Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?

உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?

1, 2. (அ) எது அநேகருக்கு நடக்காத காரியமாக தோன்றலாம், ஆனால் பைபிள் நமக்கு என்ன உறுதியளிக்கிறது? (ஆ) ஆபிரகாம் என்ன நெருக்கமான உறவை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றார், ஏன்?

 வானத்தையும் பூமியையும் படைத்தவர் உங்களைப் பார்த்து, ‘இவர் என் நண்பர்’ என்று சொன்னால் எப்படி உணருவீர்கள்? அநேகருக்கு இது நடக்காத காரியமாக தோன்றலாம். என்ன இருந்தாலும் ஓர் அற்ப மனிதன் எப்படித்தான் யெகோவா தேவனுடைய நட்பை பெற முடியும் என அவர்கள் நினைக்கலாம். எனினும் நம்மால் உண்மையிலேயே கடவுளிடம் நெருங்கி வர முடியும் என பைபிள் உறுதியளிக்கிறது.

2 அப்படிப்பட்ட நெருக்கத்தை அனுபவித்தவர்களில் ஒருவர், பூர்வத்தில் வாழ்ந்த ஆபிரகாம் ஆவார். கோத்திரத் தகப்பனாகிய அவரை ‘என் நண்பன்’ என யெகோவா அழைத்தார். (ஏசாயா 41:8) ஆம், ஆபிரகாமை யெகோவா தம் சொந்த நண்பராக கருதினார். ஆபிரகாம் “யெகோவாமேல் விசுவாசம் வைத்தார்,” அதனால் அப்படிப்பட்ட நெருங்கிய உறவை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். (யாக்கோபு 2:23) இன்றும்கூட, யெகோவா தம்மை அன்போடு சேவிப்போருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி அவர்கள்மேல் ‘அன்பு காட்ட’ வாய்ப்புகளைத் தேடுகிறார். (உபாகமம் 10:15) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என அவரது வார்த்தை உந்துவிக்கிறது. (யாக்கோபு 4:8) இந்த வார்த்தைகளில் ஒரு அழைப்பும் கொடுக்கப்படுகிறது, ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படுகிறது.

3. யெகோவா நமக்கு என்ன அழைப்பை விடுக்கிறார், அதோடு சம்பந்தப்பட்டுள்ள வாக்குறுதி என்ன?

3 யெகோவா, தம்மிடம் நெருங்கி வரும்படி நம்மை அழைக்கிறார். தம்முடைய நண்பர்களாக நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயாராகவும் மனமுள்ளவராகவும் இருக்கிறார். அதேசமயத்தில், அவரிடம் நெருங்கி வர நாம் நடவடிக்கை எடுக்கும்போது, அவரும் அதேபோல் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். அவரும் நம்மிடம் நெருங்கி வருவார். இவ்வாறு உண்மையிலேயே மதிப்புமிக்க ஒன்றை—யெகோவாவுடன் ‘நெருங்கிய நட்பை’—நாம் அனுபவிப்போம். (சங்கீதம் 25:14) ‘நெருங்கிய நட்பு’ என்பது, நேசத்திற்குரிய நண்பரோடு மனம்விட்டு பேசும் கருத்தைக் கொடுக்கிறது.

4. நெருங்கிய நண்பரை எப்படி விவரிப்பீர்கள், எந்த விதத்தில் யெகோவா தம்மிடம் நெருங்கி வருவோரிடம் அப்படிப்பட்ட நண்பராக நிரூபிக்கிறார்?

