Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இவர்கள் இனி பசியடைவதுமில்லை”

“இவர்கள் இனி பசியடைவதுமில்லை”

அதிகாரம் 10

“இவர்கள் இனி பசியடைவதுமில்லை”

இன்று உலகத்தை எதிர்ப்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உணவு சார்ந்ததாகும். விலை உயர்வு பலருக்குத் தொல்லை தருகிறது. மற்றவர்கள் உண்மையில் பட்டினியை எதிர்ப்படுகின்றனர். ஓர் ஆண்டுக்கு 4 கோடி வீதம்—சில ஆண்டுகளில் 5 கோடி வீதத்திலுங்கூட—மக்கள் தங்களுக்குத் தேவையான உணவில்லாமையால் சாகின்றனரென சமீபத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கைக்கு ஏறக்குறைய பத்து மடங்குகள் மிகைப்பட்ட எண்ணிக்கையானோர் கடுமையான சத்துக் குறை உணவினால் வருந்துகின்றனர். சில நாடுகள் தாங்கள் உண்பதற்கு மிக மிஞ்சிய அளவில் விளைவிக்கிறபோதிலும், அரசியல் போட்டியும், வியாபார பேராசையும், மிகைப்பட்டதை மிக அதிகத் தேவையிலிருப்போருக்குக் கிடைக்கக் கூடியதாக்க முயற்சிகள் எடுப்பதைத் தடை செய்கிறது.—வெளிப்படுத்துதல் 6:5, 6-ஐ ஒத்துப் பாருங்கள்.

2உணவு ஏராளமாயுள்ளதாகத் தோன்றும் நாடுகளுங்கூட கவலைக்கிடமான எதிர்காலத்தை எதிர்ப்படுகின்றன. ஏன்? தற்போதைய விவசாய முறைகள் அடிக்கடி பெட்ரோலியத்தின்பேரில் சார்ந்திருக்கின்றன, இதன் பூகோள அளிப்பு மட்டற்றதாயில்லை. வியாபார எருக்களின்பேரில் மிகுதியாய்ச் சார்ந்திருப்பது அவர்களுக்குக் கிடைக்கும் தண்ணீரைத் தூய்மைக்கேடு செய்கிறது. பயிரைப் பாதுகாப்பதற்குக் கருதப்பட்ட பூச்சுக்கொல்லி மருந்துகளை மிதமீறி பயன்படுத்துவது நிலத்தின் எதிர்கால விளைச்சல்வளம் சார்ந்துள்ள உயிர்ப்பொருள்களையும் அழித்து விடுகிறது. மனிதன் முயற்சி எடுத்துள்ள ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் கவலைக்கிடமான பிரச்னைகள் தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன. அறிஞர்களின் சர்வதேச கருத்தரங்கின் தலைவர், ஆரிலியோ பெக்சி, இந்த உலகத்தை “அழிவிலிருந்து அழிவுக்குச் சரிந்து தத்திப் பாய்ந்து கொண்டுசெல்லும் தவ்வல் குண்டுக்கு” ஒப்பிட்டார். இத்தகைய பதிவைக் கொண்ட உலகத்தின்பேரில் ஒருவன் எதிர்காலத்துக்கான நம்பிக்கைகளை ஊன்ற வைப்பது உண்மையான நடைமுறைக்குரியபடி செயல்படுவதாகுமா?—எரேமியா 10:23; நீதிமொழிகள் 14:12.

