Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

“யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது”

“யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது”

1, 2. சட்டத்தை ஏன் அநேகர் மதிப்பதில்லை, இருந்தாலும் கடவுளுடைய சட்டங்களைக் குறித்து நாம் எவ்வாறு உணருவோம்?

 “சட்டம் என்பது அதலபாதாளம், அது . . . எல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது.” இந்த வாக்கியம் 1712-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் வெளியானது. சிலசமயங்களில் வருடக்கணக்காக வழக்குகளை இழுத்தடித்து, நீதி கிடைக்க ஏங்குபவர்களை திவாலாக்கும் சட்ட அமைப்பை அப்புத்தகத்தின் ஆசிரியர் கண்டித்தார். அநேக நாடுகளில் சட்ட அமைப்புகளும் நீதி அமைப்புகளும் அவ்வளவு சிக்கலாக இருப்பதாலும், அநீதி, தப்பெண்ணம், முரண்பாடுகள் ஆகியவற்றால் நிறைந்திருப்பதாலும் கிட்டத்தட்ட எல்லா மக்களுக்குமே சட்டத்தின்மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

2 இதற்கு நேர்மாறாக, சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பின்வரும் வார்த்தைகளை கவனியுங்கள்: “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” (சங்கீதம் 119:97) சங்கீதக்காரன் ஏன் சட்டத்தை அந்தளவு நேசித்தார்? ஏனெனில் அவர் புகழ்ந்து பேசிய சட்டம் எந்த மனித அரசாங்கத்தின் சட்டமும் அல்ல, அது யெகோவா தேவனுடைய சட்டமாகும். யெகோவாவின் சட்டங்களை படித்துத் தெரிந்துகொள்ளும்போது, நீங்களும் சங்கீதக்காரனைப் போலவே அதிகமதிகமாக உணரலாம். மேலும், பிரபஞ்சத்திலேயே தலைசிறந்த நீதிபதியின் மனதை நுணுக்கமாக அறிந்துகொள்ளலாம்.

சட்டம் கொடுப்பவர்

3, 4. என்ன விதங்களில் யெகோவா சட்டம் கொடுப்பவராக இருந்திருக்கிறார்?

3 “சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான்” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:12) சொல்லப்போனால், சட்டம் கொடுக்கிற உரிமை யெகோவாவுக்கு மட்டுமே இருக்கிறது. வான் கோளங்களின் இயக்கங்களும்கூட அவரது ‘வான் சட்டங்களுக்குக்’ கட்டுப்பட்டுள்ளன. (யோபு 38:33, த நியூ ஜெரூசலம் பைபிள்) யெகோவாவுடைய கோடிக்கணக்கான பரிசுத்த தேவதூதர்களும் தெய்வீக சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர்; ஏனெனில் அவரவர் ஸ்தானங்களுக்கு ஏற்ப சரியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றனர், மேலும் யெகோவாவின் ஊழியர்களாக அவரது கட்டளைக்குக் கீழ்ப்பட்டு பணிவிடை செய்கின்றனர்.—சங்கீதம் 104:4; எபிரெயர் 1:7, 14.

4 யெகோவா மனிதவர்க்கத்திற்கும் சட்டங்களை அளித்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இருக்கிறது, இது அவருடைய நீதியுணர்வை பிரதிபலிக்கும் ஒன்று. உள்ளுக்குள் அமைந்திருக்கும் ஒருவித சட்டமாகிய இந்த மனசாட்சி சரி எது தவறு எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க நமக்கு உதவுகிறது. (ரோமர் 2:14) நம் முதல் பெற்றோர் பரிபூரண மனசாட்சியை ஓர் ஆசீர்வாதமாக பெற்றிருந்தார்கள், ஆகவே வெகு சில சட்டங்களே அவர்களுக்குத் தேவைப்பட்டன. (ஆதியாகமம் 2:15-17) அபூரண மனிதனுக்கோ, கடவுளுடைய சித்தத்தை செய்ய உதவியாக அநேக சட்டங்கள் தேவை. நோவா, ஆபிரகாம், யாக்கோபு போன்ற வம்சத் தலைவர்கள் யெகோவா தேவனிடமிருந்து சட்டங்களைப் பெற்றார்கள், அவற்றை தங்கள் குடும்பத்தாருக்கும் கற்பித்தார்கள். (ஆதியாகமம் 6:22; 9:3-6; 18:19; 26:4, 5) மோசேயின் மூலமாக இஸ்ரவேல் தேசத்திற்கு யெகோவா சட்டத் தொகுப்பை வழங்கியபோது, அவர் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சட்டம் கொடுப்பவராக ஆனார். இந்தச் சட்டத் தொகுப்பு, யெகோவாவின் நீதியுணர்வை ஆழமாக புரிந்துகொள்ள உதவுகிறது.

