அதிகாரம் 15
இயேசு ‘இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்’
1, 2. எந்த சந்தர்ப்பத்தில் இயேசு கோபப்பட்டார், ஏன்?
இயேசு கோபத்தில் கொதித்தார், அதற்கு தகுந்த காரணமும் இருந்தது. அவர் அந்தளவு கோபப்பட்டதை கற்பனை செய்து பார்ப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம், ஏனெனில் அவர் சாந்தமே உருவானவராக இருந்தார். (மத்தேயு 21:4) என்றாலும் அவர் அந்தக் கோபத்திலும் முழு கட்டுப்பாட்டுடன் இருந்தார், ஏனெனில் அவர் காட்டியது நியாயமான கோபம். a ஆனால் இந்த சமாதானப் பிரியரின் கோபத்தை இந்தளவுக்கு கிளறியது எது? பெருத்த அநீதியே.
2 எருசலேமிலிருந்த ஆலயத்தை இயேசு நெஞ்சார நேசித்தார். அவரது பரலோக தகப்பனின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்த இடம் உலகத்திலேயே அது ஒன்றுதான். அங்கே வணக்கத்துக்காக அநேக நாடுகளிலிருந்து யூதர்கள் மைல்கணக்காக பிரயாணப்பட்டு சென்றனர். தேவபயமுள்ள புறஜாதியாரும்கூட சென்றனர், அவர்களுக்கென்று ஆலயப் பிரகாரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊழியத்தைத் தொடங்கிய சமயத்தில் இயேசு அந்த ஆலயத்திற்குள் நுழைந்தபோது ஓர் அருவருப்பான காட்சியைக் கண்டார். அந்த வணக்க ஸ்தலம் வியாபார ஸ்தலமாக அல்லவா காட்சியளித்தது! அங்கு வியாபாரிகளும் காசுத் தரகர்களும் நிரம்பி வழிந்தனர். ஆனால், அதில் என்ன அநீதி இருந்தது? மக்களை சுரண்டிப் பிழைப்பதற்கான—கொள்ளை அடிப்பதற்குமான—இடமாக மட்டுமே கடவுளுடைய ஆலயத்தை இவர்கள் கருதினர். எவ்வாறு?—யோவான் 2:14.
3, 4. யெகோவாவின் வீட்டில் என்ன பேராசைமிக்க சுரண்டல் நடந்து வந்தது, அதை சரிசெய்ய இயேசு என்ன நடவடிக்கை எடுத்தார்?
3 ஆலய வரியை செலுத்துவதற்கு ஒரேவொரு விதமான நாணயத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என மதத் தலைவர்கள் சட்டம் போட்டிருந்தனர். வேறு நாடுகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து அப்படிப்பட்ட நாணயங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே காசுக்காரர்கள் ஆலயத்திற்குள்ளேயே தங்கள் மேஜைகளை போட்டு வியாபாரம் செய்தனர்; மாற்றப்பட்ட ஒவ்வொரு பணத்துக்கும் கட்டணம் வசூலித்தனர். மிருகங்களை விற்கும் வியாபாரமும் பெரும் லாபத்தை ஈட்டித்தந்தது. பலிகளை செலுத்த விரும்பியவர்கள் நகரத்தில் எந்த வியாபாரியிடமிருந்தும் மிருகங்களை வாங்கலாம் என்றாலும், ஆலய அதிகாரிகள் அவற்றை பார்த்த மாத்திரத்தில் லாயக்கற்றவையென நிராகரித்துவிட்டனர். ஆலயத்திலேயே வாங்கப்பட்ட மிருகங்களை அவர்கள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டனர். இப்படி மக்கள் தங்களை நம்பி இருந்ததால் வியாபாரிகள் சிலசமயங்களில் விலைகளை எக்கச்சக்கமாக ஏற்றினர். b இது மட்டத்திலும் மட்டமான வியாபாரமாக இருந்தது. சொல்லப்போனால், கொள்ளையடிப்பதற்கு சமம்!
