Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நரகம் எப்படிப்பட்ட இடம்?

நரகம் எப்படிப்பட்ட இடம்?

அதிகாரம் 9

நரகம் எப்படிப்பட்ட இடம்?

நரகம் மக்கள் வதைக்கப்படுகிற ஓர் இடம் என்று இலட்சக்கணக்கான ஆட்கள் தங்கள் மதங்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின்படி, “நரகம் . . . என்றுமாக நிலைத்திருக்கும்; அதன் வேதனைக்கு முடிவே இராது, என்று ரோமன் கத்தோலிக்க சர்ச் கற்பிக்கிறது.” இந்தக் கத்தோலிக்கப் போதகமானது, “மாறுதல் விரும்பாத பல புராட்டஸ்டன்ட் தொகுதிகளாலும் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது,” என்று இந்த என்ஸைக்ளோபீடியா தொடர்ந்து சொல்லுகிறது. இந்துக்கள், புத்த மதத்தினர், முகமதியருங்கூட, நரகமானது வதைக்கும் ஓர் இடமென்று கற்பிக்கின்றனர். இவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிற மக்கள், நரகம் அவ்வளவு மோசமான ஓர் இடமாக இருக்கிறதென்றால், அதைப் பற்றிப் பேச தங்களுக்கு விருப்பமில்லை என்று அடிக்கடி சொல்லுகின்றனர்.

2 இப்படிப்பட்ட ஒரு வதைக்கும் இடத்தை சர்வ வல்லமையுள்ள கடவுள் படைத்தாரா? என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இஸ்ரவேலர், அருகில் வாழ்ந்த ஜனத்தாரின் மாதிரியைப் பின்பற்றித் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் எரித்துப்போட தொடங்கினபோது கடவுள் அதை எப்படிக் கருதினார். அவர் இதைத் தம்முடைய வார்த்தையில் பின்வருமாறு விளக்கினார்: “தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் [இருதயத்தில், NW] தோன்றவுமில்லை.”எரேமியா 7:31.

3 இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். மக்களை நெருப்பில் சுட்டெரிப்பதன் இந்த எண்ணம் கடவுளுடைய இருதயத்துக்குள் ஒருபோதும் வரவில்லையென்றால், தம்மைச் சேவிக்காதவர்களுக்காக ஒரு நெருப்புப் பற்றியெரியும் நரகம் ஒன்றை அவர் படைத்தார் என்பது பகுத்தறிவுக்கு ஒத்ததாகத் தோன்றுகிறதா? “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று பைபிள் சொல்லுகிறது. (1 யோவான் 4:8) அன்புள்ள கடவுள் மக்களை என்றுமாக உண்மையில் வதைப்பாரா? நீங்கள் அப்படிச் செய்வீர்களா? கடவுளுடைய அன்பைப் பற்றி அறிந்திருப்பதானது, “நரகம்” என்பது தான் என்ன என்பதைக் கண்டறிவதற்கு கடவுளுடைய வார்த்தையினிடம் திரும்பும்படி நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். யார் அங்கு போகின்றனர்? எவ்வளவு காலத்திற்கு?

ஷியோலும் ஹேடீஸூம்

4 ஆங்கில சொல்லாகிய “ஹெல்” (நரகம்) எபிரெய சொல்லாகிய ஷியோல் என்பதற்கும் கிரேக்கச் சொல்லாகிய ஹேடீஸ் என்பதற்கும் சமமாயிருக்கிறதென்று உவெப்ஸ்டர்ஸ் அகராதி சொல்லுகிறது. ஜெர்மன் பைபிள்களில் “ஹெல்” (நரகம்) என்பதற்கு பதிலாக ஹோயெல்லி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது; போர்ச்சுகீஸில் பயன்படுத்தப்படும் சொல் இன்ஃபெர்னோ, ஸ்பானிஷில் இன்ஃபியர்னோ, பிரென்ச் மொழியில் என்ஃபெர் என்பதாகும். ஆதரைஸ்ட் மொழிபெயர்ப்பின் அல்லது கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஷியோலை, 31 தடவைகள் “நரகம்” (“ஹெல்”) எனவும், 31 தடவைகள் “பிரேதக் குழி” எனவும், 3 தடவைகள் “பாதாளம்” எனவும் மொழிபெயர்த்திருக்கின்றனர். கத்தோலிக்க டூவே மொழிபெயர்ப்பு ஷியோல் என்பதை “ஹெல்” (நரகம்) என்று 64 தடவைகள் மொழிபெயர்த்திருக்கிறது. (பொதுவாய் “புதிய ஏற்பாடு” என்றழைக்கப்படுகிற) கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு ஹேடீஸ் என்பதை அது வருகிற 10 தடவைகளிலும் “ஹெல்” (நரகம்) என்று மொழிபெயர்த்திருக்கிறது.—மத்தேயு 11:23; 16:18; லூக்கா 10:15; 16:23; அப்போஸ்தலர் 2:27, 31; வெளிப்படுத்துதல் 1:18; 6:8; 20:13, 14.

