Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 26

நல்லது செய்வது ஏன் கஷ்டம்

நல்லது செய்வது ஏன் கஷ்டம்

சவுல் கெட்ட காரியங்களை செய்தபோது யார் சந்தோஷப்பட்டது தெரியுமா?— பிசாசாகிய சாத்தான் சந்தோஷப்பட்டான். அதேசமயத்தில் யூத மதத் தலைவர்களும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு சவுல் பெரிய போதகரின் சீஷரானபோது அந்த மதத் தலைவர்கள் அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். ஆகவே நல்லது செய்வது இயேசுவின் சீஷர்களுக்கு ஏன் கஷ்டம் என்று புரிகிறதா?—

நல்லது செய்ததால் பவுலுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன?

அனனியா என்ற பிரதான ஆசாரியர், ஒரு முறை பவுலின் முகத்தில் அறையும்படி ஆணையிட்டார். பவுலை சிறையில் போடவும் அவர் முயற்சி செய்தார். இயேசுவின் சீஷரானபோது பவுல் பல பிரச்சினைகளை சந்தித்தார். உதாரணத்திற்கு, கெட்ட ஜனங்கள் அவரை அடித்தனர், பெரிய கற்களை எறிந்து அவரை கொலை செய்யவும் முயற்சி செய்தனர்.—அப்போஸ்தலர் 23:1, 2; 2 கொரிந்தியர் 11:24, 25.

கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களை செய்யும்படி அநேகர் நம்மை தூண்டலாம். ஆகவே இந்தக் கேள்விகளை கொஞ்சம் யோசித்துப் பார்: ‘நல்லதை நீ எந்தளவுக்கு விரும்புகிறாய்? மற்றவர்கள் உன்னை வெறுத்தாலும் தொடர்ந்து நல்லது செய்யும் அளவுக்கு நீ அதை விரும்புகிறாயா?’ அதற்கு தைரியம் வேண்டும், இல்லையா?—

‘நல்லது செய்வதற்காக ஏன் மற்றவர்கள் நம்மை வெறுக்க வேண்டும்? அவர்கள் சந்தோஷப்படத்தானே வேண்டும்?’ என்று நீ நினைக்கலாம். நீ அப்படி நினைப்பது நியாயம்தான். இயேசு நல்ல காரியங்கள் செய்ததற்காக நிறைய பேர் அவரை விரும்பினார்கள். ஒருமுறை ஒரு நகரத்தில் இருந்த எல்லா ஜனங்களும் அவர் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்கு முன்பாக கூடிவந்தார்கள். இயேசு வியாதிப்பட்டவர்களை குணப்படுத்தியதை கேள்விப்பட்டு அவர்கள் வந்தார்கள்.—மாற்கு 1:33.

ஆனால் சிலசமயம், இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் எப்போதும் உண்மையை கற்றுக்கொடுத்த போதிலும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சொல்லப்போனால் உண்மை பேசியதற்காக அவரை சிலர் அடியோடு வெறுத்தார்கள். ஒருமுறை நாசரேத் என்ற ஊரில் சிலர் இப்படிப்பட்ட வெறுப்பைக் காட்டினார்கள். இயேசு வளர்ந்த ஊர் அது. அங்கு அவர் ஒரு ஜெப ஆலயத்திற்கு போனார். அது, கடவுளை வணங்குவதற்காக யூதர்கள் கூடின இடம்.

அங்கு இயேசு வேதவசனங்களை மிக நன்றாக விளக்கிச் சொன்னார். கேட்டவர்களுக்கு அது முதலில் பிடித்திருந்தது. அவர் மிகவும் அருமையாக பேசியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். தங்கள் ஊரில் வளர்ந்த இளைஞனா அப்படி பேசுவது என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

ஆனால் இயேசு வேறொரு விஷயத்தை பற்றியும் பேசத் தொடங்கினார். அதாவது, யூதர்களாக அல்லாத வேறு மக்களுக்கு கடவுள் விசேஷ கருணை காட்டிய சந்தர்ப்பங்களை குறிப்பிட்டார். அதைக் கேட்டபோது ஜெப ஆலயத்தில் இருந்தவர்கள் கோபப்பட்டார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா?— தங்களுக்கு மட்டும்தான் கடவுள் விசேஷ கருணை காட்டியதாக அவர்கள் நினைத்தார்கள். மற்றவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று நினைத்தார்கள். ஆகவே இயேசு அப்படி சொன்னதால் அவர்கள் அவரை வெறுத்தார்கள். அதனால் அவரை என்ன செய்ய முயற்சி செய்தார்கள் தெரியுமா?—

பைபிள் இப்படி சொல்கிறது: ‘அவர்கள் இயேசுவைப் பிடித்து, ஊருக்கு வெளியே இழுத்துக் கொண்டு போனார்கள். மலை உச்சியிலிருந்து அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தார்கள்! ஆனால் இயேசு தப்பித்துப் போய்விட்டார்.’—லூக்கா 4:16-30.

இந்த ஜனங்கள் ஏன் இயேசுவை கொல்ல முயற்சி செய்கிறார்கள்?

உனக்கு அப்படி நடந்திருந்தால், கடவுளைப் பற்றி பேச அந்த ஜனங்களிடம் மறுபடியும் போயிருப்பாயா?— அதற்கு தைரியம் வேண்டும் அல்லவா?— சுமார் ஒரு வருஷத்திற்கு பிறகு இயேசு மறுபடியும் நாசரேத்துக்குப் போனார். ‘அவர்களுடைய ஜெப ஆலயத்தில் அவர் கற்பிக்கத் தொடங்கினார்’ என்று பைபிள் சொல்கிறது. கடவுளை நேசிக்காத ஜனங்களைக் கண்டு பயந்து உண்மை பேசுவதை இயேசு நிறுத்திவிடவில்லை.—மத்தேயு 13:54.

ஒருமுறை ஓய்வுநாளின்போது ஜெப ஆலயத்தில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு கை நொண்டி. அந்த மனிதனை குணப்படுத்துவதற்கான சக்தியை இயேசுவுக்கு கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் அங்கிருந்த சிலர் இயேசுவை பிரச்சினையில் மாட்ட வைக்க முயற்சி செய்தனர். ஆகவே பெரிய போதகர் என்ன செய்தார் தெரியுமா?— ஒரு கேள்வியைக் கேட்டார். ‘உங்களுடைய ஆடு ஓய்வுநாளின்போது ஒரு பெரிய குழிக்குள் விழுந்துவிட்டால் அதைப் பிடித்து தூக்கி விடாமல் இருப்பீர்களா?’ என்று கேட்டார்.

ஆமாம், ஓய்வுநாளில் அவர்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தாலும் குழிக்குள் விழுந்த ஆட்டை கண்டிப்பாக தூக்கி விடுவார்கள். ஆகவே, ‘மனுஷன் ஆட்டைவிட மேலானவன், அதனால் ஓய்வுநாளின்போது மனுஷனுக்கு உதவுவது எவ்வளவோ மேல்’ என்று இயேசு சொன்னார். அந்த மனிதனை குணப்படுத்த வேண்டும் என்று இயேசு விளக்கினது எவ்வளவு தெளிவாக இருந்தது!

கையை நீட்டும்படி அந்த மனிதனிடம் இயேசு சொன்னார். உடனடியாக அவன் கை குணமானது. அவனுக்கு ஒரே சந்தோஷம்! ஆனால் மற்றவர்கள் சந்தோஷப்பட்டார்களா?— இல்லை. இயேசுவை இன்னும் அதிகமாக வெறுக்க ஆரம்பித்தார்கள். அங்கிருந்து சென்று, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்கள்!—மத்தேயு 12:9-14.

இன்றும் அதே நிலைமைதான். நாம் என்னதான் செய்தாலும் எல்லாரையும் சந்தோஷப்படுத்த முடியாது. ஆகவே யாரை உண்மையில் பிரியப்படுத்த விரும்புகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும். யெகோவா தேவனையும் அவரது மகன் இயேசு கிறிஸ்துவையும் பிரியப்படுத்த விரும்பினால், அவர்கள் கற்றுக்கொடுப்பதை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யும்போது யார் நம்மை வெறுப்பார்கள்? நல்லது செய்வதை யார் கஷ்டமாக்குவார்கள்?—

பிசாசாகிய சாத்தான் அப்படி செய்வான். ஆனால் வேறு யார்கூட அப்படி செய்வார்கள்?— சாத்தானால் ஏமாற்றப்பட்டு கெட்ட காரியங்களை நம்புகிறவர்களும் அப்படி செய்வார்கள். இயேசு தன் காலத்தில் இருந்த மதத் தலைவர்களிடம், ‘உங்கள் தந்தை சாத்தானே, அவனுடைய விருப்பத்தின்படியே நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்’ என்று சொன்னார்.—யோவான் 8:44.

சாத்தானுக்கு பிரியமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை ‘உலகம்’ என்று இயேசு அழைத்தார். அந்த ‘உலகம்’ யாரை குறிப்பதாக நீ நினைக்கிறாய்?— நாம் யோவான் 15-ஆம் அதிகாரத்தில், 19-வது வசனத்தைப் படித்துப் பார்க்கலாம். அங்கே இயேசு என்ன சொல்கிறார் பார். “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”

ஆகவே இயேசுவின் சீஷர்களை வெறுக்கும் உலகம், அவரை பின்பற்றாத எல்லா ஜனங்களையும் குறிக்கிறது. உலகம் ஏன் இயேசுவின் சீஷர்களை வெறுக்கிறது?— இதை யோசித்துப் பார். இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார்?— ‘முழு உலகமும் பொல்லாதவனின் அதிகாரத்தில் கிடக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது. அந்தப் பொல்லாதவன் பிசாசாகிய சாத்தானே.—1 யோவான் 5:19.

நல்லது செய்வது ஏன் ரொம்ப கஷ்டம் என்று இப்போது உனக்குப் புரிகிறதா?— சாத்தானும் அவனது உலகமும் அதை கஷ்டமாக்குவதால்தான். ஆனால் அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவென்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— நாம் எல்லாருமே பாவத்தோடு பிறந்திருக்கிறோம் என்று இந்தப் புத்தகத்தில் 23-ஆம் அதிகாரத்தில் படித்தோம். பாவமும், சாத்தானும், அவனுடைய உலகமும் அழிக்கப்படும்போது எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா?—

இந்த உலகம் அழிந்து போகும்போது, நல்லது செய்பவர்கள் என்ன ஆவார்கள்?

‘இந்த உலகம் அழிந்து போகிறது’ என்று பைபிள் உறுதி அளிக்கிறது. அப்படியென்றால் பெரிய போதகரை பின்பற்றாத எல்லாரும் அழிந்து போவார்கள் என்று அர்த்தம். அவர்களால் என்றென்றும் வாழ முடியாது. ஆனால் யார் என்றென்றும் வாழ்வார்கள் தெரியுமா?— ‘கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்’ என பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:17) ஆமாம், ‘கடவுளுடைய விருப்பத்தின்படி’ நல்லதை செய்பவர்கள் மட்டுமே புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்வார்கள். ஆகவே கஷ்டமாக இருந்தாலும் நல்லதை செய்யத்தானே நாம் விரும்புகிறோம்?—

நாம் இப்போது சில வசனங்களை வாசிக்கலாம். நல்லது செய்வது ஏன் சுலபம் அல்ல என்று அவை காட்டுகின்றன. மத்தேயு 7:13, 14; லூக்கா 13:23, 24; அப்போஸ்தலர் 14:21, 22.