4 இப்படிப்பட்ட அநீதியை இயேசுவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது அவருடைய தகப்பனின் வீடாயிற்றே! ஆகவே கயிற்றினால் ஒரு சவுக்கை செய்து ஆடுமாடுகளை ஆலயத்திலிருந்து துரத்திவிட்டார். பின்பு காசுத் தரகர்களை நோக்கி விரைந்து சென்று, அவர்களுடைய மேஜைகளையெல்லாம் கவிழ்த்துப்போட்டார். பளிங்கு தரையில் அந்த காசுகளெல்லாம் சிதறி உருண்டோடியதை கற்பனை செய்து பாருங்கள்! “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்!” என புறா விற்கிறவர்களை அவர் அதட்டினார். (யோவான் 2:15, 16) அஞ்சா நெஞ்சமிக்க இவரை ஒருவரும் எதிர்க்கத் துணிந்ததாக தெரியவில்லை.
“இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்!”
தந்தையைப் போன்ற மகன்
5-7. (அ) இயேசு மனிதனாக வருவதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கை அவரது நீதியுணர்வை எப்படி பாதித்தது, அவரது உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ)சாத்தான் செய்திருக்கிற அநியாயத்துக்கு இயேசு எப்படி பதிலளித்தார், எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார்?
5 அந்த வணிகர்கள் திரும்ப வந்துவிட்டனர்தான். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு அதே அநீதியை மறுபடியும் எதிர்த்தார்; இம்முறை, யெகோவா தம் வீட்டை “கொள்ளைக்காரர்களின் குகையை” போல் ஆக்கியவர்களை கண்டித்து சொன்ன வார்த்தைகளையே இயேசு மேற்கோள் காட்டினார். (எரேமியா 7:11; மத்தேயு 21:13) அப்பாவி மக்கள் பேராசையோடு சுரண்டப்படுவதையும் கடவுளுடைய ஆலயம் கறைப்படுத்தப்படுவதையும் இயேசு கண்டபோது தம் தகப்பனைப் போலவே உணர்ந்தார். இதில் ஆச்சரியமென்ன! கோடானு கோடி ஆண்டுகளாக இயேசு தம் பரலோக தந்தையால் கற்பிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக யெகோவாவின் நீதியுணர்வை பெற்றிருந்தார். அவர் தந்தையைப் போன்ற மகன் என்ற பழமொழிக்கு உயிருள்ள உதாரணமாக விளங்கினார். ஆகவே யெகோவாவின் நீதியைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலை நாம் பெற விரும்பினால் இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தைக் குறித்து சிந்திப்பதே சிறந்த வழியாகும்.—யோவான் 14:9, 10.
6 சாத்தான் யெகோவா தேவனை பொய்யர் என்று அநியாயமாக கூறி, அவரது ஆட்சியின் நீதியைக் குறித்து கேள்வியெழுப்பியபோது அவரது ஒரே மகன் அங்கிருந்தார். அது எப்பேர்ப்பட்ட அவதூறு! ஒருவரும் சுயநலமின்றி, அன்பால் யெகோவாவை சேவிக்க மாட்டார்கள் என சாத்தான் பிற்பாடு எழுப்பிய சவாலையும் அந்தக் மகன் கேட்டார். இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் மகனின் நீதி வழுவா இதயத்தை நிச்சயம் வேதனைப்படுத்தின. ஆகவே இந்த விவாதங்களைத் தீர்ப்பதில் தாம் முக்கிய பங்காற்றப்போவதை அறிந்தபோது எப்படி மெய்சிலிர்த்துப் போயிருப்பார்! (2 கொரிந்தியர் 1:20) அதை எவ்வாறு செய்வார்?
7 அதிகாரம் 14-ல் நாம் கற்றபடி, யெகோவாவின் படைப்புகளுடைய உத்தமத்தன்மையைக் குறித்த சாத்தானின் குற்றச்சாட்டுக்கு இயேசு கிறிஸ்து முடிவான, உறுதியான பதிலளித்தார். இவ்வாறு, யெகோவாவின் பரிசுத்தமான பெயருக்கு ஏற்பட்ட எல்லா களங்கத்தையும் நீக்குவதற்கு அஸ்திவாரமிட்டார். யெகோவா ஆட்சி செய்கிற விதமே பரிபூரணமானது, எந்த குறையும் இல்லாதது என்றும் நிரூபித்தார். யெகோவாவின் அதிபதியாக இயேசு சர்வலோகமெங்கும் தெய்வீக நீதியை ஸ்தாபிப்பார். (அப்போஸ்தலர் 5:31) பூமியில் அவர் வாழ்ந்த வாழ்க்கையும் தெய்வீக நீதியை படம்பிடித்துக் காட்டியது. இவரைக் குறித்து யெகோவா இப்படிச் சொன்னார்: “என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன். எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.” (மத்தேயு 12:18) இந்த வார்த்தைகளை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
“எது நியாயம் என்பதை” இயேசு தெளிவாக்குகிறார்
8-10. (அ) யூத மதத் தலைவர்களுடைய வாய்மொழி பாரம்பரியங்கள் எவ்வாறு யூதரல்லாதவர்கள்மீதும் பெண்கள்மீதும் வெறுப்பை ஏற்படுத்தின? (ஆ) வாய்மொழி சட்டங்கள் எவ்வாறு யெகோவாவின் ஓய்வுநாள் சட்டத்தை பாரமாக்கின?
8 யெகோவாவின் சட்டத்தை இயேசு நேசித்து அதன்படி வாழ்ந்தார். ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் அந்த சட்டத்தை திரித்து, தவறாக பொருத்தினர். ஆகவே இயேசு அவர்களை நோக்கி, “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! . . . திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிட்டீர்கள்” என்றார். (மத்தேயு 23:23) கடவுளுடைய சட்டதிட்டங்களை கற்பித்த அந்தப் போதகர்கள் “எது நியாயம் என்பதை” நிச்சயம் தெளிவுபடுத்தவில்லை. மாறாக, தெய்வீக நீதியை அவர்கள் தெளிவற்றதாக்கினர். எப்படி? சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
9 சுற்றிலுமிருந்த புறதேசத்தாரிலிருந்து விலகியிருக்கும்படி யெகோவா தமது மக்களுக்கு அறிவுறுத்தினார். (1 ராஜாக்கள் 11:1, 2) என்றாலும் மதவெறிபிடித்த சில மதத்தலைவர்கள், யூதரல்லாத அனைவரையும் வெறுக்க வேண்டுமென மக்களை ஊக்குவித்தனர். “புறதேசத்தாரின் விடுதிகளில் கால்நடைகளை விடக்கூடாது, ஏனெனில் அவர்கள் மிருகப் புணர்ச்சிக்காரராக சந்தேகிக்கப்படுகின்றனர்” என்ற ஒரு சட்டமும் மிஷ்னாவில் இருந்தது. யூதரல்லாத அனைவரையுமே இப்படி ஒரேயடியாக வெறுத்தொதுக்கியது அநியாயமாக இருந்தது, திருச்சட்டத்தின் நியமத்திற்கு எதிராகவும் இருந்தது. (லேவியராகமம் 19:34) மற்ற மனித சட்டங்கள் பெண்களை தாழ்ந்தவர்களாக காட்டின. ஒரு வாய்மொழி சட்டத்தின்படி மனைவி தன் கணவனுக்கு பக்கத்தில் அல்ல, ஆனால் பின்னால் நடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு ஆண் பொது இடங்களில் ஒரு பெண்ணோடு, தன் சொந்த மனைவியோடுகூட உரையாடக் கூடாது என எச்சரிக்கப்பட்டான். அடிமைகளைப் போலவே பெண்களும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் தாங்கள் பெண்களாக பிறக்காததற்காக கடவுளிடம் நன்றிசொல்வதற்கு முறையான ஒரு ஜெபம்கூட இருந்தது.
10 அந்த மதத்தலைவர்கள் கடவுளுடைய சட்டத்தை ஏராளமான மனித சட்டதிட்டங்களால் மூடி மறைத்தனர். உதாரணத்திற்கு ஓய்வுநாள் சட்டம், ஓய்வுநாளில் வேலை செய்யக்கூடாது என்றுதான் சொன்னது; வணக்கத்திற்கும் ஆன்மீக புத்துணர்ச்சிக்கும் ஓய்வுக்கும் அந்நாளை ஒதுக்கியது. ஆனால் பரிசேயர்களோ அந்த சட்டத்தை பாரமாக்கினர். அந்த “வேலை” என்னவென்பதை தாங்களே தீர்மானித்தனர். அறுவடை செய்வது அல்லது வேட்டையாடுவது போன்ற 39 வித்தியாசமான செயல்கள் அதில் அடங்கியதாக நிர்ணயித்தனர். இவை எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. ஒருவன் ஓய்வுநாளில் ஒரு உண்ணியைக் கொன்றால் அவன் வேட்டையாடியதாக அர்த்தமா? நடந்துசெல்கையில் சாப்பிடுவதற்காக ஒரு கையளவு தானிய மணிகளை பறித்தால் அறுவடை செய்ததாக அர்த்தமா? சுகவீனமான ஒருவரை குணப்படுத்தினால், வேலை செய்ததாக அர்த்தமா? இந்தக் கேள்விகளுக்கு விலாவாரியான, கண்டிப்பான சட்டங்கள் கொடுக்கப்பட்டன.
11, 12. பரிசேயர்களின் வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களை இயேசு எவ்வாறு எதிர்த்தார்?
11 இப்படிப்பட்ட ஒரு சூழலில், நீதி என்னவென்பதை இயேசு எப்படி மக்களுக்கு புரிய வைத்தார்? அவர் தம் போதனைகளாலும் வாழ்க்கை முறையாலும் அந்த மதத் தலைவர்களை தைரியமாக எதிர்த்தார். முதலில் அவரது போதனைகள் சிலவற்றை கவனியுங்கள். “நீங்கள் வழிவழியாகப் பின்பற்றுகிற பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்” என்று சொல்லி அவர்களது கணக்குவழக்கில்லாத சட்டங்களை நேரடியாக சாடினார்.—மாற்கு 7:13.
12 ஓய்வுநாள் சட்டத்தைக் குறித்ததில் பரிசேயர்களின் கருத்து தவறானது என்பதை இயேசு வலிமையாக போதித்தார்; திருச்சட்டத்தின் குறிக்கோளையே அவர்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாக கற்பித்தார். மேசியா, “ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்றும் அதனால் ஓய்வுநாளின்போது மக்களை குணப்படுத்த சகல உரிமையும் பெற்றவர் என்றும் அவர் விளக்கினார். (மத்தேயு 12:8) இந்தக் குறிப்பை வலியுறுத்துவதற்கு அவர் ஓய்வுநாளின்போது வெளிப்படையாகவே அற்புத சுகமளித்தார். (லூக்கா 6:7-10) தமது ஆயிரவருட ஆட்சியில் பூமியெங்கும் அவர் செய்யப்போகும் சுகப்படுத்துதலுக்கு அவை வெறும் அடையாளமாகவே இருந்தன. அந்த ஆயிரவருட ஆட்சியே மிகப் பெரிய ஓய்வுநாளாக இருக்கும்; அப்போது உண்மையுள்ள மனிதவர்க்கத்தினர் அனைவரும் பாவம், மரணம் எனும் சுமைகளின்கீழ் நூற்றாண்டுகளாக பட்ட பாடுகளிலிருந்து ஒருவழியாக ஓய்ந்திருப்பர்.
13. கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின் விளைவாக என்ன சட்டம் ஏற்படுத்தப்பட்டது, திருச்சட்டத்திலிருந்து அது எவ்வாறு வேறுபட்டது?
13 இயேசு ஒரு புதிய சட்டமாகிய ‘கிறிஸ்துவின் சட்டம்’ வாயிலாகவும் நீதி என்னவென்பதை தெளிவாக்கினார்; அந்த சட்டம் அவர் பூமிக்குரிய ஊழியத்தை முடித்த பிறகு ஸ்தாபிக்கப்பட்டது. (கலாத்தியர் 6:2) இந்தப் புதிய சட்டம், மோசேயின் திருச்சட்டத்தைப் போல் கட்டளைகளின் ஒரு பெரிய பட்டியலை சார்ந்திருக்கவில்லை, ஆனால் நியமங்களையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. அதேசமயத்தில் சில நேரடியான கட்டளைகளும் அதில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் ஒன்றை இயேசு “புதிய கட்டளை” என்று குறிப்பிட்டார். இயேசு எவ்வாறு சீஷர்களை நேசித்தாரோ அதேவிதமாக அவர்களும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென அவர்கள் அனைவருக்கும் கற்பித்தார். (யோவான் 13:34, 35) ஆம், சுயநலமில்லாத அன்பே, ‘கிறிஸ்துவின் சட்டத்தின்படி’ வாழும் அனைவருக்கும் அடையாளம்.
நீதிக்கு உயிருள்ள உதாரணம்
14, 15. இயேசு, தமது அதிகாரத்தின் வரம்புகளை அறிந்திருந்ததை எவ்வாறு காட்டினார், இது ஏன் நம்பிக்கையளிக்கிறது?
14 இயேசு அன்பைப் பற்றி வெறுமனே கற்பிக்கவில்லை. அவர் ‘கிறிஸ்துவின் சட்டத்தின்படி’ வாழ்ந்தார். அது அவரது வாழ்க்கையில் தெள்ளத்தெளிவாக புலப்பட்டது. நீதி என்னவென்பதை இயேசுவின் முன்மாதிரி என்ன மூன்று வழிகளில் தெளிவாக்கியதென பார்க்கலாம்.
15 முதலாவதாக இயேசு எவ்வித அநீதியான செயலையும் தவிர்ப்பதில் மிகக் கவனமாக இருந்தார். அபூரண மனிதர்கள் கர்வமடைந்து தங்கள் அதிகார வரம்புகளை மீறும்போதே அநேக அநீதிகள் நடக்கின்றன என்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். இயேசு அப்படி செய்யவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவை ஒருவன் அணுகி, “போதகரே, சொத்தை எனக்குப் பிரித்துக் கொடுக்கும்படி என் சகோதரனுக்குச் சொல்லுங்கள்” என கேட்டான். இயேசு என்ன பதிலளித்தார்? “மனுஷனே, என்னை உங்கள் நடுவராகவோ உங்களுக்குப் பாகம் பிரித்துக் கொடுப்பவராகவோ நியமித்தது யார்?” என்றார். (லூக்கா 12:13, 14) இது குறிப்பிடத்தக்க பதில் அல்லவா? இயேசுவின் அறிவாற்றலும், பகுத்தறிவும், கடவுளிடமிருந்து பெற்ற அதிகாரமும்கூட பூமியிலிருந்த எவரையும்விட அவரை நிகரற்றவராக்கின; இருந்தாலும் இந்த விஷயத்தில் தலையிட அவர் மறுத்துவிட்டார், ஏனென்றால் இதைச் செய்வதற்கான குறிப்பிட்ட அதிகாரத்தை அவர் பெறவில்லை. இந்த விதத்தில் இயேசு எப்போதுமே பணிவோடு இருந்திருக்கிறார், மனிதனாக வருவதற்கு முன்பு வாழ்ந்த கோடானு கோடி ஆண்டுகளின்போதும் அவ்வாறே பணிவோடு இருந்தார். (யூதா 9) இயேசு நீதியென்னவென்பதை தீர்மானிக்க பணிவோடு யெகோவாவை சார்ந்திருப்பது எப்பேர்ப்பட்ட அருமையான, விரும்பத்தக்க குணம்!
16, 17. (அ) கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் இயேசு எவ்வாறு நீதியைக் காட்டினார்? (ஆ) இயேசு எவ்வாறு தமது நீதியுணர்வு இரக்கமுள்ளதென காட்டினார்?
16 இரண்டாவதாக, கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியை பிரசங்கித்த விதத்திலும் இயேசு நீதியைக் காட்டினார். அவர் பட்சபாதமே காட்டவில்லை. பணக்காரரோ ஏழையோ எல்லா விதமான மக்களுக்கும் உதவ மனதார முயற்சியெடுத்தார். மறுபட்சத்தில் பரிசேயர்களோ ஏழை எளியோரை ஆம்ஹாரெட்ஸ் அல்லது “மண்ணுக்குரிய மக்கள்” என்ற அவமதிக்கும் பதத்தால் புறக்கணித்தனர். இயேசு அந்த அநீதியை தைரியமாக எதிர்த்தார். அவர் மக்களுக்கு நற்செய்தியை கற்பித்தபோது—அல்லது அவர்களோடு உணவருந்தி, அவர்களுக்கு உணவளித்து, அவர்களை சுகப்படுத்தி, அல்லது உயிர்த்தெழுப்பியபோதுகூட—‘எல்லா விதமான மக்களும்’ உதவ விரும்பும் கடவுளின் நீதியை உயர்ந்தோங்கச் செய்தார். c—1 தீமோத்தேயு 2:4.
17 மூன்றாவதாக இயேசுவின் நீதியுணர்வு ஆழ்ந்த இரக்கமுள்ளதாக இருந்தது. பாவிகளுக்கு உதவ அவர் பெருமுயற்சி எடுத்தார். (மத்தேயு 9:11-13) தங்களை தற்காத்துக்கொள்ள வலிமையற்ற மக்களுக்கு அவர் உடனடியாக உதவியளித்தார். உதாரணத்திற்கு மதத் தலைவர்கள் செய்தது போல் புறதேசத்தார் அனைவரையும் நம்பாமல் வெறுப்பதை அவர் ஊக்குவிக்கவில்லை. அவர் முக்கியமாக யூத மக்களுக்கே ஊழியம் செய்ய வந்தார் என்றாலும் புறஜாதி மக்கள் சிலருக்கும் இரக்கத்தோடு கற்பித்து, உதவியளித்தார். “இஸ்ரவேலர்களில் ஒருவரிடம்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை” என்று ரோம படைத் தலைவர் ஒருவரைப் பற்றி சொல்லி அவருக்கு அற்புத சுகமளிக்க ஒப்புக்கொண்டார்.—மத்தேயு 8:5-13.
18, 19. (அ) என்ன விதங்களில் இயேசு பெண்களை கௌரவித்தார்? (ஆ) தைரியத்திற்கும் நீதிக்கும் உள்ள தொடர்பைக் காண இயேசுவின் முன்மாதிரி நமக்கு எவ்வாறு உதவுகிறது?
18 அதேவிதமாக பெண்களைப் பற்றிய அப்போதைய கருத்துக்களை இயேசு ஆதரிக்கவில்லை. மாறாக, நியாயம் எதுவோ அதை தைரியமாக செய்தார். சமாரியப் பெண்கள் புறதேசத்தாரைப் போலவே அசுத்தமானவர்கள் என நம்பப்பட்டது. இருந்தாலும் சீகார் ஊரின் கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணிடம் பிரசங்கிக்க இயேசு தயங்கவில்லை. சொல்லப்போனால், இந்தப் பெண்ணிடமே இயேசு முதன்முறையாக தம்மை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக வெளிப்படையாக அடையாளம் காட்டினார். (யோவான் 4:6, 25, 26) பெண்களுக்கு கடவுளுடைய திருச்சட்டத்தை கற்பிக்கக்கூடாது என பரிசேயர்கள் கூறினர், ஆனால் இயேசு அதிக நேரத்தையும் சக்தியையும் செலவழித்து பெண்களுக்குக் கற்பித்தார். (லூக்கா 10:38-42) பெண்கள் நம்பத்தக்க சாட்சியத்தை கொடுப்பார்களென எதிர்பார்க்க முடியாது என்பதாக பாரம்பரியம் கூறியது, ஆனால் இயேசுவோ உயிர்த்தெழுந்த பிறகு அநேக பெண்களுக்கு முதலில் காட்சியளித்து அந்த அரும் வாய்ப்பினால் அவர்களை கௌரவித்தார். இந்த முக்கியமான சம்பவத்தைக் குறித்து தனது ஆண் சீஷர்களுக்கு சொல்லும்படியும் அவர்களிடம் கூறினார்!—மத்தேயு 28:1-10.
19 ஆம், இயேசு நீதி என்னவென்பதை தேசங்களுக்கு தெளிவாக்கினார். அநேக முறை, தமக்கு பெரும் ஆபத்தாக இருந்தபோதும் அதைச் செய்தார். இயேசுவின் முன்மாதிரி, உண்மையான நீதியை ஆதரிக்க தைரியம் தேவை என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என அவர் பொருத்தமாகவே அழைக்கப்பட்டார். (வெளிப்படுத்துதல் 5:5) சிங்கம் என்பது தைரியமான நீதிக்கு அடையாளம் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். என்றாலும் வெகு சீக்கிரத்தில் இயேசு இன்னும் பெரியளவில் நீதியை ஸ்தாபிப்பார். முழுமையான கருத்தில் அவர் “உலகத்தில் நியாயத்தை” நிலைநாட்டுவார்.—ஏசாயா 42:4.
மேசியானிய ராஜா ‘உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுகிறார்’
20, 21. நம் காலத்தில் மேசியானிய ராஜா எவ்வாறு பூமி முழுவதிலும் கிறிஸ்தவ சபையிலும் நீதியை முன்னேற்றுவித்திருக்கிறார்?
20 இயேசு 1914-ல் மேசியானிய ராஜாவாக ஆன சமயம் முதற்கொண்டு பூமியில் நீதியை முன்னேற்றுவித்திருக்கிறார். எப்படி? மத்தேயு 24:14-ல் காணப்படும் தமது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். பூமியிலுள்ள இயேசுவின் சீஷர்கள் சகல தேசங்களிலுமுள்ள மக்களுக்கு யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தைக் கற்பித்திருக்கிறார்கள். இயேசுவைப் போல் அவர்கள் பட்சபாதமற்ற, நியாயமான முறையில் பிரசங்கித்திருக்கிறார்கள்; நீதியின் கடவுளாகிய யெகோவாவை அறியும் வாய்ப்பை இளையோர், முதியோர், ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் அளித்திருக்கிறார்கள்.
21 கிறிஸ்தவ சபைக்கு தலைவராக இயேசு அங்கேயும் நீதியை முன்னேற்றுவிக்கிறார். முன்னறிவிக்கப்பட்டபடி அவர் “மனிதர்களைப் பரிசுகளாக,” அதாவது சபையை முன்நின்று நடத்தும் உண்மையுள்ள கிறிஸ்தவ மூப்பர்களாக அளிக்கிறார். (எபேசியர் 4:8-12) கடவுளுடைய மதிப்புவாய்ந்த மந்தையை மேய்க்கையில், அப்படிப்பட்டவர்கள் நீதியை முன்னேற்றுவிப்பதில் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றுகின்றனர். பதவி, பேர் புகழ், பொருளாதார சூழ்நிலைகள் ஆகிய எந்த வித்தியாசமும் பாராமல் தம் ஆடுகளை நியாயமாக நடத்த வேண்டுமென இயேசு விரும்புவதை அவர்கள் எப்போதும் மனதில் வைக்கின்றனர்.
22. இன்றைய உலகில் தலைவிரித்தாடும் அநீதிகளைக் குறித்து யெகோவா எவ்வாறு உணருகிறார், இதைக் குறித்து என்ன செய்யும்படி தமது மகனை நியமித்திருக்கிறார்?