5 கேள்வி என்னவென்றால்: ஷியோல் அல்லது ஹேடீஸ் எப்படிப்பட்ட இடம்? ஷியோல் என்ற இந்த ஒரே எபிரெய சொல்லை கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு மூன்று வெவ்வேறுபட்ட முறைகளில் மொழிபெயர்த்திருப்பதானது நரகம் (ஹெல்), பிரேதக்குழி, பாதாளம் ஆகியவை ஒரே காரியத்தையே குறிக்கின்றனவென்று காட்டுகிறது. நரகம் என்பதானது மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியைக் குறிக்கிறதென்றால், அது அதே சமயத்தில் நெருப்பில் வதைப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிக்க முடியாது. அப்படியானால், ஷியோலும் ஹேடீஸூம் பிரேதக்குழியைக் குறிக்கின்றனவா, அல்லது வதைக்கும் ஓர் இடத்தைக் குறிக்கின்றனவா?

6 இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பாக, இந்த எபிரெய சொல்லாகிய ஷியோலும் கிரேக்கச் சொல்லாகிய ஹேடீஸூம் ஒரே காரியத்தையே குறிக்கின்றனவென்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ளலாம். இது, எபிரெய வேத எழுத்துக்களில் சங்கீதம் 16:10-ஐயும் கிரேக்க வேத எழுத்துக்களில் அப்போஸ்தலர் 2:31-ஐயும் எடுத்துப் பார்ப்பதன் மூலம் தெளிவாக்கப்படுகிறது. இந்த வசனங்களை நீங்கள் அடுத்தப் பக்கத்தில் காணலாம். ஷியோல் என்ற சொல் வருகிற சங்கீதம் 16:10-ஐ அப்போஸ்தலர் 2:31-ல் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிடுகையில் ஹேடீஸ் பயன்படுத்தப்படுகிறதென்பதைக் கவனியுங்கள். மேலும், இயேசு கிறிஸ்து ஹேடீஸில், அல்லது நரகத்தில் இருந்தார் என்பதையும் கவனியுங்கள். கடவுள் கிறிஸ்துவை நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் ஒரு “நரகத்தில்” வதைத்தார் என்று நாம் நம்பவேண்டுமா? நிச்சயமாகவே இல்லை! இயேசு வெறுமென தம்முடைய பிரேதக் குழியில் இருந்தார்.

7 கொல்லப்பட்டதாகத் தான் எண்ணியிருந்த தன்னுடைய மிக நேசமான குமாரனாகிய யோசேப்புக்காக யாக்கோபு துக்கித்துக் கொண்டிருந்தபோது அவன் பின்வருமாறு சொன்னான்: “நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் (எபிரெயுவில், ஷியோல்) இறங்குவேன்.” (ஆதியாகமம் 37:35) என்ற போதிலும், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (ஆங்கில பைபிள்) இங்கே ஷியோலை “பிரேதக்குழி” என்றும் (கத்தோலிக்க) டூவே மொழிபெயர்ப்பு “நரகம்” என்றும் மொழிபெயர்க்கின்றன. இப்பொழுது, சற்று நின்று யோசித்துப் பாருங்கள். யாக்கோபு, தன் குமாரனாகிய யோசேப்பு, வதைப்பதற்குரிய ஓர் இடத்திற்கு, அங்கே நித்திய காலத்தைச் செலவிடும்படி சென்றான் என்று நம்பினானா, மேலும், தான் அங்கே சென்று அவனைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினானா? அல்லது, அதற்கு மாறாக, தன்னுடைய மிக நேசமான குமாரன் செத்துப் பிரேதக்குழியில் இருந்தான் என்றும் தான்தானேயும் சாக வேண்டுமென்றும் யாக்கோபு வெறுமென நினைத்தானா?

