Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விடுதலைக்கு வழிநடத்திச் செல்பவர் யார்?

விடுதலைக்கு வழிநடத்திச் செல்பவர் யார்?

அதிகாரம் 9

விடுதலைக்கு வழிநடத்திச் செல்பவர் யார்?

இயேசு கிறிஸ்துவின் தலைமை வகிப்பை நாம் ஏற்று, உண்மையில் அவருக்குச் செவிகொடுத்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறோமென நம்பத்தக்க அத்தாட்சியைக் கொடுத்தால் மாத்திரமே நாம் இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு, வரவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்தினூடே” உயிரோடு பாதுகாத்து வைக்கப்படுவோம். (அப்போஸ்தலர் 4:12) இது, பொ.ச.மு. 1513-ல் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதைச் சுற்றி அமைந்த சம்பவங்களில் நன்றாய் விளக்கிக் காட்டப்பட்டது. யெகோவா இஸ்ரவேலை அற்புதமாய்ச் சிவந்த சமுத்திரத்தினூடே பாதுகாப்புக்குக் கொண்டுசென்று விட்டார், அவர்களைத் துரத்திப் பின்தொடர்ந்த எகிப்திய சேனையை அழித்தார். இந்த எல்லாவற்றிலும், தம்முடைய ஜனத்தை வழிநடத்த கடவுள் மோசேயைப் பயன்படுத்தினார்.—யோசுவா 24:5-7; யாத்திராகமம் 3:10.

2இஸ்ரவேலர் வாக்குபண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கும் எதிர்பார்ப்புடன் எகிப்தை விட்டு வெளியேறினபோது, மற்றவர்களும் அவர்களுடைய அணிவரிசைகளில் சேர்ந்துகொண்டனர். மோசே பின்னால் எழுதினபடி: “அவர்களோடுகூடப் பல ஜாதியாரான திரள் ஜனங்கள்” சென்றார்கள். (யாத்திராகமம் 12:38, தி.மொ.) இவர்கள் யார்? இவர்கள் இஸ்ரவேலரோடு சேர்ந்துகொண்ட எகிப்தியர்கள் அல்லது மற்ற அந்நியர்களே. யெகோவாதாமே ஒரே மெய்க் கடவுள் எனவும் எகிப்தின் கடவுட்கள் பொய்யானவை, தங்களை வணங்கினவர்களை விடுவிக்க முடியாதெனவும் மெய்ப்பித்துக்காட்ட யெகோவா கொடுங்கோன்மையான எகிப்து தேசத்தின்மேல் கொண்டுவந்தத் திகிலூட்டின வாதைகளை அவர்கள் கண்டனர். மேலும், “பாலும் தேனும் ஓடுகிற . . . தேசத்தில்” வாழும் எதிர்பார்ப்பைப் பற்றி அவர்கள் இஸ்ரவேலரிடமிருந்து கேள்விப்பட்டதும், சந்தேகமில்லாமல், அவர்களுக்கு நல்லதாகக் தொனித்தது. (யாத்திராகமம் 3:7, 8; 12:12) ஆனால் மோசேயைக் கடவுள் தம்முடைய ஜனத்தின் அதிபதியாகவும் விடுதலை செய்பவனாகவும் இருக்க எழுப்பினாரென அவர்கள் முழுமையாய் உணர்ந்து ஒப்புக்கொண்டிருந்தார்களா? சீக்கிரத்தில் அவர்கள் பரீட்சிக்கப்படுவார்கள்.—அப்போஸ்தலர் 7:34, 35.

3இஸ்ரவேலர், “பல ஜாதியாரான திரள் ஜனங்க”ளோடுகூட செங்கடல் கரையோரங்களை நெருங்கி வருகையில், எகிப்தின் அரசனும் அவனுடைய இராணுவ சேனைகளும், அவர்களைத் திரும்ப அடிமைத்தனத்துக்கு இழுத்துக்கொண்டு செல்ல அவர்களைத் துரத்திப் பின்தொடர்ந்து வந்தனர். தாங்கள் விடுவிக்கப்பட, அவர்கள் ஒன்றுசேர்ந்து நிலைத்திருந்து மோசேயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஏனெனில் அவர்களை வழிநடத்த யெகோவா மோசேயைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இயற்கை மீறிய ஒரு மேகத்தைக் கொண்டு சத்துரு முன்னேறாதபடி யெகோவா தடுத்து வைத்து அதே சமயத்தில் கடலின் தண்ணீர்களைப் பிளந்து கடலின் அடிப்பரப்பை வறண்டுபோகச் செய்தார். பின்னால் எகிப்தியருக்கு நடந்ததற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் “பல ஜாதியாரான திரள் ஜனங்களும்” மோசேயுடன் அந்தக் கடலின் வறண்ட அடிப்பரப்பைக் கடந்து தப்பிப்பிழைத்தார்கள். (யாத்திராகமம் 14:9, 19-31) தங்கள் வலதுபுறத்திலும் தங்கள் இடதுபுறத்திலும் தண்ணீர் சுவர்கள் நிற்க தலைக்குமேல் கடவுளுடைய சமுகத்தைக் குறிக்கும் மேகம் இருக்க, இவற்றினூடே அவர்கள் கடந்து செல்கையில், தனிக் கவனிப்புக்குரிய ஒன்று நடந்தேறிற்று. பைபிள் அதை முழுக்காட்டுதல் என்று குறிப்பிட்டுப் பேசுகிறது—தண்ணீரில் சொல்லர்த்தமான முழுக்காட்டு அல்ல, ஆனால் அவர்களை விடுதலை செய்பவனாயிருக்கக் கடவுள் அனுப்பின, யெகோவாவின் தீர்க்கதரிசியான மோசேக்குள் அடையாளக் குறிப்பான முழுக்காட்டாகும். (1 கொரிந்தியர் 10:1, 2) அதைப்போலவே, இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவைத் தப்பிப்பிழைக்கப்போகும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் எல்லாரும், விடுதலை செய்பவராகிய கிறிஸ்துவுக்குள் அதற்கொப்பான முழுக்காட்டுதலுக்கு உட்பட்டு அவருடைய தலைமை வழிநடத்துதலை மிகக் கவனமாய்த் தாங்கள் கடைப்பிடிப்பதை நிரூபிக்கும் நம்பத்தக்க அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். தற்கால “பல ஜாதியாரான ஜனங்கள்” அவர்களைப் பின்தொடர வேண்டும்.

4யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகுந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். ‘இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை’யின் துயரார்ந்த அழிவில் நாம் பங்குகொள்ள வேண்டியிராதபடி, அதிலிருந்து ‘விடுவிக்கப்படுவதைக்’ கடவுள் தம்முடைய குமாரன் மூலம் கூடியதாக்கினார். (கலாத்தியர் 1:3-5; 1 தெசலோனிக்கேயர் 1:9, 10) மோசேயின் மூலமாய், யெகோவா இஸ்ரவேலருக்குச் சட்டங்களைக் கொடுத்தார், அவை, அந்த ஜனத்தின் உடனடியான வாழ்க்கை எதிர்பார்ப்புகளைப் பாதித்தன. அவர்கள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோது வெகுவாய்ப் பயனடைந்தார்கள். ஆனால் கீழ்ப்படியாமைக்கு மரண தண்டனையையும் சில சட்டங்கள் கொண்டிருந்தன. பின்னால், இயேசு மோசேயைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஆனார். அவர் கற்பித்தவை “நித்திய ஜீவ வசனங்கள்,” தெரிந்து வேண்டுமென்றே இந்த வசனங்களுக்குக் கீழ்ப்படிய தவறுவது, அதிலிருந்து விடுதலையேயிராத மரணத்துக்கு வழிநடத்துகிறது. ஆகவே, அவர் சொல்வதை நாம் கவனமாய் இருதயத்தில் ஏற்பது எவ்வளவு முக்கியமானது!—யோவான் 6:66-69; 3:36; அப்போஸ்தலர் 3:19-23.

5ஒரு தலைவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் எண்ணம் சில ஆட்களுக்கு விரும்பத்தக்கதாகத் தோன்றுகிறதில்லை. அதிகாரம் தவறான வகையில் பயன்படுத்தப்படுவதை அவர்கள் மிக அதிகம் கண்டிருக்கின்றனர். ஆனால் இயேசுவின் சொந்த வார்த்தைகள் திரும்பவும் நம்பிக்கையூட்டும் ஆவியைப் பிரதிபலிக்கின்றன. அவர் நம்மைப் பின்வருமாறு அன்பாக அழைக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) எத்தகைய கவர்ச்சியூட்டும் எதிர்பார்ப்பு! இந்த அன்பான அழைப்புக்குச் செவிகொடுத்து தங்கள் முழு நம்பிக்கையை அவரில் வைக்கிறவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். (ரோமர் 10:11) அன்புள்ள மேய்ப்பனின் மந்தையிலுள்ள செம்மறியாடுகள் அனுபவிப்பதைப் போன்ற பாதுகாப்பை அவர்கள் அனுபவிப்பார்கள்.

உண்மையான நல்ல மேய்ப்பர்

6இஸ்ரவேல் ஜனம் யெகோவாவுக்கு உரியதாயிருந்த செம்மறியாட்டு மந்தையைப்போல் இருந்தது. அவர் நியாயப்பிரமாண உடன்படிக்கையை அருளினார், அது ஆட்டுத் தொழுவத்தின் பாதுகாப்புக்குரிய சுற்றுச் சுவர்களைப்போல் சேவித்தது, தெய்வபக்தியற்றப் புறஜாதியாரின் வாழ்க்கை முறையிலிருந்து அவர்களைத் தடுத்துக் காத்தது. மேலும், ஏற்றிசைந்து நடந்தவர்களை மேசியாவிடமும் வழிநடத்தினது. (எபேசியர் 2:14-16; கலாத்தியர் 3:24) அந்த மேசியானிய மேய்ப்ப-அரசனைக் குறித்து, யெகோவா பின்வருமாறு முன்னறிவித்தார்: “அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் [என் ஆடுகள்மேல்] விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.” (எசேக்கியேல் 34:23, 31) அப்பொழுது மரித்துப்போய்விட்டிருந்த தாவீது, தானே மறுபடியும் வந்து கடவுளுடைய ஜனங்கள்மேல் அரசனாக ஆட்சி செலுத்துவானென இது குறிக்கவில்லை. அதற்கு மாறாக, தாவீதின் அரச வம்ச பரம்பரையிலிருந்து யெகோவா ஒரு மேய்ப்ப-அரசனை எழுப்புவார் அவர் மூலமாய்க் கடவுள் பாதுகாப்பை அளிப்பார். (எரேமியா 23:5, 6) பல்வேறு சமயங்களில் மனிதர் மேசியானிய விடுதலைசெய்வோரென பொய்யாக உரிமை பாராட்டினர், ஆனால் பொ.ச. 29-ம் ஆண்டில், இயேசு கிறிஸ்துவை, உண்மையில் கடவுள் அனுப்பின, அதிகாரப்பூர்வ சாட்சிகளையுடைய மேசியாவென இஸ்ரவேலின் “செம்மறியாடுகளுக்கு” அறிமுகப்படுத்த, முழுக்காட்டுபவனான யோவானை யெகோவா பயன்படுத்தினார். இவர் கடவுளின் பரலோகக் குமாரன், இவர் தாவீதின் அரச பரம்பரையில் பிறக்கக்கூடும்படி இவருடைய உயிரின் மூலத் தத்துவம் யூதக் கன்னிகையின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டது. தாவீது என்ற பெயரின் பொருள் “மிக நேசமானவன்” என்பதாகும், ஆகையால், பொருத்தமாகவே, தண்ணீரில் இயேசுவின் முழுக்காட்டுக்குப் பின், யெகோவா பரலோகத்திலிருந்து சத்தமாய்க் கேட்கத்தக்கவண்ணம் பின்வருமாறு கூறினார்: “நீ என்னுடைய குமாரன், மிக நேசமானவன்; நான் உன்னை அங்கீகரித்தேன்.”—மாற்கு 1:11, NW.

7இயேசு, தம்முடைய மரணத்துக்கு ஏறக்குறைய நான்கு மாதங்கள் இருந்தபோது பின்வருமாறு கூறினார்: “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.” (யோவான் 10:11) அவர் தாம் வகித்தப் பாகத்தைத் தமக்கு முன் வந்திருந்த பொய் மேசியாக்கள் வகித்தப் பாகத்தோடு வேறுபடுத்திக் காட்டிக் கூறினதாவது: “ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ச் செல்லாமல் வேறுவழியாய் ஏறுகிறவன் திருடனும் கொள்ளைக்காரனுமாம். வாசல்வழியாய்ச் செல்லுகிறவனோ ஆடுகளின் மேய்ப்பன். வாசல்காக்கிறவன் அவனுக்கு வாசலைத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் குரலைக் கேட்கின்றன. அவன் தன் சொந்த ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான். அவன் தன் ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே விட்ட பின்பு அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான்; ஆடுகள் அவன் குரலை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகின்றன. அவைகள் வேற்றாளுக்குப் பின் செல்லா; வேற்றாட்களின் குரலை அறியாதபடியினால் அவனை விட்டோடிப்போம்.”—யோவான் 10:1-5, 8, தி.மொ.

