Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 21

‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார்

‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார்

1-3. இயேசுவின் போதனையை அவரது அக்கம்பக்கத்தார் எந்தளவு வரவேற்றார்கள், அவரைப் பற்றி எதை உணரத் தவறினார்கள்?

 அந்தக் கூட்டத்தார் மலைத்துப் போனார்கள். ஜெபாலயத்தில் அவர்கள் முன்னிலையில் நின்றுகொண்டு இளம் மனிதராகிய இயேசு கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அவரொன்றும் முன்பின் தெரியாதவர் அல்ல—அந்தப் பட்டணத்தில் அவர்கள் பார்க்க வளர்ந்து ஆளானவர். பல ஆண்டுகளாக அவர்கள் மத்தியில்தான் ஒரு தச்சனாக வேலை பார்த்து வந்தார். ஒருவேளை இயேசுவே கூடமாட உதவி செய்து கட்டிக்கொடுத்த வீடுகளில் அவர்களில் சிலர் குடியிருந்திருக்கலாம். அல்லது அவர் கையாலே செதுக்கிய கலப்பைகளையும் நுகத்தடிகளையும் வயல் வேலைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். a ஆனால் இந்த முன்னாள் தச்சருடைய போதனையை அவர்கள் எந்தளவு வரவேற்றார்கள்?

2 அவருடைய போதனையை கேட்டவர்கள் பெரும்பாலோர் ஆச்சரியப்பட்டு, “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது?” என்று கேட்டார்கள். “இவன் தச்சன்தானே? இவன் மரியாளின் மகன்தானே?” என்றும்கூட பேசிக் கொண்டார்கள். (மத்தேயு 13:54-58; மாற்கு 6:1-3) ‘இந்தத் தச்சன் நம்மைப் போலவே இந்த ஊரில் வாழும் சாதாரண மனுஷன்தான்’ என இயேசுவின் அக்கம்பக்கத்தார் அவரைக் குறித்து எண்ணியது வருந்தத்தக்கது. அவருடைய வாயில் ஞானம் கொப்பளித்தபோதிலும், அவர்கள் அவரை புறக்கணித்துவிட்டார்கள். அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞானம் அவருடையதல்ல என்பதை அறியத் தவறிவிட்டார்கள்.

3 இயேசுவுக்கு இந்த ஞானம் எப்படித்தான் வந்தது? “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று அவர் சொன்னார். (யோவான் 7:16) இயேசுவே ‘கடவுளிடமிருந்து வந்த ஞானம்’ என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (1 கொரிந்தியர் 1:30) யெகோவாவின் ஞானமே அவரது மகனாகிய இயேசுவின் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், “நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொல்லும் அளவுக்கு அது வெளிப்பட்டிருக்கிறது. (யோவான் 10:30) ‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டிய மூன்று அம்சங்களை நாம் ஆராயலாம்.

அவர் கற்பித்தவை

4. (அ) இயேசுவுடைய செய்தியின் கருப்பொருள் என்ன, அது ஏன் மிகவும் முக்கியம்? (ஆ) ஏன் இயேசுவின் ஆலோசனை எப்பொழுதும் நடைமுறையானது, செவிசாய்ப்போருடைய மிகச் சிறந்த நலனுக்கேதுவானது?