8 ஆம், நல்ல ஆட்கள் பைபிள் குறிப்பிடும் நரகத்துக்குச் செல்லுகிறார்கள். மிகுந்த வேதனை அனுபவித்துக்கொண்டிருந்த நல்ல மனிதனாகிய யோபு, கடவுளிடம் பின்வருமாறு ஜெபித்தான்: “நீர் என்னைப் பாதாளத்தில் [எபிரெயுவில் ஷியோல்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு ‘பிரேதக்குழி’; டூவே மொழிபெயர்ப்பு ‘நரகம்’] ஒளித்து, . . . என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” (யோபு 14:13) இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்; ஷியோல் என்பது வதைப்பதற்குரிய நெருப்பு எரியும் இடத்தைக் குறிக்கிறதென்றால், யோபு அங்கே போகவும் அவனை நினைவுகூரும் வரையில் தன் காலத்தை அங்கே செலவிடவும் விரும்பியிருப்பானா? யோபு, தன் வேதனைகள் முடிவடையும்படியாகத் தான் சாகவும் பிரேதக்குழிக்குச் செல்லவுமே விரும்பினான் என்பது தெளிவாயிருக்கிறது.

9 பைபிளில் ஷியோல் என்ற சொல் வருகிற எல்லா இடங்களிலும் அது உயிர் வாழ்வதுடனோ, செயலுடனோ, வதைப்பதுடனோ ஒருபோதும் சம்பந்தப்படுத்தப்பட்டில்லை. அதற்கு மாறாக, அது மரணத்துடனும் செயலற்ற நிலையுடனுமே அடிக்கடி இணைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிரசங்கி 9:10-ஐ சற்று சிந்தித்துப் பாருங்கள், அது வாசிப்பதாவது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [எபிரெயுவில், ஷியோல்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, பிரேதக்குழி; டூவே மொழிபெயர்ப்பு, நரகம்] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” ஆகவே பதில் வெகு தெளிவாயிருக்கிறது. ஷியோலும் ஹேடீஸூம் வதைப்பதற்குரிய ஓர் இடத்தையல்ல, மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழியையே குறிக்கின்றன. (சங்கீதம் 139:8) கெட்ட ஆட்கள் மட்டுமல்ல நல்ல ஆட்களுங்கூட பைபிள் குறிப்பிடும் நரகத்துக்குச் செல்கின்றனர்.

நரகத்திலிருந்து வெளியேறுதல்

10 நரகத்திலிருந்து மக்கள் வெளிவர முடியுமா? யோனாவின் காரியத்தைக் கவனியுங்கள். மூழ்கிப்போவதிலிருந்து யோனாவைக் காப்பாற்ற ஒரு பெரிய மீன் அவனை விழுங்கும்படி கடவுள் செய்தபோது, யோனா அந்த மீனின் வயிற்றிலிருந்து பின்வருமாறு ஜெபித்தான்: “என் நெருக்கத்திலே நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் [எபிரெயுவில், ஷியோல்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பிலும் டூவே மொழிபெயர்ப்பிலும் (2:3), நரகம்] ஆழத்திலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.”—யோனா 2:2, தி.மொ.

11 ஆங்கில பைபிளின்படி, “நரகத்தின் ஆழத்திலிருந்து” என்பதால் யோனா கருதினது என்ன? அந்த மீனின் வயிறு நிச்சயமாகவே நெருப்பில் வதைக்கும் ஓர் இடமாய் இருக்கவில்லை. ஆனால் அது யோனாவின் பிரேதக்குழி ஆகியிருக்கக்கூடும். உண்மையில், இயேசு கிறிஸ்து தம்மைக் குறித்துப் பின்வருமாறு கூறினார்: “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.”—மத்தேயு 12:40.

