Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை”

“உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை”

அதிகாரம் 23

“உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை”

யெகோவாவைத் தங்கள் நம்பிக்கையாக்கிக் கொண்டவர்களே இன்று பூமியில் மிக அதிக உண்மையான மகிழ்ச்சியுள்ள ஜனங்கள். வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிப்பது எவ்வாறு என்பதன்பேரில் மிகச் சிறந்த ஆலோசனை எங்கு கிடைக்குமென—கடவுளுடைய வார்த்தையிலேயே என—அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தப் பூமிக்குக் கடவுள் கொண்டுள்ள நோக்கத்தை அவர்கள் அறிந்திருக்கிறபடியால், எதிர்காலத்தை நோக்குகையில் அவர்கள் பயமடைகிறதில்லை. (எரேமியா 17:7, 8; சங்கீதம் 46:1-3) எனினும் அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்தபின், வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை.” (எபிரெயர் 10:36, NW) சகிப்புத்தன்மைக்கான இந்தத் தேவையை எழுப்புவது எது?

2 தம்முடைய சொந்த மரணத்துக்கு முன்னால், இயேசு, எதிர்காலத்தில் இருப்பவற்றைக் குறித்து தம்முடைய அப்போஸ்தலரைப் பின்வருமாறு எச்சரித்தார்: “நீங்கள் உலகத்துக்குரியவர்களாயிருந்தால் உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும். நீங்களோ உலகத்துக்குரியவர்களல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்தேன், அந்தக் காரணத்தினாலே உலகம் உங்களைப் பகைக்கிறது. வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னை இம்சைப்படுத்தினார்களானால் உங்களையும் இம்சைப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையைக் கைக்கொண்டார்களானால் உங்கள் வார்த்தையையுங் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னையனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவற்றையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” (யோவான் 15:19-21, தி.மொ.) இது எவ்வளவு உண்மையாய் நிரூபித்திருக்கிறது!

3 உண்மையான கிறிஸ்தவம் குறித்துக் காட்டுவதை வேண்டாமென தள்ளும் உலகத்தின் மத்தியில் தாங்கள் வாழ்வதால் இயேசுவைப் பின்பற்றுவோர் பகைமைக்கு இலக்கானோராயிருக்கின்றனர். கிறிஸ்து என்பது “அபிஷேகஞ் செய்யப்பட்டவரென” பொருள்படுகிறது. இயேசு கிறிஸ்துவே பூமி முழுவதையும் ஆளும் அரசராயிருக்கும்படி யெகோவாவால் அபிஷேகஞ் செய்யப்பட்டவர். இவ்வாறு, ‘தம்முடைய நாமத்தினிமித்தம்’ தம்முடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுவரென இயேசு சொன்னபோது, யெகோவாவின் மேசியானிய அரசராகத் தம்மை அவர்கள் பற்றிக் கொண்டிருப்பதனிமித்தமும், பூமிக்குரிய எந்த அரசருக்கும் மேலாகக் கிறிஸ்துவுக்கே அவர்கள் கீழ்ப்படிவதனிமித்தமும், தம்முடைய ராஜ்யத்துக்கு உண்மைத்தவறாதப் பற்றுறுதியை அவர்கள் கொண்டிருந்து மனித அரசாங்கங்களின் விவகாரங்களில் உட்படாமலிருப்பதனிமித்தமுமே அந்தத் துன்புறுத்தல் உண்டாகுமென அவர் கருதினார். துன்புறுத்துவோர், “என்னையனுப்பினவரை அறியாதபடியினால்”—அதாவது, யெகோவா தேவனை சர்வலோகப் பேரரசரென ஏற்க அவர்கள் மறுப்பதனால் எதிர்ப்பு இருக்குமென இயேசு மேலும் கூறினார். (யாத்திராகமம் 5:2-ஐ ஒத்துப் பாருங்கள்.) முக்கியமாய் இந்தத் துன்புறுத்தலைப் பின்னின்று தூண்டிவிடுகிறவன் யார்? பிசாசான சாத்தானே.—வெளிப்படுத்துதல் 2:10.

