Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு

கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு

அதிகாரம் 23

கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு

கடவுளுக்கு காணக்கூடிய ஓர் அமைப்பு இருக்கிறதென்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? அவருக்குக் காணக்கூடாத ஓர் அமைப்பு இருப்பதானது இதற்கு ஒரு காரணமாயிருக்கிறது. பரலோகங்களில் தமது சித்தத்தைச் செய்வதற்கு யெகோவா, கேரூபீன்களையும் சேராபீன்களையும் மற்றும் வேறு பல தூதர்களையும் படைத்தார். (ஆதியாகமம் 3:24; ஏசாயா 6:2, 3; சங்கீதம் 103:20) கூடுதலாக இயேசு கிறிஸ்து இவர்கள் எல்லோருக்கும் மேலாகப் பிரதான தூதராக இருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16; யூதா 9; வெளிப்படுத்துதல் 12:7) இந்தத் தூதர்கள் “சிங்காசனங்களாக, கர்தத்துவங்களாக, துரைத்தனங்களாக அல்லது அதிகாரங்களாக” ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருப்பதாய் பைபிள் விவரிக்கிறது. (கொலோசெயர் 1:16; எபேசியர் 1:21) இவர்களெல்லோரும் யெகோவாவின் கட்டளையின்பேரில் சேவிக்கிறார்கள், அவர் இவர்களுக்கு வைத்திருக்கிற வேலையை ஒற்றுமையாய் செய்துவருகிறார்கள்.—தானியேல் 7:9, 10; யோபு 1:6; 2:1.

2 கடவுளுடைய சடப்பொருளான படைப்புகளை நாம் ஆழ்ந்து கவனிக்கையிலும் அமைப்பின் பேரில் கடவுள் வைக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தை நாம் அடைகிறோம். உதாரணமாக, இந்தப் பிரபஞ்சத்தில் பல கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவை பால் வீதி மண்டலங்கள் என்று அழைக்கப்படுகிற மிகப் பெரும் தொகுதிகளாக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பால் வீதி மண்டலங்கள் வான வெளியினூடே ஒழுங்கான முறையில் சுற்றிவருகின்றன, இந்தப் பால் வீதி மண்டலங்களுக்குள் இருக்கும் தனி நட்சத்திரங்களும், கிரகங்களுங்கூட அவ்வாறே செய்கின்றன. உதாரணமாக, நம்முடைய கிரகமாகிய பூமி, ஒவ்வொரு ஆண்டும், நமக்கு வெகு அருகில் இருக்கிற நட்சத்திரமாகிய இந்தச் சூரியனைச் சுற்றி வருகிறது, இதைச் சரியாக 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள், 45.51 விநாடிகளில் செய்து முடிக்கிறது. ஆம், இந்தச் சடப்பொருளான பிரபஞ்சம் மிக உயர்வாய் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது!

3 கடவுளுடைய காணக்கூடாத படைப்புகளுக்குள்ளும் அவருடைய சடப்பொருளான பிரபஞ்சத்திலும் இருந்துவரும் இந்த அதிசயமான அமைப்பு நமக்கு எதையாவது கற்பிக்கிறதா? ஆம், யெகோவா அமைப்புக்குரிய கடவுள் என்று இது நமக்குக் கற்பிக்கிறது. அப்படியானால், நிச்சயமாகவே, இப்படிப்பட்ட கடவுள் தம்மை உண்மையில் நேசிக்கிற பூமியிலுள்ள மனிதரை, வழிநடத்துதலும் அமைப்பும் இல்லாமல் விட்டுவிடமாட்டார்.

கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு—கடந்த காலத்திலும் தற்காலத்திலும்

4 யெகோவா தம்முடைய ஊழியர்களை எப்பொழுதும் ஒழுங்குடன் அமைக்கப்பட்டுள்ள முறையில் வழிநடத்தியிருக்கிறாரென்று பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, ஆபிரகாமைப் போன்ற விசுவாசமுள்ள மனிதர் தங்கள் குடும்பங்களையும் வேலையாட்களையும் யெகோவாவை வணங்குவதில் வழிநடத்தியிருக்கின்றனர். யெகோவா ஆபிரகாமுடன் பேசுவதன் மூலம் அவனைக் குறித்ததில் தம்முடைய சித்தத்தை அவனுக்குத் தெரியப்படுத்தினார். (ஆதியாகமம் 12:1) இந்தத் தகவலை மற்றவர்களுக்குக் கடத்தும்படி கடவுள் அவனுக்குக் கட்டளையிட்டு பின்வருமாறு கூறினார்: “அவன் தன் பிள்ளைகளுக்கும் தனக்குப் பின்வரும் தன் சந்ததியாருக்கும் கட்டளையிட்டு அவர்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து யெகோவா காட்டின வழியில் நடக்கும்படி செய்ய வேண்டும் என்பதே நான் அவனைத் தெரிந்தெடுத்த நோக்கம்.” (ஆதியாகமம் 18:19, தி.மொ.) யெகோவாவைச் சரியான பிரகாரமாய் வணங்கும்படி இது ஒரு தொகுதியான மக்களுக்கு ஒழுங்கான முறைப்படியான ஏற்பாடாக இருந்தது.

