அதிகாரம் 36
யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எங்கே வாழ்வார்கள்?
முந்தின இரண்டு அதிகாரங்களில், எத்தனை பேர் உயிர்த்தெழுப்பப்பட்டதாக படித்தோம்?— ஐந்து பேர். அவர்களில் எத்தனை பேர் பிள்ளைகள்?— மூன்று பேர். நான்காவது நபர் ஒரு வாலிபர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்று நினைக்கிறாய்?—
கடவுள் பிள்ளைகளையும் வாலிபர்களையும் நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அவர் மற்ற அநேகரையும் உயிர்த்தெழுப்புவார். நல்லது செய்தவர்களை மட்டும்தான் கடவுள் உயிர்த்தெழுப்புவாரா?— ஆமாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நிறைய பேர் யெகோவா தேவனையும் அவரது மகனையும் பற்றிய சத்தியத்தை ஒருபோதும் கற்றுக்கொண்டது இல்லை. தவறான காரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டதால் அவர்கள் தவறுகளை செய்தார்கள். அப்படிப்பட்டவர்களை யெகோவா உயிர்த்தெழுப்புவார் என்று நினைக்கிறாயா?—
‘நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்’ என பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:15) நீதிமான்களாக இல்லாதவர்கள், அதாவது நல்லதை செய்யாதவர்கள் ஏன் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?— ஏனென்றால் யெகோவாவைப் பற்றியும் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
இறந்தவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று நீ நினைக்கிறாய்?— லாசரு இறந்த சமயத்தை நினைத்துப் பார். அப்போது, ‘உன் சகோதரன் உயிர்த்தெழுப்பப்படுவான்’ என்று மார்த்தாவிடம் இயேசு கூறினார். அதற்கு மார்த்தாள், ‘கடைசி நாளிலே அவன் உயிர்த்தெழுப்பப்படுவான் என்று எனக்கு தெரியும்’ என்றாள். (யோவான் 11:23, 24) லாசரு “கடைசி நாளிலே” உயிர்த்தெழுப்பப்படுவான் என்று சொன்னபோது மார்த்தாள் எதை அர்த்தப்படுத்தினாள்?—
‘ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள எல்லாரும் வெளியே வருவார்கள்’ என்ற இயேசுவின் வாக்குறுதியைப் பற்றி மார்த்தாள் கேள்விப்பட்டிருந்தாள். (யோவான் 5:28, 29) ஆகவே ‘கடைசி நாள்’ என்பது, கடவுளுடைய ஞாபகத்தில் உள்ள எல்லாரும் மறுபடியுமாக உயிரோடு வரும் நாளாகும். ஆனால் இது 24 மணிநேர நாள் கிடையாது. இது ஆயிரம் வருடங்கள் நீடிக்கும். அந்த நாளில் ‘பூமியிலுள்ள மக்களை கடவுள் நியாயந்தீர்ப்பார்’ என பைபிள் சொல்கிறது. மறுபடியும் உயிரோடு வருபவர்களையும் அவர் நியாயந்தீர்ப்பார்.—அப்போஸ்தலர் 17:31; 2 பேதுரு 3:8.
அது எப்பேர்ப்பட்ட சந்தோஷமான நாளாக இருக்கும்! ஆயிரம் வருடங்கள் நீடிக்கும் அந்த நாளில், இறந்துபோன லட்சக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள். அவர்கள் மறுபடியும் வாழப்போகும் இடத்தை பரதீஸ் என்று இயேசு அழைத்தார். பரதீஸ் எங்கே இருக்கும், அது எப்படியிருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
இயேசு கழுமரத்தில் சாவதற்கு சுமார் மூன்று மணிநேரத்திற்கு முன்பு, தனக்குப் பக்கத்தில் கழுமரத்தில் தொங்கிய ஒரு மனிதனிடம் பரதீஸைப் பற்றி குறிப்பிட்டார். அந்த மனிதன் குற்றங்கள் செய்ததற்காக மரண தண்டனை பெற்றவன். லூக்கா 23:42, 43.
ஆனால் தன் அருகே கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவை பார்த்துக்கொண்டும், அவரைப் பற்றி மக்கள் சொன்னதை கேட்டுக்கொண்டும் இருந்தான். அதன் பிறகு அவர் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்தான். ‘உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினையுங்கள்’ என்றான். அதற்கு இயேசு, ‘இன்று நான் உண்மையாகவே சொல்கிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்’ என்றார்.—இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? பரதீஸ் எங்கே இருக்கிறது?— இதை யோசித்துப் பார். முதன்முதலில் பரதீஸ் எங்கே இருந்தது?— முதல் மனிதன் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் இதே பூமியில் கடவுள் பரதீஸைக் கொடுத்தார் என்பது உனக்கு ஞாபகம் இருக்கும். அது ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. அந்தத் தோட்டத்தில் மிருகங்கள் இருந்தன, ஆனால் அந்த மிருகங்கள் அவர்களை கடிக்கவே இல்லை. அங்கு நிறைய மரங்கள் இருந்தன, அவற்றில் சுவையான பழங்கள் கொத்து கொத்தாக தொங்கின. ஒரு பெரிய ஆறு ஓடியது. வாழ்வதற்கு மிக அருமையான இடமாக அது இருந்தது!—ஆதியாகமம் 2:8-10.
ஆகவே அந்தக் குற்றவாளி பரதீஸில் இருப்பான் என்பதை வாசிக்கும்போது, அழகான இடமாக மாற்றப்பட்டிருக்கும் இந்தப் பூமியில் அவன் வாழப்போவதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அவனோடு இந்தப் பூமியில் பரதீஸில் இயேசு இருப்பாரா?— மாட்டார். அவர் ஏன் இங்கு இருக்க மாட்டார் தெரியுமா?—
ஏனென்றால் அவர் ராஜாவாக பூமியிலுள்ள பரதீஸ் மீது பரலோகத்திலிருந்து ஆட்சி செய்து கொண்டிருப்பார். ஆகவே இயேசு அவனை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து அவன் தேவைகளையெல்லாம் கவனிப்பார் என்ற கருத்தில் அவனோடு இருப்பார். ஆனால் குற்றவாளியாக இருந்த ஒருவனுக்கு
இயேசு ஏன் பரதீஸில் இடம் தருகிறார்?— இதற்கு என்ன பதில் என்று பார்க்கலாம்.அந்தக் குற்றவாளி இயேசுவிடம் பேசுவதற்கு முன்பு, கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அறிந்திருந்தானா?— இல்லை, அறியவில்லை. கடவுளைப் பற்றிய உண்மை தெரியாததால் அவன் கெட்ட காரியங்களைச் செய்தான். பரதீஸில் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அவனுக்கு கற்பிக்கப்படும். அப்போது, கடவுளுடைய விருப்பப்படி நடப்பதன் மூலம் அவர் மீது உண்மையிலேயே அன்பு இருப்பதைக் காட்ட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உயிர்த்தெழுப்பப்படும் எல்லாருமே பூமியில் பரதீஸில் வாழ்வார்களா?— இல்லை, வாழ மாட்டார்கள். ஏன் தெரியுமா?— ஏனென்றால் சிலர் இயேசுவோடு பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ராஜாக்களாக அவரோடு சேர்ந்து பூமியிலுள்ள பரதீஸை ஆட்சி செய்வார்கள். இது நமக்கு எப்படித் தெரியும் என்று பார்க்கலாம்.
இறப்பதற்கு முந்தின இரவு இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் இப்படி சொன்னார்: ‘பரலோகத்தில் என் அப்பாவின் வீட்டில் நிறைய இடங்கள் இருக்கின்றன, உங்களுக்காக ஒரு இடத்தை ஏற்பாடு செய்யப் போகிறேன்.’ பிறகு, ‘நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் யோவான் 14:2, 3.
வந்து உங்களை அழைத்துச் செல்வேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார்.—இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு எங்கே சென்றார்?— ஆமாம், தன் அப்பாவோடு இருப்பதற்காக மறுபடியும் பரலோகத்திற்குச் சென்றார். (யோவான் 17:4, 5) ஆகவே அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் தன்னோடு பரலோகத்தில் இருக்கும்படி அவர்களை உயிர்த்தெழுப்பப் போவதாக இயேசு வாக்குறுதி கொடுத்தார். அங்கே அவர்கள் இயேசுவோடு என்ன செய்வார்கள்?— ‘முதலாம் உயிர்த்தெழுதலைப்’ பெறும் சீஷர்கள் பரலோகத்தில் வாழ்வார்கள் என்றும் பூமியின் மீது “ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 5:10; 20:6; 2 தீமோத்தேயு 2:12.
எத்தனை பேர் ‘முதலாம் உயிர்த்தெழுதலைப்’ பெற்று இயேசுவோடு ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்?— ‘பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் தந்தை ஆசையாயிருக்கிறார்’ என்று இயேசு தன் சீஷர்களிடம் கூறினார். (லூக்கா 12:32) இயேசுவுடன் பரலோக ராஜ்யத்தில் இருப்பதற்காக உயிர்த்தெழுப்பப்படும் இந்த “சிறுமந்தை” குறிப்பிட்ட எண்ணிக்கையினர். இவர்கள் ‘இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்’ என்று பைபிள் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 14:1, 3.
எத்தனை பேர் பூமியில் பரதீஸில் வாழ்வார்கள்?— பைபிள் சொல்வதில்லை. ஆனால் பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பும்படி ஆதாம் ஏவாளிடம் ஏதேன் தோட்டத்தில் கடவுள் சொன்னார். அவர்கள் அதைச் செய்ய தவறினது உண்மைதான். ஆனால் இந்தப் பூமியை நல்லவர்களால் நிரப்பும் தன் நோக்கத்தை கடவுள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.—ஆதியாகமம் 1:28; ஏசாயா 45:18; 55:11.
பரதீஸில் வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று நினைத்துப் பார்! முழு பூமியும் ஒரு தோட்டமாக மாறும். எங்கு பார்த்தாலும் பறவைகளும் மிருகங்களும் இருக்கும். அழகழகான மரங்களும் மலர்களும் பல தினுசுகளில் இருக்கும். ஒருவருக்கும் வியாதியோ வலியோ இருக்காது. யாருமே சாக மாட்டார்கள். எல்லாருமே நண்பர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட பரதீஸில் நாம் வாழ விரும்பினால், இப்போதே அதற்குத் தயாராக வேண்டும்.
இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி இன்னுமதிகம் தெரிந்துகொள்ள சில வசனங்களைப் படிக்கலாம். நீதிமொழிகள் 2:21, 22; பிரசங்கி 1:4; ஏசாயா 2:4; 11:6-9; 35:5, 6; 65:21-24.