Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் மதம் எது என்பது உண்மையிலேயே முக்கியத்துவமுடையது

உங்கள் மதம் எது என்பது உண்மையிலேயே முக்கியத்துவமுடையது

அதிகாரம் 3

உங்கள் மதம் எது என்பது உண்மையிலேயே முக்கியத்துவமுடையது

‘எல்லா மதங்களும் நல்லவையே, அவை வெறுமென ஒரே இடத்திற்கு வழிநடத்துகிற வெவ்வேறு வழிகள்’, என்று பலர் சொல்லுகின்றனர். இது உண்மையென்றால், உங்கள் மதம் எது என்பது உண்மையில் முக்கியத்துவமுடையதாய் இராது, ஏனெனில் இது, எல்லா மதங்களும் கடவுளுக்கு ஏற்கத்தக்கவையாக இருக்கின்றனவென்று அர்த்தத்தைக் கொடுப்பதாயிருக்கும். ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்கின்றனவா?

2 இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, பரிசேயர் என்று அழைக்கப்பட்ட ஒரு மதத் தொகுதி இருந்தது. இந்தத் தொகுதியினர் ஒரு வணக்க வழிமுறையை வகுத்தமைத்திருந்தனர், இது கடவுளுடைய அங்கீகாரத்தை உடையதாய் இருந்ததென்று அவர்கள் நம்பினார்கள். என்றபோதிலும், அதேசமயத்தில், இந்தப் பரிசேயர் இயேசுவைக் கொல்ல முயன்று கொண்டிருந்தார்கள்! ஆகவே இயேசு அவர்களிடம்: “நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்,” என்று சொன்னார். அதற்குப் பதிலுரைப்பவர்களாய் அவர்கள்: “ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் கடவுளே,” என்றார்கள்.—யோவான் 8:41, தி.மொ.

3 உண்மையில் அவர்களுடைய தகப்பனாக இருந்தது கடவுளா? அவர்களுடைய வணக்க முறையான அந்த மதத்தைக் கடவுள் ஏற்றுக் கொண்டாரா? இல்லவே இல்லை! அந்தப் பரிசேயர் வேத எழுத்துக்களை வைத்திருந்து, அவற்றைத் தாங்கள் பின்பற்றுவதாக எண்ணியிருந்தபோதிலும், அவர்கள் பிசாசால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தார்கள். இயேசு அவ்வாறே அவர்களுக்குச் சொன்னார், அவர் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலை பாதகனாயிருக்கிறான்; . . . அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.”—யோவான் 8:44.

4 அந்தப் பரிசேயரின் மதம் பொய்யானதாக இருந்தது. அது கடவுளை அல்ல, பிசாசினுடைய அக்கறைகளையே சேவித்தது. ஆகவே, இயேசு அவர்களுடைய மதத்தை நல்லதாகக் கருதாமல், அதைக் கண்டனம் செய்தார். அந்த மதத்தினரான பரிசேயர்களுக்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டி போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.” (மத்தேயு 23:13) அவர்களுடைய பொய் வணக்கத்தின் காரணமாக, இயேசு அந்தப் பரிசேயர்களைப் பாசாங்குக்காரர் என்றும் விஷமுள்ள பாம்புகளென்றும் அழைத்தார். அவர்களுடைய கெட்ட போக்கின் காரணமாக, அவர்கள் அழிவுக்குப் போகும் வழியில் இருந்தார்களென்று அவர் சொன்னார்.—மத்தேயு 23:25-33.

