Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறங்குமுகக் கணிப்பு அதன் பூஜ்ய மணிநேரத்தை நெருங்குகிறது!

இறங்குமுகக் கணிப்பு அதன் பூஜ்ய மணிநேரத்தை நெருங்குகிறது!

அதிகாரம் 24

இறங்குமுகக் கணிப்பு அதன் பூஜ்ய மணிநேரத்தை நெருங்குகிறது!

1947-ல், விஞ்ஞானிகள் “தீர்ப்புநாள் கடிகாரம்” ஒன்றை உருவாக்கினர். தி புல்லடின் ஆஃப் தி அடாமிக் சயின்டிஸ்ட்ஸ் என்ற ஆங்கில புத்தகத்தின் அட்டையில் இது காணப்படுகிறது, இந்த உலகம் அணுசக்தியின் படு அழிவுக்கு எவ்வளவு அபாயகரமாய் நெருங்கியிருக்கிறதென அவர்கள் நம்புவதை நடிப்பித்துக் காட்ட அது பயன்படுத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் அந்தக் ‘கடிகாரத்தின்’ முள்கள் நகர்த்தி வைக்கப்படுகின்றன—சர்வதேச நிலைமை எவ்வளவு அபாயத்தில் இருக்கிறதென கூர்ந்து கவனித்ததைச் சார்ந்து, சில சமயங்களில் முன்னும், சில சமயங்களில் பின்னும் நகர்த்தப்படுகின்றன. 1984-ன் தொடக்கத்தில் அந்த முள்கள் நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருக்கும் நிலைக்கு முன்னால் தள்ளி வைக்கப்பட்டன. அவை நள்ளிரவை எட்டினால், மிகவும் பயந்த அணுசக்தி போர் தொடங்கிவிட்டதென குறிக்கும்.

2 ஆனால் ஏறக்குறைய 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் யெகோவா தேவன் ஓர் இறங்குமுகக் கணிப்பைத் தொடங்கினார், அது ஒருபோதும் பின் நகராமல் தடுக்க முடியாதபடி முன்னோக்கியே நகர்ந்து வந்திருக்கிறது. இந்த இறங்குமுகக் கணிப்பில் பூஜ்ய மணிநேரத்தையே கடவுள் தம்முடைய அரசாட்சியின் நேர்மையை மெய்ப்பித்துக் காட்டுவதற்குக் குறிப்பிட்டு வைத்திருக்கிறார், இதன்பேரிலேயே சர்வலோகம் முழுவதன் சமாதானமும் ஆரோக்கியமும் சார்ந்திருக்கிறது. இதன் முன்னேற்றத்தைத் தெளிவாக உணர்ந்துகொள்ள நமக்கு உதவிசெய்வதற்கு அவர் தம்முடைய நோக்கத்தை வெளிப்படையாய்க் கூறி காலக்குறிக்காட்டுகளை அளித்திருக்கிறார். ஏதேனில் நடந்த கலகத்தை உடனடியாகப் பின் தொடர்ந்து, யெகோவா, தம்முடைய “ஸ்திரீ”யிலிருந்து, அதாவது, உண்மைத்தவறாத ஆவி சிருஷ்டிகளாலாகிய தம்முடைய அமைப்பிலிருந்து ஒரு “வித்து”வைப் பிறப்பிப்பாரெனவும், அந்த “வித்து,” “பழைய பாம்பாகிய” சாத்தானைத் தலையில் நொறுக்கி, கடைசியில் என்றுமிராதபடி அவனை நசுக்கிப் போடுவாரெனவும் வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:9; ரோமர் 16:20) நீதியை நேசிப்பவர்கள் அந்தக் காலத்துக்காக எவ்வளவு ஆவலாய்க் காத்திருக்கிறார்கள்!

3 வெகு காலத்துக்கு முன்பே முன்னறிவித்திருந்த, கடவுள் குறித்தக்காலத்தில், வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” ஆகிய மேசியா, கடவுளுடைய சொந்தக் குமாரன், பூமியில் தோன்றினார். சாத்தானின் அறைகூவலான சவாலுக்கு எதிர் முழக்கப் பதிலாக, இயேசு மரணம் வரையிலும் பரிபூரண தெய்வ பக்தியைக் காத்தார். மேலும் பாவமற்ற மனிதனாக மரித்தத் தம்முடைய மரணத்தால் ஆதாமின் சந்ததியைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கு வழியையும் அளித்தார். இவ்வாறு முடிவில் ‘பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி’ ஆதாரம் போடப்பட்டது.—1 யோவான் 3:8; தானியேல் 9:25; கலாத்தியர் 4:4, 5.

4 இயேசு பூமியில் இருக்கையிலேயே, தம்முடைய பரலோக ராஜ்யத்தில் தம்மோடு உடன் சுதந்தரவாளிகளாகப் போகும் ஆண்களையும் பெண்களையும் கூட்டிச் சேர்க்கத் தொடங்கினார். தெரிந்துகொள்ளப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, உண்மைத் தவறாதவர்களான 1,44,000 பேர்கள் மாத்திரமே அதில் அடங்கியிருக்கச் செய்யப்படுவர். இந்த வகுப்பினரின் கடைசி உறுப்பினரைக் கூட்டிச் சேர்ப்பதற்கான காலம் வந்தபோது, பரலோகத்தில் இயேசுவுக்குத் தானே “ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும்” அளிக்கப்பட்டன. (தானியேல் 7:13, 14, தி.மொ.) குறிக்கப்பட்ட சரியான காலத்தில், 1914-ல், ஆளும் அரசராக அவர் நடவடிக்கை எடுத்தார். சாத்தானும் அவனுடைய பேய்களும் காலதாமதமின்றி உடனடியாகப் பரலோகத்திலிருந்து வெளியில் தள்ளப்பட்டனர், இந்தச் செயல் அரசாங்கத்தின் இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தியது. (வெளிப்படுத்துதல் 12:7-12) இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறை அதன் கடைசி நாட்களுக்குள் பிரவேசித்துவிட்டது.

5 ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இறங்கிக் கொண்டிருக்கும் இந்த இறங்குமுகக் கணிப்பு இப்பொழுது அதன் பூஜ்ய மணிநேரத்தை நெருங்குகிறது. அது அவ்வளவு நெருங்க இருப்பதால், 1914-ல் உயிரோடிருந்து, இப்பொழுது வெகுவாய் வயது முதிர்ந்துள்ள ஆட்கள், யெகோவாவின் அரசாட்சி சரியென குறித்துக் காட்டும் சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் நடைபெறுமுன் காட்சியை விட்டு எல்லாரும் கடந்துபோவதில்லை.—மாற்கு 13:30.

6 அந்த மகா நாளின் சம்பவங்களை நேரில் காண கடவுளின் உண்மைத் தவறாத மற்ற ஊழியரும் இருப்பார்கள். முக்கியமாய், 1935-ல் “திரள் கூட்டம்” யாவரென தெளிவாய் விளங்கி அடையாளங் கண்டுகொள்ளப்பட்டது முதற்கொண்டு இவர்கள் பெரும் எண்ணிக்கைகளில் தங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். முதன்முதல் நூற்றுக்கணக்கில் இருந்தனர், பின்பு ஆயிரக்கணக்காயினர், பின்னால் லட்சக்கணக்காயினர், இப்பொழுது பத்து லட்சக் கணக்கில் பூகோளமெங்கும் பரவியிருக்கின்றனர். இந்த வகுப்பார் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளிவருவதாக,’ அதைத் தப்பிப் பிழைப்போராயிருந்து, ஒருபோதும் மரிக்க வேண்டியதிராமல் கடவுளுடைய புதிய ஒழுங்குக்குள் தொடர்ந்து வாழ்பவராகக் கடவுளுடைய தவறாத வார்த்தை குறித்துக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; யோவான் 11:26) இந்த வகுப்பாரின் முற்பட்ட உறுப்பினர் இப்பொழுது தங்கள் 60 அல்லது 70 அல்லது அதற்கும் முதிய வயதில் இருக்கின்றனர். இந்த வகுப்பாரைக் கூட்டிச்சேர்த்தல் வெகு சீக்கிரம் தொடங்க யெகோவா அனுமதிக்கவில்லை. இந்தத் “திரள் கூட்டத்தார்,” அவர்களின் மிக முற்பட்டகால உறுப்பினர் பலர் உட்பட, “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைப்பார்கள்.

7 இந்தத் “திரள் கூட்டத்தாரின்” நம்பிக்கை மனிதவர்க்கம் முழுவதையும் அழிக்கும் எந்த அணுசக்தி படுகொலையாலும் குலைவிக்கப்படாது. நல்லக் காரணத்துடனேயே அவர்கள் நல்நம்பிக்கையுடனும் தைரியமாயும் இருக்கிறார்கள். “கடைசி நாட்களின்” சம்பவங்கள் படிப்படியாய் நடைபெற்றுக்கொண்டிருக்க, அவர்கள் அவற்றைக் கூர்ந்த முன்னறிவுடன் எதிர்பார்த்து உன்னிப்பாய்க் கவனித்து, இயேசுவின் பின்வரும் அறிவுரையைத் தங்களுக்குப் பொருத்திப் பிரயோகிக்கின்றனர்: “உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” (லூக்கா 21:28) ஆனால் அந்த விடுதலைக்கு முன்னால் மீந்திருக்கும் காலத்தின்போது, உலகத்தை அதிரச் செய்யும் உட்பொருளுள்ள மேலுமான சம்பவங்கள் நடைபெறவிருக்கின்றன.

இன்னும் முன்னாலிருக்கும் சம்பவங்கள்

8 இவற்றில் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 5:3) இந்தப் பொது அறிவிப்பு எவ்வகையில் வருமென்பதைக் காத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் இந்த உலகம் “கடைசி நாட்களுக்குள்” பிரவேசித்தவுடனே இது நடைபெறுவதற்கு ஆயத்தமாகியது கவனிக்கத்தக்கது. 1919-ல் சர்வதேச சங்கத்தின் நோக்கம், “சமாதானமும் பாதுகாப்பும்” அடைவதற்கென அறிவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உரிமைப் பத்திரம் மறுபடியுமாக “சமாதானமும் பாதுகாப்பும்” அந்தச் சர்வதேசக் குழுவின் முதன்மை இலக்கென தெளிவுறுத்தியது. இந்த இலக்கை அது அடையவில்லை. எனினும், சமீப ஆண்டுகளில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலுமுள்ள மக்கள், அணுசக்தி போர்த்தளவாடங்களின் உற்பத்தி, சோதனை, விரிவாக்குதல் ஆகிய எல்லாவற்றையும் முற்றிலும் நிறுத்தும்படி உலக அதிபதிகளைத் துரிதப்படுத்திப் பல நாடுகளில் செய்யப்பட்ட மா பெரும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கின்றனர். உலக சமாதானத்தைப் பற்றிய உறுதி அவர்களுக்கு வேண்டியதாயிருக்கிறது, அதற்கெதிரானது என்ன கொண்டுவருமென அவர்கள் நம்பும் காரியங்களால் கடும் திகிலுற்றிருக்கின்றனர்.

9 இதன் விளைவாகவோ அல்லது வேறு ஏதாவது முயற்சி தொடங்குவதாலோ, மனித அதிபதிகள், “சமாதானமும் பாதுகாப்பும்!” என்ற மிகத் தனிப்பட கவனிப்பதற்குரிய பொது அறிவிப்பைச் சீக்கிரத்தில் செய்வார்கள். அது வெறும் மேல்பூச்சு பகட்டாகவே இருக்கும். ஆனால் அதை ஆதரிப்பவர்கள், கடவுளுடைய ராஜ்யம் தேவையிராமல், தங்கள் சொந்த வழிவகைகளினால் தங்கள் இலக்கை அடைந்துவிட்டனரென அறிவிப்பர். யெகோவாவின் அரசாட்சியை இவ்வாறு ஏற்க மறுத்து அவமதிக்கையில், “அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.”

10 நிகழ்ச்சிகள் விரைவாய் நடந்தேறும். பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன், அதன் முன்னாள் அரசியல் காதலர்களால் பாழாக்கப்படும். பூகோளத்தைச் சுற்றிலும் பகையையும், இரத்தஞ் சிந்துதலையும் போரையும் தூண்டிவிட்ட அமைதிகலைக்கும் இயக்கம் மதமேயென அதிபதிகள் ஏற்கெனவே மிகக் கூர்ந்த வண்ணம் உணருகின்றனர். மதகுருக்கள் தொல்லைப்படுத்துவதில் அரசியலாளர்கள் சலிப்புற்றுப் போயிருக்கின்றனர். உலகத்தின் பெரும் பாகத்தில், வணக்கத்துக்குரிய இடங்களில் மக்கள் ஆஜராவது வெகுவாய்க் குறைந்து விட்டது. கடவுள் நம்பிக்கையற்ற மனப்பான்மை வெளிப்படையாகவோ மறைவாகவோ பொதுமக்களின் எண்ணத்தை ஏவுகிறது. மேலும், ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உறுப்பினரான பல நாடுகள் பலத்த மத எதிர்ப்பு அரசியல் போக்குகளைக் கொண்டவை. நியாயத்தீர்ப்பு நிறைவேற்றுவதற்கு யெகோவாதாமே குறித்துள்ள நேரம் வருகையில், அரசியல் அதிபதிகள், விரைவில் முழு சர்வதேச ஒன்றுபட்ட நடவடிக்கையில் மகா பாபிலோனுக்கு எதிராகத் திரும்பி, அதை முற்றிலும் அழித்துப்போடும்படி அவர் அவர்களை அனுமதிப்பார்.—வெளிப்படுத்துதல் 17:15, 16; 19:1, 2.

11 இந்த வெற்றியால் வெறியூட்டப்பட்டும் தங்கள் காணக்கூடாத அதிபதியாகிய பிசாசான சாத்தானால் தூண்டி ஏவப்பட்டும் இந்தத் தேசங்கள் பின்பு, பூமியிலுள்ள யெகோவாவின் சொந்த உண்மையுள்ள சாட்சிகளைத் தாக்குவார்கள். (எசேக்கியேல் 38:14-16) இவர்கள் அரசியலில் தலையிடாத அல்லது போருக்கு உத்தரவாதமில்லாத, சட்டத்துக்கடங்கி நடக்கும் சமாதானமுள்ள மக்கள் என்ற உண்மைக்கு எந்த எண்ணமும் கொடுக்கப்படாது. முழு ஆதரவையும் கொடுக்கும்படி, அரசியல் ஒழுங்குமுறையை வணங்கும்படி தேசங்கள் வற்புறுத்திக் கேட்கும். ஆனால் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை நொறுக்கிப்போடும்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கையில், கடவுள் தம்முடைய உண்மைத்தவறா ஊழியரின் சார்பில் முடிவான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பார். பரலோகத்தின் சேனைகள், சாத்தானின் காணக்கூடிய அமைப்பின் எந்தத் தடமுமில்லாமல் அதை முற்றிலும் அறவே அழித்துப் போடுவார்கள், அதைப் பற்றிக்கொண்டிருக்கும் யாவரையும் அழித்துப்போடுவார்கள். பின்பு, பிரதான சத்துருவாகிய பிசாசான சாத்தான்தானேயும் பிடிக்கப்பட்டு, ஆயிர ஆண்டுகளுக்கு முற்றிலும் செயலற்றிருக்கச் செய்யப்படுவான், அந்தச் சமயத்தின்போது அவனுடைய இழிவான தீய செல்வாக்கின் எல்லாப் பாதிப்புகளும் முற்றிலும் நீக்கப்பட்டு, பூமி பரதீஸாக மாற்றப்படும். அதற்குப் பின்பு, திரும்ப முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்ட மனிதவர்க்கத்தைப் பரீட்சிக்கும்படி, சாத்தான் குறுகிய காலத்துக்கு விடுதலைசெய்யப்படுவான். அவனைப் பின்பற்றத் தெரிந்துகொள்ளும் எல்லா மனிதரும், சாத்தானுடனும் அவனுடைய பேய்களுடனுங்கூட முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:19-21; 20:1-3, 7-10.

மிகச் சிறந்த “புதிய பூமிக்குள்” வரவேற்பு

12 தற்போதைய உலக முடிவின் திகிலூட்டும் நிகழ்ச்சிகள் தங்களுக்குப் பின்சென்றுவிட்டு, கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி தங்களுக்கு முன்னாலிருக்க, பூமியில் தப்பிப்பிழைத்திருக்கும் தயவுகூரப்பட்டவர்கள், கடவுளுக்கு நன்றிசெலுத்துதலில் தங்கள் குரல்களை எழுப்புகையில் உச்ச அளவில் நன்றி உணர்ச்சியால் நிரப்பப்பட்டிருப்பர். இருதய ஆழத்தில் உணரும் உணர்ச்சியால் “திரள் கூட்டத்தார்” உரத்தக் குரலில் பின்வருமாறு ஆரவார சத்தமிடுவர்: “இரட்சிப்புக்கு, சிங்காசனத்தில் வீற்றிருக்கிற எங்கள் கடவுளுக்கும் [யெகோவாவுக்கும்], ஆட்டுக்குட்டியானவருக்கும் [இயேசு கிறிஸ்துவுக்கும்], நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்.” (NW) கடவுளுடைய உண்மைத்தவறா பரலோக அமைப்பிலுள்ளோர் யாவரும், இந்த மிக மேம்பட்ட தனிச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிகளைக் குறித்த நன்றி மதித்துணர்வால் தூண்டப்பட்டு: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்,” என்று சொல்லி, வணக்கத்தில் அவர்களோடுகூட சேர்ந்துகொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 7:10-12.

13 கடைசியாக மனிதவர்க்கம் முழுவதும் உண்மையான கடவுளைக் கனப்படுத்தும் ஒற்றுமைப்பட்ட ஒரே மனித சமுதாயமாக, யெகோவாவின் அன்புள்ள அரசாட்சியை நேரடியாக வெளிப்படுத்தும் “புதிய வானத்தின்”கீழ் “புதிய பூமி”யாக அமைவர். மகிழ்ச்சியுண்டாக்கும் அடையாளக் குறிகளைப் பயன்படுத்தி பைபிளின் கடைசி புத்தகத்தில், அப்பொழுது மனிதவர்க்கத்துக்குத் தொடர்ந்து பொழிந்துகொண்டிருக்கப் போகும் அதிசயமான நன்மைகள், “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு” பரலோக புதிய எருசலேமின் அகன்ற வீதியின் மத்தியில் ஓடுவதாகச் சித்தரித்துக் காட்டியிருக்கின்றன. இந்த நதியின் இரு கரைகளிலும் “ஜீவ விருட்சங்கள்” (NW) இருக்கின்றன, இவை, உண்போரின் உயிரை ஆதரித்துக் காக்கும் கனிகளையும் ஜாதியாரைச் சுகப்படுத்தும் இலைகளையும் விளைவிக்கின்றன. நம்பும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தைச் சுகப்படுத்தி ஆதரித்துக் காத்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழக்கூடும்படி செய்வதற்குக் கடவுள் செய்துள்ள அந்த முழு ஏற்பாடும் இதில் குறித்துக் காட்டப்படுதிறது.—வெளிப்படுத்துதல் 21:1, 2; 22:1, 2.

14 அப்பொழுது பூமியில் வியாபித்திருக்கப்போகும் நிலைமைகள் இந்தப் பழைய உலகம் எச்சமயத்திலும் உண்டுபண்ணின எதையும் பார்க்கிலும் உயிர்ப்பூட்டும் வகையில் வேறுபட்டிருக்கும். கிறிஸ்துவின் பலியின் நன்மைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமும் கடவுளுடைய சித்தத்தில் கற்பித்துப் பயிற்றுவிப்பதன் மூலமும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோர் உட்பட கீழ்ப்படிகிறவர்கள், எல்லாப் பாவக் கறையிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டு, உடலிலும், மனதிலும், உணர்ச்சிவசத்திலும் ஆவிக்குரிய பிரகாரமாயும் தாங்கள் பரிபூரணத்தை அடையும் வரையில், படிப்படியாய் முன்னேற உதவிசெய்யப்படுவர். பிரிவினை உண்டுபண்ணும் “மாம்சத்தின் கிரியைகளைப்” பிறப்பிப்பதற்குப் பதில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற இத்தகைய தெய்வீகக் கனிகளை ஏராளமாய்ப் பிறப்பிக்க எல்லாரும் கற்றுக்கொள்வார்கள். (கலாத்தியர் 5:19-23) இத்தகைய ஆவி வியாபித்திருக்க, பூமியின் விளைபொருள்கள் மனிதவர்க்கம் முழுவதன் தேவைகளை நிரப்ப தாராளமாய் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்தப் பூமிக்கும் அதன் குடியிருப்பாளருக்கும் சிருஷ்டிகர் கொண்டிருந்த முதல் நோக்கத்தை நிறைவேற்ற மனிதவர்க்கம் ஒன்றுசேர்ந்து உழைக்கையில் முன்னொருபோதும் இராதவண்ணம் வாழ்க்கை மேலும் மிகுந்தத் தனிநலஞ் சிறந்த உட்பொருளை ஏற்கும்.

15 இந்த எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து, கடவுளுடைய ஆவியும் கிறிஸ்துவின் மணவாட்டியும் எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கும் பின்வருமாறு கூறி ஊக்கமான அழைப்பைக் கொடுக்கிறார்கள்: “வா . . . ;கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவ தண்ணீரை இலவசமாய்ப் பெற்றுக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17, தி.மொ.) ஆகையால், யெகோவாவின் மகா நாளை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த இறங்குமுகக் கணிப்பு மிகுந்த உபத்திரவத்தில் அதன் பூஜ்ய மணிநேரத்தை எட்டும் வரையில் வெறுமென காத்திருப்பதற்கு இது சமயமல்ல. “ஜீவ தண்ணீரை இலவசமாய்ப் பெற்றுக்கொள்”ளும்படியான கருணைநிறைந்த இந்த அழைப்பை நீங்கள் ஏற்றிருப்பதால், இப்பொழுது மற்றவர்களுக்கு இந்த அழைப்பைக் கொடுக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இருக்கிறது. கடவுளுடைய மிகச் சிறந்த “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைத்திருக்க வேண்டுமென்ற ஊக்கமான ஆவலுள்ள யாவரும் தங்கள் பங்கில் ஆர்வச் சுறுசுறுப்பான வேலையில் ஈடுபடுவதற்கே இது சமயம்.

[கேள்விகள்]

1. பிரசித்திப் பெற்ற விஞ்ஞானிகள் கருதுகிறபடி, “தீர்ப்பு நாள்” எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது?

2. யெகோவா தம்முடைய இறங்குமுகக் கணிப்பை எப்பொழுது தொடங்கினார்? அதன் பூஜ்ய மணிநேரம் எதைக் குறிக்கும்?

3. (எ) மேசியாவின் வருகை கவனமாய்க் காலங்குறிக்கப்பட்டதென எது காட்டுகிறது? (பி) அப்பொழுது எதற்கு ஆதாரம் போடப்பட்டது?

4. (எ) இயேசு பூமியிலிருக்கையில் எந்த வகுப்பாரைக் கூட்டிச் சேர்க்கத் தொடங்கினார்? (பி) தெய்வீகக் காலத் திட்டத்துக்குப் பொருத்தமாய், கிறிஸ்து அரசராக எப்பொழுது ஆளத் தொடங்கினார்? (சி) அவர் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்று என்ன?

5. யெகோவாவின் அரசாட்சி சரியென மெய்ப்பிக்கப்படுவதைக் காண யார் உயிரோடிருப்பார்கள்?

6, 7. (எ) “திரள் கூட்டத்தைப்” பற்றிய என்ன உண்மைகள், மிகுந்த உபத்திரவம் வெகு அண்மையில் இருக்கவேண்டுமென குறித்துக் காட்டுகின்றன? (பி) அவர்கள் ஏன் எதிர்காலத்தை ஆர்வமிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்குகிறார்கள்?

8. (எ) 1 தெசலோனிக்கேயர் 5:3-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள மிகத் தனிக் கவனிப்புக்குரிய என்ன நிகழ்ச்சி இனியும் வரவிருக்கிறது? (பி) பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்காக எவ்வாறு தயாரிப்பு செய்யப்பட்டது? (சி) உலக சமாதானத்தை நிச்சயப்படுத்த, சமீப ஆண்டுகளில், என்ன பெரும் வற்புறுத்தல் இருந்துவந்திருக்கிறது?

9. “சமாதானமும் பாதுகாப்பும்” என்ற முன்னறிவிக்கப்பட்ட இந்தப் பொது அறிவிப்பை ஆதரிப்போர்மீது ஏன் அழிவு சடிதியாய் வரும்?

10. மகா பாபிலோனின் அழிவுக்கு எவ்வாறு நெருக்கடிநிலை ஏற்கெனவே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது?

11. (எ) அடுத்தப்படியாக தேசங்கள் யாருக்கு எதிராகத் திரும்பும்? (பி) மேலுமான என்ன நிகழ்ச்சிகளுக்கு இது வழிநடத்தும்?

12. (எ) தங்கள் விடுதலைக்குக் காரணர் யாரென “திரள் கூட்டத்தார்” குறிப்பிடுகின்றனர்? (பி) கடவுளைத் துதிப்பதில் யார் அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள்?

13. மனிதவர்க்கத்தை ஆதரித்துக் காப்பதற்கும் சுகப்படுத்துவதற்கும் செய்யும் ஏற்பாடுகள் பைபிளில் எவ்வாறு சித்தரித்துக் காட்டியிருக்கின்றன?

14. “புதிய பூமியில்” நிலைமைகள், இன்று உலகத்திலுள்ள நிலைமைகளிலிருந்து எம்முறைகளில் வேறுபட்டிருக்கும்?

15. (எ) மனதைக் கவரும் என்ன அழைப்பு ஏற்கெனவே மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கப்படுகிறது? (பி) ஆகையால், நாம் ஒவ்வொருவரும் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்?