4 மனம்விட்டு பேசத்தக்க நெருங்கிய நண்பர் உங்களுக்கு உண்டா? அப்படிப்பட்ட நண்பருக்கு உங்கள்மீது அக்கறை இருக்கும். நீங்கள் அவரை நம்புவீர்கள், ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக நிரூபித்திருப்பார். உங்கள் சந்தோஷத்தை அவரோடு பகிர்ந்துகொள்ளும்போது அது பன்மடங்காகும். அனுதாபத்தோடு அவர் காதுகொடுத்துக் கேட்பதால், உங்கள் சோகத்தின் சுமை குறையும். வேறு எவரும் உங்களை புரிந்துகொள்ளா விட்டாலும் அவர் புரிந்துகொள்வார். அதேவிதமாக, நீங்கள் கடவுளிடம் நெருங்கிச் செல்லும்போது அவர் உங்களுக்கு ஆருயிர் நண்பராவார்; ஆம், உங்களை உண்மையிலேயே மதித்து, உங்கள்மீது ஆழ்ந்த அக்கறை காட்டி, உங்களை முழுமையாக புரிந்துகொள்ளும் ஒரு நண்பராவார். (சங்கீதம் 103:14; 1 பேதுரு 5:7) நீங்கள் அவரை நெஞ்சார நம்புவீர்கள், ஏனெனில் பற்றுமாறாதவர்களுக்கு அவரும் பற்றுமாறாதவராக இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (சங்கீதம் 18:25) இருந்தாலும், கடவுளோடு நெருங்கிய நண்பராக இருக்கும் இந்த பாக்கியத்தை, அவர் வாய்ப்பளித்திருப்பதாலேயே நம்மால் பெற முடியும்.

யெகோவா வழியைத் திறந்திருக்கிறார்

5. தம்மிடம் நெருங்கி வரும் வாய்ப்பை பெற நமக்காக யெகோவா என்ன செய்தார்?

5 பாவிகளாகிய நாம், உதவியின்றி நாமாகவே கடவுளிடம் நெருங்கிச் செல்ல முடியாது. (சங்கீதம் 5:4) “ஆனாலும், நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (ரோமர் 5:8) ஆம், “பலருடைய உயிருக்கு ஈடாக [இயேசு] தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு” யெகோவா ஏற்பாடு செய்தார். (மத்தேயு 20:28) அந்த மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பது, கடவுளிடம் நெருங்கி வர நமக்கு வாய்ப்பளிக்கிறது. கடவுள் “முதலில் நம்மேல் அன்பு காட்டியதால்” அவரோடு நாம் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு அவரே முன்முயற்சி எடுத்தார்.—1 யோவான் 4:19.

6, 7. (அ) யெகோவா, மறைவான, அறியப்பட முடியாத கடவுளல்ல என நமக்கு எப்படி தெரியும்? (ஆ) எந்த விதங்களில் யெகோவா தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்?

6 யெகோவா மற்றொரு நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்: அவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த நண்பரை எடுத்துக்கொண்டாலும், அவரை உண்மையிலேயே அறிகையிலும் அவரது குணங்களையும் போக்குகளையும் போற்றுகையிலுமே நெருக்கம் ஏற்படுகிறது. ஆகவே யெகோவா மறைவான, அறியப்பட முடியாத கடவுளாக இருந்தால் அவரிடம் நாம் நெருங்கிச் செல்லவே முடியாது. அதனால்தான் அவர் தம்மை மறைத்துக்கொள்வதே இல்லை; மாறாக, தம்மைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (ஏசாயா 45:19) அதுமட்டுமல்ல, தம்மைப் பற்றி வெளிப்படுத்திய விஷயங்களை அனைவரும் அறிய வழிசெய்கிறார்; இந்த உலக தராதரங்களின்படி தாழ்வாக மதிக்கப்படுவோரும் அறிய வழிசெய்கிறார்.—மத்தேயு 11:25.

யெகோவா தமது படைப்புகளின் மூலமும் தமது வார்த்தையாகிய பைபிளின் மூலமும் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்

7 யெகோவா எவ்வாறு தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்? அவரது ஆளுமையின் சில அம்சங்களை—அவரது எல்லையற்ற வல்லமை, ஆழமான ஞானம், மிகுதியான அன்பு ஆகியவற்றை—அவரது படைப்புகள் பறைசாற்றுகின்றன. (ரோமர் 1:20) ஆனால் படைப்புகளின் மூலமாக மட்டுமே யெகோவா தம்மை வெளிப்படுத்துவதில்லை. தம்மைப் பற்றிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் எப்போதுமே தலைசிறந்து விளங்கியிருக்கும் யெகோவா, தம் வார்த்தையாகிய பைபிளில் தம்மை பற்றி எழுத்து வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

யெகோவா தன்னுடைய வார்த்தை மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறார்

8. யெகோவா நம்மீது அன்பு வைத்திருப்பதற்கு பைபிளே அத்தாட்சி என ஏன் சொல்லலாம்?

