Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதவர்க்கத்தின் எதிர்கால நம்பத்தக்க முன்தோற்றங்கள்

மனிதவர்க்கத்தின் எதிர்கால நம்பத்தக்க முன்தோற்றங்கள்

அதிகாரம் 5

மனிதவர்க்கத்தின் எதிர்கால நம்பத்தக்க முன்தோற்றங்கள்

எதிர்காலத்தைப் பற்றி பைபிளில் நமக்குச் சொல்லியிருப்பவற்றில் திடநம்பிக்கை வைக்க நமக்கு நல்ல காரணங்கள் உண்டு. அதன் தீர்க்கதரிசனங்கள், நிகழ்ச்சிகளின் பொதுப் போக்குகளை ஆராய்ந்தறிந்து பின்பு முன்னறிவிப்புகளைச் செய்த மனிதரின் ஊகிப்புகளின்பேரில் ஆதாரங்கொண்டில்லை. “வேதவாக்கியங்களிற் கண்ட எந்தத் தீர்க்கதரிசனமும் அவனவன் வியாக்கியானத்தினால் வருவதல்லவென்று நீங்கள் முதல் முதல் அறிந்துகொள்ள வேண்டும். தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.” (2 பேதுரு 1:20, 21, தி.மொ.) இதனால் ஒவ்வொரு நுட்ப விவரத்திலும் பைபிள் தீர்க்கதரிசனம் திருத்தமாய் நிரூபித்திருக்கிறது.

2உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்—பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ்—என்று பெயர் குறிப்பிட்டு அது முன்னறிவித்தது. பாபிலோன் எவ்வாறு வீழ்ச்சியடையும் என்பதையும் அதை வென்று கைப்பற்றுபவனின் பெயரையும் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அது அறிவித்தது. இது அவ்வாறே நுட்பவிவரமாய் நிறைவேற்றமடைந்தது. பாபிலோன் நகரம் முடிவில் பயனற்றப் பாழ்நிலமாகும், மறுபடியும் ஒருபோதும் குடியிருக்கப்படாதென அது முன்னறிவித்தது. அந்நிலைமை நம் நாள்வரையில் தொடருகிறது. (தானியேல் 7:3-8, 20-22; ஏசாயா 44:27-45:2; 13:1, 17-20) பைபிளில் பெயர் குறிப்பிட்டிராத மற்ற தேசங்கள் அத்தகைய நுட்பவிவரமாய் முன்னதாகவே விவரித்திருந்ததனால் நன்றாய் அறிவுபெற்ற ஆட்கள் அவற்றை உடனடியாக அடையாளங் கண்டுகொள்ள முடிகிறது.

3எனினும், ஒன்றுக்கு மேற்பட்ட வகையான தீர்க்கதரிசன தகவல் பைபிளில் இருப்பதைத் தெளிவாக உணரவேண்டும். இதை நாம் இயேசுவின் அற்புதங்கள் சம்பந்தமாக ஏற்கெனவே கவனித்தோம், அவை கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகிறவற்றிற்கு முன்னறிகுறிகளாகச் சேவித்தன. முன்னறிவிப்பைப்போல் தொனிக்கும் மொழிநடையைப் பயன்படுத்தியிராத வேத எழுத்துக்களின் மற்றப் பகுதிகளிலும் தீர்க்கதரிசன அம்சங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

மனதைக் கவரும் தீர்க்கதரிசன மாதிரிகள்

4உதாரணமாக, பைபிள் புத்தகமாகிய எபிரெயர், அதை எப்போதாவது வாசிக்கிறவன் வெறும் சரித்திரமென கருதக்கூடிய காரியங்களின் தீர்க்கதரிசன உட்பொருளைக் காணும்படி நம்முடைய கண்களைத் திறக்கிறது. “[மோசேயின்] நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் . . . நிழலாய் மாத்திரம் இருக்கிற”தென அது வெளிப்படுத்துகிறது.—எபிரெயர் 10:1, தி.மொ.

5சில சமயங்களில், தீர்க்கதரிசன மாதிரிகளை உண்டுபண்ண பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, யெகோவா கட்டளையிட்டு வழிநடத்தினபடி மோசே கட்டின பரிசுத்த கூடாரத்தை, அல்லது ஆசரிப்பு கூடாரத்தையும், அதோடுகூட அதில் நடப்பித்தச் சேவைகளையும் குறித்து, கடவுளால் ஏவப்பட்டு எபிரெயர் புத்தகத்தை எழுதின எழுத்தாளன் “பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது,” என்று விளக்குகிறான். அது யெகோவாவின் ஆவிக்குரிய பெரிய ஆலயத்தைப் படமாகக் குறித்தது, அதன் மகா பரிசுத்த ஸ்தலம் பரலோகங்களில் இருக்கிறது. இவ்வாறு, “கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார் [நமக்குச் சம்பாதித்தார், NW]. . . . மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” (எபிரெயர் 8:1-5; 9:1-14, 24-28) இங்கே விவரிக்கப்பட்ட ஆவிக்குரிய மெய்ம்மைகளிலிருந்து மிகுந்த நன்மைகள் கிறிஸ்தவர்களுக்கு வருகின்றன, இவற்றிற்கு நன்றி மதித்துணருதலை நம்முடைய வாழ்க்கைப் போக்கில் நாம் பிரதிபலிக்க வேண்டும்.—எபிரெயர் 9:14; 10:19-29; 13:11-16.

6வேத எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களும் தீர்க்கதரிசன மாதிரிகளாகச் சேவித்தனர். கலாத்தியர் 4:21-31-ல் இதைப் பற்றிய நுட்பவிவரமான உதாரணம், ஆபிரகாமின் மனைவி சாராள் (“மேலான எருசலேமுக்கு” ஒத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது) அடிமைப் பெண் ஆகார் (“இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி”யென குறிப்பிட்டிருக்கிறது) பின்னும் அவர்களுடைய பிள்ளைகள் ஆகியோரின் காரியத்தில் விளக்கியிருக்கிறது. மற்றொன்றில் தீர்க்கதரிசி எலியாவுக்கு ஒத்த மாதிரியாய் முழுக்காட்டின யோவான் இருந்ததைக் காணும்படி இயேசு தம்முடைய சீஷருக்கு உதவிசெய்தார், இவன், எலியாவைப்போல், பாசாங்குத்தன மத அனுசாரங்களை வெளிப்படுத்திக் காட்டுவதில் பயமற்றவனாயிருந்தான்.—மத்தேயு 17:10-13.

7தன் ஞானத்தினிமித்தமும் வாழ்வுவளத்தினிமித்தமும் தன் ஆட்சியின் சமாதானத்தினிமித்தமும் புகழ்பெற்றிருந்த சாலொமோன், இயேசு கிறிஸ்துவைப் பொருத்தமாய் முன்குறித்தான். (1 இராஜாக்கள் 3:28; 4:25; லூக்கா 11:31; கொலோசெயர் 2:3) மெல்கிசேதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டு சந்தித்ததைப் பற்றி ஆதியாகமத்தில் கொடுத்துள்ள விவரம் வெகு சுருக்கமாயிருக்கிறபோதிலும், அதுவும் உட்கருத்தால் நிரம்பியிருக்கிறது, எப்படியெனில் மேசியா “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியர்” ஆவாரென சங்கீதம் 110:1-4 குறிப்பிட்டுக் காட்டுகிறது; அதாவது, தாம் ஆசாரிய வம்சத்தில் பிறப்பதால் அல்ல, கடவுளுடைய நேரடியான நியமிப்பால் அவர் தம் ஆசாரியத்துவத்தைப் பெறுவார் என்பதாகும். பின்னால், எபிரெயருக்கு எழுதின நிருபம் இதை விரித்துரைத்து, கடவுளைப் பிரியப்படுத்த நாடுகிறவர்களுக்கு ஒரு முக்கிய பண்பாயிருக்கும் கிறிஸ்தவ முதிர்ச்சியோடு, இத்தகைய சத்தியங்களை மதித்துணருதலைச் சம்பந்தப்படுத்துகிறது.—எபிரெயர் 5:10-14; 7:1-17.

8தீர்க்கதரிசன இசைவுபொருத்தங்கள் ஆட்களுடைய வேலை அல்லது பதவி நிலையைப் பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துவது தெளிவாய்த் தெரிகிறது. அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் அடங்கியிருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் யூத மதத் தலைவர்கள் தங்கள் அவிசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டினபோது, இயேசு அவர்களிடம்: “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” (மத்தேயு 12:38-40; யோனா 1:17; 2:10) எனினும், யோனாவின் வாழ்க்கையில் எல்லாம் தாம் அனுபவிக்கப்போவதை நிழலாய் முன்குறித்ததென இயேசு சொல்லவில்லை. யெகோவா இயேசுவுக்கு ஒரு வேலையை நியமித்தபோது, யோனா தர்ஷீசுக்கு ஓடிப்போக முயற்சி செய்ததுபோல், இயேசு ஓடிப்போகவில்லை. ஆனால் இயேசு குறித்துக் காட்டினபடி, அந்தப் பெரிய மீனின் வயிற்றில் யோனாவின் அனுபவம் பைபிள் பதிவில் சேர்க்கப்பட்டதன் காரணம், அது இயேசுவின் சொந்த மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய தீர்க்கதரிசன நுட்ப விவரங்களை அளிக்க பயன்பட்டதேயாகும்.—மத்தேயு 16:4, 21.

9சில சரித்திர காலப்பகுதிகளும் நமக்குத் தனிப்பட்ட அக்கறைக்குரிய வருங்கால தீர்க்கதரிசன தோற்றங்களை அளிக்கின்றன. இயேசு, ராஜ்ய வல்லமையில் தம்முடைய சொந்த வெளிப்படுத்தலுக்கு வழிநடத்தும் காலத்தைக் குறித்துப் பேசுகையில், பொல்லாத ஜனங்களின்மேல் தெய்வீக நியாயத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட வேறு இரண்டு சமயங்களை இணையாகப் பொருத்தி விளக்கினார். தனிப்பட கவனிப்பதற்குரியவையென “நோவாவின் நாட்களையும்” “லோத்தினுடைய நாட்களையும்” குறித்து அவர் பேசினார், அப்பொழுதிருந்த ஜனங்கள் அன்றாடக வாழ்க்கை விவகாரங்களில் தங்கள் முழு கவனத்தை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததை முக்கியமாய் எடுத்துக் காட்டினார். லோத்தின் மனைவி செய்ததைப்போல் பின்விட்டு வந்தப் பொருட்களுக்காக ஏக்கத்துடன் திரும்பிப் பாராமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் நம்மைத் துரிதப்படுத்தினார். (லூக்கா 17:26-32) தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் பேதுருவின் இரண்டாம் நிருபத்தில் தனிக்கவனிப்புக்குரிய மேலுமான நுட்ப விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன—ஜலப்பிரளயத்துக்கு முன்னிருந்த கீழ்ப்படியாதத் தூதர்கள், நோவாவின் பிரசங்க வேலை, சோதோமின் ஜனங்கள் அக்கிரமச் செயல்களில் மனம்போன போக்கில் செல்வதைக் கண்டு லோத்து மனவேதனைப்பட்டது, கடவுள், தாம் குறித்தக் காலத்தில் அக்கிரமக்காரரை அழித்து, இவ்வாறு வரப்போகிற காரியங்களுக்கு மாதிரியை வைத்த உண்மை, மேலும் கடவுள் தம்முடைய உண்மையுள்ள ஊழியரைத் தவறாமல் விடுவிக்க முடியும் நிச்சயமாய் விடுவிப்பார் என்பதற்கு அத்தாட்சி ஆகியவையாகும்.—2 பேதுரு 2:4-9.

10தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டபோது, அவை இப்பொழுது வெறும் சரித்திரப் பூர்வ அக்கறைக்குரியவையென இது பொருள்படவில்லை. நடைபெறவிருந்தவற்றின் முன்னறிவிப்பும் அது நிறைவேறின முறையும் எதிர்காலத்தில் இன்னும் மிக அதிக விரிவான நோக்கங்களை நிறைவேற்றும் சம்பவங்களுக்குப் பெரும்பாலும் தீர்க்கதரிசனமாயிருக்கின்றன. பூர்வ பாபிலோனைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறிருக்கிறது, அது முதன்மையாய் மத பக்தியுள்ள பேரரசாயிருந்தது, அதன் செல்வாக்கு நம்முடைய நாளிலும் உலகமெங்கும் இன்னும் உணரப்படுகிறது. பொ.ச.மு. 539-ல் மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றினபோதிலும், பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில் எழுதப்பட்ட வெளிப்படுத்துதலின் புத்தகத்தில் எரேமியாவின் மொழிநடையைக் குறிப்பிட்டு அந்தத் தீர்க்கதரிசனங்கள், பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன் சம்பந்தமாக இனிவரப்போகும் எதிர்காலத்தில் நிறைவேறவிருப்பதைப் பொருத்திக் காட்டுகிறது. இதற்கு உதாரணங்களாக, வெளிப்படுத்துதல் 18:4-ஐ எரேமியா 51:6, 45-உடனும்; வெளிப்படுத்துதல் 17:1, 15-ஐயும் 16:12-ஐயும் எரேமியா 51:13-உடனும் 50:38-உடனும்; வெளிப்படுத்துதல் 18:21-ஐ எரேமியா 51:63, 64-உடனும் ஒத்துப் பாருங்கள்.

11இவ்வாறே விசுவாசத் துரோகியான இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்துடனும் யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யத்தின் அரசர்களுடனும் ஆசாரியர்களுடனும் யெகோவா கையாண்ட முறைகள் தீர்க்கதரிசன மாதிரிகளாயிருக்கின்றன. வேத எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தப் பூர்வ ராஜ்யங்களுக்குப் பொருத்திப் பிரயோகிக்கப்பட்ட அந்த இரு தீர்க்கதரிசனங்களும், தற்கால கிறிஸ்தவ மண்டலத்தைக் கடவுள் எவ்வாறு கையாளுவார் என்பதை உயிர்ப்புள்ள வண்ணமாய்ச் சித்தரிக்கின்றன, கிறிஸ்தவ மண்டலமும் பைபிளின் கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டுகிறது, ஆனால் அவருடைய நீதியுள்ள கட்டளைகளைப் பகிரங்கமாய் மீறுகிறது.

12ஆகையால், இந்த எல்லா விவரப் பதிவுகளும், இன்றைய காலத்துக்குரிய உட்பொருளைக் கொண்டிருக்கின்றன. நம்முடைய நாளின் நிலைமைகளைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார், வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதற்கு நாம்தாமே என்ன செய்யவேண்டும் ஆகியவற்றை விளங்கிக்கொள்ள அவை நமக்கு உதவிசெய்கின்றன. இவ்வாறு, “வேதவாக்கியங்களெல்லாம் . . . உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை,” என்ற உண்மையை மேலும் முழுமையாய் மதித்துணர நாம் உதவிசெய்யப்படுகிறோம்.—2 தீமோத்தேயு 3:16, 17.

இதெல்லாம் முன்பே ஏற்பாடுசெய்யப்பட்டதா?