5 பின்னால், இஸ்ரவேலர் எண்ணிக்கையில் அதிகரித்து, லட்சக்கணக்கானவர்களானபோது, எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாட்டுக்கும் விலகியவர்களாய்த் தனியே ஒவ்வொருவரும் அவரவருடைய சொந்த முறையில் வணங்கும்படி யெகோவா விட்டுவிடவில்லை. இல்லை, இஸ்ரவேலர் ஒழுங்குபடுத்தப்பட்ட வணக்கத்தாராலாகிய ஒரு ஜனமாக அமைக்கப்பட்டார்கள். இந்த இஸ்ரவேல் ஜனமானது “யெகோவாவின் சபை” என்றழைக்கப்பட்டது. (எண்ணாகமம் 20:4; 1 நாளாகமம் 28:8) அக்காலத்தில் யெகோவாவின் உண்மை வணக்கத்தானாக ஒருவன் இருந்தானானால் அவன் அந்த வணக்கத்தாராலாகிய சபையிலிருந்து விலகி தனியே அல்ல, அதன் ஒரு பாகமாகவே இருக்க வேண்டியதாயிருந்தது.—சங்கீதம் 147:19, 20.

6 முதல் நூற்றாண்டில் நிலைமை என்னவாக இருந்தது? தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களின்மீதே யெகோவாவின் தயை இருந்ததென்று பைபிள் காட்டுகிறது. யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை அவர்கள் மேல் ஊற்றினார். அந்த இஸ்ரவேல் ஜனத்தை அல்ல, இந்தக் கிறிஸ்தவ அமைப்பையே தாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு, அக்கால கிறிஸ்தவர்கள் சிலருக்கு நோயுற்றோரைச் சுகப்படுத்துவதற்கும், மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கும், மற்ற அற்புதங்களை நடப்பிப்பதற்கும் அவர் வல்லமையைக் கொடுத்தார். கிறிஸ்தவர்கள் வணக்கத்திற்காக ஒழுங்குபடுத்தப்பட்டவர்களாக அமைக்கப்பட்டிருந்தார்கள் என்ற இந்த உண்மையைக் கவனியாமல் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களை நீங்கள் வாசிக்க முடியாது. உண்மையில், இந்த நோக்கத்திற்காக ஒன்றாய்க் கூடிவரும்படி அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். (எபிரெயர் 10:24, 25) முதல் நூற்றாண்டில் யெகோவாவின் உண்மை வணக்கத்தானாக ஒருவன் இருந்தானென்றால், அவன் அவருடைய கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பாகமாக இருக்க வேண்டியதாக இருந்தது.

7 எந்தக் காலப்பகுதியின் போதாவது ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பை யெகோவா எப்பொழுதாவது பயன்படுத்தியிருக்கிறாரா? நோவாவின் நாளில் நோவாவும் அந்தப் பேழைக்குள் அவனோடு இருந்தவர்களும் மாத்திரமே கடவுளுடைய பாதுகாப்பை உடையவர்களாக இருந்து அந்தப் பிரளயத் தண்ணீர்களைத் தப்பிப்பிழைத்தார்கள். (1 பேதுரு 3:20) மேலும், முதல் நூற்றாண்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் இருக்கவில்லை. ஒரே ஒரு அமைப்புடனேயே கடவுள் தொடர்பு கொண்டார். “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமுமே,” இருந்தது. (எபேசியர் 4:5) அதைப்போலவே நம்முடைய நாளிலும், கடவுளுடைய ஜனங்களுக்கு ஆவிக்குரிய போதனையின் ஒரே ஒரு ஊற்றுமூலமே இருக்குமென்று இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார்.

8 ராஜ்ய அதிகாரத்தில் தாம் வந்திருப்பதைப் பற்றிச் சொல்லுகையில், இயேசு பின்வருமாறு கூறினார்: “ஏற்ற வேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [அடிமை, NW] யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே [அடிமை] பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:45-47) 1914-ம் ஆண்டில் ராஜ்ய அதிகாரத்தில் தாம் திரும்பி வந்தபோது, ஆவிக்குரிய “போஜனத்தை” அல்லது தகவலை அளித்துக்கொண்டிருந்த ஓர் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பைக் கிறிஸ்து கண்டாரா? ஆம், தம்முடைய 1,44,000 “சகோதரரில்” பூமியில் மீந்திருப்பவர்களாலாகிய அப்படிப்பட்ட ஓர் “அடிமை”யை அவர் கண்டார். (வெளிப்படுத்துதல் 12:10; 14:1, 3) மேலும் 1914 முதற்கொண்டு லட்சக்கணக்கான ஆட்கள் அவர்கள் கொடுத்துவரும் “போஜனத்தை” ஏற்று, அவர்களோடுகூட உண்மையான மதத்தைக் கடைப்பிடித்து வர தொடங்கியிருக்கிறார்கள். கடவுளுடைய ஊழியராலாகிய இந்த அமைப்பு யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிறது.

9 யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் வழிநடத்துதலுக்காகக் கடவுளிடமாகவும் அவருடைய வார்த்தையினிடமாகவும் நோக்குகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் என்ற அவர்கள் பெயர் தானேயும், அவர்களுடைய முக்கிய வேலை, கிறிஸ்து செய்ததைப் போலவே, யெகோவா தேவனுடைய பெயரையும் ராஜ்யத்தையும் பற்றிச் சாட்சி பகருவதே என்று காட்டுகிறது. (யோவான் 17:6; வெளிப்படுத்துதல் 1:5) மேலும், மேசியா, அல்லது கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யமே பைபிள் முழுவதன் பொருளாக இருப்பதனால், வணக்கத்திற்காகத் தாங்கள் கூடிவரும் அந்த இடத்தை ராஜ்ய மன்றம் என்று அவர்கள் அழைக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவம் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததென்பது தெளிவாக இருப்பதனால், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அமைப்பை அதன் மாதிரியின்படி அமைக்கிறார்கள். அந்த ஆரம்ப கால கிறிஸ்தவ அமைப்பைச் சற்று சுருக்கமாய்ப் பார்வையிட்டு இன்று, கடவுளுடைய காணக்கூடிய அமைப்பிலுள்ள அதற்கு ஒப்பான தன்மைகளை நாம் கவனிக்கலாம்.