4 முதலில், இயேசு கற்பித்தவற்றை கவனியுங்கள். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியே’ அவருடைய செய்தியின் கருப்பொருள். (லூக்கா 4:43) இது மிகவும் முக்கியம், ஏனென்றால் அந்த அரசாங்கத்தின் மூலமே யெகோவா தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார். அதோடு, அவரே நீதியான ஆட்சியாளர் என்பதை நிரூபிப்பார்; மனிதகுலத்திற்கு என்றென்றும் ஆசிகளைப் பொழிவார். அன்றாட வாழ்விற்குத் தேவையான ஞானம் பொதிந்த அறிவுரைகளையும் இயேசு போதித்தார். முன்னறிவிக்கப்பட்ட “ஞானமுள்ள ஆலோசகர்” அவரே என்பதை நிரூபித்தார். (ஏசாயா 9:6) அவருடைய ஆலோசனை எப்படி வியக்கத்தக்கதாக இல்லாமல் போகும்? அவருக்குத்தான் கடவுளுடைய வார்த்தையையும் சித்தத்தையும் பற்றிய ஆழமான அறிவும், மனித இயல்பை பற்றிய கூர்ந்த உட்பார்வையும், மனிதகுலத்தின் மீது ஆழ்ந்த அன்பும் இருந்ததே! ஆகவே, அவருடைய ஆலோசனை எப்பொழுதும் நடைமுறையாகவும் செவிசாய்த்தவர்களுடைய மிகச் சிறந்த நலனுக்கேதுவாகவும் இருந்தது. இயேசு ‘முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகளை’ பேசினார். ஆம், அவருடைய ஆலோசனையை பின்பற்றினால் மீட்பு கிட்டும்.—யோவான் 6:68.

5. மலைப் பிரசங்கத்தில் இயேசு பேசிய பொருள்களில் சில யாவை?

5 இயேசுவின் போதனைகளில் காணப்படும் ஒப்பற்ற ஞானத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு மலைப் பிரசங்கம். மத்தேயு 5:3–7:27-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இந்தப் பிரசங்கத்தை கொடுப்பதற்கு சுமார் 20 நிமிடமே எடுத்திருக்கும். ஆனால் அதிலுள்ள அறிவுரை கால வரம்பற்றது—அன்று எந்தளவுக்கு பயனுள்ளதாக இருந்ததோ அந்தளவுக்கு இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது. பல்வேறு பொருள்களில் இயேசு பேசினார்; மற்றவர்களுடன் எவ்வாறு நல்ல உறவை வளர்த்துக்கொள்வது (5:23-26, 38-42; 7:1-5, 12), ஒழுக்க ரீதியில் எவ்வாறு சுத்தமாயிருப்பது (5:27-32), எவ்வாறு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது (6:19-24; 7:24-27) போன்றவற்றை குறிப்பிட்டார். ஆனால் எதைச் செய்வது ஞானமானது என்பதை கூட்டத்தாருக்கு சொல்வதோடு மட்டுமே அவர் நிறுத்திக் கொள்ளவில்லை; விளக்கிக் கூறுவதன் மூலம், நியாயங்காட்டிப் பேசுவதன் மூலம், அத்தாட்சி அளிப்பதன் மூலம் அவற்றை அவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டினார்.

6-8. (அ) கவலைப்படாமல் இருப்பதற்கு என்ன வலுவான காரணங்கள் இருப்பதாக இயேசு சொன்னார்? (ஆ) இயேசுவின் ஆலோசனை பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை வெளிப்படுத்தியதை எது காட்டுகிறது?

6 உதாரணமாக, மத்தேயு 6-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொருளாதார தேவைகளைப் பற்றி அனாவசியமாக கவலைப்படாதிருப்பதற்கு இயேசு கொடுத்த ஞானமான ஆலோசனையை கவனியுங்கள். “எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என இயேசு அறிவுரை வழங்கினார். (வசனம் 25) உணவும் உடையும் அடிப்படை தேவைகள், இவற்றிற்காக கவலைப்படுவது இயல்பானதே. ஆனால் இவற்றிற்காக “கவலைப்படுவதை நிறுத்துங்கள்” என இயேசு சொன்னார். b ஏன்?