5 ஆகையால் எல்லா மதங்களும் வெறுமென, இரட்சிப்புக்குரிய ஒரே இடத்திற்கு வழிநடத்துகிற வெவ்வேறு பாதைகளே என்று இயேசு கிறிஸ்து கற்பிக்கவில்லை. பிரசித்திப் பெற்ற தம்முடைய மலைப் பிரசங்கத்தில் இயேசு பின்வருமாறு கூறினார்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) கடவுளைச் சரியான முறையில் வணங்கத் தாங்கள் தவறுவதன் காரணமாக ஆட்களில் பெரும்பான்மையர் அழிவுக்குச் செல்லும் பாதையில் இருக்கின்றனர். ஒரு சிலரே ஜீவனுக்கு வழி நடத்துகிற பாதையில் இருக்கின்றனர்.

6 கடவுள் இஸ்ரவேலரிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை சற்று கவனித்தால், கடவுளை அவர் அங்கீகரிக்கிற முறையில் வணங்குவது எவ்வளவு முக்கியமானதென்பது தெளிவாகத் தெரிகிறது. இஸ்ரவேலர் தங்களைச் சுற்றியிருந்த ஜாதியாரின் பொய் மதத்திலிருந்து தூர விலகியிருக்க வேண்டுமென்று கடவுள் அவர்களை எச்சரித்தார். (உபாகமம் 7:25) அந்த மக்கள் தங்கள் கடவுட்களுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பலியிட்டார்கள், ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி உட்பட பால் சம்பந்த அசுத்தமான பழக்க வழக்கங்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். (லேவியராகமம் 18:20-30) இந்தப் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கும்படி கடவுள் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார். அவர்கள் கீழ்ப்படியாமற்போய் மற்றக் கடவுட்களை வணங்கினபோது அவர் அவர்களைத் தண்டித்தார். (யோசுவா 24:20; ஏசாயா 63:10) ஆகவே அவர்களுடைய மதம் எதுவென்பது உண்மையாகவே முக்கியமானதாய் இருந்தது.

இன்று பொய் மதம் இருக்கிறதா?

7 இன்றைய நூற்றுக் கணக்கான மதங்களைப் பற்றியதென்ன? மதத்தின் பெயரில் செய்யப்பட்டு வருகிற பல காரியங்கள் கடவுளால் அங்கீகரிக்கப்படுகிறதில்லையென்று நீங்கள் ஒருவேளை ஒப்புக் கொள்ளலாம். சமீபத்தில் நடந்த உலக மகாயுத்தங்களைத் தப்பிப் பிழைத்த இலட்சக்கணக்கான ஆட்கள் இன்றும் உயிருடனிருக்கின்றனர். அந்த யுத்தங்களின்போது இரு சார்பிலும் மதங்கள், கொல்லும்படி தங்கள் மக்களை ஊக்குவித்தன. “ஜெர்மானியரைக் கொல்லுங்கள்—கட்டாயமாகவே அவர்களைக் கொல்லுங்கள்,” என்று லண்டன் பேராயர் சொன்னார். எதிர்புறத்தில், கோலோனின் தலைமை பேராயர்: “கடவுளுடைய பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம், நாட்டின் கனத்திற்காகவும் மகிமைக்காவும் உங்கள் கடைசி சொட்டு இரத்தம் வரையாகப் போரிடுங்கள்,” என்று ஜெர்மானியருக்குச் சொன்னார்.

8 ஆகவே தங்கள் மதத் தலைவர்களின் சம்மதத்துடனேயே கத்தோலிக்கர் சத்தோலிக்கரைக் கொன்றார்கள். புராட்டஸ்டண்டினரும் அவ்வாறே செய்தார்கள். ஹாரி எமெர்சன் ஃபாஸ்டிக் என்ற பாதிரி பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “நம்முடைய சர்ச்சுகளிலுங்கூட நாம் போர்க் கொடிகளை வைத்தோம் . . . நம்முடைய வாயின் ஒரு முனையில் நாம் சமாதானப் பிரபுவைத் துதித்து மற்றொரு முனையில் நாம் போரைப் புகழ்ந்து போற்றியிருக்கிறோம்.” கடவுளுடைய சித்தத்தைச் செய்வதாக உரிமை பாராட்டி ஆனால் போரைப் புகழ்ந்து போற்றுகிற ஒரு மதத்தைப் பற்றிக் கடவுள் எப்படி உணருகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

