Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அரசராக வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’

‘அரசராக வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’

அதிகாரம் 39

‘அரசராக வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’

கர்த்தருடைய ஜெபம் உனக்குத் தெரியுமா? — நீ சொல்வதை நான் கேட்கட்டும். — உனக்கு ஞாபகமில்லை என்றால், பைபிளில் மத்தேயு ஆறாம் அதிகாரம், ஒன்பதிலிருந்து பதிமூன்றாவது வசனங்கள் வரையில் நாம் ஒன்றாக அதை வாசிப்போம்.

அந்த ஜெபத்தில், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று சொல்லப்படுகிறது. ராஜ்யம் என்றால் என்ன? உனக்குத் தெரியுமா? —

ராஜ்யமானது ஒரு அரசாங்கமே. இது என்னவென்று உனக்குத் தெரியும், அல்லவா? — அரசாங்கமானது ஒரு நாட்டை ஆளும் ஆட்களைக் கொண்ட ஒரு தொகுதியே.

ஒரு அரசாங்கத்தில் ஒரு தலைமை ஆள் அல்லது ஆளுபவன் இருக்கிறான். சில நாடுகளில் இந்த ஆள் ஜனாதிபதி என்று அழைக்கப்படுகிறான். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தை ஆளுபவர் என்னவாக அழைக்கப்படுகிறார் என்று உனக்குத் தெரியுமா? — அவர் அரசர்.

கடவுளுடைய ராஜ்யத்திற்கு யெகோவா தாமே அரசரைத் தெரிந்தெடுத்திருக்கிறார். அந்த அரசர் யார் என்று உனக்குத் தெரியுமா? — அவர் இயேசு கிறிஸ்துவே. மனிதர் தெரிந்தெடுக்கும் எந்த அரசரைப் பார்க்கிலும் அவர் மேலானவர். அந்த அரசர்கள் எவரைப் பார்க்கிலும் இயேசு அதிக அதிகாரத்தை உடையவராக இருக்கிறார். மேலும் இயேசு உண்மையில் கடவுளை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் சரியானதைச் செய்கிறார்.

வெகு காலத்திற்கு முன்பாக இஸ்ரவேலில் புதிய அரசர்கள், தங்களை ஜனங்களுக்குக் காட்டும்படியாக, எருசலேமுக்குள் ஒரு கழுதைக்குட்டியின் மேல் ஏறிச் செல்வார்கள். இயேசு இதையே செய்தார்.

எருசலேமை அடுத்து வெளியே ஒரு சிறிய கிராமம் இருந்தது. இயேசு அதற்கு அருகில் வந்தபோது தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: ‘அந்தக் கிராமத்துக்குப் போங்கள். அங்கே ஒரு கழுதைக்குட்டியைக் காண்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்,’ என்று சொன்னார்.

இயேசு சொன்னபடியே அந்த சீஷர்கள் செய்தார்கள். அந்தக் கழுதைக் குட்டியை இயேசுவினிடத்தில் அவர்கள் கொண்டுவந்தபோது, அவர் அதன் மேல் உட்கார்ந்தார். அவர் எருசலேமுக்கு அருகில் வந்து சேர்ந்தபோது, ஒரு திரள் கூட்டமான ஜனங்கள் அவருக்கு வரவேற்பளிக்க வெளியே வந்தனர்.

இயேசு சவாரி செய்துகொண்டு போகையில், அந்தக் கூட்டத்திலிருந்த பெரும்பான்மையோர் அவருக்கு முன்பாகப் பாதையில் தங்கள் மேல்வஸ்திரங்களை விரிக்க ஆரம்பித்தனர். மற்றவர்கள் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவற்றைப் பாதையில் போட்டனர். இதன் மூலம் அவர்கள், இயேசுவை அரசராகக் கொள்ள தாங்கள் விரும்பினதைக் காட்டினார்கள்.

இயேசுவை வரவேற்க ஜனங்கள் சந்தோஷப்பட்டனர். ‘யெகோவாவின் பெயரில் அரசராக வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!’ என்று அவர்கள் சத்தமிட்டுக் கூறினர்.

ஆனால், இயேசு அரசராக எருசலேமுக்குள் சவாரி சென்று கொண்டிருந்ததில் எல்லோரும் சந்தோஷப்படவில்லை. சிலர் இயேசுவினிடத்தில், ‘பேசாமலிருக்கும்படி உம்முடைய சீஷருக்குச் சொல்லும்,’ என்றுங்கூட சொன்னார்கள்.—லூக்கா 19:28-40.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டிருப்பதைப் பற்றி நீ எப்படி உணருகிறாய்? — இயேசு எருசலேமுக்குள் சவாரிசென்றபோது நீ வாழ்ந்து இருந்திருப்பாயானால், நீ அவரை, தம்முடைய ஜனத்துக்கு யெகோவாவால் அனுப்பப்பட்டவராக வரவேற்றிருப்பாயா? —

இயேசு இன்று பூமியில் இல்லை, அல்லவா? — அவர் பரலோகத்தில் இருக்கிறார். அங்கே பரலோகத்திலிருந்தே அவர் அரசராக ஆளுகை செய்கிறார். நாம் அவரைப் பார்க்கமுடியாதபோதிலுங்கூட, இங்கே பூமியில் இருக்கும் நம் ஒவ்வொருவரையும் அவர் பார்க்கக்கூடும். நாம் அவரை ஏமாற்ற முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் காண்கிறார், நாம் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையுங்கூட அவர் அறிகிறார். நாம் உண்மையில் யெகோவா தேவனை நேசிக்கிறோம் என்றால், அதை அவர் அறிந்திருக்கிறார். பைபிள் சொல்வதைச் செய்ய கடினமாய்ப் பிரயாசப்படுகிறோம் என்றால், அவர் நமக்கு உதவி செய்வார். அவரை என்றும் உன் அரசராகக் கொண்டிருக்க உனக்குப் பிரியமா? —

கிறிஸ்து அரசராக இருக்க எல்லோரும் விரும்புகிறதில்லை. தாங்கள் கடவுளில் நம்புவதாக அவர்கள் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அவர்களுக்கு அவருடைய ராஜ்யம் வேண்டியதில்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குச் சொல்ல கடவுளோ கிறிஸ்துவோ அவர்களுக்கு வேண்டாம். அவர்களுடைய சொந்த அரசாங்கங்களே இங்கே பூமியிலேதானே அவர்களுக்கு வேண்டும். ஆகவே அவர்களுக்கு என்ன சம்பவிக்கப் போகிறதென்று உனக்குத் தெரியுமா? —

தானியேல் இரண்டாம் அதிகாரம், நாற்பத்திநான்காம் வசனத்தில் பைபிள் நமக்குப் பதிலைக் கொடுக்கிறது. நாம் நம்முடைய பைபிள்களை எடுத்து, அதை ஒன்றாகத் திருப்பிப் பார்க்கலாம். “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” இவ்வாறு சொல்கையில் இந்த வேத வசனம் நம்முடைய சொந்த நாளைப் பற்றிப் பேசுகிறது.

உனக்கு இது விளங்குகிறதா? — கடவுளுடைய அரசாங்கம், பூமிக்குரிய இந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் அழிக்கப்போகிறது என்று பைபிள் சொல்லுகிறது. ஏன்? — ஏனென்றால் கடவுள் அரசராக்கியிருக்கிறவருக்கு அவை கீழ்ப்படிகிறதில்லை.

பூமி முழுவதும் கடவுளுக்கே சொந்தமானது. அவர் அதையும் அதோடுகூட இந்த முழு பிரபஞ்சத்தையும் உண்டாக்கினார். ஆகவே என்ன வகையான அரசாங்கம் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை அவருக்கே இருக்கிறது. அவருடைய அரசாங்கமே மிகச் சிறந்தது. சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யமே இருக்கும் ஒரே அரசாங்கமாக இருக்கும்.

கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் என்றுமாக வாழ்ந்திருக்க உனக்குப் பிரியமா? — எனக்குப் பிரியம். ஆனால் இதை நாம் கடவுளுக்கு நிரூபிக்க வேண்டும். எப்படியென்று உனக்குத் தெரியுமா? — கடவுளுடைய சட்டங்களைக் கற்று, அவற்றிற்கு ஒவ்வொரு நாளும் கீழ்ப்படிந்து வருவதன் மூலமே.

தம்முடைய ராஜ்யம் மனிதரின் இந்த அரசாங்கங்களை அழித்துப்போடும் என்று கடவுள் சொல்லுகிறார். ஆனால் அதை நாம் செய்ய வேண்டுமென்று அவர் நமக்குச் சொல்லுகிறாரா? — இல்லை. அந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்யும்படி கடவுள் அனுமதித்திருக்கும் வரையாக, நாம் மனிதருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் சொல்லுகிறது.

ஆனால் நாம் கிறிஸ்துவை அரசராகக் கொண்டிருக்க விரும்புகிறோமென்றால், நாம் அதைப் பார்க்கிலும் அதிகம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. கிறிஸ்து சொன்ன எல்லாவற்றிற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும். நாம் ‘இவ்வுலகத்தின் பாகமாக’ இருக்கக் கூடாது என்று அவர் சொன்னார். இவ்வுலகத்தின் அரசாங்கங்களின் ஒரு பாகமாயிருக்க நாம் முயலுவோமானால் நாம் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருப்போமா? — இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு விலகியிருந்தனர்.—யோவான் 17:14.

அதற்குப் பதிலாக அவர்கள் என்ன செய்தார்கள்? — கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்ற ஆட்களிடத்தில் அவர்கள் பேசினார்கள். அதுவே அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய வேலையாக இருந்தது. நாமுங்கூட அதைச் செய்ய முடியுமா? — முடியும், கடவுளுடைய ராஜ்யம் வரும்படியாக ஜெபிக்கையில் நாம் சொல்வதை உண்மையில் கருதுவோமானால் நாம் அதைச் செய்வோம்.

(கடவுள் அரசராக்கியிருக்கிறவரை நாம் எப்படிக் கருத வேண்டும் என்பதைக் காட்டும் மேலுமான இந்த வேத வசனங்களை வாசிக்க இன்னும் ஒரு சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்: ஏசாயா 9:6, 7; தானியேல் 7:13, 14; யோவான் 18:36; மத்தேயு 6:33.)