அந்த முதல்-நூற்றாண்டு மாதிரி

10 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கெல்லாம் வணக்கத்திற்காக தொகுதி தொகுதிகளாக ஒன்றாய்க் கூடினர். இந்தச் சபைகள் தோழமைக்காகவும் படிப்புக்காகவும் தவறாமல் ஒழுங்காய்க் கூடிவந்தனர். (எபிரெயர் 10:24, 25) அவர்களுடைய முக்கிய வேலையானது, இயேசு செய்ததைப் போலவே கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமாக இருந்தது. (மத்தேயு 4:17; 28:19, 20) சபையின் ஓர் அங்கத்தினன் கெட்ட வாழ்க்கை முறைக்குத் திரும்பினானென்றால் அவன் சபைக்குப் புறம்பாக்கப்பட்டான்.—1 கொரிந்தியர் 5:9-13; 2 யோவான் 10, 11.

11 முதல் நூற்றாண்டிலிருந்த அந்தக் கிறிஸ்தவ சபைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தியங்குபவையாகக் காரியங்களின்பேரில் ஒவ்வொன்றும் அதனதன் சொந்தத் தீர்மானங்களைச் செய்பவையாக இருந்தனவா? இல்லை, அவர்கள் ஒரே கிறிஸ்தவ விசுவாசத்தில் ஒற்றுமைப்பட்டிருந்தார்கள் என்று பைபிள் காட்டுகிறது. எல்லா சபைகளும் ஒரே ஊற்று மூலத்திலிருந்தே வழி நடத்துதலையும் கட்டளையையும் பெற்றார்கள். இவ்வாறாக, விருத்தசேதனத்தைப் பற்றிய காரியத்தின்பேரில் ஒரு விவாதம் எழும்பினபோது, என்ன செய்வதென்பதைச் சபைகளோ தனியாட்களோ தங்களுக்குத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவில்லை. இல்லை, அதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய பவுலும், பர்னபாவும் மற்றவர்களும் “இந்த வாக்குவாத விஷயத்தினிமித்தம் . . . எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர் மூப்பர் [ஆகியோரான] இவர்களிடம் போக வேண்டுமென்று தீர்மானித்து,” அனுப்பப்பட்டார்கள். எருசலேமிலிருந்த முதிர்ச்சியடைந்த அந்த மனிதர், கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவருடைய “பரிசுத்த ஆவி”யினிடமிருந்தும் கிடைத்த உதவியைக் கொண்டு தங்கள் தீர்மானத்தைச் செய்தபோது, சபைகளுக்கு அந்தத் தகவலைக் கொடுக்கும்படி உண்மையுள்ள ஆட்களை அவர்களிடம் அனுப்பினார்கள்.—அப்போஸ்தலர் 15:2, 27-29, தி.மொ.

12 இந்த தேவாட்சிக்கடுத்த, அல்லது கடவுளால் கொடுக்கப்பட்ட வழிநடத்துதலையும் கட்டளையையும் அந்தச் சபைகள் பெற்றதில் என்ன பலனுண்டாயிற்று? பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர்கள் ஊர்தோறும் போகையில் எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலரும் மூப்பரும் தீர்மானித்த விதிகளைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். இதனால் சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் தொகையில் பெருகின.” (அப்போஸ்தலர் 16:4, 5, தி.மொ.) ஆம், எருசலேமிலிருந்த அந்த மூப்பர் குழு தீர்மானித்திருந்ததுடன் எல்லா சபைகளும் ஒத்துழைத்து, விசுவாசத்தில் மேலுமாக வளர்ந்து பலப்பட்டார்கள்.

இன்று தேவாட்சிக்கடுத்த வழிநடத்துதல்

3 கடவுளுடைய இன்றைய காணக்கூடிய அமைப்புங்கூட தேவாட்சிக்கடுத்த வழி நடத்துதலையும் கட்டளையையும் பெறுகிறது. நியுயார்க்கில் புரூக்லினிலுள்ள, யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்தில், பூமியின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கும் முதிர்ந்த கிறிஸ்தவ மனிதராலாகிய ஒரு நிர்வாகக் குழு இருக்கிறது. இவர்கள், உலகமெங்குமுள்ள கடவுளுடைய ஜனங்களின் வேலைகளுக்குத் தேவையான கண்காணிப்பைக் கொடுத்து வருகின்றனர். இந்த நிர்வாகக் குழு, அந்த “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் அங்கத்தினராலான ஒன்றாய் இருக்கிறது. இது, அந்த உண்மையுள்ள “அடிமை”க்காகப் பேசும் ஏதுவாக சேவிக்கிறது.