9 சரித்திரம் முழுவதிலுமே வெவ்வேறுபட்ட பல மதங்களின் அங்கத்தினர், கடவுளின் பெயரில் நடப்பித்திருக்கிற குற்றச் செயல்களின் காரணமாக, இன்று இலட்சக்கணக்கான ஆட்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் விட்டு விலகிப் போயிருக்கிறார்கள். சிலுவைப் போர் என்றழைக்கப்பட்ட, கத்தோலிக்கருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த போர்கள், முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையில் நடந்த போர்கள் கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டாண்டினருக்குமிடையே நடந்த போர்கள் ஆகிய இப்படிப்பட்ட பயங்கர மதப் போர்களுக்காக அவர்கள் கடவுளைக் குற்றஞ் சாட்டுகிறார்கள். கிறிஸ்துவின் பெயரில் யூதர்கள் கொலை செய்யப்பட்டதையும், குரூரமான கத்தோலிக்க விசாரணைகளையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். என்றபோதிலும், இப்படிப்பட்ட பயங்கரமான குற்றச் செயல்களுக்கு உத்தரவாதமுள்ள இந்த மதத் தலைவர்கள், கடவுளைத் தங்கள் தகப்பனாக உரிமை பாராட்டின போதிலும், இயேசு கண்டனம் செய்த அந்தப் பரிசேயரைப் போலவே பிசாசின் பிள்ளைகளாக இருந்தார்களல்லவா? சாத்தான் இந்த உலகத்தின் கடவுளாக இருப்பதனால், இவ்வுலக மக்களால் பழக்கமாய் அனுசரித்து வரப்படுகிற மதங்களையுங்கூட அவன் அடக்கியாளுகிறானென்று நாம் எதிர்பார்க்கலாமல்லவா?—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9.

10 நீங்கள் சரியென்று கருதாத பல காரியங்கள் இன்று மதத்தின் பெயரில் செய்யப்பட்டு வருகின்றனவென்பதில் சந்தேகமில்லை. பல தடவைகளில், வெகு மோசமான ஒழுக்கக்கேடான வழிகளில் வாழ்க்கை நடத்துகிறவர்களைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்படக்கூடும், என்றாலும், அவர்கள் சர்ச்சுகளில் மரியாதைக்குரிய உறுப்பினராக இருந்து வருவார்கள். மிகவும் கெட்ட வழியில் வாழ்க்கை நடத்துகிற மதத் தலைவர்களைப் பற்றியுங்கூட நீங்கள் அறிந்திருக்கலாம். என்றாலும் இவர்கள் இன்னும் அவர்களுடைய சர்ச்சுகளில் நல்ல மதத் தலைவர்களாக ஏற்கப்பட்டிருக்கலாம். சில மதத் தலைவர்கள் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும், திருமணம் செய்திராமல் பால் சம்பந்த சம்போகங்களில் ஈடுபடுவதும் தவறல்ல என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால் பைபிள் அப்படிச் சொல்லுகிறதில்லை என்று நீங்கள் தெரிந்திருக்கலாம். உண்மையில், கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலர் இப்படிப்பட்ட காரியங்களைப் பழக்கமாய்ச் செய்வதில் ஈடுபட்டதன் காரணமாக கடவுள் அவர்களுக்கு மரண தண்டனையைக் கொடுத்தார். இந்தக் காரணத்தினிமித்தமாகவே சோதோம் கொமோராவையும் அவர் அழித்தார். (யூதா 7) சீக்கிரத்தில், தற்கால பொய் மதம் முழுவதற்கும் அவர் அதையே செய்வார். இப்படிப்பட்ட மதம் “பூமியின் ராஜாக்க”ளுடன், ஒழுக்கக் கேடான உறவுகளைக் கொண்டிருப்பதன் காரணமாக, பைபிளில் வேசியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:1, 2, 16.

கடவுள் அங்கீகரிக்கிற வணக்கம்

11 எல்லா மதங்களையும் கடவுள் அங்கீகரிக்காததனால், ‘கடவுள் அங்கீகரிக்கிற முறையில் நான் அவரை வணங்கிவருகிறேனா?’ என்று நாம் கேட்க வேண்டியது அவசியம். நாம் அப்படிச் செய்கிறோமென்று எப்படித் தெரிந்து கொள்ளக் கூடும், மெய் வணக்கம் எது என்று தீர்மானிப்பவர் கடவுளே, எந்த மனிதனுமல்ல. ஆகையால் நம்முடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத் தக்கதாய் இருக்க, அது கடவுளுடைய சத்திய வார்த்தையாகிய பைபிளில் உறுதியாய் வேரூன்றப்பட்டதாக இருக்க வேண்டும். பின்வருமாறு சொன்ன இந்தப் பைபிள் எழுத்தாளன் உணர்ந்த விதமாகவே நாமும் உணரவேண்டும். “கடவுளே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யனென்றுங் காணப்படட்டும்.”—ரோமர் 3:3, 4, தி.மொ.

12 முதல் நூற்றாண்டு பரிசேயர்கள் இவ்வாறு உணரவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளையும் பாரம்பரியங்களையும் ஏற்படுத்தி வைத்து, கடவுளுடைய வார்த்தையைப் பார்க்கிலும் அவற்றையே மேம்பட்டவையாகப் பின்பற்றினார்கள். இதன் விளைவென்ன? இயேசு அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.” (மத்தேயு 15:1-9; ஏசாயா 29:13) நமக்குக் கடவுளுடைய அங்கீகாரம் வேண்டுமென்றால், நாம் நம்புவது பைபிளின் போதகங்களோடு ஒத்திருக்கும்படி நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

13 நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று சொல்வதும், பின்பு நாம் சரியென்று நினைப்பதைச் செய்வதும் போதுமானதல்ல. அந்தக் காரியத்தைக் குறித்ததில் கடவுளுடைய சித்தம் என்ன என்பதை நாம் கண்டறிவது முற்றிலும் அவசியம். இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னபோது இதைக் காட்டினார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:21.

14 “நற்செயல்கள்” என்று நாம் நம்பும் காரியங்களை ஒருவேளை செய்துகொண்டிருக்கக் கூடும், இவற்றைக் கிறிஸ்துவின் பெயரில் செய்து கொண்டுமிருக்கக்கூடும். என்றாலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாம் தவறினோமென்றால் இவையாவும் பயனில்லாமற் போகும். அப்பொழுது நாம், கிறிஸ்து அடுத்தபடியாகக் குறிப்பிடுகிற ஆட்களின் நிலையில் இருப்போம்: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22, 23) ஆம், நல்லவை என்று நாம் நினைக்கும் காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கலாம்—அவற்றிற்காக மற்ற மனிதர் நமக்கு நன்றி சொல்லக் கூடும். ஒருவேளை நம்மைப் போற்றவுங்கூடும்—ஆனால் எது சரியென்று கடவுள் சொல்வதை செய்ய தவறுகிறோமென்றால், நாம் “அக்கிரமச் செய்கைக்காரர்” என்று இயேசு கிறிஸ்துவால் கருதப்படுவோம்.

