Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராஜ்ய விவாதத்தின்பேரில் ஜனங்கள்பிரிக்கப்படுதல்

ராஜ்ய விவாதத்தின்பேரில் ஜனங்கள்பிரிக்கப்படுதல்

அதிகாரம் 15

ராஜ்ய விவாதத்தின்பேரில் ஜனங்கள்பிரிக்கப்படுதல்

நாம் ஒவ்வொருவரும் முடிவுக்கட்டமான ஒரு தீர்மானத்தை எதிர்ப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்திலிருக்கும் யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தினிடம் கொண்டுள்ள நம்முடைய மனப்பான்மை விவாதத்தில் இருக்கிறது. இந்த விவாதத்தின்பேரில் சகல தேசங்களின் ஜனங்களைப் பிரித்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் நடவடிக்கையின் ஆதாரத்தின்பேரில் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றுக்குள் வைக்கப்படுகிறான். இந்தத் தொகுதிகளில் ஒன்று மாத்திரமே சமீபத்தில் நேரிடவிருக்கிற உலக அழிவைத் தப்பிப்பிழைக்கும்.—மத்தேயு 24:40, 41

2 யெகோவா தம்முடைய அபிஷேகம்பண்ணப்பட்ட குமாரனான தம்முடைய மேசியாவைப் பரலோகங்களில் ஏற்கெனவே சிங்காசனத்தில் அமர்த்திவிட்டார். 1914-ல் “ஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்” முடிவில், கடவுள் ஜாதிகளை இயேசு கிறிஸ்துவுக்குச் சுதந்தரமாக—பூமி முழுவதையும் அவருடைய உடைமையாகக் கொடுத்தார். (சங்கீதம் 2:6, 8) யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட அரசர் சிங்காசனத்தின்மீதிருக்க இந்த மேசியானிய அரசாங்கம், பூமியைக்குறித்த கடவுளுடைய சொந்த ஞானமான மற்றும் அன்பான நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கடவுளுடைய கருவியாயிருக்கிறது. ஆகையால், இந்த ராஜ்யத்தினிடமாகக் கொண்டுள்ள உங்கள் மனப்பான்மை, யெகோவாவின் சர்வலோக அரசாட்சியைப்பற்றி நீங்கள் உணருவதை மெய்ப்பித்துக் காட்டுகிறது. சீக்கிரத்தில் மேசியானிய ராஜ்யம் இப்பொழுது மனித விவகாரங்களில் வல்லாட்சி செலுத்திக்கொண்டிருக்கும் முழு அரசியல் ஒழுங்குமுறையையும் ‘நொறுக்கி அழித்துவிட்டு,’ பூமி முழுவதன்மீதும் ஒரே அரசாங்கமாகும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:11-21) அது பூமியைப் பரதீஸாக மாற்ற நடவடிக்கை எடுக்கையில், நீங்கள் எங்கே இருப்பீர்கள்? பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு அது வழிநடத்தின ஆட்களுக்குள் நீங்கள் இருப்பீர்களா? இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்கள் இத்தகைய எதிர்பார்ப்பில் பங்குகொள்ளக் கூடியதற்கு ஆதாரத்தை இயேசு கூறினார்.

அரசரும் அவருடைய “சகோதரரும்”

3 “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்” பற்றி இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குச் சொல்லுகையில் பல உவமைகளை, அல்லது உதாரணங்களைப் பயன்படுத்தினார். கடைசியானதில் அவர் பின்வருமாறு கூறினார்: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”—மத்தேயு 24:3; 25:31-33.

