Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள்தாமே என்ன செய்வீர்கள்?

நீங்கள்தாமே என்ன செய்வீர்கள்?

அதிகாரம் 16

நீங்கள்தாமே என்ன செய்வீர்கள்?

யெகோவாவைச் சேவிக்கச் செய்யும் தீர்மானத்தை வேறு எவரும் உங்களுக்காகச் செய்ய முடியாது. உங்கள் மணத் துணை கடவுளின் உண்மையுள்ள ஊழியராயிருந்தால், அது விலைமதியா ஆசீர்வாதமாயிருக்கும். அவ்வாறே, உன் பெற்றோர் யெகோவாவை நேசித்தால் நீ ஆதரவான நிலையில் இருக்கிறாய். இத்தகைய வீட்டுச் சூழ்நிலைமைகள், யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவோரோடு கூட்டுறவுகொள்ளும்படி ஊக்கத் தூண்டுதலளிக்கலாம். (யோவான் 4:23, 24) ஆனால் காலப்போக்கில் தனிப்பட்டவராய் நீங்களே தீர்மானிக்கவேண்டும். நீங்கள் உண்மையில் யெகோவாவை நேசிக்கிறீர்களா, அவருடைய ஊழியரில் ஒருவராயிருக்க விரும்புகிறீர்களா? நீதி வியாபித்திருக்கப்போகும் உலகத்தில் வாழ உங்களுக்கு உண்மையில் விருப்பமா?

2 நீங்கள் பெற்றோரென்றால், உங்கள் பிள்ளைகள் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழவேண்டுமென்று நிச்சயமாகவே விரும்புவீர்கள். வாழ்க்கையில் தங்கள் சொந்தப் போக்கைத் தாங்களே திட்டமிட்டு நடத்திக்கொள்ள போதிய வயதை அவர்கள் அடைகையில் அவர்கள் செய்யப்போவதை நீங்கள் அடக்கமுடியாது. ஆனால் உண்மை வணக்கத்தைப் பற்றி நீங்கள்தாமே செய்வது—நன்மைக்கு அல்லது தீமைக்கு ஏதுவாக—வல்லமைவாய்ந்த செல்வாக்குச் செலுத்த முடியும். யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து நீங்கள் பின்வாங்கினால், உங்கள் பிள்ளைகள் நித்திய ஜீவனுக்குப் போகும் வழியில் நடக்கத் தொடங்க அவர்களுக்கிருந்த மிகச் சிறந்த வாய்ப்பை அவர்கள் இழந்துபோகச் செய்யலாம். அல்லது நீங்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்து பின்பு அதன்படி வாழ்க்கை நடத்த அக்கறையற்றவராக நிரூபித்தால், இது முழு குடும்பத்துக்கும் ஆவிக்குரிய நாசமுண்டாகும்படி வழிநடத்தக்கூடும், மிகுந்த உபத்திரவத்தில் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். ஆனால் உண்மையுள்ளவராய் நடப்பதில் நீங்கள் முன்மாதிரி வைத்தால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு நீங்கள்தாமே உங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்தால், யெகோவாவின்பேரில் அன்பையும் அவருடைய காணக்கூடிய அமைப்புக்கு மரியாதையையும் உங்களிலும் அவர்களிலும் நீங்கள் வளர்த்துவந்தால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் தாங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்களென்பதைத் தெளிவாக உணரும்படி நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்தால், பரிசுத்த சேவையில் மகிழ்ச்சியைக் கண்டடைவதெவ்வாறென நீங்கள் அவர்களுக்குக் காண்பித்துவந்தால், ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் அவர்களுக்கு மிகச் சிறந்தத் தொடக்கத்தைக் கொடுக்கிறீர்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தால் மாத்திரமே இதைச் செய்ய முடியும். (2 தீமோத்தேயு 1:5-ஐ ஒத்துப் பாருங்கள்.) அதற்காக இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். உங்கள் பங்கிலும் மிகுந்தப் பிரயாசம் தேவைப்படுகிறது. ஆனால் அதன் பலன் எவ்வளவு நன்மை பயக்குவதாயிருக்கும்!