15 இன்று பல மதங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்து கொண்டில்லை, ஆதலால், நாம் கூட்டுறவு கொள்ளும் அந்த மத அமைப்பின் போதகங்கள் கடவுளுடைய வார்த்தையோடு ஒத்திருக்கின்றனவென்று நாம் எண்ணிவிட முடியாது. ஒரு மதம் பைபிளைப் பயன்படுத்துகிற இந்த உண்மைதானேயும், அது கற்பிக்கிறவையும் கடைப்பிடிக்கிறவையுமான எல்லாக் காரியங்களும் பைபிளில் இருக்கின்றனவென்று நிரூபித்து விடுகிறதில்லை. அவை அவ்வாறு இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பதை நாம் தானேயும் ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியம். பெரோயா பட்டணத்திலிருந்த ஆட்கள், கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்குப் பிரசங்கித்தப் பின்பு, அவன் தங்களுக்குச் சொல்லும் காரியங்கள் உண்மையானவையா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேத எழுத்துக்களை ஆராய்ந்து பார்த்ததனால் மெச்சிக் கொள்ளப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 17:10, 11) கடவுளால் அங்கீரிக்கப்பட்ட மதம் எல்லா வகையிலும் பைபிளுடன் ஒத்திருக்க வேண்டும்! அது பைபிளின் சில பாகங்களை ஏற்று மற்றவற்றை வேண்டாமென்று தள்ளாது.—2 தீமோத்தேயு 3:16.

உண்மை மனம் மாத்திரம் போதாது

16 ஆனால் எவராவது கேட்கலாம்: ‘ஒருவன் உண்மை மனதுடன் தன் நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவனாய் இருந்தால், அவனுடைய மதம் ஒருவேளை தவறாக இருந்தாலுங்கூட, கடவுள் அவனை அங்கீகரிக்க மாட்டாரா?’ அந்த ‘அக்கிரமச் செய்கைக்காரர்’ தாங்கள் சரியானதைச் செய்து கொண்டிருந்ததாக நம்பினபோதிலும், இயேசு, அவர்களைத் தாம் அங்கீகரிக்கப் போவதில்லை என்று சொன்னார். (மத்தேயு 7:22, 23) ஆகவே உண்மை மனம் மட்டுமே கடவுளாலும் அங்கீகரிக்கப்படமாட்டாது. ஒருமுறை இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு [பரிசுத்த சேவை, NW] செய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்.” (யோவான் 16:2) கிறிஸ்தவர்களைக் கொல்லும் இப்படிப்பட்டவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் கடவுளைச் சேவிப்பதாக மனதார நம்பக் கூடும். ஆனால் தெளிவாகவே, அவர்கள் கடவுளைச் சேவிக்கவில்லை. அவர்கள் செய்ததைக் கடவுள் நிச்சயமாகவே அங்கீகரிக்கிறதில்லை.

17 அப்போஸ்தலனாகிய பவுல் தான் கிறிஸ்தவனாவதற்கு முன்பாக ஸ்தேவானைக் கொலை செய்வதில் உதவியாக இருந்தான். பின்னால், மேலுமநேகக் கிறிஸ்தவர்களைக் கொல்லுவதற்கு வழிவகைகளைத் தேடிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:1; 9:1, 2) பவுல் பின்வருமாறு விளக்கினான்: “தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.” (கலாத்தியர் 1:13, 14) ஆம், பவுல், உண்மை மனதோடு காரியங்களைச் செய்தான். ஆனால் அது அவனுடைய மதத்தைச் சரியான மதமாக்கிவிடவில்லை.

18 அந்தச் சமயத்தில் பவுல், இயேசு கிறிஸ்துவை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கியதும் அதன் காரணமாக கடவுளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்ததுமான யூத மத ஒழுங்குமுறையின் ஓர் அங்கத்தினனாக இருந்தான். (அப்போஸ்தலர் 2:36, 40; நீதிமொழிகள் 14:12) ஆகையால் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்குப் பவுல் தன் மதத்தை மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருந்தான். மேலும் ‘தேவனைப் பற்றி வைராக்கியமுள்ளவர்களாக’ இருந்த மற்றவர்களைப் பற்றியுங்கூட அவன் எழுதினான்—இவர்கள் உண்மை மனதோடு காரியங்களைச் செய்தார்கள், என்றாலும், அவர்களுடைய மதம் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவை அடிப்படையாகக் கொண்டிராததால் அது கடவுளால் அங்கீகரிக்கப்படவில்லை.—ரோமர் 10:2, 3.

