Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சிறியவன் பலத்த ஜாதியாகிறான்’

‘சிறியவன் பலத்த ஜாதியாகிறான்’

அதிகாரம் 20

‘சிறியவன் பலத்த ஜாதியாகிறான்’

மனிதவர்க்கம் முழுவதன் ஜனத்தொகையோடு ஒப்பிடுகையில் யெகோவாவை வணங்குவோர் சம்பந்தப்பட்ட முறையில் வெகு காலம் எண்ணிக்கையில் சொற்பப் பேராகவே இருந்து வந்திருக்கின்றனர். ஆனால் நம்முடைய நாளில் அவர்களுடைய எண்ணிக்கை நீதியை நேசிப்போருக்கு மனக் கிளர்ச்சியூட்டும் வேகத்தில் பெருகிக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருக்கத்தின் பேரளவைக் குறித்து யெகோவாதாமே பின்வருமாறு முன்னறிவித்தார்: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) இந்த வேத வசனத்தில் சொல்லியிருக்கிறபடி, யெகோவாதாமே இதை நடைபெற செய்கிறார். எவ்வாறு? தம்முடைய ஊழியர்களைச் சுற்றியுள்ள தேசீய தொகுதிகளுக்கு நேர்மாறாக அவர்களை வைப்பதும் நேர்மை இருதயமுள்ளோரை வெகுவாய்க் கவர்ந்திழுப்பதுமான ஒரு நிலைமை தம்முடைய ஊழியர்களுக்குள் நிலவியிருக்கும்படி தாம் செய்வதன்மூலமே.

2 இது ஏசாயா 60:1, 2-ல் முன்னறிவிக்கப்பட்டது, அங்கே யெகோவா, உண்மைத் தவறா ஆவியின் சிருஷ்டிகளாலும் அவர்களோடுகூட பூமியிலுள்ள ஆவியால்-பிறப்பிக்கப்பட்ட குமாரராலும் ஆகிய தம்முடைய அமைப்பான தம்முடைய “ஸ்திரீயை” நோக்கி பின்வருமாறு சொல்லுகிறார்: “[ஸ்திரீயே, NW] எழும்பி ஒளிவீசு, உன் ஒளி வந்தது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜாதியாரையும் மூடும்; உன்மேலோ யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” இந்த வேறுபாட்டுக்கு ஆதாரம், 1914-ல் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தில் மேசியானிய ராஜ்யம் பிறந்ததேயாகும். அப்பொழுதே “யெகோவாவின் மகிமை” அவருடைய பரலோக அமைப்பின்மேல் உதித்தது, அது ராஜ்யத்தைப் பிறப்பித்தது. அவர்களுக்குள் மிகுந்த களிகூருதலுக்குக் காரணமிருந்தது. (வெளிப்படுத்துதல் 12:1, 2, 5, 10-12) பூமியில் அபிஷேகஞ்செய்யப்பட்ட ராஜ்ய சுதந்தரவாளிகளின் மீதிபேர் அந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். 1919-ல் தொடங்கி, மனிதவர்க்கத்தின் உண்மையான ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமேயென உலகமெங்கும் அறிவிக்கும் பொறுப்பை அவர்கள் மேற்கொண்டு ‘ஒளி வீசினார்கள்.’—1 பேதுரு 2:9; மத்தேயு 5:14-16.

