அதிகாரம் 8
புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘எல்லாவற்றையும் புதிதாக்குகிறார்’
1, 2. இன்று என்ன இழப்புகள் மனித குடும்பத்தை அல்லல்படுத்துகின்றன, இவை எவ்வாறு நம்மை பாதிக்கின்றன?
ஒரு குழந்தை ஆசையாக வைத்திருந்த பொம்மையை தொலைத்துவிட்டு அல்லது உடைத்துவிட்டு ஓவென்று அழ ஆரம்பிக்கிறது. அதன் அலறல் சத்தம் நெஞ்சைப் பிளக்கிறது! ஆனால் இழந்துபோனதை பெற்றோர் தேடிக் கொடுக்கும்போது அல்லது சரிசெய்து கொடுக்கும்போது அந்தக் குழந்தையின் முகம் எப்படி மலருகிறது என்பதை பார்த்திருக்கிறீர்களா? பொம்மையை தேடிக் கண்டுபிடிப்பது அல்லது சரிப்படுத்துவது பெற்றோருக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் குழந்தைக்கு ஒரே ஆச்சரியம், ஒரே குஷி. இனி கிடைக்கவே கிடைக்காது என நினைத்த பொருள் மீண்டும் கிடைத்துவிட்டதே!
2 ஈடிணையற்ற தகப்பனாகிய யெகோவா, தம் பூமிக்குரிய பிள்ளைகள் ஒரேயடியாக இழந்துவிட்டதாய் நினைப்பதை மீண்டும் அளிக்க வல்லமை பெற்றிருக்கிறார். சாதாரண பொம்மைகளைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை. “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” கடைசி நாட்களில் இன்னும் பெரிய காரியங்களை நாம் இழக்க வேண்டியதாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) மக்கள் அருமையானதாக கருதும் அநேக காரியங்கள்—வீடு, உடைமை, வேலை, ஆரோக்கியம்கூட—எப்போது வேண்டுமானாலும் பறிபோகும் ஆபத்தில் இருக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் கெடுக்கப்படுவதையும் இதன் காரணமாக அநேக உயிரினங்கள் அழிவதால் ஏற்படும் இழப்பையும் நினைத்துப் பார்க்கையில் நாம் கலக்கமடையலாம். என்றாலும் இவை எவற்றையும்விட அதிக வேதனையளிப்பது, நாம் நேசிக்கும் ஒருவரின் மரணமாகும். இதனால் ஏற்படும் இழப்பும் தவிப்பும் நம்மை பாடாய் படுத்தலாம்.—2 சாமுவேல் 18:33.
3. என்ன ஆறுதலான எதிர்பார்ப்பு அப்போஸ்தலர் 3:21-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது, யெகோவா எதன் மூலமாக அதை நிறைவேற்றுவார்?
3 ஆகவே யெகோவாவின் புதுப்பிக்கும் வல்லமையைப் பற்றி கற்றுக்கொள்வது எவ்வளவு ஆறுதல் தரும்! நாம் பார்க்கப்போகிறபடி, கடவுள் தமது பூமிக்குரிய பிள்ளைகளுக்கு வியக்கத்தக்க விதத்தில் பலவற்றை புதுப்பித்துத் தருவார். சொல்லப்போனால், ‘எல்லாவற்றையும் புதுப்பிக்க’ யெகோவா நோக்கமுள்ளவராக இருக்கிறாரென பைபிள் காட்டுகிறது. (அப்போஸ்தலர் 3:21) இதை நிறைவேற்ற, யெகோவா தமது குமாரன் இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் மேசியானிய ராஜ்யத்தை பயன்படுத்துவார். இந்த ராஜ்யம் 1914-ல் பரலோகத்தில் ஆட்சி செய்ய துவங்கியதாக அத்தாட்சி காட்டுகிறது. a (மத்தேயு 24:3-14) எது புதுப்பிக்கப்படும்? யெகோவாவின் மகத்தான புதுப்பிக்கும் செயல்கள் சிலவற்றை நாம் கவனிக்கலாம். அவற்றில் ஒன்று, நம்மால் ஏற்கெனவே பார்க்கவும் அனுபவிக்கவும் முடிந்தது. மற்றவை எதிர்காலத்தில் பெரிய அளவில் நடக்கும்.
