Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொல்லாத ஆவிகள் வல்லமையுள்ள ஆட்கள்

பொல்லாத ஆவிகள் வல்லமையுள்ள ஆட்கள்

அதிகாரம் 10

பொல்லாத ஆவிகள் வல்லமையுள்ள ஆட்கள்

மரித்தவர்களிடம் தாங்கள் பேசினதாக அடிக்கடி ஆட்கள் சொல்லுகின்றனர். பிரபலமான தலைமையாட்சி செலுத்தின பிஷப்பாகிய காலஞ்சென்ற ஜேம்ஸ் எ. பைக் என்பவர் மரித்துப்போன தன்னுடைய மகனாகிய ஜிம்முடன் தான் பேசினதாகச் சொன்னார். பைக் சொன்னபடி, அவருடைய மகன் அவரிடம் பின்வருமாறு சொன்னான்: “என்னைச் சுற்றி எனக்குக் கூட்டங்கூட்டமான மக்கள் இருக்கின்றனர், கைகள் என்னைத் தூக்குவதைப்போல் இருக்கிறது . . . உமக்குத் தெரியப்படுத்தும் வரையில் நான் மிகவும் விசனமாய் இருந்தேன்.”

2 இப்படிப்பட்ட அனுபவங்கள் மிகவும் சாதாரணமாயிருப்பதால், பலர் அந்த ஆவி உலகத்திலிருந்துவரும் எவருடனோ பேசியிருந்திருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் மரித்தவர்களுடன் பேசியிருக்கவில்லை. பைபிள் வெகு தெளிவாகப் பின்வருமாறு சொல்லுகிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) ஆகவே ஆவி உலகத்திலிருந்து பேசுகிறவர்கள் மரித்தவர்கள் அல்லவென்றால், வேறு யார் பேசுகிறார்கள்? யார் மரித்த ஆட்களைப் போல் பாசாங்கு செய்கிறார்கள்?

3 பொல்லாத ஆவி ஆட்களே. இந்த ஆவி ஆட்கள், அல்லது பேய்கள், கடவுளுக்கு விரோமான கலகத்தில் சாத்தானைச் சேர்ந்து கொண்ட அந்தத் தூதர்களேயாவர். இவர்கள் ஏன் மரித்த ஆட்களைப்போல் பாசாங்கு செய்கிறார்கள்? மரித்தவர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணத்தை முன்னேற்றுவிக்கவேயாகும். மேலும் மரணம் வெறுமென மற்றொரு வாழ்க்கைக்கு ஒரு மாற்றமே என்ற இந்தப் பொய்யை நம்பும்படியும் இந்தப் பொல்லாத ஆவி ஆட்கள் பலரை வழிநடத்தியிருக்கிறார்கள். இந்தப் பொய்யைப் பரவச் செய்வதற்காக இந்தப் பொல்லாத ஆவி ஆட்கள், மரித்த ஆட்களிடமிருந்து வருவதுபோல் தோன்றும் தனிப்பட்ட அறிவை, ஆவியுலக மத்தியஸ்தர்கள், குறிசொல்லுபவர்கள், சூனியக்காரர் ஆகியோருக்குக் கொடுக்கின்றனர்.

மரித்த சாமுவேலைப்போல் பாசாங்கு செய்தல்

4 கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேல் மரித்த பின்பு அவனைப்போல் பாசாங்கு செய்த ஒரு பொல்லாத ஆவி ஆளைப் பற்றிய ஓர் உதாரணம் பைபிளில் இருக்கிறது. இது அரசனாகிய சவுலுடைய ஆட்சியின் 40-வது ஆண்டில் நடந்தது. பெலிஸ்தரின் ஒரு பலத்த சேனை சவுலின் இஸ்ரவேலர் சேனைக்கு விரோதமாக வந்திருந்தது. சவுல் மிகவும் பயந்தான். சவுல் கடவுளுடைய பின்வரும் சட்டத்தை அறிந்திருந்தான். “அஞ்சனம் பார்க்கிறவர்களை [ஆவியுலக மத்தியஸ்தர்களை] நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்.” (லேவியராகமம் 19:31) என்றபோதிலும், காலப்போக்கில், சவுல் யெகோவாவை விட்டு விலகிப் போனான். ஆகையால், அந்தச் சமயத்தில் உயிரோடிருந்த சாமுவேல் சவுலை அதற்குமேலும் காண மறுத்துவிட்டான். (1 சாமுவேல் 15:35) இப்பொழுது இந்த இக்கட்டான காலத்தில், அரசனாகிய சவுல் உதவிக்காகச் செய்த வேண்டுதல்களுக்கு யெகோவா செவிகொடுக்காததனால் மனக்கசப்புற்று பித்துப்பிடித்த நிலையில் இருந்தான்.