3நல்லறிவுடன், லட்சக்கணக்கான ஆட்கள், தங்களுக்குத் தேவைப்படும் உதவியைக் கடவுள் மாத்திரமே கொடுக்க முடியுமென ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பைபிள் தீர்க்கதரிசனத்தை ஆராய்ந்து பார்த்து, யெகோவா தேவன் ஏற்கெனவே தம்முடைய பரலோகக் குமாரன் இயேசு கிறிஸ்துவை சிங்காசனத்திலேற்றி அவருக்குப் பூமி முழுவதையும் அவருடைய உடைமையாகக் கொடுத்துவிட்டாரென அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 2:7, 8) பூமியின் விளைச்சலிலிருந்து மனிதவர்க்கம் முழுவதற்கும் தேவையானவற்றை ஏராளமாய் அளிப்பாரென உறுதிதருவதற்கு அவருக்கு ஞானமும் திறமையும் உண்டு. (சங்கீதம் 72:7, 8, 16; கொலோசெயர் 1:15-17) இந்தத் தற்போதைய தன்னல ஒழுங்குமுறை நீக்கப்பட்டபின், பூமி முழுவதும் பலன்தரும் பரதீஸாகும்படி, தப்பிப்பிழைத்திருக்கும் மனிதரின் முயற்சிகளைக் கிறிஸ்து வழிநடத்துவார்.

4எனினும், மனிதன் பிழைப்பது அப்பத்தினால் மாத்திரமல்லவென தெளிவாய் உணருவோரும், ஆவிக்குரிய மதிப்புகளையும் கடவுளுடைய சித்தத்தைக் கற்று அதன்படி செய்வதிலிருந்து பலத்தைப் பெறும் இன்றியமையாதத் தேவையை மதித்துணருவோருமான ஆட்களே அவருடைய ஆட்சியிலிருந்து நிலைபேறான நன்மை அடைவார்கள். இதன் முக்கியத்துவத்தை பைபிள் திரும்பத்திரும்ப விளக்கமாக அழுத்திக் காட்டுகிறது. (யோவான் 4:34; 6:27; எரேமியா 15:16) இயேசு பின்வருமாறு சொன்னபோது இதை அறிவுறுத்தினார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய [யெகோவாவின், NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” (மத்தேயு 4:4) தற்போதைய உலகத்தின் முடிவை நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் இத்தகைய ஆவிக்குரிய உணவு இப்பொழுது நமக்குத் தேவை. இதை அடைவது எப்படியென யோசேப்பையும் அவனுடைய சகோதரரையும் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தில் நமக்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது.

“யோசேப்பினிடம் போங்கள்

5ஆபிரகாமின் கொள்ளுப் பேரனான யோசேப்பு, வாழ்க்கையில் முதன்மை வாய்ந்த ஒரு பாகத்தை வகிப்பானென குறிப்பாகத் தெரிவிக்கும் சொப்பனங்களைக் கடவுள் யோசேப்புக்குக் கொடுத்தார். இதனிமித்தமும், இதோடுகூட அவனுடைய தகப்பன் அவனைத் தனிப்பட்ட முறையில் நேசித்ததனிமித்தமும், யோசேப்பின் ஒன்றுவிட்ட உடன் பிறந்த பத்து சகோதரர் யோசேப்பைப் பகைத்தார்கள். அவர்கள் அவனைக் கொல்லும்படி சதிசெய்தனர், ஆனால் கடைசியில் அவனை அடிமையாக விற்றுப்போட்டனர், அவன் எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். யோசேப்பைக் குறித்துக் கடவுள் கொண்டிருந்த நோக்கம் இப்பொழுது எவ்வாறு நிறைவேறும்?—ஆதியாகமம் 37:3-11, 28.