12 இயேசு மரித்து தம்முடைய பிரேதக்குழியில் மூன்று நாட்கள் இருந்தார். ஆனால் பைபிள் பின்வருமாறு அறிவிக்கிறது: “அவருடைய ஆத்துமா நரகத்திலே விடப்படவில்லை . . . இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்.” (அப்போஸ்தலர் 2:31, 32, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு) இதைப் போலவே, கடவுளுடைய வழிநடத்துதலால் யோனா நரகத்திலிருந்து, அதாவது, அவனுடைய பிரேதக்குழியாக இருந்திருக்கக் கூடியதிலிருந்து, எழுப்பப்பட்டான். அந்த மீன் அவனை உலர்ந்தத் தரையில் கக்கிப் போட்டபோது இது நடந்தது. ஆம், மக்கள் நரகத்திலிருந்து வெளியேறக்கூடும்! உண்மையில், நரகம் (ஹேடீஸ்) அதன் எல்லா மரித்தோரும் வெளியாக்கப்பட்டுக் காலியாக்கப்படும் என்பது இருதயத்துக்கு அனலூட்டும் வாக்குத்தத்தமாய் இருக்கிறது. வெளிப்படுத்துதல் 20:13-ஐ வாசிப்பதன்மூலம் இது தெரிகிறது, அது சொல்வதாவது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [ஹேடீஸ்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, நரகம்] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.”

கெஹென்னாவும் அக்கினிக் கடலும்

13 என்றபோதிலும்: ‘பைபிள் எரிநரகத்தைப் பற்றியும் அக்கினிக் கடலைப் பற்றியும் பேசுகிறது என்றும், இது நரகம் வதைப்பதற்குரிய ஓர் இடமென்று நிரூபிக்கிறதல்லவா?’ என்றும் எவராவது மறுத்துக் கூறலாம். மெய்யே கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் போன்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் சில “எரி நரகத்”தைப் பற்றியும் “அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்” பற்றியும் பேசுகிறதென்பது மெய்யே. (மத்தேயு 5:22; மாற்கு 9:45) கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் மொத்தம் 12 வசனங்களில் இந்தக் கிரேக்கச் சொல்லாகிய கெஹென்னாவை மொழிபெயர்க்க “நரகம்” என்பதைக் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (தமிழ் யூனியன் பைபிளும்) பயன்படுத்தியிருக்கிறது. ஹேடீஸ் என்பது “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கையில் அது பிரேதக்குழியையே குறிக்கிறது. இப்படியிருக்க, கெஹென்னா அக்கினியினால் வதைப்பதற்குரிய ஓர் இடமாகுமா?

14 எபிரெய சொல்லாகிய ஷியோலும் கிரேக்கச் சொல்லாகிய ஹேடீஸூம் பிரேதக் குழியையே குறிக்கிறதென்பது தெளிவாயிருக்கிறது. அப்படியானால், கெஹென்னா எதைக் குறிக்கிறது? எபிரெய வேத எழுத்துக்களில் கெஹென்னா என்பது “இன்னோம் பள்ளத்தாக்கு” ஆகும். இன்னோம் என்பதானது எருசலேமின் மதில்களுக்கு வெளியிலிருந்த பள்ளத்தாக்கின் பெயர், அங்கே இஸ்ரவேலர் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் பலியிட்டார்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். காலப்போக்கில், நல்ல அரசனாகிய யோசியா இந்தப் பள்ளத்தாக்கை இப்படிப்பட்ட பயங்கர பழக்கத்திற்குப் பயன்படுத்த முடியாதபடி, அது தீட்டாக்கிப் போடப்படும்படி செய்வித்தான். (2 இராஜாக்கள் 23:10) அது, குப்பைக்கூளங்கள் கொட்டும் பெருங்குழியாக மாற்றப்பட்டது.

15 ஆகவே, இயேசு பூமியில் இருந்த காலத்தின்போது கெஹென்னாவானது, எருசலேமின் குப்பைக் குழியாக இருந்தது. குப்பையை எரித்துப் போடும்படி கந்தகம் போடுவதால் நெருப்பு அவியாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்படி வைக்கப்பட்டு வந்தது. ஸ்மித்ஸ் பைபிள் அகராதி, புத்தகம் 1, பின்வருமாறு விளக்குகிறது: “அது அந்த நகரத்தின் பொதுக் குப்பைக் கொட்டுமிடமாயிற்று, அங்கே குற்றவாளிகளின் பிணங்களும், மிருகங்களின் பிணங்களும், மற்ற எல்லா வகையான அசுத்தக் குப்பைகளும் எறியப்பட்டன.” என்றபோதிலும், உயிருள்ள எதுவும் அங்கே எறியப்படவில்லை.