மோசேயின் திருச்சட்டம்—ஒரு சுருக்கம்

5. மோசேயின் திருச்சட்டம் பின்பற்றுவதற்கு கடினமான, சிக்கலான சட்டங்களின் தொகுப்பாக இருந்ததா, ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

5 மோசேயின் திருச்சட்டம், பின்பற்றுவதற்குக் கடினமான, சிக்கலான சட்டங்களின் தொகுப்பு என அநேகர் நினைப்பதாக தோன்றுகிறது. ஆனால் இது உண்மையே இல்லை. அந்த முழு சட்டத் தொகுப்பிலும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்கள் இருந்தன. அது எக்கச்சக்கமானதாக தோன்றலாம், ஆனால் இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: 20-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஐக்கிய மாகாண சட்ட புத்தகங்களில் 1,50,000-க்கும் அதிகமான பக்கங்கள் நிரப்பப்பட்டன. அதோடு, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக சுமார் 600 சட்டங்கள் சேர்க்கப்படுகின்றன! ஆகவே அளவை மாத்திரம் வைத்துப் பார்க்கும்போது மலைபோன்ற மனித சட்டதிட்டங்களுக்கு பக்கத்தில் மோசேயின் திருச்சட்டம் மடுவாகிவிடுகிறது. இருந்தாலும், இஸ்ரவேலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய கடவுளுடைய சட்டத்தின் பல அம்சங்களை, இன்றைய மனித சட்டங்கள் குறிப்பிடுவதுகூட இல்லை. இதை சுருக்கமாக சிந்திக்கலாம்.

6, 7. (அ) மோசேயின் திருச்சட்டத்தை மற்றெந்த சட்டத் தொகுப்பிலிருந்தும் வேறுபடுத்துவது எது, அந்த திருச்சட்டத்தின் தலையாய சட்டம் என்ன? (ஆ) யெகோவாவின் அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை இஸ்ரவேலர்கள் எவ்வாறு காட்ட வேண்டியிருந்தது?

6 திருச்சட்டம் யெகோவாவின் அரசதிகாரத்தை உயர்த்தியது. இவ்வாறு, மோசேயின் திருசசட்டத்தை வேறெந்த சட்டத் தொகுப்போடும் ஒப்பிட முடியாது. அதன் சட்டங்களில் தலையாயது இதுதான்: “இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள்: நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா. உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.” கடவுளுடைய மக்கள் அவரிடம் எவ்வாறு அன்பு காட்ட வேண்டியிருந்தது? அவரது அரசதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டு அவரை சேவிக்க வேண்டியிருந்தது.—உபாகமம் 6:4, 5; 11:13.

7 ஒவ்வொரு இஸ்ரவேலரும், அதிகாரத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் யெகோவாவின் அரசதிகாரத்தை ஏற்றுக்கொண்டதை காட்டினர். பெற்றோர், தலைவர்கள், நியாயாதிபதிகள், குருமார்கள், இறுதியில் ராஜா என அனைவரும் தெய்வீக அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்தனர். அதிகாரத்திலிருந்தவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட எந்தக் கலகத்தையும் தமக்கு எதிரான கலகமாக யெகோவா கருதினார். மறுபட்சத்தில், அதிகாரத்திலிருந்தவர்கள் அவரது மக்களை அநீதியாக அல்லது அகங்காரமாக நடத்தியபோது அவரது கோபத்திற்கு ஆளாயினர். (யாத்திராகமம் 20:12; 22:28; உபாகமம் 1:16, 17; 17:8-20; 19:16, 17) இவ்வாறு இரு சாராருமே கடவுளுடைய அரசதிகாரத்தை ஆதரிக்கும் பொறுப்பை பெற்றிருந்தார்கள்.

8. திருச்சட்டம் எவ்வாறு யெகோவாவின் பரிசுத்த தராதரத்தை ஆதரித்தது?

8 திருச்சட்டம் யெகோவாவின் பரிசுத்த தராதரத்தை ஆதரித்தது. “பரிசுத்தம்,” “பரிசுத்தத்தன்மை” என பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தைகள் மோசேயின் திருச்சட்டத்தில் 280 தடவைக்கும் மேலாக இடம்பெற்றிருக்கின்றன. சுத்தமானதையும் அசுத்தமானதையும் வேறுபடுத்திப் பார்க்க கடவுளுடைய மக்களுக்கு திருச்சட்டம் உதவியது; ஆசார முறைப்படி இஸ்ரவேலனை அசுத்தமாக்கும் சுமார் 70 காரியங்களை அது குறிப்பிட்டது. இந்தச் சட்டங்கள் சரீர சுகாதாரத்தையும், உணவையும், கழிவை அப்புறப்படுத்துவதையும்கூட குறிப்பிட்டன. இப்படிப்பட்ட சட்டங்கள் உடல்நலத்திற்கு மிகுந்த பயனளித்தன. a ஆனால் அவற்றிற்கு அதைவிட உன்னத நோக்கம் இருந்தது; யெகோவாவின் தயவில் நிலைத்திருக்க மக்களுக்கு உதவுவதும், சுற்றிலுமிருந்த ஒழுக்கங்கெட்ட தேசங்களின் பாவச் செயல்களிலிருந்து அவர்களை விலக்கிக் காப்பதும் அதன் நோக்கமாக இருந்தது. ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.

9, 10. பாலுறவையும் மகப்பேறையும் குறித்து திருச்சட்டத்தில் என்ன சட்டங்கள் அடங்கியிருந்தன, அப்படிப்பட்ட சட்டங்கள் என்னென்ன நன்மைகளை அளித்தன?

9 பாலுறவு கொள்வதும் குழந்தை பெறுவதும் திருமணமானவர்களைக்கூட சிறிது காலம் தீட்டுப்படுத்தும் என்று திருச்சட்டம் சொன்னது. (லேவியராகமம் 12:2-4; 15:16-18) அந்த சட்டங்கள், கடவுள் தந்த அப்படிப்பட்ட சுத்தமான பரிசுகளின் மதிப்பைக் குறைக்கவில்லை. (ஆதியாகமம் 1:28; 2:18-25) மாறாக, அவை யெகோவாவின் பரிசுத்தத்தை ஆதரித்து, அவரது வணக்கத்தாரை அசுத்தத்திலிருந்து பாதுகாத்தன. இஸ்ரவேலரின் அண்டை தேசத்தினர் பாலுறவையும் கருவளத்தையும் வணக்கத்தோடு ஒன்றரக்கலந்தது குறிப்பிடத்தக்கது. கானானியரின் மதம், ஆண் மற்றும் பெண் விபச்சாரத்தை உட்படுத்தியது. இதனால் மிகக் கேவலமான ஒழுக்கக்கேடு எங்கும் பரவியது. மாறாக, திருச்சட்டமோ யெகோவாவின் வணக்கத்தையும் பாலுறவு விஷயங்களையும் முற்றிலும் பிரித்து வைத்தது. b அதோடு வேறு பல பயன்களையும் அளித்தது.

10 திருச்சட்டத்தில் இருந்த சட்டங்கள் ஒரு முக்கியமான உண்மையை கற்பித்தன. c ஆதாமுடைய பாவக் கறை வழிவழியாக கடத்தப்படுவது எப்படி? பாலுறவின் மூலமாகவும் மகப்பேறின் மூலமாகவும் தானே? (ரோமர் 5:12) ஆம், எப்போதும் இருந்துவந்த பாவத்தின் நிஜத்தைக் குறித்து கடவுளுடைய திருச்சட்டம் அவரது மக்களுக்கு நினைப்பூட்டியது. சொல்லப்போனால் நாம் அனைவரும் பாவத்தோடுதான் பிறந்திருக்கிறோம். (சங்கீதம் 51:5) நம் பரிசுத்தக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கு நமக்கு மன்னிப்பும் மீட்பும் அவசியம்.

11, 12. (அ) நீதி சம்பந்தமான என்ன முக்கிய நியமத்தை திருச்சட்டம் பரிந்துரைத்தது? (ஆ) நீதி புரட்டப்படாதிருக்க திருச்சட்டத்தில் என்ன சட்டங்கள் இருந்தன?

11 திருச்சட்டம் யெகோவாவின் பரிபூரண நீதியை ஆதரித்தது. நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமநிலை என்ற நியமத்தை மோசேயின் திருச்சட்டம் பரிந்துரைத்தது. ஆகவே அது இவ்வாறு குறிப்பிட்டது: “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் எடுக்க வேண்டும்.” (உபாகமம் 19:21) இதன் பிரகாரம், குற்றச்செயலுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தது. தெய்வீக நீதியின் இந்த அம்சம் திருச்சட்டத்தில் இழையோடியது. கிறிஸ்து இயேசு கொடுத்த மீட்பு பலியை புரிந்துகொள்வதற்கு இது இன்றுவரை அவசியமாக இருந்திருக்கிறது; இதைக் குறித்து 14-ஆம் அதிகாரம் விளக்கும்.—1 தீமோத்தேயு 2:5, 6.

12 நீதி புரட்டப்படாதிருப்பதற்கும் திருச்சட்டத்தில் சட்டங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, ஒரு குற்றச்சாட்டை உண்மையென ஏற்றுக்கொள்வதற்கு குறைந்தது இரண்டு சாட்சிகள் தேவைப்பட்டனர். கள்ள சாட்சிக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. (உபாகமம் 19:15, 18, 19) ஊழலும் லஞ்சமும்கூட முற்றிலும் தடை செய்யப்பட்டன. (யாத்திராகமம் 23:8; உபாகமம் 27:25) வியாபார நடவடிக்கைகளில்கூட, கடவுளுடைய மக்கள் அவரது நீதியின் உயர்ந்த தராதரத்தை ஆதரிக்க வேண்டியிருந்தது. (லேவியராகமம் 19:35, 36; உபாகமம் 23:19, 20) அந்த உயரிய, பட்சபாதமற்ற சட்டத் தொகுப்பு இஸ்ரவேலருக்கு பெரும் ஆசீர்வாதமாக இருந்தது!

இரக்கத்தோடும் பாரபட்சமின்றியும் தீர்ப்பளிப்பதை வலியுறுத்தும் சட்டங்கள்

13, 14. திருடர்களையும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் நியாயமாகவும் நீதியாகவும் நடத்துவதை திருச்சட்டம் எவ்வாறு ஊக்குவித்தது?

13 மோசேயின் திருச்சட்டம் இரக்கமற்ற, கடுமையான சட்டங்கள் அடங்கியதா? இல்லவே இல்லை! “யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது” என எழுதும்படி தாவீது ராஜா ஏவப்பட்டார். (சங்கீதம் 19:7) திருச்சட்டம் இரக்கத்தையும் நியாயத்தையும் முன்னேற்றுவித்ததை அவர் நன்கு அறிந்திருந்தார். அது எவ்வாறு அவற்றை முன்னேற்றுவித்தது?

14 இன்று சில நாடுகளிலுள்ள சட்டங்கள், பாதிக்கப்பட்டோருக்கு கரிசனை காட்டுவதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு அதிக தயவும் தாட்சண்யமும் காட்டுவதாக தெரிகிறது. உதாரணத்திற்கு திருடர்கள் சிறைச்சாலையில் காலம் கழிக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ பறிபோன பொருளின் இழப்பினால் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம்; போதாக்குறைக்கு, குற்றவாளிகளுக்கு உணவும் இடமும் அளிக்க பயன்படுத்தப்படும் வரிகளை பாதிக்கப்பட்டவர் செலுத்த வேண்டியிருக்கிறது. பூர்வ இஸ்ரவேலில் இன்று இருப்பதைப் போன்ற எந்தச் சிறைச்சாலைகளும் இல்லை. தண்டனைகளின் கடுமையைக் குறித்ததில் கண்டிப்பான வரம்புகள் இருந்தன. (உபாகமம் 25:1-3) திருடன் தான் திருடியவற்றிற்காக பாதிக்கப்பட்டவருக்கு ஈடு செலுத்த வேண்டியிருந்தது. அதோடு, கூடுதலான தொகையையும் கொடுக்க வேண்டியிருந்தது. எவ்வளவு? அது சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசப்பட்டது. பாவியின் மனந்திரும்புதல் போன்ற அநேக காரியங்களை கருத்தில் எடுத்துக்கொள்ளும்படி நீதிபதிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆகவே லேவியராகமம் 6:1-7 வசனங்களின்படி ஒரு திருடன் ஈடு செய்ய வேண்டியது, யாத்திராகமம் 22:7-ல் சொல்லப்பட்டிருப்பதைவிட மிகக் குறைவாக இருப்பது ஏன் என புரிந்துகொள்ள முடிகிறது.

15. தவறிப்போய் கொலை செய்துவிடும் ஒருவனுக்கு திருச்சட்டம் எவ்வாறு இரக்கத்தையும் நீதியையும் காட்டியது?

15 எல்லா தவறுகளும் வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை என்பதை திருச்சட்டம் இரக்கத்தோடு ஒப்புக்கொண்டது. உதாரணத்திற்கு, ஒரு மனிதன் தவறிப்போய் யாரையேனும் கொன்றுவிடும் சந்தர்ப்பத்தில் அவன் சரியான நடவடிக்கை எடுத்தால்—அதாவது, இஸ்ரவேல் தேசம் எங்குமிருந்த அடைக்கல நகரங்களில் ஒன்றிற்கு தப்பியோடினால்—உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டியதில்லை என திருச்சட்டம் குறிப்பிட்டது. தகுதிவாய்ந்த நியாயாதிபதிகள் அவனது வழக்கை விசாரித்த பிறகு, தலைமைக் குரு சாகும்வரை அவன் அந்த அடைக்கல நகரத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு அவன் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவன் தெய்வீக இரக்கத்திலிருந்து நன்மை பெற்றான். அதேசமயத்தில் இந்தச் சட்டம் மனித உயிரின் பெரும் மதிப்பை வலியுறுத்தியது.—எண்ணாகமம் 15:30, 31; 35:12-25.

16. திருச்சட்டம் எவ்வாறு தனிப்பட்ட உரிமைகள் சிலவற்றை பாதுகாத்தது?

16 திருச்சட்டம் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாத்தது. கடன்பட்டவர்களை அது பாதுகாத்த விதங்களை சிந்தித்துப் பாருங்கள். கடனாளியின் வீட்டிற்குள் புகுந்து கடனுக்கு அடமானமாக அவன் உடைமையை பறிக்கக்கூடாதென திருச்சட்டம் குறிப்பிட்டது. மாறாக, கடன்காரன் வீட்டிற்கு வெளியிலேயே நின்றுகொண்டு, கடனாளியே அடமானப் பொருளை எடுத்துவர அனுமதிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கடனாளியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது தடுக்கப்பட்டது. கடன்காரன் கடனாளியின் உடையை அடமானமாக எடுத்து வந்திருந்தால் அன்றைய இரவுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது; ஏனெனில் கடனாளி இரவில் போர்த்தி தூங்குவதற்கு அது தேவையாக இருக்கலாம்.—உபாகமம் 24:10-14.

17, 18. போர் தொடுப்பது சம்பந்தமாக இஸ்ரவேலர்கள் எவ்வாறு மற்ற தேசத்தாரிலிருந்து வித்தியாசமாக இருந்தனர், ஏன்?

17 திருச்சட்டம் போர் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் சட்டங்களை வழங்கியது. கடவுளுடைய மக்கள் போர் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் வெறுமனே அதிகார மோகத்தினாலோ வெற்றிக்கான வெறியினாலோ அல்ல. மாறாக, “யெகோவாவின் போர்களில்” அவரது பிரதிநிதிகளாக செயல்பட வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 21:14) அநேக சந்தர்ப்பங்களில், சரணடைவதற்கான நிபந்தனைகளை முதலாவதாக எதிராளிகளுக்கு இஸ்ரவேலர்கள் அளிக்க வேண்டியிருந்தது. ஒரு நகரம் நிபந்தனைகளை ஏற்க மறுத்த பிறகே அதை முற்றுகையிட வேண்டியிருந்தது, அதுவும் கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக. சரித்திரம் முழுவதும் இருந்து வந்திருக்கும் அநேக படைவீரர்களைப் போல் இஸ்ரவேலர்களின் படைவீரர்கள், கண்மூடித்தனமாக கொலை செய்யவோ பெண்களை கற்பழிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சுற்றுச்சூழலையும் மதித்து, எதிரியின் கனிகொடுக்கும் மரங்களை வெட்டாதிருக்க வேண்டியிருந்தது. d மற்ற தேசத்து படைவீரர்களுக்கோ இப்படிப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை.—உபாகமம் 20:10-15, 19, 20; 21:10-13.

18 சில நாடுகளில் சிறு பிள்ளைகள் போர்வீரர்களாக பயிற்றுவிக்கப்படுவதை கேள்விப்படுவது உங்களுக்கு வெறுப்பளிக்கிறதா? பூர்வ இஸ்ரவேலில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரும் படையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. (எண்ணாகமம் 1:2, 3) மிகவும் பயந்து நடுங்கிய ஆண்களுக்கும்கூட அதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. புதிதாக திருமணமான ஆணுக்கு ஒரு வருடம் முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டது; ஆபத்தான அந்தப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு அவன் தன் வாரிசை பார்த்துவிடுவதற்காகவே அந்த ஏற்பாடு. இவ்விதத்தில், அந்த இளம் கணவன் “தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த” முடியும் என திருச்சட்டம் விளக்கியது.—உபாகமம் 20:5, 6, 8; 24:5.

19. பெண்கள், பிள்ளைகள், குடும்பங்கள், விதவைகள், அநாதைகள் ஆகியோருக்கு பாதுகாப்பளிக்க திருச்சட்டத்தில் என்ன ஏற்பாடுகள் இருந்தன?

19 திருச்சட்டம் பெண்களையும் பிள்ளைகளையும் குடும்பங்களையும்கூட பாதுகாத்து பராமரித்தது. பிள்ளைகளிடம் பெற்றோர் எப்போதும் கவனம் செலுத்தி, ஆவிக்குரிய காரியங்களை போதிக்க வேண்டுமென கட்டளையிட்டது. (உபாகமம் 6:6, 7) எல்லா விதமான முறைதகாப் புணர்ச்சியையும் அது தடை செய்தது, மீறுபவர்களுக்கு மரண தண்டனை அளித்தது. (லேவியராகமம், அதிகாரம் 18) அதேவிதமாக, மணத்துணைக்கு துரோகம் செய்வதையும் தடை செய்தது. ஏனெனில், அது குடும்பங்களை சின்னாபின்னமாக்கி அவர்களது பாதுகாப்புணர்வையும் கண்ணியத்தையும் பறித்துவிடும். திருச்சட்டம் விதவைகளையும் அநாதைகளையும் பராமரித்தது; அவர்களை தவறாக நடத்துவதை மிகக் கடுமையான வார்த்தைகளில் தடை செய்தது.—யாத்திராகமம் 20:14; 22:22-24.

20, 21. (அ) மோசேயின் திருச்சட்டம் ஏன் இஸ்ரவேலர்களுக்கு இடையே பலதார மணத்தை அனுமதித்தது? (ஆ) விவாகரத்து சம்பந்தமாக, திருச்சட்டமும் பிற்பாடு இயேசு நிலைநாட்டிய தராதரமும் ஏன் வேறுபட்டன?

20 ஆனால், ‘திருச்சட்டம் ஏன் பலதார மணத்தை அனுமதித்தது?’ என சிலர் யோசிக்கலாம். (உபாகமம் 21:15-17) அக்கால சூழலின் கண்ணோட்டத்திலிருந்து நாம் அப்படிப்பட்ட சட்டங்களை பார்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையையும் கலாச்சாரங்களையும் மனதில் வைத்து மோசேயின் திருச்சட்டத்தை எடைபோட முயலுபவர்கள் கண்டிப்பாக அதை தவறாக புரிந்துகொள்வர். (நீதிமொழிகள் 18:13) முதன்முதலில் ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஏற்படுத்திய தராதரம், ஒரே கணவனுக்கும் ஒரே மனைவிக்கும் இடையே திருமண பந்தத்தை நிரந்தரமாக்கியது. (ஆதியாகமம் 2:18, 20-24) ஆனாலும் இஸ்ரவேலருக்கு யெகோவா திருச்சட்டத்தை அளித்த சமயத்திற்குள், பலதார மணம் போன்ற பழக்கங்கள் நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. சிலை வழிபாட்டிலிருந்து விலகியிருப்பது போன்ற மிக அடிப்படையான கட்டளைகளுக்குக்கூட தமது ‘பிடிவாதம் பிடித்த’ ஜனங்கள் பெரும்பாலும் கீழ்ப்படியாமல் போவார்கள் என்பதை யெகோவா நன்கு அறிந்திருந்தார். (யாத்திராகமம் 32:9) ஆகவே அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட அவர்களது எல்லா பழக்கங்களையும் சீர்திருத்தாதிருக்க ஞானமாக தீர்மானித்தார். பலதார மணத்தை யெகோவா ஏற்படுத்தவில்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள். என்றாலும் தம் மக்களிடையே பலதார மணத்தை நெறிப்படுத்தவும் அது துர்ப்பிரயோகம் செய்யப்படாதபடி பார்த்துக்கொள்ளவும் திருச்சட்டத்தைப் பயன்படுத்தினார்.

21 அதேவிதமாக, பலதரப்பட்ட பெரும் பாவங்களின் காரணமாக மனைவியை கணவன் விவாகரத்து செய்ய திருச்சட்டம் அனுமதித்தது. (உபாகமம் 24:1-4) யூத மக்களுடைய “இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான்” அவர்களுக்கு கடவுள் இந்த சலுகைகளை வழங்கினார் என இயேசு குறிப்பிட்டார். ஆனால் அப்படிப்பட்ட சலுகைகள் தற்காலிகமானவை. இயேசு தம் சீஷர்களுக்கு, திருமணத்தைக் குறித்த யெகோவாவின் ஆரம்ப தராதரத்தையே மீண்டும் அளித்தார்.—மத்தேயு 19:8.

திருச்சட்டம் அன்பை முன்னேற்றுவித்தது

22. என்ன விதங்களில் திருச்சட்டம் அன்பை ஊக்குவித்தது, யாரிடம் அன்புகாட்டும்படி உந்துவித்தது?

22 அன்பை ஊக்குவிக்கும் ஒரு நவீனகால சட்ட அமைப்பை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மோசேயின் திருச்சட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பை முன்னேற்றுவித்தது. உபாகமம் புத்தகத்தில் மாத்திரமே “அன்பு,” “நேசம்” போன்ற வார்த்தைகள் பல வடிவங்களில் 20-க்கும் அதிகமான தடவை இடம்பெற்றிருக்கிறதே! “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்பது திருச்சட்டத்தின் இரண்டாவது முக்கிய கட்டளையாக இருந்தது. (லேவியராகமம் 19:18; மத்தேயு 22:37-40) கடவுளுடைய மக்கள் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தங்கள் மத்தியில் இருந்த வேறு தேசத்து ஜனங்களிடமும் அப்படிப்பட்ட அன்பை காட்ட வேண்டியிருந்தது; ஒரு சமயத்தில் தாங்களும் வேறு தேசத்து ஜனங்களாக இருந்ததை மனதில் வைத்து அவர்களை நடத்த வேண்டியிருந்தது. ஏழை எளியோரின் பரிதாபமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல், அவர்களிடம் அன்பு காட்டி பொருளாதார உதவி அளிக்க வேண்டியிருந்தது. பொதி சுமக்கும் விலங்குகளையும் தயவோடும் கரிசனையோடும் நடத்துமாறு அவர்களுக்கு சொல்லப்பட்டது.—யாத்திராகமம் 23:6; லேவியராகமம் 19:14, 33, 34; உபாகமம் 22:4, 10; 24:17, 18.

23. சங்கீதம் 119-ஐ எழுதியவர் என்ன செய்யும்படி தூண்டப்பட்டார், நாம் என்ன தீர்மானம் எடுக்கலாம்?

23 இப்படிப்பட்ட ஒரு சட்டத் தொகுப்பை வேறெந்த தேசம் ஆசீர்வாதமாக பெற்றிருக்கிறது? “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” என சங்கீதக்காரன் எழுதியதில் ஆச்சரியமில்லை. என்றாலும் அவரது நேசம் ஓர் உணர்ச்சியாக மட்டுமே இருக்கவில்லை. அது அவரை செயல்படும்படி தூண்டியது, ஏனெனில் அந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து அதன்படி வாழ அவர் பிரயாசப்பட்டார். மேலும், “நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்” என்றும் எழுதினார். (சங்கீதம் 119:11, 97) ஆம், யெகோவாவின் சட்டங்களை படிப்பதற்கு அவர் தவறாமல் நேரம் செலவழித்தார். படிக்க படிக்க அவற்றை அதிகமதிகமாக அவர் நேசித்தார் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் அச்சட்டங்களை வழங்கிய யெகோவா தேவன்மீதும் அவரது அன்பு பெருகியது. நீங்களும் தெய்வீக சட்டங்களைக் குறித்து தொடர்ந்து படிக்கையில், மிகச் சிறந்த சட்டங்களைக் கொடுப்பவரும் நீதியின் கடவுளுமாகிய யெகோவாவிடம் அதிகமதிகமாக நெருங்கி வருவீர்களாக.

a உதாரணத்திற்கு, மனித கழிவுகளை புதைப்பது, வியாதியுற்றவர்களை தனியே அடைத்து வைப்பது, சவத்தை தொட்ட எவரும் குளிப்பது போன்ற சட்டங்களின் மதிப்பை மற்ற தேசங்கள் உணர்ந்து பின்பற்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருச்சட்டம் அவற்றை குறிப்பிட்டது.—லேவியராகமம் 13:4-8; எண்ணாகமம் 19:11-13, 17-19; உபாகமம் 23:13, 14.

b கானானியரின் ஆலயங்களில் பாலுறவு நடவடிக்கைகளுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன; ஆனால் மோசேயின் திருச்சட்டத்தின்படி அசுத்தமானவர்கள் ஆலயத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு, பாலுறவில் ஈடுபட்டவர்கள் சிறிது காலத்திற்குத் தீட்டுப்பட்டிருந்தனர் என்பதால் சட்டப்படி எவராலும் பாலுறவை யெகோவாவின் ஆலய வணக்கத்தின் ஒரு பாகமாக்க முடியவில்லை.

c திருச்சட்டத்தின் முக்கிய நோக்கம் கற்பித்தலாகும். சொல்லப்போனால் “சட்டம்” என்பதற்கான எபிரெய வார்த்தையாகிய டோரா, “போதித்தல்” என அர்த்தப்படுத்துவதாக என்ஸைக்ளோப்பீடியா ஜூடெய்க்கா குறிப்பிடுகிறது.

d “மனுஷனை அழிப்பது போல மரத்தை அழிப்பது சரியா?” என திருச்சட்டம் நேரடியாக கேட்டது. (உபாகமம் 20:19) முதல் நூற்றாண்டு யூத அறிஞராகிய ஃபைலோ இந்தச் சட்டத்தை குறிப்பிட்டு, “மனிதன் மீது எழும் கோபம் எந்தத் தவறும் செய்யாத, பழிபாவமறியாத பொருட்கள்மீது காட்டப்படுவது அநியாயம்” என கடவுள் நினைப்பதாக விளக்கினார்.