3 யெகோவாவை நீங்கள் நேசிப்பதில் உங்கள் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர் பங்குகொள்ளுகிறதில்லை என்ற நிலைமையை ஒருவேளை நீங்கள் எதிர்ப்பட்டால் என்ன செய்வது? “அதில் உட்படுவதிலிருந்து” உங்களைத் தடுத்து வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்களா? அல்லது அது முழுமையான எதிர்ப்பா? கடவுளுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கிருக்கும் மகிழ்ச்சியில் பங்குகொள்ள அவர்களுக்கு உதவிசெய்ய நீங்கள் என்ன செய்யலாம்? ராஜ்ய மன்றத்துக்கு உங்களுடன் வந்து அங்கு நடப்பதைத் தாங்கள்தாமே பார்க்கும்படி குடும்ப உறுப்பினரை அழைப்பதன்மூலம் எதிர்ப்பை அடிக்கடி சமாளிக்கலாம். அங்கிருக்கையில், யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி அவர்களுக்கிருக்கும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள மூப்பர்களில் ஒருவரிடம் அவர்கள் ஒருவேளை பேசலாம். ஆனால் எதிர்ப்பு தொடர்ந்திருந்தால் என்ன செய்வது? அப்பொழுது உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்: என் அன்பையும் நன்றியறிதலையும் காட்டுவதற்கு சிறிது துன்பத்தைச் சகித்துக்கொள்ளும்படி நான் மனமுள்ளவனாயிருக்க யெகோவாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் உண்மையில் நேசிக்கிறேனா, அவர்கள் நமக்குச் செய்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் போதிய நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேனா? கூடுமானால் என் சொந்தக் குடும்பத்தாரும் நித்திய ஜீவனுக்குக் கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிக்கொள்வதற்கு உதவிசெய்யும்படி சரியான முன்மாதிரியை வைப்பதற்கு நான் என் சொந்தக் குடும்பத்தைப் போதுமான அளவு நேசிக்கிறேனா?—மத்தேயு 10:36-38; 1 கொரிந்தியர் 7:12, 13, 16.

தேசங்கள் அதை நோக்கிக் கூடிவரும் அடையாளம்

4யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்துடன் தங்களை நிலைகொள்ளும்படி செய்வதன்மூலம் யெகோவாவுக்குத் தங்கள் அன்பை மெய்ப்பித்துக் காட்ட எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கு வாய்ப்பு இப்பொழுது நீட்டப்படுகிறது. இந்த அரசாங்கமே யெகோவாவின் பெயரின் நேர்மையை மெய்ப்பித்துக் காட்டப்போகும் கருவியாகும். இந்த ராஜ்யத்தினிடம் நாம் கொண்டுள்ள மனப்பான்மை யெகோவாவைப்பற்றித்தானே நாம் உணரும் முறையைக் குறித்து சாட்சி பகருகிறது.

5 தீர்க்கதரிசி ஏசாயா பின்வருமாறு எழுதும்படி யெகோவா அவனை ஏவினார்: “மேலும் அந்நாளில் ஈசாயின் வேர் ஜனங்களுக்கு அடையாளமாக நிற்பது நடைபெறவேண்டும். அவரிடமாக ஜாதிகளும் விசாரித்து வருவார்கள், அவருடைய தங்குமிடம் மகிமையாகவேண்டும்.” (ஏசாயா 11:10, NW) அந்த “ஈசாயின் வேர்” மகிமைப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அவர் அரசாதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினபோது, உயிரளிக்கும் “வேராக,” ஈசாயிலிருந்து தோன்றி அவனுடைய குமாரனாகிய அரசன் தாவீதின் மூலமாய் வந்த மேசியானிய அரசர்களின் வம்ச பரம்பரைக்குப் புதிய உயிர் சக்தியைக் கொடுத்தார். (வெளிப்படுத்துதல் 5:5; 22:16) 1914 முதற்கொண்டு அவர் ‘ஜனங்களுக்கு அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறார்,’ அதுவே நீதியுள்ள அரசாங்கத்துக்காக ஆவலோடு நாடும் ஜனங்கள் ஒன்றுகூடி வருவதற்குரிய இடம். யெகோவாதாமே அவரை அந்த அடையாளமாக, உண்மையான மேசியானிய அரசராக ஏற்றியிருக்கிறார்.—ஏசாயா 11:12NW.

6 ஆனால் இங்கே பூமியிலுள்ள மனிதர் எவ்வாறு பரலோக அரசரைச் சுற்றிக் கூடிவர முடியும்? அவர்கள் அவரைத் தெளிந்துணர்வின் கண்களைக்கொண்டு காண முடியும்படி பைபிளிலிருந்துவரும் செய்தி அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ், ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேர் இந்த வேலையை வெகு சுறுசுறுப்பாய் நிறைவேற்றி வருகின்றனர், கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட மேசியானிய ராஜ்யத்தின் நற்செய்தியை உலகமெங்கும் யாவரறிய அறிவித்துவருகின்றனர். எல்லா ஜாதிகளிலிருந்தும் தனி நபர்கள் நன்றிமதித்துணர்வுடன் செவிகொடுத்திருக்கின்றனர். ராஜ்ய குடிமக்களாகி பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ தங்களுக்கு இருக்கவேண்டிய தெய்வீகத் தகுதிகளைப்பற்றி விசாரித்திருக்கின்றனர். பைபிளிலிருந்து கொடுக்கப்பட்ட பதில்களால் திருப்தியடைந்து, அவற்றிற்கிசைய செயல்பட்டு யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின் சார்பில் தங்கள் நிலைநிற்கையை ஏற்றிருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்துவிட்டீர்களா?

‘அவர்கள் கேட்பார்கள் ஆனால் செய்வதில்லை’

7யெகோவாவின் சாட்சிகளின் ஆர்வமுள்ள வேலையின் காரணமாக, ஜனங்களுக்குள் தர்க்கிப்புப் பேச்சுப் பொருளாக அவர்கள் அடிக்கடி இருக்கின்றனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கும் செய்தியைப்பற்றி இந்த ஜனங்கள் எவ்வாறு உணருகின்றனர்? பலருடைய பிரதிபலிப்பு, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டு தீர்க்கதரிசி எசேக்கியேலுடன் இருந்தவர்கள் நடந்துகொண்டதைப்போல் இருக்கிறது. இவர்களைக் குறித்து, யெகோவா பின்வருமாறு கூறினார்: “மேலும் மனுஷகுமாரனே, உன் ஜனத்தின் புத்திரர் . . . உன்னைப்பற்றிப்பேசி, யெகோவாவினிடமிருந்து வரும் வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் . . . சொல்லிக்கொண்டு ஜனங்கள் சபையாய்க்கூடி வருகிறபடியே உன்னிடம் வந்து, உனக்கு முன்பாக என் ஜனம்போல் உட்கார்ந்து உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், எனினும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; தங்கள் வாயினாலே அதிகச் சிநேகம் காட்டுகிறார்கள், அவர்கள் இருதயத்தையோ பொருளாசை இழுக்கிறது. இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவனாய்ச் சிங்காரரசம் பாடுகிறவன்போலிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், அவற்றின்படியோ செய்கிறதில்லை; இது சம்பவிக்கும்போது—இதோ, அது சம்பவிக்கும்—தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி வந்திருந்தான் என்று அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 33:30-33, தி.மொ.

8 யெகோவாவின் சாட்சிகளைப் பாராட்டுகிற மற்றும் அவர்களுடைய பைபிள் இலக்கியங்களை விரும்புகிற பலர் இருக்கின்றனர். இலவச வீட்டு பைபிள் படிப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். சாட்சிகள் நடத்தும் விசேஷித்தக் கூட்டங்களுக்கு சிலர் தங்கள் நண்பர்களுடன் வருகிறார்கள். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் வருடாந்தர நினைவுகூருதலுக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை செயல்படும் யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பாயிருப்பது வழக்கத்துக்கு மாறாக இல்லை. சில நாடுகளில், ஆஜராயிருப்பவரின் எண்ணிக்கை சாட்சிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் ஐந்து மடங்குகள் அதிகமாகவும் உயருகின்றன. ஆனால் தாங்கள் கேட்கும் பைபிள் சத்தியங்களைப்பற்றி அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? முப்பத்தைந்து லட்சத்துக்கு மேற்பட்ட ஆட்கள் இவற்றைக் கருத்துடன் இருதயத்தில் ஏற்று தங்கள் வாழ்க்கையை இவற்றிற்கிணங்க திருத்தியமைத்துள்ளனர். ஆனால் மற்றவர்கள் இவற்றையெல்லாம் வெறும் இன்னிசைபோலும், தங்களை மகிழ்விக்கும் ஏதோவொன்றைப்போலும் பாவித்து நடத்துகின்றனர். ஒருவேளை ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ஆனால் கடவுளுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடாமலும் பரிசுத்த சேவையில் பங்குகொள்ளாமலும் எல்லைக்கு வெளியிலேயே தங்கியிருக்கலாம்.

9 சந்தேகித்துக் காத்திருப்பதனால் என்ன பயன்? வரவிருக்கும் பழிவாங்கும் நாளின்போது யெகோவாவின் தயவையும் பாதுகாப்பையும் நிச்சயமாகவே அடையபோவதில்லை. தப்பிப் பிழைப்போருக்குள் இருக்க, நீங்கள் ‘யெகோவாவினிடம் சேர்ந்துகொண்டீர்கள்’ நீங்கள் அவருக்குரியவர்கள் என்று இப்பொழுதே அறிவுறுத்தும் அத்தாட்சியைக் கொடுக்கவேண்டும்.—சகரியா 2:11; மத்தேயு 7:21.

அவர்கள் சரியான தீர்மானத்தைச் செய்தார்கள்

10இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக யெகோவாவின் வணக்கத்தாரான எல்லாரும் அப்படிச்செய்ய தங்கள் சொந்தத் தீர்மானத்தைச் செய்தார்கள். பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாயிருக்கும் யாவரைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. தங்கள் தெரிவைச் செய்து, மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைத்து பூமியில் பரிபூரணத்தில் வாழும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் அருமையான வாய்ப்பு இப்பொழுது மற்றவர்களுக்கும் திறந்திருக்கிறது. இவர்கள் பின்பற்றுவதற்குத் தகுந்த முன்மாதிரியை ஓபாப் வைத்தான்.

11 ஓபாப் மோசேயின் மைத்துனன். அவன் இஸ்ரவேலன் அல்ல ஆனால் மீதியானியரின் பிராந்தியத்தில் வாழ்ந்துகொண்டிருந்த கேனியர் குலத்தின் ஓர் அங்கத்தினன். இஸ்ரவேலர் மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தைப் பெற்று யெகோவாவின் வணக்கத்துக்காகப் பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டினபின், வடக்கே, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி இடம்பெயர்ந்துபோவதற்கான சமயம் வந்தது. அவர்கள் செல்லவேண்டிய பாதையையும் பாளயமிறங்கவேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுக் காட்டி, யெகோவாவின் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மேகஸ்தம்பம் அவர்களுக்கு முன்னால் செல்லவேண்டும். ஆனால் நிலப்பகுதியின் தன்மையையும் முகாம் போடுவதற்குத் தேவைப்பட்ட காரியங்கள் கிடைக்கும் இடத்தையும் அறிந்த ஒருவர் அவர்களுடனிருப்பது உதவியாயிருக்கும். மோசே ஓபாபைத் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி அழைத்தான், ஓபாப், தன் பிறப்பிடத்தில் தன் உறவினரோடு தங்கியிருப்பதே நல்லதென்று எண்ணி முதலில் மறுத்தான். எனினும் மோசே, திரும்ப எண்ணிப் பார்க்கும்படியும் தங்களோடு வந்து இஸ்ரவேலுக்குக் ‘கண்களாகச்’ சேவிக்கவும், இவ்வாறு யெகோவா தம்முடைய ஜனங்கள்மீது பொழியபோகும் ஆசீர்வாதங்களில் பங்குகொள்ளக்கூடிய நிலையிலிருக்கும்படியும் அவனை ஊக்கப்படுத்தினான். நியாயாதிபதிகள் 1:16-ல் குறிப்பிட்டிருக்கிறபடி ஓபாப் அவ்வாறே செய்தான்.—எண்ணாகமம் 10:29-32.