14 இந்த நிர்வாகக் குழுவில் இருக்கும் ஆட்கள், எருசலேமிலிருந்த அந்த அப்போஸ்தலரையும் மூப்பரையும் போல், கடவுளுடைய சேவையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ளவர்களாய் இருக்கின்றனர். என்றாலும் தீர்மானங்களைச் செய்வதில் அவர்கள் மனித ஞானத்தின்பேரில் சாய்வதில்லை. இல்லை, தேவாட்சி முறைப்படி அவர்கள் ஆளப்படுவதால், எருசலேமிலிருந்த அந்தத் தொடக்கக் கால நிர்வாகக் குழுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர், அதன் தீர்மானங்கள் கடவுளுடைய வார்த்தையில் ஆதாரங்கொண்டிருந்தன, மேலும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் செய்யப்பட்டன.—அப்போஸ்தலர் 15:13-17, 28, 29.

உலகளாவிய ஓர் அமைப்பை நிர்வகித்தல்

15 இயேசு கிறிஸ்து பின்வருமாறு சொன்னபோது இந்த முடிவு காலத்தில், கடவுள் பூமியில் கொண்டிருக்கப்போகிற அந்த அமைப்பின் அளவைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தைக் கொடுத்தார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) பூமியின் பல கோடி மக்களுக்குக் கடவுளுடைய இந்த ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிச் சொல்வதற்குத் தேவைப்படும் அந்த மிகப் பேரளவான வேலையைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். வழிநடத்துதலுக்காகவும் கட்டளைக்காகவும் அதன் நிர்வாக சபையை நோக்கியிருக்கிற இந்தத் தற்கால கிறிஸ்தவ அமைப்பு, இந்த மிகப் பெரிய வேலையைச் செய்வதற்குப் போதிய சாதன வாய்ப்புகளுடன் தகுதி பெற்றிருக்கிறதா?

16 யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது இந்த ராஜ்ய செய்தியைப் பூமியெங்கும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் சமுத்திரத் தீவுகளிலும் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். (1988-ல்) 35,00,000-க்கு மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு உதவிசெய்ய பெரிய அச்சாலைகள் பல நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பைபிள்களும் பைபிள் இலக்கியங்களும் ஏராளமான எண்ணிக்கைகளில் அச்சடிக்கப்படுகின்றன. வேலைசெய்யும் ஒவ்வொரு நாளும், சராசரியாக, இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட உவாட்ச்டவர் மற்றும் அவேக்! பத்திரிகைகளும் (தமிழில் காவற்கோபுரம், விழித்தெழு!) இங்கு அச்சடிக்கப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

17 இந்தப் பைபிள் இலக்கியங்களெல்லாம், ஆட்கள் யெகோவாவின் மிகச் சிறந்த நோக்கங்களைப் பற்றிய அறிவில் வளரும்படி உதவி செய்வதற்கே தயார் செய்யப்படுகின்றன. உண்மையில், “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது” என்ற இந்த வார்த்தைகள் தி உவாட்ச்டவர் (காவற்கோபுரம்) பத்திரிகையினுடைய தலைப்பின் பாகமாக இருக்கின்றன. இந்தப் பைபிள் இலக்கியங்களை விநியோகிப்பதிலும் இவற்றில் அடங்கியுள்ள சத்தியங்களை மற்றவர்களுக்கு விளக்கிக் கூறுவதிலும் பங்கு கொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். உதாரணமாக நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் புத்தகத்திலிருந்து கற்றிருக்கிற இந்த இன்றியமையாதத் தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய எவராவது இருக்கிறார்களா?

18 முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே, இன்று கடவுளுடைய அமைப்பு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளாலாகிய ஓர் அமைப்பாய் இருக்கிறது. இந்தப் பிரசங்க வேலையில் பங்குகொள்ளும்படி அதன் அங்கத்தினர் எல்லோருக்கும் உதவிசெய்யவே இது ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சாத்தானும் அவன் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறவர்களும் இந்த ராஜ்ய செய்தியை எதிர்ப்பதனால் இவர்களுக்குப் பேரளவான ஊக்கமூட்டுதலும் ஆவிக்குரிய பலமூட்டுதலும் வேண்டியதாய் இருக்கிறது. ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்ததற்காக இயேசு கொல்லப்படும்படி இப்படிப்பட்ட எதிரிகள் செய்தார்கள், அவரைப் பின்பற்றுகிறவர்களும் துன்புறுத்தப்படுவார்களென்று பைபிள் எச்சரிக்கிறது-—யோவான் 15:19, 20; 2 தீமோத்தேயு 3:12.

19 முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இன்றும் ஒவ்வொரு சபைக்கும் உதவி செய்யவும் பலப்படுத்தவும் “மூப்பர்கள்” நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் உங்களுக்குங்கூட பலவகையான பிரச்னைகளை எதிர்த்துச் சமாளிப்பதற்குப் பைபிள் ஆலோசனையைக் கொடுத்து உதவிசெய்யக்கூடும். மேலும் இந்த “மூப்பர்கள்” “தேவனுடைய மந்தையைப்” பாதுகாக்கிறார்கள். இவ்வாறாக, சபையின் ஓர் அங்கத்தினன் கெட்ட வாழ்க்கை முறைக்குத் திரும்பி, அதை விட்டுத் தன்னை மாற்றிக் கொள்ள மறுத்துவிடுகிறானென்றால், இப்படிப்பட்டவன் சபையிலிருந்து வெளியே தள்ளிப் போடப்படும்படி, அல்லது சபைக்குப் புறம்பாக்கப்படும்படி பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு சபை ஆரோக்கியமான, ஆவிக்குரிய பிரகாரமாய்ச் சுத்தமான ஒரு சபையாகக் காத்துவைக்கப்பட்டு வருகிறது.—தீத்து 1:5; 1 பேதுரு 5:1-3; ஏசாயா 32:1, 2; 1 கொரிந்தியர் 5:13.