16 எருசலேமின் குடிமக்கள் தங்கள் நகரத்தின் குப்பைக் கொட்டுமிடத்தைப் பற்றி அறிந்திருந்ததனால், இயேசு, அந்தப் பொல்லாத மதத் தலைவர்களிடம் பின்வருமாறு சொன்னபோது அவர் கருதினதென்னவென்பதை அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்: “சர்ப்பங்களே, விரியன் பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு [கிரேக்கில், கெஹென்னாவின் ஆக்கினைக்கு] எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?” (மத்தேயு 23:33) அந்த மதத் தலைவர்கள் வதைக்கப்படுவார்களென்று இயேசு தெளிவாகவே அர்த்தங்கொள்ளவில்லை. இஸ்ரவேலர் அந்தப் பள்ளத்தாக்கில் தங்கள் பிள்ளைகளை உயிரோடு எரித்துக் கொண்டிருந்தபோது, அப்படிப்பட்ட பயங்கர காரியத்தைச் செய்வது தம்முடைய இருதயத்தில் ஒருபோதும் தோன்றவில்லை என்று கடவுள் சொன்னாரே! ஆகவே கெஹென்னாவை முழுமையான நித்திய அழிவுக்குப் பொருத்தமான அடையாளமாக இயேசு பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்பது தெளிவாயிருந்தது. அந்தப் பொல்லாத மதத் தலைவர்கள் உயிர்த்தெழுதலுக்குப் பாத்திரராக இருக்கவில்லையென்று அவர் அர்த்தப்படுத்தினார். கெஹென்னாவுக்குப் போகிறவர்கள், அந்த எல்லா குப்பையையும் போல், என்றுமாக அழிக்கப்பட்டுப் போவர் என்று, இயேசுவுக்குச் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் விளங்கிக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர்.

17 அப்படியானால், பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த “அக்கினிக் கடல்” என்பது என்ன? அது கெஹென்னாவுக்கு ஒத்தக் கருத்துடையதாக இருக்கிறது. அது உணர்வுள்ள நிலையில் வதைக்கப்படுவதையல்ல, நித்திய மரணத்தை அல்லது அழிவையே குறிக்கிறது. வெளிப்படுத்துதல் 20:14-ல் (தி.மொ.) பைபிள்தானேயும் இதை எப்படிச் சொல்லுகிறதென்பதைக் கவனியுங்கள்: “அப்பொழுது மரணமும் பாதாளமும் [ஹேடீஸ்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பிலும் டூவே மொழிபெயர்ப்பிலும், நரகம்] அக்கினிக் கடலிலே எறியப்பட்டன. இதுவே இரண்டாம் மரணம், அக்கினிக் கடல்.” ஆம், அக்கினிக் கடல் “இரண்டாம் மரணத்தை,” அதாவது உயிர்த்தெழுதல் இராத மரணத்தைக் குறிக்கிறது. இந்தக் “கடல்” ஓர் அடையாளப் பூர்வமானதென்பது தெளிவாயிருக்கிறது, எப்படியென்றால் மரணமும் நரகமும் (ஹேடீஸூம்) அதற்குள் எறியப்படுகின்றன. மரணத்தையும் நரகத்தையும் சொல்லர்த்தமாய் எரிக்கமுடியாது. ஆனால் அவற்றை ஒழித்துப்போட, அல்லது அழித்துப்போட முடியும், அவ்வாறே அவை செய்யப்படும்.