6யோசேப்பு 30 வயதாயிருந்தபோது, எகிப்தின் அரசனான பார்வோன் தன்னை மனங்கலங்கச் செய்த இரண்டு சொப்பனங்களைக் காணும்படி யெகோவா செய்தார். முதல் சொப்பனத்தில் அவன், “புஷ்டியும் பார்வைக்கு அழகுமான” ஏழு பசுக்களையும், மேலும் “அவலட்சணமும் கேவலமுமான [மெலிந்த]” வேறே ஏழு பசுக்களையும் கண்டான். அந்த எலும்புந்தோலுமான பசுக்கள் புஷ்டியான பசுக்களைப் பட்சித்துப் போட்டன. மற்றொரு சொப்பனத்தில் “நல்ல செழுமையான” ஏழு கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருப்பதையும், பின்பு “சாவியானதும் கீழ்க் காற்றினால் தீய்ந்ததுமான” வேறு ஏழு கதிர்களையும் பார்வோன் கண்டான். மறுபடியும், சாவியான கதிர்கள் செழுமையான கதிர்களை விழுங்கிப் போட்டன. இந்த எல்லாவற்றின் பொருள் என்ன? எகிப்தின் ஞானிகள் ஒருவரும் இந்தச் சொப்பனங்களின் உட்பொருளை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் பார்வோனின் பானபாத்திரக்காரனுக்கு, தான் சிறைச்சாலையில் இருந்தபோது, உடனிருந்த ஒரு கைதியான யோசேப்பு, திருத்தமாய்ச் சொப்பனங்களின் உட்பொருளை வெளிப்படுத்தினது நினைவுக்கு வந்தது; பார்வோன் உடனடியாக யோசேப்பை அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.—ஆதியாகமம் 41:1-15, தி.மொ.

7யோசேப்பு தனக்கு எந்த மேன்மையும் பாராட்டாமல், பார்வோனிடம்: “பார்வோன் கண்ட சொப்பனம் ஒன்றே; [உண்மையான, NW] கடவுள் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்குத் தெரிவித்திருக்கிறார்,” என்று சொன்னான். (ஆதியாகமம் 41:16, 25, தி.மொ.) இரண்டாவது சொப்பனமும் முதல் சொப்பனத்தின் உட்பொருளையே கொண்டதெனவும் அதன் நிச்சயத்தை உறுதிப்படுத்தினதெனவும் யோசேப்பு விளக்கினான். எகிப்தில் ஏராளமான விளைச்சலைக் கொண்ட ஏழு ஆண்டுகளைப் பின்தொடர்ந்து பஞ்சமுள்ள ஏழு ஆண்டுகள் வரும். பஞ்சத்தைச் சமாளிக்க ஆயத்தம் செய்வதற்கு ஏராளமாய் விளையும் ஆண்டுகளின்போது தானியத்தைச் சேமித்து வைக்கும் பொறுப்பில் திறமையுள்ள ஒரு மனிதனை ஏற்படுத்தி வைக்கும்படி அவன் பார்வோனுக்கு ஆலோசனை கூறினான். கடவுள்தாமே இந்த எல்லாவற்றையும் யோசேப்புக்கு வெளிப்படுத்தினாரென கண்டுணர்ந்து, பார்வோன் யோசேப்பை உணவு நிர்வாக அதிகாரியாக நியமித்து, எகிப்தில் பார்வோனான தனக்கு மாத்திரமே இரண்டாவதாயிருக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுத்தான். முன்னறிவித்தபடியே வழக்கத்துக்கு மீறிய ஏராளமான விளைச்சல் உண்டான ஏழு ஆண்டுகள் வந்தன, யோசேப்பு மிகுதியான பேரளவுகளில் உணவு பொருட்களைச் சேமித்து வைத்தான். பின்பு முன்னறிவித்த பஞ்சம் தேசத்தை நெருக்கிப் பிடித்தது. ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனிடம் மன்றாடினபோது, அவன்: “நீங்கள் யோசேப்பினிடம் போங்கள், அவர் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்,” என்று அவர்களுக்குப் பதிலளித்தான். ஆகவே யோசேப்பு அவர்களுக்குத் தானியத்தை விற்றான்—முதலாவது பணத்தையும், பின்பு ஆடுமாடு முதலியவற்றையும் செலுத்தினார்கள், கடைசியாகத் தங்களையும் தங்கள் நிலத்தையும் பரிமாற்றமாகக் கொடுத்தார்கள். தொடர்ந்து வாழ்ந்திருக்க, பார்வோனின் சேவைக்கு அவர்கள் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 41:26-49, 53-56; 47:13-26.