20 கடவுளுடைய ஜனங்களுக்குக் கட்டளைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் ஊக்கமூட்டுதலைக் கொடுக்கவும் எருசலேமிலிருந்த நிர்வாகக் குழு பவுலையும் சீலாவையும் போன்ற விசேஷித்தப் பிரதிநிதிகளை அனுப்பினதைப் போலவே, இன்றைய நிர்வாகக் குழுவும் இந்த முடிவுகாலத்தில் இவ்வாறு செய்துவருகிறது. (அப்போஸ்தலர் 15:24-27, 30-32) வட்டாரக் கண்காணி என்றழைக்கப்படுகிற அனுபவம் முதிர்ந்த ஓர் ஊழியர் அநேகமாய் வருடத்தில் இருமுறை, தன் வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு சபையுடனும் ஒவ்வொரு வாரம் செலவிடும்படி அனுப்பப்படுகிறார்.

21 உலக முழுவதிலும் 60,000-த்துக்கு மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் சபைகள் இருக்கின்றன. இவை வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன, ஒவ்வொரு வட்டாரமும் ஏறக்குறைய 20 சபைகள் அடங்கியதாய் இருக்கிறது. இந்த வட்டாரக் கண்காணி தன்னுடைய வட்டாரத்திலுள்ள சபைகளைச் சந்திக்கையில் ராஜ்ய சாட்சிகளோடு கூடவே அவர்களுடைய பிரசங்கிக்கும் கற்பிக்கும் வேலைக்குச் சென்று அவர்களை ஊக்கமூட்டிக் கட்டியெழுப்புகிறார். இவ்வகையில் அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதோடுகூட, தங்கள் ஊழியத்தில் முன்னேற்றமடைவதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய அவர் ஆலோசனைகளையும் கொடுக்கிறார்.—அப்போஸ்தலர் 20:20, 21.

22 ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள சபைகளும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வட்டார மாநாட்டுக்கு, வழக்கமாய் ஆண்டில் இருமுறை ஒன்றாய்க் கூடிவருகையில் மேலுமான ஊக்கமூட்டுதலும் பலப்படுத்துதலும் அளிக்கப்படுகிறார்கள். இந்தச் சமயங்களில் சுமார் இருநூறு அல்லது முந்நூறிலிருந்து 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான ஆட்கள் வருகின்றனர். உங்கள் பிராந்தியத்தில் அடுத்தமுறை நடக்கும் மாநாட்டுக்கு நீங்களும் வரும்படி அழைக்கப்படுகிறீர்கள். அது ஆவிக்குரிய பிரகாரமாய் உயிர்ப்பூட்டுவதாயும் தனிப்பட்ட வண்ணமாய் உங்களுக்கு நன்மை பயக்குவதாயும் இருப்பதை நீங்கள் காண்பீர்களென்று நாங்கள் உறுதியாய் உணருகிறோம்.

23 பின்னும், ஆண்டுக்கு ஒருமுறை, மாவட்ட மாநாடு என்றழைக்கப்படுகிற பெருங்கூட்டம் பல நாட்களுக்கு நடத்தப்படலாம். இப்படிப்பட்ட மாநாடுகளுக்கு வரும்படி உண்மையான முயற்சி எடுத்து, அது எவ்வளவு இன்பகரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பலனளிப்பதாயும் இருக்கக்கூடுமென்பதை நீங்கள்தாமே நேரில் காணலாமல்லவா? சில ஆண்டுகளில் மாவட்ட மாநாடுகளுக்குப் பதிலாக, தேசீய அல்லது சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒரே இடத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளில் மிகப் பெரியதானது, 1958-ல் நியு யார்க் நகரத்தின் யாங்க்கி ஸ்டேடியமும் போலோ கிரெளண்ட்ஸூம் பயன்படுத்தப்பட்டு எட்டு நாட்கள் நடத்தப்பட்ட மாநாடாகும். அந்தச் சமயத்தில் “கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்கிறது—உலகத்தின் முடிவு சமீபித்திருக்கிறதா?” என்ற பொது பேச்சுக்கு 2,53,922 ஆட்கள் வந்திருந்தனர். அது முதற்கொண்டு இப்படிப்பட்ட மிகப் பெரிய மாநாடுகளை நடத்துவதற்கு எந்த இடமும் போதியளவு பெரியதாக இருக்கவில்லை. ஆகவே பல முக்கிய நகரங்களில் கிடைக்கக்கூடிய வசதிகள் பெரிய மாநாடுகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

சபைகளுக்குள் கூட்டங்கள்

24 யெகோவாவின் ஜனங்களுடைய சபைகள் எல்லாவற்றிலும் ஒருமைப்பட்ட பைபிள் போதனை நிகழ்ச்சி நிரல் கையாளப்படுவதற்காகவும் யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகச் சபை ஏற்பாடு செய்கிறது. ஒவ்வொரு சபையும் வாரத்தில் ஐந்து கூட்டங்களை நடத்துகிறது. இவை, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம், பொதுக் கூட்டம், காவற்கோபுர படிப்பு, சபை புத்தகப் படிப்பு ஆகியவையாகும். ஒருவேளை நீங்கள் இன்னும் இந்தக் கூட்டங்களுக்குப் போய்ப் பழக்கப்பட்டிருக்கமாட்டீர்கள். ஆகவே நாங்கள் அவற்றைச் சுருக்கமாய் விவரிக்கிறோம்.

