகிற 1,44,000 கிறிஸ்தவர்கள், ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டு வந்திருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே பூமியில் மீந்திருக்கின்றனர்; பெரும்பான்மையர் ஏற்கெனவே கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 20:6) ஆனால் மற்றக் கிறிஸ்தவர்களைக் குறித்துப் பேசுபவராய் இயேசு பின்வருமாறு கூறினார்: “[“சிறு மந்தை”க்குரிய] இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் [மற்றச் செம்மறியாடுகளும், NW] எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும் அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (யோவான் 10:16) இந்த “மற்றச் செம்மறியாடுகளின்” ஒரு “திரள் கூட்டம்” இப்பொழுது கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அந்தப் “புதிய பூமி”யாகிறவர்களில் முதல்வராக இருப்பார்கள். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவின்போது உண்டாகும் அந்த “மிகுந்த உபத்திரவத்தினூடே,” யெகோவா தேவன் இவர்களைப் பாதுகாத்து அந்தப் பூமிக்குரிய பரதீஸில் தொடர்ந்து வாழும்படி கொண்டு வருவார்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 13-15.

16 அர்மகெதோனுக்குப் பின்பு மற்றொரு அற்புதம் அந்தப் பரதீஸான நிலைமைகளோடு மேலும் கூட்டும். இப்பொழுது அபாயகரமாக இருக்கக்கூடிய சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் ஆகியவற்றைப் போன்ற மிருகங்கள் சமாதானமாயிருக்கும். அப்பொழுது காடுகளுக்குள் உலாவச் சென்று ஒரு சிங்கம் உங்களோடு சேர்ந்து உங்கள் பக்கத்தில் சிறிது நேரம் நடந்து கொண்டிருப்பதும், அதற்கப்பால் ஒருவேளை ஒரு பெரிய கரடி உங்களிடமாக வந்து அவ்வாறு நடந்து கொண்டிருப்பதும் ஆ, எவ்வளவு சிறந்ததாயிருக்கும்! மறுபடியும் ஒருபோதும் எவரும் உயிருள்ள மற்றொன்றுக்கு பயப்பட வேண்டியதில்லை.

17 வீடுகளும் தோட்டங்களும் எவ்வளவு அழகாயிருந்தாலும் சரி, மக்கள் எவ்வளவு கனிவாயும் அன்பாயும் இருந்தாலும் சரி, அல்லது மிருகங்கள் எவ்வளவு சிநேகப் பான்மையுடன் இருந்தாலும் சரி, நாம் நோயுற்று முதுமையடைந்து சாவோமானால் துக்கம் இன்னும் இருந்துகொண்டிருக்கும். ஆனால் யார் எல்லோருக்கும் பரிபூரண சுகத்தைக் கொண்டுவரக்கூடும்? புற்றுநோய், இருதயக் கோளாறுகள், இன்னும் மற்ற நோய்கள் ஆகியவற்றை முற்றிலும் போக்க மனித அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வைத்துக்கொண்டாலுங்கூட, இது, மக்கள் முதுமையடைவதை நிறுத்தாதென்று வைத்தியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நாம் இன்னும் முதுமை அடைந்து கொண்டிருப்போம். காலப்போக்கில் நம்முடைய கண்கள் மங்கிக்கொண்டு வரும், நம்முடைய தசைகள் பலவீனமடையும், நம்முடைய தோல் சுருங்கும், நம்முடைய உடல்களுக்குள்ளிருக்கும் உள்ளுறுப்புகள் தளர்ந்து முறிவுறும். இதைப் பின்தொடர்ந்து சாவு வரும். ஆ, எவ்வளவு துக்ககரமானது!

18 அர்மகெதோனுக்குப் பின்பு, அந்தப் பரதீஸிய பூமியில், கடவுளால் செய்யப்படும் ஒரு மேன்மையான அற்புதம் இதையெல்லாம் மாற்றிவிடும், ஏனெனில்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை,” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (ஏசாயா 33:24) நாம் ஆதாமிலிருந்து சுதந்தரித்த பாவத்தின் காரணமாக விளைந்த, எல்லா வகை நோய்களையும் பிணிகளையும் சுகப்படுத்துவதற்குத் தமக்கிருந்த வல்லமையை, இயேசுகிறிஸ்து பூமியில் இருந்தபோது நிரூபித்தார். (மாற்கு 2:1-12; மத்தேயு 15:30, 31) முதுமையடைதலுங்கூட ராஜ்ய ஆட்சியின் கீழ் நிறுத்தப்படும். முதுமைப்பட்டவர்கள் மறுபடியும் இளமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பர். ஆம், “அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்.” (யோபு 33:25) அப்பொழுது ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுந்து நீங்கள் முந்தின நாள் இருந்ததைப் பார்க்கிலும் மேம் பட்ட சுகத்தை உடையவர்களாக இருப்பதை உணர்வது ஆ, எப்பேர்ப்பட்ட கிளர்ச்சியூட்டும் அனுபவமாயிருக்கும்!

19 அந்தப் பரதீஸான பூமியில் வாலிப நிலையில் பரிபூரண சுகத்தில் வாழ்கிற எவரும் நிச்சயமாகவே ஒருபோதும் சாவதற்கு விரும்பமாட்டார்கள். ஒருவரும் சாகவேண்டியதில்லை! மீட்பின் கிரய பலியின் நன்மைகளை அவர்கள் பெற்று வருவது கடைசியாகக் கடவுளுடைய மிக மேன்மையான பரிசாகிய “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவனை” அனுபவித்து மகிழ்வதைக் குறிக்கும். (ரோமர் 6:23) பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “எல்லாச் சத்துருக்களையும் [கடவுள்] தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும் வரைக்கும் அவர் [கிறிஸ்து] ஆளுகை செய்ய வேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசி சத்துரு மரணம்.”—1 கொரிந்தியர் 15:25, 26; ஏசாயா 25:8.

20 இப்பொழுது மரித்தவர்களாக இருக்கிறவர்களுங்கூட அந்தப் பரதீஸான பூமியை அனுபவித்து மகிழ்வார்கள். அவர்கள் திரும்ப உயிர் பெறுவார்கள்! ஆகவே, அந்தச் சமயத்தில் மரண அறிவிப்புகளுக்குப் பதிலாக, உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறவர்களைப் பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்புகள் இருக்கும். மரித்த தகப்பன்மார், தாய்மார், பிள்ளைகள் மற்றும் அன்பானவர்களைப் பிரேதக் குழிகளிலிருந்து திரும்ப ஆவலோடு வரவேற்பது ஆ, எவ்வளவு அதிசயமாயிருக்கும். அந்தப் பரதீஸான பூமியின் அழகைக் கெடுக்க சவ அடக்க அறைகளோ, இடுகாடுகளோ, அல்லது கல்லறைக் கற்களோ இருப்பதில்லை.

21 அந்தப் பரதீஸான பூமியில் நடவடிக்கைகளை யார் ஆண்டு நடத்துவார்கள் அல்லது நிர்வகிப்பார்கள்? எல்லா சட்டங்களும் கட்டளைகளும் மேலிருக்கும் அந்தப் “புதிய வானங்களி”லிருந்து வரும். ஆனால் பூமியில், இந்தச் சட்டங்களும் கட்டளைகளும் செயல்படுத்தப்படும்படி பார்த்துக் கொள்வதற்கு உண்மையுள்ள மனிதர் நியமிக்கப்படுவர். இந்த மனிதர் அந்தப் பரலோக ராஜ்யத்தை ஒரு தனிப்பட்ட முறையில் பிரதிநிதித்துவம் செய்வதனால், பைபிள் இவர்களைப் “பிரபுக்கள்” என்று அழைக்கிறது. (ஏசாயா 32:1, 2; சங்கீதம் 45:16) இன்று கிறிஸ்தவ சபையிலுங்கூட, அதன் நடவடிக்கைகளை நிர்வகித்து நடத்துவதற்கு, மனிதர் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகின்றனர். (அப்போஸ்தலர் 20:28) அர்மகெதோனுக்குப் பின்பு, ராஜ்ய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய சரியான மனிதர் நியமிக்கப்படும்படி கிறிஸ்து பார்த்துக்கொள்வார் என்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம், ஏனெனில் அப்பொழுது அவர் பூமியின் விவகாரங்களை நேரடியாய்க் கையாளுவார். கடவுளுடைய “புதிய வானங்களுக்”காகவும் “புதிய பூமிக்”காகவும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காண்பிக்கக்கூடும்? அந்த நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்கான தேவைகளை நிறைவாக்க உங்களால் கூடியதையெல்லாம் செய்து வருவதன் மூலமேயாகும்.—2 பேதுரு 3:14.

