Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள்கேள்விப்பட்டோம்’

‘கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள்கேள்விப்பட்டோம்’

அதிகாரம் 19

‘கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள்கேள்விப்பட்டோம்’

“கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால் நாங்கள் உங்களோடே போவோம்.” இவ்வாறே எல்லா ஜாதிகளிலுமிருந்தும் வரும் ஜனங்கள் சொல்வார்களென பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. (சகரியா 8:23, தி.மொ.) சகரியா தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற இந்தக் கடவுள் யார்? நாம் எவ்வித சந்தேகத்திலும் விடப்பட்டில்லை. மற்றவற்றோடு ஒப்பிட சிறியதான இந்தப் பைபிள் புத்தகம் ஒன்றிலேயே அவருடைய சொந்தப் பெயர் 135 தடவைகள் தோன்றுகிறது. யெகோவா என்பதே அந்தப் பெயர்!

2 யெகோவா என்ற தம்முடைய சொந்தப் பெயரைக் குறித்து அவர்தாமே பின்வருமாறு சொன்னார்: “என்றென்றும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்னை நினைப்பதற்குரிய பேர்.” (யாத்திராகமம் 3:15, தி.மொ.) எபிரெய பைபிள் பகுதி முழுவதிலும் இது ஏறக்குறைய 7,000 தடவைகள் தோன்றும் இந்த உண்மையால் இந்தப் பெயரின் முக்கியத்துவம் குறித்துக் காட்டப்படுகிறது—இது கடவுள், கர்த்தர் என்பவற்றைப்போன்ற பட்டப் பெயர்களின் ஒன்றுசேர்ந்த மொத்த எண்ணிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகம். முன்னறிவித்திருக்கிறபடி, இந்தக் “கடைசி நாட்களில்” இந்தப் பெயர் ஒரே தொகுதி ஜனங்களோடு முதன்மையாய் இணைக்கப்பட்டிருக்கிறது.

“நாங்கள் உங்களோடே போவோம்”

3 இதைக் குறித்துத் தீர்க்கதரிசி சகரியா, பூர்வ எருசலேமில் யெகோவாவின் ஆலயம் திரும்பக் கட்டப்பட்ட சமயத்தில், பின்வருமாறு எழுதும்படி கடவுளால் ஏவப்பட்டான்: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: ஜாதியாரும் அநேக ஊர்களின் குடிகளும் இன்னும் வருவார்கள். ஒரு ஊரின் குடிகள் மறு ஊரின் குடிகளிடம் போய், நாம் யெகோவாவின் தயவை நாடவும் சேனைகளின் யெகோவாவைத் தேடவும் விரைந்து செல்வோம் வாருங்கள், நாங்களும் வருவோம் என்று சொல்வார்கள். அநேக தேசத்தாரும் பல ஜாதியாரும் எருசலேமிலே சேனைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவின் தயவை நாடவும் வருவார்கள். சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார், அந்நாட்களிலே பலவித பாஷைக்காரராகிய புற ஜாதியாரில் பத்து மனிதர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு, கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால் நாங்கள் உங்களோடே போவோம் என்று சொல்லி அவனைப் பிடித்துக்கொள்வார்கள்.”—சகரியா 8:20-23, தி.மொ.

4 செருபாபேலின் நாட்களில் தொடங்கி, எருசலேமில் ஆலயம் திரும்பக்கட்டப்பட்டது சம்பந்தமாய் இந்தத் தீர்க்கதரிசனத்தின் மட்டுப்பட்ட நிறைவேற்றம், நம்முடைய நாளில் மிக மேன்மையான நிறைவேற்றத்தை முன் குறித்துக் காட்டினது. எந்த ஜனங்கள் சம்பந்தமாக? ‘யெகோவாவைத் தேடுகிறவர்கள்,’ தங்கள் பாரம்பரிய வணக்கத்தைப் பற்றிக்கொண்டிருக்கிற யூதர்கள் செய்கிறதைபோல், மூட நம்பிக்கையுடன் கடவுளுடைய பெயரை உச்சரிக்கவும் மறுக்கிற ஜனங்களிடம் போவது நிச்சயமாகவே பகுத்தறிவுக்கு ஒத்ததாயிராது. தெய்வீகப் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் யூதப் பழக்கத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவ மண்டலத்தினிடமும் செல்லமாட்டார்கள். யெகோவாவை வணங்குவதற்கு நம்முடைய நாளின் ஜனங்கள் பூமிக்குரிய எருசலேமுக்கும் செல்கிறதில்லை. இயேசு முன்னறிவித்தபடி, அங்கிருந்தத் தம்முடைய ஆலயத்தைக் கடவுள் கைவிட்டார், அது இந்நாள்வரையில் ஒருபோதும் கட்டப்படாதபடி, பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டுப் போயிற்று. இது, கிறிஸ்தவரல்லாத இஸ்ரவேலோடு கடவுள் இல்லையென பகுத்தறிவுள்ள எவருக்கும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.—மத்தேயு 23:37, 38; 1 இராஜாக்கள் 9:8, 9-ஐ ஒத்துப் பாருங்கள்.

5 இன்று யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிற “எருசலேம்” எபிரெயர் 12:22-ல் “ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேம்” என விவரிக்கப்பட்டிருக்கிறது. பூர்வ எருசலேம் யெகோவாவின் ஆட்சிக்குக் காணக்கூடிய அடையாளமாயிருந்ததுபோல், இந்தப் “பரம எருசலேம்” 1914-ல் புறஜாதியாரின் காலங்களின் முடிவில் இயேசு கிறிஸ்து அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கிற கடவுளுடைய மேசியானிய ராஜ்யம். (1 நாளாகமம் 29:23; லூக்கா 21:24) இந்த அரசாங்கத்துக்கு இங்கே பூமியில் பிரதிநிதிகள் இருக்கின்றனர், இவர்கள் அதை மனிதவர்க்கத்தின் ஒரே நிச்சய நம்பிக்கையென உண்மைத்தவறாமல் யாவருக்கும் அறிவித்து வருகிறார்கள். 1914-ல் இந்த ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதென முதன்முதல் அறிவித்தவர்கள் இந்தச் “சிறு மந்தை”யின் மீதிபேரே. இவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பேச “தேவனுடைய இஸ்ரவேலர்.” இவர்கள் சகரியா குறிப்பிட்டு தீர்க்கதரிசனம் உரைத்த ஆவிக்குரிய ‘யூதர்கள்.’ (லூக்கா 12:32; கலாத்தியர் 6:16; ரோமர் 2:28, 29) கடவுள்பேரிலுள்ள தங்கள் அன்பினாலும் யெகோவாவே சர்வவல்லமையுள்ள உண்மையான கடவுள் என்பதை யாவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய உத்தரவாதத்தைத் தாங்கள் மதித்துணர்ந்ததாலும், 1931 முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைத் தாங்கள் ஏற்றனர்.—ஏசாயா 43:10-12.

எவ்வாறு அடையாளங் கண்டுகொள்ளப்படுகின்றனர்?

6 இந்த ஆவிக்குரிய யூதர்கள், யெகோவாவின் சாட்சிகளாகத் தங்கள் பொறுப்பை உண்மையுடன் நிறைவேற்றியிருப்பதன் பலனாக, பூகோள முழுவதிலும் உண்மை மனமுள்ள பத்து லட்சக்கணக்கான ஆட்கள் “யெகோவாவைத் தேட” உதவி செய்யப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த ஜனங்களோடு யெகோவா உண்மையாகவே இருக்கிறார் என்று இவர்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டனர். எது இவர்களை நம்பவைக்கிறது? பல காரியங்கள், பின்வருபவை அவற்றில் முதன்மையானவை:

(1) யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகள் யாவும் பைபிளில் ஆதாரங்கொண்டிருக்கின்றன—வெறுமென தனித்தனி வசனங்களின்பேரில் அல்ல, கடவுளுடைய வார்த்தை முழுவதிலுமே. தங்கள் சொந்த மனதில் தோன்றும் காரியங்களைக் கற்பிப்பதற்குப் பதிலாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டி கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். யெகோவாவையே பேச விடுவதன்மூலம் அவர்கள் அவரைக் கனப்படுத்துகிறார்கள். (யோவான் 7:16-18-ஐ ஒத்துப் பாருங்கள்.)

(2) கடவுள்தாமே ஜாதிகளிலிருந்து “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத்” தெரிந்துகொள்வாரென்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (அப்போஸ்தலர் 15:14)அவர்கள் தாங்கள்தாமே அவருடைய பெயரை நோக்கிக் கூப்பிடுவார்கள் மேலும் அதை பூமி முழுவதும் யாவருக்கும் தெரியப்படுத்தத் தங்களைத் தீவிரமாய் ஈடுபடுத்துவார்கள். (ஏசாயா 12:4, 5) உலகமெங்கும், யெகோவாவின் சாட்சிகளே கடவுளுடைய சொந்தப் பெயராகிய யெகோவாவுடன் உட்பொருளார்ந்த வண்ணம் இணைக்கப்பட்டிருக்கிற ஜனங்கள்.

(3) யெகோவாவின் சாட்சிகள் திருப்திதரும் ஏராளமான ஆவிக்குரிய உணவைக் கொண்டிருக்கின்றனர். வேத எழுத்துக்களிலிருந்து அவர்கள் கற்பதும் இது வாழ்க்கையில் அவர்களுடைய மனோபாவத்தைப் பாதிக்கும் முறையும், பொதுவான உலகத்தாருக்கு மாறாக, அவர்களை மகிழ்ச்சியுள்ள ஜனங்களாக்குகிறது. தம்முடைய ஊழியரைக் குறித்து இவ்வாறே இருக்குமென யெகோவா கூறினார். (ஏசாயா 65:13, 14; மத்தேயு 4:4-ஐ ஒத்துப் பாருங்கள்.)

(4) யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நடத்தைக்குத் தராதரத்தை வைக்கவும் வாழ்க்கையின் அன்றாடக விவகாரங்களில்—தங்கள் குடும்பங்களில், வேலையில், பள்ளியில், பொழுதுபோக்கு தெரிவு செய்வதில், தவிர்க்கவேண்டிய பழக்கங்களை அடையாளங் கண்டுகொள்வதில், ஈடுபடவேண்டிய மிகத் தகுந்தச் செயல்களைத் தீர்மானிப்பதில்—சரியான தீர்மானங்களைச் செய்ய தங்களை வழிநடத்தவும் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இதைச் செய்வோரின் ‘பாதைகளை அவர்தாமே நேராக்குவார்’ என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6)

(5) யெகோவாவின் சாட்சிகளின் சபைகளின் கண்காணிப்பு கடவுளின் முதல் நூற்றாண்டு சபை மாதிரியின்படி ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது, அதில் மூப்பர்கள், உயர் பதவியைக் கொண்ட குரு வகுப்பாராயிராமல் மந்தைக்கு முன்மாதிரிகளாகவும் கடவுளுடைய ராஜ்யத்துக்காக உழைக்கும் உடன் உழைப்பாளராகவும் இருந்தனர். (1 பேதுரு 5:2, 3; 2 கொரிந்தியர் 1:24)

(6) யெகோவாவின் சாட்சிகள் இவ்வுலகத்தின் அரசியல் விவகாரங்களில் உட்படுகிறதில்லை, ஆனால் உண்மையான கிறிஸ்தவர்களுக்குப் பைபிளில் குறிக்கப்பட்டிருக்கும் அந்த வேலையை, அதாவது, முடிவு வருவதற்கு முன்பு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பூமியெங்கும் சாட்சியாகப் பிரசங்கிப்பதைச் செய்கிறார்கள். (மத்தேயு 24:14; ஒத்துப்பாருங்கள்: யோவான் 17:16; 18:36)

(7) தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் செய்வார்களென இயேசு முன்னறிவித்தபடி, யெகோவாவின் சாட்சிகள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கிறார்கள். தோல் நிறம், கோத்திரம், பொருளாதார சூழ்நிலைமைகள், தேசம், மொழி—இவற்றில் எதுவும் மற்றவரைத் தாழ்வாக எண்ணும்படிச் செய்கிறதில்லை. மனித அபூரணங்கள் இருப்பினும், அவர்களெல்லாரும் உண்மையில் சர்வலோகச் சகோதரத்துவத்தில் உண்மையில் ஒற்றுமைப்பட்டிருக்கின்றனர், இதற்காக எல்லா நன்மதிப்பும் கடவுளுக்கே அவர்கள் கொடுக்கின்றனர். (யோவான் 13:35; அப்போஸ்தலர் 10:34, 35-ஐ ஒத்துப் பாருங்கள்.)

(8) பூர்வ கிறிஸ்தவர்களைப்போல், தற்காலங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளும் துன்புறுத்தலின் மத்தியிலும் கடவுளைச் சேவிப்பதை விடாமல் தொடர்ந்து செய்கின்றனர். எதிரிகளுக்கு விரோதமாகப் பதிலுக்குப் பதில் செய்யாமல், அவர்கள் கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கடந்தக் காலங்களில் உண்மையாயிருந்ததுபோலவே, கடவுள் தம்முடைய ஊழியரை விடுவிப்பதற்கு அவர்களோடிருக்கிறார். (எரேமியா 1:8; ஏசாயா 54:17)

7 முன்னறிவித்தபடி, “பலவித பாஷைக்காரராகிய புற ஜாதியாரில் பத்து மனிதர்” உண்மையான நம்பிக்கையுடன் ராஜ்ய சுதந்தரவாளிகளின் மீதிபேரிடம்: “கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால் நாங்கள் உங்களோடே போவோம்” என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு, இவை ஒருசில காரணங்களேயாகும். (சகரியா 8:23, தி.மொ.) பூமிக்குரிய காரியங்களில் முழுமையைக் குறிக்க வேத எழுத்துக்கள் எண் “பத்து”வைப் பயன்படுத்துகிறது, ஆகவே இந்தப் “பத்து மனிதர்,” ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்துவின் “சகோதரர்”களுடன் கூட்டுறவில் இப்பொழுது உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் எல்லாரையும் குறிப்பிட்டு நிற்கிறார்கள். இவர்கள் மீதிபேருடன் அவர்களுடைய கூட்டங்களில் வெறுமென கூட்டுறவுமட்டுமே கொள்கிறதில்லை ஆனால் அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவை வணங்குவோராகவும் தங்களை அடையாளங்காட்டுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்து இதைத் தண்ணீர் முழுக்காட்டால் அடையாளப்படுத்துகிறார்கள், இவ்வாறு தாங்கள் “யெகோவாவினிடம் சேர்ந்துகொள்ள” விரும்புவதை மெய்ப்பித்துக் காட்டுகிறார்கள். பின்பு அவருடைய சாட்சிகள் உலகமெங்கும் செய்துவரும் வேலையில் இவர்கள் மகிழ்ச்சியுடன் பங்குகொள்கிறார்கள்.—சகரியா 2:11; ஏசாயா 61:5, 6.

பின்பற்றத்தக்க முன்மாதிரிகள்

8 இந்த நடவடிக்கையை எடுக்கும் சிலர் சாலொமோனின் நாட்களிலிருந்த சேபா அரசியைப் போலிருக்கிறார்கள். “யெகோவாவின் திருநாம சம்பந்தமாய்ச் சாலொமோனுக்கு உண்டாயிருந்தக் கீர்த்தி”யை அவள் தூர தேசத்திலிருந்து கேள்விப்பட்டாள். அவள் ஒருபோதும் சாலொமோனுடன் நேரடியாய்ப் பேசினதில்லை எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்றதுமில்லை. தான் கேள்விப்பட்டதுபோல் அதெல்லாம் அவ்வளவு நன்றாய் இருக்கக்கூடுமாவென சில சந்தேகங்கள் அவளுக்கு இருந்தன. ஆனால் அதைக் கண்டுபிடிக்க அவள் முயற்சி எடுத்தாள், அவ்வாறு செய்ய அநேகமாய் 1,400 மைல்கள் (2,250 கி.மீ.) ஒட்டகத்தின்மீது பிரயாணப்பட்டு வந்தாள். தன்னுடைய ‘மனக்குழப்பமான கேள்விகளுக்கெல்லாம்’ பதில்களைக் கண்டடைந்து, பின்வருமாறு ஆச்சரியத்துடன் கூறினாள்: “இதோ, இவற்றில் பாதியளவாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை.” யெகோவா தம்முடைய வணக்கத்தாரை நேசிக்கிறார் என்ற முடிவுக்கு வராமல் அவளால் இருக்க முடியவில்லை. (1 இராஜாக்கள் 10:1-9, தி.மொ.) உலகத்தில் முதன்மை நிலையிலிருந்த சிலர் இன்று அவளுடைய முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கின்றனர், தாழ்வான சூழ்நிலைமைகளிலிருந்து வரும் பலரும் அவ்வாறு செய்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் உதவிக்காக எந்த மனிதனையுமல்ல, பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவையே தங்கள் அரசராக நோக்கியிருக்கின்றனர் என்ற அத்தாட்சியை அவர்கள் காண்கின்றனர். கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்படும் பதில்கள் அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் திருப்திசெய்கின்றன, யெகோவாவைத் துதிப்பதில் தங்கள் குரல்களையும் சேர்த்துக்கொள்ள இருதயத்தில் தூண்டப்படும் உணர்ச்சியடைகிறார்கள்.—லூக்கா 11:31-ஐ ஒத்துப் பாருங்கள்.

9 மற்றும் சிலர் எரிகோ பட்டணத்து ராகாபைப்போல் இருக்கின்றனர், அவள், இஸ்ரவேலின் கடவுளே, “உயர வானத்திலும் கீழே பூமியிலும் கடவுள்” என்று, தான் கேள்விப்பட்ட அறிவிப்புகளிலிருந்து ஏற்கெனவே நம்பியிருந்தாள். (யோசுவா 2:11) இஸ்ரவேலிலிருந்து வேவு பார்ப்பவர்கள் தேசத்துக்குள் பிரவேசித்தபோது, அவள் அவர்களை வரவேற்றினாள், அவர்களை ஒளித்து வைத்து அவர்களைப் பாதுகாக்கத் தன் உயிரை அபாயத்தில் வைத்தாள். அவளுக்கு விசுவாசம் இருந்தது, அதை, யெகோவாவின் ஜனங்களுடன் தன் நிலைநிற்கையை ஏற்று தன் செயல்களால் நிரூபித்தாள். (எபிரெயர் 11:31; யாக்கோபு 2:25) தன்னுடைய பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைக் கவனமாய்ப் பின்பற்றினாள். மேலும் ராகாப் தன் தகப்பனுக்கும் தாய்க்கும், தன் சகோதரர் சகோதரிகளுக்கும், அன்புள்ள அக்கறை காட்டி, தப்பிப்பிழைப்பதற்குத் தேவைப்பட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தால் உயிர் தப்பவிடுவதற்கு அவர்களுக்கு வழியைத் திறந்துவைத்தாள். (யோசுவா 2:12, 13, 18, 19) இதன் பலனாக, எரிகோவும் அதன் பாகால் வணக்கத்தாரான குடிமக்களும் அழிக்கப்பட்டபோது, அவளும் அவளுடைய வீட்டாரும் காப்பாற்றப்பட்டனர். (யோசுவா 6:22, 23) இது நம்முடைய நாளுக்கு வல்லமைவாய்ந்த உட்பொருளைக் கொண்டிருக்கிறது. ராகாபைப் போன்ற ஆட்களை யெகோவா அழிக்காமல் விடுவாரென இது மெய்ப்பித்துக் காட்டுகிறது. அவர்கள் அவளைப் போலிருப்பதை எது காட்டுகிறது? அவர்கள் யெகோவாவில் நம்பிக்கை வைக்கிறார்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினரோடு தங்களை அடையாளங் கண்டுகொள்ள செய்கிறார்கள், இந்த வழியின்மூலம் கொடுக்கப்படும் கட்டளைகளைக் கவனமாய்ப் பின்பற்றி, நெருங்கிய குடும்ப உறுப்பினரும் மற்ற உறவினரும் அவ்வாறே செய்வதன் ஞானத்தைக் காணும்படி அவர்களுக்கு உதவிசெய்ய ஊக்கமாய்ப் பிரயாசப்படுகிறார்கள்.

10 நிச்சயமாகவே, உண்மையாய்க் கவர்ந்திழுப்பது, சகல தேசங்களின் ஜனங்களையும் யெகோவாவின் சாட்சிகளின் கூட்டுறவுக்குள் வர இழுப்பது, யெகோவா தேவன்தாமேயாவார். அவருடைய வார்த்தை அவர்களுடைய மனதைக் கவருகிறது. அவருடைய ஊழியரின் வாழ்க்கையில் காணப்படும் அவருடைய ஆவியின் கனிகள் அவர்கள் இருதயத்தைக் கவருகின்றன. அவருடைய பண்புகளுடனும் மனிதவர்க்கத்துடன் அவர் கையாண்ட முறைகளுடனும் அவர்கள் நன்றாய் அறிமுகமாகி வருகையில், சாத்தானும் உண்மையற்ற மனிதரும் கடவுளுடைய பெயரின்பேரில் குவித்திருக்கும் எல்லா நிந்தையும் நீக்கி நேர்மை மெய்ப்பிக்கப்படும் அந்தக் காலத்துக்காக அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தாங்கள்தாமேயும் தங்கள் சிருஷ்டிகருக்குப் பிரியமாயிருக்கும் முறையிலும் அவரை மகிமைப்படுத்தும்படி மற்றவர்களைத் தூண்டுவிக்கும் முறையிலும் தங்கள் விவகாரங்களை நடத்திக்கொள்ள கடினமாய் முயற்சிசெய்கிறார்கள். (1 பேதுரு 2:12) இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு கற்பித்தப் பிரகாரம் தங்கள் முழு இருதயத்துடனும் அவர்கள் ஜெபிக்கிறார்கள்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) மேலும், தாங்கள், “[யெகோவாவின்] பெயருக்கான ஜனம்” என்ற தவறாத அத்தாட்சியைத் தருகிறவர்களோடு, இவர்கள் தங்கள் ஜெபத்துக்குப் பொருந்த முழு ஒற்றுமையுடன் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செலுத்துகிறார்கள்.

[கேள்விகள்]

1, 2. (எ) நம்முடைய நாளைக் குறித்து சகரியா 8:23 என்ன முன்னறிவிக்கிறது? (பி) இங்கு குறிப்பிடப்படுகிற கடவுள் யார்? அவருடைய தனிப்பட்ட சொந்தப் பெயரை பைபிள் எவ்வாறு முக்கியப்படுத்திக் காட்டுகிறது?

3. சகரியா 8:20-23-ல் முன்னறிவித்திருக்கிறபடி, (எ) யார் யெகோவாவைத் தேடுவார்கள்? (பி) யாருடன் கூட்டுறவுகொண்டு?

4. யூத மதத்துக்கு அல்லது கிறிஸ்தவமண்டலத்துக்கு இந்தத் தீர்க்கதரிசனம் ஏன் பொருந்துகிறதில்லை?

5. பின்வருபவற்றை வேத எழுத்துக்கள் எவ்வாறு அடையாளங்காட்டுகின்றன (எ) இன்று யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிற “எருசலேம்”? (பி) சகரியா தீர்க்கதரிசனம் சொன்ன “ஒரு யூதன்”?

6. (எ) இன்று கடவுள் அவர்களோடிருக்கிற ஜனத்தை உறுதியாய் அடையாளங் கண்டுகொள்ள லட்சக்கணக்கான ஆட்களுக்கு எவை உதவியிருக்கின்றன? (ஒவ்வொன்றாய்க் கவனியுங்கள்; வேத வசனங்களை வாசியுங்கள்.) (பி) எந்தக் குறிப்பு அல்லது குறிப்புகள் தனியே உங்கள் மனதை மிக ஆழமாய்த் தொட்டன?

7. (எ) அந்தப் “பத்து மனிதர்” யார்? (பி) யெகோவா உண்மையில் தங்கள் கடவுளாகிவிட்டாரென அவர்கள் எவ்வாறு அத்தாட்சி கொடுக்கிறார்கள்?

8. (எ) சேபாவின் ராணியை எருசலேமுக்குப் பிரயாணப்பட செய்வித்தது எது? (பி) அவள் வந்து சேர்ந்தபோது என்ன செய்தாள்? அதன் பலன் என்ன? (சி) எவ்வாறு நம்முடைய நாளில் ஜனங்கள் அவளைப்போல் நிரூபித்திருக்கின்றனர்? (சங்கீதம் 2:10-12)

9. (எ) ராகாபின் மனப்பான்மை எம்முறையில் சேபா ராணியின் மனப்பான்மைக்கு வேறுபட்டது? (பி) ராகாபும் அவளுடைய வீட்டாரும் பாதுகாக்கப்பட்டதற்கு வழிநடத்தின சம்பவங்களைப்பற்றிக் கவனிக்கத்தக்கதென்ன? (சி) இன்று ராகாபைப்போலிருக்கும் ஆட்களை எது அடையாளங்காட்டுகிறது?

10. (எ) சகரியாவின் தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொள்ள எது உண்மையில் மக்களைக் கவர்ந்திழுக்கிறது? (பி) யெகோவாவின்மீதுள்ள அன்பே உண்மையில் நம்முடைய இருதயங்களை நிரப்புகிறதென, மனப்பான்மையிலும் செயல்களிலும் நாம் எவ்வாறு காட்டலாம்?