18 ‘என்றபோதிலும், பிசாசு அந்த அக்கினிக் கடலில் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவானென்று பைபிள் சொல்லுகிறதே,’ என எவராவது குறிப்பிட்டுக் காட்டலாம். (வெளிப்படுத்துதல் 20:10) இதன் கருத்தென்ன? இயேசு பூமியில் இருந்தபோது சிறை காவலாளர், “உபாதிக்கிறவர்கள்” (வதைப்பவர்கள்) என்று சில சமயங்களில் அழைக்கப்பட்டனர். இயேசு தம்முடைய உவமைகளில் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட மனிதனைப் பற்றிப் பின்வருமாறு சொன்னதுபோல்: “அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.” (மத்தேயு 18:34) “அக்கினிக் கடலில்” தள்ளப்படுகிறவர்கள் உயிர்த்தெழுதல் இராத “இரண்டாம் மரணத்”திற்குள் செல்வதனால், அவர்கள் மரணத்தில் என்றுமாகச் சிறைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்லலாம். இவர்கள் சிறை காவலரின் காவலின்கீழ், நித்திய காலமெல்லாம் இருப்பதைப் போல் மரணத்தில் நிலைத்திருக்கிறார்கள். நிச்சயமாகவே, பொல்லாதவர்கள் சொல்லர்த்தமாய் வதைக்கப்படுகிறதில்லை, ஏனென்றால், நாம் கண்டபடி, ஒருவன் மரிக்கையில் அவன் முற்றிலுமாய் இல்லாமற்போகிறான். அவன் எதைப்பற்றியும் உணர்வுள்ளவனாக இல்லை.

ஐசுவரியவானும் லாசருவும்

19 தம்முடைய உவமைகளில் ஒன்றில் இயேசு பின்வருமாறு சொன்னபோது என்ன அர்த்தங் கொண்டார்: “அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே [ஹேடீஸ்; கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில், நரகத்திலே] அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.” (லூக்கா 16:19-31) நாம் கவனித்தபடி, ஹேடீஸ் வதைப்பதற்குரிய ஓர் இடத்தையல்ல, மனிதவர்க்கத்தின் பிரேதக்குழியையே குறிப்பதால், இங்கே இயேசு ஓர் உவமையை அல்லது ஒரு கதையைச் சொல்லிக் கெண்டிருந்தாரென்பது தெளிவாய் இருக்கிறது. அது சொல்லர்த்தமான ஒரு விவரம் அல்ல, ஓர் உவமையே என்பதை நிரூபிக்கும். மேலுமான அத்தாட்சியாக, பின்வருவதைக் கவனியுங்கள்: உண்மையிலேயே ஓர் உரையாடலை நடத்தும் அளவுக்கு நரகம், சொல்லர்த்தமாய் பரலோகத்திலிருந்து பேசும் தூரத்தில் இருக்கிறதா? மேலும், அந்த ஐசுவரியவான் சொல்லர்த்தமாய் எரிந்து கொண்டிருக்கும் அக்கினிக் கடலில் இருந்தானென்றால், லாசரு தன் விரலின் நுனியில் சொட்டும் வெறும் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கொண்டு அவனுடைய நாவைக் குளிரச் செய்யும்படி ஆபிரகாம் லாசருவை எப்படி அனுப்பக்கூடும்? அப்படியானால், இயேசு எதை உவமைக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார்?

20 இந்த உவமையில் அந்த ஐசுவரியவான், இயேசுவை வேண்டாமென்று தள்ளி பின்னால் அவரைக் கொன்று போட்ட தற்செருக்குக் கொண்ட மதத் தலைவர்களைக் குறிப்பவனாக இருந்தான். லாசரு, கடவுளுடைய குமாரனை ஏற்றுக் கொண்ட சாதாரண மக்களுக்குப் படமாக இருந்தான். ஐசுவரியவானும் லாசருவும் செத்தது, அவர்களுடைய நிலைமையில் உண்டான ஒரு மாற்றத்தைக் குறித்தது. கவனியாமல் விடப்பட்ட லாசருவைப் போன்ற மக்களுக்கு இயேசு ஆவிக்குரிய பிரகாரமாய் உணவூட்டி, இவ்வாறாக அவர்கள் பெரிய ஆபிரகாமாகிய யெகோவா தேவனுடைய தயவுக்குள் வந்தபோது இந்த மாற்றம் நடந்தேறிற்று. அதே சமயத்தில், அந்தப் பொய் மதத் தலைவர்கள் கடவுளுடைய தயவை உடையவர்களாக இருப்பதைக் குறித்ததில் ‘மரித்தார்கள்.’ அவர்கள் தள்ளப்பட்டவர்களாயிருக்க, கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள் அவர்களுடைய பொல்லாத செயல்களை வெளிப்படுத்திக் காட்டினபோது அவர்கள் வேதனைகளை அனுபவித்தார்கள். (அப்போஸ்தலர் 7:51-57) ஆகையால் இந்த உவமையானது, செத்த ஆட்கள் சிலர் சொல்லர்த்தமான நெருப்பு எரியும் நரகத்தில் வதைக்கப்படுகிறார்கள் என்று கற்பிக்கிறதில்லை.