[கேள்விகள்]

1. (எ) அர்மகெதோன் பொதுவாய் என்னவாகக் கருதப்படுகிறது? (பி) பைபிள் அதைப் பற்றி என்ன சொல்லுகிறது?

2. (எ) அர்மகெதோனில் யார் அழிக்கப்படுவர்? (பி) ஆகவே என்ன பழக்கமான நடத்தைகளை நாம் ஞானமாய்த் தவிர்க்க வேண்டும்?

3. (எ) இந்தத் தற்போதைய உலகத்தின் முடிவை இயேசு எதற்கு ஒப்பிட்டார்? (பி) சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் என்ன நேரிடும்? (சி) பின்வரும் பக்கங்களிலுள்ள வேத வசனங்களின்படி பரதீஸான பூமியில் என்ன வகையான நிலைமைகள் அனுபவித்து மகிழப்படும்?

4, 5. (எ) பரதீஸ் பூமியில் என்ன நிலைமைகள் இனிமேலும் இரா? (பி) இன்று பல இடங்களில் செய்ய முடியாத எதை மக்கள் செய்யக்கூடியவர்களாக இருப்பர்?

6. (எ) அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்கள் என்ன வேலையைச் செய்வார்கள்? (பி) செய்யப்படும் அந்த வேலையைக் கடவுள் எப்படி ஆசீர்வதிப்பார்?

7. (எ) கடவுளுடைய எந்த வாக்கு நிறைவேற்றப்படும்? (பி) கடவுளுடைய வாக்குத்தத்தத்தின்படியே எதற்காகக் கிறிஸ்தவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்?

8. (எ) இயற்கையான புதிய வானங்கள் நமக்கு ஏன் தேவையாக இல்லை? (பி) இந்தப் “புதிய வானங்கள்” யாவை?

9. (எ) இந்தப் “புதிய பூமி” என்பது என்ன? (பி) அழிக்கப்படப்போகிற அந்தப் பூமி எது?

10. (எ) யார் இப்பொழுது கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்? எதற்குள்? (பி) பின்வரும் பக்கங்களிலுள்ள வேத வசனங்களின்படி மனித அரசாங்கங்கள் செய்ய முடியாத எது பரதீஸ் பூமியில் செய்யப்படும்?

11. இப்பொழுது மனிதர் உண்டுபண்ணுகிற வகையான பரதீஸை எது அடிக்கடி கெடுத்துப் போடுகிறது?

12, 13. (எ) அர்மகெதோனுக்குப் பின்பு சமாதானத்துக்குரிய என்ன நிலைமைகள் நிலைத்திருக்கும்? (பி) இந்த நிலைமைகளைக் கொண்டுவர என்ன வேண்டியதாயிருக்கிறது?

14. இந்தப் பரதீஸிய நிலைமைகள் உண்மையாய் நிறைவேறுமென்பதை நிரூபிக்க இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது?

15. (எ) எந்த இரண்டு தொகுதிகளான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? (பி) அந்தப் “புதிய பூமி”யாகிறவர்களில் முதல்வராக இருக்கப் போகிறவர்கள் யார்?

16. எந்த அற்புதம் மிருகங்களோடு வாழ்வதை இன்பமாக்கும்?

17, 18. (எ) அந்தப் பரதீஸான பூமியில் துக்கத்துக்குக் காரணமான எது இனிமேலும் இராது? (பி) பரிபூரண ஆரோக்கியம் எல்லோராலும் அனுபவித்து மகிழப்படுமென்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

19. எந்தக் கடைசி சத்துரு அழிக்கப்படும், எப்படி?

20. இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்கள் தவிர, வேறு எவரும் அந்தப் பரதீஸான பூமியை அனுபவித்து மகிழ்வார்கள், அது எப்படிக் கூடிய காரியமாயிருக்கும்?

21. (எ) அந்தப் “புதிய வானங்களின்” சட்டங்களும் கட்டளைகளும் செயல்படுத்தப்படும்படி பார்த்துக்கொள்ள யார் உதவி செய்வர்? (பி) இந்தப் “புதிய வானங்களும்” “புதிய பூமி”யும் நமக்கு உண்மையில் வேண்டுமென்பதை நாம் எப்படிக் காட்டலாம்?