Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 3

எல்லாவற்றையும் உண்டாக்கியவர்

எல்லாவற்றையும் உண்டாக்கியவர்

உயிருள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியது யார்?

எனக்கு அருமையான ஒரு விஷயம் தெரியும். அதைத் தெரிந்துகொள்ள உனக்கு ஆசையா?— சரி, உன் கையைப் பார். உன் விரல்களை மடக்கு. இப்போது எதையாவது கையில் எடு. உன் கை என்னவெல்லாம் செய்கிறது பார், அதுவும் எவ்வளவு நன்றாக செய்கிறது பார்த்தாயா? நம் கைகளை யார் உண்டாக்கினார் என்று உனக்கு தெரியுமா?—

நம்முடைய வாயையும், மூக்கையும், கண்களையும் உண்டாக்கியவர்தான் நம் கைகளையும் உண்டாக்கினார். அவர்தான் கடவுள், அதாவது பெரிய போதகருடைய அப்பா. கடவுள் நமக்கு கண்களைக் கொடுத்திருப்பதற்காக சந்தோஷப்படுகிறோம் இல்லையா?— கண்கள் இருப்பதால்தான் நம்மால் எத்தனையோ காரியங்களைப் பார்க்க முடிகிறது. நாம் பூக்களைப் பார்க்கிறோம். பச்சைப் புல்லையும் நீல வானத்தையும் பார்த்து ரசிக்கிறோம். சின்னச் சின்ன பறவைகள் சாப்பிடுவதைக்கூட காண்கிறோம். அதுதான் இந்தப் படத்தில் தெரிகிறது. இந்த மாதிரியெல்லாம் பார்த்து ரசிப்பது, ஆஹா, எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா?—

ஆனால் இதையெல்லாம் உண்டாக்கியது யார்? எந்த மனிதனாவது உண்டாக்கினானா? இல்லை. மனிதனால் ஒரு வீட்டைக் கட்ட முடியும். ஆனால் புல்லை உண்டாக்க முடியாது. அதேபோல் பறவைக் குஞ்சை, பூவை, அல்லது உயிருள்ள வேறு எதையும் மனிதனால் உண்டாக்கவே முடியாது. இது உனக்கு தெரியும்தானே?—

இந்த எல்லாவற்றையும் உண்டாக்கியது கடவுள்தான். அவர் வானங்களையும் பூமியையும் உருவாக்கினார். மனிதர்களைக்கூட உண்டாக்கினார். அவர் முதல் மனிதனையும் முதல் மனுஷியையும் படைத்தார் என்று இயேசுவும் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 19:4-6.

மனிதனையும் மனுஷியையும் கடவுள் உண்டாக்கினார் என்பது இயேசுவுக்கு எப்படி தெரியும்? அதை அவர் பார்த்தாரா?— ஆமாம், பார்த்தார். கடவுள் மனிதனையும் மனுஷியையும் படைத்தபோது இயேசு அவரோடு இருந்தார். கடவுள் முதன்முதலில் இயேசுவைத்தான் உண்டாக்கினார். இயேசு ஒரு தேவதூதராக தன் அப்பாவோடு பரலோகத்தில் இருந்தார். அதனால்தான் கடவுள் மனிதர்களைப் படைத்தபோது அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நாம் மனிதனை உண்டாக்கலாம்’ என்று கடவுள் சொன்னதாக பைபிளில் இருக்கிறது. (ஆதியாகமம் 1:26) கடவுள் யாரோடு பேசிக் கொண்டிருந்தார் என்று உனக்கு தெரியுமா?— கடவுள் தன் மகனோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த மகன்தான் பிற்பாடு பூமிக்கு வந்த இயேசு.

கொஞ்சம் யோசித்துப் பார். கடவுள் பூமியையும் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கியபோது அவரோடு இருந்தவர் இயேசு. ஆகவே, அவர் சொல்வதை கேட்கும்போது, கடவுள் கூடவே இருந்த ஒருவர் சொல்வதை கேட்கிறோம். இதை நினைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா? இயேசு பரலோகத்தில் தன் அப்பாவோடு சேர்ந்து வேலை செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அதனால்தான் அவர் பெரிய போதகர்!