பிசாசால் ஏவப்பட்ட போதகங்கள்

21 இந்தப் பிசாசே ஏவாளிடம்: “நீங்கள் சாகவே சாவதில்லை,” என்று சொன்னான். (ஆதியாகமம் 3:4; வெளிப்படுத்துதல் 12:9) ஆனால் அவள் நிச்சயமாகவே மரித்தாள்; அவளுடைய எந்தப் பாகமும் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மரணத்திற்குப் பின்பு ஆத்துமா தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறதென்பது இந்தப் பிசாசால் தொடங்கப்பட்ட ஒரு பொய். மேலும் பொல்லாதவர்களின் ஆத்துமாக்கள் ஒரு நரகத்தில் அல்லது ஒரு உத்தரிக்கும் ஸ்தலத்தில் வதைக்கப்படுகின்றனவென்பதும் இந்தப் பிசாசு பரவச் செய்திருக்கிற ஒரு பொய் ஆகும். மரித்தவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்களென்று பைபிள் தெளிவாகக் காட்டுவதனால், இந்தப் போதகங்கள் உண்மையாக இருக்க முடியாது. உண்மையில், “உத்தரிக்கும் ஸ்தலம்” என்ற பதமோ ஓர் உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய எண்ணமோ பைபிளில் காணப்படுகிறதில்லை.

22 நரகமானது (ஷியோல், அல்லது ஹேடீஸ்) மரித்தவர்கள் நம்பிக்கையில் இளைப்பாறும் ஓர் இடம் என்று நாம் பார்த்தோம். உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்க, நல்லவர்களும் பொல்லாதவர்களும் அங்கே செல்கின்றனர். மேலும் கெஹென்னா வதைப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிக்கிறதில்லை, நித்திய அழிவுக்கே ஓர் அடையாளமாக பைபிளில் பயன்படுத்தப்படுகிறதென்றும் நாம் கற்றறிந்தோம். இதே விதமாக, “அக்கினிக் கடலும்” சொல்லர்த்தமான நெருப்பு எரியும் இடமல்ல, “இரண்டாம் மரணத்தை”க் குறிக்கிறது, இந்த மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் கிடையாது. நரகம் ஒரு வதைக்கும் இடமாக இருக்க முடியாது. ஏனென்றால், இப்படிப்பட்ட ஓர் எண்ணம் கடவுளுடைய மனதிலோ இருதயத்திலோ ஒருபோதும் எழும்பவில்லை. கூடுதலாக ஓர் ஆளை, அவன் பூமியில் ஒரு சில ஆண்டுகள் தவறு செய்ததன் காரணமாக நித்தியமாய் வதைப்பது நீதிக்கு எதிர்மாறாக இருக்கிறது. மரித்தவர்களைப் பற்றிய இந்தச் சத்தியத்தை அறிவது ஆ, எவ்வளவு நன்றாய் இருக்கிறது! இது ஒருவரை பயத்திலிருந்தும் மூட நம்பிக்கையிலிருந்தும் மெய்யாகவே விடுதலையாக்கக்கூடும்.—யோவான் 8:32.

[கேள்விகள்]

1. நரகத்தைப் பற்றி மதங்கள் என்ன கற்பித்திருக்கின்றன?

2. பிள்ளைகளை நெருப்பில் எரித்ததைக் கடவுள் எவ்வாறு கருதினார்?

3. கடவுள் மக்களை வதைப்பார் என்று எண்ணுவது ஏன் பகுத்தறிவுக்கும் வேத எழுத்துக்களுக்கும் ஒத்ததாக இல்லை?

4. (எ) எந்த எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்கள் “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன? (பி) கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் ஷியோல் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது?

5. ஷியோலையும் ஹேடீஸையும் பற்றி என்ன கேள்வி எழுப்பப்படுகிறது?

6. (எ) ஷியோலும் ஹேடீஸூம் ஒரே காரியத்தைக் குறிக்கின்றனவென்று பைபிள் எப்படிக் காட்டுகிறது? (பி) இயேசு ஹேடீஸில் இருந்தார் என்ற இந்த உண்மையால் என்ன காட்டப்படுகிறது?