22 எனினும், விரைவில் இயேசு முன்னொருபோதும் இல்லாத அளவில் நீதியை பூமியில் நிலைநாட்டுவார். ஊழல் மிக்க இந்த உலகில் அநீதி தலைவிரித்தாடுகிறது. பட்டினியால் சாகும் ஒவ்வொரு குழந்தையும் மன்னிக்க முடியாத அநீதிக்கே பலியாகிறது; முக்கியமாக, போராயுதங்களை தயாரிப்பதற்கும் சுகபோகப் பிரியரின் சுயநல விருப்பங்களை திருப்திசெய்வதற்கும் வாரி இறைக்கப்படும் பணத்தையும் விரயமாக்கப்படும் நேரத்தையும் நினைத்துப் பார்க்கையில் அது பொறுக்க முடியாத அநீதியாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் அநாவசியமாக இறப்பது அநீதியின் ஒரு அம்சம் மட்டுமே; அதன் எல்லா அம்சங்களும் யெகோவாவின் நீதியான கோபத்தைக் கிளறுகின்றன. சகல விதமான அநீதிகளையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதற்கு இந்தத் துன்மார்க்க உலகத்திற்கு எதிராக நீதியான போர் புரிய அவர் தமது மகனை நியமித்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-15.
23. அர்மகெதோனுக்குப் பிறகு கிறிஸ்து எவ்வாறு நீதியை நித்தியத்திற்கும் முன்னேற்றுவிப்பார்?
23 என்றாலும் யெகோவாவின் நீதி துன்மார்க்கரின் அழிவை மட்டுமே தேவைப்படுத்துவதில்லை. அவர் தமது மகனை ‘சமாதானத்தின் அதிபதியாக’ ஆளும்படியும் நியமித்திருக்கிறார். அர்மகெதோன் யுத்தத்திற்குப் பின்பு இயேசுவின் ஆட்சி பூமி முழுவதிலும் சமாதானத்தை நிலைநாட்டும், அவர் ‘நீதியோடு’ ஆட்சி செய்வார். (ஏசாயா 9:6, 7) அப்போது, இந்தளவுக்கு துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கும் அநீதிகள் அனைத்தையும் ஒழிப்பதில் இயேசு இன்பங்காண்பார். யெகோவாவின் பரிபூரண நீதியை நித்தியத்திற்கும் உண்மையோடு உயர்ந்தோங்கச் செய்வார். ஆகவே யெகோவாவின் நீதியை நாம் இப்போதே பின்பற்ற முயல்வது அவசியம். அதை எப்படி செய்வதென பார்க்கலாம்.
a இயேசு நியாயமான கோபத்தைக் காட்டியதில் யெகோவாவைப் போன்று இருந்தார்; யெகோவா, எல்லா துன்மார்க்கத்திற்கும் எதிராக “கோபத்தில் கொதித்தெழுகிறவர்.” (நாகூம் 1:2) உதாரணத்திற்கு, தம் வீட்டை “கொள்ளைக்காரர்களின் குகையை” போல் ஆக்கியதாக கீழ்ப்படியாத தமது மக்களிடம் சொல்லிய பிறகு, ‘இந்த இடத்தின் மேல் என் கோபத் தீ பற்றியெரியும்’ என்றார்.—எரேமியா 7:11, 20.
b சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆலயத்தில் மிக உயர்ந்த விலைக்கு புறாக்கள் விற்கப்பட்டதை எதிர்த்து கிளர்ச்சி எழுந்ததாக மிஷ்னா குறிப்பிடுகிறது. உடனடியாக சுமார் 99 சதவீதத்திற்கு விலை குறைக்கப்பட்டது! இந்த லாபகரமான வியாபாரத்தால் மிகுந்த ஆதாயம் பெற்றவர்கள் யார்? ஆலயத்திலிருந்த கடைகள் தலைமை குருவான அன்னாவின் வீட்டிற்கு சொந்தமானவை என்றும் அவை அந்த குருத்துவ குடும்பத்தின் கஜானாவை நிரப்பியதாகவும் சில சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர்.—யோவான் 18:13.
c திருச்சட்டத்தை அறியாத சாதாரண மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” என பரிசேயர்கள் கருதினார்கள். (யோவான் 7:49) அப்படிப்பட்ட மக்களுக்கு கற்பிக்கக்கூடாது, அவர்களோடு சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது, சாப்பிடக்கூடாது, ஜெபம் செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவருக்கு மகளை மணம்செய்து கொடுப்பது, அவளை காட்டு மிருகங்களுக்கு பலியாக்குவதைவிட மோசமானதென சொன்னார்கள். அந்த சாதாரண மக்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லையென்றார்கள்.