4 முக்கியமாய், 1914-ல் யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின் பிறப்பைப் பின்தொடர்ந்து சாத்தான் வானத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டது முதற்கொண்டு, உண்மையான கிறிஸ்தவர்களின்பேரில் இந்தத் துன்புறுத்தல் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதைக் குறைவாய் மதிப்பிட்டுவிடாதீர்கள். இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பில் தங்கள் நிலைநிற்கையைக் கொண்டிருக்கும் யாவருக்கும் எதிராகப் பிசாசும் அவனுடைய பேய்களும் ஒரு மும்முரமான போர் தொடுத்திருக்கின்றனர். இதைக் குறித்து, வெளிப்படுத்துதல் 12:17 பின்வருமாறு கூறுகிறது: “அப்பொழுது வலுசர்ப்பம் [பிசாசாகிய சாத்தான்] ஸ்திரீயின்மேல் [கடவுளுடைய மனைவியைப் போன்ற பரலோக அமைப்பின்மேல்] கோபங்கொண்டு அவள் சந்ததியாரில் மீதியானவர்களோடு [பூமியில் கிறிஸ்துவைப் பின்பற்றும் ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களோடு] யுத்தம்பண்ணப் போயிற்று. இவர்கள் கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் இயேசுவின் சாட்சியத்தையுடையவர்களுமாம்.” (தி.மொ.) “மற்றச் செம்மறியாடுகளும்” (NW) இந்தப் போரின் மும்முரத்தில் தங்களைக் காண்கிறார்கள். கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை விட்டுவிடும்படி அவர்களைக் கவர்ந்திழுக்க அல்லது வற்புறுத்த தந்திரமான வழிவகைகளைக் கொண்டு சாத்தான் முயற்சி செய்கிறான். அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையைப் பலம் குறைய செய்து பின்பு முற்றிலும் அழித்துப்போட அவன் விரும்புகிறான். இயேசு யெகோவாவின் மேசியானிய அரசரென யாவருக்கும் அறிவிப்பதை முற்றிலும் நிறுத்திப்போட வேண்டுமென்பதே அவனுடைய நோக்கம். ஆனால் இந்த ஆவிக்குரிய போரில் கடவுளின் உண்மைத்தவறா ஊழியர்கள் வெற்றிப் பெற்றவர்களாய் வெளி வருகின்றனர்.

இவற்றிற்கெதிரில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

5 யெகோவாவின் சாட்சிகள் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஆட்களெனவும் சமுதாயத்தில் நல்நடத்தைக்கேதுவான செல்வாக்குச் செலுத்துகின்றனரெனவும் அரசாங்க அதிகாரிகள் பலர் ஒப்புக்கொள்கின்றனர். எனினும், மனித அரசாங்கங்கள் யாவும் சாத்தானின் உலகக் காரிய ஒழுங்குமுறையின் பாகமாயிருக்கின்றன. (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 13:2) ஆகவே சில அரசாங்கங்கள், உண்மையான கடவுளை வணங்குவோரின் கூட்டங்களைத் தடைசெய்கையில், அவர்களுடைய பைபிள் இலக்கியங்களின்பேரில் தடையுத்தரவு போட்டு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் பிரசங்கிப்பதைத் தடுத்து நிறுத்துகையில், ஆம், அவர்களைச் சிறையிலடைத்து உடல் சம்பந்தமாய் அவர்களைத் துன்புறுத்தவும் செய்கையில், அது ஆச்சரியத்தை உண்டாக்க வேண்டியதில்லை. நீங்கள்தாமே இத்தகைய நெருக்கடிக்கு உட்பட நேரிட்டால், என்ன செய்வீர்கள்?

6 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை காட்டினர். துன்புறுத்தப்பட்டபோது, அவர்கள் பழிக்குப் பழி வாங்கவில்லை. ஆனால் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டதை நிறுத்தும்படி உத்தரவிட்டபோது, அவர்கள்: “மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராகக் கடவுளுக்கே நாங்கள் கிழ்ப்படிய வேண்டும்,” என்று உறுதியாய்ப் பதிலளித்தனர். (அப்போஸ்தலர் 5:29, NW; ரோமர் 12:19; 1 பேதுரு 3:15) தங்கள் உயிர் ஆபத்திலிருந்தபோதுங்கூட, மரண பயம் இணங்கிப்போகும்படி அவர்களைச் செய்விக்கவில்லை. “மரித்தோரை எழுப்புகிற தேவனைத்” தாங்கள் சேவிக்கிறார்களென அவர்கள் அறிந்திருந்தார்கள். (2 கொரிந்தியர் 1:9; எபிரெயர் 2:14, 15) துன்புறுத்தப்பட்டபோதிலும், அவர்கள் மகிழ்ச்சியாயிருந்தார்கள்—தாங்கள் கடவுளைப் பிரியப்படுத்துகிறார்களென அவர்கள் அறிந்திருந்ததனிமித்தமே மகிழ்ச்சியாயிருந்தார்கள், அவருடைய பெயரின் நேர்மை மெய்ப்பிக்கப்படுவதில் பங்குகொள்வதற்கும் அவர் அபிஷேகஞ்செய்த அரசருக்குத் தங்கள் உண்மைத்தவறாமையை நிரூபிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைந்தார்கள். (அப்போஸ்தலர் 5:41, 42; மத்தேயு 5:11, 12) நீங்கள் இவ்வகையான ஆளா? இத்தகைய அனுபவங்களுக்கு உட்பட்டிருக்கிறவர்களோடு நீங்கள் உங்களை வெளிப்படையாய் அடையாளங் கண்டுகொள்ள செய்கிறீர்களா? எபெத்மெலேக்கு பயந்து பின்வாங்காத ஒருவன். இவன் யார்?

7 எபெத்மெலேக்கு கடவுள் பயமுள்ள ஓர் எத்தியோப்பியன், பாபிலோனியர் எருசலேமை அழிப்பதற்கு வழிநடத்திக்கொண்டிருந்த காலப்பகுதியின்போது அவன் எருசலேமில் வாழ்ந்திருந்தான். அரசன் சிதேக்கியாவின் அரமனையில் வேலை பெற்றிருந்தான். அச்சமயம் எரேமியா யூதா ராஜ்யத்துக்கும் சுற்றியிருந்தத் தேசங்களுக்கும் யெகோவாவின் தீர்க்கதரிசியாகச் சேவித்துக்கொண்டிருந்தான். அவன் விட்டுக்கொடாமல், கடவுளுடைய எச்சரிக்கை செய்தியைக் கொடுத்துக்கொண்டிருந்ததனால், கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானான். எருசலேமிலிருந்த சில பிரபுக்களின் தூண்டுதலினால், அவன் தண்ணீரற்ற துரவுக்குள் போடப்பட்டு சேற்றில் அமிழ்ந்து சாகும்படியும் விடப்பட்டான். எபெத்மெலேக்கு இஸ்ரவேலனல்லவென்ற போதிலும், அவன் எரேமியாவை யெகோவாவின் தீர்க்கதரிசியென அறிந்து ஒப்புக்கொண்டிருந்தான். எரேமியாவுக்குச் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டபோது, எபெத்மெலேக்கு, எரேமியாவின் சார்பாகப் பரிந்துபேசி ஆதரவுகேட்க நகர வாசலில் உட்கார்ந்திருந்த அரசனை உடனடியாகத் தேடிச் சென்றான். அரசனின் கட்டளையின்பேரில் நடவடிக்கை எடுத்து, 30 ஆட்களைக் கூட்டிக்கொண்டு, கயிறுகளையும் பழைய கந்தைத் துணிகளையும் எடுத்துச் சென்றான். கயிறுகள் உரசி புண்படுத்துவதைத் தவிர்க்க அந்தக் கந்தைகளைத் தன்னுடைய அக்குள்களில் வைத்துக்கொள்ளும்படி எரேமியாவினிடம் கூறினான், பின்பு தீர்க்கதரிசியை அந்தத் துரவிலிருந்து மேலே தூக்கி எடுத்தார்கள்.—எரேமியா 38:4-13.

8 பிரபுக்களின் சதியைத் தான் குலைத்துவிட்டதனால் அவர்கள் தனக்கு என்ன செய்யக்கூடுமென எபெத்மெலேக்கு மனசங்கடம் கொண்டிருக்கலாம், எனினும் யெகோவாவின் தீர்க்கதரிசியின்பேரில் அவனுக்கிருந்த மரியாதையும் கடவுளில் அவன் கொண்டிருந்த நம்பிக்கையும் அந்தக் கவலையைவிட முக்கியத்துவத்தில் மேம்பட்டன. இதன் பலனாக, யெகோவா எரேமியாவின் மூலம் எபெத்மெலேக்குவுக்குப் பின்வருமாறு உறுதிகூறினார்: “இதோ, என் வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மைக்கென்றல்ல தீமைக்கென்றே வரப்பண்ணுவேன், அவைகள் அந்நாளிலே உன் கண்காண நிறைவேறும்; அந்நாளிலோ உன்னைத் தப்புவிப்பேன், இது யெகோவாவின் திருவாக்கு, நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே நீ ஒப்புக் கொடுக்கப்படுவதில்லை. உன்னை விடுவிக்கவே விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை, நீ என்னில் நம்பிக்கை வைத்தபடியால் உன் பிராணன் உனக்குக் கிடைக்கும் கொள்ளைப் பொருளாயிருக்கும், இது யெகோவாவின் திருவாக்கு.”—எரேமியா 39:16-18, தி.மொ.

9 இந்த வாக்கு இன்று யெகோவாவின் ஊழியருக்கு எவ்வளவு மிக மதிப்புவாய்ந்ததாயிருக்கிறது! எபெத்மெலேக்குவைப்போல் “மற்றச் செம்மறியாடுகள்,” தற்கால எரேமியா வகுப்பாரான அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேருக்குச் செய்யப்படும் அநீதிகளையும், யெகோவாவின் செய்தியை அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்திப்போட எடுக்கும் முயற்சிகளையும் காண்கின்றனர். அபிஷேகஞ் செய்யப்பட்ட வகுப்பாரைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் தங்களால் கூடிய எவ்வகை நடவடிக்கை எடுப்பதற்கும் இவர்கள் தாமதிக்கவில்லை. ஆகையால் சரியாகவே, எபெத்மெலேக்குவுக்குக் கொடுத்த யெகோவாவின் வாக்கு இவர்களைப் பலப்படுத்துகிறது, எதிரிகள் தங்களை அழித்துப்போட கடவுள் அனுமதிக்கமாட்டார், வரவிருக்கும் உலக அழிவினூடே ஒரு வகுப்பாகத் தங்களைப் பாதுகாத்துத் தம்முடைய நீதியுள்ள “புதிய பூமி”க்குள் கொண்டுவருவாரென்ற இவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

10 இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கும் எல்லாரும் சிறைப்படுத்தப்படுவார்களென பயமுறுத்தப்படுகிறதில்லை, ஆனால் எல்லாரும் ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தலை நிச்சயமாக அனுபவிக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:12) ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மனைவிகளும், மற்றும் கணவர்களும், தங்கள் சொந்த வீடுகளிலேயே கடுமையான எதிர்ப்பை, உண்மைத்தவறாமல், பல ஆண்டுகள் சகித்து வந்திருக்கின்றனர். பிள்ளைகளுங்கூட, யெகோவாவைச் சேவிக்க விரும்பினதால், பெற்றோரால் கைவிடப்பட்டிருக்கின்றனர். (மத்தேயு 10:36-38) கிறிஸ்தவ இளைஞர் பள்ளிகளிலும், பெரியவர்கள், தாங்கள் வேலைசெய்யுமிடங்களிலும் துன்புறுத்தலை எதிர்ப்படலாம். யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி வெளிப்படையாய்ச் சாட்சிகொடுப்பதில் பங்குகொள்கையில் ஓரளவு துன்புறுத்தலை அனுபவிக்கிறார்கள். இத்தகையோர் எல்லாருக்கும், இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் பொருந்துகின்றன: “நீங்கள் [சகித்து] நிலைத்திருப்பதனால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்வீர்கள்.”—லூக்கா 21:19, தி.மொ.

11 சிலருக்கு, வேறு சூழ்நிலைமைகள் அவர்களைச் சோதிக்கின்றன. அவர்கள் ஒருவேளை ஆபத்தான நோயுற்றிருக்கலாம், அது வாழ்க்கையின் பெரும்பான்மையான மகிழ்ச்சியை எடுத்துப் போடலாம். அல்லது, ஒருவேளை மிகக் கடினமான பொருளாதார நிலைமைகளை அவர்கள் எதிர்ப்பட்டிருக்கலாம். ஒருவேளை, நெருங்கிய தோழர்களின் குறிப்புகள், சில சமயங்களில், நியாயமற்றும் அன்பற்றும் இருக்கலாம். கோத்திரத் தலைவனாகிய யோபின் காரியத்தில், சாத்தான், அவனுடைய உத்தமத்தை முறித்துப் போடும்படி, இந்த வழிவகைகளையெல்லாம் பயன்படுத்தினான். இவற்றைப்போன்ற சூழ்நிலைமைகளில் நம்மை நாம் கண்டால் எவ்வாறு பிரதிபலிப்போம்?—யாக்கோபு 5:11.

12 மறுபட்சத்தில், யெகோவாவின் நோக்கங்களைப்பற்றிச் சாட்சி கொடுக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாய் அக்கறை காட்டுவோர் வெகு சொற்பப்பேரேயென நம் சொந்த அனுபவத்தில் நாம் காண்கையில் என்ன செய்வது? இதற்கும் சகிப்புத்தன்மை தேவை. ஜலப்பிரளயத்துக்கு முன்னால் நோவா பிரசங்கித்த அந்த ஆண்டுகளின்போதெல்லாம், அவனுடைய மனைவியும் குமாரரும் அவர்களுடைய மனைவிகளும் மாத்திரமே யெகோவாவைச் சேவிப்பதில் அவனைச் சேர்ந்துகொண்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மனிதவர்க்கத்தின் மீதிபேரெல்லாரும் “உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:39) அவ்வாறே, இன்றும், பெரும்பான்மையர் ‘உணருகிறதில்லை’ (உற்றுக் கவனிக்கிறதில்லை, NW). எனினும், ராஜ்ய செய்திக்கு அக்கறை காட்டுவது ஒரு காலத்தில் வெகு குறைவாயிருந்த சில இடங்களில், இப்பொழுது உண்மையான கடவுளை வணங்குவோரின் ஏராளமான அறுவடை உண்டாகியிருக்கிறது. அக்கறையின்மை அல்லது நேரடியான எதிர்ப்பு இருந்துவந்த அந்த ஆண்டுகளின்போது சகித்து நிலைத்திருந்து, இப்பொழுது இந்த மிகச் சிறந்த அறுவடையில் பங்குகொள்கிற இவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்!

‘விடாமல் தொடர்ந்து சகிக்கிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்’

13 “புதிய பூமி”யில் வாழும் அதிசயமான எதிர்பார்ப்பை இழப்பதைத் தவிர்க்க, சகல சிருஷ்டியும் எதிர்ப்படும் பெரிய விவாதமாகிய சர்வலோக அரசாட்சியைப்பற்றிய விவாதத்தைத் தெளிவாகக் காட்சியில் வைத்திருப்பது இன்றியமையாதது. நாம் விட்டுக்கொடாமல் முழுமையாய் யெகோவாவின் சார்பில் இருக்கிறோமா? இரண்டு பக்கங்களே உண்டு, நடுநிலை கிடையாதென நாம் முற்றிலும் மதித்துணருகிறோமா? இந்தப் போரில், நாம் சாவு காயப்படும் ஆட்களாவதில்லையென்றால், நம்முடைய உத்தமத்தை முறிக்க, கடவுளுக்குக் கீழ்ப்படிவதை விட்டுவிடும்படி நம்மைச் செய்விக்க, மேசியானிய ராஜ்யத்துக்குச் சாட்சி பகரும் இந்த மிக முக்கிய வேலையிலிருந்து நம்மை விலகிப்போகச் செய்ய சாத்தான் பயன்படுத்தும் முறைகள் பகைமையும் வசீகரமுமென நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.—1 பேதுரு 5:8, 9; மாற்கு 4:17-19.

14 யெகோவாவில் முழு நம்பிக்கையுடன் சார்ந்திருப்பதை நாம் நம்மில் வளர்த்து வரவேண்டும். மனித இயல்புக்கு மேற்பட்ட எதிரியின் வஞ்சகமான கண்ணிகளைத் தவிர்க்க, நம்முடைய சொந்த பலத்தைக் கொண்டு மாத்திரமே முயற்சி செய்வது எவ்வளவு முட்டாள்தனம்! ஆனால் நம் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தால், நாம் துன்பம் அனுபவிக்கையிலும் சோதனையை எதிர்ப்படுகையிலும் அவரிடம் நெருங்கி சேருவோம். (எபேசியர் 6:10, 11; நீதிமொழிகள் 3:5, 6) ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லும்படி யெகோவா நம்மைக் கட்டாயப்படுத்துகிறதில்லை. நாம் விரும்பாவிடில் அவர் வழிநடத்தப் போவதில்லை. ஆனால் வழிநடத்துதலுக்காக அவருடைய வார்த்தைக்கு நாம் கவனம் செலுத்தி, பலத்துக்காக அவரிடம் ஜெபித்து அவருடைய அமைப்புடன் நெருங்கி இருந்துவந்தால் அவர் நம்முடைய நடைகளை வழிநடத்துவார். தவறாதத் தம்முடைய சொந்த அன்பு நம்மிடம் மீண்டும் உறுதி செய்யப்பட்ட அத்தாட்சியால் அவர் நம்மைத் திடப்படுத்துவார்.—ரோமர் 8:38, 39.

15 நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களும் சோதனைகளும் உங்களைப் பரீட்சிக்கும். உங்கள் வாழ்க்கையில் யாரை முதல் வைக்கிறீர்கள்? நாமெல்லாரும் முக்கியமாய்த் தன்னலத்தைப் பற்றியே அக்கறை கொண்டிருக்கிறோமென சாத்தான் விவாதிக்கிறான். பெரும்பான்மையர் அவ்வாறு இருக்கின்றனர். இயேசு வேறுபட்டிருந்தார். நீங்கள் வேறுபட்டிருக்கிறீர்களா? யெகோவாவின் பெயரைக் கனம்பண்ணுவதை முதல் வைக்க நீங்கள் கற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், உங்கள் விசுவாசத்தைப் பரீட்சிக்கும் நெருக்கடிநிலைகளைத் தப்பிக்கொள்ள வழிகாண்பதற்குப் பதிலாக, யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு அவற்றைப் பயன்படுத்த உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும்படி அவரிடம் ஜெபித்து, அவற்றை நீங்கள் நேரடியாக எதிர்ப்பட முடியும். நீங்கள் அனுபவிக்கும் துன்பம் சகிப்புத்தன்மையை உங்களில் உண்டுபண்ணும்; சகிப்புத்தன்மை யெகோவாவின் பேரிலுள்ள உங்கள் அன்பினிமித்தம் அவருடைய அங்கீகாரத்தைக் கொண்டுவரும். “சோதனையைச் [தொடர்ந்து, NW] சகிக்கிற மனுஷன் பாக்கியவான் [மகிழ்ச்சியுள்ளவன், NW]. அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் [யெகோவா, NW] தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்.”—யாக்கோபு 1:2-4, 12; ரோமர் 5:3, 4.

16 யெகோவாவின் சேவை செய்ய வெறுமென தொடங்குவது அல்லது சிறிது காலமே அதில் சகித்து நிலைத்திருப்பது மாத்திரம் போதாது. நாம் ஓர் ஓட்டப் பந்தயத்தில் இருக்கிறோம், முடிவு கோட்டைத் தாண்டுகிறவர்களுக்கே பரிசு கிடைக்கும். இந்தப் பழைய ஒழுங்குமுறை நொறுங்கி விழுந்து அழிகையில் தங்கள் கண்களைப் பரிசின்பேரில் உறுதியாய் ஊன்றவைத்து கடுமுயற்சியில் தங்களை இன்னும் ஈடுபடுத்திக் கொண்டிருப்போர் யாவரும் மகிழ்ச்சியுள்ளவர்கள்! எத்தகைய மகிமையான எதிர்பார்ப்புகள் அப்பொழுது அவர்களுக்குக் காத்திருக்கின்றன!—எபிரெயர் 12:1-3; மத்தேயு 24:13.

[கேள்விகள்]

1. (எ) யெகோவாவின் சாட்சிகள் ஏன் உண்மையில் மகிழ்ச்சியுள்ள ஜனங்கள்? (பி) ஆனால் எபிரெயர் 10:36-ல் உள்ள என்ன அறிவுரை நம்மெல்லாருக்கும் பொருந்துகிறது?

2. இயேசுவின் சீஷருக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை?

3. (எ) எவ்வாறு ‘இயேசுவின் நாமத்தினிமித்தம்’ அவருடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்? (பி) துன்புறுத்துவோர், எந்தக் கருத்தில், இயேசுவை அனுப்பினவரை ‘அறியாதிருக்கிறார்கள்’? (சி) இந்தத் துன்புறுத்தலுக்கு முக்கியமாய்ப் பொறுப்புள்ளவன் யார்?

4. (எ) வெளிப்படுத்துதல் 12:17-ன் நிறைவேற்றம் எவ்வாறு நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது? (பி) சாத்தானின் நோக்கமென்ன?

5. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன?

6. (எ) அரசாங்க அதிகாரிகளிடம் நாம் என்ன மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும்? (பி) ஆனால் என்ன செய்ய நாம் உறுதியாய்த் தீர்மானித்திருக்கிறோம்? (சி) துன்புறுத்தப்பட்டாலும், நாம் எவ்வாறு தொடர்ந்து மகிழ்ச்சியுடனிருக்கலாம்?

7. (எ) எபெத்மெலேக்கு யார்? அவன் ஏன் இப்பொழுது நம்முடைய கவனத்துக்குரியவனாக இருக்கிறான்? (பி) எரேமியா சேற்று நிறைந்தத் துரவுக்குள் போடப்பட்டதை எபெத்மெலேக்கு கேள்விப்பட்டபோது, அவன் என்ன நடவடிக்கை எடுத்தான்? ஏன்?

8. திரும்ப உறுதிதரும் என்ன வாக்கை யெகோவா எபெத்மெலேக்குவுக்கு அனுப்பினார்? ஏன்?

9. (எ) “மற்றச் செம்மறியாடுகள்” எவ்வாறு எபெத்மெலேக்குவைப்போல் இருந்துவருகின்றனர்? (பி) ஆகவே யெகோவா எபெத்மெலேக்குவுக்குக் கொடுத்த வாக்கு இன்று “மற்றச் செம்மறியாடுகளுக்கு” எதைக் குறிக்கிறது?

10. வாழ்க்கையின் எப்பகுதிகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர்?

11. (எ) வேறு என்ன சூழ்நிலைமைகள் சிலருக்குக் கடுமையான பரீட்சையளிக்கின்றன? (பி) வேறு யார் இவற்றையெல்லாம் அனுபவித்தான்? ஏன்?

12. (எ) நோவாவுக்கு ஏன் தன் ஊழியத்தில் முக்கியமாய்ச் சகிப்புத்தன்மை தேவைப்பட்டது? (பி) நம்முடைய நாளில் நிலைமை எவ்வாறு அதற்கொப்பாய் இருக்கிறது?

13. (எ) தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்க, எதை நாம் தெளிவான காட்சியில் வைத்திருக்க வேண்டும்? (பி) சாத்தான் பயன்படுத்தும் முறைகளைக் குறித்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

14. (எ) என்ன உறவை நாம் வளர்க்க வேண்டும்? யாருடன்? (பி) அவர் நமக்கு எவ்வாறு உதவி செய்வார்?

15. (எ) நம்முடைய வாழ்க்கையில் யார் முதல் வரவேண்டும்? (பி) நம்முடைய விசுவாசத்தைப் பரீட்சிக்கும் நெருக்கடிநிலைகளை நாம் எவ்வாறு கருதவேண்டும்?

16. என்ன இலக்கை அடைய நாம் ஊக்கமாய் முயற்சி செய்ய வேண்டும்?