4 இயேசு ஏற்கெனவே இந்தத் தீர்க்கதரிசனத்தில் முன்னால் திரும்பத் திரும்பச் செய்ததைப்போலவே “மனுஷகுமாரன்” என்று தம்மைக் குறித்துப் பேசுவதைக் கவனியுங்கள். (மத்தேயு 24:27, 30, 37, 39, 44) இந்தச் சொற்றொடரை அவர் பயன்படுத்தினது ஏறக்குறைய அதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நினைப்பூட்டுதலாயிருந்தது, அதைக் குறித்து தீர்க்கதரிசி பின்வருமாறு எழுதினான்: “இராத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] சாயலான ஒருவர் வானத்து மேகங்களோடு வந்தார்; அவர் நீண்ட ஆயுளுள்ளவர் [யெகோவா தேவன்] இடமட்டும் வரவே அவர் சந்நிதியில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்பட்டன; அவருடைய ஆளுகை நீங்காத நித்திய ஆளுகை, அவருடைய ராஜ்யம் அழியாதது.” (தானியேல் 7:13, 14, தி.மொ.; எபிரெயர் 2:5-8) அந்த ஆளும் அதிகாரம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. 1914 முதற்கொண்டு அவர் தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்கிறார். அவருடைய ஆட்சிக்கு நீங்கள்தாமே உங்கள் உள்ளுணர்ச்சியை எவ்வாறு காட்டுகிறீர்கள்? கடவுள்தாமே பூமி முழுவதற்கும் அரசராக்கின இவருக்கு உங்கள் வாழ்க்கைமுறை தகுதியான மரியாதை கொடுப்பதாக அத்தாட்சி தருகிறதா?

5 வெறும் வார்த்தைகள் போதியவையல்ல. தான் கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இயேசுகிறிஸ்துவை நேசிப்பதாகவும் சொல்வது ஒருவனுக்கு எளிது. ஆனால், இயேசு காணக்கூடாதவராக பரலோகங்களில் இருப்பதால், ஒருவனின் இந்த உரிமைபாராட்டலின் உண்மையான தன்மையை, பூமியில் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்யும் தம்முடைய “சகோதரர்களை” அவன் நடத்தும் முறையையே முக்கிய காரணமாகக்கொண்டு தாம் தீர்மானிப்பாரென, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு காட்டினார்.—மத்தேயு 25:40, 45.

6 அவர்கள் யார்? கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாயிருக்கும்படி மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து கடவுள் தெரிந்துகொண்டவர்கள். இவர்களுடைய எண்ணிக்கை 1,44,000, இவர்களில் ஒரு மீதிபேர் மாத்திரமே இன்னும் பூமியில் இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 14:1, 4) கடவுளுடைய ஆவியின் செயலால் அவர்கள் “மறுபடியும் பிறந்திருப்பதால்,” அவர்கள் கடவுளுடைய குமாரர், இந்தக் காரணத்தினிமித்தம் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் “சகோதரர்” என்று வேத எழுத்துக்களில் பேசப்பட்டிருக்கின்றனர். (யோவான் 3:3; எபிரெயர் 2:10, 11) இந்தச் “சகோதரருக்கு,” இவர்களில் “மிகவும் சிறியவருக்கும்” ஆட்கள் செய்வதைத் தமக்கே செய்ததாக இயேசு கருதுகிறார்.

