Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார்

இயேசு நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார்

அதிகாரம் 40

இயேசு நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார்

உனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள், அல்லவா? — ஆனால் ஒருவேளை அவர்கள் உண்மையான அபாயத்தில் இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அமிழ்ந்து கொண்டிருந்த ஒரு படகில் இருந்தார்கள் என்றால் எப்படி? உன்னால் கூடுமானால் அவர்களைக் காப்பாற்ற நீ விரும்பியிருப்பாயா? — அவர்களுக்கு உதவி செய்கையில், நீ தானேயும் மரித்துவிடக் கூடும் என்றாலுங்கூட அப்படிச் செய்திருப்பாயா? — மற்ற ஆட்களைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைக் கொடுக்க முன்வரும் ஓர் ஆள், தான் அவர்களை மிக அதிகமாய் நேசிப்பதைக் காட்டுகிறான்.

இயேசு நமக்காக இந்த வகையான அன்பை உடையவராக இருந்தார் என்று நிரூபித்தார். தாம் பரலோகத்தை விட்டுவிட்டு நமக்காக மரிக்கும்படி பூமிக்கு அனுப்பப்பட மனமுள்ளவராக இருந்தார். அவர் நமக்காக மரித்தார் என்பது உனக்குத் தெரியுமா? —

இதை அவர் எப்படிச் செய்தார் என்பதைக் கேட்க உனக்குப் பிரியமா? — நாம் நேராக அங்கே இருந்து நடப்பதைக் காணக்கூடியவர்களாக இருப்பதாய்ப் பாவனை செய்து கொள்ளலாம்.

அது எருசலேமில் இளவேனிற்கால ஓர் இரவின் வெகு பிந்தினநேரம். சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாயும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. நாம் நகரத்தைப் பார்க்கையில், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் அந்தப் பெரிய வாசல் வழியாய் நடந்து நகரத்தை விட்டுப் போவதைக் காண்கிறோம். ஒலிவமலை என்று அழைக்கப்படுகிற ஒரு குன்றிற்கு அவர்கள் வந்து ஒரு தோட்டத்திற்குள் செல்கின்றனர். நாம் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வோமா? —

நாம் கவனித்துக்கொண்டிருக்கையில், இயேசு தம்முடைய சீஷர்களை விட்டுப் போய் தம்முடைய தகப்பனிடம் ஜெபிப்பதற்காக முழங்காற்படியிடுவதைக் காண்கிறோம். இதை அவர் மூன்று தடவைகள் செய்கிறார். மேலும் ஒவ்வொரு தடவையும் அவர் திரும்பி வந்து, அவருடைய சீஷருங்கூட ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லுகிறார். ஏன்? என்ன நடக்கப் போகிறது? —

பார்! அந்த மனிதர் தோட்டத்தை நோக்கி வருவதை நீ காண்கிறாயா? அவர்களில் சிலர் விளக்குகளை வைத்திருக்கின்றனர். மற்றவர்கள் தடிகளை வைத்திருக்கின்றனர். பட்டயங்களுடன் போர்ச் சேவகர் அங்கே இருக்கின்றனர். அவர்கள் மிகவும் பகைமை தோற்றத்துடன் காணப்படுகிறார்கள். கட்டாயமாய் இயேசு அவர்கள் வருவதைப் பார்த்திருக்க வேண்டும். அவர் ஓடிப்போக முயல வேண்டாமா? —

இயேசு அவர்களைக் காண்கிறார், ஆனால் அவர் ஓடிப்போகவில்லை. இப்பொழுது அந்தப் போர்ச் சேவகர் வந்து இயேசுவைக் கைது செய்கின்றனர். அவர்கள் தம்மைக் கொண்டுபோக அவர் அனுமதிப்பரா? அவர் தம்முடைய தகப்பனை நோக்கிக் கூப்பிடலாம். கடவுள் அவருக்கு ஆயிரக்கணக்கான தூதர்களை அனுப்பக்கூடும். அவர்கள் இந்த மனிதரை ஒன்றிரண்டு விநாடிக்குள் அழித்துப் போடக்கூடும். நீ இயேசுவாக இருந்திருப்பாயானால், தேவ தூதர்களை அனுப்பும்படி கேட்டிருப்பாயா? —

ஆனால் இயேசு இந்த மனிதர் தம்மைக் கொண்டுபோக அனுமதிக்கிறார். ஏன்? — ஏனென்றால் அவர் நமக்காக மரிக்க மனமுள்ளவராக இருக்கிறார். இதைப் பார்க்கிலும் அதிக முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. ‘கடவுளுடைய வார்த்தை உண்மையாக வேண்டும்,’ என்று அவர் சீஷனாகிய பேதுருவுக்குச் சொல்லுகிறார். மனிதவர்க்கத்திற்காக இயேசு தம்முடைய உயிரைக் கொடுப்பார் என்று ஏற்கெனவே பைபிளில் எழுதப்பட்டிருந்ததே.