8 யெகோவா நம்மீது அன்பு வைத்திருப்பதற்கு பைபிளே அத்தாட்சியாக இருக்கிறது. நம்மால் புரிந்துகொள்ள முடிந்த பதங்களில் அவர் தம்மையே தம் வார்த்தையில் வெளிப்படுத்துகிறார்; இது, அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு மட்டுமல்ல, நாம் அவரை அறிந்துகொண்டு அவரை நேசிக்க வேண்டுமென விரும்புகிறார் என்பதற்கும் அத்தாட்சியாக இருக்கிறது. இந்த விலைமதிப்புள்ள புத்தகத்தில் நாம் வாசிக்கும் விஷயங்கள், யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல உதவும். (சங்கீதம் 1:1-3) யெகோவா தமது வார்த்தையில் இதயத்திற்கு இதமளிக்கும் விதமாக தம்மையே வெளிப்படுத்தும் சில வழிகளைப் பற்றி நாம் கலந்தாலோசிக்கலாம்.

9. பைபிளில் கடவுளுடைய பண்புகளை எடுத்துக்காட்டும் நேரடியான வாக்கியங்கள் சில யாவை?

9 பைபிளில், கடவுளுடைய பண்புகளை எடுத்துக்காட்டும் நேரடியான வாக்கியங்கள் அநேகம் உண்டு. சில உதாரணங்களை கவனியுங்கள். “யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.” (சங்கீதம் 37:28) கடவுள் “மகா வல்லமை உள்ளவர்.” (யோபு 37:23) “‘நான் உண்மையோடு நடக்கிற கடவுள்’ . . . என்று யெகோவா சொல்கிறார்.” (எரேமியா 3:12) ‘அவர் ஞானமுள்ளவர்.’ (யோபு 9:4) அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்.” (யாத்திராகமம் 34:6) “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.” (சங்கீதம் 86:5) மேலும் சென்ற அதிகாரத்தில் குறிப்பிட்டபடி, அன்பு எனும் பண்பே அனைத்திலும் மேலோங்கியது; ஆம், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) இந்த இனிய குணங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்கையில், ஈடிணையற்ற இந்தக் கடவுளிடம் சுண்டி இழுக்கப்படவில்லையா?

10, 11. (அ) யெகோவாவின் ஆளுமையை இன்னும் தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எதை அவர் தமது வார்த்தையில் பதிவுசெய்திருக்கிறார்? (ஆ) கடவுளுடைய வல்லமையின் செயல்பாட்டை மனக்கண்களில் காண எந்த பைபிள் உதாரணம் நமக்கு உதவுகிறது?

10 யெகோவா, தமது பண்புகளை மட்டும் நமக்கு சொல்லாமல், அப்பண்புகளை தாம் செயலில் காட்டிய விதத்திற்கு குறிப்பான உதாரணங்களையும் தம் வார்த்தையில் கரிசனையோடு பதிவுசெய்திருக்கிறார். அப்படிப்பட்ட பதிவுகள், தத்ரூபமான காட்சிகளை நம் மனக்கண் முன் நிறுத்துகின்றன; இவை, அவரது ஆளுமையின் வெவ்வேறு அம்சங்களை இன்னும் தெளிவாக காண உதவுகின்றன. இதன் மூலம் கடவுளிடம் இன்னும் நெருங்கிச் செல்லவும் உதவுகின்றன. ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.

யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல பைபிள் நமக்கு உதவுகிறது

11 கடவுளுக்கு ‘பிரமிக்க வைக்கிற பலம்’ இருப்பதாக வாசிப்பது ஒரு விஷயம். (ஏசாயா 40:26) ஆனால் அவர் எவ்வாறு இஸ்ரவேலர்களை செங்கடல் வழியாக நடத்திச் சென்று, 40 வருடங்களாக வனாந்தரத்தில் பாதுகாத்து வந்தார் என்பதை வாசிப்பது வேறு விஷயம். இதை வாசிக்கையில், அலையலையாய் பொங்கியெழும் கடல் இரண்டாக பிளப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். அந்தத் தேசத்தினர்—மொத்தத்தில் சுமார் 30,00,000 பேர்—கடலின் காய்ந்த தரை வழியாக நடந்துபோவதையும், இருபுறமும் இமாலய மதில்கள்போன்று தண்ணீர் இறுகி குவிந்து நிற்பதையும் மனத்திரையில் பார்க்க முடியும். (யாத்திராகமம் 14:21; 15:8) வனாந்தரத்தில் கடவுள் கரிசனையோடு பாதுகாப்பளித்ததற்கும் அத்தாட்சியை பார்க்க முடியும். பாறையிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. வெண்ணிற விதைகள் வடிவில் உணவு தரையில் விழுந்தது. (யாத்திராகமம் 16:31; எண்ணாகமம் 20:11) தமக்கு வல்லமை இருப்பதை மட்டுமல்ல, அதை தம் மக்களுக்காக பயன்படுத்துவதையும் யெகோவா இவ்வாறு வெளிப்படுத்தினார். அவர்தான் “நம் அடைக்கலம், நம் பலம். இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.” அத்தகைய வல்லமையுள்ள கடவுளிடமே நம் ஜெபங்கள் போய் சேருகின்றன என்பதை அறிவது நம்பிக்கையூட்டுகிறது அல்லவா?—சங்கீதம் 46:1.

12. யெகோவா, நம்மால் புரிந்துகொள்ள முடிந்த பதங்களில் தம்மை “காண” எப்படி நமக்கு உதவுகிறார்?

12 நம்மால் பார்க்க முடியாத உருவத்தில் யெகோவா இருக்கிறார். ஆனாலும், நாம் அவரை அறிந்துகொள்வதற்காக இன்னும் அதிக உதவியை அளித்திருக்கிறார். மனிதர்களாகிய நம் பார்வைத் திறனுக்கு வரம்பு உண்டு, ஆகவே பரலோகத்துக்குரிய உடலில், அதாவது ஆவி உடலில் இருப்பவர்களை நம்மால் காண முடியாது. அந்த உடல் சம்பந்தப்பட்ட பதங்களில் கடவுள் தம்மை விளக்கினால் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பிறவிக் குருடரிடம் நீங்கள் உங்கள் தோற்றத்தை—கண்களின் நிறம், தோலிலுள்ள புள்ளிகள் போன்ற நுணுக்கவிவரங்களை—விலாவாரியாக விளக்குவதைப் போலத்தான் இருக்கும். யெகோவா அப்படி செய்யாமல், நம்மால் புரிந்துகொள்ள முடிந்த பதங்களில் தம்மை “காண” நமக்கு அன்போடு உதவுகிறார். சிலசமயங்களில் அவர் உருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்தி, நமக்கு தெரிந்த காரியங்களோடு தம்மை ஒப்பிடுகிறார். தமக்கு சில மனித அங்கங்கள் இருப்பதைப் போலவும்கூட விவரிக்கிறார். a

13. ஏசாயா 40:11 என்ன மனக்காட்சியை தீட்டுகிறது, அது எவ்வாறு உங்களை பாதிக்கிறது?

13 ஏசாயா 40:11-ல் யெகோவா எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்: “ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார். ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார். அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்.” இங்கே யெகோவா, ஆட்டுக்குட்டிகளை தனது “கைகளால்” தூக்கிக்கொள்ளும் மேய்ப்பனுக்கு ஒப்பிடப்படுகிறார். கடவுள் தமது மக்களை—மிகவும் பலவீனமானவர்களைக்கூட—பாதுகாத்து ஆதரிப்பதற்கு திறன் பெற்றிருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அவரது பலத்த கரங்களில் நாம் பாதுகாப்பாக உணரலாம்; ஏனெனில் நாம் அவருக்கு உண்மையோடு இருந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிட மாட்டார். (ரோமர் 8:38, 39) மிகப் பெரிய மேய்ப்பர் ஆட்டுக்குட்டிகளை ‘தன் நெஞ்சில் வைத்து சுமக்கிறார்.’ இதன் அர்த்தம் என்ன? மேலங்கியில் தொளதொளவென்று இருக்கும் மடிப்புகளில் புதிதாய் பிறந்த ஆட்டுக்குட்டியை மேய்ப்பன் சிலசமயம் சுமந்து செல்வான். இவ்வாறு, யெகோவா நம்மை மிகவும் நேசிக்கிறார் என்றும் மென்மையாக பேணுகிறார் என்றும் உறுதியளிக்கப்படுகிறோம். அப்படிப்பட்டவரிடம் நெருங்கிச் செல்ல விரும்புவது இயல்பே.

‘மகன் அவரை வெளிப்படுத்த விரும்புகிறார்’

14. யெகோவா தம்மை பற்றிய மிகத் தத்ரூபமான விவரிப்பை இயேசு மூலம் வெளிப்படுத்துகிறார் என ஏன் சொல்லலாம்?

14 யெகோவா தம்மை பற்றிய மிகத் தத்ரூபமான விவரிப்பை தமது அன்பு மகனாகிய இயேசு மூலம் தமது வார்த்தையில் வெளிப்படுத்துகிறார். கடவுளுடைய சிந்தையையும் உணர்ச்சிகளையும் இயேசுவைப் போல வேறு எவராலும் அவ்வளவு நெருக்கமாக பின்பற்ற முடியாது அல்லது அவ்வளவு தத்ரூபமாக விளக்க முடியாது. முதல் படைப்பாகிய அவர், மற்ற எந்த ஆவி சிருஷ்டிகளும் சடப்பொருள் பிரபஞ்சமும் உண்டாக்கப்படுவதற்கு முன்பே தன் தகப்பனுடன் வாழ்ந்து வந்தவராயிற்றே! (கொலோசெயர் 1:15) அவர் யெகோவாவைப் பற்றி மிக நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். ஆகவேதான் அவரால் இப்படி சொல்ல முடிந்தது: “தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் மகனைத் தெரியாது. மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பன் யாரென்று தெரியாது.” (லூக்கா 10:22) பூமியில் இருக்கும்போது இயேசு இரு முக்கிய வழிகளில் தன் தகப்பனை வெளிப்படுத்தினார்.

15, 16. இயேசு எந்த இரண்டு விதங்களில் தம் பிதாவை வெளிப்படுத்தினார்?

15 முதலாவதாக, இயேசுவின் போதனைகள் அவருடைய பிதாவை அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. நம் இருதயத்தை தொடும் பதங்களில் யெகோவாவை இயேசு விவரித்தார். உதாரணத்திற்கு, மனந்திரும்பும் பாவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் இரக்கமுள்ள கடவுளை விவரிக்க இயேசு ஓர் உவமையை பயன்படுத்தினார்; அதில், மன்னிக்கும் குணம் படைத்த ஒரு தகப்பனுக்கு யெகோவாவை ஒப்பிட்டார்; அந்தத் தகப்பன், தனது ஊதாரி மகன் மனந்திரும்பி வருவதைக் கண்டதும் மிகவும் மனதுருகி ஓடோடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். (லூக்கா 15:11-24) யெகோவா, நேர்மை இருதயமுள்ள ஜனங்கள் ஒவ்வொருவரையும் நேசிப்பதால் அவர்களை தம்மிடம் ‘ஈர்க்கிறார்’ என்றும் இயேசு விளக்கினார். (யோவான் 6:44) ஒரு சின்னக் குருவி தரையில் விழுந்தாலும் அதை அவர் அறிவார். “பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என இயேசு விளக்கினார். (மத்தேயு 10:29, 31) அப்படிப்பட்ட கரிசனையுள்ள கடவுளிடம் கண்டிப்பாகவே சுண்டி இழுக்கப்படுகிறோம்.

