Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபத்துக்கெதிரில் ஞானமாய் நடவடிக்கைஎடுங்கள்

ஆபத்துக்கெதிரில் ஞானமாய் நடவடிக்கைஎடுங்கள்

அதிகாரம்

ஆபத்துக்கெதிரில் ஞானமாய் நடவடிக்கைஎடுங்கள்

ஆபத்து ஏற்படவிருக்கிறதென நம்பத்தக்கச் செய்திமூலம் எச்சரிக்கையில், ஞானமுள்ள ஆட்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றனர். (நீதிமொழிகள் 22:3) ஆனால் எண்ணற்ற ஆயிரக்கணக்கானோர் தங்கள் நம்பிக்கையைத் தவறான இடத்தில் வைத்ததால் வீணாய் அழிந்தனர். உயிர்க்காப்புப் படகுகளுக்குள் இறங்கும்படி எச்சரிக்கைகள் கொடுத்தும் 1912-ல் பிரயாணிகள் டைட்டானிக் பயண நீராவிக் கப்பலிலேயே இருந்து அமிழ்ந்தனர், ஏனெனில் அது அமிழ்ந்துபோக முடியாததென்ற உரிமை பாராட்டலை அவர்கள் நம்பினர். மார்ட்டினிக்குவிலிருந்த பெலீ மலை 1902-ல் எரிமலைக்குரிய சாம்பலையும் கல்லையும் வெளித்தள்ளத் தொடங்கினபோது, அருகில் செய்ன்ட் பியேரியிலிருந்த ஜனங்கள் பயந்தனர், ஆனால் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினரின் தன்னல அக்கறைகள் இடர்நிலையில் இருந்ததால் அவ்விடத்து அரசியலாளர்களும் உள்ளூர் செய்தித்தாள் பதிப்பாசிரியரும் ஜனங்களின் பயங்களைத் தணித்து, அவ்விடத்தைவிட்டுச் செல்ல வேண்டாமென நிறுத்தி வைக்கத் தேடினர். திடீரென்று அந்த மலை வெடித்தது, 30,000 ஆட்கள் மாண்டனர்.

2நம்முடைய நாளில் அதைப் பார்க்கிலும் அதிக அவசரமான எச்சரிக்கை தொனிக்கப்பட்டு வருகிறது—ஏதோ உள்ளூரில் நடக்கப்போகும் பேராபத்தைப் பற்றி அல்ல ஆனால் கடவுளுடைய சர்வலோக அர்மகெதோன் போர் நெருங்கிவருவதைக் குறித்த எச்சரிக்கை. (ஏசாயா 34:1, 2; எரேமியா 25:32, 33) யெகோவாவின் சாட்சிகள் உலகமெங்கும் ஜனங்களின் வீடுகளுக்குத் திரும்பத்திரும்பச் சென்று அவர்களைச் சந்தித்து, அவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன், ஞானமாய் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களை வற்புறுத்தி வேண்டுகின்றனர். தேவைப்படும் நடவடிக்கை எடுக்கவும், அதைத் தாமதியாமல் உடனடியாக எடுக்கவும், நீங்கள் உயிரைப் போதுமான அளவு நேசிக்கிறீர்களா?

“உலகம் ஒழிந்துபோகிறது”

3தப்பிப்பிழைப்பதற்கு நீங்கள் எதிர்பார்ப்பதில் முக்கிய அம்சமாயிருப்பது இவ்வுலகத்தினிடம் உங்கள் மனப்பான்மையாகும். மனிதராக நீங்கள் உயிரோடிருக்கும் வரையில் இவ்வுலகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் அதன் தவறான ஆசைகளில் நீங்கள் பங்குகொள்ள வேண்டியதில்லை, அதன் தெய்வபக்தியற்றச் செயல்களைப் பின்பற்றி நடக்க வேண்டியதில்லை. கடவுளிலும் அவருடைய நோக்கத்திலும் நம்பிக்கை வைப்பதற்குப் பதில் மனிதரிலும் அவர்களுடைய திட்டங்களிலும் உங்கள் நம்பிக்கையை வைப்பதன்மூலம் உலகத்தோடு உங்களை நீங்கள் ஒன்றுபடுத்திக் காட்டவேண்டியதில்லை. ஆனால் நீங்கள் ஒரு தெரிவு செய்யவேண்டும்; இரு பக்கங்களிலும் நீங்கள் இருக்க முடியாது. “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” ஏன்? ஏனெனில், “உலக முழுவதும் பொல்லாங்கனின் வல்லமைக்குள் கிடக்கிறது,” என்று கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது.—யாக்கோபு 4:4; 1 யோவான் 5:19, NW; சங்கீதம் 146:3-5.