உண்மை வணக்கம் புதுப்பிக்கப்படுதல்
4, 5. கடவுளுடைய மக்களுக்கு கி.மு. 607-ல் என்ன நடந்தது, யெகோவா அவர்களுக்கு என்ன நம்பிக்கை அளித்தார்?
4 யெகோவா புதுப்பித்திருக்கும் ஒன்று உண்மை வணக்கமாகும். இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள, யூதா ராஜ்யத்தின் சரித்திரத்தை சுருக்கமாக ஆராயலாம். அவ்வாறு செய்வது, புதுப்பிக்கும் வல்லமையை யெகோவா எவ்வாறு உபயோகித்து வந்திருக்கிறார் என்ற மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும்.—ரோமர் 15:4.
5 உண்மையுள்ள யூதர்கள் கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது எவ்வாறு உணர்ந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்களது நேசத்திற்குரிய நகரம் அழிக்கப்பட்டிருந்தது, அதன் மதில்கள் தகர்க்கப்பட்டிருந்தன. அதைவிட, பூமி முழுவதிலும் உண்மை வணக்கத்திற்கு ஒரே மையமாக திகழ்ந்த, சாலொமோன் கட்டிய மகிமை பொருந்திய ஆலயம் பாழாய் கிடந்தது. (சங்கீதம் 79:1) தப்பிப்பிழைத்தவர்கள் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர், அவர்களது தாயகம் காட்டு விலங்குகள் சஞ்சரிக்கும் பாழ் வெளியானது. (எரேமியா 9:11) மனித கண்ணோட்டத்தில், அனைத்தும் இழக்கப்பட்டதுபோல் தோன்றியது. (சங்கீதம் 137:1) ஆனால் இந்த அழிவை வெகு காலத்திற்கு முன்பு முன்னறிவித்திருந்த யெகோவா, புதுப்பிக்கப்படும் காலம் வரவிருந்ததாக நம்பிக்கை அளித்தார்.
6-8. (அ) எபிரெய தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் மையப்பொருள் என்ன, அந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு முதலில் நிறைவேறின? (ஆ) நவீன காலங்களில், புதுப்பித்தல் சம்பந்தமான தீர்க்கதரிசனங்களின் என்ன நிறைவேற்றத்தை கடவுளுடைய மக்கள் கண்டிருக்கின்றனர்?
6 சொல்லப்போனால், எபிரெய தீர்க்கதரிசிகளின் பதிவுகளில் புதுப்பித்தலே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட மையப்பொருளாக இருந்தது. b தேசம் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் குடியேற்றப்பட்டு, வளம்பெற்று, காட்டு மிருகங்களிலிருந்தும் எதிரிகளின் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கப்படும் என்பதாக யெகோவா அந்தத் தீர்க்கதரிசிகள் மூலம் வாக்குறுதி அளித்தார். அவ்வாறு புதுப்பிக்கப்படும் தேசம் பரதீஸ் போன்று இருக்கும் என்பதாக அவர் விவரித்தார்! (ஏசாயா 65:25; எசேக்கியேல் 34:25; 36:35) எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மை வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு ஆலயம் மறுபடியும் கட்டப்படும் என்றார். (மீகா 4:1-5) இந்தத் தீர்க்கதரிசனங்கள் நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு நம்பிக்கை அளித்து, பாபிலோனில் கைதிகளாக 70 வருடங்களை கழிக்க உதவின.