19 இந்த உலகத்திலுள்ள வெவ்வேறு மத கோட்பாடுகளுக்கும் சத்தியம் இடமளிக்காது. உதாரணமாக, இரண்டில் ஒன்றுதான் சத்தியமாக இருக்க முடியும். மனிதருக்கு, உடல் செத்தப் பின்பு பிழைத்திருக்கிற ஓர் ஆத்துமா இருக்க வேண்டும் அல்லது இல்லாதிருக்க வேண்டும். ஒன்று இந்தப் பூமி என்றும் நிலைத்திருக்கும் அல்லது நிலைத்திருக்காது. கடவுள் பொல்லாங்கை முடிவுக்கு கொண்டு வருவார் அல்லது கொண்டுவரமாட்டார். இவையும் மற்றும் பல நம்பிக்கைகளும், ஒன்று சரியாக இருக்க வேண்டும் அல்லது தவறாக இருக்க வேண்டும். ஒன்று மற்றொன்றுடன் ஒத்திராமல் இருக்கையில் இரண்டு தொகுதிகளாய்ச் சத்தியம் இருக்க முடியாது. இரண்டில் ஒன்றுதான் சத்தியமாக இருக்கும், இரண்டுமே சத்தியமாக இருக்க முடியாது. ஏதோ, ஒன்று உண்மையில் தவறாக இருக்கிறதென்றால், அதை மனதார நம்புவதும், அந்த நம்பிக்கையைப் பழக்கமாகக் கடைப்பிடிப்பதும் அதைச் சரியானதாக்கிவிடாது.

20 நீங்கள் நம்புவது தவறானது என்பதை நிரூபித்துக் காட்டினால் நீங்கள் எப்படி உணர வேண்டும்? உதாரணமாக, நீங்கள் ஒரு மோட்டார் வண்டியில் இருக்கிறீர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு முதல் தடவையாகப் பயணப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் பாதை காட்டும் படம் இருக்கிறது, ஆனால் அதுதான் சரியான பாதையா என்று அதில் கவனமாய்ப் பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ள நீங்கள் நேரமெடுக்கவில்லை. யாரோ ஒருவன் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை உங்களுக்குச் சொல்லியிருக்கிறான். நீங்கள் அவனை நம்புகிறீர்கள், அவன் உங்களுக்குக் காட்டின பாதை சரி என்பதாக நீங்கள் மனதார நம்புகிறீர்கள். ஆனால் அது சரியான பாதை இல்லை என்று வைத்துக் கொள்வோம். யாரோ ஒருவர் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டுகிறாரென்றால் எப்படி? நீங்கள் தவறான பாதையில் இருக்கிறீர்கள் என்பதை அவர் நீங்கள் வைத்திருக்கும் பாதை காட்டும் வரைபடத்திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறாரென்றால் எப்படி? நீங்கள் தவறான பாதையில் இருக்கிறீர்களென்பதை ஒப்புக்கொள்ளாதபடி பெருமை அல்லது பிடிவாதம் உங்களைத் தடுத்து வைக்குமா? சரி. அப்படியானால், உங்கள் பைபிளை ஆராய்ந்து பார்ப்பதிலிருந்து, நீங்கள் தவறான ஒரு மத பாதையில் சென்று கொண்டிருப்பதாக உணருவீர்களென்றால், அதை மாற்றிக் கொள்ள மனமுள்ளவர்களாயிருங்கள். அழிவுக்குப் போகிற விசாலமான பாதையைத் தவிருங்கள்; ஜீவனுக்குப் போகிற இடுக்கமான பாதையில் முன்னேறுங்கள்!

கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அவசியம்

21 பைபிளின் சத்தியங்களை அறிவது முக்கியமானது. என்றாலும் நீங்கள் கடவுளை வணங்குவது சத்தியத்திற்கிசைய இல்லை என்றால் இந்த அறிவு பயனற்றது. (யோவான் 4:24) சத்தியத்தைப் பழக்கமாய் செயல்படுத்தி வருவதே, கடவுளுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருப்பதே முக்கியமாய் கருதப்படுகிறது. “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது,” என்று பைபிள் சொல்லுகிறது. (யாக்கோபு 2:26) அப்படியானால், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு உங்கள் மதம் பைபிளுடன் முழுவதுமாய் ஒத்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பொருத்திப் பிரயோகிக்கப்படவும் வேண்டும். ஆகையால், தவறு என்று கடவுள் சொல்லுகிறதை நீங்கள் செய்து கொண்டிருப்பதாகக் கற்றறிவீர்களானால், உங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் மனமுள்ளவர்களாக இருப்பீர்களா?

22 கடவுளுடைய சித்தத்தை நீங்கள் செய்வீர்களானால் மிகுந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுதேயுங்கூட நீங்கள் நன்மையடைவீர்கள். மெய் மதத்தை நடைமுறையில் செயல்படுத்தி வருவதானது உங்களை மேம்பட்ட ஓர் ஆளாக்கும்—மேம்பட்ட ஓர் ஆணாக, கணவனாக அல்லது தகப்பனாக, மேம்பட்ட பெண்ணாக, மனைவியாக அல்லது தாயாக, மேம்பட்ட ஒரு பிள்ளையாக ஆக்கும். நீங்கள் சரியானதைச் செய்வதன் காரணமாக மற்றவர்களுக்குள் தனிப்பட்டு நிற்கும்படி உங்களைச் செய்விக்கிற தெய்வீகப் பண்புகளை அது உங்களில் உண்டுபண்ணும். ஆனால், அதற்கும் மேலாக, கடவுளுடைய பரதீஸான புதிய பூமியில் மகிழ்ச்சியிலும் முழு நிறைவான ஆரோக்கியத்திலும் நித்திய வாழ்க்கையின் இந்த ஆசீர்வாதங்களைப் பெறும் நிலையில் நீங்கள் இருப்பீர்களென்பதை இது அர்த்தப்படுத்தும். (2 பேதுரு 3:13) உங்கள் மதம் எது என்பது உண்மையில் முக்கியத்துவமுடையது—இதைப் பற்றி எவ்வித சந்தேகமுமில்லை!

[கேள்விகள்]

1. மதத்தைப் பற்றி சில ஆட்கள் என்ன நம்புகின்றனர்?

2. (எ) பரிசேயர் இயேசுவை எப்படி நடத்தினார்கள்? (பி) யாரைத் தங்கள் தகப்பனாக உரிமை பாராட்டினார்கள்?

3. பரிசேயரின் தகப்பனைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

4. பரிசேயரின் மதத்தை இயேசு எப்படிக் கருதினார்?

5. பல மதங்கள் வெறுமென ஒரே இடத்திற்கு வழிநடத்துகிற வெவ்வேறு பாதைகளல்ல என்று இயேசு எப்படிக் காட்டினார்?

6. இஸ்ரவேல் ஜனத்தின் வணக்கத்தைச் சற்றுக் கவனித்துப் பார்ப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

7, 8. (எ) உலகப் போர்களின்போது மதம் என்ன நிலையை ஏற்றது? (பி) போர் நடந்த காலத்தின்போது மதம் செய்ததைத் கடவுள் எப்படி உணருகிறார் என்று நினைக்கிறீர்கள்?

9. (எ) வெவ்வேறு மதங்களின் அங்கத்தினரால் செய்யப்பட்ட குற்றச் செயல்களைப் பற்றிப் பல ஆட்கள் எப்படி உணர்ந்திருக்கின்றனர்? (பி) மதம் தன்னை இவ்வுலகத்தின் பாகமாக்குகையில் நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்?