5 என்ன நடக்கப் போகிறதென்பதைப்பற்றி அறிந்துகொள்ள சவுல் அவ்வளவு அதிக ஆவலாயிருந்ததனால் அவன் எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு பெண்ணிடம் சென்றான். அவள், தான் பார்க்கக்கூடிய ஓர் ஆளின் உருவத்தைக் கொண்டு வரக்கூடியவளாக இருந்தாள். அந்த உருவத்தை அவள் விவரித்துச் சொன்னதிலிருந்து சவுல் அவனை “சாமுவேல்” என்று அடையாளங் கண்டான். அப்பொழுது, சாமுவேலைப்போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த அந்த ஆவி ஆள் பேசி: “நீ என்னை எழும்பி வரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன?” என்று கேட்டான். அதற்குச் சவுல்: “நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார்கள்,” என்று பதிலளித்தான். அதற்கு அந்த ஆவி ஆள்: “கர்த்தர் [யெகோவா] உன்னை விட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?” என்று பதிலளித்தான். இறந்து போன சாமுவேலாகத் தான் இருப்பதாய்ப் பாசாங்கு செய்துகொண்டிருந்த அந்தப் பொல்லாத ஆவி ஆள், பின்பு தொடர்ந்து பேசுபவனாய், சவுல் பெலிஸ்தருடன் செய்யப்போகும் அந்தப் போரில் கொல்லப்படுவானென்று அவனுக்குச் சொன்னான்.—1 சாமுவேல் 28:3-19.

6 அந்த அஞ்சனம் பார்க்கிறவள் தொடர்பு கொண்ட அந்த ஆள் உண்மையில் சாமுவேல் அல்ல என்பது தெளிவாயிருக்கிறது. சாமுவேல் மரித்துவிட்டிருந்தான், ஓர் ஆள் மரித்துவிடுகையில் அவன் “தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:4) இந்தக் காரியத்தின் பேரில் மேலுமாகச் சற்றுச் சிந்தனை செய்வதானது, அந்தக் குரல் உண்மையில் இறந்துபோன சாமுவேலின் குரலாக இல்லையென்று காட்டுகிறது. சாமுவேல் கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். ஆகவே அவன் அஞ்சனம் பார்க்கிறவர்களை எதிர்த்தவனாக இருந்தான். மேலும், நாம் பார்த்தபடி, அவன் உயிரோடிருந்தபோது, கீழ்ப்படியாத சவுலுடன் அதற்கு மேலும் பேச மறுத்துவிட்டவனாக இருந்தான். அப்படியானால், சாமுவேல் அப்பொழுது இன்னும் உயிரோடிருந்திருப்பானேயாகில், தான் சவுலைச் சந்திக்கும்படி அஞ்சனம் பார்க்கிற ஒருத்தி தனக்கு ஏற்பாடு செய்ய அவன் அனுமதித்திருப்பானா? இன்னும் யோசித்துப் பாருங்கள்: சவுலுக்கு எந்தத் தகவலையும் கொடுக்க யெகோவா மறுத்துவிட்டிருந்தார். இறந்துபோன சாமுவேலின் மூலமாய் சவுலுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கும்படி அஞ்சனம் பார்க்கிற ஒருத்தி யெகோவாவை வற்புறுத்தக்கூடுமா? உயிரோடிருக்கிறவர்கள் மரித்துப்போன தங்கள் அன்பர்களிடம் உண்மையில் பேசக்கூடுமென்றால், அன்பாகவே இருக்கிற கடவுள், அவர்கள் அஞ்சனம் பார்க்கிறவர்களிடம் திரும்பினதன் காரணமாகத் “தீட்டுப்பட்ட”வர்களானார்களென்று நிச்சயமாகவே சொல்லமாட்டார்.

