Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 33

இயேசு நம்மை பாதுகாப்பார்

இயேசு நம்மை பாதுகாப்பார்

நீ இயேசுவை எப்படி கருதுகிறாய்—வல்லமையுள்ள ராஜாவாகவா, ஒன்றும் செய்ய முடியாத குழந்தையாகவா?

இயேசு பெரியவராக வளர்ந்த பிறகு, சிறு வயதில் தான் பாதுகாக்கப்பட்டதைப் பற்றி அறிந்தவுடன் யெகோவாவிடம் ஜெபம் செய்து நன்றி சொல்லியிருப்பார் என்று நினைக்கிறாயா?— யோசேப்பும் மரியாளும் தன்னை எகிப்திற்கு கூட்டிக்கொண்டு போய் தன் உயிரைக் காப்பாற்றியதைப் பற்றி தெரிந்ததும் அவர்களிடம் என்ன சொல்லியிருப்பார்?—

இயேசு இப்போது குழந்தையாக இல்லை என்பது உண்மைதான். அவர் இப்போது பூமியில் வாழ்ந்துகொண்டும் இல்லை. ஆனால் சிலர் இயேசுவை தீவனத்தொட்டியில் உள்ள ஒரு குழந்தையாகவே இன்னும் நினைக்கிறார்கள் தெரியுமா?— முக்கியமாக கிறிஸ்மஸ் காலத்தின்போது குழந்தை இயேசுவின் படங்களைத்தான் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.

இயேசு இப்போது பூமியில் இல்லை என்றாலும் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்புகிறாயா?— அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார், இப்போது பரலோகத்தில் வல்லமையுள்ள ராஜாவாக இருக்கிறார். அவர் சொன்ன வேலையை செய்பவர்களைப் பாதுகாக்க அவரால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்?— இயேசு பூமியில் இருந்தபோது, தன் மீது அன்பு வைப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும் என்பதைக் காண்பித்தார். ஒருமுறை அவர் தன் சீஷர்களோடு படகில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

அது சாயங்கால வேளை. அன்றைய நாள் முழுவதும் இயேசு கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் மக்களுக்கு கற்பித்து வந்தார். 20 கிலோமீட்டர் நீளமும் 12 கிலோமீட்டர் அகலமும் கொண்ட பெரிய ஏரி அது. பிறகு, “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் கூறினார். ஆகவே அவர்கள் ஒரு படகில் ஏறிச் சென்றார்கள். இயேசு மிகவும் களைப்பாக இருந்ததால் படகின் பின்புறத்திற்குச் சென்று ஒரு தலையணை வைத்து படுத்தார். கொஞ்ச நேரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.

காற்றிடமும் அலைகளிடமும் இயேசு என்ன சொல்கிறார்?

படகை சரியாக ஓட்டிச் செல்வதற்காக சீஷர்கள் தூங்காமல் விழித்திருந்தார்கள். கொஞ்ச நேரம் அமைதலாக இருந்தது, பிறகு திடீரென பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. அது மேலும் மேலும் வேகமாக சுழன்று வீசியது, இதனால் கடலின் கொந்தளிப்பும் அதிகமாகிக் கொண்டே போனது. அலைகள் படகின்மேல் மோதியதால் படகுக்குள் தண்ணீர் வர ஆரம்பித்தது.

படகு மூழ்கிவிடுமோ என்று சீஷர்கள் பயந்தார்கள். ஆனால் இயேசு பயப்படவே இல்லை. அவர் அப்போதும் படகின் பின்புறத்தில் தூங்கிக்கொண்டு இருந்தார். கடைசியாக சீஷர்கள் அவரை எழுப்பி, ‘போதகரே, போதகரே, எங்களைக் காப்பாற்றுங்கள்; இந்தப் புயலில் சாகப் போகிறோம்’ என்றார்கள். உடனடியாக இயேசு எழுந்திருந்து காற்றிடமும் அலைகளிடமும் பேசினார். ‘உஷ்! அமைதியாக இருங்கள்!’ என்றார்.

உடனடியாக புயல் காற்று நின்றது. ஏரியும் அமைதியானது. சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியம். இதைப் போன்ற ஒன்றை அவர்கள் பார்த்ததே இல்லை. ‘இவர் உண்மையிலேயே யார், காற்றையும் அலைகளையும்கூட அதட்டுகிறாரே, அவையும் கீழ்ப்படிகின்றனவே?’ என்று ஒருவருக்கொருவர் கேட்க ஆரம்பித்தார்கள்.—லூக்கா 8:22-25; மாற்கு 4:35-41.

இயேசு யார் என்று உனக்குத் தெரியுமா?— அவருக்கு எப்படி இவ்வளவு வல்லமை கிடைத்தது என்று தெரியுமா?— சீஷர்கள் அப்போது பயப்பட்டிருக்க வேண்டியதே இல்லை, ஏனென்றால் இயேசு அவர்களோடு இருந்தார். அவர் சாதாரண மனிதரே அல்ல. வேறு எந்த மனிதனாலும் செய்ய முடியாத அற்புதங்களை அவர் செய்தார். இன்னொரு முறை கடலில் புயல் காற்று அடித்தபோது அவர் என்ன செய்தார் என்று சொல்கிறேன்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இது நடந்தது. சாயங்காலமான போது, படகில் ஏறி மறு கரைக்கு போகும்படி இயேசு சீஷர்களிடம் சொன்னார். பிறகு இயேசு தனியாக ஒரு மலைமேல் ஏறினார். அது அமைதலான இடமாக இருந்ததால், தன் தந்தை யெகோவா தேவனிடம் ஜெபம் செய்வதற்காக அங்கே சென்றார்.

சீஷர்கள் படகில் ஏறி மறு கரைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்குள் காற்று அடிக்க ஆரம்பித்தது. நேரம் போகப்போக அது இன்னும் பலமாக வீசியது. அப்போது ராத்திரி ஆகிவிட்டது. சீஷர்கள், படகில் கட்டியிருந்த பாயை அவிழ்த்துவிட்டு துடுப்பில் படகை செலுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களால் வெகு தூரம் போக முடியவில்லை. ஏனென்றால் எதிர்க்காற்று பலமாக வீசியது. பெரிய பெரிய அலைகள் வந்ததால் படகு தள்ளாடியது. தண்ணீர் படகுக்குள் புகுந்தது. கரை சேர அவர்கள் கடுமையாக முயற்சி செய்தும் பலன் இல்லை.

இயேசு இன்னமும் மலையில் தனியாக இருந்தார். வெகு நேரம் அங்கு இருந்தார். ஆனால் உயர்ந்து எழுந்த அலைகளின் நடுவே சீஷர்கள் சிக்கிக்கொண்டதை கவனித்தவுடன் மலையிலிருந்து கடற்கரைக்கு இறங்கி வந்தார். சீஷர்களுக்கு உதவுவதற்காக அவர்களை நோக்கி அந்தக் கொந்தளிக்கும் கடல்மீது இயேசு நடக்க ஆரம்பித்தார்!

நீ தண்ணீர் மீது நடக்க முயற்சி செய்தால் என்னவாகும்?— நீ தண்ணீருக்குள் மூழ்கிவிடுவாய். ஆனால் இயேசு வித்தியாசமானவர். அவருக்கு விசேஷ சக்தி இருந்தது. அவர் வெகு தூரம் தண்ணீர்மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர் படகை அடைவதற்குள் கிட்டத்தட்ட விடிந்தேவிட்டது. இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதை சீஷர்கள் பார்த்தபோது அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. மிகவும் பயந்துபோய் அலறினார்கள். அப்போது இயேசு, ‘தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்’ என்று சொன்னார்.

இயேசு ஏன் அற்புதங்களைச் செய்தார்?

இயேசு படகில் ஏறியவுடனேயே புயல் நின்றது. மறுபடியும் சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவர்கள் இயேசுவைப் பணிந்துகொண்டு, ‘நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்’ என்றார்கள்.—மத்தேயு 14:22-33; யோவான் 6:16-21.

நாம் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்து, இயேசு அப்படிப்பட்ட அற்புதங்கள் செய்ததை கண்ணாரக் கண்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும் அல்லவா?— இயேசு ஏன் அந்த அற்புதங்களைச் செய்தார் தெரியுமா?— தன் சீஷர்களை நேசித்ததாலும் அவர்களுக்கு உதவ விரும்பியதாலும் அவற்றை செய்தார். அதேசமயத்தில் தனக்கு மிகுந்த சக்தி இருப்பதைக் காட்டுவதற்காகவும் எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அப்படிப்பட்ட மிகுந்த சக்தியை உபயோகிப்பார் என்பதைக் காட்டுவதற்காகவும் அந்த அற்புதங்களைச் செய்தார்.

இன்று இயேசு எவ்வாறு தன் சீஷர்களை பாதுகாக்கிறார்?

இன்றுகூட இயேசு தன் சீஷர்களைப் பாதுகாப்பதற்காக தன் சக்தியைப் பயன்படுத்துகிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் மற்றவர்களிடம் சொல்வதைத் தடுக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறார். ஆனால் தன் சீஷர்களை வியாதிகளிலிருந்து காப்பதற்கோ, வந்த வியாதிகளை குணப்படுத்துவதற்கோ அவர் தன் சக்தியைப் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் அப்போஸ்தலர்கள்கூட கடைசியில் இறந்துதான் போனார்கள். உதாரணமாக யோவானின் சகோதரர் யாக்கோபு கொலை செய்யப்பட்டார். யோவானும் சிறையில் போடப்பட்டார்.—அப்போஸ்தலர் 12:2; வெளிப்படுத்துதல் 1:9.

இன்றும் அதே நிலைமைதான். மக்கள் யெகோவாவை சேவித்தாலும் சரி சேவிக்காவிட்டாலும் சரி எல்லாருமே வியாதிப்பட்டு இறக்கிறார்கள். ஆனால் சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்யும்போது நிலைமைகள் மாறிவிடும். அப்போது யாரும் எதற்காகவும் பயப்பட வேண்டியிருக்காது. ஏனென்றால் தனக்குக் கீழ்ப்படிபவர்களின் நன்மைக்காக இயேசு தன் சக்தியை பயன்படுத்துவார்.—ஏசாயா 9:6, 7.

கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்ட இயேசுவுக்கு இருக்கும் மிகுந்த வல்லமையைப் பற்றி இன்னும் சில வசனங்கள் சொல்கின்றன. அவற்றை இப்போது படிக்கலாமா? தானியேல் 7:13, 14; மத்தேயு 28:18; எபேசியர் 1:20-23.