7 நம்ப வைக்கும் விதத்தில் இயேசு நியாயங்களை எடுத்துக் காட்டியதை செவிகொடுத்துக் கேளுங்கள். யெகோவாவே நமக்கு உடலையும் உயிரையும் தந்திருப்பதால், அந்த உயிருக்கு உணவையும் அந்த உடலுக்கு உடையையும் தர மாட்டாரா? (வசனம் 25) பறவைகளுக்கு உணவையும் பூக்களுக்கு அழகிய உடைகளையும் கடவுள் தருகிறார் என்றால், தமது வணக்கத்தாரை இன்னும் எந்தளவுக்கு கவனிப்பார்? (வசனங்கள் 26, 28-30) உண்மையில், அனாவசியமாக கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை. அதனால் இம்மியளவுகூட நம்முடைய ஆயுளை கூட்ட முடியாது. c (வசனம் 27) அப்படியென்றால் நாம் எவ்வாறு கவலையை போக்கலாம்? வாழ்க்கையில் தொடர்ந்து கடவுளுடைய வணக்கத்திற்கே முதலிடம் கொடுங்கள் என இயேசு ஆலோசனை தந்தார். அப்படி செய்தால் பரலோக தகப்பன் நம் அன்றாட தேவைகள் அனைத்தையும் ‘நமக்கு கொடுப்பார்’ என்பதில் உறுதியான நம்பிக்கையோடு இருக்கலாம். (வசனம் 33) கடைசியாக, மிக நடைமுறையான ஆலோசனையை இயேசு தந்தார்—அன்றன்றைக்குரிய பாடுகளை மட்டும் அன்றன்றைக்கு கவனியுங்கள். ஏன் நாளைய கவலைகளையும் இன்றைய கவலைகளோடு மனதில் சுமக்க வேண்டும்? (வசனம் 34) அதோடு, ஒருபோதும் நடக்காத காரியங்களுக்காக ஏன் அனாவசியமாக கவலைப்பட வேண்டும்? இத்தகைய ஞானமான ஆலோசனையை கடைப்பிடிப்பது துன்பமிக்க இவ்வுலகினால் வரும் பெரும் மனவேதனையிலிருந்து நம்மை காக்கும்.

8 சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கொடுத்த ஆலோசனை அன்றும் சரி இன்றும் சரி நடைமுறையானது என்பது தெளிவாகிறது. இது பரலோகத்திலிருந்து வரும் ஞானத்திற்கு அத்தாட்சி அளிக்கிறது அல்லவா? மனித ஆலோசகர்களிடமிருந்து வரும் சிறந்த அறிவுரையும்கூட காலப்போக்கில் காலாவதியாகிவிடுகிறது, விரைவில் திருத்தப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. என்றாலும், இயேசுவின் போதனைகளோ காலங்காலமாக நிலைத்திருக்கின்றன. இது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த ஞானமுள்ள ஆலோசகர் “கடவுளுடைய வார்த்தைகளைப்” பேசினார்.—யோவான் 3:34.

அவர் கற்பித்த முறை

9. இயேசுவின் போதனையைக் குறித்து படைவீரர்களில் சிலர் என்ன சொன்னார்கள், ஏன் இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல?

9 கடவுளுடைய ஞானத்தை இயேசு வெளிப்படுத்திய இரண்டாவது அம்சம் அவர் கற்பித்த முறை. ஒரு சமயம் அவரை கைது செய்து வரும்படி அனுப்பப்பட்ட படைவீரர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்து, “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொன்னார்கள். (யோவான் 7:45, 46) அவர்கள் நிச்சயம் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அதுவரை வாழ்ந்த மனிதரில் இயேசுதான் ‘மேலே இருந்து வந்தவர்.’ அதனால்தான், அவர் அறிவையும் அனுபவத்தையும் அள்ளி வழங்கிய மாபெரும் களஞ்சியமாக விளங்கினார். (யோவான் 8:23) உண்மையில், எந்தவொரு மனிதனும் போதிக்க முடியாத விதத்தில் அவர் போதித்தார். ஞானவானாகிய இந்தப் போதனையாளர் பயன்படுத்திய போதிக்கும் முறைகளில் இரண்டை மட்டும் கவனியுங்கள்.

“அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்”

10, 11. (அ) இயேசு பயன்படுத்திய உவமைகளைக் கேட்டு ஏன் நம்மால் வியக்காமல் இருக்க முடியாது? (ஆ) நீதிக் கதைகள் என்றால் என்ன, போதிப்பதற்கு இயேசுவின் நீதிக் கதைகள் மிகவும் திறம்பட்டவை என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?

10 உவமைகளைத் திறம்பட பயன்படுத்துதல். “திரண்டு வந்திருந்த மக்களிடம் உவமைகள் மூலமாகவே . . . எல்லாவற்றையும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை” என பைபிள் நமக்குச் சொல்கிறது. (மத்தேயு 13:34) ஆழமான சத்தியங்களை அன்றாட வாழ்க்கையில் காணும் காரியங்களின் வாயிலாக போதிக்கும் அவருடைய ஈடற்ற திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. விவசாயிகள் விதை விதைத்தல், பெண்கள் ரொட்டி சுடுவதற்கு மாவு தயாரித்தல், சந்தைவெளியில் பிள்ளைகள் விளையாடுதல், மீனவர்கள் வலைகளை இழுத்தல், மேய்ப்பர்கள் காணாமற்போன ஆட்டை தேடுதல்—இவையெல்லாம் அவருக்கு செவிசாய்த்தோர் பல தடவை கண்ணார கண்ட காரியங்கள். முக்கியமான சத்தியங்களைப் பழக்கப்பட்ட விஷயங்களோடு குழைத்து தரும்போது, இத்தகைய சத்தியங்கள் மனதிலும் இதயத்திலும் சீக்கிரமாகவும் ஆழமாகவும் பதிந்துவிடுகின்றன.—மத்தேயு 11:16-19; 13:3-8, 33, 47-50; 18:12-14.

11 இயேசு அடிக்கடி நீதிக் கதைகளைப் பயன்படுத்தி போதித்தார்; அவை நன்னெறிகளை அல்லது ஆன்மீக சத்தியங்களை கற்பிக்கும் சிறு கதைகள் ஆகும். புலன்களுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களைவிட கதைகள் கிரகிப்பதற்கும் நினைவில் வைப்பதற்கும் எளிதாக இருக்கின்றன. ஆகவே நீதிக் கதைகள் அவரது போதனை அழியாமல் நிலைத்திருப்பதற்கு உதவின. பல நீதிக் கதைகளில், எளிதில் மறக்க முடியா தத்ரூபமான வார்த்தைகளால் தமது தகப்பனை அவர் சித்தரித்துக் காட்டினார். உதாரணமாக, கெட்ட குமாரனைப் பற்றிய நீதிக் கதையின் குறிப்பை, அதாவது வழிதவறிச் சென்ற ஒருவன் உண்மையான மனந்திரும்புதலை காட்டும்போது யெகோவா இரக்கப்பட்டு கனிவோடு மீண்டும் ஏற்றுக்கொள்வார் என்பதை யார்தான் புரிந்துகொள்ள முடியாது?—லூக்கா 15:11-32.

12. (அ) இயேசு தம் போதனையில் கேள்விகளை எப்படி பயன்படுத்தினார்? (ஆ) தம்முடைய அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை எவ்வாறு இயேசு வாயடைத்துப் போகச் செய்தார்?

12 கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல். செவிசாய்ப்போர் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வர, தங்களுடைய உள்ளெண்ணங்களை ஆராய்ந்து பார்க்க, அல்லது தீர்மானங்கள் எடுக்க உதவும் விதத்தில் இயேசு கேள்விகளைப் பயன்படுத்தினார். (மத்தேயு 12:24-30; 17:24-27; 22:41-46) கடவுளால் அருளப்பட்ட அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என மதத் தலைவர்கள் கேள்வி கேட்டபோது, இயேசு அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது கடவுளா மனுஷர்களா?” அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவர்கள் வாயடைத்துப் போனார்கள். “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான். ‘மனுஷர்கள்’ என்று சொன்னால் நம் கதி என்னவாகும்?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். யோவான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் எல்லாரும் நம்பியதால் அப்படிச் சொல்ல பயந்தார்கள்.” கடைசியில், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். (மாற்கு 11:27-33; மத்தேயு 21:23-27) ஓர் எளிய கேள்வியைக் கேட்டு அவர்களை வாயடைக்கச் செய்வதன் மூலம் அவர்களுடைய இதயத்திலிருந்த மாய்மாலத்தை இயேசு வெளிப்படுத்தினார்.