7 உண்மை என்னவென்றால், பொல்லாத ஆவி ஆட்கள் மனிதருக்குத் தீங்கு செய்வதில் முனைந்திருக்கிறார்கள், ஆகவே, தம்முடைய ஊழியரைப் பாதுகாக்க யெகோவா எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார். இஸ்ரவேல் ஜனத்துக்குக் கொடுத்த பின்வரும் எச்சரிக்கையை வாசியுங்கள். இது, மக்களைத் தவறாக வழிநடத்த பேய்கள் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தை உங்களுக்குக் கொடுக்கிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, தி.மொ.] அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12) இன்று மக்களுக்குத் தீங்கு செய்ய பொல்லாத ஆவி ஆட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்களிலிருந்து நாம் நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளக் கூடுமென்பதையும் நாம் கண்டுபிடிக்க விரும்ப வேண்டும். ஆனால் அதைப் பற்றி நாம் கற்றறிவதற்கு முன்பாக, இந்தப் பொல்லாத ஆவி ஆட்கள் எப்பொழுது, எப்படித் தங்கள் தொடக்கத்தை அடைந்தனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

தேவதூதர்கள் பொல்லாத ஆவி ஆட்களானார்கள்

8 ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் பொய்ச் சொன்னதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தேவதூதனாகிய சிருஷ்டி தன்னை அந்தப் பொல்லாத ஆவி ஆளான பிசாசாகிய சாத்தானாக்கிக் கொண்டான். அதன் பின்பு மற்றத் தூதர்களையுங்கூட கடவுளுக்கு விரோதமாகத் திருப்பும் முயற்சியில் இறங்கினான். காலப்போக்கில் இதில் அவன் வெற்றியடைந்தான். தேவதூதர்களில் சிலர், பரலோகத்தில் அவர்கள் செய்யும்படி கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்த அந்த வேலையை நிறுத்திவிட்டு கீழே பூமிக்கு வந்து மனிதருக்கு இருப்பதைப் போன்ற மாம்ச உடல்களைத் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டார்கள். கிறிஸ்தவ சீஷனாகிய யூதா, “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்,” என்று குறிப்பிட்டபோது இவர்களைப் பற்றி எழுதினான். (யூதா 6) இவர்கள் ஏன் பூமிக்கு வந்தார்கள்? பரலோகத்தில் தங்களுக்கிருந்த அந்த மிகச் சிறந்த நிலைகளை விட்டுவிடும்படி தூண்டுவதற்காக இவர்களுடைய இருதயத்தில் சாத்தான் வைத்த அந்தத் தவறான ஆசை என்ன?

9 பைபிள் பின்வருமாறு சொல்லுகையில் இதை நமக்குத் தெரிவிக்கிறது: “தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” (ஆதியாகமம் 6:2) ஆம், இந்தத் தூதர்கள் மாம்ச உடல்களைத் தரித்துக் கொண்டு, அழகிய பெண்களுடன் பாலுறவு கொள்ளும்படி பூமிக்கு வந்தார்கள். ஆனால் தூதர்கள் இப்படிப்பட்ட காதல் விவகாரங்களில் ஈடுபடுவது தவறான காரியமாக இருந்தது. அது கீழ்ப்படியாமைக்குரிய ஒரு செயலாக இருந்தது. இவர்கள் செய்தது சோதோம் கொமோராவின் மக்கள் நடப்பித்த ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி செயல்களுக்கு ஒப்பாக அவ்வளவு தவறானதென்று பைபிள் சுட்டிக் காட்டுகிறது. (யூதா 6, 7) இதன் விளைவென்ன?

10 இந்தத் தூதர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்தக் குழந்தைகள் வேறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மேலும் மேலும் பெரியவர்களாக, இராட்சதர் ஆகும்வரை, ஆம், பொல்லாத இராட்சதராகும் வரையில் வளர்ந்து கொண்டே வந்தனர். பைபிள் இவர்களைப் “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்கள்” என்று அழைக்கிறது. இந்த இராட்சதர்கள், தாங்கள் இருந்ததைப் போலவே மற்றவர்களும் கெட்டவர்களாக இருக்கும்படி எல்லோரையும் வற்புறுத்த முயன்றனர். இதன் விளைவாக, “மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும்,” பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 6:4, 5) ஆகவே யெகோவா ஜலப் பிரளயத்தைக் கொண்டு வந்தார். இந்த இராட்சதர்களும் அல்லது “நெபிலிம்”களும், எல்லா பொல்லாத ஆட்களும் மூழ்கிப் போயினர். ஆனால் பூமிக்கு வந்திருந்த அந்தத் தூதர்களுக்கு என்ன நடந்தது?