12 ஓபாப் படமாகக் குறிப்பிட்டுக் காட்டின ஆட்கள் இன்று இருக்கின்றனர். இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலரல்லாதபோதிலும், கடவுளுடைய புதிய ஒழுங்கை நோக்கி அவர்கள் பிரயாணப்படுகையில் அவர்களோடுகூட தங்களைச் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இதைச் செய்ய, இவர்கள், உலகப்பிரகாரமான உறவினருடனும் மனித அரசாங்கங்களுடனும் தங்கள் இணைப்புகளைத் துண்டித்துக்கொள்ளவேண்டும். பெரிய மோசேயாகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ், கிறிஸ்துவின் “சகோதரரான” மீதிபேருடன் இவர்கள் மகிழ்ச்சியுடன் சேவித்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் புதிய பிராந்தியங்களை அடிக்கடித்தேடி அலசியாராய்ந்திருக்கிறார்கள். இவர்களில் பலர், ராஜ்ய அறிவிப்பாளர் முக்கியமாய்த் தேவைப்பட்ட இடங்களுக்கு மாறிச் சென்று, அடிக்கடி பயனியர்களாக அல்லது மிஷனரிகளாக, கடவுளுடைய ராஜ்யத்தை மனிதவர்க்கத்தின் ஒரே உண்மையான நம்பிக்கையென யாவருக்கும் அறிவிக்க தங்கள் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இத்தகைய பரிசுத்த சேவையில் பங்குகொள்ள இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. தகுதிபெற்ற ஆட்கள் தங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களாக்கி இவ்வாறு விரிவாக்கப்பட்ட இத்தகைய சேவையோடு செல்லும் ஆசீர்வாதங்களில் பங்குகொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர். நீங்கள் இவ்வாறு செய்யமுடியுமா?

13 ஓபாப் இஸ்ரவேலரோடு செல்ல தீர்மானித்து ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்குப் பின், அவனுடைய சந்ததியாரில் ஒருவனான ஏபேர் என்பவன், தன் மனைவி யாகேலுடன் மெகிதோவுக்குச் சற்று அருகில் வாழ்ந்துகொண்டிருந்தான். ஏபேர் மற்றக் கேனியரோடிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு, இஸ்ரவேலைக் கடுமையாய் ஒடுக்கின கானானிய அரசனாகிய யாபீனுடன் சமாதான உறவுக்குள் பிரவேசித்திருந்தான். இஸ்ரவேலை விடுவிக்க யெகோவா பாராக்கை எழுப்பினபோது, யாபீனின் சேனைத் தலைவன் சிசெரா, தன் சேனையையும் சக்கரங்களில் இரும்பு வாள்கள்போன்றவை சொருகிய தொளாயிரம் யுத்த ரதங்களையும் திரட்டினான். ஆனால் யெகோவா தம்முடைய ஜனங்களுக்காகப் போரிட்டு, சத்துருவின் முகாமில் குழப்பமுண்டாகச் செய்தார், மேலும் திடீர் வெள்ளம் ரதங்களைச் சேற்றில் அமிழ்த்தும்படியும் செய்தார். சிசெராதானேயும் ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாய் ஏபேரின் மனைவி யாகேலின் கூடாரத்தைநோக்கி ஓடினான். சிசெரா நம்பினபடி, அவள் அவனை கூடாரத்துக்குள் வரும்படி அழைத்தாள்.—நியாயாதிபதிகள் 4:4-17; 5:20, 21.

14 இப்பொழுது பரீட்சை நடந்தது. யெகோவாவின் ஜனங்களின் இந்தச் சத்துருவுக்கு அவள் என்ன செய்வாள்? அவள் அவனை ஒரு சமுக்காளத்தினால் மூடினாள், தயிரைக் கொடுத்து அவனுடைய தாகத்தைத் தீர்த்து அவன் தூங்கும்வரையில் காத்திருந்தாள். பின்பு அவள் “ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெறியிலே அந்த ஆணியை அடித்துபோட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.” அவள் செய்தது தைரியத்தையும், யெகோவாவின்பேரிலும் அவருடைய ஜனங்களின்பேரிலும் அன்பையும் தேவைப்படுத்தியது. மேலும் அது அவள் பங்கில் நம்பிக்கையுறுதிகொண்ட செயலையும் கடு முயற்சியையும் உட்படுத்தியது.—நியாயாதிபதிகள் 4:18-22; 5:24-27, 31.

15 யெகோவாவை வணங்கின இஸ்ரவேலரல்லாத மற்றவர்களின் காரியத்தில் இருந்ததைப் போலவே, யாகேல், கிறிஸ்துவின் ஆவிக்குரிய “சகோதரருக்கு” நன்மை செய்கிற “மற்றச் செம்மறியாடுகளைப்” படமாகக் குறிக்கிறாள். தங்கள் நெருங்கிய உறவினர் உலகத்துக்கும் அதன் ஆளும் வகுப்பாருக்கும் என்ன இணைப்பைக் கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், “மற்றச் செம்மறியாடுகள்,” யெகோவாவின் ஜனங்களை உலக அதிபதிகள் ஒடுக்குவதைச் சம்மதிக்கிறதில்லை. பெரிய பாராக்கான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அவரை உண்மையாய்ப் பின்பற்றுவோருக்குமே அவர்கள் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். யாகேல் வகுப்பைச் சேர்ந்த இவர்கள் உலக அதிபதிகளுக்கு எதிராகத் தாங்கள் நடவடிக்கை எடுக்கிறதில்லை, ஆனால் யெகோவாவின் ஊழியரை ஒடுக்க அதிபதிகள் எடுக்கும் முயற்சிகளைப் பயனற்றதாக்குவதற்குத் தங்கள் கைகளால் கூடிய எல்லாவற்றையும் அவர்கள் செய்கிறார்கள். தம்முடைய சத்துருக்கள் யாவரையும் அழிக்கும்படியான யெகோவாவின் நோக்கத்துடன் தாங்கள் முழுவதும் ஒத்திருக்கிறார்களென்று தெரியப்படுத்துவதற்கு அவர்கள் பின்வாங்குகிறதில்லை.

16 இழப்பதற்கு நேரமில்லை, யெகோவாவிலும் அவருடைய மேசியானிய ராஜ்யத்திலும் உங்களுக்கு உண்மையில் விசுவாசம் இருந்தால், மேலும் பைபிள் கட்டளையிடும் தகுதிகளுக்கு இணங்க உங்கள் வாழ்க்கையை நீங்கள் கொண்டுவந்திருந்தால், அப்பொழுது, தாமதியாமல், அதை வெளிப்படையாய்த் தெரியச் செய்யுங்கள். அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எத்தியோப்பிய மந்திரியின் மனப்பான்மையைப் பிரதிபலியுங்கள். தான் என்ன செய்யவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டவுடன், இயேசுவைப்பற்றிய நற்செய்தியைத் தனக்கு விளக்கின பிலிப்புவினிடம் அவன் பின்வருமாறு கேட்டான்: “நான் முழுக்காட்டப்படுவதற்குத் தடையென்ன?” (NW) அவன் உடனடியாகத் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டான்.

17 இவ்வாறு சிறந்தத் தொடக்கத்தைச் செய்தப்பின், யெகோவாவுடன் உங்கள் உறவை ஒவ்வொரு நாளும் பலப்படுத்துங்கள், அவருடைய வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் மேலும் முழுமையாய்ப் பொருத்திப் பயன்படுத்த வழிகளைத் தேடுங்கள், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் இந்தக் கடைசி நாட்களின்போது செய்யப்பட்டுவரும் மிக முக்கிய ராஜ்ய அறிவிப்பு வேலையில் உங்களால் கூடியவரையில் முழுமையாய்ப் பங்குகொள்ளுங்கள்.

[கேள்விகள்]

1. அவரவர் தனிப்பட்டவராய் என்ன தீர்மானம் செய்யவேண்டும்?

2. (எ) யெகோவாவைச் சேவிப்பதில் பெற்றோருக்கு இருக்கும் மனப்பான்மை ஏன் தனிப்பட்டமுறையில் முக்கியமானது? (பி) தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்தத் தொடக்கத்தைக் கொடுப்பதற்குப் பெற்றோர் செய்யக்கூடிய ஐந்து காரியங்கள் யாவை?

3. (எ) குடும்ப உறுப்பினரிடமிருந்து எதிர்ப்பை எதிர்ப்பட்டால், நீங்கள் என்ன செய்யலாம்? (பி) இந்த எதிர்ப்பு தொடர்ந்துகொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

4. நாம் யெகோவாவை உண்மையில் நேசிப்பதை எப்படிக் காட்டலாம்?

5. (எ) ஏசாயா 11:10-ல், நம்முடைய நாளுக்காக என்ன முன்னறிவிக்கப்பட்டது? (பி) அதன் பொருளென்ன?

6. (எ) மனிதர் பரலோக அரசரைச் சுற்றி ஒன்று சேர்வதற்கு எது சாத்தியமாக்கிற்று? (பி) “அடையாளத்தை” நோக்கி ‘விசாரித்து வருவதன்’ பலனாக ஜனங்கள் என்ன கற்றிருக்கிறார்கள்?

7. எசேக்கியேல் 33:30-33-ல் பைபிளின் செய்திக்கு என்ன பிரதிபலிப்பு முன்னறிவிக்கப்பட்டது?

8. சிலர் இத்தகைய மனப்பான்மையை எவ்வாறு காட்டுகிறார்கள்?

9. சந்தேகித்துக் காத்திருப்பதற்குப் பதிலாக, ஞானமுள்ள ஆட்கள் என்ன செய்வார்கள்?

10, 11. (எ) ஓபாப் யார், அவனுக்கு என்ன அழைப்பு கொடுக்கப்பட்டது? (பி) அவன் செய்தத் தீர்மானமென்னவென்பதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்ளுகிறோம்?

12. (எ) இன்று யார் ஓபாபைப்போல் இருக்கின்றனர், எம்முறைகளில்? (பி) இன்று கொடுக்கப்படும் என்ன அழைப்பு மோசே ஓபாபுக்குக் கொடுத்ததைப்போன்று இருக்கிறது?

13. (எ) யாகேல் யார், யெகோவாவின் ஊழியரின் சம்பந்தமாக அவளுடைய கணவன் கொண்டிருந்த நிலை என்ன? (பி) யாகேல் எவ்வாறு ஒரு பரீட்சையை எதிர்ப்பட்டாள்?

14. யாகேல் என்ன தீர்மானம் செய்தாள், இது எதற்கு அத்தாட்சி கொடுத்தது?

15. தாங்கள் யாகேலைப்போல் இருப்பதை இன்று ஆட்கள் எவ்வாறு நிரூபிக்கின்றனர்?

16, 17. (எ) நாம் பின்பற்றத்தக்க என்ன முன்மாதிரி அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது? (பி) அதன்பின் நாம் தொடர்ந்து என்ன செய்யவேண்டும்?