25 தேவராஜ்ய ஊழியப் பள்ளியானது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் அதிகத் திறம்பட்ட வண்ணமாய்ப் பேசுகிறவர்களாகும்படி மாணாக்கருக்கு உதவி செய்வதற்காகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் பெயர் பதிவு செய்தவர்கள் அவ்வப்போது, அந்த முழு தொகுதிக்கும் பைபிள் பொருள்களின் பேரில் சுருக்கமான பேச்சுகளைக் கொடுக்கின்றனர். பின்பு அனுபவம் முதிர்ந்த மூப்பர் ஒருவர் முன்னேற்றத்துக்கேதுவான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்.

26 பொதுவாய் அதே சாயங்காலத்தில் ஒரு ஊழியக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குரிய திட்டக் குறிப்பு நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்படுகிறது, இது நிர்வாகக் குழுவால் பதிப்பிடப்படுகிற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களையுடைய ஒரு மாத வெளியீடு. இந்தக் கூட்டத்தின் போது, மற்றவர்களிடம் இந்த ராஜ்ய செய்தியை பலன்தரக்கூடிய திறம்பட்ட முறைகளில் பேசுவதற்கான நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன, செய்முறைகள் நடித்தும் காட்டப்படுகின்றன. இவ்வாறே கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்கு ஊக்கமூட்டி, தங்கள் ஊழியத்தை எப்படி நிறைவேற்றுவதென்பதன் பேரில் அவர்களுக்குக் கட்டளைகளையும் கொடுத்தார்.—யோவான் 21:15-17; மத்தேயு 10:5-14.

27 பொதுக் கூட்டமும் காவற்கோபுர படிப்புங்கூட பொதுவாய் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படுகின்றன. புதியதாய் அக்கறை காட்டும் ஆட்களை இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அழைக்கும்படி தனிப்பட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதில், தகுதிபெற்ற ஊழியர் ஒருவரால் ஒரு பைபிள் பேச்சுக் கொடுக்கப்படுகிறது. காவற்கோபுர படிப்பானது காவற்கோபுர பத்திரிகையின் சமீப வெளியீடு ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பைபிள் கட்டுரையைக் கேள்வி-பதில் மூலம் கலந்தாலோசிப்பதாகும்.

28 மேலே சுருக்கமாய்க் குறிப்பிடப்பட்ட இந்தக் கூட்டங்களுக்கு முழு சபையும் ராஜ்ய மன்றத்தில் கூடுகிறபோதிலும், வாராந்தர சபை புத்தகப் படிப்புக்குச் சிறு தொகுதிகளாகத் தனிப்பட்ட ஆட்களின் வீடுகளில் கூடுகின்றனர். நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற இந்தப் புத்தகத்தைப் போன்ற ஒரு பைபிள் படிப்பு உதவி, இந்தப் பைபிள் கலந்தாலோசிப்புக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மணி நேரம் நீடித்திருக்கலாம்.

29 நிலையான இந்தக் கூட்டங்களோடுகூட, யெகோவாவின் சாட்சிகள், ஒவ்வொரு ஆண்டும், இயேசுவின் மரண ஆண்டு நிறைவு நாளின்போது ஒரு தனிப்பட்ட கூட்டத்தையும் வைக்கின்றனர். தம்முடைய மரண நினைவுகூருதலாகிய இதை முதலாவதாக ஏற்பாடு செய்தபோது, இயேசு: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சொன்னார். (லூக்கா 22:19, 20) இந்த எளிய ஆகாரத்தின் போது இயேசு திராட்ச மதுவையும் புளிப்பில்லா அப்பத்தையும் தாம் மனிதவர்க்கத்துக்காக அப்பொழுது பலி செலுத்தவிருந்த அந்த உயிரின் சின்னங்களாகப் பயன்படுத்தினார். ஆகவே இந்த வருடாந்தர நினைவுகூருதல் போஜனத்தின் போது, கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகஞ் செய்யப்பட்ட அந்த 1,44,000 பேரில் பூமியில் மீந்திருப்பவர்கள் அந்த அப்பத்திலும் திராட்ச மதுவிலும் பங்கு கொள்வதன் மூலம் தங்கள் பரலோக நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

30 பூமியெங்கும் ராஜ்ய மன்றங்களில் இந்த நினைவுகூருதலுக்கு வருகிற இலட்சக்கணக்கான மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பவர்களாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் தாங்கள் விடுதலை செய்யப்படுவதைக் கூடிய காரியமாக்கும்படி யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் செய்ததைப் பற்றியும் அவர்கள் நினைப்பூட்டப்படுகிறார்கள். ஆனால் பரலோக வாழ்க்கையை எதிர்நோக்குவதற்குப் பதிலாக, பூமியில் பரதீஸில் என்றும் வாழும் எதிர்நோக்கில் அவர்கள் களிகூருகிறார்கள். அவர்கள் முழுக்காட்டுபவனாகிய யோவானைப் போலிருக்கிறார்கள். அவன் தன்னைக் குறித்து, 1,44,000 உறுப்பினராலாகிய கிறிஸ்துவின் கூட்டு மணவாட்டியின் பாகமாக அல்ல, “மணவாளனுடைய தோழன்” என்பதாகப் பேசினான். (யோவான் 3:29) இந்த லட்சக்கணக்கான ஆட்கள் இயேசு குறிப்பிட்டுப் பேசின அந்த “மற்றச் செம்மறியாடுகளின்” பாகமாக இருக்கிறார்கள். இவர்கள் அந்தச் “சிறு மந்தை”யின் உறுப்பினரல்லர். என்றபோதிலும், இயேசு சொன்ன பிரகாரம், அவர்கள் அந்தச் “சிறு மந்தை”யானவர்களோடுகூட ஒன்றிணைந்து சேவிக்கிறார்கள், இவ்வாறாக அவர்களெல்லோரும் “ஒரே மந்தை” ஆகிறார்கள்.—யோவான் 10:16; லூக்கா 12:32.

கடவுளுடைய அமைப்போடு சேர்ந்து அவரைச் சேவித்தல்

31 கடந்த காலங்களில் இருந்ததைப்போலவே, இன்றும் யெகோவா தேவன் ஒரு காணக்கூடிய அமைப்பைக் கொண்டிருக்கிறார் என்பது ஆ, எவ்வளவு தெளிவாய் இருக்கிறது! மக்களைத் தம்முடைய நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்காகப் பயிற்றுவிக்கும்படி அவர் அதை இப்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என்றபோதிலும், நாம் கடவுளுடைய அமைப்பின் பாகமாக இருந்துகொண்டு, அதே சமயத்தில் பொய் மதத்தின் பாகமாகவும் இருக்க முடியாது. கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்”திருங்கள் என்று கடவுள் கட்டளையிடுகிறார்.—2 கொரிந்தியர் 6:14-17.

32 “அவர்கள் நடுவிலிருந்து புறப்படுங்கள்” அல்லது வெளியேறுங்கள் என்பதன் கருத்தென்ன? யெகோவா தேவன் பயன்படுத்துகிற அந்த ஒரு அமைப்பேயல்லாமல் வேறு எந்த ஒரு மத அமைப்பின் பாகமாக நிலைத்திருப்பதாலோ, அல்லது அதற்கு ஆதரவு கொடுப்பதாலோ நாம் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்க முடியாது. ஆகவே நம்மில் எவராவது அப்படிப்பட்ட ஒரு மத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இன்னும் இருக்கிறோமென்றால், நாம் அதிலிருந்து விலகுகிறோமென்று அறிவிப்பு செய்யவேண்டும். பொய் மதத்தைக் கடைப்பிடித்து வருகிறவர்களுக்குள்ளிருந்து நாம் இப்பொழுது வெளியேறி கடவுளை அவருடைய காணக்கூடிய தேவாட்சியைக் கொண்ட அமைப்போடு சேர்ந்து சேவிக்க உறுதியான நடவடிக்கை எடுப்போமானால், “நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்,” என்று கடவுள் குறிப்பிட்டு சொல்லுகிறவர்களுக்குள் நாமும் இருப்போம்.—2 கொரிந்தியர் 6:16.

[கேள்விகள்]

1. கடவுளுடைய காணக்கூடாத அமைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

2. நம்முடைய சடப்பொருளான பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்த முறையானது, அவர் அமைப்பின் பேரில் மிகுந்த முக்கியத்துவத்தை வைக்கிறாரென்று எப்படிக் காட்டுகிறது?

3. கடவுளுடைய காணக்கூடாத படைப்புகளுக்குள்ளும் அவருடைய சடப்பொருளான பிரபஞ்சத்திலும் இருந்துவரும் இந்த மிக மேன்மையான அமைப்பு நமக்கு என்ன கற்பிக்கிறது?

4, 5. ஆபிரகாமின் நாட்களிலும் இஸ்ரவேல் ஜனத்தின் நாட்களிலும் கடவுள் தம்முடைய ஜனத்தை ஒரு ஒழுங்குடன் அமைக்கப்பட்ட முறையில் நடத்தினாரென்று நாம் எப்படித் தெரிந்து கொள்ளுகிறோம்?

6. (எ) கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களின்பேரில் தம்முடைய தயவு இருந்ததென்று கடவுள் எப்படிக் காட்டினார்? (பி) கிறிஸ்தவர்கள் வணக்கத்திற்காக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

7. எந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியிலும் யெகோவா ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பைப் பயன்படுத்தவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

8. நம்முடைய நாளில் பூமியில் கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு ஒன்றே ஒன்று தான் இருக்குமென்று இயேசு எப்படிக் காட்டினார்?

9. (எ) கடவுளுடைய ஊழியர்கள் ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற இந்தப் பெயரைத் தாங்கியிருக்கிறார்கள்? (பி) வணக்கத்திற்காகத் தாங்கள் கூடிவரும் இடங்களை ராஜ்ய மன்றங்கள் என்று அவர்கள் ஏன் அழைக்கிறார்கள்?

10. முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவ அமைப்பின் சில முக்கிய அம்சங்கள் யாவை?

11, 12. (எ) தொடக்கக் கால கிறிஸ்தவ சபைகள், எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் “மூப்பருமான” அவர்களிடத்திலிருந்தே வழிநடத்துதலையும் கட்டளையையும் பெற்றார்களென்று எது நிரூபிக்கிறது? (பி) “தேவாட்சிக்கடுத்த” வழிநடத்துதல் என்றாலென்ன? (சி) சபைகள் இப்படிப்பட்ட வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டதன் பலன் என்னவாக இருந்தது?

13. (எ) இன்று பூமியில் எந்த இடத்திலிருந்தும் எந்த மனிதர் குழுவின் மூலமாகவும் கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு வழிநடத்துதலைப் பெறுகிறது? (பி) இந்த நிர்வாகக் குழு அந்த “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யோடு என்ன உறவை உடையதாயிருக்கிறது?

14. கடவுளுடைய ஜனங்களின் இந்த நிர்வாகக் குழு எதை ஆதாரமாகக் கொண்டு அதன் தீர்மானங்களைச் செய்கிறது?

15. இந்த முடிவுகாலத்தின்போது கடவுள் பூமியில் ஒரு பெரிய அமைப்பைக் கொண்டிருப்பார் என்று மத்தேயு 24:14-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் ஏன் காட்டுகின்றன?

16. (எ) யெகோவாவின் சாட்சிகள் ஏன் பல பெரிய அச்சாலைகளை ஸ்தாபித்திருக்கின்றனர்? (பி) இந்த அச்சாலைகளில் என்ன அச்சடிக்கப்படுகிறது?

17. (எ) இந்தப் பைபிள் இலக்கியங்கள் ஏன் தயாரிக்கப்படுகின்றன? (பி) நீங்கள் என்ன செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள்?

18. (எ) இன்று கடவுளுடைய அமைப்பு என்ன வகையான அமைப்பாக இருக்கிறது? (பி) இப்பொழுது கடவுளுடைய ஜனங்களுக்கு ஏன் மிகுந்த ஊக்குவிப்பு தேவைப்படுகிறது?

19. (எ) கடவுளுடைய ஜனங்களுக்கு இப்பொழுது உதவிசெய்யவும் அவர்களைப் பலப்படுத்தவும் யார் அளிக்கப்பட்டிருக்கிறார்கள்? (பி) சபையைக் கெடுக்கக்கூடிய கெட்ட செல்வாக்குகளிலிருந்து அது எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?

20. (எ) முதல் நூற்றாண்டில் எருசலேமிலிருந்த அந்த நிர்வாகக் குழுவால் யார் அனுப்பப்பட்டார்கள், என்ன காரணத்துக்காக? (பி) இன்று இந்த நிர்வாகக் குழுவால் அனுப்பப்படுகிறவர்கள் யார்?

21. வட்டாரக் கண்காணி, கடவுளுடைய ஜனங்களின் சபைகளுக்கு எப்படி உதவிசெய்கிறார்?

22. (எ) கடவுளுடைய ஜனங்களைப் பலப்படுத்துவதற்கு மேலுமாக என்ன ஏற்பாடு ஆண்டில் இரு முறை செய்யப்படுகிறது? (பி) என்ன வரவேற்பு உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது?

23. (எ) ஆண்டுக்கு ஒரு முறை வேறு எந்தக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன? (பி) இந்த மாநாடுகளில் ஒன்று எவ்வளவு பெரியதாக இருந்தது?

24. கடவுளுடைய ஜனங்களின் சபைகளால் எந்த ஐந்து வாராந்தர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன?

25, 26. தேவராஜ்ய ஊழியப் பள்ளியும், ஊழியக் கூட்டமும் என்ன நோக்கத்தைச் சேவிக்கின்றன?

27, 28. பொதுக் கூட்டமும், காவற்கோபுர படிப்பும், சபை புத்தகப் படிப்பும் என்ன வகையான கூட்டங்கள்?

29. (எ) எந்த நினைவுகூருதலை உண்மையான கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்? (பி) அந்த அப்பத்திலும் திராட்ச மதுவிலும் யார் சரியான பிரகாரமாய்ப் பங்கு கொள்ளுகின்றனர்?

30. (எ) வேறு எவரும் சரியாகவே இந்த நினைவுகூருதலுக்கு வருகின்றனர்? இவர்களுடைய எதிர்நோக்குகள் என்ன? (பி) இப்படிப்பட்டவர்கள் இயேசுவால் எப்படி விவரிக்கப்பட்டிருக்கின்றனர்?

31. பொய் மதத்தின் ஒரு பாகமாக நிலைத்திருந்துகொண்டு அதே சமயத்தில் கடவுளுடைய அமைப்பின் பாகமாகவும் இருக்க முயல்பவர்களைக் கடவுள் அங்கீகரிக்கிறதில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

32. (எ) நாம் ‘அவர்கள் நடுவிலிருந்து வெறியேற’ வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? (பி) கடவுளை அவருடைய காணக்கூடிய தேவாட்சியைக் கொண்ட அமைப்போடு சேர்ந்து சேவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கிறோமென்றால் என்ன ஆசீர்வாதத்தை நாம் பெறுவோம்?

[பக்கம் 192-ன் படம்]

மஜலப்பிரளய காலத்தின்போது, கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் இருந்தனவா?

[பக்கம் 196-ன் படங்கள்]

செயல் நிறைவேற்றும் அலுவலகங்கள்

யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகம்

கம்ப்யூட்டர் முறைகள்

புரூக்லின் அச்சாலை

ரோட்டரி அச்சடிப்பு

புத்தக ஏடு கட்டுமிடம்

புத்தகம் அனுப்புமிடம்

[பக்கம் 197-ன் படங்கள்]

மற்றுமநேக உவாட்ச்டவர் அச்சாலைகளில் சில

பிரேஸில்

இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா

உவால்கில், நியு யார்க்

கானடா

[பக்கம் 198-ன் படங்கள்]

நியு யார்க்கில் யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டிற்கு வந்திருந்த 2,53,922 பேரில் சிலர்

போலோ கிரெளண்ட்ஸ்

யாங்க்கி ஸ்டேடியம்

[பக்கம் 201-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களில் அனுபவிக்கப்படுகிற பைபிள் போதனையின் ஓர் நிகழ்ச்சி நிரல்