Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 19

சண்டைபோடுவது சரியா?

சண்டைபோடுவது சரியா?

பெரிய மனுஷன் போல் அல்லது பெரிய மனுஷி போல் மற்றவர்களை அதட்டிக்கொண்டும் அதிகாரம் செய்துகொண்டும் இருக்கும் பிள்ளைகளை பார்த்திருக்கிறாயா?— அவர்களோடு இருக்க ஆசைப்படுவாயா? அல்லது அன்பாகவும் சமாதானமாகவும் இருக்கும் பிள்ளையோடு பழக ஆசைப்படுவாயா?— ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், ஏனென்றால் அவர்கள் “கடவுளுடைய பிள்ளைகள்” என அழைக்கப்படுவார்கள்’ என்று பெரிய போதகர் சொன்னார்.—மத்தேயு 5:9.

ஆனால் சிலசமயம் நமக்கு கோபம் வரும் விதத்தில் மற்றவர்கள் நடந்துகொள்கிறார்கள், இல்லையா?— ஆகவே பழிக்குப் பழி வாங்க நாம் நினைக்கலாம். ஒருமுறை இயேசுவின் சீஷர்களும் அப்படி நினைத்தார்கள். அப்போது அவர்கள் இயேசுவோடு எருசலேமுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். என்ன நடந்தது தெரியுமா?

சிறிது தூரம் பயணம் செய்த பிறகு இயேசு சில சீஷர்களை மட்டும் முன்னே போகும்படி அனுப்பி வைத்தார். ஓய்வெடுக்க இடம் தேடுவதற்காக ஒரு சமாரிய கிராமத்திற்கு அவர்களை அனுப்பினார். ஆனால் அங்கிருந்த சமாரியர்கள் இவர்களுக்கு இடம் தர விரும்பவில்லை. ஏனென்றால் சமாரியர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, கடவுளை வணங்க எருசலேமுக்குச் சென்றவர்களை அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சமாரியர்களை பழிக்குப் பழி வாங்க யாக்கோபும் யோவானும் என்ன செய்ய விரும்பினார்கள்?

உனக்கு அவர்கள் இடம் தந்திருக்காவிட்டால் நீ என்ன செய்திருப்பாய்? கோபப்பட்டிருப்பாயா? பழிக்குப் பழி வாங்க நினைத்திருப்பாயா?— சீஷர்களான யாக்கோபும் யோவானும் அப்படித்தான் நினைத்தார்கள். ஆகவே, ‘வானத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களை அழித்துப் போடும்படி நாங்கள் கட்டளையிடட்டுமா?’ என்று இயேசுவிடம் கேட்டார்கள். அதைக் கேட்ட இயேசு இந்த இருவரையும் இடிமுழக்க மக்கள் என்று அழைத்ததில் ஆச்சரியமே இல்லை! பிறகு, மற்றவர்களை பழிக்குப் பழி வாங்குவது சரியல்ல என்று இயேசு அவர்களிடம் சொன்னார்.—லூக்கா 9:51-56; மாற்கு 3:17.

சிலசமயம் மற்றவர்கள் நம்மை அன்போடு நடத்த மாட்டார்கள் என்பது உண்மைதான். ஒருவேளை மற்ற பிள்ளைகள் நம்மை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். ‘நீ வராதே, போ’ என்றுகூட விரட்டிவிடலாம். அப்படி ஏதாவது நடக்கும்போது நம் மனதிற்கு கஷ்டமாக இருக்கும்தானே? பழிக்குப் பழி வாங்க வேண்டும்போலவும் தோன்றும் இல்லையா? ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா?—

இப்போது உன் பைபிளை எடுக்கிறாயா? நீதிமொழிகள் 24-ஆம் அதிகாரம் 29-ஆம் வசனத்திற்கு திருப்பி என்ன சொல்லுகிறது பார்: “அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.”

இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்று நீ நினைக்கிறாய்?— நாம் பழிக்குப் பழி வாங்கக்கூடாது என்று அது சொல்கிறது. யாராவது நம்மை நோகடித்துவிட்டால் நாமும் பதிலுக்கு அவர்களை நோகடிக்கக் கூடாது. யாராவது உன்னை வேண்டுமென்றே சண்டைக்கு இழுத்தால் என்ன செய்வது? அசிங்கமாக திட்டி உன் கோபத்தைக் கிளற யாராவது முயலலாம். உன்னைப் பார்த்து கேலியாக சிரித்து, சரியான பயந்தாங்கொள்ளி என்று சொல்லலாம். ஒருவேளை உன்னை சுத்த கோழை என்றும் சொல்லலாம். அப்போது நீ என்ன செய்ய வேண்டும்? சண்டைக்குப் போக வேண்டுமா?—

பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். மத்தேயு 5-ஆம் அதிகாரம் 39-ஆம் வசனத்தை எடு. “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு” என்று இயேசு இங்கே சொல்கிறார். இயேசு எதை அர்த்தப்படுத்துகிறார் என்று நீ நினைக்கிறாய்? உன் கன்னத்தில் யாராவது அறைந்தால், இன்னொரு கன்னத்தையும் காட்டி அறை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றா அர்த்தப்படுத்தினார்?—

இல்லை, இயேசு அதை அர்த்தப்படுத்தவே இல்லை. அறைவது என்பது காயப்படுத்துவதற்காக அடிப்பதைக் குறிப்பதில்லை. அது தள்ளிவிடுவதைப் போன்றது. வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பதற்காக ஒருவர் நம்மை அறையலாம். நம்மை கோபப்படுத்துவதற்காக அப்படி செய்யலாம். நாமும் கோபப்பட்டு பதிலுக்கு அவரைத் தள்ளிவிட்டால் என்ன நடக்கும்?— சண்டை ஆரம்பிக்கும்.

ஆனால் தன் சீஷர்கள் சண்டை போடுவதை இயேசு விரும்பவில்லை. ஆகவேதான் யாராவது அறைந்தால் பதிலுக்கு நாமும் அவரை அறையக் கூடாது என்று சொன்னார். நாம் கோபப்பட்டு சண்டை போடக்கூடாது. அப்படிச் செய்தால், நமக்கும் சண்டை போட ஆரம்பித்தவருக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.

பிரச்சினை ஆரம்பித்தால் என்ன செய்வது சிறந்ததென்று நினைக்கிறாய்?— அங்கிருந்து போய்விடுவதே சிறந்தது. சண்டைக்கு இழுப்பவர்கள் இன்னும் சில முறை உன்னை தள்ளிவிடலாம். ஆனால் அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். அங்கிருந்து சென்றுவிடுவது நீ கோழை என்பதைக் காட்டாது. சரியானதைச் செய்யும் துணிச்சல்சாலி என்றே காட்டும்.

யாராவது நம்மை சண்டைக்கு இழுக்கப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் நீ சண்டை போட்டு ஜெயித்த பிறகு என்ன ஆகலாம் தெரியுமா?— உன்னிடம் அடிவாங்கியவன் இன்னும் சில நண்பர்களோடு மறுபடியும் வரலாம். பெரிய கம்பால் அடித்து அல்லது கத்தியால் குத்திகூட அவர்கள் உன்னை காயப்படுத்தலாம். ஆகவே, சண்டை போடக்கூடாது என்று இயேசு சொன்னதன் காரணம் இப்போது உனக்குப் புரிகிறதா?—

மற்றவர்கள் சண்டை போட்டுக்கொள்வதை நாம் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? யாருடைய பக்கமாவது சேர வேண்டுமா?— சரியானது எது என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. நீதிமொழிகள் 26-ஆம் அதிகாரம், 17-ஆம் வசனத்தை படிக்கலாம். “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் [அதாவது, மற்றவர்களுடைய சண்டையில்] தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்” என்று அது சொல்கிறது.

மற்றவர்களுடைய சண்டையில் தலையிடுவது எப்படி நாயின் காதுகளைப் பிடித்திழுப்பதற்கு சமம்? அப்படி தலையிட்டால் உனக்கும் அடி விழலாம், ஆகவே அதைச் செய்யாதே!

நாயின் காதை நீ இழுத்துப் பிடித்தால் என்ன ஆகும்? அந்த நாய்க்கு வலிக்கும், உடனே கடிக்க வரும் இல்லையா? பிடியிலிருந்து விடுபடுவதற்கு அது முயற்சி செய்யும். அப்போது இன்னும் இறுக்கமாக அதன் காதுகளைப் பிடிக்க வேண்டியிருக்கும். அதனால் அதற்கு இன்னும் கோபம் பொத்துக்கொண்டு வரும். கையை விட்டுவிட்டாலோ நறுக்கென்று கடித்துவிடும். ஆனால் அதற்காக காலமெல்லாம் அங்கேயே நின்று அதன் காதுகளைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமா?—

மற்றவர்கள் போடும் சண்டையில் வீணாக தலையிட்டால் நாம் அப்படிப்பட்ட பிரச்சினையில்தான் சிக்கிக்கொள்வோம். யார் சண்டையை ஆரம்பித்தது என்றோ எதற்காக சண்டை போடுகிறார்கள் என்றோ நமக்குத் தெரியாது. ஒருவேளை ஒருவன் திருடியதால் அடி வாங்கிக் கொண்டு இருக்கலாம், அது தெரியாமல் நாம் அவனுக்கு உதவி செய்ய சென்றால், ஒரு திருடனுக்கு உடந்தையாகி விடுவோம். அது சரியாக இருக்காது அல்லவா?

ஆகவே நீ ஒரு சண்டை நடப்பதைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?— உன் ஸ்கூலில் சண்டை நடப்பதைப் பார்த்தால் நீ ஓடிப்போய் டீச்சரிடம் சொல்லலாம். வெளியே எங்காவது நடந்தால் அம்மா அப்பாவை அல்லது போலீஸை கூப்பிடலாம். ஆமாம், மற்றவர்கள் சண்டைபோட விரும்பினாலும் நாம் சமாதானமாக இருக்க வேண்டும்.

ஒரு சண்டை நடப்பதைப் பார்த்தால் நீ என்ன செய்ய வேண்டும்?

இயேசுவின் உண்மையான சீஷர்களாகிய நாம், சண்டை போடுவதை எப்போதும் தவிர்க்கிறோம். இப்படியாக, சரியானதை செய்யும் மன உறுதி உள்ளவர்கள் என்பதைக் காட்டுகிறோம். இயேசுவின் சீஷர்கள் ‘சண்டைபோடக் கூடாது, ஆனால் எல்லாரிடமும் சாந்தமாக இருக்க வேண்டும்’ என பைபிள் சொல்கிறது.—2 தீமோத்தேயு 2:24.

இப்போது இன்னும் சில வசனங்களைப் பார்க்கலாம்; சண்டைகளைத் தவிர்க்க நமக்கு உதவும் நல்ல ஆலோசனைகள் அவற்றில் இருக்கின்றன: ரோமர் 12:17-21; 1 பேதுரு 3:10, 11.