11 அவர்கள் மூழ்கிப் போகவில்லை. அவர்கள் தங்கள் மாம்ச உடல்களைக் களைந்து விட்டு ஆவி ஆட்களாகப் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர்கள் மறுபடியுமாக, பரிசுத்த தூதர்களைக் கொண்ட கடவுளுடைய அமைப்பின் பாகமாகும்படி அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, “பாவஞ்செய்த தூதர்களைக் கடவுள் தப்பவிடாமல் பாதாளத்திலே [டார்ட்டரஸ்] தள்ளி நியாயத்தீர்ப்புக்கென்று வைத்து வைக்கப்பட்டவர்களாக அந்தகாரக் குழிகளுக்கு ஒப்புவித்தார்,” என்று பைபிள் சொல்லுகிறது.—2 பேதுரு 2:4, தி.மொ.

12 இந்தப் பொல்லாதத் தூதர்கள் டார்ட்டரஸ் என்றழைக்கப்படும் சொல்லர்த்தமான ஓர் இடத்திற்குள் தள்ளப்படலில்லை. அதற்கு மாறாக, சில பைபிள்களில் (தமிழ் யூனியன் பைபிளிலுங்கூட) “நரகம்” என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற டார்ட்டரஸ் என்பதானது, இந்தத் தூதர்களின் தாழ்த்தப்பட்ட அல்லது வீழ்ந்துபோன நிலைமையைக் குறிப்பிடுகிறது. இவர்கள் கடவுளுடைய அமைப்பின் ஆவிக்குரிய ஒளியிலிருந்து துண்டிக்கப்பட்டுப் போனார்கள், நித்திய அழிவு மாத்திரமே அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. (யாக்கோபு 2:19; யூதா 6) ஜலப்பிரளய காலம் முதற்கொண்டு, இந்தப் பேய்த் தூதர்கள் மாம்ச உடல்களை ஏற்பதைக் கடவுள் அனுமதிக்கவில்லை. ஆகையால் அவர்கள் இயல்புக்கு மாறான தங்கள் பால்சம்பந்தமான ஆசைகளை நேர்முகமாய்த் திருப்தி செய்து கொள்ள முடியாது. என்றபோதிலும், அவர்கள் இன்னும், ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் அபாயகரமான வல்லமையைச் செலுத்தக்கூடும். உண்மையில், இந்தப் பேய்களின் உதவியைக் கொண்டு சாத்தான் “உலகமனைத்தையும் மோசம் போக்கிக்” கொண்டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9) பால் சம்பந்த குற்றங்கள், வன்முறைச் செயல்கள், மற்றத் தவறான செயல்கள் ஆகியவை இன்று மிகுதியாய்ப் பெருகியிருப்பதானது அவர்களால் மோசம் போக்கப்படாதபடி நம்மைக் காத்துக்கொள்வதற்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.

பொல்லாத ஆவி ஆட்கள் எப்படி மோசம் போக்குகிறார்கள்?

13 சாத்தான் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக,” மக்கள் பைபிள் சத்தியங்களைக் காணாதபடி அவர்களைக் குருடாக்கிப் போட உலக அரசாங்கங்களையும் பொய் மதத்தையும் பயன்படுத்துகிறான் என்று நாம் முன்னால் படித்தோம். (2 கொரிந்தியர் 4:4, NW) ஆண்களையும் பெண்களையும் பொல்லாத ஆவி ஆட்கள் மோசம் போக்குகிற மற்றொரு முக்கியமான வழியானது ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டின் மூலமாகும். ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு என்றாலென்ன? இது நேராகவோ அல்லது மனித மத்தியஸ்தர் மூலமாகவோ பொல்லாத ஆட்களுடன் தொடர்பு வைப்பதாகும். இந்த ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடானது ஓர் ஆளைப் பேய்களின் செல்வாக்கின்கீழ் கொண்டு வருகிறது. இந்த ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எல்லா வகை பழக்கவழக்கங்களிலிருந்து நம்மைத் தூர விலக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—கலாத்தியர் 5:19-21; வெளிப்படுத்துதல் 21:8.

14 குறி சொல்லுதலானது ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டின் வெகு சாதாரண வகையாக இருக்கிறது. இது காணக்கூடாத ஆவி ஆட்களின் உதவியைக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றியோ, அல்லது அறியப்படாத ஏதோவொன்றைப் பற்றியோ, கண்டுபிடிக்க முயலும் பழக்கமாக இருக்கிறது. இது கிறிஸ்தவ சீஷனாகிய லூக்கா பின்வருமாறு எழுதினதில் காட்டப்படுகிறது: “குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறி சொல்லுகிறதனால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.” அப்போஸ்தலனாகிய பவுல், இந்தப் பொல்லாத ஆவி ஆளின் வல்லமையிலிருந்து அந்தப் பெண்ணை விடுவிக்கக் கூடியவனாயிருந்தான், அவள் அதற்குமேலும் எதிர்காலத்தை முன்னறிவிக்கக் கூடாதவளானாள்.—அப்போஸ்தலர் 16:16-19.

15 ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு விளங்காப் புதிராகவும் விநோதமாகவும் இருப்பதனால் பல ஆட்கள் அதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். அது அவர்களுக்குக் கவர்ச்சி மிகுந்ததாய் இருக்கிறது. ஆகவே அவர்கள் பில்லி சூனியம், மந்திர மாயம், மயக்கும் மந்திர வித்தை, மாய வித்தை, சோதிடம், குறி சொல்லும் எழுத்துப் பலகைகள் ஆகியவற்றில், அல்லது ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டுடன் சம்பந்தப்பட்ட வேறு ஏதாவதில் தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றிய புத்தகங்களை அவர்கள் வாசிக்கக்கூடும், அல்லது இவற்றைப் பற்றிய திரைப்படங்களுக்குச் செல்லக்கூடும், அல்லது டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்களைப் பார்க்கக்கூடும். ஆவி மத்தியஸ்தம் செய்பவன் ஆவியுலகத் தொடர்பைத் தேடுகிற ஓர் கூட்டத்துக்குங்கூட அவர்கள் செல்லக்கூடும். ஆனால் மெய்க் கடவுளைச் சேவிக்க விரும்புகிற ஓர் ஆளுக்கு இதெல்லாம் ஞானமுள்ள காரியங்களல்ல. மேலும் இது அபாயகரமுமானது. இப்பொழுதேயும் அது மெய்யான தொந்தரவுக்கு வழிநடத்தக்கூடும். மேலும், ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகிற எல்லோரையும் கடவுள் நியாயந்தீர்த்து தம்மிடமிருந்து தள்ளிப் போடுவார்.—வெளிப்படுத்துதல் 22:15.

16 ஆவியுலகத் தொடர்பு கோட்பாட்டிலிருந்து தன்னைத் தூர விலக்கி வைத்துக்கொள்ள ஒருவன் தன்னால் கூடிய எல்லாவற்றையும் செய்து வருகையிலுங்கூட, அவன் இன்னும் பொல்லாத ஆவி ஆட்களால் தாக்கப்படக்கூடும். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி தம்மைத் தூண்டுவதாய்ப் பேசும் அந்தப் பிசாசினுடைய குரலைத் தானேயும் இயேசு கிறிஸ்து கேட்டார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (மத்தேயு 4:8, 9) கடவுளுடைய மற்ற ஊழியருங்கூட இவ்விதமாகத் தாக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு கூறினான்: “வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இது, கடவுளுடைய ஒவ்வொரு ஊழியனும் ‘எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, கடவுளுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ள வேண்டும்,’ என்பதைக் குறிக்கிறது.—எபேசியர் 6:11-13.

பொல்லாத ஆவி ஆட்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பது

17 ஆவியுலகத்திலிருந்து ஒரு “குரல்” உங்களிடம் பேசுகிறதென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தக் “குரல்,” செத்துப்போன ஓர் உறவினரைப் போல் அல்லது ஒரு நல்ல ஆவி ஆளைப்போல் பாசாங்கு செய்கிறதென்றால் என்ன செய்வது? “பேய்களின் தலைவன்” தம்மிடம் பேசினபோது இயேசு என்ன செய்தார்? (மத்தேயு 9:34, தி.மொ.) “அப்பாலே போ சாத்தானே!” என்று அவர் சொன்னார். (மத்தேயு 4:10) நீங்களுங்கூட அப்படிச் செய்யலாம். மேலும் உதவிக்காக யெகோவாவை நோக்கி நீங்கள் கூப்பிடலாம். கடவுளுடைய பெயரை உபயோகித்து சத்தமாய் ஜெபியுங்கள். பொல்லாத ஆவி ஆட்களைப் பார்க்கிலும் அவர் மிக அதிக வல்லமையுள்ளவர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த ஞானமான போக்கைப் பின்பற்றுங்கள். அந்த ஆவியுலகத்திலிருந்து வரும் அப்படிப்பட்ட குரல்களுக்குச் செவிகொடாதேயுங்கள். (நீதிமொழிகள் 18:10; யாக்கோபு 4:7) “குரல்கள்” யார் யாருக்குக் கேட்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேய்களே பேசுகின்றனர் என்று இது அர்த்தங் கொள்ளுகிறதில்லை. சில சமயங்களில் உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த ஏதோ சில நோய்களின் காரணமாக அப்படிக் குரல்கள் கேட்கலாம்.

18 ஒருவேளை எப்போதாவது ஒரு சமயத்தில் ஆவியுலகத் தொடர்பு சார்ந்த ஏதோ பழக்க வழக்கங்களில் நீங்கள் பங்கு கொண்டிருந்திருக்கலாம். இப்பொழுதோ அதில் இருந்து உங்களை விலக்கி விடுவித்துக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் என்ன செய்யலாம்? எபேசுவிலிருந்த பூர்வ கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைக் கவனியுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்த “யெகோவாவின் வார்த்தையை” அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்பு, “மாய வித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டு வந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது. இந்தப் புஸ்தகங்கள் 50,000 வெள்ளிக்காசுகள் மதிப்புள்ளவையாக இருந்தன! (அப்போஸ்தலர் 19:19, 20) எபேசுவில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களான இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஆவியுலகத் தொடர்பு கொள்கையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஏதாவது பொருட்கள் உங்களிடம் இருக்கிறதென்றால், அவை எவ்வளவு விலையுயர்ந்தவையாக இருந்தாலும் சரி, அவற்றை அழித்துப் போடுவதே ஞானமான செயலாகும்.

19 விநோதமும் விளங்காதப் புதிருமாக இருப்பதில் இன்று அவ்வளவு அதிக ஆர்வம் இருந்து வருவதனால், மேலும் மேலுமதிகமான ஆட்கள் ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டில் தங்களை உட்படுத்துகிறவர்களாகிறார்கள். என்றபோதிலும், இந்த ஆட்களில் பெரும்பாலர், தாங்கள் உண்மையில் பொல்லாத ஆவி ஆட்களோடு உட்படுகிறவர்களாகிறார்கள் என்பதை அறியாதிருக்கின்றனர். இது தீங்கற்ற வெறும் விளையாட்டல்ல. தீங்கிழைக்கவும் கேடுசெய்யவும் பொல்லாத ஆவி ஆட்களுக்கு வல்லமையுண்டு. அவர்கள் கொடிய தன்மை வாய்ந்தவர்கள். கிறிஸ்து அவர்களை என்றுமாக அழிவில் சிறைப்படுத்துவதற்கு முன்பாக, மனிதரைத் தங்கள் பொல்லாத ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்குத் தங்களால் கூடியவற்றையெல்லாம் அவர்கள் செய்து வருகின்றனர். (மத்தேயு 8:28, 29) ஆகவே எல்லா பொல்லாங்கும் நீக்கப்பட்ட பின்பு பூமியில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்களென்றால், எல்லா வகையான ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடுகளையும் விட்டுத் தூர விலகியிருப்பதன் மூலம் பேய்களின் செல்வாக்குக்கு விலகி விடுதலையானவர்களாய் உங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

[கேள்விகள்]

1. மரித்தவர்களிடம் தாங்கள் பேசக்கூடுமென்று பல ஆட்கள் ஏன் நம்புகின்றனர்?

2. (எ) மரித்தவர்களிடம் ஏன் ஒருவரும் பேச முடியாது? (பி) ஆகவே என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

3. (எ) மரித்தவர்களைப்போல் யார் பாசாங்கு செய்கிறார்கள்? ஏன்? (பி) பொல்லாத ஆவி ஆட்கள் யாருக்குத் தகவலைக் கொடுக்கிறார்கள்?

4. (எ) அரசனாகிய சவுல் ஏன் உதவிக்காக வெறிகொண்ட நிலையில் இருந்தான்? (பி) ஆவியுலக மத்தியஸ்தர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் குறித்த கடவுளுடைய சட்டம் என்னவாக இருந்தது?