4கடவுள் கண்டனம் செய்பவற்றைத் தாங்கள் பற்றிக்கொண்டிருக்கிறார்களென அவர்களுடைய வாழ்க்கைமுறை அத்தாட்சி தரும் ஆட்களை யெகோவா தம்முடைய நீதியுள்ள புதிய ஒழுங்குக்குள் பாதுகாத்து வைக்கமாட்டாரென்பது விளங்கத்தக்கதே. இந்தக் காரியங்களில் சில யாவை? இவற்றில் பல இந்த உலகம் ஆராயப் புகாமல் அந்தச் சமயத்துக்கு வெறுமென ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் மனப்பான்மைகளுமாகும். ஆனால் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைத்திருக்க நாம் விரும்பினால், அப்பொழுது, மற்றவர்கள் செய்வதையும் நினைப்பதையும் பொருட்படுத்தாமல், வேசிக்கள்ளர், விபசாரக்காரர், ஓரினப்புணர்ச்சிக்காரர், ஒழுக்கக் கேடான அசுத்தத்திலும் காமவிகாரத்திலும் ஈடுபடுவோர் தப்பிப்பிழைப்போருக்குள் இரார் என்று பைபிளில் கொடுத்திருக்கும் எச்சரிக்கைக்குச் செவிகொடுப்போம். மற்றவர்கள் பொய்ப் பேசவும் திருடவும் எவ்வளவு அடிக்கடி நாடினாலும் கவலையில்லை, அத்தகைய வாழ்க்கை முறையை நாம் ஒதுக்கித் தள்ளுவோம். மாயமந்திரஞ் சார்ந்த பழக்கவழக்கங்கள் பொதுமக்கள் விருப்பத்துக்குரியவையாயிருந்தாலும், நாம் அவற்றைத் தவிர்ப்போம். மற்றவர்கள் ஒருவேளை பொறாமை கொள்ளலாம், சண்டையைக் கிளப்பிவிடலாம், கோப வெறிக்கு உட்படலாம், அல்லது ஏமாற்ற மனசங்கடங்களிலிருந்துத் தப்பிக் கொள்ள முயன்று போதைப் பொருட்களை அல்லது மட்டுக்குமீறி சாராயச் சத்து மதுபானங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் நாம் அவர்கள் மாதிரியைப் பின்பற்றமாட்டோம். இந்தக் காரியங்களில் நம் மனம் செல்ல விட்டிருந்தால், மாறவேண்டிய பொறுப்பை ஏற்போம். சென்ற காலத்தில் இவற்றில் சில “இயல்பானவை”யென நமக்குத் தோன்றியிருந்தாலும் நாம் அவற்றை முற்றிலும் விட்டுவிடுவோம். ஏன்? ஏனென்றால் நாம் உண்மையில் கடவுளை நேசிக்கிறோம், உயிரை நேசிக்கிறோம், மேலும், “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை,” என்று கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது.—கலாத்தியர் 5:19-21; எபேசியர் 5:3-7; 1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1; வெளிப்படுத்துதல் 22:15.

5மகிழ்ச்சியோடு என்றென்றும் வாழும் வாய்ப்பு நமக்கு முக்கியமென்றால், உயிரை அளிப்பவராகிய யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவது எவ்வாறென நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (அப்போஸ்தலர் 17:24-28; வெளிப்படுத்துதல் 4:11) அவருடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொடர்ந்து பொருத்திப் பிரயோகித்து முன்னேறிக்கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்து வருகையில், சீக்கிரத்தில் நம்மையும் மற்ற ஆட்களையும் பற்றி, சொந்த உடைமைகளையும் தகுதிகளையும் பற்றி நாம் கொண்டுள்ள மனப்பான்மையின்பேரில் கவனமான பார்வை செலுத்தி, இது, கடவுளுக்கு முன்பாக நம்முடைய நிலைநிற்கையை எவ்வாறு பாதிக்கிறதென்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள ஆட்கள், தங்களைப் பற்றியும், தங்கள் கோத்திரம் அல்லது குலம் அல்லது தேசத்தைப் பற்றியும் பெருமையான எண்ணங் கொண்டிருக்கலாம், ஆனால் நாமோ பின்வருமாறு சொல்லும் வேதவசனத்தைக் கவனத்துடன் சிந்திப்போம்: “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—யாக்கோபு 4:6; செப்பனியா 2:2, 3; சங்கீதம் 149:4.

6பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தால் தூண்டப்பட்ட ஆசைகளுக்கு அடிமைப்படுத்தப்பட மற்றவர்கள் தங்களை அனுமதிக்கிறபோதிலும் அல்லது தாங்கள் முதன்மை நிலையில் இருக்க வேண்டுமென்ற ஆசையே அவர்கள் செயல்நோக்கமாயிருந்தாலும், நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையை 1 யோவான் 2:15-17-ல் சொல்லியிருப்பதைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்போம், அங்கே சொல்லியிருப்பதாவது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படிசெய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” நாம் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அவ்வாறு செய்வதற்கு இதுவே சமயம்.

7இந்த உலகமும் அதன் வாழ்க்கை முறையும் என்றென்றும் தொடர்ந்து சென்றுகொண்டிராது. அது “அமிழ்ந்துபோக முடியாதது” அல்ல. உலகப் போக்குள்ள மனிதர் தங்களைப் பின்பற்றுவோரை விடாமல் பற்றி வைத்திருக்கவும், தங்கள் முயற்சிகள் இவ்வுலகத்தை முன்னேற்றுவிக்க முடியுமென அவர்களை உணர வைக்கவும் முயற்சி செய்யலாம். ஆனால் வரவிருக்கும் பேராபத்தில் அழியாமல் பாதுகாத்து வைக்கப்படுவதற்கு ஒரே வழி கடவுளுடைய எச்சரிக்கை செய்திக்குச் செவிகொடுப்பதேயாகும். இந்தக் காரியத்தில் தீர்க்கதரிசி யோனாவின் நாட்களில் நினிவே பட்டணத்தார் வைத்த முன்மாதிரியை நாம் கவனமாய் இருதயத்தில் ஏற்றுப் பின்பற்றுவது நல்லது.

“யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்”

8பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில், அசீரியாவின் தலைநகராகிய நினிவேயின் ஜனங்களிடம் செல்லவும், அவர்களுடைய பொல்லாங்கினிமித்தம் நினிவே கவிழ்க்கப்படப் போகிறதென்று வெளிப்படையாய் அறிவிக்கவும், யெகோவா யோனாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்னும் 40 நாட்களில் அவர்கள் அழிவார்களென யோனா எச்சரித்தபோது, அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? பரியாசஞ்செய்வதற்குப் பதில், அவர்கள் “தேவனை விசுவாசித்து, உபவாசஞ் செய்யும்படிக் கூறினார்கள்; . . . இரட்டுடுத்திக் கொண்டார்கள்.” அரசன்தானேயும் அவர்களோடு சேர்ந்து உபவாசித்து, கடவுளை நோக்கி ஊக்கமாய் மன்றாடவும் தங்கள் பொல்லாத வழியையும் தங்கள் வன்முறைச் செயல்களையும் விட்டுத் திரும்பும்படியும் துரிதப்படுத்தினான், அவன் பின்வருமாறு எண்ணிப் பார்த்தான்: “யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் . . . தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார்.” அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினதனால், யெகோவா அவர்களுக்கு இரக்கங் காண்பித்தார் அவர்கள் உயிர்களை அழிக்காமல் விட்டார்.—யோனா 3:2-10.

9பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த விசுவாசியாத யூதருக்குக் கண்டனமாக, இயேசு இந்தச் சரித்திரப் பூர்வ நிகழ்ச்சிக்குக் கவனத்தை இழுத்து, பின்வருமாறு கூறினார்: “யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத் தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவார்கள்.”—மத்தேயு 12:41.

10நம்முடைய நாளைப் பற்றியதென்ன? இத்தகைய மனந்திரும்புதலை எவராவது காட்டுகின்றனரா? ஆம்; நினிவே பட்டணத்தாரைப்போல், பைபிளின் கடவுளை வணங்கினதாக ஒருபோதும் உரிமை பாராட்டிராமல், ஆனால் இப்பொழுது யெகோவாவின் எச்சரிக்கைக்குரிய செய்திக்குச் செவிகொடுக்கும் பல ஆயிரக்கணக்கானோர் உலகமெங்கும் இருக்கிறார்கள். இந்த உலகத்தின்மீது அழிவு வருவதன் காரணத்தை அவர்கள் கற்றறிகையில், கடவுளுடைய இரக்கத்தைத் தேடுகிறார்கள். தங்களுடைய முந்தின வாழ்க்கை முறையைக் குறித்து அவர்களுடைய மனமும் இருதயமும் உண்மையாய் மாறியிருக்கிறது, இப்பொழுது அவர்கள் “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்ய” தங்களைக் கருத்துடன் ஈடுபடுத்துகிறார்கள். (அப்போஸ்தலர் 26:20; ரோமர் 2:4-ஐயும் பாருங்கள்.) அவர்களில் ஒருவராயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், தாமதியாதேயுங்கள்.

சமாதானத்துக்காக உடனடியாய் வேண்டிக்கொள்ளுங்கள்

11யோசுவாவின் நாட்களில் கிபியோனியர் தங்கள் உயிர் தப்பவிடப்படும்படி ஞானமாய் நடவடிக்கை எடுத்தார்கள். அவர்கள் கானானியர், அவர்கள் வாழ்க்கைமுறை ஒழுக்கக்கேடுள்ளதும் பொருளாசைக் கொண்டதும், விக்கிரகாராதனைக்கும் பேய்த்தனத்துக்குமுரியதாகவும் இருந்தது.. அவர்கள் அழிக்கப்படவேண்டுமென யெகோவா தீர்ப்பு செய்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னால் யெகோவா இஸ்ரவேலை எகிப்திலிருந்து விடுவித்த முறையையும், யோர்தான் நதிக்குக் கிழக்கேயிருந்த வல்லமைமிக்க எமோரிய அரசர்கள் இஸ்ரவேலை எதிர்த்து நிற்க முடியாமல் போனதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். மதில் சுவர்களைத் தகர்க்கும் இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தாமலே, எரிகோவின் மிகக் கனத்த மதில் சுவர்கள் இஸ்ரவேலருக்கு முன் தரைமட்டமாய் நொறுங்கி விழுந்ததையும் ஆயி பட்டணம் பாழாய்க் கிடக்கும் மண்மேடாக்கப்பட்டதையும் எல்லாரும் அறிந்திருந்தார்கள். (யோசுவா 9:3, 9, 10) கிபியோன் பட்டணத்து குடிமக்கள் உயிர்வாழ விரும்பினார்கள், ஆனால் இஸ்ரவேலின் கடவுளுக்கு எதிரான போரில் தாங்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாதென உணர்ந்தார்கள். ஏதாவது விரைவில் செய்யப்படவேண்டும். என்ன செய்வது? இஸ்ரவேலருடன் உடன்படிக்கை செய்து கொள்வதாக அவர்கள் வற்புறுத்த முடியாது, ஆனால் ஓர் உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்ள முயற்சியாவது தாங்கள் செய்ய வேண்டுமென எண்ணினார்கள். எப்படி?

12அவர்கள் புத்திநுட்பமாய்ச் செயல்பட்டு, நெடுந்தொலைவிலிருந்து பயணப்பட்டு வந்ததுபோல் தங்கள் தோற்றம் குறிப்பிட்ட மனிதரை யோசுவாவிடம் அனுப்பினார்கள். இவர்கள் யோசுவாவை அணுகி, தாங்கள் வெகுதூர தேசத்திலிருந்து வந்தார்களெனவும், யெகோவா செய்த மகத்தான காரியங்களைத் தாங்கள் கேள்விப்பட்டு, தங்கள் ஜனங்களின் பிரதிநிதிகளாய்த் தங்களை வேலையாட்களாக அளிக்கவும் தங்களோடு ஓர் உடன்படிக்கை செய்யும்படி வேண்டிக்கொள்ளவும் வந்தார்களெனவும் கூறினார்கள். யோசுவாவும் இஸ்ரவேலின் பிரபுக்களும் ஒப்புக்கொண்டார்கள். பின்னால் அவர்களுடைய சூழ்ச்சி தெரியவந்தபோது, கிபியோனியர், தங்கள் உயிருக்காகப் பயந்து அவ்வாறு செய்ததாக மனத்தாழ்மையுடன் அறிக்கையிட்டு, தங்களுக்கு அவர்கள் கட்டளையிடும் எதையும் செய்ய மனங்கொண்டிருப்பதைக் காண்பித்தனர். (யோசுவா 9:4-25) யெகோவா இந்த முழு காரியத்தையும் கவனித்திருந்தார். அவர் ஏமாற்றப்படவில்லை. முன்னால் மோவாபியர் செய்ததுபோல் தம்முடைய ஜனத்தைக் கெடுக்க அவர்கள் முயற்சி செய்யவில்லையென அவர் காண முடிந்தது, மேலும் உயிர்வாழ்ந்திருப்பதற்கு அவர்களுக்கிருந்த ஊக்கமான ஆசையை அவர் மதித்தார். ஆகவே விறகு சேகரிப்போராயும் தண்ணீர் எடுப்போராயும், யெகோவாவின் வணக்கத்தை ஆதரித்து, பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தில் லேவியருக்கடியில் வேலைசெய்வதற்கு அவர்களை நியமிக்கும்படி அவர் அனுமதித்தார். இத்தகைய சேவைக்கு ஏற்கத் தகுந்தவர்களாயிருக்க, நிச்சயமாகவே, அவர்கள் தங்கள் முந்தின அசுத்தப் பழக்கவழக்கச் செயல்களை விட்டு விலக வேண்டும்.—யோசுவா 9:27; லேவியராகமம் 18:26-30.

13“கடைசி நாட்களின்” முடிவுக்கருகில் நாம் வாழும் இந்த உண்மையைக் கருதுகையில், தப்பிப்பிழைத்திருக்க விரும்பும் எல்லா ஆட்களும், தாமதியாமலும், முழு மனப்பூர்வமாயும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது. யெகோவா அளித்திருக்கும் மரணாக்கினைத் தீர்ப்பை இன்று நிறைவேற்றப் போகிறவரான இயேசு கிறிஸ்துவை, யோசுவாவை ஏமாற்றினதுபோல் ஏமாற்றமுடியாது. இத்தகைய ஆட்கள் தாங்கள் கொல்லப்படாமல், உயிர்த்தப்ப விடப்படுவதற்கு அவருடன் ஓர் ஏற்பாட்டுக்குள் பிரவேசிக்கக்கூடிய ஒரே வழி, உண்மையான கடவுளாக யெகோவாவில் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை அவர்கள் யாவரறிய அறிவிப்பதேயாகும். (அப்போஸ்தலர் 2:17-21-ஐ ஓத்துப் பாருங்கள்.) மேலும் இயேசு கிறிஸ்துவையும் கடவுள் அவருக்கு நியமித்துள்ள பாகங்களில் அவர்கள் ஏற்று, கண்டனம் செய்யப்பட்டுள்ள இவ்வுலகத்தின் வாழ்க்கைமுறையை நேசியாத ஆட்களாக அவர்கள் அதன்பின் வாழவேண்டும். பின்பு அவர்கள் கடவுளுடைய மனத்தாழ்மையுள்ள ஊழியராகி, அவருடைய ஜனங்களின் சபையோடு சேர்ந்தக் கூட்டுறவில் அவருக்குப் பரிசுத்த சேவை செய்துகொண்டிருக்க வேண்டும்.—யோவான் 17:16; வெளிப்படுத்துதல் 7:14, 15.

14கிபியோனியர் யெகோவாவின் ஜனத்தோடு தங்கள் நிலைநிற்கையை ஏற்றப்பின் வெகு சீக்கிரத்திலேயே, பெரும் நெருக்கடியின்கீழ் வந்தனர். கிபியோனியரை, இஸ்ரவேலுக்கு எதிர்ப்பில் திரும்பத் தங்கள் சார்பில் கொண்டுவரும்படி வற்புறுத்திச் செய்விக்க எமோரியரின் ஐந்து அரசர்கள் கிபியோனை முற்றுகையிட்டனர். கிபியோனியர் உதவி செய்யும்படி கேட்டு யோசுவாவுக்கு ஓர் அவசர வேண்டுதலை அனுப்பினர், அவர்கள் அனுபவித்த விடுதலை சரித்திரம் முழுவதிலுமே மிக அதிகக் காட்சி பகட்டான ஒன்றாகும். யெகோவா சத்துருக்களைக் கலங்கடித்தார், வானத்திலிருந்து கல்மழைக் கற்களை அவர்கள்மேல் எறிந்தார், இஸ்ரவேலர் சத்துருக்களை முற்றிலும் முறியடிக்கும் வரையில் பகல் வெளிச்சம் அற்புதமாய் நீடித்திருக்கச் செய்தார். (யோசுவா 10:1-14) கிபியோனியர் அவ்வாறு விடுவித்துக் காக்கப்பட்டது, அர்மகெதோனின் சர்வலோகப் போரில் உண்மையான கடவுளை வணங்கும் திரள் கூட்டத்தாரின், அதைப் பார்க்கிலும் மிக அதிசயமான விடுவிப்புக்குத் தீர்க்கதரிசனமாயிருந்தது. இந்த விடுவிப்பிலிருந்து நன்மை அடைவதற்கான வாய்ப்பு, எல்லாத் தேசத்தின் ஜனங்களுக்கும் திறந்திருக்கிறது, அவர்கள் இப்பொழுதே ஞானமாய் நடவடிக்கை எடுத்தால் அவ்வாறு நன்மை அடைவார்கள். இந்த வாய்ப்பை உங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?—வெளிப்படுத்துதல் 7:9, 10.

[கேள்விகள்]

1. பின்வரும் சந்தர்ப்பங்களில் ஜனங்கள் ஏன் அவசியமில்லாமல் அழிவுக்கு ஆளாயினர்: (எ) டைட்டானிக் அமிழ்ந்தபோது? (பி) பெலீ மலை வெடித்தபோது?

2. (எ) நம்முடைய நாளில் என்ன அவசரமான எச்சரிக்கை தொனிக்கப்பட்டு வருகிறது? (பி) நிலைமை ஏன் அவசர கவனிப்புக்குரியது?

3. இவ்வுலகத்தினிடம் நாம் கொண்டுள்ள மனப்பான்மை ஏன் தப்பிப்பிழைப்பதற்கான நம்முடைய எதிர்பார்ப்பைப் பாதிக்கும்?

4. (எ) உங்கள் பைபிளைப் பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ்வதை மக்களுக்குத் தடை செய்யும் பழக்கச் செயல்களையும் மனப்பான்மைகளையும் விளக்குங்கள். (பி) இந்தக் காரியங்களில் தங்கள் மனம் செல்ல விட்டிருந்த எவரும் ஏன் இவற்றை விரைவில் விட்டு விலகவேண்டும்?

5. (எ) உயிர் நமக்கு மிக அருமையானதென்றால், நாம் என்ன செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்? (பி) இந்தப் பத்தியின் முடிவில் கொடுத்துள்ள வேதவசனங்களில் என்ன சிறந்த பண்புகள் குறிப்பிட்டிருக்கின்றன? அவை எவ்வளவு முக்கியமானவை? இவற்றை நாம் எப்படி நம்மில் வளர்க்கலாம்?

6, 7. 1 யோவான் 2:15-17-ன் நோக்குநிலையைக் கொண்டு நம்முடைய சொந்த வாழ்க்கையை நாம் ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

8. யோனா நினிவே பட்டணத்தாருக்குக் கடவுளுடைய எச்சரிக்கையைக் கொடுத்தபோது, அவர்கள் எவ்வாறு ஞானத்தைக் காண்பித்தனர், அதன் பலன்களென்ன?

9, 10. (எ) என்ன வகையில் நினிவே பட்டணத்தார் பார்த்துப் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாயிருந்தனர் என்று இயேசு சொன்னார்? (பி) இன்று யார் அந்த நினிவே பட்டணத்தாரைப்போல் இருக்கின்றனர்?

11. (எ) கிபியோனியரின் முந்திய வாழ்க்கைச் சூழ்நிலை என்ன? (பி) அவர்கள் ஏன் இஸ்ரவேலரோடு சமாதான உறவை வேண்டிக்கொண்டனர்?

12. (எ) அவர்கள் பயன்படுத்தின முறையையும் பொருட்படுத்தாமல் கிபியோனியர் ஏன் அழிக்காமல் விடப்பட்டனர்? (பி) அவர்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது? அவர்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது?

13. (எ) கிபியோனியர் உட்பட்ட தீர்க்கதரிசன நாடகத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்? (பி) பெரிய யோசுவா தங்களைக் கொல்லாமல் உயிர்த்தப்பவிட வேண்டுமென்றால் இன்று மக்கள் என்ன செய்ய வேண்டும்?

14. யெகோவா கிபியோனியரைச் சத்துரு சேனைகளிடமிருந்து விடுவித்தது நமக்கு ஏன் தனிப்பட கவனிப்பதற்குரிய பொருளைக் கொண்டிருக்கிறது?