அதிகாரம் 13
இயேசுவின் சீஷர்கள்
கடவுளுக்கு ஊழியம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர் யார் என்று நினைக்கிறாய்?— சரியாக சொன்னாய், அவர் இயேசு கிறிஸ்துதான். நாம் அவரைப் போல் இருக்க முடியும் என்று நினைக்கிறாயா?— அவர் ஒரு முன்மாதிரியாக இருப்பதால் நம்மால் அவரை பின்பற்ற முடியும் என்று பைபிள் சொல்கிறது. மேலும், சீஷர்களாகும்படி அவரே நம்மை அழைக்கிறார்.
இயேசுவின் சீஷராக இருப்பதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா?— அதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. முதலில், நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. அவர் சொல்வதை மனதார நம்பவும் வேண்டும். அப்படி நம்பினால், அவர் சொல்வதை நாம் செய்வோம்.
இயேசுவை நம்புவதாக இன்று நிறைய பேர் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாருமே அவரது சீஷர்கள் என்று நினைக்கிறாயா?— இல்லை, முக்கால்வாசிபேர் உண்மையில் இயேசுவின் சீஷர்களாகவே இல்லை. அவர்கள் சர்ச்சுக்குப் போகலாம். ஆனால் இயேசு கற்றுக்கொடுத்ததை அவர்கள் படித்துப் புரிந்துகொண்டதே இல்லை. இயேசுவைப் போல யார் நடந்துகொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான சீஷர்கள்.
இயேசு பூமியில் இருந்த சமயத்தில் அவரது சீஷர்களாக இருந்த சிலரைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். முதன்முதலாக இயேசுவின் சீஷராக மாறியவர்களில் பிலிப்பும் ஒருவர். அவர் தன் நண்பராகிய நாத்தான்வேலை (பற்தொலொமேயு என்றும் அழைக்கப்பட்டார்) சந்திக்கச் சென்றார். இந்தப் படத்தில் நாத்தான்வேல் ஒரு மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிறார், பார்த்தாயா? நாத்தான்வேல் இயேசுவைப் பார்க்க வந்து கொண்டிருந்தார். அப்போது இயேசு, ‘அதோ பாருங்கள், நேர்மையான மனிதர் வருகிறார், அவர் உத்தமமான இஸ்ரவேலர்’ என்று சொன்னார். நாத்தான்வேல் ஆச்சரியப்பட்டு, ‘உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?’ என்று கேட்டார்.
பிலிப்பும் நாத்தான்வேலும் சீஷராவதற்கு முந்தின நாள் வேறு சிலரும் சீஷர்களானார்கள். அந்திரேயா, அவரது அண்ணன் பேதுரு, யோவான் ஆகியோரே அவர்கள். யோவானின் அண்ணன் யாக்கோபும் அந்த சமயத்தில் சீஷராகியிருக்கலாம். (யோவான் 1:35-51) ஆனால் பிற்பாடு இந்த நான்கு பேரும் மறுபடியும் மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பிப் போனார்கள். பின்பு ஒரு நாள் இயேசு கலிலேயா கடலருகே நடந்து கொண்டிருந்தார். அப்போது பேதுருவும் அந்திரேயாவும் கடலில் வலைகளை வீசுவதைப் பார்த்தார். “என் பின்னே வாருங்கள்” என்று அவர்களை கூப்பிட்டார்.
சற்று தூரம் சென்றபோது யாக்கோபையும் யோவானையும் இயேசு பார்த்தார். அவர்கள் தங்கள் அப்பாவோடு படகில் உட்கார்ந்து மீன் வலைகளை சரிசெய்து மத்தேயு 4:18-22.
கொண்டிருந்தார்கள். அவர்களையும் தன் சீஷராகும்படி இயேசு அழைத்தார். இயேசு உன்னை கூப்பிட்டிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்? உடனடியாக அவரோடு சென்றிருப்பாயா?— இயேசு யார் என்று அந்த நான்கு பேருக்கும் தெரிந்திருந்தது. அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று அவர்கள் புரிந்திருந்தார்கள். ஆகவே மீன் பிடிக்கும் தொழிலை உடனடியாக விட்டுவிட்டு இயேசுவோடு சென்றார்கள்.—அவர்கள் இயேசுவின் சீஷர்களான பிறகு எப்போதும் சரியானதையே செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?— முடியாது. ஏனென்றால் யார் மிகவும் முக்கியமானவர் என்று தங்களுக்குள் சண்டை போட்டதும் உனக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் இயேசு சொன்னதை அவர்கள் கேட்டார்கள். தங்களை திருத்திக்கொள்ள மனமுள்ளவர்களாக இருந்தார்கள். நாமும் நம்மை திருத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்களாக இருந்தால், இயேசுவின் சீஷர்களாக இருக்க முடியும்.
சீஷராகும்படி எல்லா விதமான மக்களையும் இயேசு அழைத்தார். ஒருமுறை பணக்கார அதிபதி ஒருவர் இயேசுவிடம் வந்தார். நித்திய ஜீவனைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமென அவரிடம் கேட்டார். சிறுவயது முதல் கடவுளுடைய கட்டளைகளின்படி தான் நடப்பதாக அந்தப் பணக்கார அதிபதி சொன்னார். அப்போது, “என்னைப் பின்பற்றிவா” என்று இயேசு அவரை அழைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?—
ஒரு பணக்காரனாக இருப்பதைவிட இயேசுவின் சீஷனாக இருப்பதே முக்கியம் என்பதை அந்த அதிபதி கேட்டபோது மிகவும் சோகமானார். ஏனென்றால் கடவுளைவிட காசு பணத்தையே அதிகமாக விரும்பினார். ஆகவே அவர் இயேசுவின் சீஷராகவில்லை.—லூக்கா 18:18-25.
இயேசு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் பிரசங்கம் செய்த பிறகு, சீஷர்களில் 12 பேரை அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்தார். ஒரு விசேஷ வேலை செய்வதற்கு அவரால் அனுப்பப்பட்டவர்களே அப்போஸ்தலர்கள். அவர்களுடைய பெயர்கள் உனக்குத் தெரியுமா?— அவர்களுடைய பெயர்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். இங்கே இருக்கும் படங்களைப் பார்த்து பெயர்களை சொல்ல முடியுமா என்று பார். பிறகு, பார்க்காமலேயே சொல்ல முயற்சி செய்.
அந்த 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் கடைசியில் கெட்டவனானான். அவன்தான் யூதாஸ் காரியோத்து. அதன் பிறகு இன்னொருவர் அவனுக்குப் பதிலாக அப்போஸ்தலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயர் உனக்குத் தெரியுமா?— அவருடைய பெயர் மத்தியா. பிற்பாடு பவுலும் பர்னபாவும்கூட அப்போஸ்தலர் 1:23-26; 14:14.
அப்போஸ்தலர்கள் ஆனார்கள். இருந்தாலும் அவர்கள் அந்த 12 பேரோடு சேர்ந்தவர்கள் அல்ல.—இந்தப் புத்தகத்தில் 1-ஆம் அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்டபடி சிறு பிள்ளைகள் மீது இயேசு அக்கறை காட்டினார். ஏன் அவ்வாறு அக்கறை காட்டினார் தெரியுமா?— ஏனென்றால் அவர்களும் சீஷர்கள் ஆகலாம் என்று அவர் அறிந்திருந்தார். சொல்லப்போனால், பெரியவர்கள் ஆர்வமாக கேட்கும் விதத்தில் பிள்ளைகளால் நன்றாக பேச முடியும்; பெரிய போதகரைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை பெரியவர்களின் மனதில் தூண்டவும் முடியும்.
நிறைய பெண்கள்கூட இயேசுவின் சீஷர்களானார்கள். பிரசங்கம் செய்வதற்காக அவர் மற்ற ஊர்களுக்கு போன போது சில பெண்கள் அவரோடு சென்றார்கள். உதாரணத்திற்கு மகதலேனா மரியாள், யோவன்னாள், லூக்கா 8:1-3.
சூசன்னாள் ஆகியோர் அவரோடு சென்றார்கள். அவருக்கு சமைத்துக் கொடுத்தும் துணிமணிகளை துவைத்துக் கொடுத்தும்கூட அவர்கள் உதவி செய்திருக்கலாம்.—நீயும் இயேசுவின் சீஷராக இருக்க விரும்புகிறாயா?— நாம் அவரது சீஷர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது என்பதை நீ ஞாபகம் வைக்க வேண்டும். நாம் எங்கே இருந்தாலும் அவரது சீஷர்களாக நடந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களில் மட்டும் அப்படி நடந்துகொள்வது போதாது. நாம் எந்தெந்த இடங்களில் இயேசுவின் சீஷராக நடந்துகொள்வது முக்கியம் என்று உன்னால் யோசித்து சொல்ல முடியுமா?—
வீட்டில் நாம் இயேசுவின் சீஷராக நடந்துகொள்ள வேண்டும். இன்னொரு இடம், ஸ்கூல். நானும் நீயும் எதை ஒருபோதும் மறக்கக் கூடாது, தெரியுமா? இயேசுவின் உண்மையான சீஷராக இருக்க வேண்டுமென்றால், எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
இயேசுவின் சீஷர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது சேர்ந்து வாசிக்கலாம். மத்தேயு 28:19, 20; லூக்கா 6:13-16; யோவான் 8:31, 32; 1 பேதுரு 2:21.