கடவுள் தன் மகனை உண்டாக்குவதற்கு முன்பு தனியாக இருந்தார் அல்லவா? அது அவருக்கு வருத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறாயா?— உண்மையில் அவருக்கு வருத்தமாகவே இல்லை. அப்படியென்றால் ஏன் மற்ற உயிர்களை உண்டாக்கினார்?— அவர் அன்புள்ள கடவுள் என்பதால்தான் உண்டாக்கினார். மற்றவர்கள் வாழ வேண்டும், அதுவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். நமக்கு உயிரைக் கொடுத்திருப்பதற்காக கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

கடவுள் உண்டாக்கியிருக்கும் எல்லாமே அவருடைய அன்பைக் காட்டுகிறது. கடவுள் சூரியனைப் படைத்தார். சூரியன் நமக்கு வெளிச்சம் தருகிறது, வெப்பமும் தருகிறது. சூரியன் மட்டும் இல்லையென்றால் எல்லாமே ரொம்ப ஜில்லென்று இருக்கும், பூமியில் உயிர்களே இருக்காது. ஆகவே கடவுள் சூரியனை படைத்திருப்பதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டும். அது உனக்கு சந்தோஷம்தானே?—

கடவுள் மழையையும் தந்திருக்கிறார். சிலசமயம் மழை பெய்தால் உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். மழை வந்தால் வெளியே போய் விளையாடவே முடியாது என்று நீ நினைக்கலாம். ஆனால் மழை பெய்வதால்தான் பூக்கள் மலர்கின்றன. ஆகவே அழகான பூக்களைப் பார்க்கும்போது யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?— கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சுவையான பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடும்போது யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?— கடவுளுக்குத்தான். ஏனென்றால் அவர் உண்டாக்கியிருக்கும் சூரியனும் மழையும்தான் இதெல்லாம் வளர உதவுகின்றன.

‘கடவுள் மனிதனையும் மிருகங்களையும்கூட உண்டாக்கினாரா?’ என்று யாராவது உன்னிடம் கேட்டால் என்ன சொல்வாய்?— “ஆமாம். கடவுள் மனிதனையும் மிருகங்களையும் உண்டாக்கினார்” என்று சொல்வதுதான் சரி. ஆனால் ‘கடவுள் மனிதனைப் படைத்தார் என்று நம்ப முடியாது, மிருகங்களிலிருந்துதான் மனிதன் வந்தான்’ என்று அவர் சொன்னால் நீ என்ன செய்வாய்? பைபிள் அப்படிச் சொல்வதில்லை என்று நீ விளக்கலாம். கடவுள்தான் எல்லா உயிர்களையும் படைத்தார் என்று பைபிளிலிருந்து நீ காட்டலாம்.—ஆதியாகமம் 1:26-31.

வீட்டை யாரோ ஒருவர் கட்டியிருக்கிறார். அப்படியென்றால் பூக்களையும் மரங்களையும் மிருகங்களையும் யார் உண்டாக்கியது?

ஆனால் கடவுள் இருப்பதையே நம்ப மாட்டேன் என்று வேறு ஒருவர் சொல்லலாம். அப்போது நீ என்ன சொல்வாய்?— முதலில் ஒரு வீட்டை நீ காட்டலாம். பிறகு, “அந்த வீட்டை யார் கட்டினார்கள்?” என்று அவரிடம் கேட்கலாம். யாரோ ஒருவர் அதைக் கட்டியிருக்க வேண்டும் என்று எல்லாருக்குமே தெரியும். நிச்சயமாகவே அந்த வீடு தானாக வந்துவிடவில்லை!—எபிரெயர் 3:4.

அதன் பிறகு அவரை ஒரு தோட்டத்திற்கு கூட்டிக்கொண்டு போ. அங்கிருக்கும் ஒரு பூவைக் காட்டு. “இதை யார் உண்டாக்கினார்?” என்று கேள். எந்த மனுஷனும் அதை உண்டாக்கவில்லை. ஆகவே அந்த வீடு எப்படி தானாக வரவில்லையோ அப்படித்தான் இந்தப் பூவும் தானாக வரவில்லை. யாரோ ஒருவர் அதை உண்டாக்கியிருக்க வேண்டும். அவர்தான் கடவுள் என்று சொல்.

