Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 7

சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு

சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு

உன் இஷ்டப்படி நடக்க உனக்கு ஆசையா? இப்படிச் செய்ய வேண்டும் அல்லது அப்படிச் செய்ய வேண்டும் என்று யாருமே சொல்லாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறாயா? மறைக்காமல் உண்மையை சொல் பார்க்கலாம்.—

நீ ஏன் பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்?

ஆனால் எது உனக்கு நல்லது? உன் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வது உண்மையிலேயே புத்திசாலித்தனமா? அல்லது உன் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடப்பது நல்லதா?— நீ உன் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று கடவுள் சொல்கிறார். ஆகவே அதுதான் உனக்கு நல்லதாக இருக்கும். எப்படி என்று பார்க்கலாம்.

உன் வயசு என்ன?— உன் அப்பாவின் வயசு தெரியுமா?— உன் அம்மாவுடைய வயசு? தாத்தா பாட்டியோட வயசு?— உன்னை விட அவர்கள் நிறைய வருஷங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் நிறைய நாள் வாழும்போது, கற்றுக்கொள்வதற்கு நிறைய காலம் கிடைக்கிறது. அவர் ஒவ்வொரு வருஷமும் நிறைய காரியங்களைக் கேட்கிறார், பார்க்கிறார், செய்கிறார். ஆகவே சிறியவர்கள் பெரியவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

உன்னைவிட சின்ன பிள்ளையை உனக்குத் தெரியுமா?— அவனைவிட அல்லது அவளைவிட உனக்கு நிறைய தெரியுமா?— ஏன் உனக்கு நிறைய தெரியும்?— ஏனென்றால் நீ அந்தப் பிள்ளையைவிட நிறைய நாள் வாழ்ந்திருக்கிறாய். அதனால், கற்றுக்கொள்வதற்கு உனக்கு அதிக காலம் கிடைத்திருக்கிறது.

உன்னையும், என்னையும், மற்ற யாரையும்விட நிறைய காலம் வாழ்ந்திருப்பது யார் தெரியுமா?— யெகோவா தேவன்தான். உன்னைவிடவும் என்னைவிடவும் அவருக்கு நிறைய தெரியும். ஆகவே எதையாவது செய்யும்படி அவர் நமக்கு சொன்னால், அதுதான் சரியாக இருக்கும். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதை செய்வதுதான் சரியானது. கீழ்ப்படிவது பெரிய போதகருக்குக்கூட ஒருமுறை கஷ்டமாக இருந்தது, இது உனக்குத் தெரியுமா?—

ரொம்ப கஷ்டமான ஒன்றை செய்யும்படி கடவுள் இயேசுவிடம் ஒரு சமயம் சொன்னார். இயேசு அதைப் பற்றி ஜெபம் செய்தார். அதைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். ‘உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இந்தக் கஷ்டமான காரியத்தை என்னைவிட்டு நீக்கிவிடுங்கள்’ என்று அவர் ஜெபம் செய்தார். இதன் மூலம், கடவுள் விரும்பும்படி நடப்பது எப்போதுமே சுலபம் இல்லை என்று இயேசு காட்டினார். ஆனால் இயேசு என்ன சொல்லி ஜெபத்தை முடித்தார் தெரியுமா?—

இயேசு செய்த ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘என்னுடைய விருப்பம் அல்ல, உங்களுடைய விருப்பமே நடக்கட்டும்’ என்று சொல்லி முடித்தார். (லூக்கா 22:41, 42) ஆமாம், தன்னுடைய விருப்பம் அல்ல, ஆனால் கடவுளுடைய விருப்பமே நடக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். ஆகவே தனக்கு சரி என்று பட்டதை அவர் செய்யவில்லை. மாறாக, கடவுள் விரும்பியதையே செய்தார்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— கடவுள் சொல்வதைச் செய்வதுதான் எப்போதுமே சரி என்று கற்றுக்கொள்கிறோம். சுலபமாக இல்லாவிட்டாலும் அதுவே சரியானது என்று தெரிந்து கொள்கிறோம். இன்னொரு விஷயத்தைக்கூட நாம் கற்றுக்கொள்கிறோம். அது என்ன என்று உனக்குத் தெரியுமா?— கடவுளும் இயேசுவும் ஒன்று அல்ல என்று தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்று என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. யெகோவா தேவன் பெரியவர். இயேசுவைவிட அவருக்கு நிறைய தெரியும்.

நாம் கடவுள் சொல்வதைக் கேட்டு நடக்கும்போது, அவர் மீது அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம். ‘கடவுள் சொல்கிறபடி செய்வதே அவர்மேல் அன்பு காட்டுவதன் அர்த்தமாகும்’ என்று பைபிள் கூறுகிறது. (1 யோவான் 5:3) ஆகவே நாம் எல்லாருமே கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சரியா? நீயும் அவருக்குக் கீழ்ப்படியத்தானே விரும்புகிறாய்?—

நாம் இப்போது பைபிளைத் திறந்து, பிள்ளைகளிடம் கடவுள் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா? எபேசியர் 6-ஆம் அதிகாரம், 1, 2, 3 வசனங்களை இப்போது படிக்கலாம். அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, பார்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”

பார்த்தாயா, அப்பா அம்மாவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா தேவனே உனக்குச் சொல்கிறார். அவர்களை ‘கனம் பண்ண’ வேண்டும் என்றால் என்ன? அவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று அர்த்தம். நீ அப்பா அம்மா சொல்வதைக் கேட்டால் ‘நன்மை உண்டாகும்’ என்று கடவுள் உறுதி அளிக்கிறார்.