8எகிப்தைச் சுற்றியிருந்தத் தேசங்களையும் இந்தப் பஞ்சம் பாதித்தது. கடைசியில் யோசேப்பின் சொந்த ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரர் கானானிலிருந்து வந்தார்கள். அவர்கள் அவனை அடிமையாக விற்றுப்போட்டு 20-க்கு மேற்பட்ட ஆண்டுகள் கடந்திருந்தன, அவர்கள் அவனை அடையாளங் கண்டுகொள்ளவில்லை. நெடுங்காலத்துக்கு முன்னால் யோசேப்பின் சொப்பனங்கள் முன்னறிவித்தபடியே அவர்கள் அவனுக்கு முன் தாழக் குனிந்து வணங்கி, உணவு பொருட்களை அடைய நாடினார்கள். (ஆதியாகமம் 37:6, 7; 42:5-7) மிகத் திறமையுடன் யோசேப்பு அவர்களைச் சோதித்து, தன்னிடமாகவும் தங்கள் தகப்பனிடமாகவும் அவர்களுடைய மனப்பான்மை நிச்சயமாகவே மாறியிருந்ததற்கு நம்பத்தக்க அத்தாட்சியைக் கண்டான். கடைசியாகத் தான் யாரென தெரிவித்து, உண்மையில் “ஜீவரட்சணை செய்யும்படிக்கு” கடவுள் அவனை அவர்களுக்கு முன்னால் எகிப்துக்கு அனுப்பினாரென விளக்கினான். அவனுடைய ஏவுதலின்பேரில் அவர்கள் தங்கள் தகப்பனையும் தங்கள் குடும்பங்களையும் இடம் மாறி எகிப்துக்குள் குடியேறச் செய்தார்கள். (ஆதியாகமம் 45:1-11) இந்த எல்லாம் நம்முடைய நன்மைக்காகவே பதிவு செய்யப்பட்டது, இதன் தீர்க்கதரிசன உட்பொருள் நம்முடைய நாளில் நடக்கும் சம்பவங்களை உட்படுத்துகிறது.—ரோமர் 15:4.

இப்பொழுது நம்முடைய பசியையும் தாகத்தையும் திருப்திசெய்தல்

9மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று ஆவிக்குரிய பஞ்சமே. அவர்கள் யெகோவாவை விட்டு விலகிப்போய்விட்டதனால், அவர் தம்முடைய வார்த்தையைப் பற்றிய தெளிந்துணர்வை அவர்களுக்கு அருளுகிறதில்லை, இதன் விளைவாக, அவர்கள், ‘ஆகாரப் பஞ்சமல்ல, ஜலதாகமுமல்ல, யெகோவாவின் வசனத்தைக் கேட்கவேண்டுமெனத் தவிக்கிற பஞ்சத்தையே’ அனுபவிக்கின்றனர். (ஆமோஸ் 8:11, தி.மொ.) ஆவிக்குரிய பஞ்சத்தால் தவிக்கிற ஜனங்கள் பின்வரும் முக்கிய கேள்விகள் போன்றவற்றிற்குப் பதில்களையடைய தடவித் திரிகிறார்கள்: வாழ்க்கையின் உட்பொருளென்ன? மக்கள் ஏன் சாகின்றனர்? எதிர்காலத்துக்காக உண்மையான நம்பிக்கை ஏதாவது உண்டா? ஆவிக்குரிய பசியால் வெறிகொண்டு, இத்தகைய ஆட்கள், தங்கள் தீவிர ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள ஒழுக்கக்கேடான மற்றும் குற்ற இயல்புள்ள நடத்தையில் ஈடுபட்டு அடிக்கடி தங்களுக்குத்தாமேயும் மற்றவர்களுக்கும் கேடு செய்கிறார்கள்.