அதன் பிறகு சற்று நின்று பறவை பாடுவதை கேட்கச் சொல். “பறவைகளை யார் உண்டாக்கியது? யார் பறவைகளுக்கு பாட்டு சொல்லித் தந்தது?” என்று கேள். கடவுள்தான் அதைச் செய்தார். அவரே வானங்களையும் பூமியையும் எல்லா உயிர்களையும் படைத்தார்! அவரே எல்லாவற்றிற்கும் உயிர் தருகிறார்.

ஆனால், ‘பார்க்க முடிந்தால்தான் எதையுமே நம்புவேன், கண்ணுக்கு தெரியவில்லை என்றால் நான் நம்ப மாட்டேன்’ என்று ஒருவர் சொல்லலாம். ஆமாம், கடவுளைப் பார்க்க முடியாததால் அவரை நம்புவதில்லை என்று சிலர் சொல்கின்றனர்.

கடவுளை நம்மால் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ‘எந்த மனிதனாலும் கடவுளைப் பார்க்க முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. ஆகவே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிறுபிள்ளையாக இருந்தாலும் சரி, பூமியில் இருக்கும் யாராலுமே அவரைப் பார்க்க முடியாது. அதனால்தான் கடவுளை ஒரு படமாக அல்லது சிலையாக செய்து வைக்கக் கூடாது. தனக்கு எந்த உருவமும் செய்யக் கூடாது என்று கடவுளே சொல்லியிருக்கிறார். எனவே அப்படிப்பட்ட பொருட்களை நம் வீட்டில் வைத்திருப்பது கடவுளுக்குப் பிடிக்காது.—யாத்திராகமம் 20:4, 5; 33:20; யோவான் 1:18.

ஆனால் கடவுளைப் பார்க்க முடியாது என்றால் அவர் இருப்பதை எப்படி நம்புவது? இந்த உதாரணத்தை யோசித்துப் பார். உன்னால் காற்றைப் பார்க்க முடியுமா?— முடியாது. யாராலுமே காற்றைப் பார்க்க முடியாது. ஆனால் காற்று என்ன செய்கிறது என்று பார்க்க முடியும். காற்று அடிக்கும்போது இலைகள் அசைவதைப் பார்க்கிறாய், இல்லையா? ஆகவே காற்று இருப்பதை நீ நம்புகிறாய்.

காற்று இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?

அதேபோல் கடவுள் செய்திருக்கும் காரியங்களை உன்னால் பார்க்க முடியும். கடவுள் உண்டாக்கியிருக்கும் பூவை அல்லது பறவையை நீ பார்க்கிறாய். அதனால் கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்று நம்புகிறாய், சரிதானே?

‘சூரியனையும் பூமியையும் யார் உண்டாக்கியது?’ என்று ஒருவர் உன்னிடம் கேட்கலாம். ‘கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) ஆமாம், கடவுள்தான் இந்த அருமையான எல்லாவற்றையும் படைத்தார்! இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?—

உயிரோடு இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம், இல்லையா? பறவைகளுடைய இனிமையான பாடல்களை நம்மால் கேட்க முடிகிறது. பூக்களை பார்த்து ரசிக்க முடிகிறது, கடவுள் படைத்திருக்கும் மற்ற காரியங்களையும் பார்த்து மகிழ முடிகிறது. கடவுள் தந்திருக்கும் உணவையும் ருசித்து சாப்பிட முடிகிறது.

இவை எல்லாவற்றிற்காகவும் நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். முக்கியமாக நமக்கு உயிர் கொடுத்ததற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் உண்மையிலேயே கடவுளுக்கு நன்றியோடு இருந்தால், ஒரு காரியத்தை செய்வோம். அது என்ன தெரியுமா?— கடவுள் சொல்வதைக் கேட்போம், அவர் பைபிளில் சொல்லியிருக்கிறபடி நடப்போம். இப்படிச் செய்தால், எல்லாவற்றையும் உண்டாக்கியிருக்கும் அவர்மேல் நமக்கு அன்பு இருப்பதைக் காட்ட முடியும்.

கடவுள் செய்திருக்கும் எல்லா காரியத்திற்காகவும் நாம் நன்றியோடு நடந்துகொள்ள வேண்டும். எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு இந்த வசனங்களை வாசிக்கலாம்: சங்கீதம் 139:14; யோவான் 4:23, 24; 1 யோவான் 5:21; வெளிப்படுத்துதல் 4:11.