16 இரண்டாவதாக, இயேசுவின் முன்மாதிரி யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசு தன் தகப்பனை அவ்வளவு பரிபூரணமாக பின்பற்றியதால், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என அவரால் சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) இவ்வாறு, சுவிசேஷங்களில் இயேசுவைப் பற்றி—அவர் வெளிக்காட்டிய உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு நடந்துகொண்ட விதங்களையும் பற்றி—வாசிக்கும்போது ஒரு கருத்தில் அவரது தகப்பனின் உயிருள்ள பிம்பத்தையே பார்க்கிறோம். யெகோவா தம் குணங்களை இதைவிட தெளிவாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கவே முடியாது. ஏன் அப்படி சொல்கிறோம்?

17. யெகோவா தாம் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவியிருக்கும் விதத்தை உதாரணத்தோடு விளக்குக.

17 உதாரணத்திற்கு, தயவு என்றால் என்ன என்பதை விளக்க முயலுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் அதை வார்த்தைகளால் விவரிக்கலாம். ஆனால் உண்மையில் தயவான செயலை செய்யும் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘இதுதான் தயவிற்கு ஒரு உதாரணம்’ என்று சொல்லும்போது, “தயவு” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூடுகிறது, அதை புரிந்துகொள்வதும் சுலபமாகிறது. யெகோவா, தாம் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு புரியவைப்பதற்கு அதேபோன்ற ஒன்றைத்தான் செய்திருக்கிறார். வார்த்தைகளால் தம்மை விவரிப்பதோடு, தமது மகனின் உயிருள்ள உதாரணத்தையும் நமக்கு அளித்திருக்கிறார். இயேசுவின் செயல்களில் கடவுளுடைய பண்புகள் பளிச்சிடுகின்றன. இயேசுவை பற்றி விவரிக்கும் சுவிசேஷ பதிவுகளின் மூலம், “இப்படித்தான் நான் இருக்கிறேன்” என யெகோவா ஒரு கருத்தில் சொல்கிறார். கடவுளால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பதிவு, பூமியிலிருந்த இயேசுவை எவ்வாறு விவரிக்கிறது?

18. இயேசு எவ்வாறு வல்லமை, நீதி, ஞானம் ஆகிய பண்புகளை வெளிக்காட்டினார்?

18 கடவுளுடைய நான்கு முக்கிய பண்புகள் இயேசுவிடம் மிக அழகாக வெளிப்பட்டன. வியாதியின்மீதும் பசியின்மீதும் மரணத்தின்மீதும்கூட அவருக்கிருந்த அதிகாரம் அவருடைய வல்லமையை காட்டியது. இருந்தாலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சுயநல மனிதர்களைப் போல் அவர் தமது அற்புத வல்லமையை ஒருபோதும் தமக்காக பயன்படுத்தவில்லை, மற்றவர்களை புண்படுத்தவும் பயன்படுத்தவில்லை. (மத்தேயு 4:2-4) அவர் நீதியை நேசித்தார். அநீதியான வியாபாரிகள் மக்களை சுரண்டி பிழைப்பதைப் பார்த்து அவர் இருதயம் நியாயமான கோபத்தால் கொதித்தது. (மத்தேயு 21:12, 13) அவர் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டோரையும் பட்சபாதமில்லாமல் நடத்தினார், அப்படிப்பட்டவர்களுக்கு ‘புத்துணர்ச்சி கிடைக்க’ உதவினார். (மத்தேயு 11:4, 5, 28-30) ‘சாலொமோனைவிட பெரியவரான’ இயேசுவின் போதனைகளில் நிகரற்ற ஞானம் புதைந்திருந்தது. (மத்தேயு 12:42) ஆனால் இயேசு தமது ஞானத்தை ஒருபோதும் பகட்டாக காட்டிக்கொள்ளவில்லை. அவரது வார்த்தைகள் சாதாரண மக்களின் இருதயங்களை தொட்டன, ஏனெனில் அவரது போதனைகள் தெளிவாக, எளிமையாக, நடைமுறையாக இருந்தன.

19, 20. (அ) இயேசு எவ்வாறு அன்பு என்னும் பண்பிற்கு மிகச் சிறந்த இலக்கணமாக இருந்தார்? (ஆ) இயேசுவின் உதாரணத்தை பற்றி வாசித்து தியானிக்கும்போது நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?

19 அன்பு என்னும் பண்பிற்கு இயேசு மிகச் சிறந்த இலக்கணமாக இருந்தார். தமது ஊழியக்காலம் முழுவதும் அனுதாபம், பரிவு போன்ற அநேக கோணங்களில் அவர் அன்பை வெளிக்காட்டினார். மற்றவர்களின் துயரத்தைக் கண்டு அவர் மனதுருகாத சந்தர்ப்பங்களே இல்லை. மீண்டும் மீண்டும் அனுதாபத்தால் தூண்டப்பட்டு செயல்பட்டார். (மத்தேயு 14:14) அவர் வியாதியஸ்தர்களை குணப்படுத்தி பசியாயிருந்தவர்களுக்கு உணவளித்தார் என்றாலும் வேறொரு மிக முக்கிய விதத்திலும் பரிவை காட்டினார். மனிதவர்க்கத்திற்கு நிரந்தர ஆசீர்வாதங்களை கொண்டுவரப்போகும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் அவர் மற்றவர்களுக்கு உதவினார். (மாற்கு 6:34; லூக்கா 4:43) எல்லாவற்றிற்கும் மேலாக, தம் உயிரையே மற்றவர்களுக்காக மனமுவந்து கொடுப்பதன் மூலம் அவர் சுயதியாக அன்பை வெளிக்காட்டினார்.—யோவான் 15:13.

20 எல்லா வயதையும் பின்னணியையும் சேர்ந்தவர்கள் மிகுந்த கனிவும் ஆழ்ந்த உணர்ச்சிகளும் பெற்ற இவரிடம் சுண்டி இழுக்கப்பட்டதில் வியப்பேது! (மாற்கு 10:13-16) எனினும், இயேசுவின் உயிருள்ள உதாரணத்தை பற்றி வாசித்து தியானிக்கும்போது, இந்த மகனிடத்தில் பிதாவின் தெளிவான ரூபத்தை காண்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைப்போமாக.—எபிரெயர் 1:3.

கைகொடுக்க ஒரு புத்தகம்

21, 22. யெகோவாவை தேடுவதில் என்ன உட்பட்டிருக்கிறது, இந்த முயற்சியில் நமக்கு உதவும் என்ன விஷயங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன?

21 யெகோவா தமது வார்த்தையில் தம்மை பற்றி தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்; இவ்வாறு, நாம் அவரிடம் நெருங்கி வரவே விரும்புகிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டியிருக்கிறார். அதேசமயத்தில், தம்மிடம் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர் நம்மை வற்புறுத்துவது கிடையாது. “வாய்ப்பு இருக்கும்போதே” யெகோவாவை தேடுவது நம் பொறுப்பு. (ஏசாயா 55:6) அவரை தேடுவது, பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது பண்புகளையும் வழிகளையும் அறிந்துகொள்வதை உட்படுத்துகிறது. இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் அதைச் செய்ய உங்களுக்கு உதவவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

22 இந்த புத்தகம், யெகோவாவின் நான்கு முக்கிய பண்புகளாகிய வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு பகுதியும் அந்தக் குறிப்பிட்ட பண்பை பற்றிய சுருக்கமான விவரிப்போடு ஆரம்பிக்கிறது. யெகோவா எவ்வாறு அந்தப் பண்பை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறார் என்பதை அடுத்த சில அதிகாரங்கள் விவரிக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும், இயேசு எவ்வாறு அந்தப் பண்பை சிறப்பாக வெளிக்காட்டினார் என ஒரு அதிகாரமும், அப்பண்பை நாம் எப்படி வெளிக்காட்டலாம் என இன்னொரு அதிகாரமும் விவரிக்கின்றன.