7 நம்முடைய நாளில் கிறிஸ்துவின் இந்தச் “சகோதரர்” எங்கே இருக்கிறார்கள்? கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்குச் செல்கிறவர்களுக்குள் இவர்களை நீங்கள் கண்டுபிடிக்கப்போகிறீர்களா? தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோரைக் குறித்து இயேசு என்ன சொன்னார்? “நான் இந்த உலகத்தின் பாகமல்லாததுபோல், அவர்களும் இந்த உலகத்தின் பாகமல்ல.” (யோவான் 17:16, NW) கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளையும் அவர்களுடைய உறுப்பினரையும் குறித்து இவ்வாறு சொல்லக்கூடுமா? மிகப் பேரளவில், அவர்களுடைய மனப்பான்மைகளும் நடத்தையும் அவர்கள் காணப்படுகிற உலகத்தின் பாகத்தில் பொதுவாயுள்ளவற்றையே பிரதிபலிக்கின்றன. அரசியல் விவகாரங்களில் சர்ச்சுகள் உட்படுவது யாவருக்கும் தெரிந்த காரியமே. 1945-ல் ஐக்கிய நாட்டுச் சங்க உரிமை பத்திரத்தை முறைப்படுத்தினபோது, புராட்டஸ்டண்ட், கத்தோலிக் மற்றும் யூத பிரதிநிதிகளின் குழுக்கள் ஆலோசனைக்கூறுவோராக அங்கிருந்தனர். சமீப ஆண்டுகளில், ரோமின் போப்புகள் ஐக்கிய நாட்டு சங்கத்தை “ஒருமைப்பாட்டுக்கும் சமாதானத்துக்கும் கடைசி நம்பிக்கை” எனவும் “சமாதானத்துக்கும் நீதிக்கும் தலைமை பொதுவிடம்” எனவும் புகழ்ந்திருக்கிறார்கள். சர்ச்சுகளின் உலக ஆலோசனை சபை, ஏறக்குறைய 300 மதத் தொகுதிகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இது, அரசாங்க புரட்சிகளுக்குப் பணமளிக்க பயன்படுத்தப்படும் நிதிகளையுங்கூட ஏற்பாடு செய்திருக்கிறது. எனினும் இயேசு கிறிஸ்து ரோம தேசாதிபதி பிலாத்துவிடம்: “என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமல்ல,” என்று கூறினார்.—யோவான் 18:36, NW.

8 ஒரே ஒரு தொகுதியே ராஜ்யத்தின் சார்பாக உறுதியான நிலைநிற்கை எடுத்திருக்கிறது, ராஜ்யத்தை உலகமெங்கும் அறிவிக்க ஊக்கமான கடும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி, அதே சமயத்தில் இவ்வுலகத்தின் அரசியல் விவகாரங்களில் எவ்வகையிலும் உட்படுவதைத் தவிர்க்கிறதென உண்மை நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தத் தொகுதி யெகோவாவின் சாட்சிகளே. இவர்களுக்குள் கிறிஸ்துவின் “சகோதரரின்” மீதிபேர் காணப்படுகிறார்கள். இவர்கள், தங்களுடைய கர்த்தரின் மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் மாதிரியைப் பின்பற்றி நகரம் நகரமாகவும் வீடு வீடாகவும் சென்று கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஜனங்களுக்குச் சொல்வதில் தங்களை முழுவதும் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள். (லூக்கா 8:1; அப்போஸ்தலர் 8:12; 19:8; 20:20, 25) 1919-ல், சீடர் பாய்ன்ட் ஒஹையோவில் யெகோவாவின் சாட்சிகளின் (அப்பொழுது சர்வ தேச பைபிள் மாணாக்கர் என்றறியப்பட்டனர்) மாநாட்டில், “வரவிருக்கும் மேசியாவின் மகிமையான ராஜ்யத்தை அறிவிப்பதே தங்களுடைய வேலையாயிருந்தது இப்பொழுதும் இருக்கிறது,” என்று மாநாட்டுப் பிரதிநிதிகள் நினைப்பூட்டப்பட்டனர். 1922-ல் நடந்த இதைப்போன்ற மாநாட்டில் இது மறுபடியும் அறிவுறுத்தப்பட்டது, மேலும் அவர்கள் பின்வருமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர்: “அரசரையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” தங்களுக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வழிவகைகளையும் பயன்படுத்தி இந்நாள்வரையிலும் உலகமெங்கும் விரிவாக அவர்கள் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14) அவர்களுடைய வேலையினால், இந்த ராஜ்ய விவாதம் உங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

‘என் சகோதரரில் ஒருவனுக்குச் செய்தீர்கள்’

9 ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்துவின் “சகோதரர்,” உலகத்திலிருந்து பிரிந்திருப்பதைக் காத்துக்கொண்டு அதே சமயத்தில் தைரியமாய்க் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதால் கடுமையான பரீட்சைகளை அனுபவித்திருக்கின்றனர். (யோவான் 15:19, 21) சிலர் பசி, தாகம், உடை இல்லாமை ஆகியவற்றை அனுபவித்திருக்கின்றனர். பலர் தாங்கள் அந்நியராயிருக்கும் பகுதிகளில் சேவிக்கத் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வந்திருக்கின்றனர். தங்கள் ஊழியத்தை நடப்பிக்கையில், நோயையும் சிறையிருப்பையும், துன்புறுத்துவோர் கைகளில் மரணத்தையுங்கூட அனுபவித்திருக்கின்றனர். கிறிஸ்துவின் “சகோதரரின்” இந்த அனுபவங்கள் சகல தேசங்களின் ஜனங்களும் ஒரு பரீட்சையை எதிர்ப்படும்படி செய்திருக்கின்றன. கடவுளின்பேரிலும் கிறிஸ்துவின் பேரிலுமுள்ள அன்பு, பரலோக ராஜ்யத்தின் இந்த ஸ்தானாபதிகளின் உதவிக்கு வரும்படி அவர்களைச் செய்விக்குமா? (மத்தேயு 25:35-40; 2 கொரிந்தியர் 5:20-ஐ ஒத்துப் பாருங்கள்.) முக்கியமாய் மனிதப் பண்பான இரக்கமல்ல, அவர்கள் கிறிஸ்துவுக்குரியவர்களாய் இருப்பதனால் அவர்களுக்குக் கொடுக்கும் உதவியை அரசர் தமக்கே செய்யப்பட்டதைப்போல் கருதுகிறார்.—மாற்கு 9:41; மத்தேயு 10:42.

10 இத்தகைய உதவி செய்கிறவர்களை இயேசு செம்மறியாடுகளுக்கு ஒப்பிடுகிறார். தம்முடைய “சகோதரருக்கு” உதவி கொடுக்கத் தவறுகிற ஆட்கள் வெள்ளாடுகளென இயேசுவின் உவமையில் குறிப்பிடப்படுகின்றனர். இந்த “வெள்ளாடுகள்,” தாங்கள் இயேசு கிறிஸ்துவைக் காணவில்லை என்று எதிர்த்துக் கூறலாம். ஆனால் அவர் தம்முடைய ஊழியர்களை அவர்களிடம் அனுப்பினார், இவர்கள் தங்களை இன்னாரென தெளிவாய் அடையாளங்காட்டினர். எல்லா “வெள்ளாடுகளும்” கிறிஸ்துவின் “சகோதரரை” ஒருவேளை துன்புறுத்தமாட்டார்கள், ஆனால் பரலோக அரசரின் பிரதிநிதிகளுடைய உதவிக்கு வரவும் அவர்கள் அவர்மீதுள்ள அன்பால் தூண்டப்படுவதில்லை. (மத்தேயு 25:41-45) பிசாசாகிய சாத்தான் அதன் காணக்கூடாத அதிபதியாயிருக்கும் இந்த உலகத்தை அவர்கள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கின்றனர். “செம்மறியாடுகளும்” கிறிஸ்துவைச் சொல்லர்த்தமாய்க் காணமுடியாது. ஆனால், “வெள்ளாடுகளுக்கு” எதிர்மாறாக, இவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் கிறிஸ்துவின் “சகோதரரை” ஆதரித்து, அவர்களோடு தங்களை அடையாளங்கண்டுகொள்ளச் செய்ய பயப்படுகிறதில்லையென நிரூபிக்கின்றனர். இந்தச் செம்மறியாடுகள் தாங்கள் செய்வதைத் திட்டமாய் அறிந்திருத்திறார்கள், இயேசு கிறிஸ்து ஆளும் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாக அவர்கள் உறுதியான தெரிவு செய்கிறார்கள். இதனிமித்தம் அவர்களுடைய நடவடிக்கை அரசரின் கண்களில் தகுதி பெற்றிருக்கிறது.