10. மதத்தின் பெயரில் செய்யப்படுகிற, ஆனால் நீங்கள் சரியென்று ஒப்புக்கொள்ளாத சில காரியங்கள் யாவை?

11. நம்முடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத் தக்கதாய் இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?

12. பரிசேயரின் வணக்கம் கடவுளால் அங்கீகரிக்கப்படவில்லை என்று இயேசு ஏன் சொன்னார்?

13. கடவுளால் அங்கீகரிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்?

14. நாம் “நற்செயல்களைச்” செய்து வந்தபோதிலும் இயேசு ஏன் நம்மை “அக்கிரமச் செய்கைக்காரர்” என்று கருதக்கூடும்?

15. பூர்வ பெரோயா பட்டணத்து மக்கள் ஏற்ற போக்கு ஏன் நாம் பின்பற்றுவதற்குத் தகுந்த ஞானமான போக்காக இருக்கிறது?

16. ஓர் ஆள் கடவுளால் அங்கீகரிக்கப்பட உண்மை மனதுடன் காரியங்களைச் செய்வது மாத்திரமே போதுமானதல்ல என்பதைக் காட்ட இயேசு என்ன சொன்னார்?

17. பவுல் உண்மை மனமுள்ளவனாயிருந்தபோதிலும், கிறிஸ்தவனாவதற்கு முன்பு என்ன செய்தான்?

18. (எ) பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினபோது அவனுடைய மதம் என்னவாக இருந்தது? (பி) ஏன் பவுலும் அவனுடைய நாளிலிருந்த மற்றவர்களும் தங்கள் மதத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருந்தது?

19. சத்தியம் வெவ்வேறு மத கோட்பாடுகளுக்கு இடமளிக்காது என்பதை எது காட்டுகிறது?

20. மதத்தைக் குறித்ததில், நாம் எப்படி சரியான “பாதை குறியீட்டுப் படத்தைப்” பின்பற்றலாம்?

21. (எ) சத்தியத்தை அறிவதோடுகூட, வேறு எதுவும் அவசியமாயிருக்கிறது? (பி) நீங்கள் செய்கிற சில காரியங்களைக் கடவுள் அங்கீகரிக்கிறதில்லை என்று நீங்கள் கற்றறிகிறீர்களென்றால் என்ன செய்வீர்கள்?

22. மெய் மதத்தை நாம் நடைமுறையில் செயல்படுத்தி வருவோமானால், என்ன நன்மைகளை நாம் இப்பொழுதும் எதிர்காலத்திலும் அனுபவித்து மகிழலாம்?

[பக்கம் 25-ன் படம்]

இயேசுவைக் கொல்ல முயன்ற இந்த மதத் தலைவர்கள் கடவுளைச் சேவிப்பவர்களாக இருந்தார்களா?

[பக்கம் 26, 27-ன் படங்கள்]

அழிவுக்குப் போகும் விசாலமான வழியில் அநேகர், ஜீவனுக்குப்போகும் இடுக்கமான வழியில் வெகு சிலரே இருக்கின்றனர் என்று இயேசு சொன்னார்

[பக்கம் 28, 29-ன் படம்]

“அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.”—தீத்து 1:16.

வார்த்தையில்

செயலில்

[பக்கம் 30-ன் படம்]

மத வேறுபாட்டின் காரணமாக, கிறிஸ்துவின் சீஷனாகிய ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்லுவதில் பவுல் பங்குகொண்டான்

[பக்கம் 33-ன் படம்]

நீங்கள் ஒருவேளை தவறான பாதையில் இருக்கிறீர்கள் என்றால், அதை ஒப்புக்கொள்ளாதபடி பெருமை அல்லது பிடிவாதம் உங்களைத் தடுத்து வைக்குமா?