இப்போது நான் உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். அது நிஜமாகவே நடந்த கதை. ரொம்ப காலத்திற்கு முன்பு நடந்தது. கீழ்ப்படிந்ததால் எப்படி சிலருடைய உயிர் காப்பாற்றப்பட்டது என்று அந்தக் கதையில் பார்ப்போம். எருசலேம் என்பது ஒரு பெரிய ஊர். அங்கே இருந்தவர்களில் நிறைய பேர் கடவுள் சொன்னதைக் கேட்கவில்லை. அதனால் அந்த ஊரை கடவுள் அழிக்கப்போகிறார் என்று இயேசு எச்சரித்தார். அதேசமயம் சரியானதை செய்ய விரும்பினால் அந்த அழிவில் எப்படி தப்பிக்கலாம் என்றும் அவர் சொன்னார். ‘எருசலேமைச் சுற்றி போர் வீரர்கள் நிற்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது, சீக்கிரத்தில் அழிவு வரும் என்று தெரிந்துகொள்ளுங்கள். உடனடியாக எருசலேமை விட்டு போய்விடுங்கள். மலைகளுக்கு ஓடிப்போங்கள்’ என்றார்.—லூக்கா 21:20-22.

இயேசுவின் பேச்சைக் கேட்டதால் இந்த ஜனங்கள் எப்படி தப்பித்தார்கள்?

இயேசு சொன்ன மாதிரியே, எருசலேமை தாக்குவதற்கு போர் வீரர்கள் வந்தார்கள். ரோம நாட்டின் வீரர்கள் எருசலேமை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அதன் பிறகு ஏதோவொரு காரணத்திற்காக திடீரென்று அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். இனிமேலும் ஆபத்து இல்லை என்று எருசலேமிலிருந்த நிறைய பேர் நினைத்தார்கள். ஆகவே அங்கேயே இருந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொல்லியிருந்தார்?— நீ அப்போது எருசலேமில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?— இயேசு சொன்னதை உண்மையிலேயே நம்பியவர்கள், வீடுவாசலை எல்லாம் விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்திலிருந்த மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

ஒரு வருஷம் ஆனது. எருசலேமுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. இரண்டு வருஷம் ஆனது, எதுவும் நடக்கவில்லை. மூன்று வருஷமும் ஆனது, அப்போதும் ஒன்றுமே நடக்கவில்லை. அந்த ஊரிலிருந்து ஓடிப்போனவர்கள் சரியான முட்டாள்கள் என்று சிலர் நினைத்திருப்பார்கள். ஆனால் நான்காம் வருஷத்தில் ரோம வீரர்கள் திரும்பவும் வந்தார்கள். இந்த முறை மறுபடியும் எருசலேமை சூழ்ந்துகொண்டார்கள். இப்போது தப்பிப்பதற்கு வழியே இல்லை. அந்த வீரர்கள் எருசலேமை அழித்தார்கள். அங்கே இருந்த முக்கால்வாசி பேர் செத்துப் போனார்கள், மீதி பேர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆனால், இயேசு சொன்னதைக் கேட்டு நடந்தவர்களுக்கு என்ன ஆனது?— அவர்கள் பத்திரமாக இருந்தார்கள். எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு தீங்கும் வரவில்லை. அவர்கள் கீழ்ப்படிந்ததால் பாதுகாக்கப்பட்டார்கள்.

நீயும் கீழ்ப்படிதலைக் காட்டினால் பாதுகாப்பு பெறுவாய் என்று நினைக்கிறாயா?— தெருவில் போய் விளையாடக்கூடாது என்று உன் அப்பா அம்மா சொல்லலாம். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறாய்?— உன் மீது கார் மோதிவிடலாம் என்பதால்தான் சொல்கிறார்கள். ஆனால், ‘இப்போது ரோட்டில் கார் எதுவும் ஓடவில்லை. அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது. மற்ற பிள்ளைகள்கூட தெருவில் விளையாடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றுமே ஆனதில்லையே’ என்று நீ எப்போதாவது நினைக்கலாம்.

ஆபத்து இருப்பதாகவே உனக்குத் தெரியாவிட்டால்கூட நீ ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

எருசலேமில் இருந்த முக்கால்வாசி பேர் அப்படித்தான் நினைத்தார்கள். ரோம வீரர்கள் முதலில் திரும்பிப் போனபோது, இனிமேல் ஆபத்தே இல்லை என்று நினைத்தார்கள். மற்ற ஜனங்கள் அங்கு இருப்பதைப் பார்த்து அவர்களும் அங்கேயே இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் இறந்துபோனார்கள்.

இப்போது இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். நீ தீக்குச்சியை வைத்து விளையாடியிருக்கிறாயா?— தீக்குச்சியை உரசும்போது தீ வரும். அதைப் பார்க்க ஜாலியாக இருக்கும். ஆனால் அது ரொம்ப ஆபத்தானது, தெரியுமா? அதனால் வீடே எரிந்துவிடலாம். நீயும் செத்துப்போய்விடலாம்!

சிலசமயங்களில் மட்டும் கீழ்ப்படிவது போதாது. இதை நீ ஞாபகம் வைக்க வேண்டும். எப்போதுமே கீழ்ப்படிந்தால்தான் உனக்கு உண்மையிலேயே பாதுகாப்பு கிடைக்கும். ‘பிள்ளைகளே, உங்கள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்டு நடங்கள்’ என்று யார் சொல்கிறார்?— கடவுள்தான் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? உன்மேல் அன்பு இருப்பதால்தான் சொல்கிறார். இதை நீ மறக்கக்கூடாது, சரியா?

கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்று காட்டும் சில வசனங்களை இப்போது படிக்கலாம்: நீதிமொழிகள் 23:22; பிரசங்கி 12:13; ஏசாயா 48:17, 18; கொலோசெயர் 3:20.