Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அழிக்கப்பட்ட உலகம்

அழிக்கப்பட்ட உலகம்

அதிகாரம் 6

அழிக்கப்பட்ட உலகம்

முன் ஒருமுறை, உலக அழிவு எக்கணமும் நிகழவிருந்தது. பூகோள ஜலப்பிரளயத்தைப் பற்றிக் கடவுள் எச்சரிக்கை கொடுத்தபோது பரியாசம் பண்ணாத ஒரு மனிதன் தங்கள் முற்பிதாக்களுக்குள் இருந்ததற்காக எல்லாத் தேசத்தின் ஜனங்களும் நன்றியறிதலுடன் இருக்கலாம். நோவா செவிகொடுத்துக் கீழ்ப்படிந்ததனால், அவனும் அவன் மனைவியும், அவனுடைய மூன்று குமாரரும் அவர்கள் மனைவிகளும் தப்பிப்பிழைத்தனர். அவர்களிலிருந்தே, நாமெல்லாரும் தோன்றினோம்.—ஆதியாகமம் 10:1, 32.

2 பூமி வன்முறைச் செயல்களால் நிரம்பியிருந்ததைக் கடவுள் கண்டதனால் அவர் அந்த உலகத்தை அழித்தார். “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது.” (ஆதியாகமம் 6:3, 5, 13) நிலைமைகள் வெகுவாய் நம் 20-ம் நூற்றாண்டில் இருப்பவற்றைப்போல் இருந்தன.

3 எது நோவாவின் நாளில் நிலைமையை அவ்வளவு மிக மோசமாக்கினது? ஆதியாகமம் 6:2-ல் தனிக் கவனிப்புக்குரிய ஓர் உண்மை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கே அறிவித்திருப்பதாவது: “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” ஆனால் இதில் என்ன தவறு இருந்தது? இவர்கள், மணம் செய்துகொள்ள தீர்மானித்த வெறும் மனித ஆண்கள் அல்லர். இந்தத் “தேவகுமாரர்” தேவ தூதர்கள், ஆவி சிருஷ்டிகள், இவர்கள் பூமியிலிருந்த அழகிய பெண்களையும் மணவாழ்க்கையின் இன்பங்களையும் கவனித்து மனித உருவெடுத்தவர்கள். (யோபு 1:6-ஐ ஒத்துப் பாருங்கள்.) அவர்கள் மனித உடல்களில் கண்ணுக்குப் புலப்படத் தோன்றினதும் மணஞ்செய்ததும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமையைக் காட்டின செயல்களாகும். அவர்கள் “தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்” எனவும் பெண்களோடு அவர்கள் கொண்ட உறவுகள் “இயற்கைக்கு மாறானவை,” ஏறுமாறான போக்கு எனவும் வேத எழுத்துக்கள் கூறுகின்றன. (யூதா 6, 7, NW; 1 பேதுரு 3:19, 20) அவர்களுடைய இனக்கலப்புப் பிறவிகளான பிள்ளைகள் இயற்கை மீறிய வகையில் பருத்திருந்தனர். இவர்கள் இராட்சதர்கள், அல்லது “வீழ்த்துபவர்கள்” என்றழைக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் கொடுமைக்காரராயிருந்தனர்.—ஆதியாகமம் 6:4.

4கெட்டு சீரழிந்த அந்த உலகத்தின் மத்தியில் வாழ்ந்தபோதிலும், நோவா யெகோவாவின் கண்களில் தயவு பெற்றான். ஏன்? ஏனெனில் “நோவா நீதிமானா”யிருந்தான். அவன் ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களை அறிந்திருந்தான், குற்றமற்றவனாக “உத்தமனாகத்” தன்னை நிரூபித்தான். (ஆதியாகமம் 6:8, 9) நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும், நிலத்தில் வாழும் எல்லா வகையான மிருகங்களின் மற்றும் பறக்கும் சிருஷ்டிகளின் மாதிரிகளையுங்கூட பாதுகாத்துவைக்கும் நோக்கத்துடன், ஒரு பேழையை, மிகப் பெரிய பெட்டியைப்போன்ற அமைப்பைக் கட்டும்படி யெகோவா நோவாவுக்குக் கட்டளையிட்டார். கடவுள் பின்வருமாறு விளக்கினார்: “வானத்தின்கீழே ஜீவ சுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.” (ஆதியாகமம் 6:13-17) ஞானமாய், நோவா கடவுளுக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிந்தான்.

5பைபிளின் நுட்பவிவரமான காலக்கணிப்பு குறித்துக் காட்டுகிறபடி பொ.ச.மு. 2370-ம் ஆண்டில் ஜலப்பிரளயம் வந்தது. அது, நம்முடைய தற்போதைய காலம் வரையாகவுங்கூட, மனித சரித்திரத்தில் மிகப் பெரிய ஜலப்பிரளயமாகும். அது அவ்வளவு மிகப் பெருகினதால் “வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.” (ஆதியாகமம் 7:19) அந்த ஜலப்பிரளயத்தினால் “அப்பொழுதிருந்த உலகம் அழிந்தது.” (2 பேதுரு 3:6) ‘மிக உயர்ந்த மலைகளையுங்கூட தண்ணீர் மூடிற்றென்றால், அந்தத் தண்ணீரெல்லாம் இப்பொழுது எங்கிருக்கிறது?’ என்று எவராவது கேட்கலாம். சந்தேகமில்லாமல் இங்கே இந்தப் பூமியிலேதானே இருக்கிறது.

6நோவாவின் நாளிலிருந்த எந்த மலைகளும் எவரெஸ்ட் மலையைப்போல் அவ்வளவு உயர்ந்திருந்தனவென பைபிள் சொல்லவில்லை என்பதைத் தெளிவாக உணரவேண்டும். கடந்த காலத்தில் மலைகளில் பல தற்போது இருப்பதைப் பார்க்கிலும் மிகத் தாழ்ந்திருந்தனவெனவும், சில, சமுத்திரங்களின் கீழிருந்து மேலெழும்பவும் செய்யப்பட்டனவெனவும் விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். மேலும், சமுத்திரங்கள்தாமேயும் இப்போதிருப்பதைவிட சிறியவையாயும் கண்டங்கள் பெரியவையாயும் இருந்த ஒரு காலம் இருந்ததென நம்பப்படுகிறது, இது நதி வாய்க்கால்கள் சமுத்திரங்களின்கீழ் வெகுதூரம் நீடித்திருப்பதால் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலைமையைக் குறித்து நாஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை, அதன் ஜனவரி 1945-ன் வெளியீட்டில் பின்வருமாறு அறிவித்தது: “கடல் மட்டத்துக்கு மேலுள்ள நிலத்தின் கன அளவுக்குப் பத்து மடங்கு மிகுதியான தண்ணீர் சமுத்திரத்தில் இருக்கிறது. இந்த நிலம் முழுவதையும் சமமாய் கடலுக்குள் கொட்டினால், தண்ணீர் முழு பூமியையும் மூடி, ஒன்றரை மைல்கள் ஆழத்தைக் கொண்டிருக்கும்.” ஆகவே, பிரளயத் தண்ணீர்கள் விழுந்தப் பின், ஆனால் மலைகள் மேலெழும்பி கடல் அடிப்பரப்புகள் கீழிறங்கினதால் தண்ணீர் நிலத்திலிருந்து வடிந்துபோகச் செய்ததற்கு முன்னும், துருவங்களில் பனி உறைந்து மூடுவதற்கு முன்னும், பைபிளில் சொல்லியிருக்கிறபடி, ‘உயர்ந்த மலைகளையெல்லாம்’ மூடுவதற்குப் போதிய தண்ணீர் இருந்தது.—ஆதியாகமம் 7:17-20; 8:1-3; சங்கீதம் 104:8, 9-ஐ ஒத்துப் பாருங்கள்.

7இவ்வாறு மூழ்க்கடித்தப் பெரும் உலக ஜலப்பிரளயம் அதனூடே வாழ்ந்தவர்களின் மனதில், ஒருபோதும் மறக்கமுடியாதபடி ஆழமான பதிவை நிச்சயமாகவே உண்டுபண்ணியிருக்க வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கு அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த அதே சிறு தொகுதியாரிலிருந்தே எல்லாத் தேசத்தாரும் தோன்றினார்களென பைபிள் பதிவு கூறுவதனால், பூமியின் எல்லாப் பகுதிகளிலும் அந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைப் பற்றிய ஏதாவது பூர்வ நினைவின் அத்தாட்சி இருக்குமென்று எதிர்பார்ப்பது நியாயமாயிருக்கிறது. இவ்வாறு இருக்கிறதா? ஆம், நிச்சயமாகவே!

8ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்களின் சந்ததியார் தூர இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று காலங்கடந்து செல்லச் செல்ல, நுட்பவிவரங்கள் திரித்துக் கூறப்படலாயின, அந்த விவரம் அந்தந்த இடத்து மத எண்ணங்களுக்குப் பொருந்துமாறு மாற்றியமைத்துக் கொள்ளப்பட்டது. ஒன்றாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிர மனிதவர்க்கத்தை அழித்த ஒரு பெரிய ஜலப்பிரளயத்தைப் பற்றிய முன்னினைவு செய்தி உலகைச் சுற்றியுள்ள முற்காலத்துப் புராணக் கதைகளில் இருப்பது சற்றேனும் தற்செயலாக இருக்க முடியாது. இதைப் பற்றிய நினைவு மெசொபொத்தேமியாவிலும் ஆசியாவின் மற்றப் பாகங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் பஸிபிக் தீவுகளிலும், வட மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள இந்திய குலமரபுக் குழுக்கள் பலவற்றிற்குள்ளும், பூர்வ கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்குள் சொல்லப்பட்ட கதைகளிலும் ஸ்காண்டிநேவியாவிலும், ஆப்பிரிக்கக் குலமரபு குழுக்களுக்குள்ளும் காணப்படுகிறது. இந்த விவரங்களில் பல, ஒரு படகில் மனிதரோடுகூட மிருகங்கள் பாதுகாக்கப்பட்டனவென்று குறிப்பிடுகின்றன. பைபிள் விவரப் பதிவுக்குப் பொருந்த, சில விவரங்கள் தண்ணீர் குறைந்ததை உறுதி செய்ய பறவைகள் அனுப்பப்பட்டனவெனக் கூறுகின்றன. (ஒத்துப்பாருங்கள்: ஆதியாகமம் 7:7-10; 8:6-12) வேறு எந்தப் பூர்வ சம்பவமும் இவ்வளவு விரிவாய் நினைவுகூரப்பட்டில்லை.

9ஜலப்பிரளயத்தோடு சம்பந்தப்பட்ட சரித்திரப்பூர்வ நுட்பவிவரங்கள் பழக்கவழக்கங்களை நம்முடைய நாள்வரையாகவுங்கூட பாதித்திருக்கின்றன. எவ்வாறு? ஜலப்பிரளயம் “இரண்டாம் மாதம் பதினேழாம் தேதி”யில் தொடங்கினதென்று பைபிள் அறிவிக்கிறது. அந்த “இரண்டாம் மாதம்” நம்முடைய ஆண்டுக்குறிப்பேட்டில் அக்டோபரின் பிற்பகுதிக்கும் நவம்பரின் முற்பகுதிக்கும் ஒத்திருக்கிறது. (ஆதியாகமம் 7:11) ஆகையால், ஆண்டின் இந்தச் சமயத்தில் உலகைச் சுற்றிலும் பல ஜனங்கள் மரித்தோரின் நாளை அல்லது முற்பிதாக்களின் விழாவை நினைவு கொண்டாடுவது கவனிக்கத்தக்கது. ஏன் அப்பொழுது? ஏனெனில் இந்த வழக்கங்கள், ஜலப்பிரளயம் உண்டுபண்ணின அழிவைத் திரும்ப நினைவுபடுத்திக் காணச் செய்கின்றன. a

10எனினும், பைபிளில்தானே, நடந்ததைப் பற்றிய கெடுக்கப்படாத சாட்சியம் அடங்கியிருக்கிறது. நோவா கண்டதும் அனுபவித்ததும் பின்னால் பைபிளில் ஒன்றுபட சேர்க்கப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின், கடவுள்தாமே, தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம் பேசுகையில் “நோவாவின் காலத்திலுண்டான வெள்ளத்தைக்” குறிப்பிட்டார். (ஏசாயா 54:9) கடவுளுடைய ஒரே பேறான குமாரன் நோவாவின் நாளின் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தார். பின்னால், பூமியிலிருக்கையில், இயேசு கிறிஸ்துவான இவர், இந்த ஜலப்பிரளயத்தைச் சரித்திரப்பூர்வ உண்மையாகக் குறிப்பிட்டுப் பேசி, அந்தச் சமயத்தில் அத்தனை பலர் மாண்டதன் காரணத்தையும் விளக்கிக் காட்டினார்.

“அவர்கள் அசட்டையாயிருந்தார்கள்”

11நோவாவின் வீட்டாரைத் தவிர மற்ற எல்லாரும் குற்ற வன்முறைச் செயலாளராயிருந்தனரென இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவர் பின்வருமாறு கூறினார்: “ஜலப்பிரளயத்துக்கு முன்னான நாட்களில் நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வந்தார்கள். ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டு போகுமட்டும் அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை [அசட்டையாயிருந்தார்கள், NW]. அப்படியே மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்துவின்] வருகையுமிருக்கும் [வந்திருத்தலும் இருக்கும், NW].—மத்தேயு 24:37-39, தி.மொ.

12அவர்கள் மிதமான அளவில் உண்பதும் குடிப்பதும் அல்லது நன்மதிப்புள்ள முறையில் மணஞ் செய்வதும் தவறில்லை. ஆனால் பூகோள அழிவைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டபோது, தங்கள் வாழ்க்கையை இத்தகைய தங்கள் சொந்த நாட்டங்களிலேயே தொடர்ந்து ஊன்றவைத்துக் கொண்டிருந்தது, நோவாவையோ அல்லது நோவா பிரசங்கித்த எச்சரிக்கை செய்தியைக் கொடுத்த யெகோவா தேவனையோ அவர்கள் உண்மையில் நம்பவில்லையென மெய்ப்பித்துக் காட்டினது. அவர்கள் நம்பியிருந்தால், எவ்வாறு தப்பிப்பிழைக்க முடியுமென்பதைப் பற்றி அவர்கள் ஊக்கமாய் விவரங் கேட்டிருப்பார்கள், பின்பு அந்தத் தேவைகளை நிறைவுசெய்ய உடனடியாக அவசர நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அந்நாட்களில் விரிவாய்ப் பரவியிருந்த வன்முறைச் செயல்களை நிறுத்த ஏதாவது கட்டாயமாகச் செய்யப்பட வேண்டுமென சில ஆட்கள் ஒருவேளை ஒப்புக் கொண்டிருக்கலாம், ஆனால் பூகோள ஜலப்பிரளயம் ஏற்படுவதோ நடைபெற முடியாதக் காரியமாக அவர்களுக்குத் தோன்றினதென்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இயேசு சொன்ன பிரகாரம், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் [நோவாவின் மூலமாய்க் கொடுத்த கடவுளுடைய எச்சரிக்கைக்கு] அவர்கள் அசட்டையாயிருந்தார்கள்.” (NW) இது நமக்கு எச்சரிக்கைக்குரிய உதாரணமாகப் பதிவு செய்யப்பட்டது.

13இவ்வாறே, தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினபோது ஓர் எச்சரிக்கை தொனிக்கச் செய்தான்: “கடைசி நாட்களில் [அந்நாட்களில் நாம் இப்பொழுது இருக்கிறோம்] பரியாசக்காரர் தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து பரியாசமாய்ப் பேசி: அவர் வருகையைப் பற்றிய வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த காலமுதல் சகலமும் சிருஷ்டிப்பின் ஆரம்பமுதல் இருந்தபிரகாரமே இருக்கிறதென்று சொல்லுவார்கள்.” இத்தகைய ஆட்கள், தாங்கள் எவருக்கும் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பை உணர விரும்புகிறதில்லை. ஆகவே கிறிஸ்து வந்திருப்பதன் எண்ணத்தையும், தெய்வபக்தியற்ற வாழ்க்கை முறையைப் பின்தொடருவோருக்கு அது குறிக்கப்போகிறதையும் அவர்கள் தங்கள் மனதிலிருந்து அகற்றிவிடுகின்றனர். ஆனால் பேதுரு தொடர்ந்து சொல்வதாவது: “கடவுளின் வார்த்தையினால் பூர்வத்தில் வானமிருந்ததென்பதையும் பூமியும் ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினால் நிலைகொண்டிருந்ததென்பதையும் அப்பொழுதிருந்த உலகம் ஜலங்களால் பிரளயத்தின் மூலமாய் அழிந்ததென்பதையும் அவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள். இப்பொழுதிருக்கிற வானமும் பூமியுமோ அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுத் தெய்வபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டு வருகின்றன.”—2 பேதுரு 3:3-7, தி.மொ.

14“கடவுளின் வார்த்தை” நிறைவேறாமல் போகிறதில்லை என்ற இந்த உண்மையை அந்தப் பரியாசக்காரர் அசட்டை செய்கின்றனர். அவர்களுடைய நோக்குநிலையைத் தவறென நிரூபிப்பதற்கு, அப்போஸ்தலன் பேதுரு சிருஷ்டிப்பின் காலத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறான். அச்சமயத்தில் கடவுள்: “தண்ணீர்கள் நடுவே ஆகாயமண்டலமுண்டாகுக, அது தண்ணீர்களினின்று தண்ணீர்களைப் பிரிக்கவென்று” சொன்னார். இவ்வாறு கட்டளையிட்டு, “கடவுள் ஆகாயமண்டலத்தை உண்டுபண்ணி ஆகாயமண்டலத்தின்மேலுள்ள தண்ணீர்களையும் ஆகாயமண்டலத்தின்கீழுள்ள தண்ணீர்களையும் வெவ்வேறு பிரித்தார்.” இவ்வாறு “கடவுளின் வார்த்தை,” அவருடைய நோக்கத்தின் அறிவிப்பு, நிறைவேறினது. (ஆதியாகமம் 1:6, 7, தி.மொ.) நோவாவின் நாளில் அவர் பூகோள ஜலப்பிரளயத்தைக் கட்டளையிட்டு, “அப்பொழுதிருந்த உலகத்தை” அழிக்க அந்தத் தண்ணீர்களைப் பயன்படுத்தினபோதும் அவருடைய வார்த்தை நிறைவேறிற்று. கடவுளுடைய தடுக்கமுடியாத அதே வார்த்தையினால் தெய்வபக்தியற்ற தற்போதைய காரிய ஒழுங்குமுறையின்மேல் அழிவு வரும்.

15ஜலப்பிரளயத்தின்போது நிகழ்ந்தது வரப்போகிற காரியங்களுக்கு மாதிரியாயிருந்தது. அப்போது பூமி அழிக்கப்படவில்லை, தெய்வபக்தியற்ற ஜனங்களே அழிக்கப்பட்டார்கள். அப்படியானால், “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் . . . அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு” இருக்கிறது, என்ற அறிவிப்பின் பொருளென்ன? (2 பேதுரு 3:7; 2:5) இயற்கையான வானங்களிலுள்ள ஏற்கெனவே கடும் வெப்பமான சூரியன் மற்றும் நட்சத்திரங்களை சொல்லர்த்தமான அக்கினி எவ்வகையில் பாதிக்கும்? மேலும் சொல்லர்த்தமான பூமியை எரித்துப்போடுவது, அதைப் பரதீஸாக்க வேண்டுமென்ற கடவுளின் நோக்கத்தோடு எவ்வாறு பொருந்தும்? தெளிவாகவே, இங்கே குறிக்கப்பட்டுள்ளபடி, “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும்” அடையாளக் குறிப்பாகவே இருக்க வேண்டும். (ஆதியாகமம் 11:1; 1 இராஜாக்கள் 2:1, 2; 1 நாளாகமம் 16:31 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) “வானங்கள்,” பொதுவில் மனிதவர்க்கத்துக்கு மேலாக எழுப்பப்பட்டுள்ள அரசாங்க அதிகாரங்களைக் குறிக்கின்றன, “பூமி” தெய்வபக்தியற்ற மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. யெகோவாவின் அந்த மகா நாளில் இவை, அக்கினியில் எரிக்கப்படுவதுபோல் முற்றிலும் அழிக்கப்படும். இதைப் பற்றிக் கொடுக்கப்படும் தெய்வீக எச்சரிக்கையைத் தொடர்ந்து பரியாசம் செய்கிறவர்கள் தங்கள் உயிரை வினைமையான ஆபத்துக்குட்படுத்துகின்றனர்.

தெய்வபக்தியுள்ள ஆட்களுக்கு விடுதலை

16இன்று நாம் இருதயத்தில் ஏற்கவேண்டிய ஒரு குறிப்பை ஜலப்பிரளயத்தைப் பற்றிய விவரம் மனதில் பதியும் முறையில் தெளிவாக்கிக் காட்டுகிறது. அது என்ன? நோவாவின் நாளில் கடவுள் செய்ததைக் குறிப்பிட்டபின், அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு சொல்லி முடிக்கிறான்: “தெய்வபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று விடுவிக்கவும் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைக்கவும் கர்த்தருக்குத் [யெகோவாவுக்கு, NW] தெரியும்.” (2 பேதுரு 2:9, தி.மொ.) அப்படியானால், விடுதலைக்கு முக்கிய அடிப்படை, தெய்வபக்தியுள்ள ஆளாக இருப்பதேயாகும்.

17இது குறிப்பதென்ன? நோவா சந்தேகமில்லாமல் தெய்வபக்தியுள்ள மனிதனாயிருந்தான். “நோவா உண்மையான கடவுளோடு நடந்தான்.” (ஆதியாகமம் 6:9, NW) வெளிப்படுத்தப்பட்ட யெகோவாவின் சித்தத்துக்குப் பொருந்தின வாழ்க்கைப் போக்கை அவன் பின்தொடர்ந்தான். கடவுளோடு அவன் நெருங்கிய தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தான். பேழையைக் கட்டுவதும் எல்லாப் பறவைகளின் மற்றும் மிருகங்களின் வகைமாதிரிகளைக் கூட்டிச் சேர்ப்பதும் பிரம்மாண்டமான வேலை. காத்திருந்து பார்க்கலாம் என்ற மனப்பான்மையை நோவா ஏற்கவில்லை. அவனுக்கு விசுவாசம் இருந்தது. “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்” (ஆதியாகமம் 6:22; எபிரெயர் 11:7) யெகோவாவின் நீதியுள்ள வழிகளைப் பற்றி ஜனங்களுக்கு நினைப்பூட்டவும் தெய்வபக்தியற்றவர்களுக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றி அவர்களை எச்சரிக்கவும் வேண்டியிருந்தது. “நீதியைப் பிரசங்கித்தவ”னாக நோவா இதையும் செய்தான்.—2 பேதுரு 2:5.

18நோவாவின் மனைவி, அவனுடைய குமாரர்கள், அவர்களுடைய மனைவிமார் ஆகியோரைப் பற்றியதென்ன—இவர்கள் என்ன செய்யவேண்டியிருந்தது? நோவா குடும்பத் தலைவனாக இருந்தபடியால் பைபிள் விவரப் பதிவு அவன்மீது தனிப்பட்ட கவனத்தை ஊன்ற வைக்கிறது. ஆனால் மற்றவர்களும் தெய்வபக்தியுள்ள ஆட்களாக இருந்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு சொல்லலாம்? எசேக்கியேலின் காலத்தில் நோவா இஸ்ரவேலில் வாழ்ந்திருந்தாலும், அவனுடைய பிள்ளைகள் தங்கள் தகப்பனின் நீதியின் ஆதாரத்தின்பேரில் தப்புவிக்கப்படும்படி எதிர்பார்க்க முடியாதென்று காட்டுவதற்கு யெகோவா நோவாவின் பிள்ளைகளின் காரியத்தைப் பின்னால் குறிப்பிட்டார். கீழ்ப்படிவதற்கோ கீழ்ப்படியாமற்போவதற்கோ அவர்கள் போதிய வயதானவர்களாக இருந்தார்கள், ஆகவே யெகோவாவுக்கும் அவருடைய நீதியுள்ள வழிகளுக்கும் தங்கள் முழு பக்தியின் அத்தாட்சியை அவர்கள்தாமே கொடுக்கவேண்டியிருந்தது.—எசேக்கியேல் 14:19, 20.

19வரவிருக்கும் உலக அழிவின் நிச்சயத்தைக் கருதுகையில் பைபிள், அதை நம் மனதில் நெருங்கிய வண்ணம் வைக்கவும், நாமுங்கூட தெய்வபக்தியுள்ள ஆட்களென நிரூபித்து வரவும் நம்மைத் தூண்டி ஊக்குவிக்கிறது. (2 பேதுரு 3:11-13) நோவாவின் சந்ததியாருக்குள், இந்த ஞானமான அறிவுரைக்குச் செவிகொடுத்து “புதிய பூமிக்குள்” தப்பிப்பிழைத்திருக்கப் போகிற ஆட்கள் இன்று பூமியின் எல்லாப் பாகங்களிலும் இருக்கின்றனர்.

[அடிக்குறிப்புகள்]

a The Worship of the Dead (London; 1904) by Colonel J. Garnier, pages 3-8; Life and Work at the Great Pyramid (Edinburgh; 1867), Vol.II, by Professor C. Piazzi Smyth, pages 371-424.

[கேள்விகள்]

1. (எ) முன் எப்போதாவது உலக அழிவு மனிதவர்க்கத்தை எதிர்ப்பட்டதா? (பி) அதைப் பற்றி எச்சரிக்கை கொடுத்தபோது நோவா பரியாசம் பண்ணாததனால் நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

2. கடவுள் ஏன் அந்த உலகத்தை அழித்தார்?

3. நிலைமையை அவ்வளவு மிக மோசமாக்கினது எது?

4. (எ) கடவுள் ஏன் நோவாவுக்குத் தயவு காட்டினார்? (பி) உயிரைப் பாதுகாத்து வைப்பதற்கு என்ன தயாரிப்பு செய்யப்பட்டது?

5. ஜலப்பிரளயம் எவ்வளவு விரிவாயிருந்தது?

6. ஜலப்பிரளயத்துக்குப் பின், அந்த எல்லாத் தண்ணீரும் எங்கு சென்றது?

7, 8. பைபிளைத் தவிர வேறு எதில் ஜலப்பிரளயத்தைப் பற்றிய பதிவு உண்டு?

9. என்ன பழக்கவழக்கங்கள் நோவாவின் ஆண்டுக்குறிப்பேட்டில் “இரண்டாம் மாதத்தின்” சம்பவங்களை நினைவுபடுத்திக் காணச் செய்கின்றன?

10. ஜலப்பிரளயத்தைப் பற்றி பைபிளிலுள்ள விவரப் பதிவு ஏன் மிக அதிக நம்பத்தக்கதும் தனியே ஒவ்வொருவருக்கும் மிக அதிக பயனுள்ளதுமாய் இருக்கிறது?

11. ஏன் அத்தனை பல ஜனங்கள் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்டனர்?

12. அவர்கள் ‘அசட்டையாயிருந்தது’ ஏன் அவ்வளவு வினைமையானது?

13. (எ) முன்னறிவித்தபடி, கிறிஸ்து காணக்கூடாதவராக வந்திருக்கிறாரென சொல்லுகையில் இன்று பல ஆட்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? ஏன்? (பி) அவர்கள் எதை வேண்டுமென்றே மறந்துவிடுவதாக அப்போஸ்தலன் பேதுரு சொல்லுகிறான்?

14. சிருஷ்டிப்பின் காலத்தின்போதும் நோவாவின் நாளிலும் “கடவுளின் வார்த்தை” நிறைவேறினது ஏன் இன்று கருத்தூன்றிய கவனத்துடன் சிந்திக்கும்படி நம்மைச் செய்விக்க வேண்டும்?

15. (எ) 2 பேதுரு 3:7 ஏன் கிரக பூமி எரித்துப் போடப்படுவதை முன்னறிவிக்கிறதில்லை? (பி) அப்படியானால், “அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்”டுள்ள “வானங்களும்” “பூமியும்” யாவை?

16. 2 பேதுரு 2:9-ல் காட்டியிருக்கிறபடி விடுதலைக்கு முக்கிய அடிப்படை என்ன?

17. நோவா தெய்வபக்தியை எப்படி வெளிப்படுத்திக் காட்டினான்?

18. ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த ஒவ்வொருவரும் ஏன் அத்தகைய பக்தியுடையோராய் இருந்திருக்க வேண்டும்?

19. ஆகவே, நாம் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும், எப்படி?