10இதற்கு நேர்மாறாக, யெகோவா, தம்முடைய உண்மைப் பற்றுறுதியுள்ள ஊழியருக்கு ஆவிக்குரிய ஏராளத்தைக் கொடுத்திருக்கிறார், அவர்களுக்குள் உண்மையான அன்பு இருந்து வருகிறது. தம்முடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையில் உள்ள திருப்திதரும் ஆவிக்குரிய சத்தியங்களைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ளும்படி அவர்கள் மனதைத் திறந்திருக்கிறார், மேலும் தம்முடைய சாட்சிகளாக வேலை செய்ய அவர்களுக்கு வேலையையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இந்தச் சத்தியங்களை, ஆவிக்குரிய பசியுள்ளோரும் கடவுளுடன் உறவில் ஜீவனை நாடித் தேடுவோருமான மற்றவர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுகிறார்கள். (ஏசாயா 65:13, 14; லூக்கா 6:21) முன்னால் பூர்வ எகிப்தில் ஏழு ஆண்டுகள் ஏராள விளைச்சலைப் பின்தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பஞ்சம் வந்தது. ஆனால் நம்முடைய நாளில் ஆவிக்குரிய பஞ்சக் காலமும் ஆவிக்குரிய ஏராளக் காலமும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றன.

11இன்று பார்வோன் அரசனாக இல்லை. பெரிய பார்வோனாகிய, யெகோவா தேவனே, சர்வலோகப் பேரரசர். தம் சொந்த அதிகாரத்துக்கு மாத்திரமே இரண்டாவதாயுள்ள அதிகாரத்தை அவர் இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார். இயேசுவே பெரிய யோசேப்பாக இருப்பதால், உயிரை ஆதரிக்கும் ஆவிக்குரிய உணவை வழங்கும் பொறுப்பை யெகோவா அவரிடமே ஒப்படைத்திருக்கிறார். இவ்வுலகத்தின் மத மற்றும் உலகியல் சார்ந்த தத்துவ ஆராய்ச்சிகள், அரித்துத் தின்னும் ஆவிக்குரிய பசியோடு மனிதவர்க்கத்தை விட்டிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி அவர் கட்டளையிடுகிற முறையில் ஆவிக்குரிய உணவை அடைவதால் மாத்திரமே அவர்கள் அழியாதிருக்கச் செய்யப்படுவர். பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட எகிப்தியர் படமாக முன்குறித்த லட்சக்கணக்கான ஆட்கள், இதைச் செய்கின்றனர். இவர்கள், இயேசு கிறிஸ்துவின் மூலம், எல்லாக் காலத்துக்குமாக யெகோவாவுக்குத் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுக்கின்றனர், இவ்வாறு, வரவிருக்கும் தெய்வீகக் கோபாக்கினையின் நாளைத் தப்பிப்பிழைத்திருக்கும் எதிர்பார்ப்பையுடைய அந்தத் திரள் கூட்டத்தாரோடு சேர்க்கப்படுகின்றனர்.

12ஆனால் இயேசு பரலோகத்தில் இருக்கிறார். இங்கே பூமியிலிருக்கும் நமக்கு நன்மையுண்டாக்கும் ஆவிக்குரிய உணவை அவர் எவ்வாறு அளிக்கிறார்? தம்முடைய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் தாம் அதைச் செய்வாரென அவர் முன்னறிவித்தார். (மத்தேயு 24:45-47, NW) இவன், இன்னும் பூமியிலிருக்கையில், ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட தம்முடைய சபையாலாகிய கூட்டு “அடிமையே.” (ஏசாயா 43:10-ஐ ஒத்துப் பாருங்கள்.) இவர்களில் ஒரு மீதிபேர் பூமிக்குரிய காட்சியில் இன்னும் இருக்கின்றனர். இந்த உண்மையான கிறிஸ்தவ சபையை, அதன் போதகங்களையும் செயல்களையும் பைபிளுடன் ஒத்துப் பார்ப்பதன்மூலம் எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும். இயேசு கட்டளையிட்டதையே அது உண்மையாய்க் கற்பிக்கிறது. ஆகையால் அது இவ்வுலகத்தின் அரசியல் விவகாரங்களில் உட்பட்டில்லை, ஆனால் அதன் உறுப்பினர் யாவரும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி யாவருக்கும் அறிவிப்பவர்கள். கிறிஸ்தவ மண்டல உட்பிரிவுகளுக்குள் அவர்கள் பிளவுபட்டுப் போயில்லை. இயேசு அவர்களைக் குறித்துச் சொன்னபடியே, அவர்கள் ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள்—தங்கள் கர்த்தரின் மாதிரியைப் பின்பற்றும் அவர்களெல்லாரும் யெகோவாவின் சாட்சிகள். (யோவான் 17:16, 20, 21; மத்தேயு 24:14; 28:19,20; வெளிப்படுத்துதல் 1:5, ஆகியவற்றைப் பாருங்கள்.) அவர்கள் ஆவிக்குரிய ஏராளத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மிக ஆவல்கொண்டிருக்கிறார்கள்.

13அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களைப் பலர் பின்வருமாறு கூறி கேலி செய்திருக்கின்றனர்: ‘எங்களைப் பார்க்கிலும் உங்களை மேம்பட்டவர்களென எண்ணுகிறீர்களா?’ ‘நீங்கள் ஒருவர் மாத்திரமே சரியென எண்ணுகிறீர்களா?’ ஆனால், பூமியில் யெகோவா உண்மையில் சாட்சிகளை நிச்சயமாகவே கொண்டிருக்கிறார் எனவும் அவர்கள் உண்மையில் அவருடைய வார்த்தையை யாவருக்கும் அறிவிக்கிறார்களெனவும், காலப் போக்கில் சிலர் மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஒரே ஒரு உண்மையான கிறிஸ்தவ சபையே இருக்கும், அதன் உறுப்பினர் ஒற்றுமைப்பட்டிருப்பார்களென்று பைபிள் காட்டுவதை அவர்கள் மதித்துணருகிறார்கள். (எபேசியர் 4:5; ரோமர் 12:5) உண்மை விவரங்களை நேர்மையுடனும் மனத்தாழ்மையுடனும் ஆராய்ந்து பார்த்தது அந்த அமைப்பினிடம் அவர்களை வழிநடத்தினது. யோசேப்பின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த பத்து சகோதரர் அத்தகைய ஆட்களை முன்குறித்துக் காட்டினர், முன்பு அவர்கள், இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களை துன்புறுத்தினர் அல்லது அத்தகைய துன்புறுத்துவோருக்கு ஆதரவளித்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் உண்மையாய் இருதயம் மாறியிருப்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றனர். (யோவான் 13:20) இயேசு கிறிஸ்து தம்முடைய ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பாரின் மூலமாய் அளிக்கும் ஆவிக்குரிய உணவை அவர்கள் நன்றியறிதலுடன் ஏற்கின்றனர். உவாட்ச்டவர் பிரசுரங்களில் ஆராயப்படும் பைபிள் சத்தியங்களை அவர்கள் உட்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று கவனித்து, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சுறுசுறுப்பாய்ப் பங்குகொண்டு வருகையில் ஆவிக்குரிய பலத்தைப் பெறுகின்றனர். மனத்தாழ்மையுள்ள இவர்களில் நீங்களும் ஒருவரா?—எபிரெயர் 10:23-25; யோவான் 4:34-ஐ ஒத்துப் பாருங்கள்.

14இயேசு கிறிஸ்துவின் மூலம் தங்கள் சிருஷ்டிகரினிடம் தங்கள் வாழ்க்கையை இவ்வாறு அன்புடன் ஒப்படைத்து விடுகிற யாவரும் மகிழ்ச்சியுள்ள இளைப்பாறுதலை அனுபவித்து மகிழ்கின்றனர். ஆவிக்குரிய பிரகாரம், “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; . . . சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே [இயேசு கிறிஸ்துவே] இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”—வெளிப்படுத்துதல் 7:16, 17; ஏசாயா 25:6-9.

