Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 18

மறக்காமல் நன்றி சொல்கிறாயா?

மறக்காமல் நன்றி சொல்கிறாயா?

இன்றைக்கு நீ சாப்பிட்டாயா?— யார் உனக்கு சமைத்துக் கொடுத்தது?— ஒருவேளை உன் அம்மா அல்லது வேறு யாராவது சமைத்திருக்கலாம். ஆனால் அதற்காக நாம் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?— ஏனென்றால் அவர் மரம் செடி கொடிகளை வளரச் செய்வதால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. இருந்தாலும் சமைத்துக் கொடுப்பவருக்கு அல்லது பரிமாறுபவருக்குக்கூட நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சிலசமயங்களில் மற்றவர்கள் அன்போடு நமக்கு உதவிகள் செய்யும்போது நாம் நன்றி சொல்ல மறந்துவிடுகிறோம் அல்லவா? பெரிய போதகர் பூமியில் இருந்தபோது சில குஷ்டரோகிகள் நன்றி சொல்ல மறந்துபோனார்கள்.

குஷ்டரோகி என்றால் யார் தெரியுமா?— குஷ்டரோகம் என்கிற வியாதி உடையவரே குஷ்டரோகி. அந்த வியாதியால் உடம்பில் சில இடங்களில் சதைகள் அழுகி உருக்குலைந்து போகலாம். இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் குஷ்டரோகிகள் மற்ற மக்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியிருந்தது. யாராவது வருவதைப் பார்த்தால் கிட்டே வர வேண்டாமென்று குஷ்டரோகி சப்தமிட வேண்டியிருந்தது. மிகவும் அருகில் வந்தால் வியாதி தொற்றிக்கொள்ளும் என்பதற்காக இப்படி எச்சரிப்பு கொடுக்க வேண்டியிருந்தது.

இயேசு குஷ்டரோகிகளை மிகவும் அன்பாக நடத்தினார். ஒருநாள் எருசலேமுக்கு போகும் வழியில் இயேசு ஒரு சிறிய ஊரை கடந்து போக வேண்டியிருந்தது. அந்த ஊருக்குப் பக்கத்தில் வந்தபோது பத்து குஷ்டரோகிகள் அவரை பார்க்க வந்தனர். எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தியை இயேசுவுக்கு கடவுள் தந்திருந்ததை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.

அந்தக் குஷ்டரோகிகள் இயேசுவின் பக்கத்தில் வரவில்லை. தூரத்திலேயே நின்றார்கள். ஆனால் தங்களைக் குணப்படுத்த அவரால் முடியும் என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் பெரிய போதகரைப் பார்த்து, ‘இயேசுவே, போதகரே, எங்களுக்கு உதவும்!’ என்று சப்தமாக கேட்டார்கள்.

வியாதியாக இருப்பவர்கள்மேல் நீ பரிதாபப்படுகிறாயா?— இயேசு பரிதாபப்பட்டார். குஷ்டரோகியாக இருப்பது எவ்வளவு வேதனையானது என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே ‘நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காட்டுங்கள்’ என்று கூறினார்.—லூக்கா 17:11-14.

என்ன செய்யும்படி இந்தக் குஷ்டரோகிகளிடம் இயேசு சொல்கிறார்?

இயேசு ஏன் அப்படி கூறினார்? குஷ்டரோகிகள் சம்பந்தமாக யெகோவா தன் மக்களுக்கு கொடுத்திருந்த சட்டத்தின் காரணமாகவே அவர் அப்படி சொன்னார். ஆலயத்திலிருந்த ஆசாரியர் குஷ்டரோகியின் உடலை பார்க்க வேண்டும் என்று அந்தச் சட்டம் சொன்னது. குஷ்டரோகி முழுவதும் குணமடைந்துவிட்டால் அதை ஆசாரியர் அறிவிப்பார். குணமடைந்த பிறகு அவர் மற்றவர்களோடு சேர்ந்து வாழலாம்.—லேவியராகமம் 13:16, 17.

இந்தக் குஷ்டரோகிகளுக்கோ இன்னும் வியாதி இருந்தது. ஆகவே இயேசு சொன்னபடி அவர்கள் ஆசாரியரை பார்க்க சென்றார்களா?— ஆமாம், உடனடியாக சென்றார்கள். இயேசு அவர்களது வியாதியை குணப்படுத்துவார் என்று அவர்கள் நம்பியிருப்பார்கள். பிறகு என்ன நடந்தது?

அவர்கள் ஆசாரியரைப் பார்க்க போகும் வழியிலேயே குஷ்டரோகம் மறைந்தது. அவர்களது உடல் ஆரோக்கியம் பெற்றது. ஆம், அவர்கள் குணமடைந்தார்கள்! இயேசுவின் சக்தியில் நம்பிக்கை வைத்ததால் பலன் பெற்றார்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பார். ஆனால் அதற்கு நன்றியாக அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீ என்ன செய்திருப்பாய்?—

இந்தக் குஷ்டரோகி எதை மறக்காமல் செய்தார்?

