Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கீழ்ப்படிதலைக் குறித்து வேறுபட்ட மனப்பான்மை

கீழ்ப்படிதலைக் குறித்து வேறுபட்ட மனப்பான்மை

அதிகாரம் 17

கீழ்ப்படிதலைக் குறித்து வேறுபட்ட மனப்பான்மை

பாபிலோனியர் எருசலேமை அழிப்பதற்கு முன்னால், பல ஆண்டுகளாக யெகோவா, அது வரவிருப்பதையும் அதற்குக் காரணத்தையும் குறித்து யூதர்களை எச்சரித்துவந்தார். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாகத் தங்கள் சொந்தப் பிடிவாத இருதயப் போக்குகளையே பின்பற்றிக்கொண்டிருந்தார்கள்.—எரேமியா 25:8, 9; 7:24-28.

2 யெகோவா தம்மைச் சேவிக்கும்படி எவரையும் கட்டாயப்படுத்துகிறதில்லை, ஆனால், நியாயப்படியே, தம்முடைய அங்கீகாரத்தையும் அதோடு செல்லும் ஜீவனின் ஆசீர்வாதங்களையும் விரும்பும் யாவரும் கீழ்ப்படியவேண்டுமென அவர் நிச்சயமாகவே கட்டளையிடுகிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்தப் பின்பு, யெகோவா அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “இப்பொழுது நீங்கள் என் சொல்லை உள்ளபடி கேட்டு [கீழ்ப்படிந்து, NW] என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜாதிகளிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) அவர்கள் செய்யவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பவற்றைக் கடவுள் அவர்களுக்குத் திட்டமாய்க் கூறி, “உடன்படிக்கையின் புஸ்தகம்” வாசிக்கப்படுவதை அவர்கள் கேட்டபின்பு, அவர்கள் தாங்களே மனமுவந்து, கடவுளுடன் கொள்ளும் அத்தகைய உறவுடன் சென்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.—யாத்திராகமம் 24:7.

3 எனினும், சொற்ப காலத்துக்கே அவ்வாறிருந்தார்கள், கலகத்தன மனப்பான்மை தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியது. இஸ்ரவேல் புத்திரர் யெகோவாவில் தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாய் விட்டுவிடவில்லை; ஆனால், அவருடைய சட்டத்தை மீறி, எகிப்திய பழக்கவழக்கங்களை யெகோவாவின் வணக்கத்தோடு கலக்கப் பலர் முயன்றனர். (யாத்திராகமம் 32:1-8) பின்னால் சிலர், யெகோவா தம்முடைய காணக்கூடிய பிரதிநிதிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களில் குற்றங் கண்டுபிடித்தனர். (எண்ணாகமம் 12:1-10; 16:1-3, 31-35) ஒரு ஜனமாக, இஸ்ரவேலர், மனிதருக்குப் பயப்படுகிற பயத்தால் தூண்டப்பட்டு, கடவுளுடைய வார்த்தையின்படி நடக்க விசுவாசக் குறைவைக் காட்டினார்கள். (எண்ணாகமம் 13:2, 31-33; 14:1-4; எபிரெயர் 3:17-19) பிழைகள் அறியாமல் செய்யப்பட்டபோது, மனத்தாழ்மையுடன் மனந்திரும்பினவர்கள் மன்னிப்பைப் பெற முடிந்தது. ஆனால் ஒன்பது நூற்றாண்டுகளான காலப்பகுதியின்போது இந்த ஜனம் முதல் தெய்வீகக் கட்டளைகளில் ஒன்றை, பின்பு மற்றொன்றை, அதன்பின் அடிக்கடி அவற்றில் பலவற்றை வேண்டுமென்றே அவமதித்தனர். அவர்கள் செய்தக் காரியங்களும் அவற்றின் விளைவுகளும் நமக்கு எச்சரிக்கை முன்மாதிரிகளாக பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.—2 நாளாகமம் 36:15-17; 1 கொரிந்தியர் 10:6-11.

4 எரேமியாவின் நாட்களில், அவர்களுடைய போக்கின் பயங்கர விளைவுகள் எவ்வாறிருக்குமென திரும்பத் திரும்ப எச்சரிக்கைகள் கொடுத்தப் பின்பு, யெகோவா யூதருக்கு முன்பாக ரேகாபியரை ஒரு முன்மாதிரியாக வைத்தார். இவர்கள் இஸ்ரவேலரல்லாதவர்கள், யெகோவாவிடமாக எவ்விதப் போட்டியையும் யேகூ சகிக்காததோடு தான் முழுமையாய் ஒத்திருந்ததை மெய்ப்பித்துக் காட்டின யோனதாபின் சந்ததியார். இந்த யோனதாப் (அல்லது யெஹோனதாப்) ரேகாபியரின் குடும்பத்தின் கோத்திரத் தலைவனாக, வரையரையற்றக் காலத்துக்கும் திராட்ச மதுபானத்துக்கு விலகியிருக்கும்படியும், வீடுகளில் வாழாமலும் அல்லது விவசாயத்தில் ஈடுபடாமலும் நாடோடிகளைப்போல் கூடாரங்களில் குடியிருக்கவும் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். இவ்வாறு இவர்கள் நகர வாழ்க்கையின் மனம்போனபோக்கில் மிதமீறி செல்வதற்கும் தீய ஒழுக்கங்களுக்கும் விடுதலையாகி அமைவடக்கமான எளிய வாழ்க்கை நடத்தி, அதே சமயத்தில் தாங்கள் அவர்களுக்குள் வாழும் இஸ்ரவேலரோடு யெகோவாவை வணங்கிக்கொண்டிருப்பார்கள்.

5 யூதர்கள், சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவுக்குச் செவிகொடுக்க மறுத்ததால், இந்த ரேகாபியர் தங்கள் மனித முற்பிதாவுக்குக் கீழ்ப்படியும்படி எதிர்ப்பார்க்க முடியுமா? அவர்கள் கீழ்ப்படிந்தார்கள், மேலும் முன்மாதிரியான முறையில் அவ்வாறு செய்தார்கள். பாபிலோனியரின் மற்றும் சீரியரின் இராணுவ சேனைகள் யூதாவுக்குள் படையெடுத்தபோது ரேகாபியர் எருசலேமில் அடைக்கலம் புகுந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து கூடாரங்களில் வாழ்ந்துவந்தார்கள். தாங்கள் அவர்களுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்கள் திராட்ச மதுபானம் குடிக்க அனுமதித்திருந்தபோதிலும், திராட்ச மதுபானத்தைத் தொடக்கூடாதென்ற அவர்கள் தீர்மானம் எவ்வளவு உறுதியாயிருந்தது? எரேமியா ரேகாபியரை ஆலய போஜன அறைக்குள் கொண்டுவந்து, அவர்கள்முன் திராட்ச மதுபானம் கிண்ணங்களில் ஊற்றிவைத்து பானம்பண்ணும்படி அவர்களுக்குச் சொல்லும்படி யெகோவா செய்தார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஏன்? யெகோவாவிடம் அவர்கள் முற்பிதா கொண்டிருந்த பக்தியை அவர்கள் மதித்துணர்ந்தது தெளிவாயிருக்கிறது, தங்களுடைய சுகநலத்திற்காக அவன் கொண்டிருந்த அக்கறையை அவர்கள் உணர்ந்தார்கள், ஆகவே அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். கீழ்ப்படிதலின் இந்தச் சிறந்த முன்மாதிரி யெகோவாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது, இது யூதர்கள் யெகோவாவுக்குக் காட்டின கீழ்ப்படியாமையை முனைப்பாய் தெரியவைத்தது.—எரேமியா 35:1-11.

6 இன்று ரேகாபியரைப் போன்ற ஆட்கள் இருக்கின்றனர். இவர்கள் கர்த்தருடைய “மற்றச் செம்மறியாடுகள்.” இவர்கள் திராட்ச மதுபானம் குடிப்பார்களா இல்லையா என்பது இன்று விவாதமல்ல. (1 தீமோத்தேயு 5:23-ஐ ஒத்துப் பாருங்கள்.) அவர்கள் மிதமீறி குடிப்பவராகாத அல்லது ஒருவேளை குடிப்பழக்கமுடையவராகாத வரையில் இது அவரவருடைய தனிப்பட்ட காரியம். (நீதிமொழிகள் 23:20; 1 கொரிந்தியர் 6:9, 10) ஆனால் தெய்வீகக் கீழ்ப்படிதல் முக்கியம். விசுவாசத் துரோகியான இஸ்ரவேல் ஜனம் மாதிரியாக முன்குறித்தக் கிறிஸ்தவ மண்டலத்துக்கு நேர்மாறாக, தற்கால ரேகாபியர் வகுப்பார் தெய்வீகக் கீழ்ப்படிதலின் உயர் மதிப்பைத் தாங்கள் அறிந்திருப்பதைத் தங்கள் செயல்களில் காட்டுகின்றனர். இது அவர்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்?

7 அவர்களுடைய பயபக்திக்காக, யெகோவா ரேகாபியருக்கு ஒரு வாக்கு கொடுத்தார், அது நம்முடைய நாளுக்கு வல்லமைவாய்ந்தத் தீர்க்கதரிசன உட்பொருளைக் கொண்டிருக்கிறது, அவர் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குச் செவிகொடுத்து அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தபடியால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கும் ஒருவன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற் போவதில்லையென்று இஸ்ரவேலின் கடவுளாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” (எரேமியா 35:18, 19, தி.மொ.) பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவைத் தப்பிப்பிழைத்தவர்களுக்குள் இவர்களும் இருந்தார்கள். இவர்கள் நிழலாக முன்குறித்துக் காட்டின வகுப்பார், கிறிஸ்தவமண்டலத்தின்மீதும் யெகோவாவின் அரசாட்சியை ஏற்க மறுத்துத் தன் சொந்தப் போக்கில் சுதந்தரமாய்ச் செல்லும் உலகத்தின் மீதிபாகமெல்லாவற்றின்மீதும் வரவிருக்கும் அழிவைத் தப்பிப்பிழைப்பார்கள்.

கீழ்ப்படிதல் ஏன் ஒருவேளை எளிதாயிராது

8 கீழ்ப்படிதலைக் கற்பதைப் பலர் கடினமாய்க் காண்கின்றனர். எல்லாரும் ‘அவரவர் விரும்பினதைச் செய்யும்’ ஓர் உலகத்தில் அவர்கள் வளர்ந்தனர். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழும் வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொள்ள அவர்கள் விரும்பலாம். ஆனால் பெருமை அவர்களுடைய சிந்தனையை மங்கலாக்கினால், கடவுளுடைய கட்டளைகள் சிலவற்றை ஏற்க அவர்கள் பின்வாங்கலாம் அல்லது அவை கொடுக்கப்படும் முறையைக் குறித்துக் குற்றங்கண்டுபிடிக்கலாம். (நீதிமொழிகள் 8:13; 16:18) தீர்க்கதரிசி எலிசாவின் நாட்களில் சீரியரின் சேனைத் தலைவன் நாகமானுக்கு இந்தப் பிரச்னை இருந்தது.

9 நாகமான் குஷ்டரோகத்தால் வாதிக்கப்பட்டான். நாகமான் யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய எலிசாவிடம் மாத்திரம் சென்றால் சுகப்படுத்தப்படுவான் என்ற தன் விசுவாசத்தைச் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு சிறு இஸ்ரவேலப் பெண் தைரியமாய் வெளிப்படுத்திக் கூறினதால், நாகமான் இஸ்ரவேல் தேசத்துக்குப் பிரயாணப்பட்டு வந்தான். குதிரைகளுடனும் போர் இரதங்களுடனும் நாகமான் எலிசாவின் வீடுவரையில் வந்து நின்றான். நாகமான் மிக முக்கியமான ஆள், எலிசா அவனைச் சந்திக்க வெளியில் வந்து, சடங்காசாரங்களைச் செய்து, யெகோவாவின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு நோயுற்ற மாம்சத்தின்மேல் அது சுகமடையும்வரையில் தன் கையை இங்குமங்குமாக அசைப்பான் என்று அவன் எதிர்பார்த்தான். அதற்குப் பதிலாக, எலிசா, யோர்தான் நதிக்குச் சென்று அங்கே ஏழு தடவைகள் குளிக்கும்படி அவனுக்குச் சொல்ல வெறுமென ஓர் ஆளை அனுப்பினான்.—2 இராஜாக்கள் 5:1-12.

10 நாகமானின் பெருமை புண்படுத்தப்பட்டது. அவன் கடுங்கோபத்துடன் அவ்விடத்தைவிட்டுச் சென்றான். ஆனால் அவன் ஊழியக்காரர் விவேகத்துடன் அவனோடு விவாதித்து மன்றாடினபின், அவன் விசுவாசித்து தன்னைத் தாழ்த்தினான். “அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.” யெகோவாவே ஒரே உண்மையான கடவுள் என்று நாகமான் முற்றிலும் நம்பினான், அவனுடைய முதல் பிரதிபலிப்பு வேறுபட்டிருந்தபோதிலும், எலிசா கொடுத்தக் கட்டளைகள் உண்மையில் கடவுள் கொடுத்தவையென தெளிவாக உணர்ந்தான்.—2 இராஜாக்கள் 5:13-15.

11 ஒருவேளை நாகமானின் பண்புகள் சிலவற்றை நீங்கள் உங்களில் காண்கிறீர்களா? விசுவாசங்காட்டின இஸ்ரவேலரல்லாத மற்றவர்கள் காரியத்தில் இருந்ததைப்போலவே, நாகமானும் உண்மையான வணக்கத்தில் சேர்ந்துகொள்ளும் “மற்றச் செம்மறியாடுகளைப்” படமாக முன்குறிக்க வேத எழுத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறான். இவர்கள் எல்லாரும், பாவத்தில் பிறந்திருக்க, ஒரு காலத்தில் ஆவிக்குரியப்பிரகாரமாய் நோயுற்றிருந்தனர். இவர்களெல்லாரும் யெகோவாவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட ஊழிய வகுப்பாரின் உதவியை நாடித்தேடவும், பின்பு, இந்த “அடிமை” (NW) கடவுளுடைய வார்த்தையிலிருந்து தங்களுக்குக் கற்பித்தவற்றின்பேரில் கீழ்ப்படிதலுடன் செயல்படவும் வேண்டியிருந்தது. (மத்தேயு 24:45) சிலர் ஒரு சமயத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதப்பூர்வ அறிவுரை சிலவற்றை—சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் ஆஜராகவேண்டிய தேவை, இவ்வுலகத்திலிருந்து பிரிந்திருக்கவேண்டிய முக்கியத்துவம் அல்லது கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டின் முக்கியத்துவம் போன்றவற்றை மதித்துணரவில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக இருக்கத் தங்களைச் ‘சொந்தம் கைவிடுவதற்கு’ அவர்கள் இருதயம் எதிர்த்ததனால் ஒப்புக்கொடுப்பதிலிருந்தும் முழுக்காட்டப்படுவதிலிருந்தும் அவர்கள் பின்வாங்கியிருக்கலாம். சிலருடைய காரியங்களில் சபையில் பொறுப்புள்ளவர்கள் தங்களுக்கு அறிவுரைகொடுத்த முறையை அவர்கள் குற்றங்கண்டுபிடித்தார்கள். ஆனால் காலப்போக்கில் உண்மையில் கர்த்தரின் “மற்றச் செம்மறியாடுகளாக” இருக்கப்போகிற எல்லாரும் மனத்தாழ்மையின் மற்றும் அன்புள்ள கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.—யாக்கோபு 4:6; மத்தேயு 16:24.

நமக்கு நன்மை பயக்கும் கட்டளைகள்

12 யெகோவாவையும் அவருடைய வழிகளையும் நாம் மேலும் மேலும் அறிகையில், சென்ற காலங்களில் தம்முடைய ஊழியருக்கு அவர் சொன்ன பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையென நாம் மதித்துணர்வோம்: “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்லவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன். நீ என் கட்டளைகளைக் கவனித்திருந்தாயானால் எவ்வளவோ நலம்.” (ஏசாயா 48:17, 18, தி.மொ.) தம்முடைய ஜனங்கள் தம்முடைய கட்டளைகளுக்குக் கவனம் செலுத்துவதன்மூலம் துன்பத்தைத் தவிர்த்து வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டுமென்பதே யெகோவாவின் ஊக்கமான ஆவல். நாம் எவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறோம் எது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவருமென்பது அவருக்குத் தெரியும். நம்மை இழிவுபடுத்தும் அல்லது மற்றவர்களுடன் நம்முடைய உறவுகளைக் கெடுத்துப்போடும் நடத்தைக்கெதிராக அவர் நம்மை எச்சரிக்கிறார்.

13 வேசித்தனத்துக்கும் விபசாரக் குற்றத்துக்கும் எதிராக அவர் கொடுத்துள்ள எச்சரிக்கைக்குச் செவிகொடுத்தவர்கள், இவை விளைவிக்கும் உணர்ச்சிசம்பந்தக் குழப்பம், நோய் மற்றும் முறைதவறிய பிறப்புகள் ஆகிய துன்பங்களுக்காளாகாதபடி தப்புவிக்கப்பட்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 6:18; எபிரெயர் 13:4) 2 கொரிந்தியர் 7:1-ல் உள்ளதைப் போன்ற அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பதனால், ஒருவருடைய சுகத்தைக் கெடுத்து அகால மரணத்தை விளைவிக்கக்கூடிய புகையிலை மற்றும் வேறு போதைப் பொருள்கள் துர்ப்பழக்கத்துக்கு அடிமையாவதிலிருந்து காத்து வைக்கப்படுகிறார்கள். ‘இரத்தத்துக்கு விலகியிருக்கும்படியான’ கடவுளுடைய கட்டளை, எதிர்கால வாழ்க்கைக்குரிய தங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் அவர்பேரிலேயே தங்கியிருக்கிறதென்று அவர்கள் அவரில் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்த அவருடைய ஊழியருக்கு உதவிசெய்திருக்கிறது, அதேசமயத்தில், இரத்தம் மாற்றிப் பாய்ச்சுவதால் பரவச் செய்யக்கூடிய பயங்கர நோய்களுக்கெதிராகவும் இது அவர்களைப் பாதுகாத்திருக்கிறது.—அப்போஸ்தலர் 15:28, 29.

14 இந்த உலகத்தில் நாம் இருக்கிறவரையில், அதோடு நமக்கு ஓரளவு அவசியமான தொடர்பு இருக்கிறது. ஆனால் நம்முடைய நம்பிக்கைகளை அதோடு முழுமையாய் இணைத்துக்கொள்ளவேண்டாமென, அதன் ஒரு பாகமாயிருக்க வேண்டாமென யெகோவா நம்மை எச்சரிக்கிறார். இந்த உலகத்துக்கு எதிர்காலம் வைத்திருப்பதை அவர் அறிந்திருக்கிறார். கடவுள் இடித்துப்போடப்போவதைக் கட்டியெழுப்பிக்கொண்டிருக்க ஒருவர் தன் வாழ்க்கையைச் செலவிடுவது எவ்வளவு முட்டாள்தனம்! இன்னும் மோசமாக, இவ்வாறு செய்பவர்கள், அதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணஞ்செய்த இவ்வுலகத்தின் பேரழிவில் தாங்களும் பங்குகொள்வதைக் காண்பார்கள். ஆகவே, கடவுளுடைய குமாரன் கொடுத்த பின்வரும் அறிவுரை எவ்வளவு நன்மை பயக்குகிறது: கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்! அதை உங்கள் வாழ்க்கையில் முதல் வையுங்கள்!—1 யோவான் 2:17; மத்தேயு 6:33.

15 நமக்குத் தேவையானதை முழுமையாய் அறிந்தே, யெகோவா, தம்முடைய ஜனங்களைத் தம்முடைய நீதியுள்ள புதிய காரிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்கு ஆயத்தப்படுத்துகிறார். ஆதாம் கீழ்ப்படியாமற்போனது, மனித அபூரணத்துக்கும், நித்திய ஜீவனை இழப்பதற்கும், பரதீஸிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் வழிநடத்தினது. ஆதாம் இழந்ததைத் திரும்பப் பெறும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்குள் நாம் இருக்கவேண்டுமானால், கடவுள் பேசுகையில் கவனித்து செவிகொடுக்கிறோமென்பதற்கு அத்தாட்சியைக் கொடுக்கவேண்டும். வரவிருக்கும் ஆயிர ஆண்டுகளின்போது, மனிதவர்க்கம் பரிபூரணத்துக்குக் கொண்டுவரப்படுகையில் அவர் நம்மிடம் எவ்வாறு பேசுவார்? மேசியானிய ராஜ்யத்தின் மூலம் பேசுவார். இந்த அரசாங்கத்துக்குக் காணக்கூடிய பூமிக்குரிய பிரதிநிதிகளும் இருப்பார்களா? ஆம். அரசர் “பூமியெங்கும் பிரபுக்களைத்” தம்முடைய சேவையில் கொண்டிருப்பார். (சங்கீதம் 45:16; ஏசாயா 32:1, 2-ஐ ஒத்துப் பாருங்கள்.) இந்தப் பிரபுக்களுக்கு அன்புடன் கீழ்ப்படிவதால், மனிதவர்க்கம் தங்கள் பரலோக அரசருக்குக் கீழ்ப்படிதலை மெய்ப்பித்துக் காட்டுவார்கள்.

16 அந்தக் காலத்துக்காக ஆயத்தம் செய்ய, யெகோவா, தம்முடைய காணக்கூடிய தேவாட்சி அமைப்பின் மூலம் இப்பொழுது பயிற்றுவிப்பை அளிக்கிறார். சபைக்குள் ஆவிக்குரிய முதியோரை, அல்லது மூப்பரை அவர் எழுப்பியிருக்கிறார். இவர்கள் சபை கூட்டங்களுக்குத் தேவைப்படும் கண்காணிப்பை அளித்து ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் முன்னின்று வழிநடத்துகிறார்கள். யெகோவாவைச் சேவிக்க விரும்பும் யாவரும் பைபிள் நியமங்களைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பது எவ்வாறென்று கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள், மேலும் கடவுளுடன் ஒருவருடைய உறவைக் கெடுத்துப்போடக்கூடிய கண்ணிகளுக்கு எதிராகவும் அவர்களை அன்புடன் எச்சரிக்கிறார்கள். புயல்கள், பூமியதிர்ச்சிகள், ஆயுதந்தரித்த வன்முறை எழுச்சிகள் ஆகியவற்றின்போது மூப்பர்களின் வழிநடத்துதலுக்குச் செவிகொடுத்தது உயிர் பாதுகாக்கப்பட்டதில் பலனடைந்ததையும் உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் அறிந்துள்ளனர். சபை மூப்பர்களுடையதல்ல; அது கடவுளுடையது. மூப்பர்கள் தாங்கள் தேவாவியால் ஏவப்பட்டிருப்பதாக உரிமைபாராட்டுகிறதில்லை. ஆனால், வேத எழுத்துக்கள் காட்டுகிறபடி, முன்னின்று வழிநடத்த கடவுள் அவர்களைப் பயன்படுத்துகிறார், அவர்களுக்குக் கீழ்ப்படிவது, யெகோவா தம்முடைய ஊழியரைப் புதிய உலகத்துக்குள் தப்பிப்பிழைப்பதற்கு ஆயத்தம் செய்ய பயன்படுத்தும் ஏற்பாட்டுக்கு அவர்கள் மரியாதைக் காட்டுவதாகும்.—அப்போஸ்தலர் 20:28; எபிரெயர் 13:17.

17 எனினும், அத்தகைய கீழ்ப்படிதலைத் தூண்டும் நோக்கம், வரப்போகும் உலக அழிவைத் தப்பிப்பிழைப்போருக்குள் இருக்கவேண்டுமென்ற வெறும் ஆசையல்ல. அதைப் பார்க்கிலும் மிக அதிகம் இருக்கிறது. அது என்ன? உயிருக்காகவும் அதை ஆதரித்துக் காப்பதற்குக் கடவுள் செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளுக்காகவும் நன்றி மதித்துணர்வேயாகும். நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும் அவருடைய பரிசுகளுக்காக—சிந்தித்து முடிவுசெய்யும் திறமை, அழகையும் ஆவிக்குரிய மதிப்புகளையும் மதித்துணர்வது, நம்முடைய சிருஷ்டிகரை அறிந்து வணங்குவதற்கு நமக்கிருக்கும் திறமை ஆகியவற்றிற்காக நன்றியறிதல். மேலும், நாம் என்றென்றும் வாழ்வதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருக்கும்படி தம்முடைய சொந்தக் குமாரன் தம்முடைய உயிரைப் பலியாகச் செலுத்தும்படி அவரைக் கொடுக்கத் தூண்டின கடவுளுடைய அன்பைப் பற்றிய மதித்துணர்வும் அவர்களைத் தூண்டி இயக்குகிறது.

18 கடவுளை நன்றாய் அறிந்திருக்கிறவர்களுக்குக் கீழ்ப்படிதல் மகிழ்ச்சியற்ற ஒரு கடமையாக இல்லை. அவருடைய நோக்கங்களையும் கட்டளைகளையும் திருத்தமாய் விளங்கிக்கொண்டிருப்பதும், அதோடுகூட அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பதிலிருந்து வரும் நல்ல பலன்களை அனுபவிப்பதும், கடவுளுடைய வழியில் காரியங்களைச் செய்வதே நியாயமும் விவேகமுமுள்ள ஒரே போக்கு என்பதைக் குறித்து அவர்கள் மனதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிப்பதில்லை. அது பாதுகாப்பாக இருக்கிறதென அவர்கள் தெரிந்துகொள்ளுகிறார்கள். மேலும் அது கடவுளுக்கு அவர்கள் அன்பைக் காட்டுவதற்கும் வழியாயிருக்கிறது. அவருக்குக் கீழ்ப்படிவதில் மிகுந்த இன்பத்தை அவர்கள் கண்டடைகிறார்கள்.—1 யோவான் 5:3; சங்கீதம் 119:129.

[கேள்விகள்]

1. பாபிலோனியர் எருசலேமை அழித்துப்போட யெகோவா ஏன் அனுமதித்தார்?

2. (எ) நியாயப்படி என்ன நன்மைகள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்பேரில் சார்ந்திருக்கின்றன? (பி) இஸ்ரவேலர் யெகோவாவுடன் உடன்படிக்கை உறவுக்குள் எவ்வாறு வந்தனர்?

3. (எ) அதன்பின் இஸ்ரவேலர் என்ன முறைகளில் யெகோவாவினிடம் கலகத்தனமான மனப்பான்மையை வெளிப்படுத்திக் காட்டினர்? (பி) இந்நிகழ்ச்சிகள் ஏன் பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன?

4. (எ) ரேகாபியர் யார்? (பி) யோனதாப் அவர்கள்பேரில் என்ன கட்டுப்பாடுகளை வைத்திருந்தான்?

5. ரேகாபியர் எவ்வாறு கீழ்ப்படிதலில் முன்மாதிரியாயிருந்தார்கள்?

6. (எ) இன்று யார் ரேகாபியரைப்போல் இருக்கிறார்கள்? (பி) கீழ்ப்படியாத இஸ்ரவேலர் குறித்துக் காட்டினவர்களாக யார் நிரூபிக்கின்றனர்?

7. (எ) யெகோவா ரேகாபியருக்கு என்ன ஊக்கமூட்டும் வாக்குக் கொடுத்தார்? (பி) தற்கால ரேகாபியர் வகுப்பாருக்கு இது என்ன நம்பிக்கையை அளிக்கிறது?

8. ஏன் கீழ்ப்படிதலைப் பலர் கடினமாகக் காண்கின்றனர்?

9. (எ) நாகமான் எலிசாவைக் காணச் செல்ல நேரிட்டது எவ்வாறு? (பி) அவன் என்ன எதிர்பார்த்தான், ஆனால் உண்மையில் என்ன நடந்தது?

10. (எ) நாகமான் எவ்வாறு பிரதிபலித்தான்? (பி) கீழ்ப்படியும்படி அவனைக் கடைசியாகத் தூண்டுவித்ததென்ன? (சி) அதன் பலன் என்ன?

11. (எ) என்ன முறைகளில் நாகமான் “மற்றச் செம்மறியாடுகளைப்” படமாக முன்குறித்தான்? (பி) என்ன முக்கியமான பாடங்களை நாமெல்லாரும் கற்றுக்கொள்ளவேண்டும்?

12, 13. (எ) யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் ஏன் நமக்கு நன்மை பயக்குகிறது? (பி) இதை எப்படி விளக்கிக் காட்டலாம்?

14. உலகத்துடன் அனாவசியமாய் நம்மை உட்படுத்துவதற்குப் பதிலாக ராஜ்யத்தை முதலாவது தேடுவதனால் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?

15. (எ) ஆதாம் இழந்ததைத் திரும்பப் பெறப்போகிறவர்களுக்குள் நாமிருக்க என்ன செய்ய கற்றுக்கொள்ளவேண்டும்? (பி) ஆயிர ஆண்டுகளின்போது யெகோவா நம்மிடம் எவ்வாறு பேசுவார்?

16. மூப்பர்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பது ஏன் இப்பொழுது ஒரு பாதுகாப்பு? கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழப்போகும் வாழ்க்கைக்கு இது எவ்வாறு நல்ல ஆயத்தமாயிருக்கிறது?

17. கீழ்ப்படிவதற்கு எது நமக்குத் தூண்டும் நோக்கமளிக்கவேண்டும்?

18. கடவுளை நாம் நன்றாய் அறிகையில், அவருக்கும் அவருடைய அமைப்புக்கும் கீழ்ப்படிவதை நாம் எவ்வாறு கருதுவோம்?

[பக்கம் 135-ன் படங்கள்]

குஷ்டரோகியான நாகமான் செய்ததைப்போல், பெருமையை அடக்கி மேற்கொள்வது சிலருக்குத் தேவை