[கேள்விகள்]

1. உணவுபேரில் உலகத்தின் பிரச்னை எவ்வளவு மோசநிலையில் இருக்கிறது?

2. ஏராள விளைச்சலுள்ள நாடுகளிலும், கவலைப்படுவதற்கு மக்களுக்கு ஏன் காரணமுண்டு?

3. மனிதவர்க்கம் முழுவதற்கும் ஏராளமான உணவளிப்பதற்கு உறுதிதரக்கூடியவர் யார்? எது உங்களுக்கு இந்த நம்பிக்கை அளிக்கிறது?

4. இந்தப் பொருள் சார்ந்த ஏற்பாடுகளிலிருந்து பயனடைய, இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

5. யோசேப்பு எப்படி எகிப்தில் ஓர் அடிமையாயிருக்க நேரிட்டது?

6. (எ) பார்வோனின் கவனம் எப்படி யோசேப்பினிடம் வழிநடத்தப்பட்டது? (பி) பார்வோனை மனங்கலங்க வைத்தச் சொப்பனங்கள் யாவை?

7. (எ) யோசேப்பு எவ்வாறு எகிப்துக்கு உணவு நிர்வாக அதிகாரியானான்? (பி) பஞ்சம் கடுமையானபோது, எகிப்தியர் தாங்கள் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு என்ன செய்தார்கள்?

8. (எ) தேவைப்பட்ட உணவுபொருட்களை அடைய, யோசேப்பின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர் என்ன செய்ய வேண்டியிருந்தது? (பி) இதைப் பற்றிய பதிவு ஏன் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது?

9. (எ) இன்று உலகத்தில் இருந்துவரும் ஆவிக்குரிய பஞ்சத்துக்குக் காரணம் என்ன? (பி) இது ஏன் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று?

10. (எ) ஏசாயா 65:13, 14-ன் நிறைவேற்றமாக யெகோவாவின் ஊழியருக்குள் என்ன நிலைமை இருந்துவருகிறது? (பி) ஆவிக்குரிய பஞ்சத்தின் மற்றும் ஆவிக்குரிய ஏராளத்தின் காலங்கள் எப்பொழுது இருக்கின்றன?

11. (எ) பார்வோனும், யோசேப்பும் யாரைப் படமாக முன்குறித்துக் காட்டினர்? ஏன் அவ்வாறு சொல்லலாம்? (பி) “திரள் கூட்டத்தார்” ஏற்றுள்ள போக்கு எவ்வாறு பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட எகிப்தியர் மேற்கொண்ட போக்கைப் போலுள்ளது?

12. (எ) பரலோகத்திலிருக்கும் இயேசு எவ்வாறு இங்கே பூமியிலுள்ள நமக்கு ஆவிக்குரிய உணவு கிடைக்கச்செய்கிறார்? (பி) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” இதுவேயென அடையாளங் கண்டுகொள்ள எது உங்களுக்கு உறுதிதருகிறது?

13. (எ) எந்த வழிகளில் பலர், யோசேப்பின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த பத்து சகோதரரைப்போல் தங்களைக் காட்டியிருக்கின்றனர்? (பி) “அடிமை” வகுப்பின் மூலம் கிறிஸ்து அளிக்கும் ஆவிக்குரிய உணவிலிருந்து நாமெல்லாரும் எவ்வாறு பயனடையலாம்?

14. இந்த பைபிள் நாடகத்திலிருந்து கற்றுக்கொண்ட நியமங்களுக்குப் பொருந்த வாழ்கிறவர்கள் என்ன ஆவிக்குரிய நிலைமைகளை அனுபவித்து மகிழ்கின்றனர்?