13-15. நல்ல சமாரியனைப் பற்றிய நீதிக் கதை எவ்வாறு இயேசுவின் ஞானத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது?

13 சில சமயங்களில், இயேசு தமது உவமைகளில் சிந்தையைத் தூண்டும் கேள்விகளையும் இழையோட செய்தார்; இவ்வாறு இரண்டு போதிக்கும் முறைகளையும் கலந்து கற்பித்தார். முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு என்ன தேவை என்பதை திருச்சட்ட வல்லுநன் ஒருவன் கேட்டபோது, கடவுளையும் அயலகத்தாரையும் நேசிக்கும்படி கட்டளையிட்ட திருச்சட்டத்தை இயேசு அவனிடம் மேற்கோள் காட்டினார். தான் நீதிமான் என்பதை நிரூபிக்க விரும்பி, “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் [சக மனிதர், அடிக்குறிப்பு] உண்மையில் யார்?” என அவன் கேட்டான். அதற்கு பதிலளிக்க இயேசு ஒரு கதையை சொன்னார். யூதன் ஒருவன் தனியாக பயணம் செய்துகொண்டிருந்தபோது திருடர்கள் அவனை தாக்கி குற்றுயிராய் விட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த வழியே இரண்டு யூதர்கள் வந்தார்கள், அவர்களில் ஒருவன் ஆலய குரு, மற்றொருவன் லேவியன். இருவருமே அந்த மனிதனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட்டார்கள். ஆனால் பிற்பாடு சமாரியன் ஒருவன் அந்த வழியே வந்தான். காயப்பட்டுக் கிடந்த அந்த யூதனைப் பார்த்ததும் அவன் மீது பரிதாபப்பட்டு, அவனுடைய காயங்களுக்கு மென்மையாக கட்டுப்போட்டு, அவன் குணமடையும்படி பாதுகாப்பாக ஒரு சத்திரத்தில் அன்புடன் கொண்டுபோய் சேர்த்தான். இந்தக் கதையை முடிக்கையில், “இந்த மூன்று பேரில், கொள்ளைக்காரர்கள் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் [சக மனிதராக நடந்துகொண்டவர், அடிக்குறிப்பு] யாரென்று நினைக்கிறாய்?” என இயேசு அந்த மனிதனிடம் கேட்டார். “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்” என பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவன் வந்தான்.—லூக்கா 10:25-37.

14 அந்த நீதிக் கதை இயேசுவின் ஞானத்தை எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறது? இயேசுவின் காலத்தில், தங்கள் பாரம்பரியங்களைப் பின்பற்றியவர்களுக்கு மட்டுமே “சக மனிதர்” என்ற வார்த்தையை யூதர்கள் பயன்படுத்தினார்கள், ஆனால் அதை நிச்சயம் சமாரியர்களுக்குப் பயன்படுத்தவில்லை. (யோவான் 4:9) சமாரியனுக்கு ஒரு யூதன் உதவியதாக இயேசு அந்தக் கதையை மாற்றி சொல்லியிருந்தால், அவர்களுடைய தப்பெண்ணம் மாறியிருக்குமா? ஒரு சமாரியன் ஒரு யூதனை கனிவுடன் கவனித்துக்கொள்வது போல இயேசு அந்தக் கதையை ஞானமாக அமைத்தார். அந்தக் கதையின் முடிவில் இயேசு கேட்ட கேள்வியையும் கவனியுங்கள். இப்பொழுது “சக மனிதர்” என்ற வார்த்தைக்கு வேறு கோணத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். ‘சக மனிதருக்குரிய அன்பை நான் யாரிடம் காண்பிக்க வேண்டும்?’ என்றே அந்த திருச்சட்ட வல்லுநன் கேட்டான். ஆனால் இயேசு, “இந்த மூன்று பேரில், கொள்ளைக்காரர்கள் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறாய்?” என கேட்டார். அன்பை பெற்றவனிடம், அதாவது பாதிக்கப்பட்டவனிடம் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல், அந்த அன்பைக் காண்பித்த சமாரியனிடம் கவனத்தை திருப்பினார். பிறர் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முன்வந்து அன்பை காண்பிக்கிறவரே உண்மையான அயலகத்தார். இயேசு தம்முடைய குறிப்பை இதைவிட இன்னும் திறம்பட எடுத்துரைத்திருக்க முடியாது.