11 எனினும் இந்த ஆதாரத்தின்பேரில் சகல தேசங்களின் ஜனங்களும் தீர்க்கப்படுவது எவ்வாறு சாத்தியமாகும்? பிதா பரலோக ராஜ்யத்தை அவர்களுக்குக் கொடுக்கப்போகிற தம்முடைய “சகோதரர்” வெறும் ஒரு “சிறு மந்தையே” என்று இயேசு சொல்லவில்லையா? (லூக்கா 12:32) பலர் அவர்கள் ஒருவரிடம் நேரடியாக ஒருபோதும் தொடர்புகொள்ள முடியாது. உண்மைதான், ஆனால் கிறிஸ்துவின் “சகோதரர்” யெகோவாவின் சாட்சிகளின் சர்வ தேச அமைப்பின் மையமாயிருக்கின்றனர். இந்த அமைக்கப்பட்ட ஜனங்களைக் கொண்டே இந்த இன்றியமையாத ராஜ்ய விவாதம் எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த எல்லாவற்றையும் கிறிஸ்துதாமே தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருந்தும் தூதர்களின் உதவியைக் கொண்டும் வழிநடத்துகிறார். பூகோளத்தைச் சுற்றி ஏறக்குறைய 210 நாடுகளிலும் தீவு தொகுதிகளிலும்—கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதன்பேரில் அரசாங்கம் தடையுத்தரவு போட்டிருக்கும் இடங்களிலுங்கூட—இந்தப் பிரிக்கும் வேலை தடுக்கமுடியாத வண்ணம் முன்னேறுகிறது, திரள் கூட்டமான ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாகத் தங்கள் நிலைநிற்கையை ஏற்று வருகிறார்கள்.

12 அவர்கள் இதை எப்படிக் காட்டுகிறார்கள்? அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களோடுகூட உழைத்து, ராஜ்யம் ஆட்சிசெய்கிறது சீக்கிரத்தில் அது இந்த உலக ஒழுங்குமுறையை அதன் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஆர்வத்துடன் யாவரறிய அறிவிப்பதன் மூலமே. இவ்வாறு யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின் சார்பாகத் தாங்கள் நிலைநிற்கை கொண்டிருக்கிறார்களென்று வெளிப்படையாய்த் தங்களை அடையாளங் கண்டுகொள்ளச் செய்கின்றனர், மேலும் மற்றவர்களும் அவ்வாறே செய்யும்படி அவர்களை அன்புடன் ஊக்குவிக்கின்றனர். தப்பிப்பிழைத்திருக்க வேண்டுமென்ற ஆவலைப் பார்க்கிலும் மிக அதிகம் இந்த நேர்மையான இருதயமுள்ள ஆட்களைத் தூண்டி இயக்குகிறது. இவர்கள் யெகோவாவையும் அவருடைய வழிகளையும் உண்மையில் நேசிக்கிறார்கள். கிறிஸ்துவை அரசராகக் கொண்ட அவருடைய ராஜ்ய ஏற்பாடு இவர்களுடைய இருதயத்தை நன்றியறிதலால் நிரப்புகிறது, மேலும் மற்றவர்கள் அதிலிருந்து நன்மையடைய வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஆகவே ராஜ்ய சாட்சி கொடுப்பதில் தங்களால்கூடிய மிக முழுமையான அளவில் பங்குகொள்ளுகிறார்கள். இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டபடி, இவர்கள் ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுகிறார்கள்,’ பொருள் சம்பந்தத் தேவைகளின்பேரிலுள்ள கவலை அதை இரண்டாவது இடத்திற்குத் தள்ளிப்போட அனுமதிக்கிறதில்லை. இம்முறையில் மிக மேன்மையான ஆசீர்வாதத்தைப் பெறும் நிலைக்குள் இவர்கள் வருகிறார்கள்.—மத்தேயு 6:31-33.

நீங்கள் “ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்”வீர்களா?

13 இயேசுவின் உவமையிலுள்ள “செம்மறியாடுகளாக” நிரூபிப்பவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருப்பது நிச்சயமாகவே அதிசயமானது. தம்முடைய பரலோகச் சிங்காசனத்திலிருந்து, அவர் அவர்களுக்குப் பின்வருமாறு கூறுகிறார்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 25:34) ‘உலகம் உண்டான முதலிலிருந்தே,’ அதாவது, ஆதியாகமம் 3:15, 16-ன்படி மனிதவர்க்கத்தை மீட்பதற்குரிய கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து நன்மையடையக்கூடிய பிள்ளைகளை ஆதாம் ஏவாள் முதலில் பிறப்பித்தச் சமயம் முதற்கொண்டே, இந்தச் “செம்மறியாடுகளுக்குப்” பரிசளிப்பதை யெகோவா மனதில் கொண்டிருந்தார். (லூக்கா 11:50, 51-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆதாம் இழந்த மனித வாழ்க்கையின் பரிபூரணத்தைத் திரும்பக் கொண்டுவரப்படும் பரதீஸில் அனுபவித்து மகிழும் வாய்ப்பு அவர்களுடையது. அவர்கள் ‘ராஜ்யத்தைச் சுதந்தரிப்பது’ அவர்கள் பரலோகத்துக்குப் போவார்களென பொருள் கொள்ளுகிறதில்லை, ஏனெனில் இந்தச் “செம்மறியாடுகள்” பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாயிருக்கிற அரசரின் “சகோதரருக்கு” ஒப்பானோரல்லவென உவமை காட்டுகிறது. ஆகவே இந்தச் “செம்மறியாடுகள்” அந்தப் பரலோக அரசாங்கத்தின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கவேண்டும். இங்கே “ராஜ்யம்” என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்கப் பதம் பஸிலீயா, செய்யப்படுகிற கருத்தில், அதாவது, ஒருவன் “அரசரால் ஆளப்படும்” கருத்தில் புரிந்துகொள்ளப்படலாமென லிட்டல் மற்றும் ஸ்காட் என்போராலாகிய கிரேக்க-ஆங்கில அகராதி கூறுகிறது. இந்தக் கருத்தே இங்கே பொருந்துவதாகத் தெளிவாய்த் தெரிகிறது.

14 “வெள்ளாடுகள்” அக்கினியால் முற்றிலும் அழிந்துபோவதைப்போன்ற “நித்திய அறுப்புண்டுபோதலுக்குள்” செல்கையில், “செம்மறியாடுகள்” மேசியானிய அரசரால் பாதுகாக்கப்படுவார்கள். (மத்தேயு 25:41, 46, NW; வெளிப்படுத்துதல் 21:8-ஐ ஒத்துப் பாருங்கள்.) சாவதற்கு எவ்வித அவசியமுமிராமல், அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினூடே பாதுகாக்கப்பட்டு, சாத்தானின் மற்றும் அவனுடைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் செல்வாக்கிலிருந்து விடுதலையாயிருக்கும் மகிமையான “புதிய பூமி”க்குள் கொண்டுவரப்படுவார்கள். ராஜ்ய விவாதத்தின்பேரில் அவர்கள் இப்பொழுது சரியான தீர்மானத்தைச் செய்வதனால் அவர்களுக்கு அந்த ஆசீர்வாதம் இருக்கும்.

15 “வெள்ளாடுகளின்” அழிவு நித்தியமாயிருப்பதால், இந்த உவமை அப்பொழுது அல்ல, ஒருவேளை பின்னால் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது நிறைவேறலாமென விவாதிப்பது வினைமையான தவறாகும். அதற்கு மாறாக, இயேசு இந்த உவமையை “இந்தக் காரிய ஒழுங்குமுறையின்” அடையாளத்தின் பாகமாகக் கொடுத்தார். (மத்தேயு 24:3, NW) அவர் விவரிப்பது அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்யப்பட்டபின் நடந்தேறுகிறது ஆனால் அதேசமயத்தில் அவருடைய “சகோதரர்” மாம்சத்தில் இன்னுமிருந்து அவர் குறிப்பிடும் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்போதும் ஆகும். நாம் இப்பொழுது அந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், அது விரைவில் முடிந்துகொண்டிருக்கிறது. ஆகையால், இப்பொழுது ராஜ்யத்தில் முழு நம்பிக்கை வைப்பதுமட்டுமல்லாமல் அவ்வாறு செய்யும்படியான முக்கியத்துவத்தைக் காணும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்வதும் எவ்வளவு மிக முக்கியம்.