குணமடைந்தவர்களில் ஒருவன் இயேசுவிடம் திரும்பி வந்தான். யெகோவாவைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லி புகழ்ந்தான். அவன் அப்படி செய்தது சரியான காரியம். ஏனென்றால் குணப்படுத்தும் சக்தியை இயேசு கடவுளிடமிருந்தே பெற்றிருந்தார். அதோடு, அந்த மனிதன் பெரிய போதகருக்கு முன்பாக மண்டியிட்டு அவருக்கும் நன்றி சொன்னான். இயேசு செய்த உதவிக்காக அந்தளவு நன்றியுள்ளவனாக இருந்தான்.

மற்ற ஒன்பது பேர் என்ன செய்தார்கள்? ‘பத்து குஷ்டரோகிகள் குணமடைந்தார்களே, மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளை போற்றிப் புகழ நீ மட்டும்தான் திரும்பி வந்திருக்கிறாயா?’ என்று இயேசு கேட்டார்.

ஆமாம், திரும்பி வந்தது ஒருவன் மட்டும்தான். பத்துப் பேரில் ஒருவன் மட்டுமே கடவுளை போற்றிப் புகழ்ந்து இயேசுவுக்கும் நன்றி சொல்ல திரும்பி வந்தான். இவன் ஒரு சமாரியன். வேறு நாட்டைச் சேர்ந்தவன். மற்ற ஒன்பது பேர் கடவுளுக்கும் நன்றி சொல்லவில்லை இயேசுவுக்கும் நன்றி சொல்லவில்லை.—லூக்கா 17:15-19.

நீ அவர்களில் யாரைப் போல் இருக்கிறாய்? நாம் அந்த சமாரியனைப் போலத்தானே இருக்க விரும்புகிறோம்?— ஆகவே யாராவது நமக்கு உதவி செய்தால் மறக்காமல் என்ன செய்ய வேண்டும்?— அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மக்கள் நன்றி சொல்ல அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். ஆனால் நன்றி சொல்வதுதான் நல்லது. நாம் அப்படி செய்யும்போது யெகோவா தேவனும் அவரது மகன் இயேசுவும் சந்தோஷப்படுவார்கள்.

இயேசுவிடம் திரும்பிச் சென்ற குஷ்டரோகியைப் போல் நீ எப்படி நடந்துகொள்ளலாம்?

நீ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மற்றவர்கள் உனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதை உணருவாய். உதாரணத்திற்கு, உனக்கு எப்போதாவது உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறதா?— அந்தப் பத்து குஷ்டரோகிகள் போல் நீ ஒருபோதும் வியாதிப்பட்டிருக்க மாட்டாய். ஆனால் எப்போதாவது பயங்கர சளி பிடித்திருக்கும் அல்லது வயிற்று வலி வந்திருக்கும். அப்போது, யாராவது உன்னை கவனித்துக் கொண்டார்களா?— அவர்கள் உனக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து நன்றாக கவனித்திருப்பார்கள். இப்படி நீ குணமாக அவர்கள் உதவி செய்ததற்காக சந்தோஷப்பட்டாய் அல்லவா?—

குணப்படுத்தியதற்காக சமாரியன் இயேசுவுக்கு நன்றி சொன்னான். இது இயேசுவை சந்தோஷப்படுத்தியது. உன் அப்பா அம்மா உனக்காக வேலைகள் செய்யும்போது நீ நன்றி சொன்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறாயா?— ஆமாம், கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள்.

ஏன் மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்?

சிலர் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் உனக்கு உதவிகள் செய்கிறார்கள். அது அவர்களது கடமையாக இருக்கலாம். அவர்கள் அதை சந்தோஷமாகவும் செய்யலாம். ஆனால் அந்த உதவிகளுக்காக நன்றி சொல்ல ஒருவேளை நீ மறந்துவிடலாம். உதாரணத்திற்கு உன் ஸ்கூல் டீச்சர் கஷ்டப்பட்டு பாடங்களை சொல்லித் தரலாம். அது அவருடைய வேலையாக இருந்தாலும், கற்றுக்கொள்ள உதவி செய்வதற்காக நீ அவருக்கு நன்றி சொன்னால் அவர் சந்தோஷப்படுவார்.

சிலசமயங்களில் மற்றவர்கள் உனக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்கிறார்கள். உதாரணமாக, யாராவது உனக்காக கதவை திறந்துவிடுகிறார்களா? அல்லது சாப்பிடும்போது எதையாவது எடுத்துக் கொடுக்கிறார்களா? இந்த சின்னச் சின்ன உதவிகளுக்காகவும் நன்றி சொல்வது நல்லது.

பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு நாம் மறக்காமல் நன்றி சொன்னால், பரலோகத்தில் இருக்கும் கடவுளுக்கும் மறக்காமல் நன்றி சொல்வோம். யெகோவாவுக்கு நன்றி சொல்ல எத்தனையோ காரணங்கள் உண்டு! அவர் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சந்தோஷமாக வாழ்வதற்கு வேண்டிய எல்லா நல்ல காரியங்களையும் கொடுத்திருக்கிறார். ஆகவே அவரை புகழ்வது ஏற்ற காரியம். மற்றவர்களிடம் அவரைப் பற்றி நல்ல விதமாக தினமும் பேசுவதன் மூலம் நாம் அவரை புகழலாம்.

நன்றி சொல்வது சம்பந்தமாக சில வசனங்களை இப்போது வாசிக்கலாமா? சங்கீதம் 92:1, 3; எபேசியர் 5:20; கொலோசெயர் 3:17; 1 தெசலோனிக்கேயர் 5:18.