3 இதற்கு நேர் மாறாக, 1914-ல் இந்த உலகத்தின் தேசீய தொகுதிகள், தங்கள் சொந்த அரசாட்சியைக் காத்து வைத்துக்கொள்ள போரிட்டு, வன்முறையும் பாதுகாப்பின்மையுமான சகாப்தத்துக்குள் பிரவேசித்தது, அதிலிருந்து அவர்கள் திரும்ப மீளவேயில்லை. அது முதற்கொண்டு உறுதி சமநிலையில்லாத இது, “விஞ்ஞான முன்னேற்றம்” இருந்தும் தாங்கள் நம்பிக்கை வைப்பதற்குத் தங்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இல்லையென பலர் உணரும்படி செய்வித்திருக்கிறது. மெய்யாகவே, ‘இருள் பூமியை மூடுகிறது.’ அவர்கள் ஏன் வெளியேற ஒரு வழியையும் காணமுடிகிறதில்லை? ஏனெனில், அரசராக யெகோவாவை ஏற்க தேசங்கள் மறுத்துவிட்டனர். பெரும்பாலும், ஒருசில அதிபதிகளே தாங்கள் அவருடைய பெயரை ஒருபோதும் பயன்படுத்தாத ஒரு ‘கடவுளுக்கு’ உதட்டுச் சேவை செலுத்துகின்றனர். காரியங்களைத் தாங்கள்தாமே கையாண்டு நடத்தும்படி அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது மனிதத் திறமைக்கு மிஞ்சியதாயிருக்கிறது. (எரேமியா 8:9; சங்கீதம் 146:3-6) தற்போதைய உலகம், அதன் பேராசையுடனும் ஊழல்களுடனும், அதன் “கடைசி நாட்களுக்குள்” பிரவேசித்திருக்கிறது. அதற்குக் காத்திருக்கிற அழிவை அது எவ்வகையிலும் தவிர்க்க முடியாது. கடவுளுடைய ராஜ்யத்தில் முழு விசுவாசம் வைத்திருக்கிற மக்கள் மாத்திரமே எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கமுடியும். நேர்மையான இருதயமுள்ளோர் பெருகும் எண்ணிக்கைகளில் இதை உணர்ந்து, யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொண்டு செயல்படுகிறவர்களாகிறார்கள். இவர்கள் ராஜ்யத்தைப் பற்றிப் பேசுவதுமட்டுமல்லாமல் தாங்கள் பிரசங்கிப்பதற்குப் பொருந்த வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்கிறார்கள்.

‘சின்னவன் ஆயிரமாகிறான்’

4 முதல் உலகப் போர் முடிவடைந்தபோது, ராஜ்ய சுதந்தரவாளிகளைக் கூட்டிச் சேர்ப்பது இன்னும் பூர்த்தியாகவில்லை. பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளப்போகும் முன்னறிவிக்கப்பட்ட 1,44,000 எண்ணிக்கையை நிரப்ப தேவைப்பட்ட பரலோக எருசலேமின் “குமாரரும்” “குமாரத்திகளும்” இன்னும் இருந்தனர். எனினும், இந்த வேலை முடிவுசெய்யப்படுவதை யெகோவா முன்னறிவித்து, பின்வருமாறு கூறினார்: “சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப் பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.” (ஏசாயா 60:4) 1919-லிருந்தும் அதன் பின்பும் ராஜ்ய பொது அறிவிப்பின் பலனாக மேலுமதிகமான ஆட்கள் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டு பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டார்கள். எனினும் மொத்தமாக, ராஜ்ய சுதந்தரவாளிகளின் அந்த முழு தொகுதியும் வெறும் ஒரு “சிறு மந்தை” எனவே இயேசு குறிப்பிட்டுப் பேசினார். (லூக்கா 12:32) ஏசாயா 60:22-ல் முன்னறிவித்தது நிறைவேற உண்மை வணக்கத்துக்குக் கூட்டிச் சேர்க்கப்படுவோர் நிச்சயமாகவே இன்னும் அதிகம் இருப்பர். மெய்யாக அவ்வாறே இருந்திருக்கிறது!