5. (எ) உதவிக்காக சவுல் எங்கே சென்றான்? (பி) அந்த அஞ்சனம் பார்க்கிறவள் என்ன செய்யக்கூடியவளாக இருந்தாள்?

6. சவுலுடன் பேசினவன் ஏன் சாமுவேலாக இருந்திருக்க முடியாது?

7. பொல்லாத ஆவி ஆட்களுக்கு எதிராகத் தம்முடைய ஜனத்தைப் பாதுகாப்பதற்கு என்ன எச்சரிக்கையைக் கடவுள் கொடுத்தார்?

8. (எ) வேறு எவரையும் கடவுளுக்கு விரோதமாகக் கலகஞ் செய்யும்படி சாத்தான் செய்வித்தான்? (பி) பரலோகத்தில் தங்கள் வேலையை நிறுத்திவிட்ட பின்பு இவர்கள் எங்கே சென்றனர்?

9. (எ) அந்தத் தூதர்கள் ஏன் பூமிக்கு வந்தார்கள்? (பி) அவர்கள் செய்தது தவறு என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

10, 11. (எ) இந்தத் தூதர்களுக்கு எவ்வகையான பிள்ளைகள் பிறந்தார்கள்? (பி) ஜலப்பிரளயம் வந்தபோது அந்த இராட்சதர்களுக்கு என்ன நேரிட்டது? (சி) ஜலப்பிரளயத்தின்போது அந்தத் தூதர்களுக்கு என்ன நேரிட்டது?

12. (எ) அந்தப் பொல்லாத தூதர்கள் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றபோது அவர்களுக்கு என்ன நேரிட்டது? (பி) அவர்கள் ஏன் மனித உடல்களை மறுபடியும் ஏற்க முடியாது? (சி) ஆகையால் அவர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

13. (எ) பொல்லாத ஆவி ஆட்கள் எப்படி மோசம் போக்குகிறார்கள்? (பி) ஆவியுலகத் தொடர்பு கோட்பாடு என்பது என்ன? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

14. (எ) குறிசொல்லுதல் என்பது என்ன? (பி) இதைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

15. (எ) ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு சம்பந்தப்பட்ட சில காரியங்கள் யாவை? (பி) இப்படிப்பட்ட காரியங்களில் பங்கு கொள்வது ஏன் ஆபத்தானது?

16. பொல்லாத ஆவி ஆட்களுக்கு எதிராகக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு போராட்டம் இருக்கிறதென்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

17. ஆவியுலகத்திலிருந்து ஒரு “குரல்” உங்களிடம் பேசினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

18. ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டிலிருந்து ஒருவன் தன்னை விடுதலையாக்கிக் கொள்ள விரும்பினால் எபேசுவிலிருந்த பூர்வ கிறிஸ்தவர்களின் என்ன முன்மாதிரி அவன் பின்பற்றுவதற்கு உகந்ததாயிருக்கிறது?

19. (எ) ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டில் பங்குகொள்கிற ஆட்களில் பெரும்பாலர் எதை அறியாதிருக்கின்றனர்? (பி) பூமியில் மகிழ்ச்சியுடன் என்றும் வாழ நாம் விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 91-ன் படம்]

எந்தோரில் அஞ்சனம் பார்க்கிறவளாக இருந்தவள் யாருடன் தொடர்புகொண்டாள்?

[பக்கம் 92, 93-ன் படங்கள்]

தூதர்களாகிய கடவுளுடைய குமாரர்கள் மனித குமாரத்திகளைக் கவனித்தனர்

[பக்கம் 94-ன் படம்]

காணக்கூடிய மாம்ச உருவெடுத்த இந்தத் தூதர்கள் மூழ்கிப் போகவில்லை. இவர்கள் தங்கள் மாம்ச உடல்களைக் களைந்து போட்டு விட்டு பரலோகத்துக்குத் திரும்பினர்

[பக்கம் 97-ன் படம்]

பைபிள் எச்சரிக்கிறது: ‘எல்லா வகையான ஆவியுலகத் தொடர்புக் கோட்பாட்டிலிருந்தும் விலகுங்கள்’

[பக்கம் 98-ன் படம்]

எபேசுவில் கிறிஸ்தவர்களானவர்கள் ஆவியுலகத் தொடர்புக் கோட்பாடு சம்பந்தப்பட்ட தங்கள் புத்தகங்களை எரித்துப் போட்டார்கள்—இன்று நமக்கு இது ஒரு நல்ல முன்மாதிரி