13பைபிளில் பதிவு செய்யப்பட்ட ஜனங்களின் மற்றும் தேசங்களின் நடத்தை, தீர்க்கதரிசன முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்படி கடவுள் எல்லாவற்றையும் முன்பே ஏற்பாடு செய்தாரென இந்த எல்லாவற்றிலுமிருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமா? கடவுள்தாமே எதிர்காலத்துக்காகத் தாம் கொண்டிருந்த பெரிய காரியங்களுக்கு மாதிரியை அளிப்பதற்கு, சென்ற காலத்தில் தம்முடைய ஊழியர்களிடம் குறிப்பிட்ட ஒரு வகையில் தொடர்பு கொண்டாரெனத் தெரிகிறது. ஆனால் மனிதருடைய செயல்களைப் பற்றியதென்ன? அவர்களில் சிலர் வினைமையான பாவங்களைச் செய்தனர். பைபிள் பதிவை உண்டுபண்ணும்படி அவற்றைச் செய்ய கடவுள் அவர்களைத் தூண்டினாரா? கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளன் யாக்கோபு பின்வருமாறு பதிலளிக்கிறான்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) தீர்க்கதரிசன மாதிரிகளை உண்டாக்கக்கூடும்படி அவர்களைத் தீங்கு செய்யும்படி கடவுள் செய்விக்கவில்லை.

14 யெகோவா மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரென்பதை மறந்துவிடாதீர்கள். நாம் எவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறோம் மனிதர் தாங்கள் நடந்துகொள்ளும் முறையில் நடக்கும்படி அவர்களைச் செய்விப்பதென்ன என்பவற்றை அவர் அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 6:5; உபாகமம் 31:21) தம்முடைய நீதியுள்ள நியமங்களுக்கிணங்க வாழும் மக்களுக்குண்டாகும் பலனையும், கடவுள் தங்களுக்குத் தேவையாயிருப்பதைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு அல்லது அவருடைய வழிகளைவிட்டு தாறுமாறாய் நடக்கிறவர்களுக்கு உண்டாகும் விளைவுகள் என்னவென்பதையும் அவர் திருத்தமாய் முன்னறிவிக்க முடியும். (கலாத்தியர் 6:7, 8) பிசாசு, கடந்த காலத்தில் தான் பயன்படுத்தினவற்றைப் போன்ற சூழ்ச்சிகளையே தொடர்ந்து பயன்படுத்துவானென அவர் அறிந்திருக்கிறார். கொடுக்கப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் தாம் என்ன செய்வாரென்பதையும் யெகோவா அறிந்திருக்கிறார், தாம் எப்பொழுதும் வெளிப்படுத்தியிருக்கிற உயர் பண்புகளாகிய நீதி, பாரபட்சமற்றத் தன்மை, அன்பு, இரக்கம் ஆகியவற்றிற்குப் பொருத்தமாய் அவர் செயல் நடப்பிப்பார். (மல்கியா 3:6) யெகோவாவின் நோக்கங்கள் நிச்சயமாய் நிறைவேற்றப்படுமாதலால், அவற்றின் முடிவுகளையும் அவற்றை நிறைவேற்றத் தாம் எடுக்கப்போகும் படிகளையும் அவர் முன்னறிவிக்க முடியும். (ஏசாயா 14:24, 27) ஆகவே அவர் தனியாட்களின் மற்றும் தேசங்களின் வாழ்க்கையிலிருந்து சம்பவங்களைத் தெரிந்தெடுத்து அவற்றை, எதிர்காலம் கொண்டுவரப்போவதன் தோற்றங்களை அளிக்க, பைபிளில் இணைத்துச் சேர்க்க முடியும்.

15 ஆகையால், பொருத்தமாகவே, அப்போஸ்தலன் பவுல் இஸ்ரவேலின் சரித்திரத்திலிருந்து சம்பவங்களை எடுத்துக் கூறினபின், உடன் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு கூறினான்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.” (1 கொரிந்தியர் 10:11) ரோமிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு அவன் பின்வருமாறு எழுதினான்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) பைபிளிலுள்ள விவரப் பதிவுகள் வெறும் சரித்திரத்தைப் பார்க்கிலும் அதிகம் அடங்கியுள்ளவையென நாம் இவ்வாறு மதித்துணருகையில், அவற்றிலிருந்து மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அதிசயமான முன்தோற்றங்களை நாம் கண்டறியக்கூடும்.