5 இவர்கள் ஏசாயா 55:5-ல் பின்வருமாறு பேசப்பட்டிருக்கின்றனர்: “இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய், உன்னை அறியாதிருந்த ஜாதி உன் கடவுளாகிய யெகோவாவின் நிமித்தமும் இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினாரே.” இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கு வெளியிலுள்ள ஜனங்கள். இவர்கள் பல ஜாதியாரிலிருந்து வருகிறபோதிலும் ஒற்றுமைப்பட்ட ஒரே ஜனமாகிறார்கள், எல்லாரும் கடவுளுடைய ராஜ்யத்துக்கு உண்மைத் தவறா ஆதரவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேர், வேத வசனங்களைத் தாங்கள் விளங்கிக்கொண்டிருந்தபடி அப்பொழுது “அறியாதிருந்த” ஒரு “ஜாதி,” மேலும் இந்த ஜனங்களும் முன்னால் கடவுளுடைய ஊழியரை அறிந்து ஒப்புக்கொண்டிருக்கவுமில்லை. ஆனால் நற்செய்தியைப் பிரசங்கித்ததன் பலனாக, இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர் உண்மையான கடவுளை வணங்குகின்றனரென தெளிவாக உணர்வதாலும் கடவுளுடைய ஆசீர்வாதத்தினால் மாத்திரமே உண்டாகக்கூடிய ஆவிக்குரிய அழகை அவர்களில் பகுத்துணர்ந்து காண்பதாலும், இவர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.

6 ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் ஜனங்களின் கவனத்தை வேறு காரியங்களில் செலுத்தும்படி திருப்பவும் சாத்தான் செய்திருக்கும் எல்லாவற்றின் மத்தியிலும், சத்தியத்தின் ஒளி தொடர்ந்து பூமியின் தொலைதூர பாகங்களுக்கும் எட்டிக்கொண்டிருக்கிறது. இதன் பலன் கடவுள் வெகு காலத்துக்கு முன்னால் தீர்க்கதரிசனமாய்த் தம்முடைய “ஸ்திரீ”க்குப் பின்வருமாறு சொன்னபடி இருக்கிறது: “அப்பொழுது நீ அதைக் கண்டு முகமலர்வாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்; சமுத்திரத்தின் ஐஸ்வரியம் உன் வசம் திரும்பும். ஜாதியாரின் செல்வம் உன்னிடம் வரும்; . . . யெகோவாவின் புகழை நற்செய்தியாகக் கூறுவார்கள்.” (ஏசாயா 60:5, 6, தி.மொ.) ஆம், கடவுளிடமிருந்து நட்புப் பிரிந்துள்ள மனிதவர்க்க “சமுத்திரத்தின்” பாகமாக ஒருகாலத்தில் இருந்தவர்களும், ஜாதியாரை மூடும் “காரிருளால்” தங்கள் வாழ்க்கை இருண்டிருந்த ஜனங்களுமாகிய “திரள் கூட்டமான” ஆட்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். கடவுளின் கண்களில், இவர்கள் மெய்யாகவே சகல தேசங்களிலிருந்தும் வரும் அருமையானவர்கள்.

7 எருசலேமில் யெகோவாவின் ஆலயம் திரும்பக் கட்டப்பட்ட சமயத்தில், தம்முடைய தீர்க்கதரிசி ஆகாய் பின்வருமாறு அறிவிக்கும்படி அவர் ஏவினார்: “சகல ஜாதியாரையும் அசையப் பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” (ஆகாய் 2:7, தி.மொ.) ஜாதியாரை ஆட்டி அசைப்பது முடிவில் அவர்களுடைய அழிவுக்கு வழிநடத்துகிறது, ஆனால் அது நடைபெறுவதற்கு முன்னால் “சகல ஜாதியாரின் அருமையானவைகள்” அவர்களுக்குள்ளிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டு யெகோவாவின் ஆவிக்குரிய பெரிய ஆலயத்துக்குள், அவருடைய வணக்கத்துக்குரிய சர்வலோக ஆலயத்துக்குள் கொண்டுவரப்படவேண்டும். இந்த உலகம் நொறுங்கி விழுந்து அழிகையில் இங்கே அவர்கள் பாதுகாப்பைக் கண்டடைவார்கள். இத்தகைய உயிருள்ள வணக்கத்தாரே யெகோவாவுக்கு அருமையானவர்கள். அவர்களுடைய பொருள்சம்பந்த செல்வம் அவருக்கு வேண்டியதில்லை. (மீகா 6:6-8) யெகோவாவுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புவாய்ந்தப் பொருள் முழு ஆத்துமாவோடும் செலுத்தும் வணக்கமே. அவர்களெல்லாரும் ‘யெகோவாவின் துதிகளை அறிவித்துக்கொண்டு’ இருதயப்பூர்வ பக்தியும் ஆர்வமிகுந்த சேவையுமான காணிக்கைகளுடன் வருகிறார்கள். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் யெகோவாவின் உண்மைத் தவறா ஊழியருக்கு அவர்களுடைய தோற்றம் எத்தகைய மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது!

8 பரதீஸ் பூமியில் வாழும் நம்பிக்கையை மனதில் வாஞ்சையுடன் கொண்டிருக்கும் யெகோவாவின் இந்த வணக்கத்தார் எத்தனை பேர்கள் அங்கே இருப்பர்? பைபிளில் திட்டமாய் எந்த எண்ணும் குறித்தில்லை. சகல தேசங்களிலிருந்தும் யெகோவாவின் அன்புள்ள ஏற்பாடுகளைப் பற்றிகொள்ள வரும் அத்தனை ஆட்களுக்கும் அது திறந்திருக்க விடப்பட்டிருக்கிறது. எனினும் என்ன எதிர்பார்க்கலாமென தெரிவிக்கும் ஒரு சுட்டுக்காட்டு ஏசாயா 60:8-ல் காணப்படுகிறது, இது அவர்களை “மேகத்தைப்போல்”—கீழுள்ள பூமியைப் பெரும்பாலும் இருளாக்கும் மேகத்தைப்போல்—“பறந்துவரும்” புறாக்கள் என விவரிக்கிறது. இது, பெரும் எண்ணிக்கையான ஆட்கள் குறுகிய காலத்தில் வருவதைக் குறிக்கிறது. யெகோவாவின் வணக்கத்தாரின் இந்தப் பெரும் உட்பாய்தலை மனதில்கொண்டே, ஆவிக்குரிய இஸ்ரவேல் ஆகிய “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்,” என்று முன்னறிவிக்கப்பட்டது, மேலும் “ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என்றும் யெகோவா சொன்னார். (ஏசாயா 60:22) உண்மையில் நடைபெற்றிருப்பதோடு இது பொருந்துகிறதா?

9முதல் உலகப் போருக்குப் பின் ராஜ்யத்தைப் பற்றி யாவரறிய சாட்சிகொடுப்பதில் ஒருசில ஆயிரம்பேரே சுறு சுறுப்பாய்ப் பங்குகொண்டிருந்தனர். 1935-க்குள் சிறிது குறைய 60,000 பேர் மொத்தம் உலகமெங்கும் இருந்தனர். 1941-ல் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,00,000-ஐக் கடந்துவிட்டது. 1953-க்குள், 5,00,000-துக்கு மேற்பட்டவர்களாயினர். பத்து ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் எண்ணிக்கை பத்து லட்சமாயிருந்தது. 1984-ன் தொடக்கத்தில், அவர்கள் எண்ணிக்கை 26,52,323. ஏன் கடவுளுடைய ராஜ்யம் ஒன்றே எதிர்காலத்துக்கான உண்மையான நம்பிக்கையை அளிக்கிறது என்பதை மற்றவர்களுக்குக் காண்பிக்க சராசரி, ஒரு நாளுக்குப் பத்து லட்சத்துக்கும் மிக மேற்பட்ட மணி நேரங்களை அவர்கள் செலவிடுகின்றனர். உலகத்திலுள்ள ஏறக்குறைய 60 தேசங்களின் தனித்தனி ஜனத்தொகையோடு, யெகோவாவின் சாட்சிகளாக யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின் குடிமக்களென அத்தாட்சி தருவோரின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அத்தேசங்களின் எண்ணிக்கை இந்த வளர்ந்துகொண்டேபோகும் “ஜாதி”யின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் சிறியதாயிருக்கிறதென்பது கவனிக்கத்தக்கது. எனினும் இந்தத் தனிப்பட்ட “ஜாதி” உலகத்தின் அரசியலில் எவ்விதப் பங்கும் கொள்ளுகிறதில்லை, உண்மையான கடவுளின் சேவைக்கே தனிப்பட்ட பக்தியுடன் தன்னை முழுமையாய் ஒப்படைத்திருக்கிறது.

10 இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைவதன் முழு அளவு இதுதானா? ஏற்கெனவே நடைபெற்றிருப்பது பைபிளின் விவரிப்புக்குப் பொருந்துவதற்குப் போதியதாயிருக்கிறது. மேலும், இந்த வேலை எந்தச் சூழ்நிலைமைகளின்கீழ் செய்யப்பட்டதென்பதை நாம் கவனிக்கையிலும்—மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புகள், அதை வெற்றிகரமாக்கத் தெய்வீக வழிநடத்துதலின் அத்தாட்சி, அதில் பங்குகொள்வோர் காட்டின முழு ஒப்படைப்பு ஆகியவற்றைக் கவனிக்கையிலும் மிக அற்புதமாயிருக்கிறது. மக்களின் வாழ்க்கையில் இது உண்டுபண்ணியிருக்கிற மாற்றங்களும் அதிசயமாயிருக்கிறது. ஆனால் யெகோவாவின் சார்பில் வெளிப்படையாய்த் தங்கள் நிலைநிற்கையை ஏற்கும் ஆட்களின் பெருக்கம் நின்றுபோகிறதில்லை, குறைகிறதுமில்லை. சமீப ஆண்டுகளில், ஒவ்வொரு மாதமும் சராசரி 20,000-த்துக்கு மிக மேற்பட்ட ஆட்கள் தண்ணீர் முழுக்காட்டுக்குத் தங்களை முன்வந்து அளித்திருக்கின்றனர், மேலும் மொத்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவர்களெல்லாரும் தங்கள் முழுக்காட்டுதல் அடையாளப்படுத்தினதன்படி வாழ்வதன்மூலம், “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைத்திருக்கும் திரும்ப உறுதிசெய்யும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம்.

11 இந்தப் பத்து லட்சக்கணக்கான ஆட்கள் வெறுமென தனித்தனியே பிரிந்திருந்து அவரவர் தங்கள் சொந்த வழியில் கடவுளைச் சேவிக்கும் பைபிள் மாணாக்கர் அல்லர். இவர்கள் கீழ்ப்படிதலுடன் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் பாகமாகும் ஆட்கள். நாம் பார்த்தபடி, முதல் ராஜ்ய சுதந்தரவாளிகள் ‘கூட்டிச் சேர்க்கப்பட்டனர்.’ இப்பொழுது பல ஜாதியாரிலிருந்து மற்றவர்கள், பூமிக்குரிய வாழ்க்கையின் நம்பிக்கையுடன் ‘அவர்களிடத்திற்கு வருகிறார்கள்.’ (ஏசாயா 60:4, 5) இவர்கள் “ஒரே மேய்ப்பனான” இயேசு கிறிஸ்துவின்கீழ் “ஒரே மந்தை”யில் ஒன்றுபட்டவர்களாகியிருக்கின்றனர். (யோவான் 10:16) அப்போஸ்தலன் பேதுரு உண்மையான கிறிஸ்தவர்களை உலகமெங்குமுள்ள ‘சகோதரக் கூட்டத்தார்’ என விவரித்தான், மேலும் அவர்கள் தங்களைத் தனித்தனியே ஒதுக்கி வைத்துக்கொள்ளாமல் ஒன்றாய்ச் சபை ‘கூடிவரும்படியும்,’ தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றுவதற்குரிய நாள் நெருங்கிவருகையில் மேலுமதிகமாக அவ்வாறு செய்யவும் பவுல் அவர்களை ஊக்கப்படுத்தினான். (1 பேதுரு 5:9; எபிரெயர் 10:23-25) இம்முறையில் அவர்கள், இந்த அமைப்பு இருந்துவரும் அந்தச் சிறந்த நோக்கத்தில் பங்குகொள்ள பலப்படுத்தித் தகுதியாக்கப்படுகிறார்கள். அந்த நோக்கம் என்ன? யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதேயாகும்.—1 பேதுரு 2:9; ஏசாயா 12:4, 5.

ஒரு வேலை செய்யப்படவேண்டும்

12 யெகோவாவின் அமைப்பிலுள்ளோர் யாவரும் வேலையாளரென அதனுடன் கூட்டுறவுகொள்ளும் எல்லாரும் சீக்கிரத்தில் கண்டுகொள்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி அவர்களெல்லாரும் கடவுளுடைய ராஜ்யத்தின் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் பிரசங்கிகளாக இருக்கின்றனர், இதைக் கருவியாகக் கொண்டே யெகோவாவின் பெயர் நேர்மை நிரூபிக்கப்படும். இயேசுதாமே பின்வருமாறு சொன்னார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக்கா 4:43) மற்றவர்களும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையைக் கட்டியமைக்கவேண்டிய தேவையைப் பற்றி அவர் ஊக்கமாய்ப் பேசினார். தாம் செய்துகொண்டிருந்த அதே வேலையைச் செய்யும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்கு அவர் கற்பித்தார். “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி; குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,” என்ற வேலையை அவர் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்துக்கு முன்னறிவித்தார். (மத்தேயு 24:14, NW) இன்று நம்மில் எவராவது செய்யக்கூடிய மிக அதிக முக்கியமான வேலை இதுவே. ஏன்? ஏனென்றால், சகல சிருஷ்டிப்பின் சுகநலமும் அதன்பேரில் சார்ந்திருக்கிற யெகோவா தேவனின் நேர்மையான அரசாட்சியை நாம் இதன்மூலமே ஆதரித்து உயர்த்துகிறோம். இந்த வேலையில் முழு இருதயத்துடன் பங்குகொள்வதனால், யெகோவாவின் மிகுதியான தகுதியற்றத் தயவுக்காக நம்முடைய நன்றி மதித்துணர்வை மெய்ப்பித்துக் காட்டுகிறோம். சீக்கிரத்தில் நேரிடவிருக்கிற மிகுந்த உபத்திரவத்தைத் தாங்கள் தப்பிப்பிழைக்கக்கூடியதற்கு இருக்கும் ஒரே வழிவகையை நம் உடன்தோழரான மனிதர் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கும் நாம் உதவிசெய்கிறோம்.—1 தீமோத்தேயு 4:15, 16-ஐ ஒத்துப் பாருங்கள்.

13 யெகோவாவின் அமைப்புக்குள் தாங்கள் காணும் சூழ்நிலைமைகள் அவர்களுடைய இருதயங்களை மகிழ்விக்கிறது. ஏசாயாவின் மூலம் யெகோவா முன்னறிவித்தபடி: “சமாதானத்தை உங்கள் கண்காணிகளாகவும் நீதியை உங்களை வேலை வாங்குவோராயும் நான் நியமிப்பேன்.” (ஏசாயா 60:17, NW) வியாபித்திருக்கிற இந்தச் சமாதானம் வெறும் வாய்ப் பேச்சு அல்ல, அது உண்மையானது, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஒரு கனியாயிருக்கிறது. இது, ஒருவன் அமைப்புடன் வெறுமென கூட்டுறவுகொள்வதனால் இந்தச் சமாதானத்தை முழுமையாய் அனுபவிக்கிறானென பொருள்கொள்கிறதில்லை. “சமாதானத்துக்கும் பரஸ்பர பக்திவிருத்திக்கும் அனுகூலமானவைகளைப் பின்தொடர” அவன்தானே முயற்சியெடுத்துக் கற்கவேண்டும். (ரோமர் 14:19, தி.மொ.) மற்றவர்களின் அபூரணங்களைப் பொறுத்து சமாளிப்பதில் தெய்வீக ஞானத்தைக் காண்பிக்கவும், நீடிய பொறுமையையும் தன்னடக்கத்தையும் கொண்டிருக்கும் அத்தாட்சியைத் தரவும், தனக்குக் கடவுள் மன்னிக்கவேண்டுமென தான் விரும்புவதுபோலவே மற்றவர்களுக்கு மன்னிக்கவும் அவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆம் அவன் ‘சமாதானஞ் செய்யவேண்டும்.’ (யாக்கோபு 3:17, 18; கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:12-14) இப்படிச் செய்கிறவர்கள், இப்பொழுது உருவாகிக்கொண்டுவருவதும், “நித்தியானந்த தேவனான” யெகோவாவின் சேவைக்குத் தன்னை முழுமையாய் ஒப்படைத்திருப்பதுமான இந்தப் “பலத்த ஜாதி”யின் பாகமாயிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். (1 தீமோத்தேயு 1:11) அதன் அதிபதியாக சாத்தானுக்குக் கீழ்ப்படியும் இந்த முழு உலகத்துக்கும் எதிராக யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் இந்த “ஜாதி”யின் உறுப்பினரே பாதுகாத்து வைக்கப்படுவர்.

[கேள்விகள்]

1. (எ) உண்மை வணக்கத்தாரின் பெருக்கத்தின் பேரளவைக் குறித்து யெகோவா என்ன முன்னறிவித்தார்? (பி) உண்மையில் இதைக் கொண்டுவருபவர் யார்? எவ்வாறு?

2. (எ) ஏசாயா 60:1, 2 யாரை நோக்கிப் பேசப்படுகிறது? (பி) எவ்வகையில் “யெகோவாவின் மகிமை” அவள்மீது பிரகாசிக்கச் செய்யப்பட்டது? (சி) மீதிபேர் எவ்வாறு “ஒளி வீசி”னார்கள்?

3. (எ) ஏன், முக்கியமாய் 1914 முதற்கொண்டு ‘இருள் பூமியை மூடியிருக்கிறது’? (பி) ஒரே உண்மையான பரிகாரம் என்ன?

4. ஏசாயா 60:4-ன் நிறைவேற்றமாக, எந்தக் கூட்டிச் சேர்க்கும் வேலைக்கு முதல் கவனம் செலுத்தப்பட்டது?

5. ஏசாயா 55:5-ல் விவரிக்கப்பட்டபடி மேலுமான பெருக்கத்தின் தோற்றுமூலம் எவ்வாறு இருந்திருக்கிறது?

6. ராஜ்ய செய்தி எவ்வளவு தூரமளவாகக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது? அதன் கிளர்ச்சியூட்டும் பலன்கள் யாவை?

7. இந்தப் பெருக்கத்தை முன்னறிவித்துள்ள முறையால், எது தம்முடைய கண்களுக்கு உண்மையில் அருமையானவையென யெகோவா எவ்வாறு காட்டுகிறார்?

8. ராஜ்யத்தின் பூமிக்குரிய சுதந்தரவாளிகளாயிருக்க எதிர்பார்ப்போரின் கூட்டிச்சேர்த்தலின் விரிவைக் குறித்து பைபிள் என்ன சுட்டுக்காட்டுகளைக் கொடுக்கிறது?

9. 1935 முதற்கொண்டு எந்த அளவுக்கு அத்தகைய பெருக்கம் நடந்தேறியிருக்கிறது?

10. (எ) என்ன சூழ்நிலைமைகள் இந்த வளர்ச்சியை நம்முடைய கண்களில் அதிசயமாக்குகிறது? (பி) இன்னும் அதிகம் வரவிருக்கிறதென எது சுட்டிக் காட்டுகிறது?

11. (எ) இந்தப் பத்து லட்சக்கணக்கானோர் ஓர் அமைப்பின் பாகமாவதை பைபிள் எவ்வாறு குறித்துக் காட்டுகிறது? (பி) இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம் என்ன?

12. (எ) நாம் எல்லாரும் பங்குகொள்ளவேண்டிய வேலையை இயேசு எவ்வாறு தெரிவித்தார்? (பி) இது எவ்வளவு முக்கியமானது? ஏன்?

13. (எ) ஏசாயா 60:17-ல் யெகோவாவின் அமைப்புக்கு என்ன நிலைமை முன்னறிவிக்கப்பட்டது? (பி) இதை முழுமையாய் அனுபவிக்க நாம் என்ன செய்யவேண்டும்? (சி) அவ்வாறு செய்பவர்களுக்கு முன்னால் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது?