Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திரும்பி வருவோருக்குக் கனிவான வரவேற்பு

திரும்பி வருவோருக்குக் கனிவான வரவேற்பு

அதிகாரம் 21

திரும்பி வருவோருக்குக் கனிவான வரவேற்பு

யெகோவாவே உண்மையான கடவுள் என்று அறியவும் அவருடைய நோக்கங்களைப்பற்றிச் சற்று விளங்கிக்கொள்ளவும் ஏதோவொரு சமயத்தில் பைபிள் சத்தியத்தோடு போதிய தொடர்பு கொண்டிருந்த ஆட்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இராதபோதிலும், அவர்கள் சாட்சிகளுடன் பைபிளைப் படித்திருக்கலாம். அல்லது ஒருவேளை அவர்கள் பெற்றோர் சாட்சிகளாக இருந்திருக்கலாம். இவர்களில் பலர் ராஜ்ய மன்றத்தில் சில கூட்டங்களுக்கு வந்திருக்கின்றனர். ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதிலுங்கூட அவர்கள் ஒருவேளை சிறிது பங்கு கொண்டிருக்கலாம். ஆனால் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தங்கள் வாழ்க்கையை அவர்கள் ஒப்புக்கொடுக்கவில்லை. ஏன்?

2தங்களுக்கு வேண்டுமென அவர்கள் எண்ணுவதும், தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு மேலும் கூட்டுமென அவர்கள் உணருவதுமான கவர்ச்சிகரங்களை இந்த உலகம் முன்வந்து அளிக்கிறது, இத்தகைய காரியங்களை அவர்கள் நாடித்தேடுவதில் யெகோவாவின் அமைப்பை விட்டு தூர அலைந்து திரிகிறார்கள். எனினும், காலப்போக்கில் இவர்களில் சிலர் தாங்கள் எதிர்பார்த்த வகையான வாழ்க்கையைக் கண்டடையவில்லையென உணருகின்றனர். தாங்கள் இருக்கிற அந்நிலையில் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால், இந்த உலகத்தோடு அழியப்போகின்றனர் என்ற உண்மைக்கு விழிப்புள்ளவர்களாகின்றனர். யெகோவாவின் “வீட்டில்” உள்ள பாதுகாப்பையும் ஆவிக்குரிய ஏராளத்தையும் அவர்கள் மறந்துவிடவில்லை, தாங்கள் மறுபடியும் அங்கே இருக்க விரும்புகின்றனர். ஆனால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்வாரா?

கெட்ட குமாரன் திரும்பிவருகிறான்

3யாவரும் அறிந்துள்ள கெட்ட குமாரனைப்பற்றிய இயேசுவின் உவமையில் இதற்குப் பதில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. உதாரணமாக, இயேசு, இரண்டு குமாரர்களைக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார். இளைய குமாரன் தன் பங்கு சொத்தைத் தனக்குக் கொடுத்துவிடும்படி தன் தகப்பனைக் கேட்டான். இதைப் பெற்றுக்கொண்டு, அவன் ஒரு தூர தேசத்துக்குச் சென்று, எல்லாவற்றையும் சிற்றின்ப வெறிகொண்ட வாழ்க்கையில் அசட்டுத் துணிவுடன் வீண்செலவு செய்தான். இவ்வாறு அவன் ஊதாரித்தனமாய் நடந்துகொண்டான். அந்நாட்டில் பஞ்சம் உண்டானபோது, இந்த இளைஞன், கடும் தேவையில், பன்றிகளை மேய்க்கும்படி வற்புறுத்தப்பட்ட நிலைக்குள்ளானான், ஆனால் பன்றிகளுக்குப் போடப்பட்ட தவிட்டைச் சாப்பிடவுங்கூட அவன் அனுமதிக்கப்படவில்லை. தன்னைக் கடுமையாய் நெருக்கின பிரச்னைகளால் மனங்கலங்கி, அவன் தன் நல்லுணர்வுகளுக்குத் திரும்பினான். தன் தகப்பனுடைய வீட்டில் கூலியாட்களுக்குங்கூட வாழ்க்கை எவ்வளவு நன்றாய் இருந்ததென்பதை நினைவுபடுத்திப் பார்த்தான், அவன் திரும்பிச் செல்ல தீர்மானித்தான். தன் பாவப் போக்கை ஒப்புக்கொண்டு, தன்னை, குமாரனாக அல்ல ஒரு கூலியாளனாகத் திரும்ப ஏற்றுக்கொள்ளும்படி கேட்பான். (லூக்கா 15:11-19) ஆனால் தான் செய்திருந்த இந்த எல்லாக் காரியங்களுக்கும் பின், தான் திரும்பிவர தன் தகப்பன் அனுமதிப்பாரா? இந்த உவமையில் தகப்பன் யெகோவாவை படமாக குறிக்கிறான். யெகோவா, இத்தகைய ஆள் திரும்பி வருவதை எவ்வாறு கருதுவார்?

4இந்தக் காரியத்தில் யெகோவாவின் உணர்ச்சிகளை உயிர்ப்புள்ள முறையில் விவரித்து இயேசு பின்வருமாறு தொடர்ந்து கூறினார்: “அவன் [இளைய குமாரன்] தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்; இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல [என்னை உம்முடைய கூலியாட்களில் ஒருவனாக்கும், NW] என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.”—லூக்கா 15:20-24.

இந்த உவமை இன்று எவ்வாறு பொருந்துகிறது?

5 இந்த உவமையில் அந்த மூத்தக் குமாரன், முதற்பேறானவன், பொருத்தமாகவே “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபை”க்கு ஒத்திருக்கிறான். (எபிரெயர் 12:23) இளைய குமாரனைப் பற்றியதென்ன? இவன் பரலோக நம்பிக்கையையுடைய “சிறு மந்தை”யை அல்லாமல் வேறு ஒரு வகுப்பாரைக் குறிக்கவேண்டும். கர்த்தரின் “மற்றச் செம்மறியாடுகள்” முழுமையாக இந்த இளைய குமாரனின் விவரிப்புக்குப் பொருந்துகிறதில்லை, ஆனால் சிலர் பொருந்துகிறார்கள். “மற்றச் செம்மறியாடுகளின்” கூட்டிச்சேர்த்தல், 1935-ல் தொடங்கி முக்கியமாய்க் கவனிக்கத்தக்கதாவதற்கு முன்பே, யெகோவாவே ஒரே உண்மையான கடவுள் என்றறிந்திருந்த ஆட்கள் இருந்தனர். அவருடைய ராஜ்யத்தின்கீழ் பூமிக்குரிய வாழ்க்கைக்குரிய நம்பிக்கையை அவர்கள் அறிந்திருந்தனர், பரலோக நம்பிக்கைகளையுடைய “முதற்பேறானவர்களின் சபை”யாக இருக்கும் எந்த எண்ணத்தையும் அவர்கள் தங்களுடையதாகக் கருதவில்லை. ஆனால் யெகோவாவின் சேவைக்குத் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்திருப்பதற்குப் பதிலாக, அவர்கள் உலக வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தனர். கடவுள் அவர்களுக்கு அருளியிருந்த ‘வாழ்க்கைக்குரிய வழிவகைகளான,’ நேரத்தையும் அவர்கள் கொண்டிருக்கும்படி அவர் அனுமதித்த உயிரையும் சாதாரண காரியங்களாக எடுத்துக்கொண்டு, இவற்றைத் தங்கள் சொந்தத் தன்னலத்தைத் திருப்திசெய்துகொள்ள பயன்படுத்தினர். ஆனால் 1935-ல், யெகோவாவின் ஊழியர்கள், “திரள் கூட்டத்தாரின்” அடையாளத்தை முதல் தடவையாகத் தெளிவாய் விளங்கிக்கொண்டபோது, அந்த இளைய குமாரனுக்கு ஒத்திருந்த பலர் தகப்பனின் வீட்டில் சேவை செய்வதற்குத் தங்களை முழு இருதயத்துடனும் முன்வந்து அளித்தனர். அது தம்முடைய உவமையில் இயேசு விவரித்ததைப்போன்ற களிகூருதலுக்குச் சமயமாயிருந்தது.

6 அச்சமயத்தில், இளைய குமாரன் குறித்துக் காட்டின வகுப்பார் வந்துசேர்ந்ததன்பேரில் உண்டான இந்தக் களிகூருதலில் எல்லாரும் பங்குகொள்ளவில்லை என்பது மெய்யே. இவ்வாறு இருக்குமென இயேசு தம்முடைய உவமையில் குறிப்பிட்டார். ஆனால் “சிறு மந்தை”யின் மீதிபேர் எல்லாருமே அத்தகைய மனநிலையைக் காட்டவில்லை, முதல் பிரியப்படாதவர்களுங்கூட, அத்தகைய பாவிகள் உண்மையில் மனந்திரும்புகையில் யெகோவாதாமே கொள்ளும் மகிழ்ச்சியில் பங்குகொள்வதற்கு இயேசு வழி திறந்திருக்கும்படி விட்டார்.—லூக்கா 15:7, 10, 25-32.

7 எனினும், 1930-ன் பத்தாண்டுகளின் மத்திபத்தில் அந்நிகழ்ச்சிகள் நடந்தது முதற்கொண்டு, மற்றவர்கள் தாங்களும் சில காரியங்களில் அந்தக் கெட்ட குமாரனைப்போலிருப்பதை உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் யெகோவாவின் ஆவிக்குரிய வீட்டாரோடு, அவருடைய காணக்கூடிய அமைப்போடு நன்றாய் அறிமுகமாகியிருக்கின்றனர், ஆனால் அவர்களுடைய வாழ்க்கைமுறை அவர்களை “தூர தேசத்துக்கு” என்றதுபோல், அதை விட்டு தூர கொண்டுசென்றிருக்கிறது. யெகோவாவின் ஊழியரை அவர்கள் எதிர்க்கவில்லை, ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முறை கடவுளுடைய வார்த்தையின் தராதரங்களுக்கு ஒத்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் உலகப்பிரகாரமான வேலையையும் தங்களையும் சுற்றிக் கட்டியிருக்கலாம் ஆனால் கடவுளுக்கு முன்பாகத் தங்கள் கடமைகளுக்கும் நாம் வாழும் காலங்களின் வினைமையான தன்மைக்கும் தகுதியான முக்கியத்துவம் கொடுக்கத் தவறியிருக்கலாம். சிலர் அப்பொழுது சபையுடன் கூட்டுறவுகொண்டிருந்தவர்களின் அபூரணங்களால் புண்படுத்தப்பட்டனர், காரியங்களைத் திருத்தும்படி அவர்கள் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் எல்லாரும் விசுவாச வீட்டாரிடமிருந்து தங்களைப் பிரித்து ஒதுக்கி வைத்துக்கொண்டபோது என்ன நிலைமைக்குள்ளானார்கள்?

8 காலப்போக்கில், தாங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய்த் தரித்திரரானதைச் சிலர் உணர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கிருக்கும் அற்ப நேர இன்பங்கள் என்னவாயினும் அவை நிலையான மகிழ்ச்சியைத் தங்களுக்குக் கொண்டுவருகிறதில்லையென அவர்கள் காணமுடிகிறது. மேலும் தங்கள் வாழ்க்கை முறை, உடல் சம்பந்தமாயும் உணர்ச்சிவச மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாயும் பெரும் கெடுதியுண்டாக்குவதையும் அவர்கள் காணலாம். கடவுள் இல்லாமலும் நம்பிக்கையில்லாமலும் இருக்கும் எல்லாரும் உணருவதுபோல், உள்ளத்தில் அவர்கள் வெறுமை உணர்ச்சியடையலாம். (எபேசியர் 2:12) தாங்கள் உண்மையில் மகிழ்ச்சியாயிருந்த ஒரே சமயம் யெகோவாவின் ‘வீட்டிலேயே’ என தெரிந்துணருகிறார்கள். திரும்பிச்செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் திரும்பிச்செல்ல வேண்டுமா? தங்கள் தரித்திர நிலையில் தொடர்ந்திருப்பதிலிருந்து என்ன பயனடையக்கூடும்? தாமதிப்பது உயிர் நாசத்தை உண்டாக்கலாம். உலகம் அழிக்கப்படுகையில், அவர்கள் தொடர்ந்து உலகத்தைப் பற்றிக்கொண்டிருந்தால், தங்கள் உயிரை இழக்கப் போகிறார்கள்.

9 ஆனால் அத்தகைய ஆட்கள் திரும்பிவரலாமா? திரும்பிவரும்படி யெகோவா அவர்களைக் கனிவுடன் அழைக்கிறார். மேலும், அப்படிச் செய்கிறவர்களுக்கு அவருடைய காணக்கூடிய அமைப்பு அன்புள்ள உதவியைக் கொடுக்கிறது. (சகரியா 1:3, 4) தேவைப்படுவது என்ன? இயேசுவின் உவமையில் காட்டியிருக்கிறபடி, அவர்கள் தங்கள் உணர்வுக்கு வரவேண்டும், திரும்பிவர தாங்களாக மனமுவந்து முயற்சியெடுத்து கடவுளுக்கு விரோதமாகத் தாங்கள் பாவஞ்செய்தார்களென ஒப்புக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களுக்குரியதல்லாத படுமோசமான நடத்தையில் அவர்கள் ஈடுபட்டிருந்தால், அந்த வாழ்க்கை முறையைத் தாங்கள் இப்பொழுது விட்டுவிட்டனரெனவும் உண்மையில் மனந்திரும்பினரெனவும் நம்பத்தக்க அத்தாட்சியை அவர்கள் மூப்பர்களுக்குக் கொடுக்கவேண்டும். யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் பாகமாயிருந்து யெகோவாவைச் சேவிக்கவேண்டுமென்பதே இப்பொழுது அவர்களுடைய ஊக்கமான ஆவலாயிருக்கவேண்டும். (லூக்கா 15:18-21; நீதிமொழிகள் 28:13) இதுவே அவர்கள் இருதயத்தில் உண்மையில் இருக்கிறதென்றால், தங்கள் கெட்ட வழிகளையும் நினைவுகளையும் விட்டுவிட்டு யெகோவாவிடம் திரும்பினது மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருமென அவர்கள் நிச்சயமாயிருக்கலாம். (ஏசாயா 55:7) எனினும், அவர்களுடைய சொந்த மகிழ்ச்சி, ராஜ்ய மன்றத்தில் கனிவுடன் திரும்ப வரவேற்கப்படுவதற்கு அப்பாலும் நீடிப்பதற்கு, ஆவிக்குரியபிரகாரமாய் நன்றாய்த் திரும்பக் கட்டியெழுப்பப்படுவது தேவை.

நல்ல ஆதாரத்தின்மேல் கட்டுதல்

10 யெகோவாவின் வீட்டுக்குத் திரும்பிவரும் எவரும் யெகோவாவின் குணங்களின் பல்வேறு அம்சங்களோடு நன்றாய் அறிமுகமாவதும் அவரோடு நெருங்கிய தனிப்பட்ட உறவை வளர்ப்பதும் பிரத்தியேகமாக முக்கியமானது. யெகோவா நமக்குக் கட்டளையிடுவதெல்லாம் உண்மையில் நம்முடைய சொந்த நன்மைக்கானவையே என்பதை அவர்கள் உணரவேண்டும். அவருடைய கட்டளைகள் வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியை எடுத்துப்போடுகிறதில்லை, ஆனால், அதற்குப் பதிலாக, கணநேர கிளர்ச்சியைக் கொண்டுவந்து கசப்பான அறுவடைக்கு வழிநடத்தக்கூடிய காரியங்களைச் செய்வதற்கு எதிராக நம்மைப் பாதுகாக்கின்றன. (ஏசாயா 48:17; கலாத்தியர் 6:7, 8) அவர் நம்மைச் சிட்சிக்கையில், நம்மை நேசிப்பதன் காரணமாகவே அவ்வாறு செய்கிறார். (நீதிமொழிகள் 3:11, 12) தனிப்பட்ட படிப்பும் அதைப் பின்தொடர்ந்து படித்தவற்றின்பேரில் ஆழ்ந்து சிந்திப்பதும், ஊக்கமான ஜெபமும், கூட்டத்துக்குத் தவறாமல் ஆஜராயிருப்பதும் யெகோவாவில் நம்முடைய முழு நம்பிக்கையை வைக்கவும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் வழிநடத்துதலுக்காக அவரிடம் நோக்கவும் கற்றுக்கொள்ள நமக்கு உதவி செய்யும்.—நீதிமொழிகள் 3:5, 6.

11 வழி தவறி சென்றவர்கள் எது சரி எது தவறென அறிந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது தீமைக்கு வெறுப்பையும் தங்களில் வளர்க்கவேண்டும் அது தங்களைச் சுற்றி இருக்கும் வரையிலும் அவ்வாறு அதைத் தொடர்ந்து வெறுக்கவேண்டும். (சங்கீதம் 97:10) அறிவை மட்டுமல்லாமல் தெளிந்துணர்வையும் அவர்கள் தேடினால் இதைச் செய்ய உதவிசெய்யப்படுவார்கள். முதலாவதாக, கடவுள் சம்பந்தப்பட்ட முறையில் காரியங்களைக் காண்பதை இது உட்படுத்துகிறது. அவர் நமக்குக் கற்பிக்கும் பல்வேறு வழிவகைகளையும் அவருடைய அறிவுரைக்கு நம்முடைய பிரதிபலிப்பு அவருடன் நம்முடைய உறவைப் பாதிக்கும் முறையையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். (நீதிமொழிகள் 4:7; 9:10) எல்லாச் சமயத்திலும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவின் தராதரங்களைப் பொருத்திப் பிரயோகித்து, மாறாமல் நிலையாய் இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் மதித்துணரவேண்டும். (தீத்து 2:11, 12; 1 தெசலோனிக்கேயர் 4:7) வெறும் கணப்பொழுது கிடைக்கும் இன்பத்தை மாத்திரமேயல்ல, நம்முடைய தீர்மானங்களின் விளைவு என்னவாயிருக்கும் என்பதையும் ஆழ்ந்து யோசனைசெய்து பார்க்கக் கவனம் செலுத்தப்படவேண்டும். (ஒத்துப்பாருங்கள்: நீதிமொழிகள் 20:21; 23:17, 18; எபிரெயர் 11:24-26.) நாம் சொல்லும் மற்றும் செய்யும் காரியங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் முறையைப் பற்றியும் நாம் அன்புடன் அக்கறைகொண்டிருக்கவேண்டும்.—ரோமர் 15:1, 2.

12 கிறிஸ்தவர்களாக நாம் ஆவிக்குரிய ஒரு போரின் மத்தியில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துணர்வதால் நாம் வெகுவாய்ப் பலப்படுத்தப்படுவோம். நம்முடைய முக்கிய எதிரி பிசாசாகிய சாத்தான், அவனோடுகூட அவனுடைய பேய்களும் இருக்கிறார்கள். தன்னால் கூடிய எல்லா வழிவகைகளையும் கொண்டு, நம்முடைய கவனத்தை, யெகோவா நமக்குச் செய்யும்படி கொடுத்திருக்கிற இன்றியமையாத ராஜ்ய வேலையிலிருந்து வேறு வழியில் திருப்ப அவன் தேடுகிறான். யெகோவாவின் தராதரங்களை விட்டு விலகி, தான் அதன் அதிபதியாயிருக்கும் இவ்வுலகத்தின் பாகமாகும்படி நம்மை வசீகரித்துச் செய்விக்கவேண்டுமென்பதே அவனுடைய நோக்கம். அடிக்கடி அவனுடைய கண்ணிகள் இயல்பான விருப்பங்களுக்கு (மகிழ்ச்சி, உடல் செளகரியம், அன்பு, உருக்கமான பாசம் ஆகியவற்றிற்கு) மனதைக் கவர்ந்திழுக்கின்றன, ஆனால் இத்தகைய விருப்பங்களுக்கு அவற்றின் நோக்கத்தைச் சீர்கேடடைய செய்யும் முதன்மையைக் கொடுக்க அல்லது அவற்றைத் தகாத வழிகளில் திருப்தி செய்துகொள்ள அவன் நம்மைத் தூண்டுவிக்கிறான். கடவுள் அளிக்கும் ஆவிக்குரிய போராயுதங்களை முழுமையாய்ப் பயன்படுத்துவதனால் மாத்திரமே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குரிய இந்தப் போரில் நாம் வெற்றிப்பெற முடியும்.—எபேசியர் 6:11-18.

13 நாம் இயேசுவிடம் வந்து அவருடைய “நுகத்தை” ஏற்றுக்கொண்டால், நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவோம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:29, 30) ஒருவன் தன்மீது ஒரு “நுகத்தை” ஏற்பது சேவை செய்வதைக் குறிக்கிறது. ஆனால் யெகோவாவை அவருடைய குமாரனுடைய மாதிரியைப் பின்பற்றிச் சேவிப்பது உண்மையான இளைப்பாறுதலைக் கொண்டுவரும். எவ்வாறு? ஏனெனில் அது உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவருகிறது. நாம் செய்யக்கூடாதென்று அறிந்தவற்றை அல்லது ஒருவேளை செய்ய வேண்டாமென விரும்புகிறவற்றைச் செய்துகொண்டு, பாவத்துக்கு அடிமைகளாக, அதற்குச் சிறைப்பட்டு இனிமேலும் இல்லை. (யோவான் 8:32, 34-36) நம்முடைய கிறிஸ்தவ சுபாவம் இயேசு கிறிஸ்துவில் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்டுக் கட்டப்பட்டிருந்தால், யெகோவாவின் நோக்கத்தில் அவர் வகிக்கும் பாகத்தை நாம் நன்றியோடு மதித்துணர்வோம், அவருக்கு நாம் செவிகொடுத்து அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம். அவர் தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். நாமும் அவ்வாறு செய்ய கற்றுக்கொள்வோம். (யோவான் 4:34; சங்கீதம் 40:8) கடவுள் வைத்துள்ள ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிப்பதனால் சுத்தமான மனச்சாட்சியை நாம் அனுபவித்து மகிழ முடியும். தனக்காக மாத்திரமே வாழ்வதற்குப் பதிலாக, கொடுப்பதிலிருந்து வரும் மகிழ்ச்சியை நாம் அனுபவிப்போம். (அப்போஸ்தலர் 20:35) வாழ்க்கை நமக்கு உண்மையான நோக்கத்தைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய குமாரராகும் எல்லாருக்கும் தகப்பனாகிய யெகோவாவின் நற்சம்மதத்தைத்தானே நாம் கொண்டிருப்பதை அறியும் மகிழ்ச்சி நமக்கு இருக்கும்.—நீதிமொழிகள் 10:22.

[கேள்விகள்]

1. இந்த அதிகாரத்தில் என்ன வகையான ஆட்கள் தர்க்கிக்கப்படுகின்றனர்?

2. (எ) அவர்கள் ஏன் யெகோவாவின் அமைப்பைவிட்டு தூர அலைந்து திரிந்தனர்? (பி) அவர்கள் ஏன் தாங்கள் திரும்பி வரும்படி விரும்பத் தொடங்குகின்றனர்?

3. (எ) கெட்ட குமாரனின் உவமையில், இதைப் போன்ற ஒரு சூழ்நிலைமையைப் பற்றி என்ன விவரிப்பை இயேசு கொடுத்தார்? (பி) அந்தத் தகப்பன் யாரைப் படமாக குறிக்கிறான்?

4. தன்னுடைய குமாரன் திரும்பி வந்தபோது தகப்பன் அவனை எவ்வாறு ஏற்றான்?

5. (எ) இயேசுவின் உவமையில் அந்த மூத்தக் குமாரன் யாரைப் படமாகக் குறிப்பிட்டான்? (பி) அப்படியானால், ஊதாரியான அந்த இளைய குமாரன் யாரைக் குறிப்பிட்டான்?

6. நிறைவேற்றத்தில், எவ்வாறு சிலர் அந்த மூத்தக் குமாரனின் மனப்பான்மையைக் காட்டினர், ஆனால் மீதிபேர் எல்லாருமே அவ்வாறிருந்தார்களா?

7, 8. (எ) மிகச் சமீப ஆண்டுகளில், எது மற்றவர்களை யெகோவாவின் வீட்டாரைவிட்டு தூர விலகிச் செல்ல செய்வித்தது? (பி) எவ்வகைகளில் சிலர் அந்தக் கெட்ட குமாரனைப்போல் உணர்ந்தனர்? (சி) அவர்கள் ஏன் திரும்பிவரவேண்டும்?

9. (எ) இத்தகைய ஆட்கள் திரும்பி வரும்படி யெகோவா ஏன் விரும்புகிறார்? (எசேக்கியேல் 18:23) (பி) அவர்கள் பங்கில் என்ன தேவைப்படுகிறது?

10. (எ) மனந்திரும்பினவர்கள் யெகோவாவின் கட்டளைகளிடம் என்ன மனப்பான்மையை வளர்க்கவேண்டும்? (பி) யெகோவாவுடன் நெருங்கிய தனிப்பட்ட உறவை அவர்கள் எவ்வாறு வளர்க்க முடியும்?

11. வழி தவறினவர்களுக்குப் பின்வருபவை எவ்வாறு உதவிசெய்யும்: (எ) தீமைக்கு வெறுப்பை வளர்ப்பது? (பி) தெளிந்துணர்வை நாடித்தேடுவது? (சி) தெய்வீகத் தராதரங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதில் நிலையாயிருப்பது? (டி) தாங்கள் செய்ய திட்டமிடும் ஒவ்வொன்றின் விளைவையும் சிந்தித்துப் பார்க்கக் கற்றுக்கொள்வது? (இ) மற்றவர்களுக்கு அன்புள்ள அக்கறை காட்டுவது?

12. (எ) சாத்தானையும் அவன் பயன்படுத்தும் முறைகளையும் பற்றிய எவற்றைத் தெரிந்திருப்பது நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவிசெய்யும்? (பி) இந்தப் போராட்டத்தில் வெற்றிப்பெற என்ன தேவை?

13. (எ) நாம் எவ்வாறு நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடையலாம்? (பி) கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி யெகோவாவைச் சேவிப்பது ஏன் உண்மையில் நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது?