Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 40

கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது

கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது

கடவுளை சந்தோஷப்படுத்த நாம் என்ன செய்யலாம்? அவருக்கு எதையாவது கொடுக்கலாமா?— ‘காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் எனக்கு சொந்தம்’ என யெகோவா சொல்கிறார். அதோடு, ‘வெள்ளியும் என்னுடையது, தங்கமும் என்னுடையது’ என்றும் சொல்கிறார். (சங்கீதம் 24:1; 50:10; ஆகாய் 2:8) இருந்தாலும் கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுக்க முடியும். அது என்ன தெரியுமா?—

யெகோவாவை சேவிப்பதா வேண்டாமா என்ற முடிவை அவர் நம்மிடமே விட்டுவிட்டார். அவர் நம்மை வற்புறுத்தி எதையும் செய்ய வைப்பதில்லை. அவரை சேவிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் திறமையோடு நம்மை ஏன் படைத்தார் என்பதை முதலில் புரிந்துகொள்ளலாம்.

ரோபாட்டைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கலாம். அது ஒரு இயந்திரம்; தயாரித்தவரின் விருப்பப்படியெல்லாம் அது செய்யும். ஆனால் அது சொந்தமாக எதையுமே செய்ய முடியாது. யெகோவா நம் எல்லாரையும் ரோபாட்டுகளைப் போல் உண்டாக்கியிருக்கலாம். அவர் விருப்பப்படி மட்டுமே நாம் செயல்படும் விதத்தில் படைத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?— சில பொம்மைகள் ரோபாட்டுகளைப் போல் இருக்கின்றன. ஒரு பட்டனை அழுத்தினால், என்ன செய்யும்படி தயாரிக்கப்பட்டிருக்கின்றனவோ அதை மட்டும் செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பொம்மையை நீ பார்த்திருக்கிறாயா?— அந்தப் பொம்மையோடு விளையாடுபவர்களுக்கு சீக்கிரத்தில் சலித்துப்போய் விடும். ஏனென்றால் அது புரோகிராம் செய்யப்பட்டபடி மட்டுமே எப்போதும் செய்து கொண்டு இருக்கும். நாம் ரோபாட்டுகளைப் போல் இருக்க கடவுள் விரும்புவதில்லை; ஏதோ புரோகிராம் செய்யப்பட்ட பொம்மை போல் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவரை சேவிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. மக்கள் தன்னை நேசிப்பதாலும் தனக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுவதாலும் தன்னை சேவிக்க வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார்.

கடவுள் ஏன் இந்த ரோபாட்டைப் போல் நம்மை உண்டாக்கவில்லை?

நாமாகவே விருப்பப்பட்டு கீழ்ப்படியும்போது நம் பரலோக தந்தைக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?— நீ நடந்துகொள்ளும் விதம் உன் அப்பா அம்மாவை எப்படி பாதிக்கிறது என்று நினைக்கிறாய்?— ஞானமுள்ள மகன் தன் “தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்,” ஆனால் அறிவில்லாத மகனோ ‘தன் தாய்க்கு வேதனையாக இருக்கிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 10:1) உன் அப்பா அம்மா சொல்வதை நீ கேட்டு நடக்கும்போது அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்திருக்கிறாயா?— ஆனால் அவர்கள் பேச்சை நீ கேட்காதபோது அவர்களுக்கு எப்படி இருக்கும்?—

யெகோவாவையும் உன் அப்பா அம்மாவையும் நீ எப்படி சந்தோஷப்படுத்தலாம்?

இப்போது நம் பரலோக அப்பா யெகோவாவைப் பற்றி யோசிக்கலாம். அவரை நாம் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று அவர் சொல்கிறார். உன் பைபிளை எடுத்து நீதிமொழிகள் 27:11-க்கு திருப்புகிறாயா? அங்கே கடவுள் நம்மிடம் இப்படி சொல்கிறார்: “என் மகனே, [அல்லது மகளே என்றும் நாம் சொல்லலாம்] என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை) ஒருவரை நிந்திப்பது என்றால் என்ன தெரியுமா?— ஒருவர் உன்னைப் பார்த்து, “சொன்னபடி உன்னால் செய்ய முடியவில்லையே” என்று கூறி கிண்டலாக சிரிப்பதுதான் நிந்திப்பது. சாத்தான் எப்படி யெகோவாவை நிந்திக்கிறான்?— அதை இப்போது பார்க்கலாம்.

சாத்தான் நம்பர் ஒன்னாக இருக்க விரும்புகிறான், எல்லாரும் தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான் என இந்தப் புத்தகத்தில் 8-ஆம் அதிகாரத்தில் நாம் படித்தது உனக்கு ஞாபகம் இருக்கும். நித்திய ஜீவன் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மக்கள் யெகோவாவை வணங்குகிறார்கள் என்று சாத்தான் சொல்கிறான். ஆதாமையும் ஏவாளையும் யெகோவாவின் பேச்சை மீற வைத்த பிறகு சாத்தான் அவரிடம் இப்படி சவால்விட்டான்: ‘மனிதர்கள் உங்களிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்களுக்காகவே உங்களை சேவிக்கிறார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். யாரை வேண்டுமானாலும் உங்களை விட்டு விலகச் செய்வேன்.’

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு சாத்தான் எப்படி யெகோவாவிடம் சவால் விட்டான்?

பைபிளில் இதே வார்த்தைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் யோபு என்பவரைப் பற்றி வாசிக்கும்போது, சாத்தான் இது போலத்தான் கடவுளிடம் சொல்லியிருப்பான் என்பது தெளிவாக தெரிகிறது. யோபு கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தாரா இல்லையா என்பது சாத்தானுக்கும் யெகோவாவுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள பைபிளில் யோபு புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களை எடுத்துப் பார்க்கலாம்.

பரலோகத்தில் தேவதூதர்கள் யெகோவாவுக்கு முன்பாக வந்தபோது சாத்தானும் அவர்கள் நடுவே இருந்தான் என்று, யோபு முதல் அதிகாரம் சொல்கிறது. ஆகவே, “நீ எங்கேயிருந்து வருகிறாய்”? என்று யெகோவா சாத்தானிடம் கேட்டார். பூமியில் சுற்றித்திரிந்துவிட்டு வந்ததாக சாத்தான் சொன்னான். யெகோவா அவனிடம், ‘யோபு என்ற மனிதனை பார்த்தாயா, அவன் என்னை சேவிக்கிறான், எந்தக் கெட்ட காரியமும் அவன் செய்வதில்லை’ என்றார்.—யோபு 1:6-8.

உடனடியாக சாத்தான் குறை கண்டுபிடித்தான். ‘எந்தப் பிரச்சினையுமே இல்லாததால்தான் யோபு உங்களை வணங்குகிறான். அவனுக்கு இனிமேலும் நீங்கள் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் தராவிட்டால், உங்கள் முகத்திற்கு முன்பாகவே உங்களை பழிப்பான்’ என்றான். அதற்கு யெகோவா, ‘சரி, சாத்தானே, அவனுக்கு நீ என்ன கஷ்டங்கள் வேண்டுமானாலும் கொடுத்துப் பார், ஆனால் அவன் மீது மட்டும் கையை வைக்காதே’ என்றார்.—யோபு 1:9-12.

சாத்தான் என்ன செய்தான் தெரியுமா?— யோபுவின் மாடுகளும் கழுதைகளும் திருடு போகும்படி செய்தான். அவற்றை கவனித்து வந்த எல்லாரும் கொல்லப்பட்டார்கள். பின்பு மின்னல் அடித்ததில் யோபுவின் ஆடுகள் செத்தன, அவற்றை மேய்த்தவர்களும் இறந்தார்கள். பிற்பாடு அவருடைய ஒட்டகங்கள் திருடு போயின. அவற்றை கவனித்து வந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். கடைசியில், சாத்தான் ஒரு பெரிய சூறைக்காற்றை வரவழைத்தான். அது யோபுவின் பத்து பிள்ளைகள் இருந்த வீட்டை தரைமட்டமாக்கியது. அந்த பத்து பிள்ளைகளும் செத்தார்கள். இந்த எல்லா கஷ்டங்களுக்குப் பிறகும் யோபு தொடர்ந்து யெகோவாவை சேவித்தார்.—யோபு 1:13-22.

யெகோவா மறுபடியும் சாத்தானைப் பார்த்தபோது, யோபு இன்னமும் உத்தமமாக இருப்பதைக் குறிப்பிட்டார். மறுபடியும் சாத்தான் சாக்குப்போக்கு சொன்னான். ‘அவன் உடல் மீது கை வைக்க மட்டும் என்னை நீங்கள் அனுமதித்துப் பாருங்கள், அவன் கண்டிப்பாக உங்கள் முகத்திற்கு முன்பாக உங்களை சபிப்பான்’ என்றான். ஆகவே யோபுவின் உடலுக்கு தீங்கு செய்ய சாத்தானை யெகோவா அனுமதித்தார். ஆனால் யோபுவைக் கொல்லக்கூடாது என்று எச்சரித்தார்.

யோபு என்ன கஷ்டங்களை சகித்தார், அவ்வாறு சகித்தது கடவுளை ஏன் சந்தோஷப்படுத்தியது?

சாத்தான் யோபுவுக்கு வியாதியை வரவழைத்தான். அவர் உடல் முழுவதும் கொப்புளங்கள் வந்தன. அந்தக் கொப்புளங்கள் பயங்கரமாக நாற்றம் அடிக்க தொடங்கின. ஆகவே ஒருவரும் அவர் பக்கத்தில் போக விரும்பவில்லை. யோபுவின் மனைவிகூட, ‘கடவுளை சபித்துவிட்டு செத்துப்போங்கள்!’ என்று சொன்னாள். யோபுவின் நண்பர்கள் போல் காட்டிக்கொண்ட சிலர் அவரை பார்க்க சென்றார்கள். அவர் பெரிய பாவங்கள் செய்ததால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தன என்று சொல்லி அவரது மனதை இன்னமும் வேதனைப்படுத்தினார்கள். ஆனால் சாத்தான் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி வேதனைப்படுத்திய போதும் யோபு தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார்.—யோபு 2:1-13; 7:5; 19:13-20.

யோபு அப்படி உண்மையோடு இருந்ததால் யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய்?— அவருக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர் சாத்தானிடம், ‘யோபுவைப் பார்! மனதார விருப்பப்பட்டு என்னை சேவிக்கிறான்’ என்று சொல்ல முடிந்தது. நீ யோபுவைப் போல் இருப்பாயா? சாத்தானை பொய்யனாக நிரூபிக்கும் விதத்தில் உன்னுடைய நடத்தையும் இருக்கிறது என்று யெகோவாவால் சொல்ல முடியுமா?— யாரை வேண்டுமானாலும் யெகோவாவிடமிருந்து பிரிக்க முடியும் என்ற சாத்தானின் சவாலுக்கு நம் பங்கில் பதில் அளிப்பது உண்மையில் ஒரு பாக்கியம். கண்டிப்பாக அதை இயேசு ஒரு பாக்கியமாக கருதினார்.

பெரிய போதகர் ஒருபோதும் தவறு செய்யவில்லை; அதற்கு சாத்தானை அவர் அனுமதிக்கவில்லை. அவருடைய நடத்தை அவருடைய தகப்பனை எந்தளவுக்கு சந்தோஷப்படுத்தியிருக்கும் என்று நினைத்துப் பார்! யெகோவா சாத்தானிடம், ‘என் மகனைப் பார்! என்னை நேசிப்பதால் முழு உத்தமத்தைக் காட்டியிருக்கிறார்!’ என்று சொல்ல முடிந்தது. மேலும், தகப்பனின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவதில் இயேசுவுக்கும் எவ்வளவு சந்தோஷம் என்று நினைத்துப் பார். இந்த சந்தோஷத்தினால்தான், கழுமரத்தில் சாகும் வேதனையையும் இயேசு தாங்கிக்கொண்டார்.—எபிரெயர் 12:2.

நீயும் பெரிய போதகரைப் போல் யெகோவாவை சந்தோஷப்படுத்த விரும்புகிறாயா?— அப்படியென்றால் நீ என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் என்பதைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள். அதன்படி செய்வதன் மூலம் அவரை சந்தோஷப்படுத்து!

கடவுளை சந்தோஷப்படுத்த இயேசு என்ன செய்தார் என்றும், நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் இப்போது சில வசனங்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். நீதிமொழிகள் 23:22-25; யோவான் 5:30; 6:38; 8:28; 2 யோவான் 4.