7, 8. யாக்கோபையும் அவனுடைய குமாரனாகிய யோசேப்பையும், யோபையும் பற்றி சொல்லியிருப்பதானது, ஷியோல் வதைப்பதற்குரிய ஓர் இடமல்லவென்று எப்படி நிரூபிக்கிறது?

9. (எ) ஷியோலில் இருப்பவர்களின் நிலைமை என்ன? (பி) ஆகவே ஷியோலும் ஹேடீஸூம் என்ன?

10, 11. மீனின் வயிற்றில் இருந்தபோது யோனா ஏன் தான் நரகத்தில் இருந்ததாகச் சொன்னான்?

12. (எ) நரகத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக் கூடுமென்பதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது? (பி) “நரகம்” என்பது “பிரேதக்குழியைக்” குறிக்கிறதென்பதற்கு மேலுமாக என்ன அத்தாட்சி இருக்கிறது?

13. பைபிளில் 12 தடவைகள் வருகிற எந்தக் கிரேக்கச் சொல் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் (தமிழ் யூனியன் பைபிளிலுங்கூட) “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது?

14. கெஹென்னா என்பது என்ன? அங்கே என்ன செய்யப்பட்டது?

15. (எ) இயேசுவின் நாளில், கெஹென்னா என்ன காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டது? (பி) எது அங்கே ஒருபோதும் எறியப்படவில்லை?

16. கெஹென்னா நித்திய அழிவைக் குறிக்கும் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

17.இந்த ‘அக்கினிக் கடல்’ என்பது என்ன? இதைக் குறித்ததில் என்ன நிரூபணம் இருக்கிறது?

18. பிசாசு “அக்கினிக் கடலில்” சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவான் என்பதன் அர்த்தமென்ன?

19. ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றி இயேசு சொன்னது ஓர் உவமையே என்பது நமக்கு எப்படித் தெரியும்?

20. அந்த உவமையில் பின்வருபவைக் குறிப்பதென்ன: (எ) ஐசுவரியவான்? (பி) லாசரு? (சி) இவர்கள் ஒவ்வொருவருடைய மரணம்? (டி) ஐசுவரியவானின் வேதனைகள்?

21. (எ) பிசாசு என்ன பொய்களைப் பரவச் செய்திருக்கிறான்? (பி) உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய போதகம் பொய் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

22. (எ) இந்த அதிகாரத்திலிருந்து நாம் என்ன கற்றிருக்கிறோம்? (பி) இந்த அறிவு உங்களை எவ்வாறு பாதித்திருக்கிறது?

[பக்கம் 83-ன் பெட்டி]

“ஷியோல்” என்ற எபிரெய சொல்லும் “ஹேடீஸ்” என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே காரியத்தையே குறிக்கின்றன

அமெரிக்கன் ஸ்டான்டர்டு ஆங்கில மொழிபெயர்ப்பு

சங்கீதம் 16:10

9 ஆகையால் என் இருதயம் மகிழ்ந்தது, என் மகிமை களிகூர்ந்தது:

என் மாம்சம் பாதுகாப்பாய் இருக்கும்.

10 ஏனெனில் என் ஆத்துமாவை ஷியோலில் விடீர்;

உம்முடைய பரிசுத்தவான்

அப்போஸ்தலர் 2:31

30 அவன் தீர்க்கதரிசியானதால் தனது சந்ததியில் ஒருவரைத் தனது சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்வதாகக் கடவுள் ஆணையிட்டுச் சொன்னதை அவன் அறிந்திருந்தான்; 31 அவர் ஹேடீஸில் விடப்படுவதில்லையென்றும் அவர் மாம்சம்

[பக்கம் 84, 85-ன் பெட்டி]

யோனாவை ஒரு மீன் விழுங்கின பின்பு, அவன், ‘நரகத்தின் ஆழத்திலிருந்து கூக்குரலிட்டேன்,’ என்று ஏன் சொன்னான்?

[பக்கம் 86-ன் படம்]

கெஹென்னா எருசலேமுக்கு வெளிப்புறத்திலிருந்த ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. அது நித்திய மரணத்தைக் குறிக்க ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது