Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

சந்தோஷத்திற்கான வழி

சந்தோஷத்திற்கான வழி

யெகோவா ஏன் ‘சந்தோஷமான கடவுள்’?

நாம் எல்லாருமே சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம், இல்லையா?— ஆனால் நிறைய பேர் உண்மையில் சந்தோஷமாக இல்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?— ஏனென்றால் சந்தோஷத்திற்கான இரகசியத்தை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. நிறைய பொருட்களை சேர்த்து வைப்பதுதான் சந்தோஷத்தைத் தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி சொத்து சேர்க்கும்போது சந்தோஷம் நீடிப்பதில்லை.

சந்தோஷத்திற்கான முக்கிய இரகசியத்தை பெரிய போதகர் இப்படி சொன்னார்: ‘வாங்கிக்கொள்வதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம்.’ (அப்போஸ்தலர் 20:35) ஆகவே சந்தோஷம் கிடைப்பதற்கு வழி என்ன?— ஆமாம், மற்றவர்களுக்கு எதையாவது கொடுப்பதும் அவர்களுக்காக உதவிகள் செய்வதும்தான் அந்த வழி. இது உனக்குத் தெரியுமா?—

இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்திக்கலாம். பரிசை வாங்கிக்கொள்பவர் சந்தோஷமாக இருக்க மாட்டார் என்றா இயேசு சொன்னார்?— இல்லை, அவர் அப்படிச் சொல்லவில்லை. உனக்கு யாராவது பரிசு கொடுத்தால் பிடிக்கும் இல்லையா?— எல்லாருக்குமே அது பிடிக்கும். நல்ல பொருட்களை பெறும்போது நாம் சந்தோஷப்படுகிறோம்.

ஆனால் கொடுக்கும்போது அதைவிட அதிக சந்தோஷம் கிடைக்கும் என்று இயேசு சொன்னார். யார் மக்களுக்கு மிக அதிகமான பொருட்களைக் கொடுத்திருக்கிறார் என்று நீ நினைக்கிறாய்?— ஆமாம், யெகோவா தேவன்தான்.

கடவுள் ‘உயிரையும் சுவாசத்தையும் மற்ற அனைத்தையும் எல்லா மக்களுக்கும் தருகிறார்’ என பைபிள் சொல்கிறது. அவர் நமக்கு மழையையும் சூரிய வெளிச்சத்தையும்கூட தருகிறார். அவற்றால் செடிகள் வளருகின்றன, நமக்கு உணவும் கிடைக்கிறது. (அப்போஸ்தலர் 14:17; 17:25) ஆகவேதான் பைபிள் யெகோவாவை ‘சந்தோஷமுள்ள கடவுள்’ என்று அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11) மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும்போது கடவுளுக்கு சந்தோஷமாக இருக்கும்; நமக்கும் சந்தோஷமாக இருக்கும்.

எல்லா பலகாரங்களையும் நீயே சாப்பிடுவதற்கு பதிலாக எதைச் செய்தால் அதிக சந்தோஷம் கிடைக்கும்?

மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுக்கலாம்? நீ என்ன நினைக்கிறாய்?— சிலசமயம் பரிசு கொடுக்க பணம் செலவாகும். கடையிலிருந்து வாங்கித்தர வேண்டுமென்றால் காசு வேண்டும். ஆகவே அப்படிப்பட்ட பரிசு கொடுப்பதற்கு முதலில் நீ காசு சேர்க்க வேண்டும்.

ஆனால் எல்லா பரிசுகளையுமே கடையிலிருந்து வாங்கித்தர வேண்டியதில்லை. உதாரணத்திற்கு வெயில் கொளுத்தும் சமயத்தில் ஜில்லென்ற ஒரு டம்ளர் தண்ணீர் அமிர்தமாக இருக்கும். ஆகவே தாகமாக இருக்கும் ஒருவருக்கு அந்தப் பரிசை நீ தரும்போது, உனக்கு சந்தோஷமாக இருக்கும்.

எப்போதாவது நீயும் உன் அம்மாவும் சேர்ந்து பலகாரம் செய்யலாம். அது ஜாலியாக இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் நீயே சாப்பிடுவதற்குப் பதிலாக என்ன செய்தால் அதிக சந்தோஷம் கிடைக்கும்?— ஆமாம், கொஞ்சத்தை எடுத்து உன் ஃபிரெண்ட்ஸ் யாருக்காவது பரிசாக கொடுத்தால் சந்தோஷம் கிடைக்கும். அப்படி செய்ய உனக்கு விருப்பமா?—

கொடுப்பதில் சந்தோஷம் உண்டு என்று பெரிய போதகரும் அவரது அப்போஸ்தலர்களும் அறிந்திருந்தார்கள். அவர்கள் மக்களுக்கு எதைக் கொடுத்தார்கள் தெரியுமா?— அதுதான் உலகிலேயே மிகச் சிறந்தது! கடவுளைப் பற்றி தாங்கள் கற்றுக்கொண்ட சத்தியத்தை அவர்கள் சந்தோஷமாக மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதற்காக அவர்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை.

கொடுப்பதில் சந்தோஷத்தை அனுபவிக்க ஒரு பெண் விரும்பினாள். அவளை அப்போஸ்தலன் பவுலும் அவரது நெருங்கிய நண்பரான லூக்காவும் ஒரு ஆற்றங்கரையில் சந்தித்தார்கள். அது ஜெபம் பண்ணுகிற இடம் என்று பவுலும் லூக்காவும் கேள்விப்பட்டதால் அங்கே சென்றார்கள். அவர்கள் கேள்விப்பட்டபடியே சில பெண்கள் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண்களுக்கு யெகோவா தேவனையும் அவரது அரசாங்கத்தையும் பற்றிய நல்ல செய்தியை பவுல் சொல்ல ஆரம்பித்தார். அவர்களில் ஒருத்தி லீதியாள். அவள் கூர்ந்து கவனித்தாள். பிறகு, அந்த நல்ல செய்தி தனக்கு உண்மையிலேயே பிடித்திருந்ததைக் காட்ட ஏதாவது செய்ய விரும்பினாள். ஆகவே, ‘நான் யெகோவாவுக்கு உத்தமமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் என் வீட்டில் வந்து தங்குங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டாள். அவர்களை சம்மதிக்க வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.—அப்போஸ்தலர் 16:13-15.

பவுலிடமும் லூக்காவிடமும் லீதியாள் என்ன சொல்கிறாள்?

கடவுளுடைய ஊழியர்களான அவர்களை தன் வீட்டில் தங்க வைத்தது லீதியாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. அவர்கள் யெகோவாவையும் இயேசுவையும் பற்றி கற்றுக்கொள்ள அவளுக்கு உதவி செய்தார்கள், எப்படி என்றென்றும் வாழலாம் எனவும் சொல்லித் தந்தார்கள். ஆகவே லீதியாளுக்கு பவுலையும் லூக்காவையும் ரொம்ப பிடித்தது. அவர்களுக்கு சாப்பாடும் இடமும் கொடுத்ததில் அவளுக்கு சந்தோஷம். இப்படியாக, உண்மையிலேயே கொடுக்க விரும்பியதால் லீதியாள் சந்தோஷத்தைப் பெற்றாள். இதை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். நாம் ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்று யாராவது சொல்லலாம். ஆனால் நாமே விருப்பப்பட்டு கொடுக்காவிட்டால் அது சந்தோஷத்தைத் தராது.

பவுலுக்கும் லூக்காவுக்கும் வேண்டியதை கொடுப்பதில் லீதியாள் ஏன் சந்தோஷப்படுகிறாள்?

உதாரணத்திற்கு, உன்னிடம் சாக்லேட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள். அதை சாப்பிட உனக்கு ஆசை. ஆனால் இன்னொரு பிள்ளைக்கு அதில் கொஞ்சத்தைக் கொடுத்துவிடு என்று நான் உன்னிடம் சொன்னால், நீ அதை சந்தோஷமாக கொடுப்பாயா?— ஒருவேளை உனக்கு ரொம்ப பிடித்தமான ஃபிரெண்டை பார்க்கிறாய் என்று வைத்துக்கொள். அப்போது உன்னிடம் இருக்கும் சாக்லேட்டுகளில் கொஞ்சத்தை கொடுக்கலாம் என்று உனக்கே தோன்றினால் எப்படியிருக்கும்? சந்தோஷமாக இருக்கும் தானே?—

சிலசமயம் நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கலாம். அப்போது நமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் அவருக்கே கொடுத்துவிட விரும்புவோம். அதேபோல் நாம் கடவுளை அதிகமதிகமாக நேசிக்கும்போது அவருக்காக எதையும் கொடுக்க விரும்ப வேண்டும்.

இந்த ஏழைப் பெண் தன்னிடம் இருந்ததையெல்லாம் கொடுப்பதில் ஏன் சந்தோஷப்பட்டாள்?

ஒரு ஏழைப் பெண் அதுபோல் உணர்ந்தது பெரிய போதகருக்கு தெரிந்தது. எருசலேமிலிருந்த ஆலயத்தில் அவளை பார்த்தார். அவளிடம் இரண்டே காசுகள் இருந்தன; அவளிடம் இருந்ததே அவ்வளவுதான். ஆனால் அந்த இரண்டு காசுகளையுமே அவள் காணிக்கைப் பெட்டியில் போட்டாள்; அதாவது ஆலயத்திற்கு பரிசாக கொடுத்தாள். அவளை யாரும் வற்புறுத்தவில்லை. அவள் அப்படிச் செய்ததுகூட அங்கிருந்த நிறைய பேருக்கு தெரியாது. அவளாகவே விருப்பப்பட்டு அதைச் செய்தாள், யெகோவாவை அதிகமாக நேசித்ததால் அப்படிச் செய்தாள். தன்னால் கொடுக்க முடிந்ததை நினைத்து அவள் சந்தோஷப்பட்டாள்.—லூக்கா 21:1-4.

நாம் பல வழிகளில் கொடுக்கலாம். உன்னால் சில வழிகளை யோசிக்க முடிகிறதா?— உண்மையான விருப்பத்தோடு நாம் கொடுக்கும்போது சந்தோஷத்தைப் பெறுவோம். ஆகவேதான் ‘கொடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்’ என்று பெரிய போதகர் நமக்கு சொல்கிறார். (லூக்கா 6:38) அப்படிச் செய்தால் நாம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவோம். அதைவிட நாமும் மிக சந்தோஷமாக இருப்போம்!

கொடுப்பது எப்படி சந்தோஷம் தருகிறது என்பதைப் பற்றி சில வசனங்களில் இன்னுமதிகமாக படிக்கலாம். மத்தேயு 6:1-4; லூக்கா 14:12-14; 2 கொரிந்தியர் 9:7.