Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்புள்ள மேய்ப்பன்

அன்புள்ள மேய்ப்பன்

அதிகாரம் 28

அன்புள்ள மேய்ப்பன்

தனிமையாய் இருக்கும் உணர்ச்சி உனக்கு எப்பொழுதாவது உண்டாகிறதா? — எவராவது உன்னை இனிமேலும் நேசிக்கிறார்களா என்று நீ எப்பொழுதாவது யோசனை செய்கிறாயா? —

அல்லது நீ எப்பொழுதாவது காணாமற்போயிருக்கிறாயா? — அப்பொழுது உனக்கு எப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டது? — அது உன்னைப் பயத்தால் கலங்கச் செய்யக்கூடும் அல்லவா? —

காணாமற்போன ஒன்றைப் பற்றி பெரிய போதகர் ஒரு சமயம் ஒரு கதை சொன்னார். ஆனால் காணாமற்போனது ஒரு பிள்ளை அல்ல. ஒரு செம்மறியாடே.

செம்மறியாடு என்றால் என்னவென்று உனக்குத் தெரியும் அல்லவா? — அது ஒரு சிறிய மிருகம். அதிலிருந்து மனிதனுக்குக் கம்பளி கிடைக்கிறது. சில விதங்களில் நீ ஒரு செம்மறியாட்டைப் போல் இருக்கிறாய். எப்படி?

செம்மறியாடுகள் பெரியவையோ பலமுள்ளவையோ அல்ல, அவை காணாமற்போகையில் பயந்து கலங்குகின்றன. அவற்றிற்கு அன்பும் தயவும் தேவை. உனக்குத் தேவையாக இருக்கிறது போலவே, அவற்றிற்கும் தங்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் எவராவது தேவை. ஆடுகளைப் பராமரித்து வருகிறவன் மேய்ப்பன் என்று அழைக்கப்படுகிறான்.

இயேசு தம்முடைய கதையில் நூறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்த ஒரு மேய்ப்பனைப் பற்றிச் சொன்னார். ஆனால் பின்பு அந்தச் செம்மறியாடுகளில் ஒன்று காணாமற்போயிற்று. மற்ற ஆடுகள் அந்த இடத்தை விட்டு செல்கையில் இது ஒருவேளை புல் மேய்வதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்திருக்கலாம். அல்லது வெறுமென குன்றின் அடுத்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்பியிருக்கக்கூடும். ஆனால் அந்தச் செம்மறியாடு தான் அறிவதற்கு முன்பாகவே, மற்ற ஆடுகளிடத்திலிருந்து தூரமாய்ப் போய்விட்டது. அந்தச் சிறிய ஆடு தன்னைச் சுற்றிலும் பார்த்து தான் தன்னந்தனியாய் இருப்பதைக் கண்டபோது என்ன விதமான உணர்ச்சியை அடைந்திருக்கும் என்று உன்னால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? —

அந்த ஒரு செம்மறியாடு இல்லை என்று மேய்ப்பன் காண்கையில் அவன் என்ன செய்வான்? எப்படியும் அதெல்லாம் அந்தச் செம்மறியாட்டின் குற்றம், ஆகவே தான் அதைப் பற்றிக் கவலை கொள்ளப்போகிறதில்லை என்று சொல்வானா? அல்லது அந்தத் தொண்ணூற்று ஒன்பது செம்மறியாடுகளை ஒரு பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு அந்த ஒரே ஒன்றிற்காகத் தேடிக்கொண்டு செல்வானா? இவ்வளவு அதிகக் கஷ்டம் எடுத்துக்கொள்வதற்கு அந்த ஒரு செம்மறியாடு தகுதியுள்ளதாக இருக்குமா? — காணாமற்போன அந்தச் செம்மறியாடாக நீ இருந்தால், அந்த மேய்ப்பன் உனக்காகத் தேடிவரவேண்டுமென்று நீ விரும்புவாயா? —

அந்த மேய்ப்பன் தன்னுடைய செம்மறியாடுகள் எல்லாவற்றையும், காணாமற்போன அந்த ஒன்றையுங்கூட மிக அதிகமாய் நேசித்தான். ஆகவே அவன் காணாமற்போன அந்த ஒன்றைத் தேடிக்கொண்டு சென்றான்.

தன் மேய்ப்பன் வருவதை அந்தக் காணாமற்போன செம்மறியாடு கண்டபோது எவ்வளவு சந்தோஷமடைந்திருக்கும் என்று நினைத்துப் பார். தன்னுடைய செம்மறியாட்டைக் கண்டுபிடித்துவிட்டதற்காக அந்த மேய்ப்பன் களிகூர்ந்தான் என்று இயேசு சொன்னார். காணாமற்போகாமலிருந்த அந்தத் தொண்ணூற்று ஒன்பது செம்மறியாடுகளின் பேரில் களிகூர்ந்ததைப் பார்க்கிலும் அதிகமாய் இதன்பேரில் களிகூர்ந்தான்.

இயேசுவின் கதையிலிருந்த அந்த மேய்ப்பனைப் போல் யார் இருக்கிறார்? தன்னுடைய செம்மறியாட்டிற்காக அந்த மேய்ப்பன் செய்ததுபோல் அவ்வளவு அதிகமாக யார் நமக்காகக் கவலை கொள்ளுகிறார்? — பரலோகத்திலிருக்கிற தம்முடைய தகப்பன் கவலை கொள்ளுகிறார் என்று இயேசு சொன்னார். அவருடைய தகப்பன் யெகோவா தேவனே.