8நியாயப்பிரமாண உடன்படிக்கையின் வழிநடத்துதலுக்குச் செவிகொடுத்து நடந்த யூத ஆட்டுத்தொழுவத்தில் இருந்தவர்கள், “வாசல் காக்கிறவனான” முழுக்காட்டின யோவான், இயேசுவைத் தங்களுக்கு அறிமுகப்படுத்தினபோது அவரை மேசியாவாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் இயேசுவின் “சொந்த ஆடுகளாக” நிரூபித்தனர், அவர் இவர்களை யெகோவாவுக்கு உரிய ஒரு புதிய அடையாளக் குறிப்பான ஆட்டுத் தொழுவத்துக்கு, அல்லது பட்டிக்கு வழிநடத்தினார். இந்தத் தொழுவம், ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் செய்யப்பட்டதும் இயேசுவின் சொந்த இரத்தத்தால் சட்டப்படி செல்லத்தக்கதாக்கப்பட்டதுமான புதிய உடன்படிக்கையின் ஆதாரத்தின்பேரில் யெகோவாவுடன் தயவுக்குரிய உறவைக் குறித்துக் காட்டினது. இந்த உடன்படிக்கையினால், ஆபிரகாமின் “வித்து”ஆகக் கிறிஸ்துவுடன் பரலோக வாழ்க்கையை அடைவது அவர்களுக்குக் கூடியதாயிற்று, இந்த வித்தின் மூலமே சகல ஜாதிகளின் ஜனங்களுக்கும் ஆசீர்வாதங்கள் வரும். (எபிரெயர் 8:6; 9:24; 10:19-22; ஆதியாகமம் 22:18) மரித்தோரிலிருந்து கடவுள் உயிர்த்தெழுப்பிப் பரலோக வாழ்க்கைக்குத் திரும்பக் கொண்டுவந்த, இயேசு கிறிஸ்துவே இந்தப் புதிய-உடன்படிக்கை ஆட்டுத் தொழுவத்தின் “வாசல்.” தம்முடைய தகப்பனின் நோக்கத்துக்கிணங்க, இந்தத் தொழுவத்துக்குள் மட்டுப்பட்ட எண்ணிக்கையானவர்களையே—1,44,000 பேரை மாத்திரமே—அவர் கொண்டுவந்திருக்கிறார், முதல் யூதரிலிருந்தும், பின்னால் சமாரியரிலிருந்தும் புறஜாதியாரிலிருந்தும் இவர்களைக் கொண்டுவந்தார். நல்ல மேய்ப்பராக, இயேசு தம்முடைய செம்மறியாடுகளான ஒவ்வொருவரையும் அவரவருடைய பெயரால் அறிந்து அவர்களுக்கு அன்புள்ள தனிப்பட்ட பராமரிப்பையும் கவனத்தையும் கொடுக்கிறார்.—யோவான் 10:7, 9; வெளிப்படுத்துதல் 14:1-3.

9எனினும், இயேசு தம்முடைய மேய்க்கும் அக்கறையைப் பரலோக ராஜ்யத்தை அடையும் இந்தச் “சிறு மந்தை”க்கு மாத்திரமே மட்டுப்படுத்துகிறதில்லை. (லூக்கா 12:32) அவர் மேலும் கூறினதாவது: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (யோவான் 10:16) இவர்கள் யார்? இவர்கள் புதிய உடன்படிக்கையில் இல்லாத ஆட்கள்; இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர் அல்லர். ஆனால் இவர்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினர் பூமியில் இன்னும் இருக்கையில் அவர்களுடன் நெருங்கிய கூட்டுறவுக்குள் கொண்டுவரப்படுகின்றனர், மேலும் இயேசு விவரித்த வகையான மேய்ப்புக் கவனிப்பு தேவைப்படுகின்றனர். இந்த “வேறே ஆடுகள்” (“மற்றச் செம்மறியாடுகள்,” NW), இயேசுவின் இரத்தத்தின் பலிக்குரிய மதிப்பில் வைக்கும் தங்கள் விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் பூமியில் நித்திய ஜீவனடைவதற்குரிய யெகோவாவின் ஏற்பாட்டுக்குள், இந்தக் கடைசி நாட்களின்போது கூட்டிச் சேர்க்கப்படுகிற ஆட்கள். இவர்கள், வெளிப்படுத்துதல் 7:9, 10, 14-ல் குறிப்பிடப்பட்டுள்ள அதே “திரள் கூட்டத்தார்” ஆவர். (தி.மொ.) ஆகவே வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

10நல்ல மேய்ப்பர் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைக்கும் இத்தகைய “வேறே ஆடுகளைப்” பற்றி பைபிள் விவரிப்பதற்குப் பொருத்தமாய்த் தான் இருக்க ஒருவன் அவருடைய குரலுக்குச் “செவிகொடுக்க” வேண்டும், மேலும் பரலோக ராஜ்யத்தின் உண்மையான சுதந்தரவாளிகளும் அடங்கிய அந்த “ஒரே மந்தை”யின் பாகமாக உண்மையில் இருக்கும் அத்தாட்சியையும் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்கிறீர்களா? அவருடைய குரலுக்கு எவ்வளவு கவனமாய்ச் செவிகொடுக்கிறீர்கள்?

11இயேசு பின்வருமாறு சொன்னதை நீங்கள் சந்தேகமில்லாமல் அறிந்திருக்கிறீர்கள்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 15:12) இந்தக் கட்டளை உங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? நீங்கள் காட்டும் இந்த அன்பு இயேசு முன்மாதிரி வைத்த வகையான அன்பாயிருக்கிறதா? அது உண்மையில் தன்னலத் தியாகமுள்ளதா? கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லாரிடமும் உங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினரிடமும் இத்தகைய அன்பின் அத்தாட்சியை உங்கள் செயல்களும் உணர்ச்சிகளும் காட்டுகின்றனவா?

12நாம் உண்மையில் இயேசுவிடமிருந்து “கேட்டறிந்து” ‘அவரால் போதிக்கப்பட்டால்’ நம்முடைய முழு சுபாவமும் மாறுமென அப்போஸ்தலன் பவுல் கூறுகிறான். நம்முடைய முந்தின வாழ்க்கை முறைக்கு ஒத்த சுபாவத்தை நாம் களைந்துபோட்டு, யெகோவாவின் சிறந்த பண்புகளைப் பிரதிபலிக்கிற “புதிய சுபாவத்தைத்” தரித்துக் கொள்வோம். (எபேசியர் 4:17-24, NW; கொலோசெயர் 3:8-14) நீங்கள் பைபிளைப் படிக்கையில் கடவுளைப் பிரியப்படுத்துவதற்குச் சில சரிப்படுத்தல்களை நம்மில் நாம் செய்யவேண்டிய பகுதிகளைப் பற்றிக் கவலையுடன் எண்ணிப் பார்ப்பீர்களா? நீங்கள் மனச்சாட்சியுடன் அத்தகைய மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறீர்களா? நம்முடைய நாளில் செய்யவேண்டுமென இயேசு கட்டளையிட்ட அந்த மிக முக்கியமான வேலையை—கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதை—நீங்கள் கவனத்தில் ஏற்று அதில் பங்குகொள்ள வழிவகைகளை நாடித் தேடுகிறீர்களா? கடவுள் உங்களுக்குக் காட்டின தகுதியற்றத் தயவை நன்றியோடு மதித்துணருவது அவ்வாறு செய்ய உங்கள் இருதயப் பூர்வ ஆசையை உங்களில் தூண்டிவிடுகிறதா?—மத்தேயு 24:14.

13நம்முடைய இருதயம் நம்மைத் தவறாக வழிநடத்த விடாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாக லட்சக்கணக்கான ஆட்கள் உரிமை பாராட்டுகின்றனர், அவர் கற்பித்த சில காரியங்களை அவர்கள் ஒருவேளை எடுத்துக் கூறலாம், ஆனால் தங்களுக்கு வசதியாகக் காண்கிறவற்றை மாத்திரமே அவர்கள் பொருத்திப் பிரயோகிக்கிறார்கள். படுமோசமான தவறென தாங்கள் கருதும் நடத்தையில் ஈடுபடுவதைச் சிலர் ஒருவேளை தவிர்க்கலாம். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பரதீஸான பூமியில் வாழும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நல்லதாகத் தொனிக்கலாம், மேலும் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்தவ நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்த உள்ளப்பூர்வமாய் முயற்சி செய்வோரோடு இப்பொழுது கூட்டுறவு கொள்வதை அவர்கள் அனுபவித்து மகிழலாம். ஆனால் “புதிய பூமி”க்குள் தப்பிப்பிழைப்போருக்குள் நாமிருக்க விரும்பினால் இயேசு சொல்லும் எல்லாவற்றிற்கும் நாம் கவனமாய்ச் செவிகொடுக்க வேண்டும். நம் சொந்த நடைகளை நாம் வெற்றிகரமாய் வழிநடத்திக்கொள்ள முடியாதென்பதை மதித்துணருவது இன்றியமையாதது. தம்முடைய ஜனத்தை விடுதலை செய்பவராக இருக்கும்படி யெகோவா அதிகாரமளித்துள்ள கடவுளுடைய குமாரனுக்கு நாம் செவிகொடுத்து, அவருடைய அடிச்சுவடுகளில் கவனமாய் நடக்க வேண்டும்.—எரேமியா 10:23; மத்தேயு 7:21-27; 1 பேதுரு 2:21.

[கேள்விகள்]

1. (எ) “மிகுந்த உபத்திரவத்”தினூடே பத்திரமாய் விடுவித்துக் காக்கப்பட நாம் எதற்கு நம்மைக் கீழ்ப்படுத்த வேண்டும்? (பி) கடவுள் மோசேயைப் பயன்படுத்தின முறையில் இது எவ்வாறு விளக்கிக் காட்டப்பட்டது?

2. (எ) இஸ்ரவேலரோடு எகிப்தை விட்டு வெளியேறின அந்தப் “பல ஜாதியாரான திரள் ஜனங்கள்” யாவர்? (பி) சந்தேகமில்லாமல் அவர்களில் பலரின் மனதைக் கவர்ந்தவை யாவை? (சி) எந்தக் காரியத்தில் அவர்கள் சீக்கிரத்தில் பரீட்சிக்கப்படவிருந்தனர்?

3. (எ)  மோசேயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது ஏன் இன்றியமையாததாக இருந்தது? (பி) ‘மோசேக்குள் முழுக்காட்டப்பட்டதன்’ பொருள் என்ன? (சி) இது ஏன் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு முக்கியமானது?

4. யெகோவா கிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரம் எவ்வளவு பெரியது?

5. இயேசுவுக்குக் கீழ்ப்படுவதை மிக விரும்பத்தக்கதாக்குவது எது?

6. (எ) இஸ்ரவேல் ஜனம் எவ்வாறு ஆட்டுத் தொழுவத்திலுள்ள செம்மறியாடுகளைப்போல் இருந்தனர்? (பி) இந்தச் “செம்மறியாடுகளுக்கு” ஒரு மேய்ப்பனை எழுப்புவதைக் குறித்து யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார்? அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது?

7. (எ) “நல்ல மேய்ப்பனாக” இயேசு, “ஆடுகளின்” பேரில் தமக்கு இருந்த அன்புள்ள அக்கறையின் ஆழத்தை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டினார்? (பி) முன் வந்த பொய் மேசியாக்களின் நடத்தைக்கு இது எவ்வாறு வேறுபட்டது?

8. (எ) இயேசு, தம்மைப் பின்பற்றின யூதர்களை எந்தப் புதிய “ஆட்டுத் தொழுவத்துக்”குள் வழிநடத்தினார்? (பி) எத்தனை ஆட்களை அவர் இந்தத் தொழுவத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்?

9. இயேசு குறிப்பிடுகிற அந்த “வேறே ஆடுகள்” யார்? அவர்கள் எப்பொழுது கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்?

10. அந்த “வேறே ஆடுகளில்” ஒருவராயிருக்க என்ன செய்ய வேண்டும்?

11. யோவான் 15:12-ல் இயேசு சொல்லியிருப்பதற்கு நாம் உண்மையில் “செவிகொடுக்கிறோமென” எது அத்தாட்சியைக் கொடுக்கும்?

12. (எ) நாம் உண்மையில் ‘இயேசுவால் போதிக்கப்பட்டால்” அது நம்மில் எவ்வளவு மாற்றத்தை உண்டுபண்ணும்? (பி) ஆகையால், பைபிளிலிருந்து நாம் கற்கும் காரியங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?

13. (எ) நாம் கவனமாயிராவிடில், நம்முடைய இருதயம் நம்மை எப்படித் தவறாக வழிநடத்தக்கூடும்? (பி) அப்படியானால், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் எந்த அளவுக்கு நாம் பின்தொடர வேண்டும்?