Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுதல்—யாருக்கு? எங்கே?

உயிர்த்தெழுதல்—யாருக்கு? எங்கே?

அதிகாரம் 20

உயிர்த்தெழுதல்—யாருக்கு? எங்கே?

உயிர்த்தெழுதலில் கடவுளுடைய ஊழியர் எப்பொழுதுமே நம்பிக்கை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். இயேசு ஒரு மனிதனாகப் பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆபிரகாமைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “[தன் மகனாகிய ஈசாக்கை] மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி”னான். (எபிரெயர் 11:17-19) பின்னால் கடவுளுடைய ஊழியனாகிய யோபு: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று கேட்டான். தன் சொந்தக் கேள்விக்குப் பதில் சொல்பனாய் யோபு கடவுளிடம் பின்வருமாறு கூறினான்: “என்னைக் கூப்பிடும் [கூப்பிடுவீர், NW], அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.” இப்படியாக அவன் உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் காட்டினான்.—யோபு 14:14, 15.

2 இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, அவர் பின்வருமாறு விளக்கினார்: “மரித்தோர் எழுப்பப்படுவார்களென்பதை மோசேயும் முட்செடியைப் பற்றிய வாசகத்தில் தெரியக் காட்டியிருக்கிறான். கர்த்தரை [யெகோவாவை, NW] ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று சொல்லியிருக்கிறானே. அவர் மரித்தோரின் கடவுளல்ல, ஜீவனுள்ளோரின் கடவுளே. அவருக்கு [அவர்கள்] எல்லாரும் ஜீவனுள்ளவர்களே.” (லூக்கா 20:37, 38, தி.மொ.) கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் “உயிர்த்தெழுதல்” என்ற இந்தச் சொல் 40 தடவைகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே, மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஒரு முக்கியமான பைபிள் போதகம்.—எபிரெயர் 6:1, 2.

3 தன் சகோதரனாகிய லாசரு மரித்தபோது, இயேசுவின் நண்பரில் ஒருவராக இருந்த மார்த்தாள் உயிர்த்தெழுதலில் விசுவாசத்தைக் காட்டினாள். இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்தவுடன், அவரைச் சந்திக்க மார்த்தாள் ஓடினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திரான்,” என்று அவள் சொன்னாள். அவளுடைய துக்கத்தைக் கண்டு, இயேசு, “உன் சகோதரன் எழுந்திருப்பான்,” என்று சொல்லி அவளை ஆறுதல்படுத்தினார். அதற்கு மார்த்தாள் “கடைசி நாள் உயிர்த்தெழுதலில் அவனும் எழுந்திருப்பானென்று எனக்குத் தெரியுமென்றாள்.”—யோவான் 11:17-24, தி.மொ.

4 உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டிருக்க மார்த்தாளுக்குப் பலத்தக் காரணங்கள் இருந்தன. உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பாகக் கடவுளுடைய தீர்க்கதரிசிகளாகிய எலியாவும் எலிசாவும் கடவுளுடைய வல்லமையால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிள்ளையை உயிர்த்தெழுப்பியிருந்தார்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள். (1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:32-37) செத்த ஒரு மனிதனின் பிணம் ஒரு குழிக்குள் எறியப்பட்டு, அது, செத்த எலிசாவின் எலும்புகளைத் தொட்டபோது, அந்தச் செத்த மனிதன் உயிரடைந்தான் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். (2 இராஜாக்கள் 13:20, 21) ஆனால் இயேசு தாமே கற்பித்தவையும் செய்தவையுமே உயிர்த்தெழுதலில் அவளுடைய விசுவாசத்தை மிக அதிகமாய்ப் பலப்படுத்தியிருந்தது.

5 இரண்டுக்கும் குறைந்த ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு, மரித்தோரை உயிர்த்தெழுப்புவதில் தமக்கு இருக்கப்போகிற பாகத்தைப் பற்றிப் பேசினபோது, மார்த்தாள் அங்கே எருசலேமில் ஒருவேளை இருந்திருக்கலாம். அவர் சொன்னதாவது: “பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். இதைக்குறித்து ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, . . . எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்.”—யோவான் 5:21, 28, 29.

6 இயேசு இந்த வார்த்தைகளைப் பேசின அந்தச் சமயம் வரையில், அவர் எவரையாவது உயிர்த்தெழுப்பியிருந்ததைப் பற்றிய எந்தப் பதிவும் பைபிளில் இல்லை. ஆனால் இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் நாயீன் ஊரில் ஒரு விதவையின் மகனான, ஓர் வாலிபனை உயிர்த்தெழுப்பினார். இதைப் பற்றிய செய்தி தெற்கே யூதேயாவுக்குப் பரவினது, ஆகவே மார்த்தாள் இதைப் பற்றி நிச்சயமாகவே கேள்விப்பட்டிருக்க வேண்டும். (லூக்கா 7:11-17) பின்னால், கலிலேயாக் கடலுக்கருகில் யவீருவின் வீட்டில் நடந்ததையுங்கூட மார்த்தாள் கேள்விப்பட்டிருப்பாள். அவனுடைய 12 வயதான மகள் மிகவும் வியாதிப்பட்டு இறந்துவிட்டாள். இயேசு யவீருவின் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது, அவர் அந்த இறந்த பிள்ளையினிடமாகச் சென்று, “சிறு பெண்ணே எழுந்திரு,” என்று சொன்னார். அவள் அப்படியே உயிரோடு எழுந்திருந்தாள்!—லூக்கா 8:40-56, தி.மொ.

7 என்றபோதிலும் மார்த்தாள், இந்தச் சமயத்தில் தன்னுடைய சகோதரனை இயேசு உயிர்த்தெழுப்புவாரென்று எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே அவள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்,” என்று சொன்னாள். என்றாலும், மரித்தோரை உயிர்த்தெழுப்புகிறதில் தமக்கிருக்கும் இந்தப் பங்கை மார்த்தாளுக்கு அறிவுறுத்தும்படி இயேசு பின்வருமாறு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” சீக்கிரத்திலேயே இயேசு, லாசரு அடக்கஞ் செய்யப்பட்டிருந்த அந்தக் கல்லறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். “லாசருவே, வெளியே வா!” என்று அவர் சத்தமாய்ச் சொன்னார். நான்கு நாட்கள் செத்தப் பிணமாயிருந்த லாசரு வெளியே வந்தான்!—யோவான் 11:24-26, 38-44.

8 சில வாரங்களுக்கப்பால் இயேசு தாமே கொல்லப்பட்டு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டார். ஆனால் அங்கே அவர் மூன்று நாட்களின் பகுதிகள் மாத்திரமே இருந்தார். ஏன் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு சொல்லி விளக்குகிறான்: “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.” கடவுளுடைய குமாரன் அந்தக் கல்லறையிலிருந்து வெளிவருவதை அந்த மதத் தலைவர்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. (அப்போஸ்தலர் 2:32; மத்தேயு 27:62-66; 28:1-7) கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது, ஏனெனில் அவர் உயிர்த்தெழுந்த பின்பு தம்முடைய சீஷர்கள் பலருக்குத் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார், ஒரு தடவை அவர்களில் ஏறக்குறைய 500 பேருக்குத் தம்மைக் காட்டினார். (1 கொரிந்தியர் 15:3-8) இயேசுவின் சீஷர்கள் இந்த உயிர்த்தெழுதலில் அவ்வளவு உறுதியாய் நம்பிக்கைக் கொண்டிருந்ததனால் கடவுளைச் சேவிப்பதற்கு மரிக்கவும் மனமுள்ளவர்களாக இருந்தார்கள்.

9 மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படக் கூடுமென்பதற்கு மேலுமான நிரூபணம் அப்போஸ்தலராகிய பேதுருவின் மூலமும் பவுலின் மூலமும் பின்னால் கொடுக்கப்பட்டது. முதலாவதாக, பேதுரு, யோப்பா பட்டணத்தைச் சேர்ந்தவளான தபீத்தாளை உயிர்த்தெழுப்பினான், இவள் தொற்காள் என்றும் அழைக்கப்பட்டாள். (அப்போஸ்தலர் 9:36-42) பிறகு பவுல், தான் பேசிக்கொண்டிருந்தபோது மூன்றாம் மாடியின் பலகணியிலிருந்து கீழே விழுந்து செத்த இளைஞனான ஐத்திகுவைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவந்தான். (அப்போஸ்தலர் 20:7-12) பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற இந்த ஒன்பது உயிர்த்தெழுதல்கள் மரித்தோர் திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படக்கூடும் என்பதற்கு நிச்சய நிரூபணத்தைக் கொடுக்கின்றன.

யார் உயிர்த்தெழுப்பப்படுவர்?

10 தொடக்கத்தில் எவரையாவது உயிர்த்தெழுப்புவது கடவுளுடைய நோக்கமாக இல்லை, ஏனென்றால் ஆதாமும் ஏவாளும் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பார்களேயானால் எவரும் சாக வேண்டியதாய் இருந்திராது. ஆனால், பின்னால் ஆதாமின் பாவம் அபூரணத்தையும் மரணத்தையும் எல்லோர் மீதும் கொண்டு வந்தது. (ரோமர் 5:12) ஆகவே ஆதாமின் பிள்ளைகள் எவராவது நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வதைக் கூடிய காரியமாக்க, யெகோவா தேவன் உயிர்த்தெழுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். ஆனால் ஒருவன் உயிர்த்தெழுப்பப்படுவானா இல்லையா என்பதை எது தீர்மானிக்கும்?

11 பைபிள் பின்வருமாறு விளக்குகிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” (அப்போஸ்தலர் 24:15) இது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். “அநீதிமான்களை ஏன் திரும்ப உயிருக்கு கொண்டு வர வேண்டும்?” என்று அவர்கள் அதிசயிக்கலாம். இயேசு அந்த வாதனைக்குரிய கழுமரத்தின்மீது தொங்கிக் கொண்டிருந்த போது நடந்த ஒரு காரியம் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க நமக்கு உதவி செய்யும்.

12 இயேசுவுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருக்கிற இந்த ஆட்கள் பெருங் குற்றவாளிகள். இவர்களில் ஒருவன் அப்பொழுது தான் இயேசுவை: “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள்,” என்று சொல்லி இகழ்ந்து முடித்திருக்கிறான். என்றாலும் அந்த மற்றக் குற்றவாளி இயேசுவை விசுவாசிக்கிறான். அவன் அவரிடமாகத் திரும்பி: “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்று சொல்லுகிறான். அதற்கு இயேசு: “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,” என்று வாக்குக் கொடுக்கிறார்.—லூக்கா 23:39-43, NW.

13 ஆனால்: “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,” என்று தாம் சொல்லுகையில் என்ன பொருள் கொள்ளுகிறார்? பரதீஸ் எங்கே இருக்கிறது? தொடக்கத்தில் கடவுள் உண்டாக்கின அந்தப் பரதீஸ் எங்கே இருந்தது? அது பூமியில் இருந்தது, அல்லவா? ஏதேன் தோட்டம் என்றழைக்கப்பட்ட அந்த அழகிய பரதீஸில் கடவுள் அந்த முதல் மனிதத் தம்பதிகளை வைத்தார். ஆகவே இந்த முன்னாள் குற்றவாளி பரதீஸில் இருப்பான் என்று நாம் வாசிக்கையில், இந்தப் பூமி வாழ்வதற்கு ஒரு மிக அழகிய இடமாக்கப்பட்டிருப்பதை நம்முடைய மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். ஏனென்றால் “பரதீஸ்” என்ற இந்தச் சொல் “தோட்டம்” அல்லது “பூங்கா” என்று பொருள் கொள்கிறது.—ஆதியாகமம் 2:8, 9.

14 நிச்சயமாகவே இயேசுகிறிஸ்து, இந்த முன்னாள் குற்றவாளியுடன் இங்கே பூமியிலேதானே இருக்கமாட்டார். இல்லை, இயேசு பரலோகத்தில் அரசராக இந்தப் பூமிக்குரிய பரதீஸின் மேல் ஆண்டுகொண்டிருப்பார். ஆகவே அவர் அவனை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பி, உடல் சம்பந்தமாகவும் ஆவிக்குரிய பிரகாரமும் அவனுடைய தேவைகளைக் கவனித்துக் கொள்வார் என்ற இந்தக் கருத்திலேயே அவர் அவனுடன் இருப்பார். ஆனால் குற்றவாளியாயிருந்த ஒருவனைப் பரதீஸில் வாழும்படி இயேசு ஏன் அனுமதிப்பார்?

15 இந்த மனிதன் கெட்ட காரியங்களைச் செய்தான் என்பது மெய்யே. இவன் “அநீதிமானாக” இருந்தான். மேலும், கடவுளுடைய சித்தத்தைப் பற்றி அறியாதவனாயிருந்தான். ஆனால் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி இவன் அறிந்திருப்பானேயாகில் ஒரு குற்றவாளியாக இருந்திருப்பானா? இதைக் கண்டுபிடிக்க, இயேசு இந்த அநீதியுள்ள மனிதனையும், மேலும் அறியாமையில் செத்த கோடிக்கணக்கான மற்றவர்களையுங்கூட உயிர்த்தெழுப்புவார். உதாரணமாக, கடந்த நூற்றாண்டுகளில் படிக்கத் தெரியாதவர்களும் ஒரு பைபிளை ஒருபோதும் பார்த்திராதவர்களுமான பலர் செத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் ஷியோல், அல்லது ஹேடீஸிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவர். பின்பு, பரதீஸ் பூமியில், இவர்கள் கடவுளுடைய சித்தம் இன்னதென்று கற்பிக்கப்படுவார்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன்மூலம் தாங்கள் உண்மையில் கடவுளை நேசிக்கிறார்களென்று நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பும் இருக்கும்.

16 இது எல்லோரும் ஓர் உயிர்த்தெழுதலைப் பெறுவார்களென்று பொருள் கொள்ளுகிறதில்லை. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து உயிர்த்தெழுதலைப் பெறமாட்டான் என்று பைபிள் காட்டுகிறது. தெரிந்து வேண்டுமென்றே செய்த அவனுடைய பொல்லாப்பின் காரணமாக, யூதாஸ் “அழிவின் மகன்” என்று அழைக்கப்பட்டிருக்கிறான். (யோவான் 17:12, தி.மொ.) அவன் அடையாளக் குறிப்பான கெஹென்னாவுக்குச் சென்றான், அதிலிருந்து உயிர்த்தெழுதல் கிடையாது. (மத்தேயு 23:33) கடவுளுடைய சித்தத்தை அறிந்த பின்பு வேண்டுமென்றே கெட்டதைச் செய்கிற ஆட்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவஞ் செய்கிறவர்களாக இருக்கக்கூடும். தம்முடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவஞ் செய்கிறவர்களைக் கடவுள் உயிர்த்தெழுப்ப மாட்டார். (மத்தேயு 12:32; எபிரெயர் 6:4-6; 10:26, 27) என்றபோதிலும், கடவுளே நியாயாதிபதியாக இருக்கிறார், ஆதலால், கடந்த காலத்திலோ தற்காலங்களிலோ குறிப்பிட்ட பொல்லாத ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்களா இல்லையா என்பதை ஊகித்து மதிப்பிடுவதற்கு எவ்வித காரணமுமில்லை. யார் ஹேடீஸில் இருக்கிறார்கள் யார் கெஹென்னாவில் இருக்கிறார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். நம்முடைய பங்கில், நாம், கடவுள் தம்முடைய புதிய ஒழுங்குமுறையில் இருக்கும்படி விரும்புகிற அந்த வகையான ஆட்களாயிருக்க நம்மால் கூடிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.—லூக்கா 13:24, 29.

17 உண்மை என்னவென்றால், நித்திய ஜீவனைப் பெறப்போகிற எல்லாருமே உயிர்த்தெழுப்பப்பட வேண்டியவர்களாக இரார். இப்பொழுது, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” வாழ்ந்து கொண்டிருக்கிற கடவுளுடைய ஊழியர் பலர் அர்மகெதோனினூடே தப்பிப்பிழைத்து உயிர்வாழ்வார்கள். பின்பு நீதியுள்ள அந்தப் “புதிய பூமி”யின் பாகமானவர்களாய் அவர்கள் ஒருபோதுமே சாக வேண்டியதில்லை. இயேசு மார்த்தாளுக்குப் பின்வருமாறு சொன்னது சொல்லர்த்தமான முறையில் அவர்களுக்கு உண்மையாயிருக்கக்கூடும்: “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.”—யோவான் 11:26; 2 தீமோத்தேயு 3:1.

18 உயிர்த்தெழுப்பப்படப் போகிற அந்த “நீதிமான்கள்” யார்? இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு முன்பாக வாழ்ந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களும் இவர்களில் அடங்கியிருப்பர். இவர்களில் பலர் எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பரலோகத்துக்குப் போகும்படியான நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. மறுபடியும் பூமியில் வாழும்படியே நம்பிக்கைக் கொண்டிருந்தனர். மேலும் உயிர்த்தெழுப்பப்படப் போகிற இந்த “நீதிமான்களுக்குள்” சமீப ஆண்டுகளில் மரித்திருக்கிற கடவுளுடைய உண்மையுள்ள ஊழியருங்கூட இருப்பார்கள். இவர்களை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதன் மூலம், பூமியில் என்றும் வாழும் அவர்கள் நம்பிக்கை மெய்யாய் நிறைவேறும்படி கடவுள் பார்த்துக்கொள்வார்.

எப்பொழுது எங்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள்

19 இயேசு கிறிஸ்து “மரித்தோர் உயிர்த்தெழுதலில் முதல்வர்,” என்பதாகப் பேசப்பட்டிருக்கிறார். (அப்போஸ்தலர் 26:23) இது, மறுபடியும் சாக வேண்டியதாயிராதவர்களில் அவரே முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டவர் என்று பொருள் கொள்ளுகிறது. மேலும் அவரே ஓர் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்ட முதல்வராகவும் இருந்தார். (1 பேதுரு 3:18) ஆனால் பைபிள், இப்படிப்பட்ட மற்றவர்களுங்கூட இருப்பார்கள் என்று நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறது: “அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்: முதற் பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் [வந்திருத்தலின்போது, NW] அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:20-23) ஆகவே சிலர் வேறு சிலருக்கு முன்னதாக உயிர்த்தெழுப்பப்படுவர்.

20 “அவருடையவர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறவர்கள் ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆளுவதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட உண்மையுள்ள 1,44,000 சீஷர்களேயாவர். இவர்களுடைய பரலோக உயிர்த்தெழுதலைக் குறித்து, பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் . . . அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:6; 14:1, 3.

21 ஆகவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பின்தொடர்ந்து, 1,44,000 பேர் அடுத்தபடியாக எழுப்பப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் அந்த “முதலாம் உயிர்த்தெழுதலில்,” அல்லது அந்த “முந்தின உயிர்த்தெழுதலில்” பங்குடையவர்களாக இருக்கிறார்கள். (பிலிப்பியர் 3:11, NW; தமிழ் பைபிளில் 10-ஆம் வசனம்) இது எப்பொழுது நடந்தேறுகிறது? “அவருடைய வந்திருத்தலின் போது” என்று பைபிள் சொல்லுகிறது. முந்தின அதிகாரங்களில் நாம் கற்றறிந்திருக்கிறபடி, கிறிஸ்துவின் வந்திருத்தல் 1914-ம் ஆண்டில் தொடங்கினது. ஆகவே உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு எழுப்பப்படும் இந்த “முதலாம் உயிர்த்தெழுதலுக்”குரிய “அந்நாள்” ஏற்கெனவே வந்துவிட்டது. அப்போஸ்தலரும் மற்றப் பூர்வ கிறிஸ்தவர்களும் ஏற்கெனவே பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.—2 தீமோத்தேயு 4:8.

22 ஆனால், கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆளும் இதே நம்பிக்கையையுடைய கிறிஸ்தவர்கள், கிறிஸ்து காணக்கூடாதவராய் வந்திருக்கும் இக்காலத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களே அந்த மீதியானோர், அந்த 1,44,000-த்தில் ஒரு மீதிபேர். இவர்கள் எப்பொழுது உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்? இவர்கள் மரணத்தில் தூங்க வேண்டியதில்லை, இவர்கள் சாகையில் உடனடியாக எழுப்பப்படுகிறார்கள். பைபிள் பின்வருமாறு விளக்குகிறது: “நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் . . . எழுந்திருப்பார்கள்.”—1 கொரிந்தியர் 15:51, 52; 1 தெசலோனிக்கேயர் 4:15-17.

23 நிச்சயமாகவே, பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படும் இந்த “முதலாம் உயிர்த்தெழுதல்” மனித கண்களுக்குப் புலப்படாததாயிருக்கும். இது ஆவி சிருஷ்டிகளாக வாழ்வதற்கு எழுப்பப்படும் ஓர் உயிர்த்தெழுதல். ஆவி வாழ்க்கைக்கு மாறும் இந்த மாற்றத்தைப் பைபிள் பின்வருமாறு விவரிக்கிறது: “அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; . . . ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்.”—1 கொரிந்தியர் 15:42-44.

24 என்றபோதிலும், “முதலாம் உயிர்த்தெழுதல்” என்ற கூற்றுதானேயும் மற்றொன்று இதைப் பின்தொடருமென்று காட்டுகிறது. இது பரதீஸான பூமியில் வாழும்படி நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுதல் ஆகும். இது அர்மகெதோனுக்குப் பின்பு நடைபெறும். இது எலியாவாலும் எலிசாவாலும் உயிர்த்தெழுப்பப்பட்ட அந்தப் பையன்கள், மேலும் பூமியில் ஒரு காலத்தில் எழுப்பப்பட்ட மற்றவர்கள் ஆகியோரின் உயிர்த்தெழுதலைப் பார்க்கிலும் “மேன்மையான உயிர்த்தெழுதலாக” இருக்கும். ஏன்? ஏனென்றால் அர்மகெதோனுக்குப் பின்பு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் கடவுளைச் சேவிக்கத் தெரிந்து கொள்வார்களென்றால் அவர்கள் மறுபடியும் ஒருபோதும் சாக வேண்டியதில்லை.—எபிரெயர் 11:35.

கடவுளுடைய ஓர் அற்புதம்

25 ஓர் ஆள் செத்த பின்பு, எது உயிர்த்தெழுப்பப்படுகிறது? செத்த அதே உடல் அல்ல. பரலோக வாழ்க்கைக்குரிய உயிர்த்தெழுதலை விவரிக்கையில் பைபிள் இதைக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 15:35-44) பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுங்கூட, தாங்கள் முன்பு வாழ்ந்திருந்த அதே உடலைப் பெறுகிறதில்லை. அந்த உடல் அநேகமாய் அழுகி மண்ணுக்குத் திரும்பிவிட்டிருக்கும். காலப் போக்கில் அந்தச் செத்த உடலின் மூலப்பொருட்கள் ஒருவேளை மற்ற உயிருள்ள பொருட்களின் பாகமாகிவிட்டிருக்கலாம். ஆகவே கடவுள் அதே உடலை அல்ல ஆனால் செத்த அதே ஆளை உயிர்த்தெழுப்புகிறார். பரலோகத்துக்குப் போகிற ஆட்களுக்கு, ஒரு புதிய ஆவிக்குரிய உடலை அவர் கொடுக்கிறார். பூமியில் வாழும்படி எழுப்பப்படுகிறவர்களுக்கு, ஒரு புதிய மாம்ச உடலை அவர் கொடுக்கிறார். இந்தப் புதிய மாம்ச உடல் சந்தேகமில்லாமல், அந்த ஆள் சாவதற்கு முன்பாகக் கொண்டிருந்த அந்த உடலுக்கு ஒப்பானதாயிருக்கும், இவ்வாறாக அவன் தன்னை அறிந்த மற்றவர்களால் அடையாளங் கண்டுகொள்ளப்படுவான்.

26 உயிர்த்தெழுதல் நிச்சயமாகவே ஓர் அதிசயமான அற்புதமாய் இருக்கிறது. செத்த அந்த ஆள் தன்னுடைய வாழ்நாளின்போது மிகுதியான அனுபவத்தையும் அறிவையும் பல நினைவுக் குறிப்புகளையும் படிப்படியாகக் கட்டியமைத்து வந்திருக்கலாம். உயிர்வாழ்ந்த மற்ற எந்த ஆளிலிருந்தும் அவனை வேறுபடுத்தின தனக்கேயுரிய ஒரு தனி பண்பியல்பை அவன் வளர்த்து வந்திருந்தான். என்றபோதிலும் யெகோவா தேவன் அந்த ஒவ்வொரு நுட்பத்தையும் நினைவில் வைத்திருக்கிறார், அவனை அவர் உயிர்த்தெழுப்புகையில் இந்த முழு தனி இயல்பையும் அவனில் திரும்ப வைப்பார். உயிர்த்தெழுப்பப்படப் போகிற மரித்தோரைக் குறித்து பைபிள் சொல்லுகிற பிரகாரம் இவர்கள்: “எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே.” (லூக்கா 20:38) மனிதர், ஆட்களின் குரல்களையும் உருவப் படங்களையும் பதிவு செய்து, அந்த ஆட்கள் மரித்து வெகு காலமாகிவிட்ட பின்பும் அவற்றைத் திரும்ப கேட்கவும் பார்க்கவும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யெகோவா, தம்முடைய நினைவில் உயிருள்ளவர்களாக இருக்கிற எல்லா ஆட்களையும் திரும்ப உயிருக்குக் கொண்டுவர முடியும், உண்மையில் கொண்டும் வருவார்!

27 இந்த மரித்தோர் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு பரதீஸில் வாழ்க்கையைப் பற்றி இன்னும் மிக அதிகமானவற்றைப் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. உதாரணமாக, சிலர் “ஜீவனுக்கான ஓர் உயிர்த்தெழுதலையும்” மற்றவர்கள் “நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலையும்” அடைகிறவர்களாக, ஆட்கள் வெளிவருவதைப் பற்றி இயேசு பேசினார். (யோவான் 5:29, NW) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? உயிர்த்தெழுப்பப்படுகிற “அநீதிமான்களுக்கு” இருக்கப்போகும் சூழ்நிலைமை, “நீதிமான்களுக்குரிய” சூழ்நிலைமையிலிருந்து வேறுபட்டதாக இருக்குமா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிய ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி நமக்குப் பதில் தரும்.

[கேள்விகள்]

1, 2. கடவுளுடைய பூர்வ கால ஊழியர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

3. உயிர்த்தெழுதலில் என்ன நம்பிக்கையை மார்த்தாள் வெளிப்படுத்திக் கூறினாள்?

4-6. உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் கொண்டிருக்க மார்த்தாளுக்கு என்ன காரணங்கள் இருந்தன?

7. தாம் மரித்தோரை உயிர்த்தெழுப்பக்கூடுமென்பதற்கு என்ன நிரூபணத்தை இயேசு மார்த்தாளுக்குக் கொடுத்தார்?

8. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

9. உயிர்த்தெழுப்பப்பட்டார்களென்று பைபிள் சொல்லுகிற அந்த ஒன்பது ஆட்கள் யாவர்?

10, 11. (எ) கடவுள் ஏன் உயிர்த்தெழுப்பப்படுவதற்கான இந்த ஏற்பாட்டைச் செய்தார்? (பி) அப்போஸ்தலர் 24:15-ன் பிரகாரம், எந்த இரண்டு வகுப்பினரான மக்கள் உயிர்த்தெழுப்பப்படுவர்?

12, 13. (எ) இயேசு, ஒரு குற்றவாளிக்கு என்ன வாக்கைக் கொடுத்தார்? (பி) இயேசு குறிப்பிட்டுப் பேசின அந்தப் “பரதீஸ்” எங்கே இருக்கிறது?

14. இயேசு எவ்வகையில் அந்த முன்னாள் குற்றவாளியுடன் பரதீஸில் இருப்பார்?

15. “அநீதிமான்கள்” ஏன் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்?

16. (எ) மரித்தோரில் எவர் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள்? (பி) காரியங்களைத் தீர்ப்பு செய்ய நாம் ஏன் முயலக் கூடாது? (சி) நம்முடைய முக்கிய அக்கறை என்னவாக இருக்க வேண்டும்?

17. நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ உயிர்த்தெழுப்பப்படுவது யாருக்கு தேவையிராது?

18. உயிர்த்தெழுப்பப்படப் போகிற அந்த “நீதிமான்கள்” யார்?

19. (எ) எந்தக் கருத்தில் இயேசு முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டவராக இருந்தார்? (பி) அடுத்தபடியாக உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் யார்?

20. (எ) “அவருடையவர்கள்” யார்? (பி) இவர்கள் எந்த உயிர்த்தெழுதலை அடைகிறார்கள்?

21. (எ) இந்த “முதலாம் உயிர்த்தெழுதல்” எப்பொழுது தொடங்குகிறது? (பி) சந்தேகமில்லாமல் யார் ஏற்கெனவே பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள்?

22. (எ) வேறு எவருக்கும் இந்த “முதலாம் உயிர்த்தெழுதலில்” பங்கிருக்கும்? (பி) இவர்கள் எப்பொழுது உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்?

23. ஆவி வாழ்க்கைக்கு மாறும் இந்த மாற்றத்தைப் பைபிள் எப்படி விவரிக்கிறது?

24. (எ) எந்த உயிர்த்தெழுதல் இந்த “முதலாம் உயிர்த்தெழுதலைப்” பின்தொடர்ந்து வருகிறது? (பி) இது ஏன் “மேன்மையான உயிர்த்தெழுதல்” என்று அழைக்கப்படுகிறது?

25. (எ) உயிர்த்தெழுப்பப்படுவது ஏன் மரித்த அந்த உடல் அல்ல? (பி) எது உயிர்த்தெழுப்பப்படுகிறது? உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறது?

26. (எ) இந்த உயிர்த்தெழுதல் ஏன் அப்பேர்ப்பட்ட ஓர் ஆச்சரியப்படக்கூடிய அற்புதம்? (பி) மரித்த ஆட்களை நினைவுக்குக் கொண்டுவரும் கடவுளுடைய இந்த மிக வல்லமை வாய்ந்தத் திறமையை விளங்கிக் கொள்ள மனிதரின் எந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு உதவி செய்யக்கூடும்?

27. இந்த உயிர்த்தெழுதலைப் பற்றிய எந்தக் கேள்விகளுக்குப் பதிலை நாம் பின்னால் தெரிந்து கொள்ளப்போகிறோம்?

[பக்கம் 167-ன் படங்கள்]

“உயிர்த்தெழுதலில் அவனும் எழுந்திருப்பானென்று எனக்குத் தெரியும்”

எலியா ஒரு விதவையின் மகனை உயிர்த்தெழுப்பினான்

எலிசா ஒரு பிள்ளையை உயிர்த்தெழுப்பினான்

எலிசாவின் எலும்புகளைத் தொட்ட ஒருவன் உயிரடைந்தான்

[பக்கம் 168-ன் படங்கள்]

இயேசுவால் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்:

நாயீன் ஊர் விதவையின் மகன்

லாசரு

யவீருவின் மகள்

[பக்கம் 169-ன் படங்கள்]

உயிர்த்தெழுப்பப்பட்ட மற்றவர்கள்:

தொற்காள்

இயேசு தாமேயும்

ஐத்திகு

[பக்கம் 170-ன் படம்]

இந்தத் தீயோனுக்கு இயேசு வாக்குக் கொடுத்த அந்தப் பரதீஸ் எங்கே இருக்கிறது?