[கேள்விகள்]

1. பைபிள் தீர்க்கதரிசனம் ஏன் எப்பொழுதும் திருத்தமாய் நிரூபித்திருக்கிறது?

2. உலக விவகாரங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் உதாரணங்கள் கொடுங்கள்.

3. முன்னறிவிப்பு முறையில் கூறப்பட்டிராதத் தீர்க்கதரிசனங்கள் உண்டா?

4. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் தீர்க்கதரிசன உட்பொருளைக் குறித்து நாம் எவ்வாறு கூர்ந்து கவனிக்கும்படி செய்யப்படுகிறோம்?

5. பொருள்கள் பெரிய காரியங்களை மாதிரியாகக் குறித்துக் காட்டலாமென எது விளக்குகிறது?

6. பின்வருபவற்றில் ஆட்களுக்கு என்ன தீர்க்கதரிசன உட்பொருள் குறித்துக் காட்டியிருக்கிறது: (எ) கலாத்தியர் 4:21-31? (பி) மத்தேயு 17:10-13?

7. எவ்வகைகளில் இயேசு கிறிஸ்து (எ) சாலொமோனால் (பி) மெல்கிசேதேக்குவால் முன்குறிக்கப்பட்டார்?

8. (எ) வாழ்க்கை அனுபவங்கள் தீர்க்கதரிசனமாயிருக்கலாமென என்ன உதாரணம் காட்டுகிறது? (பி) நிறைவேற்றத்தில், அத்தகைய ஓர் அனுபவத்தின் எல்லா அம்சமும் இசைவுபொருத்தத்தைக் கொண்டிருக்கிறதா?

9. (எ) இரண்டு சரித்திரக் காலப்பகுதிகளில் என்ன தீர்க்கதரிசன அம்சங்களை இயேசு குறிப்பிட்டுக் காட்டினார்? (பி) தேவாவியின் ஏவுதலின்கீழ் பேதுரு, தனிக்கவனிப்புக்குரிய மேலும் என்ன நுட்ப விவரங்களைக் குறிப்பிட்டான்?

10. எரேமியாவை வெளிப்படுத்துதலுடன் ஒப்பிட்டு, நிறைவேறின தீர்க்கதரிசனங்கள் மேலுமான தீர்த்ததரிசன மதிப்பைக் கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.

11. விசுவாசத் துரோகியான இஸ்ரவேலுடனும், உண்மையற்றுப்போனபோது யூதாவுடனும் யெகோவா கையாண்ட முறைகளைப் பற்றிய பதிவில் என்ன தீர்க்கதரிசன உட்பொருள் அடங்கியிருக்கிறது? ஏன்?

12. இத்தகைய விவரப் பதிவுகளால் தனியே நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பயனடைகிறோம்?

13. தீர்க்கதரிசன மாதிரிகளை உண்டாக்கக்கூடும்படி கடவுள் ஆட்களைப் பாவஞ்செய்ய தூண்டவில்லையென நாம் எவ்வாறு அறிகிறோம்?

14. (எ) மனிதர் அல்லது சாத்தானுங்கூட எதிர்காலத்தில் ஒரு சமயத்தில் என்ன செய்வார்கள் என்பதை யெகோவா எவ்வாறு அறிகிறார்? (பி) தம்மையும் தம்முடைய நோக்கங்களையும் பற்றிய யெகோவாவின் அறிவு எம்முறைகளில் பைபிள் தீர்க்கதரிசனத்தில் உட்படுகிறது?

15. பைபிளிலுள்ள விவரப் பதிவுகள் வெறும் சரித்திரத்தைப் பார்க்கிலும் மிக அதிகம் அடங்கியவையென அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வாறு அறிவுறுத்தினான்?

[பக்கம் 41-ன் பெட்டி/படங்கள்]

தீர்க்கதரிசன மாதிரிகள்—குறிப்பதென்ன?

நோவாவின் நாட்கள்

ஆசரிப்புக் கூடாரம்

சாலொமோன் அரசன்

யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தது

பாபிலோனின் வீழ்ச்சி