Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாத் தேசத்தாரிலிருந்தும்தப்பிப்பிழைப்பவர்கள்

எல்லாத் தேசத்தாரிலிருந்தும்தப்பிப்பிழைப்பவர்கள்

அதிகாரம் 8

எல்லாத் தேசத்தாரிலிருந்தும் தப்பிப்பிழைப்பவர்கள்

எல்லாத் தேசங்களின் மற்றும் கோத்திரங்களின் ஜனங்களிலும் யெகோவா அன்புள்ள அக்கறை கொண்டிருக்கிறார். பூமியின் எல்லாக் குடும்பங்களும் தம்முடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்து மகிழக்கூடும்படி அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். நோவாவின் குமாரன் சேமின் சந்ததியில் வந்த ஆபிராமுக்கு (ஆபிரகாமுக்கு) யெகோவா பின்வருமாறு கூறினார்: “நீ உன் தேசத்தையும் உன் இனத்தாரையும் உன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜனமாக்கி உன்னை ஆசீர்வதித்து உன் பேரை மேன்மைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியின் வம்சங்களெல்லாம் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 12:1-3, தி.மொ.; அப்போஸ்தலர் 7:2-4) “பூமியின் வம்சங்களெல்லாம்”—இது இன்று நம்மையும் உள்ளடக்குகிறது, நாம் எந்த ஜனத்தாரில் பிறந்திருந்தாலும் அல்லது எந்த மொழியைப் பேசினாலும் சரி, நாம் அதில் அடங்கியிருக்கிறோம்.—சங்கீதம் 65:2.

2யெகோவா இந்த வாக்குத்தத்தத்தை யாரிடம் கூறினாரோ அவன் விசுவாசமுள்ள மனிதன், அவ்வாறே நாமும், இங்கே வாக்குக் கொடுத்த, கடவுள் தரும் ஆசீர்வாதத்தில் பங்குகொள்ள வேண்டுமென்றால் விசுவாசங்கொண்டிருக்க வேண்டும். (யாக்கோபு 2:23; எபிரெயர் 11:6) ஆபிரகாமின் விசுவாசம் செயலற்ற வெறும் நம்பிக்கையல்ல, அதோடு செயலும் சேர்ந்திருந்தது. இந்த விசுவாசம் அவன், மெசொபொத்தேமியாவை விட்டு இடம் பெயர்ந்து, தான் முன்னொருபோதும் கண்டிராத தூர தேசத்துக்குச் செல்லும்படி செய்வித்தது. “விசுவாசத்தினாலே அவன், வாக்குத்தத்த தேசத்திலே அந்நிய நாட்டில் சஞ்சரிப்பவன்போல பரதேசியாகச் சஞ்சரித்”தான், அங்கிருந்த நகர-ராஜ்யங்கள் எதனுடனும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் உண்மையான “அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு [கடவுளுடைய ராஜ்யத்துக்கு] அவன் காத்திருந்தான்; அதன் சிற்பாசாரியும் அதைக் கட்டுகிறவரும் கடவுளே.”—எபிரெயர் 11:8-10, தி.மொ.

3ஆபிரகாம் 100 வயதாகி சாராள் 90 வயதாயிருந்தபோது, யெகோவா அற்புதமாய் அவர்களுக்கு ஒரு குமாரனை, ஈசாக்கைத் தந்து ஆசீர்வதித்தார். இந்தக் குமாரன் சம்பந்தமாக, ஆபிரகாம் கடவுளிடம் தனக்கிருந்த விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் ஊடுருவச் சோதிக்கும் ஒரு பரீட்சைக்குட்பட்டான். இப்பொழுது வாலிபனாயிருந்த ஈசாக்கை மொரியா தேசத்துக்கு அழைத்துக்கொண்டு சென்று அங்கே அவனைத் தகனபலியாகப் பலியிடும்படி யெகோவா ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார். உயிர்த்தெழுப்புவதன்மூலம் தன் குமாரனைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவருவதற்குக் கடவுளுக்கு இருக்கும் திறமையில் விசுவாசம் வைத்து ஆபிரகாம் கீழ்ப்படிய முற்பட்டான். (எபிரெயர் 11:17-19) ஈசாக்கு, தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்தான், அவன் ஏற்கெனவே பலிபீடத்தின்மேல் கட்டிக் கிடத்தப்பட்டிருந்தான். ஆபிரகாம் அவனைக் கொல்வதற்குத் தன் கையில் கத்தியுடன் இருந்தான் அப்பொழுது யெகோவாவின் தூதன் தலையிட்டார். ஆபிரகாம் கடவுளுக்கு எதையும் கொடுக்க மறுக்கமாட்டான் என்று நிரூபிப்பதற்குப் போதிய அளவுவரை அந்தப் பரீட்சை சென்றுவிட்டது. ஆகையால், பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறபிரகாரம் கடவுள் ஆபிரகாமுடன் தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்:

4“நீ உன் புத்திரன் என்றும் உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் [வித்தின் மூலம், NW] பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் [தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள், NW] என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.”—ஆதியாகமம் 22:15-18.

5 பெரிய ஆபிரகாம் யெகோவா என்பதையும் ஈசாக்கு இயேசு கிறிஸ்துவை முன்குறித்துக் காட்டினான் என்பதையும் நாம் தெளிவாய் விளங்கிக் கொள்கையில், இந்த நிகழ்ச்சிகள் தனிப்பட்ட வண்ணமாய் நமக்கு எவ்வளவு முக்கியமென்பதை நாம் மதித்துணரத் தொடங்க முடியும். உண்மையில், யெகோவா தேவனிடம் நாம் நடந்துகொள்ளும் முறை நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஆபிரகாம் ஈசாக்கைப் பலி செலுத்த முயன்றதால் சித்தரித்துக் காட்டப்பட்டபடி, கடவுள் உண்மையில் தம்முடைய ஒரேபேறான குமாரனை நம்முடைய பாவங்களினிமித்தம் பலியாகக் கொடுத்ததனால் நித்திய ஜீவனடையும் எதிர்பார்ப்பு நமக்குக் கூடியதாயிருக்கிறது. (யோவான் 3:16) யெகோவாவை அவமதித்து அல்லது அவருடைய அன்புள்ள நோக்கங்களை இளப்பமாகக் கருதி இவ்வாறு அவர்பேரில் ‘சாபத்தைக் கூறுவதில்’ விடாது தொடருவோர் எவரும் தங்களுடைய நித்திய அழிவைக் குறிக்கும் சாபத்துக்குள்ளாவார்கள். (1 சாமுவேல் 3:12-14; 2:12-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால் நாம் நன்றி மதித்துணரும் ஆட்களாயிருந்தால், பெரிய ஆபிரகாமை “ஆசீர்வதிப்போம்.” எவ்வாறு? கடவுளுடைய குமாரன் மூலமாய் வரும் தகுதியற்றப் பரிசாகிய உயிர் உட்பட, எல்லா நல்ல காரியங்களும் யெகோவாவிடமிருந்தே வருகின்றனவென்று நன்றியோடு மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்வதன் மூலமே. மேலும், யெகோவாவின் நற்குணத்தையும் அவருடைய அரசாட்சியின் மிகச் சிறந்த பண்புகளையும் பற்றி நாம் மற்றவர்களுக்குச் சொல்வோம். (யாக்கோபு 1:17; சங்கீதம் 145:7-13) இவ்வாறு அவரிடமிருந்து என்றென்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குரிய நிலையில் நம்மை வைக்கிறோம்.

வாக்குப்பண்ணப்பட்ட ஆபிரகாமின் “வித்து”

6யெகோவா, மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான தம்முடைய ஏற்பாட்டின் பாகமாக நீதியுள்ள ஒரு பரலோக அரசாங்கத்தை நோக்கத்தில் கொண்டிருந்தார். இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் வம்ச பரம்பரையில், அவனுடைய மிக அதிக முக்கிய சந்ததியாக, அல்லது “வித்தாகப்” பிறந்தார், அரசாதிகாரத்தை யெகோவா அவருக்கே அளித்தார். (கலாத்தியர் 3:16; மத்தேயு 1:1) ஆகவே, கடவுள் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கில் குறிப்பிட்டபடி, இயேசு கிறிஸ்துவின் மூலமே பூமியின் எல்லா ஜாதியாரிலிருந்தும் வரும் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படுவதைச் செய்துகொண்டிருக்கிறீர்களா? உதாரணமாக, இயேசுவின் உயிர் பலியாகச் செலுத்தப்பட்டது உங்களுக்கு எவ்வளவு முக்கியமென்பதை நீங்கள் நன்றியோடு மதித்துணருகிறீர்களென்று உங்கள் வாழ்க்கைப் போக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறதா? அவருடைய அரசாதிகாரத்துக்கு உங்களை உண்மையில் கீழ்ப்படுத்துகிறீர்களா?—யோவான் 3:36; அப்போஸ்தலர் 4:12.

7பரலோக நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன முன்காட்சி அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்டது, அதில் பரலோக சீயோன் மலையில் மற்றவர்களும் இயேசு கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதை அவன் கண்டான். அவர்களுங்கூட “ஆபிரகாமின் வித்தின்” பாகமானவர்கள். வெளிப்படுத்துதல் 14:1-5-ல் சொல்லியிருக்கிறபடி, அவர்கள் “பூமியிலிருந்து [மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து, NW] கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட”வர்கள், அவர்களுடைய எண்ணிக்கை 1,44,000. (கலாத்தியர் 3:26-29) அவர்களில் அடங்கியிருப்போர் யாவர்? நீதியுள்ள மனச்சார்புடைய ஆட்கள் எல்லாரையும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்வது ஒருபோதும் கடவுளுடைய நோக்கமாக இல்லை என்று பைபிளில் வெகு தெளிவாய்க் காட்டப்பட்டிருக்கிறது. (மத்தேயு 11:11; அப்போஸ்தலர் 2:34; சங்கீதம் 37:29) பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் பங்குகொள்ளும் இந்த மிகச் சிறந்த சிலாக்கியம் அவரோடு அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகிற ஒரு “சிறு மந்தை”க்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.—லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6.

8இந்தச் “சிறு மந்தை”யைத் தெரிந்தெடுப்பது எப்படித் தொடர்ந்து செய்யப்பட்டது? இந்தப் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளும்படியான கிருபையுள்ள அழைப்பு முதலாவது மாம்சப்படியான இஸ்ரவேலருக்கு நீட்டப்பட்டது. ஆனால் அவர்களுடைய விசுவாசக் குறைவினால் 1,44,000 பேரான இந்த முழு எண்ணிக்கையை அவர்கள் அளிக்கவில்லை. ஆகவே சமாரியரும், பின்னால் எல்லாத் தேசங்களின் ஜனங்களும் அழைக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 1:8) முதலாவது கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளானவர்கள் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்டனர். இந்தத் தொகுதியைத் தெரிந்தெடுத்தல் 1,44,000 பேர் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக முத்திரைபோட்டு முடியும் வரையில் தொடருகிறது. பின்பு அந்தப் பரலோக அரசாங்கத்தின்மதித்துணர்வுள்ள குடிமக்களாகப் பூமியில் வாழப்போகிற ஆட்களைக் கூட்டிச் சேர்ப்பதற்குக் கவனம் செலுத்தப்படுகிறது.

9கிறிஸ்துவுடன் அந்தப் பரலோக ராஜ்யத்தில் சுதந்தரவாளிகளாக இருப்பவர்கள், “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,” “பரிசுத்தவான்கள்,” கடவுளால் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்’ என்று வேத எழுத்துக்களில் குறிப்பிடப்படுகின்றனர். (2 தீமோத்தேயு 2:10; 1 கொரிந்தியர் 6:1, 2; 2 கொரிந்தியர் 1:21) அவர்கள் மொத்தமாய்க் கிறிஸ்துவின் “மணவாட்டி” எனவும் விவரிக்கப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 21:2, 9; எபேசியர் 5:22-32) மற்ற நோக்குநிலைகளிலிருந்து காண்கையில் அவர்கள் கிறிஸ்துவின் “சகோதரர்,” “கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரர்,” கடவுளின் “புத்திரர்” எனவும் அழைக்கப்படுகின்றனர். (எபிரெயர் 2:10, 11; ரோமர் 8:15-17; எபேசியர் 1:5) அவர்கள் எந்தத் தேசத்தாராயினும் பொருட்படுத்தாமல், ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பேச, அவர்கள் “தேவனுடைய இஸ்ரவேலர்.” (கலாத்தியர் 6:16; ரோமர் 2:28, 29; 9:6-8) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருடன் யெகோவா தம்முடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையை முடிவு செய்தபோது, ஆவிக்குரிய இஸ்ரவேலரைத் தம்முடன் புதிய உடன்படிக்கைக்குள் கொண்டுவந்தார். ஆனால் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருக்கையில் தாம் அவர்களோடு செயல்தொடர்புகள் கொண்டு நடப்பித்தவை வரப்போகிற காரியங்களுக்கு மாதிரியை வைத்தன. (எபிரெயர் 10:1) அப்படியானால், கடவுள் தம்முடைய “சொந்த சம்பத்தாகத்” தெரிந்துகொண்ட மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஜனம் யாரை முன்குறித்துக் காட்டினது? பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளுவதற்குக் கடவுள் தெரிந்துகொண்ட ஆவிக்குரிய இஸ்ரவேலையே உண்மை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. (யாத்திராகமம் 19:5, 6-ஐ 1 பேதுரு 1:3, 4-உடனும் 2:9-உடனும் ஒத்துப் பாருங்கள்.) கிறிஸ்துவுடன் இவர்கள் அரசாங்க ஆட்சி வட்டாரத்தை உண்டுபண்ணுகின்றனர், இதன் மூலமே மனிதவர்க்கத்துக்குள் கீழ்ப்படியும் மற்ற எல்லாருக்கும் ஆசீர்வாதங்கள் விரிவாக்கப்படும். இதை நன்றியோடு மதித்துணருவது பைபிளை விளங்கிக் கொள்வதற்கு ஒரு முக்கிய அடிப்படையாகும்.

“வித்து”வின் மூலம் ஆசீர்வதிக்கப்படுபவர்கள்

10இஸ்ரவேல் ஜனத்தோடு கடவுள் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டிருந்த காலத்தின்போது, இஸ்ரவேலரல்லாத ஆனால் இஸ்ரவேலரோடு கூட்டுறவில் உண்மை வணக்கத்தில் பங்குகொள்ள தங்கள் இருதயம் தூண்டி இயக்கிய ஆட்களுக்கும் அவர் அன்புள்ள ஏற்பாடுகளைச் செய்தார். பைபிள் பதிவில் இவர்களைப் பற்றிக் கவனிக்கத்தக்கக் குறிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் தற்கால ஈடிணைப் பகுதிகள் உண்டா? ஆம், நிச்சயமாகவே. ஆவிக்குரிய இஸ்ரவேலரல்லாத ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக நித்திய ஜீவனடையும் அதிசயமான எதிர்பார்ப்பை இருதயத்தில் போற்றி வளர்க்கிறவர்களை இவர்கள் பல வழிகளில் படமாகக் குறிக்கிறார்கள். “பூமியிலுள்ள சகல ஜாதி”களிலிருந்து வரும் ஜனங்களும் ஆபிரகாமின் “வித்து”வின் மூலம் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என்று கடவுள் ஆபிரகாமிடம் குறிப்பிட்டுப் பேசின அந்த ஆட்கள் இவர்களே.—ஆதியாகமம் 22:18; உபாகமம் 32:43.

11 உண்மையான வணக்கத்தில் சகல மனிதவர்க்கமும் ஒற்றுமைப்பட வேண்டுமென்பது எப்பொழுதுமே கடவுளுடைய நோக்கம். பொருத்தமாகவே, அரசன் சாலொமோன் எருசலேமில் தான் கட்டின ஆலயத்தின் பிரதிஷ்டையின்போது, இஸ்ரவேல் ஜனத்தோடுகூட ஏற்கத்தக்க வணக்கத்தைச் செலுத்த நாடும் அந்நியரின் ஜெபத்தை யெகோவா கேட்கவேண்டுமென விண்ணப்பித்து ஜெபித்தான். (2 நாளாகமம் 6:32, 33) மேலும் ஏசாயா 56:6, 7-ல் (தி.மொ.) கடவுள் பின்வருமாறு வாக்குக் கொடுத்தார்: “யெகோவாவைச் சேவிக்கவும் அவர் நாமத்தை நேசிக்கவும் அவர் தாசராயிருக்கவும் அவரைச் சேர்ந்துகொள்ளுகிற அந்நியரையும் . . . நான் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; . . . என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெப வீடு என்னப்படும்.” இங்கே தெரிவித்துள்ள ஆவியைப் பிரதிபலித்து தற்கால “அந்நியர்கள்” சகல தேசத்தாரிலிருந்தும் வந்து இப்பொழுது ஒன்று சேருகிறார்கள், வெறுமென தற்செயலாக வந்து கவனிப்போராக அல்ல, ‘யெகோவாவைச் சேர்ந்துகொள்ளும்’ ஆட்களாகவே வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக் கொடுத்து, இதைத் தண்ணீர் முழுக்காட்டினால் அடையாளப்படுத்தி, பின்பு ‘யெகோவாவின் பெயருக்கும்’ அது குறித்து நிற்கும் எல்லாவற்றிற்கும் தாங்கள் கொண்டுள்ள அன்பை மெய்ப்பித்துக் காட்டும் முறையில் சேவிப்பதனால் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.—மத்தேயு 28:19, 20.

12ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் கேட்கப்படும் அதே உண்மை இவர்களிடமும் கேட்கப்படுகிறது, எவ்வகையிலும் குறைவாய்க் கேட்கப்படுகிறதில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் உண்மையான வணக்கத்தை ஏற்ற “தங்குகிற பரதேசி” இஸ்ரவேல் கைக்கொள்ள கடமைப்பட்ட அதே சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென யெகோவா கட்டளையிட்டார். (எண்ணாகமம் 15:15, 16, தி.மொ.) அவர்களுக்கு இடையிலுள்ள உறவு வெறுமென வெறுப்புக் காட்டாதிருப்பதல்ல ஆனால் உண்மையான அன்புக்குரியதாயிருக்க வேண்டும். (லேவியராகமம் 19:34) அதைப் போலவே, அந்தப் பரதேசிகள் முன்குறித்துக் காட்டினவர்களும் யெகோவாவின் கட்டளைகளுக்கு முழுவதும் பொருந்தத் தங்கள் வாழ்க்கையைக் கொண்டுவரவும் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேரோடு அன்புள்ள ஒற்றுமையில் சேவிக்கவும் நாடித் தேடுகிறார்கள்.—ஏசாயா 61:5, தி.மொ.

13தம்முடைய தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலமாய் யெகோவா விவரித்த “எல்லா ஜாதிகளி”லிருந்தும் வரும் ஆவலுள்ள திரள் கூட்டமான ஆட்கள் இன்று யெகோவாவின் வணக்கத்துக்குரிய சர்வலோக ஆலயத்துக்குத் திரளாய்க் கூடிவந்துகொண்டிருக்கிறார்கள். அவர் முன்னறிவித்ததாவது: “பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” இதன் பலனாக அவர்கள், ‘தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடித்துவிட்டனர்,’ மேலும், சண்டை நிறைந்த இவ்வுலகத்தின் மத்தியிலும் ‘இனி அவர்கள் யுத்தம் கற்பதில்லை.’ (ஏசாயா 2:1-4, தி.மொ.) மகிழ்ச்சியுள்ள இந்தத் திரள் கூட்டத்தில் உங்களை நீங்கள் காண்கிறீர்களா? யெகோவாவின் கட்டளைகளைக் கற்றுக் கொள்ளவும், அவற்றை உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கவும் போர்த்தளவாடங்களில் நம்பிக்கை வைப்பதை நிறுத்தவும் அவர்களுக்கிருக்கும் ஆவலில் நீங்கள் பங்குகொள்ளுகிறீர்களா? இந்தப் போக்கைப் பின்தொடரும் ஒரு திரள் கூட்டத்தார் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைத்துத் தம்முடைய சமாதானமான “புதிய பூமிக்குள்” வாழ்வார்களென்று கடவுள் வாக்களித்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; சங்கீதம் 46:8, 9.

[கேள்விகள்]

1. மனிதவர்க்க “வம்சங்களெல்லா”வற்றிற்கும் கடவுளுடைய அங்கீகாரம் கிடைக்கக்கூடியதென ஆபிரகாமுக்குச் செய்யப்பட்ட எந்த வாக்குத்தத்தம் காட்டுகிறது?

2. (எ) ஆபிரகாமைப்போல், எந்தப் பண்பு நமக்குத் தேவை? (பி) எபிரெயர் 11:8-10-ல் காட்டப்பட்டிருக்கிறபடி, இந்தப் பண்பை ஆபிரகாம் எப்படிச் செயலில் நிரூபித்துக் காட்டினான்?

3. ஈசாக்கின் சம்பந்தமாக ஆபிரகாம் தன் விசுவாசத்தை ஊடுருவச் சோதிக்கும் என்ன பரீட்சைக்குட்பட்டான்?

4. அந்தச் சந்தர்ப்பத்தில், சகல தேசங்களின் ஜனங்கள் சம்பந்தமாக, மேலும் என்ன முக்கியத்துவம் வாய்ந்த வாக்குத்தத்தத்தைக் கடவுள் கொடுத்தார்?

5. (எ) ஆபிரகாம் ஈசாக்கைப் பலிசெலுத்த முயன்றதால் எது முன்குறித்துக் காட்டப்பட்டது? (பி) ஆதியாகமம் 12:3-ன் நிறைவேற்றத்தில், ஜனங்கள் எப்படிப் பெரிய ஆபிரகாமின்பேரில் ‘சாபத்தைக் கூறுகிறார்கள்’? அதன் விளைவென்ன? (சி) நாம் அவரை எப்படி “ஆசீர்வதிக்க” முடியும்?

6. (எ) ஆபிரகாமின் முதன்மையான “வித்து” யார்? (பி) அவர் மூலமே வரும் ஆசீர்வாதத்தை நாம் எவ்வாறு அடைய முடியும்?

7. (எ) “ஆபிரகாமின் வித்து”வில் வேறு எவரும் உள்ளடங்குகின்றனர்? (பி) கடவுளை உண்மையுடன் சேவிக்கும் எல்லாரும் பரலோகத்துக்குப் போவதில்லையென நாம் எப்படி அறிகிறோம்?

8. “சிறு மந்தை”யைத் தெரிந்தெடுப்பது எப்பொழுது தொடங்கினது? எவ்வளவு காலம் அது தொடர்ந்து நீடிக்கிறது?

9. (எ) பைபிளில் என்ன சொற்றொடர்கள் இந்தப் பரலோக வகுப்புக்குப் பயன்படுத்தியிருக்கின்றன? (பி) மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலர் யாரை முன்குறித்துக் காட்டினர்?

10. யெகோவாவை வணங்கின இஸ்ரவேலரல்லாதவர்கள் யாரைப் படமாகக் குறிக்கின்றனர்?

11. (எ) சாலொமோனின் ஆலய பிரதிஷ்டையின்போது இந்தத் தொகுதியாரைப் பற்றி என்ன குறிப்பு செய்யப்பட்டது? (பி) ஏசாயா 56:6, 7-ல் முன்னறிவித்துள்ளபடி, நம்முடைய நாளில் எவ்வாறு “அந்நியர்கள்” ‘யெகோவாவைச் சேர்ந்துகொள்ளுகிறார்கள்’?

12. கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாயிருக்கும் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலுக்குப் பொருந்தும் அதே உயர் தராதரங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமாவென மோசேயின் நியாயப்பிரமாணம் எவ்வாறு தெரிவிக்கிறது?

13. ‘புதிய பூமிக்குள்’ தப்பிப்பிழைத்திருக்க விரும்பினால் ஏசாயா 2:1-4-ல் உள்ள என்ன நுட்ப விவரங்களை நாம் நினைவில் வைத்து நடக்கவேண்டும்?