15 இயேசு “கற்பித்த விதத்தைப் பார்த்து” ஜனங்கள் ஆச்சரியப்பட்டு அவரிடத்தில் கவரப்பட்டதில் ஏதாவது வியப்புண்டா? (மத்தேயு 7:28, 29) ஒரு சந்தர்ப்பத்தில் ‘ஒரு பெரிய கூட்டம்’ சாப்பாட்டைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அவருடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்களே!—மாற்கு 8:1, 2.

அவருடைய வாழ்க்கை முறை

16. தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்பட்டதற்கு இயேசு எந்த விதத்தில் “நடைமுறையான அத்தாட்சி” அளித்தார்?

16 யெகோவாவின் ஞானத்தை இயேசு வெளிப்படுத்திய மூன்றாவது அம்சம் அவருடைய வாழ்க்கை முறை. ஞானம் நடைமுறையானது; அது பலன்தருவது. ‘உங்கள் மத்தியில் யாருக்கு ஞானம் இருக்கிறது?’ என சீஷனாகிய யாக்கோபு கேட்டார். தன்னுடைய கேள்விக்கு தானே பதிலளித்து, “அவருடைய சரியான நடத்தை அதற்கு நடைமுறையான அத்தாட்சியை தருவதாக” என்று கூறினார். (யாக்கோபு 3:13, த நியூ இங்லிஷ் பைபிள்) இயேசு தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்பட்டார் என்பதற்கு அவருடைய நடத்தை “நடைமுறையான அத்தாட்சியை” அளித்தது. தம் வாழ்க்கை முறையிலும் மற்றவர்களை நடத்திய விதத்திலும் அவர் எவ்வாறு விவேகத்தைக் காட்டினார் என்பதை நாம் ஆராயலாம்.

17. இயேசு தமது வாழ்க்கையில் பரிபூரண சமநிலையுடன் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

17 விவேகமற்றவர்கள் எல்லை மீறிப்போவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆம், எல்லை மீறாமல் சமநிலையோடு இருப்பதற்கு ஞானம் தேவை. தெய்வீக ஞானத்தை வெளிப்படுத்தியதால், இயேசு பரிபூரண சமநிலையைக் காத்துக்கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய வாழ்வில் ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தார். நல்ல செய்தியை அறிவிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார். “இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்” என சொன்னார். (மாற்கு 1:38) பொருளாதார காரியங்கள் அவருடைய வாழ்க்கையில் பிரதானமாக இருக்கவில்லை; அவரிடம் இருந்த பொருட்கள் அற்பசொற்பமே என தெரிகிறது. (மத்தேயு 8:20) என்றாலும், அவர் துறவியாக இருக்கவில்லை. ‘சந்தோஷமுள்ள கடவுளாகிய’ தம்முடைய தகப்பனைப் போல, இயேசு மகிழ்ச்சியாக இருந்தார், பிறருடைய மகிழ்ச்சிக்கும் பங்களித்தார். (1 தீமோத்தேயு 1:11; 6:15) கலியாண விருந்தில்—பொதுவாகவே இசையும் பாடலும் உற்சாகமும் பொங்கி வழிந்த ஒரு நிகழ்ச்சியில்—அவர் கலந்துகொண்டபோது, அந்த நிகழ்ச்சியின் கலகலப்பை கெடுப்பவராக இருக்கவில்லை. திராட்சமது தீர்ந்தபோது, தண்ணீரை அருமையான திராட்சமதுவாக—‘மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்தும்’ பானமாக—மாற்றினார். (சங்கீதம் 104:15; யோவான் 2:1-11) விருந்திற்கான அழைப்புகளை பல சந்தர்ப்பங்களில் இயேசு ஏற்றுக்கொண்டார், பெரும்பாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை போதிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்.—லூக்கா 10:38-42; 14:1-6.

18. இயேசு தமது சீஷர்களை எவ்வாறு சரியாக எடைபோட்டிருந்தார்?

18 மற்றவர்களை இயேசு சரியாக எடைபோட்டிருந்தார். மனிதனுடைய இயல்பை அவர் நுட்பமாக அறிந்திருந்ததால் சீஷர்களை அவரால் தெளிவாக மதிப்பிட முடிந்தது. அவர்கள் பரிபூரணர் அல்லர் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனாலும் அவர்களுடைய நல்ல குணங்களை பகுத்துணர்ந்தார். யெகோவா தேர்ந்தெடுத்த அந்த மனிதருக்குள் மறைந்திருந்த திறமையை அவர் கண்டார். (யோவான் 6:44) அவர்களுடைய குறைபாடுகளின் மத்தியிலும், அவர்களை மனப்பூர்வமாக நம்பினார். அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி, தமது சீஷர்களிடம் பெரும் உத்தரவாதத்தை ஒப்படைத்தார். நல்ல செய்தியை பிரசங்கிக்கும் பொறுப்பை வழங்கினார். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அவர்களுடைய திறமை மீதும் அவர் நம்பிக்கை வைத்தார். (மத்தேயு 28:19, 20) கட்டளையிடப்பட்ட வேலையை அவர்கள் உண்மையோடு செய்து முடித்தார்கள் என்பதற்கு அப்போஸ்தலர் புத்தகம் அத்தாட்சி அளிக்கிறது. (அப்போஸ்தலர் 2:41, 42; 4:33; 5:27-32) அப்படியானால், அவர்களை இயேசு நம்பியது ஞானமான செயல் என்பதில் சந்தேகமே இல்லை.

19. இயேசு ‘சாந்தமும் மனத்தாழ்மையுமாய்’ இருந்ததை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்?

19 நாம் 20-ம் அதிகாரத்தில் கவனித்தபடி, மனத்தாழ்மையையும் சாந்தகுணத்தையும் ஞானத்துடன் பைபிள் இணைத்துப் பேசுகிறது. இந்த விஷயத்தில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றியென்ன? இயேசு தமது சீஷர்களை மனத்தாழ்மையோடு நடத்தியதைக் கவனிக்கும்போது அது இதயத்திற்கு இதமளிக்கிறது. அவர் பரிபூரண மனிதராக, அவர்களைவிட மேலானவராக இருந்தார். என்றாலும், தமது சீஷர்களை அவர் தாழ்வாக கருதவில்லை. ஒருபோதும் தாழ்ந்தவர்களாகவோ அல்லது தகுதியற்றவர்களாகவோ அவர்களை உணரச் செய்யவில்லை. மாறாக, அவர்களுடைய வரம்புகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுடைய குறைபாடுகளின் மத்தியிலும் அவர்களிடம் பொறுமையை காட்டினார். (மாற்கு 14:34-38; யோவான் 16:12) சிறுபிள்ளைகளும்கூட அவரிடம் வருவதற்குத் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அல்லவா? சொல்லப்போனால், பிள்ளைகள் அவரிடம் சுண்டி இழுக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர் ‘சாந்தமும் மனத்தாழ்மையுமாக’ இருந்ததை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.—மத்தேயு 11:29; மாற்கு 10:13-16.

20. பேய் பிடித்திருந்த மகளையுடைய வேறு தேசத்து பெண்ணை இயேசு நடத்திய விஷயத்தில் எவ்வாறு நியாயத்தன்மையை வெளிப்படுத்தினார்?

20 கடவுளைப் போலவே இயேசு மனத்தாழ்மையை மற்றொரு முக்கியமான முறையிலும் வெளிப்படுத்தினார். இரக்கம் காண்பிப்பது தகுதியானதாக இருந்தபோது அவர் நியாயத்தன்மையுள்ளவராக, அல்லது வளைந்துகொடுப்பவராக இருந்தார். உதாரணமாக, பேய் பிடித்திருந்த தன் மகளை குணப்படுத்துவதற்கு வேறு தேசத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மன்றாடியதை சற்று நினைத்துப் பாருங்கள். தாம் உதவி செய்யப் போவதில்லை என்பதை இயேசு ஆரம்பத்தில் மூன்று வித்தியாசமான முறைகளில் சுட்டிக்காட்டினார்—முதலாவதாக, அவளுக்கு பதில் சொல்ல மறுப்பதன் மூலம்; இரண்டாவதாக, மற்ற தேசத்தை சேர்ந்தவர்களுக்கு அல்ல ஆனால் யூதரிடத்திற்கே தாம் அனுப்பப்பட்டதை நேரடியாக சொல்வதன் மூலம்; மூன்றாவதாக, இதே குறிப்பை அன்போடு சொல்ல ஓர் உதாரணத்தைப் பயன்படுத்துவதன் மூலம். ஆனால் அந்தப் பெண் விடாப்பிடியாக இருந்து, மிகச் சிறந்த விசுவாசத்திற்கு அத்தாட்சியை அளித்தாள். வழக்கத்திற்கு மாறான இந்தச் சூழ்நிலையில் இயேசு என்ன செய்தார்? செய்ய மாட்டேன் என முதலில் சொன்னதையே பிற்பாடு அவர் செய்தார். ஆம், அந்தப் பெண்ணின் மகளை குணமாக்கினார். (மத்தேயு 15:21-28) அது எப்பேர்ப்பட்ட மனத்தாழ்மை! மனத்தாழ்மை என்பது உண்மையான ஞானத்திற்கு அடிப்படை என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

21. ஏன் இயேசுவின் ஆள்தன்மையையும் பேச்சையும் வழிகளையும் பின்பற்ற நாம் முயல வேண்டும்?

21 பூமியில் வாழ்ந்த மனிதர்களிலேயே மிகவும் ஞானவானாக விளங்கிய ஒருவருடைய வார்த்தைகளையும் செயல்களையும் சுவிசேஷங்கள் வெளிப்படுத்துவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! இயேசு தமது தகப்பனை பூரணமாக பிரதிபலித்தார் என்பதை நாம் நினைவில் வைத்திருப்போமாக. இயேசுவின் ஆள்தன்மையையும் பேச்சையும் வழிகளையும் பின்பற்றுவதன் மூலம் பரத்திலிருந்து வரும் ஞானத்தை நாம் வளர்ப்போம். அடுத்த அதிகாரத்தில், நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு கடவுளுடைய ஞானத்தை வெளிக்காட்டலாம் என்பதை சிந்திப்போம்.

a பைபிள் காலங்களில், வீடுகள் கட்டுவதற்கும், மேஜை, நாற்காலிகள், பண்ணை கருவிகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கும் தச்சர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜஸ்டின் மார்டிர் இயேசுவைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “தச்சு வேலை செய்து கலப்பைகள், நுகத்தடிகள் தயாரிப்பது அவருடைய வழக்கம்.”

b ‘கவலைப்படுவது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல், “மனம் சிதறடிக்கப்படுவதைக்” குறிக்கிறது. மத்தேயு 6:25-ல் பயன்படுத்தப்பட்டுள்ளபடி அது பயம் கலந்த அச்சத்தைக் குறிக்கிறது; இது, மனதை சிதறடித்து அல்லது இரண்டுபடுத்தி வாழ்க்கையில் மகிழ்ச்சியை பறித்துவிடுகிறது.

c சொல்லப்போனால், மிதமீறிய கவலையும் அழுத்தமும் நமக்கு இதய நோயையும் மற்ற அநேக வியாதிகளையும் உண்டாக்கி ஆயுளை குறைத்துவிடலாம் என அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்திருக்கிறது.