யெகோவா தம்முடைய ஜனத்தின் பெரிய மேய்ப்பர். தம்மைச் சேவிக்கிற யாவரையும், உன்னைப் போன்ற சிறுவர்களையுங்கூட அவர் நேசிக்கிறார். நம் எவருக்கும் தீங்கு ஏற்படவோ நாம் அழிக்கப்படவோ அவர் விரும்புகிறதில்லை. கடவுள் நமக்காக அவ்வளவாய்க் கவலை கொள்ளுகிறார் என்பதை அறிவது மிகவும் நன்றாயிருக்கிறது அல்லவா? — —மத்தேயு 18:12-14.

யெகோவா தேவனில் உனக்கு உண்மையில் நம்பிக்கை இருக்கிறதா? — அவர் உனக்கு மெய்யான ஓர் ஆளாக இருக்கிறாரா? —

யெகோவாவை நாம் பார்க்க முடியாது என்பது மெய்யே. இது ஏனென்றால் அவர் ஆவியாக இருக்கிறார். நம்முடைய கண்களுக்குக் காணப்படாததாயிருக்கிற ஓர் உடலை அவர் உடையவராக இருக்கிறார். ஆனால் அவர் மெய்யான ஓர் ஆள், அவர் நம்மைப் பார்க்கக்கூடும்; நமக்கு உதவி தேவையாக இருக்கையில் அவருக்குத் தெரியும். உன் அப்பா அம்மாவினிடத்தில் நீ பேசுவது போலவே, நாம் ஜெபத்தில் அவரிடம் பேசலாம். நாம் அப்படிச் செய்யும்படியாக யெகோவா விரும்புகிறார்.

ஆகவே, நீ எப்பொழுதாவது விசனமாக அல்லது தன்னந்தனியாக இருப்பதாய் உணருவாயாகில், நீ என்ன செய்ய வேண்டும்? — யெகோவாவினிடம் பேசு. அவரிடம் நெருங்கு. அவர் உன்னை ஆறுதல்படுத்தி உனக்கு உதவி செய்வார். நீ தன்னந்தனியாக இருப்பதுபோல் உணரும்போதுங்கூட, யெகோவா உன்னை நேசிக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்.

இப்பொழுது நம்முடைய பைபிள்களை எடுக்கலாம். நம்முடைய இருதயத்தை அனல் மூட்டவேண்டிய ஒன்றை நாம் ஒன்றாக வாசிக்கப் போகிறோம். இருபத்திமூன்றாவது சங்கீதத்திற்குத் திருப்பு. முதல் வசனத்துடன் நாம் ஆரம்பிக்கலாம். a

அங்கே அது சொல்லுகிறது: யெகோவா “என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில்மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.”

தங்களுடைய கடவுள் யெகோவாவாக இருப்பாராகில் இந்த விதமாகவே ஜனங்கள் உணருகின்றனர். இந்த விதமாகவே நீயும் உணருகிறாயா? —

ஒரு அன்புள்ள மேய்ப்பன் தன்னுடைய மந்தையைப் பராமரித்து வருவது போலவே யெகோவா தம்முடைய ஜனத்தை நன்றாகப் பராமரித்து வருகிறார். அவர் அவர்களுக்குச் செய்கிற நல்ல காரியங்களினிமித்தமாக அவர்கள் புதுப் பெலன் ஊட்டப்பட்டவர்களாக உணருகின்றனர். போக வேண்டிய சரியான வழியை அவர் அவர்களுக்குக் காட்டுகிறார், அவர்கள் சந்தோஷமாய் அதைப் பின்பற்றுகிறார்கள். தங்களைச் சுற்றிலும் தொந்தரவு இருக்கையிலும், அவர்கள் பயப்படுகிறதில்லை. செம்மறியாடுகளுக்குத் தீங்கு செய்யக்கூடிய மிருகங்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்க ஒரு மேய்ப்பன் தன்னுடைய கோலை அல்லது தடியை உபயோகிக்கிறான். கடவுள் தங்களைப் பாதுகாப்பார் என்று கடவுளுடைய ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுள் தங்களுடன் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பில் இருப்பதாக உணருகின்றனர்.

யெகோவா உண்மையில் தம்முடைய செம்மறியாடுகளை நேசிக்கிறார், அவர்களை அவர் கனிவாக கவனித்து வருகிறார். ‘மேய்ப்பனைப் போல் அவர் தம்முடைய சொந்த செம்மறியாடுகளை வழிநடத்துவார். தம்முடைய புயங்களினால் ஆட்டுக் குட்டிகளை ஒன்றாகச் சேர்ப்பார். இளங்குட்டிகளைக் கவனமாய் நடத்திச் செல்வார்.’—ஏசாயா 40:11.

யெகோவா இப்படி இருக்கிறார் என்பதை அறிவது உனக்கு நல்ல உணர்ச்சியை உண்டாக்குகிறதல்லவா? — அவருடைய செம்மறியாடுகளில் ஒன்றாக இருக்க நீ விரும்புகிறாயா? —

செம்மறியாடுகள் தங்கள் மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவனுடன் அவை நெருங்கி இருந்து கொண்டிருக்கின்றன. நீ யெகோவாவுக்குச் செவிகொடுக்கிறாயா? — அவருடன் நெருங்கி இருந்துகொண்டிருக்கிறாயா? — அப்படியானால் நீ ஒருபோதும் பயப்பட அவசியமில்லை. யெகோவா உன்னுடன் இருப்பார்.

(தம்மை சேவிக்கிறவர்களை யெகோவா அன்புடன் பராமரிக்கிறார். இதைப்பற்றி சங்கீதம் 37:25, [36:25, டூ.வெ.]; 55:22 [54:23, டூ.வெ.]; ஏசாயா 41:10; லூக்கா 12:29-31 ஆகியவற்றில் பைபிள் சொல்வதை ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்.)

[அடிக்குறிப்புகள்]

a சங்கீதம் 22, டூயே வெர்ஷன்.