[கேள்விகள்]

1. ராஜ்ய விவாதத்தின்பேரில் பிரிக்கப்படுதல் ஏன் நம் ஒவ்வொருவருக்கும் முடிவுகட்டமான காரியம்?

2. (எ) யெகோவாவின் அரசாட்சியைப் பற்றிய விவாதத்தோடு இந்த மேசியானிய ராஜ்யம் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? (பி) இந்த ராஜ்யம் சீக்கிரத்தில் என்னவாகும், ஆகவே நாம் எதைப்பற்றிக் கருத்துடன் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்?

3. மத்தேயு 25:31-33-ல் இயேசு எதை விவரித்தார்?

4. (எ) இந்த உவமை தானியேல் 7:13, 14-உடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? (பி) என்ன கேள்விகளை நாம் நன்மைபயக்குமாறு நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்?

5. அரசராகத் தமக்குப் பயபக்தி கொண்டிருப்பதாக ஒருவன் உரிமை பாராட்டுவதன் உண்மையானத் தன்மையை கிறிஸ்து எவ்வாறு தீர்மானிக்கிறார்?

6. கிறிஸ்துவின் இந்தச் “சகோதரர்” யார்?

7. கிறிஸ்துவின் “சகோதரர்” ஏன் கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகளின் உறுப்பினரல்லர்?

8. (எ) கிறிஸ்துவின் “சகோதரர்களை” அடையாளங் கண்டுகொள்ள எது உங்களுக்கு உதவிசெய்தது? (பி) ராஜ்ய பிரசங்க வேலை இவர்களுக்கு எவ்வளவு முக்கியமாயிருக்கிறது?

9. (எ) மத்தேயு 25:35-40-ல் விவரிக்கப்பட்டுள்ள சந்தர்ப்ப நிலைமைகள் எவ்வாறு ராஜ்ய ஊழியத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன? (பி) இவ்வாறு எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் என்ன பரீட்சையை எதிர்ப்படுகின்றனர்?

10. (எ) “வெள்ளாடுகள்” எழுப்பின எதிர்ப்பு ஏன் செல்லத்தக்கதாயில்லை? (பி) எதிர்மாறாக, “செம்மறியாடுகள்” என்ன நிலையை ஏற்றிருக்கின்றனர்?

11. (எ) கிறிஸ்துவின் “சகோதரரில்” ஒருவரை அநேகர் ஒருபோதும் சந்தித்திராததால், இங்கே விவரிக்கப்பட்டுள்ள அடிப்படையின்பேரில் அவர்களை எப்படி நியாயந்தீர்க்க முடியும்? (பி) இந்த வேலை வெற்றிகரமாவதை எது நிச்சயப்படுத்துகிறது?

12. (எ) “செம்மறியாடுகள்” தாங்கள் ஏற்றிருக்கும் நிலைநிற்கையை எவ்வாறு தெளிவாக்குகின்றன? (பி) அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்?

13. (எ) எப்பொழுதிருந்து யெகோவா, இந்தச் செம்மறியாட்டைப் போன்றவர்களுக்கு ஒரு பரிசை மனதில் கொண்டிருந்தார்? (பி) இவர்கள் ‘ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வது’ இவர்களுக்கு எதைக் குறிக்கும்?

14. “வெள்ளாடுகளுக்குக்” கொடுக்கப்பட்ட தீர்ப்பு எவ்வாறு “செம்மறியாடுகளின்” சுதந்தரத்துக்கு நேர்மாறாக இருக்கும்?

15. (எ) இந்த உவமை இப்பொழுது பொருந்துகிறதென்று நாம் எப்படி அறிகிறோம்? (பி) ஆகவே எந்த வேலை இன்றியமையா முக்கியத்துவம் வாய்ந்தது?