7 இறுதியில், புதுப்பிக்கப்படும் காலம் வந்தது. பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்ட யூதர்கள் எருசலேமுக்கு திரும்பி வந்து யெகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டினார்கள். (எஸ்றா 1:1, 2) அவர்கள் உண்மை வணக்கத்தை ஆதரித்த வரை யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்; அவர்களது தேசத்திற்கு வளமும் செழிப்பும் அருளினார். எதிரிகளிடமிருந்தும், அத்தேசத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த காட்டு மிருகங்களிடமிருந்தும் அவர்களை பாதுகாத்தார். யெகோவாவின் புதுப்பிக்கும் வல்லமையில் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! ஆனால் அந்த சம்பவங்கள் புதுப்பித்தல் சம்பந்தமான தீர்க்கதரிசனங்களின் ஆரம்ப நிறைவேற்றமாக மட்டுமே இருந்தன. மற்றொரு பெரிய நிறைவேற்றம் “கடைசி நாட்களில்,” அதாவது நம் காலத்தில் நடக்கவிருந்தது; வெகு காலத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட தாவீது ராஜாவின் வாரிசானவர் முடிசூட்டப்படவிருந்தார்.—ஏசாயா 2:2-4; 9:6, 7.
8 இயேசு 1914-ல் பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக முடிசூட்டப்பட்ட கொஞ்ச காலத்திற்குள், பூமியிலிருந்த கடவுளுடைய விசுவாசமுள்ள மக்களின் ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்தினார். யூதர்களில் மீதியானோரை பெர்சிய அரசனாகிய கோரேசு கி.மு. 537-ல் பாபிலோனிலிருந்து விடுவித்தது போலவே, இயேசு ஆவிக்குரிய யூதர்களில் மீதியானோரை—அவரை பின்பற்றியவர்களை—பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ செல்வாக்கிலிருந்து விடுவித்தார். (வெளிப்படுத்துதல் 18:1-5; ரோமர் 2:29) 1919 முதற்கொண்டு, உண்மை கிறிஸ்தவர்களின் வாழ்வில் உண்மை வணக்கம் சரியான இடத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறது. (மல்கியா 3:1-5) அது முதற்கொண்டு, யெகோவாவின் மக்கள் அவருடைய பரிசுத்தமாக்கப்பட்ட ஆன்மீக ஆலயத்தில் அவரை வணங்கி வந்திருக்கின்றனர்; இது, உண்மை வணக்கத்திற்கான கடவுளின் ஏற்பாடாகும். இது ஏன் இன்று நமக்கு முக்கியமானது?
ஆவிக்குரிய புதுப்பித்தல் —ஏன் முக்கியம்
9. அப்போஸ்தலர்களுடைய காலத்திற்கு பிறகு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கடவுளுடைய வணக்கம் சம்பந்தமாக என்ன செய்தன, ஆனால் யெகோவா நம் நாளில் என்ன செய்திருக்கிறார்?
9 சரித்திரத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்தனர். ஆனால் உண்மை வணக்கம் கறைப்படுத்தப்பட்டு மறைந்துபோகும் என இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் முன்னுரைத்தனர். (மத்தேயு 13:24-30; அப்போஸ்தலர் 20:29, 30) அப்போஸ்தலர்களின் காலத்திற்கு பின்பு கிறிஸ்தவமண்டலம் தோன்றியது. அதன் குருமார் புறமத போதனைகளையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டனர். கடவுளை புரிந்துகொள்ள முடியாத திரித்துவமாக விவரித்து, யெகோவாவிற்கு பதிலாக பாதிரியாரிடமும் மரியாளிடமும் வெவ்வேறு “புனிதர்களிடமும்” ஜெபிக்கும்படி மக்களுக்கு கற்றுக்கொடுத்து, கடவுளிடம் நெருங்குவதை கிட்டத்தட்ட முடியாத காரியமாக்கிவிட்டனர். இவ்வாறு பல நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் சீர்கேட்டிற்கு பிறகு இப்போது யெகோவா என்ன செய்திருக்கிறார்? இன்றைய உலக நிலைமைகளின் மத்தியிலும்—மத பொய்மையால் நிரம்பிய, தேவபக்தியற்ற பழக்கவழக்கங்களால் கறைப்படுத்தப்பட்ட உலக நிலைமைகளின் மத்தியிலும்—அவர் தலையிட்டு உண்மை வணக்கத்தை புதுப்பித்திருக்கிறார்! இது நவீன கால சம்பவங்களிலேயே மிக முக்கியமானது என சொன்னால் மிகையாகாது.
10, 11. (அ) ஆன்மீக பூஞ்சோலையில் உட்பட்டிருக்கும் இரண்டு அம்சங்கள் என்ன, நீங்கள் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்? (ஆ) யெகோவா எப்படிப்பட்ட மக்களை ஆன்மீக பூஞ்சோலையில் கூட்டிச் சேர்த்திருக்கிறார், அவர்கள் எதைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறுவார்கள்?
10 ஆகவே இன்று உண்மை கிறிஸ்தவர்கள் ஆன்மீக பூஞ்சோலையை அனுபவித்து மகிழ்கின்றனர். யெகோவா இதை இன்னும் அழகாக்கிக்கொண்டே வருகிறார். இந்த பூஞ்சோலையில் உட்பட்டிருப்பது என்ன? முக்கியமாக இரண்டு அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன. முதலாவது, மெய் கடவுளாகிய யெகோவாவின் தூய வணக்கம். அவர் பொய்யும் புரட்டும் இல்லாத வணக்க முறையை அளித்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆன்மீக உணவளித்தும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். இது, நம் பரலோக தகப்பனைப் பற்றி கற்றுக்கொள்ளவும், அவரை பிரியப்படுத்தவும், அவரிடம் நெருங்கி வரவும் நமக்கு உதவுகிறது. (யோவான் 4:24) ஆன்மீக பூஞ்சோலையின் இரண்டாவது அம்சம் மக்கள் சம்பந்தப்பட்டது. ஏசாயா முன்னறிவித்தபடி, “கடைசி நாட்களில்” யெகோவா தம் வணக்கத்தாருக்கு சமாதான வழிகளை கற்பித்திருக்கிறார். நம் மத்தியில் போரை ஒழித்திருக்கிறார். நம் அபூரணங்களின் மத்தியிலும் “புதிய சுபாவத்தை” தரித்துக்கொள்ள உதவியிருக்கிறார். தன்னுடைய சக்தியைத் தந்து நம் முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார்; இது அருமையான பண்புகளை நம்மில் வளர்க்கிறது. (எபேசியர் 4:22-24; கலாத்தியர் 5:22, 23) நீங்கள் கடவுளுடைய சக்திக்கு இசைவாக செயல்படும்போது, ஆன்மீக பூஞ்சோலையின் பாகமாக இருக்கிறீர்கள்.
11 யெகோவா இந்த ஆன்மீக பூஞ்சோலையில் தாம் நேசிக்கிற மக்களை கூட்டிச் சேர்த்திருக்கிறார்; தம்மையும் சமாதானத்தையும் நேசித்து, ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கும்’ மக்களை கூட்டிச் சேர்த்திருக்கிறார். (மத்தேயு 5:3) இவர்கள், மனிதவர்க்கமும் முழு பூமியும் புதுப்பிக்கப்படுவதை காணும் அரிய வாய்ப்பைப் பெறுவார்கள்.
“இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
12, 13. (அ) புதுப்பித்தலைக் குறித்த தீர்க்கதரிசனங்களுக்கு ஏன் மற்றொரு நிறைவேற்றம் இருக்க வேண்டும்? (ஆ) ஏதேனில் குறிப்பிட்டபடி இந்தப் பூமியைக் குறித்த யெகோவாவின் நோக்கம் என்ன, இது நமக்கு எப்படி நம்பிக்கை அளிக்கிறது?
12 புதுப்பித்தலைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்கள் ஆவிக்குரிய புதுப்பித்தலை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, வியாதிப்பட்டவர்களும் நடக்க முடியாதவர்களும் கண் தெரியாதவர்களும் காது கேட்காதவர்களும் குணமடைவார்கள் என்றும், மரணம் ஒழிக்கப்படும் என்றும் ஏசாயா எழுதினார். (ஏசாயா 25:8; 35:1-7) அப்படிப்பட்ட வாக்குறுதிகள் அன்று சொல்லர்த்தமாக நிறைவேறவில்லை. நம் நாளில் இவற்றின் ஆவிக்குரிய நிறைவேற்றத்தை நாம் பார்த்திருக்கிறோம் என்றாலும், எதிர்காலத்தில் இவை சொல்லர்த்தமாக முழு அளவில் நிறைவேறும் என நம்புவதற்கு உறுதியான ஆதாரம் இருக்கிறது. இது நமக்கு எப்படி தெரியும்?
13 ஏதேனில் யெகோவா பூமிக்கான தமது நோக்கத்தை தெளிவாக்கினார்; சந்தோஷமுள்ள, ஆரோக்கியமுள்ள, ஒன்றுபட்ட குடும்பமாக மனிதன் பூமியில் வாழ வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். முதல் தம்பதியினர், பூமியையும் அதிலுள்ள எல்லா சிருஷ்டிகளையும் பராமரித்து இந்த பூமியை பரதீஸாக மாற்ற வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 1:28) இன்றைய நிலைமைகளோ கொஞ்சமும் அவ்வாறு இல்லை. இருந்தாலும் யெகோவாவின் நோக்கம் ஒருபோதும் குலைக்கப்படுவதில்லை. (ஏசாயா 55:10, 11) யெகோவாவால் நியமிக்கப்பட்ட மேசியானிய ராஜாவாக இயேசு இந்த பூகோள பரதீஸை ஸ்தாபிப்பார்.—லூக்கா 23:43.
14, 15. (அ) யெகோவா எவ்வாறு ‘எல்லாவற்றையும் புதிதாக்குவார்?’ (ஆ) பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த அம்சம் உங்களை மிகவும் கவருகிறது?
14 முழு பூமியும் பரதீஸாக மாறுவதைக் காண்பது எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்! “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என அந்தக் காலத்தைப் பற்றி யெகோவா சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:5) அது எதை அர்த்தப்படுத்தும் என சிந்தித்துப் பாருங்கள். இந்த பொல்லாத உலகின்மீது யெகோவா தமது அழிக்கும் வல்லமையை காட்டிய பிறகு “புதிய வானமும் புதிய பூமியும்” மீந்திருக்கும். அப்போது பரலோகத்திலிருந்து ஒரு புதிய அரசாங்கம், பூமியிலுள்ள புதிய சமுதாயத்தின்மீது ஆளும்; யெகோவாவை நேசித்து அவரது சித்தத்தை செய்வோரே இச்சமுதாயத்தினராக இருப்பர். (2 பேதுரு 3:13) சாத்தானும் அவனது பேய்களும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவர். (வெளிப்படுத்துதல் 20:3) ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக, அந்த பகைமைமிக்க, தீங்கான செல்வாக்கிலிருந்து மனிதவர்க்கம் விடுபட்டிருக்கும். அதனால் ஏற்படும் நிம்மதிக்கு அளவே இருக்காது என்பது உறுதி.
15 ஒருவழியாக, இந்த பூமியை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் கடவுள் நினைத்தாரோ அப்படி பராமரிக்க நம்மால் இயலும். புதுப்பிக்கும் ஆற்றல் பூமிக்கு இயற்கையாகவே உள்ளது. தூய்மைக்கேட்டிற்கான காரணம் நீக்கப்பட்டால் மாசுபடுத்தப்பட்ட ஏரிகளும் ஆறுகளும் தானாகவே சுத்திகரித்துக்கொள்ளும். போரினால் பாழாக்கப்பட்ட நிலங்கள் போர் முடிவுக்கு வந்தால் தானாகவே புதுப்பித்துக்கொள்ளும். ஆக, பூமியோடு இசைந்து செயல்பட்டு, அது பூங்காவனமாக மாறுவதற்கு—வகை தொகையில்லா உயிரினங்கள் நிறைந்த பூகோள ஏதேனாக மாறுவதற்கு—கைகொடுப்பது எவ்வளவு இன்பமளிக்கும்! விலங்கினங்களையும் தாவர இனங்களையும் கொடூரமாக அழிப்பதற்கு பதிலாக மனிதன் பூமியிலுள்ள எல்லா சிருஷ்டிகளோடும் சமாதானமாக வாழ்வான். பிள்ளைகள்கூட மூர்க்க மிருகங்களைக் கண்டு பயப்பட அவசியமே இருக்காது.—ஏசாயா 9:6, 7; 11:1-9.
16. பரதீஸில் என்ன புதுப்பித்தலை ஒவ்வொருவரும் அனுபவிப்பர்?
16 தனிப்பட்ட ரீதியிலும்கூட புதுப்பித்தலை நாம் அனுபவிப்போம். அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள் பூகோள அளவில் அற்புதமாக சுகப்படுத்தப்படுவார்கள். இயேசு பூமியில் இருந்தபோது செய்தபடியே, கடவுளால் கொடுக்கப்பட்ட வல்லமையை பயன்படுத்தி பார்வை இல்லாதவர்களையும் காது கேட்காதவர்களையும், பேச முடியாதவர்களையும் சுகமில்லாதவர்களையும் குணப்படுத்துவார். (மத்தேயு 15:30) வயதானவர்கள் புதுப்பிக்கப்பட்ட வாலிப முறுக்காலும் ஆரோக்கியத்தாலும் வலிமையாலும் ஆனந்தமடைவர். (யோபு 33:25) அவர்களது தோல் சுருக்கங்கள் மறைந்துபோகும், கைகால்கள் நேராகும், தசைகள் புதுத்தெம்பால் வலுவடையும். பாவத்தின் விளைவுகள் படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்துபோவதை மனிதவர்க்கத்தினர் அனைவரும் உணருவர். யெகோவா தேவனின் அற்புத புதுப்பிக்கும் வல்லமைக்காக நாம் நன்றி சொல்லுவோம்! இப்போது, மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் புதுப்பித்தல் நடைபெறவிருக்கும் காலத்தின் நெஞ்சை கவரும் ஒரு முக்கிய அம்சத்திற்கு கவனம் செலுத்தலாம்.
இறந்தவர்களுக்கு மீண்டும் உயிரளித்தல்
17, 18. (அ) இயேசு ஏன் சதுசேயர்களை கண்டித்தார்? (ஆ) உயிர்த்தெழுதலை நடப்பிக்குமாறு யெகோவாவிடம் எலியா ஏன் கேட்டார்?
17 கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. “உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது; ஏனென்றால், உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை” என இயேசு அவர்களை கண்டித்தார். (மத்தேயு 22:29) யெகோவாவிற்கு அப்படிப்பட்ட புதுப்பிக்கும் வல்லமை இருப்பதாக வேதவசனங்கள் காட்டுகின்றன. எப்படி?
18 எலியாவின் நாட்களில் நடந்ததை கவனியுங்கள். தன் ஒரே மகனின் உடலை புயங்களில் தாங்கிக்கொண்டு நின்றாள் ஒரு விதவை. அந்த மகன் இறந்துவிட்டான். விதவையின் விருந்தாளியாக சிலகாலம் தங்கியிருந்த எலியா அதிர்ச்சியடைந்திருப்பார். முன்பு அவர் இந்தப் பிள்ளையை பட்டினியிலிருந்து காப்பாற்றியிருந்தார். அவர் ஒருவேளை அந்த சிறுவனிடம் நெருங்கிப் பழகியிருக்கலாம். அவன் தாய் மனமுடைந்து போயிருந்தாள். இறந்துவிட்ட கணவனின் நினைவாக அவளுக்கு இருந்த ஒரே சொத்து அவன்! வயதான காலத்தில் அவன் தன்னை பார்த்துக்கொள்வான் என அவள் எதிர்பார்த்திருக்கலாம். அந்த விதவை கலக்கமடைந்து, முன்பு செய்த தவறினால் தனக்கு இப்படிப்பட்ட தண்டனை கிடைத்திருக்கிறதோ என எண்ணி பயந்தாள். இந்த பரிதாபத்தைப் பார்த்து துடித்தார் எலியா. அந்த விதவையிடமிருந்து சடலத்தை மெல்ல வாங்கிக்கொண்டு, தன் அறைக்கு தூக்கி சென்று, அந்தப் பிள்ளைக்கு மீண்டும் உயிர் அளிக்குமாறு யெகோவா தேவனிடம் விண்ணப்பம் பண்ணினார்.—1 ராஜாக்கள் 17:8-21.
19, 20. (அ) யெகோவாவின் புதுப்பிக்கும் வல்லமையில் விசுவாசமிருப்பதை ஆபிரகாம் எப்படி காட்டினார், அப்படிப்பட்ட விசுவாசத்திற்கு என்ன காரணம் இருந்தது? (ஆ) எலியாவின் விசுவாசத்திற்கு யெகோவா எவ்வாறு வெகுமதியளித்தார்?
19 எலியா, உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்த முதல் நபரல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன், யெகோவாவிற்கு அப்படிப்பட்ட புதுப்பிக்கும் வல்லமை இருப்பதை ஆபிரகாம் நம்பினார்; அப்படி நம்புவதற்கு நியாயமான காரணம் இருந்தது. ஆபிரகாம் 100 வயதாகவும் சாராள் 90 வயதாகவும் இருந்தபோது பிள்ளை பிறப்பிக்கும் சக்தியை இழந்திருந்தபோதிலும் யெகோவா அதைப் புதுப்பித்தார்; சாராள் ஒரு மகனை பெற்றெடுக்க செய்தார். (ஆதியாகமம் 17:17; 21:2, 3) பிற்பாடு அந்த மகன் வளர்ந்த பிறகு, அவனை பலிகொடுக்குமாறு யெகோவா கேட்டார். ஈசாக்கை யெகோவாவால் மீண்டும் உயிரோடு எழுப்ப முடியும் என நம்பிய ஆபிரகாம் விசுவாசத்தைக் காட்டினார். (எபிரெயர் 11:17-19) இந்த பலமான விசுவாசத்தால்தான், அவர் தன் மகனாகிய ஈசாக்கை பலிகொடுக்க மலைமீது ஏறுவதற்கு முன்பு, இருவரும் திரும்பி வரப்போவதாக ஊழியர்களிடம் உறுதியளித்தார்.—ஆதியாகமம் 22:5.
20 ஈசாக்கு பலிகொடுக்கப்படுவதை யெகோவா தடுத்துவிட்டார், ஆகவே அந்தச் சமயத்தில் உயிர்த்தெழுதலுக்கு தேவையில்லாமல் போயிற்று. எலியாவின் விஷயத்திலோ, விதவையின் மகன் ஏற்கெனவே இறந்துபோயிருந்தான், ஆனால் வெகு காலத்திற்கு இறந்த நிலையில் இல்லை. அவனை உயிர்த்தெழுப்புவதன் மூலம் தீர்க்கதரிசியின் விசுவாசத்திற்கு யெகோவா வெகுமதியளித்தார்! பின்பு எலியா அச்சிறுவனை அவனது தாயிடம் கொடுத்து, “இங்கே பாருங்கள், உங்கள் மகன் உயிரோடிருக்கிறான்” என்ற மறக்க முடியாத வார்த்தைகளை கூறினார்!—1 ராஜாக்கள் 17:22-24.
21, 22. (அ) வேதவசனங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதல்களின் நோக்கம் என்ன? (ஆ) பூஞ்சோலையில் உயிர்த்தெழுதல் எவ்வளவு விரிவாக நடக்கும், அதை யார் நடப்பிப்பார்?
21 இவ்வாறு பைபிள் பதிவில் முதன்முறையாக மனித உயிரை புதுப்பிப்பதற்காக யெகோவா தம் வல்லமையை பயன்படுத்தியதைப் பற்றி வாசிக்கிறோம். பிற்பாடு, இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப எலிசா, இயேசு, பவுல், பேதுரு ஆகியோருக்கும் யெகோவா வல்லமையளித்தார். ஆனால் அவ்வாறு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் இறுதியில் மீண்டும் இறந்துவிட்டார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் அப்படிப்பட்ட பைபிள் பதிவுகள், வரவிருக்கும் காலங்களை அருமையாக படம்பிடித்துக் காட்டுகின்றன.
22 இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக” இருக்கும் தம் ஸ்தானத்தை பூஞ்சோலையில் நிறைவேற்றுவார். (யோவான் 11:25) அவர் எண்ணற்ற லட்சக்கணக்கானோரை உயிர்த்தெழுப்பி, பூஞ்சோலையில் என்றென்றும் வாழும் வாய்ப்பை அருளுவார். (யோவான் 5:28, 29) மரணத்தால் வெகு காலமாக பிரிந்திருக்கும் அன்பான நண்பர்களும் உறவினர்களும் மீண்டும் சந்தித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவி ஆனந்த பரவசமடையும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்! மனிதவர்க்கம் அனைத்தும் யெகோவாவின் புதுப்பிக்கும் வல்லமைக்காக அவரை துதிக்கும்.
23. யெகோவாவுடைய வல்லமையின் வெளிக்காட்டுகளிலேயே ஒப்பற்றது எது, நம் எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்கு இது எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?
23 அந்த நம்பிக்கைகள் நிச்சயமானவை என்பதற்கு யெகோவா உத்தரவாதத்தை அளித்துள்ளார். அவரது வல்லமையின் வெளிக்காட்டுகளிலேயே ஒப்பற்றது, இயேசுவை தமக்கு அடுத்தபடியான வல்லமைமிக்க நபராக உயிர்த்தெழுப்பியதே. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு தரிசனமானார். (1 கொரிந்தியர் 15:5, 6) சந்தேகவாதிகளுக்கும் இந்த அத்தாட்சியே போதுமானது!
24. யெகோவா இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவார் என நாம் ஏன் நம்பலாம், எந்த நம்பிக்கையை நாம் ஒவ்வொருவரும் நெஞ்சார போற்ற வேண்டும்?
24 உயிர்த்தெழுதல் செய்ய யெகோவாவிற்கு வல்லமை மட்டுமல்ல, விருப்பமும் இருக்கிறது. யெகோவா அதற்காக ஏக்கமாக இருப்பதை பதிவு செய்யும்படி யோபு பரிசுத்த சக்தியால் ஏவப்பட்டார். (யோபு 14:15) புதுப்பிக்கும் வல்லமையை இப்படிப்பட்ட அன்பான விதத்தில் பயன்படுத்த ஆவலாக இருக்கும் நம் கடவுளிடம் இன்னுமதிகமாக ஈர்க்கப்படுகிறோம் அல்லவா? என்றாலும் உயிர்த்தெழுதல், யெகோவா நடப்பிக்கவிருக்கும் மகத்தான புதுப்பித்தலின் ஒரு அம்சம் மட்டுமே என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் யெகோவாவிடம் அதிகமதிகமாக நெருங்கி வருகையில், அவர் ‘எல்லாவற்றையும் புதிதாக்குவதை’ கண்ணார காண நீங்கள் இருப்பீர்கள் என்ற அருமையான நம்பிக்கையை எப்போதும் நெஞ்சார போற்றுங்கள்.—வெளிப்படுத்துதல் 21:5.
a “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்,” மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டபோது ஆரம்பித்தது; அப்போது உண்மையுள்ள தாவீது ராஜாவின் வாரிசானவர் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். தாவீதின் சந்ததியில் வருபவர் என்றென்றும் ஆளுகை செய்வார் என யெகோவா அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். (சங்கீதம் 89:35-37) ஆனால் கி.மு. 607-ல் எருசலேமை பாபிலோன் அழித்த பிறகு தாவீதின் சந்ததியில் வந்த எந்த மனிதரும் கடவுளுடைய சிங்காசனத்தில் அமரவில்லை. தாவீதின் வம்சத்தாராக பூமியில் பிறந்த இயேசு, பரலோக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபோது, வெகுகாலத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த ராஜாவானார்.
b உதாரணத்திற்கு, மோசே, ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, மீகா, செப்பனியா ஆகிய அனைவரும் இந்த மையப்பொருளில் பேசினர்.