23, 24. (அ) “தியானிக்க சில கேள்விகள்” என்ற விசேஷ பகுதியைப் பற்றி விளக்குக. (ஆ) தியானிப்பது எவ்வாறு கடவுளிடம் மிக அதிகமாக நெருங்கிச் செல்ல நமக்கு உதவுகிறது?

23 இந்த அதிகாரம் முதல், “தியானிக்க சில கேள்விகள்” என்ற விசேஷ பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு,  பக்கம் 24-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியை பாருங்கள். இந்த அதிகாரத்தை மறுபார்வை செய்வதற்காக அங்கே வசனங்களும் கேள்விகளும் கொடுக்கப்படவில்லை. மாறாக, கலந்தாலோசிக்கப்படும் பொருளின்பேரில் மற்ற முக்கியமான அம்சங்களை சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு உதவுவதற்காகவே அவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீங்கள் எவ்வாறு திறம்பட பயன்படுத்திக்கொள்ளலாம்? கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வசனத்தையும் பைபிளில் எடுத்துப் பார்த்து கவனமாக வாசியுங்கள். அதன்பின் வசனத்திற்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வியை வாசியுங்கள். பதில்களை குறித்து சிந்தியுங்கள். நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சியும் செய்யலாம். அதோடு, இப்படிப்பட்ட சில கூடுதலான கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தத் தகவல் யெகோவாவை பற்றி எனக்கு என்ன சொல்கிறது? இது எப்படி என் வாழ்க்கையை பாதிக்கிறது? மற்றவர்களுக்கு உதவ இதை நான் எப்படி பயன்படுத்தலாம்?’

24 இவ்வாறு தியானிப்பது, யெகோவாவிடம் இன்னுமதிகமாக நெருங்கிச் செல்ல நமக்கு உதவும். ஏன்? பைபிள், தியானத்தையும் இருதயத்தையும் இணைத்துப் பேசுகிறது. (சங்கீதம் 19:14) நாம் கடவுளை பற்றி கற்றுக்கொள்ளும் விஷயங்களை இருதயப்பூர்வ போற்றுதலோடு தியானிக்கும்போது, அவ்விஷயங்கள் நம் அடையாளப்பூர்வ இருதயத்தில் ஆழமாக பதிகின்றன; அவை நம் சிந்தையை பாதித்து, நம் உணர்ச்சிகளை தூண்டி, இறுதியில், நம்மை செயல்பட உந்துவிக்கின்றன. கடவுள் மீதிருக்கும் நம் அன்பையும் அதிகரிக்கின்றன; இந்த அன்பு, நம் நேசத்திற்குரிய நண்பராக அவரை பிரியப்படுத்த நம்மை தூண்டுகிறது. (1 யோவான் 5:3) அப்படிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள, யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனினும், அவருடைய இயல்பின் ஒரு குறிப்பிட்ட அம்சம்—அவரது பரிசுத்தத்தன்மை—அவரிடம் நெருங்கிச் செல்வதற்கு மிக முக்கிய காரணமளிக்கிறது; ஆகவே அதைப் பற்றி நாம் முதலில் கலந்தாலோசிக்கலாம்.

a உதாரணத்திற்கு, கடவுளுடைய முகம், கண்கள், காதுகள், மூச்சுக்காற்று, வாய், கைகள், பாதம் ஆகியவற்றை பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 18:15; 27:8, அடிக்குறிப்பு; 44:3; ஏசாயா 60:13; மத்தேயு 4:4; 1 பேதுரு 3:12) இவை அடையாளப்பூர்வ பதங்கள். யெகோவா “கற்பாறை,” அல்லது ‘கேடயம்’ என சொல்லப்படுவதை எவ்வாறு சொல்லர்த்தமாக எடுக்க முடியாதோ அப்படித்தான் அவற்றையும் சொல்லர்த்தமாக எடுக்க முடியாது.—உபாகமம் 32:4; சங்கீதம் 84:11.