இயேசுவின் சீஷர்கள் இப்பொழுது பயமடைந்து ஓடிப்போகிறார்கள். போர்ச் சேவகர் இயேசுவைத் திரும்ப நகரத்திற்குக் கொண்டுசெல்கின்றனர். நாம் அவர்களைப் பின் தொடர்ந்து என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

அவர்கள் இயேசுவைத் தலைமை ஆசாரியர்களுக்கு முன்பாகக் கொண்டுசெல்கின்றனர். இந்த ஆசாரியர்கள் பைபிளைக் கற்பிக்கிறதில்லை என்று இயேசு ஜனங்களுக்குக் காட்டி வந்திருப்பதன் காரணமாக இவர்கள் இயேசுவைப் பகைக்கின்றனர்.

இந்த ஆசாரியர்கள் ஒரு விசாரணை நடத்துகின்றனர். இயேசுவைப் பற்றிப் பொய்களைச் சொல்லும் மனிதரை அவர்கள் உள்ளே கொண்டுவருகின்றனர். இயேசு ஏதோ குற்றம் செய்திருக்கிறார் என்று நிரூபிக்க முயற்சி செய்பவர்களாய் அவர்கள் அவரைக் கேள்விகள் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் அவருக்கு விரோதமாக ஒரு காரியத்தையும் நிரூபிக்க முடிகிறதில்லை. பின்பு அந்த ஆசாரியர்கள் இயேசுவினிடம்: “நீ தேவனுடைய குமாரனா?’ என்று கேட்கின்றனர். இயேசு: ‘நான் அவரே,’ என்று பதில் சொல்லுகிறார். அந்த ஆசாரியர்கள் கோபமூண்டு: ‘அவன் குற்றமுள்ளவன்! அவன் கொல்லப்படவேண்டும்!’ என்று சொல்லுகின்றனர். மற்ற எல்லோரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஆகவே அங்கே இருந்த மனிதரில் சிலர் இயேசுவைக் கேலிப்பண்ண ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அவர்மேல் துப்பி தங்கள் கைமுட்டிகளால் அவரைக் குட்டுகிறார்கள். பைபிளிலிருந்த சத்தியத்தைத் தாம் கற்பித்ததற்காக இயேசு வருந்தத் தொடங்குகிறாரா? நீ எப்படி உணர்ந்திருப்பாய்? —

இயேசு வருந்துகிறதில்லை, குறை கூறுகிறதுமில்லை, பதிலுக்குத் திரும்ப அடிக்கிறதுமில்லை.

இப்பொழுது விடியற்காலம் வருகிறது. இயேசு இரவு முழுவதும் விழித்திருந்திருக்கிறார். ஆசாரியர்கள் இப்பொழுது இயேசுவைக் கட்டி, தேசாதிபதியாகிய பிலாத்துவினிடம் நடத்திக்கொண்டு செல்கின்றனர்.

அவர்கள் பிலாத்துவினிடம்: ‘இயேசு அரசாங்கத்திற்கு விரோதி. அவன் கொல்லப்படவேண்டும்,’ என்று சொல்கின்றனர். ஆனால் அந்த ஆசாரியர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்று பிலாத்து காணக்கூடியவனாக இருக்கிறான். ஆகவே பிலாத்து அவர்களிடம்: ‘இந்த மனிதனில் நான் ஒரு குற்றத்தையும் காண்கிறதில்லை. நான் அவனைப் போக விடுவேன்,’ என்று சொல்லுகிறான். ஆனால் ஆசாரியர்களும் மற்றவர்களும்: ‘இல்லை! அவனைக் கொல்லும்!’ என்று கூக்குரலிடுகின்றனர்.

பின்னால், பிலாத்து, தான் இயேசுவை விடுதலை செய்ய போவதாக ஜனங்களிடம் சொல்ல மறுபடியுமாக முயற்சி செய்கிறான். ஆனால் ஆசாரியர்கள்: ‘நீர் அவனைப் போக விடுவீரானால் நீருங்கூட அரசாங்கத்திற்கு விரோதியாக இருப்பீர்! அவனைக் கொல்லும்!’ என்று கூக்குரலிடும்படி ஜனக் கூட்டங்களைத் தூண்டிவிடுகின்றனர். மிகுந்த கூச்சல் உண்டாகிறது. பிலாத்து என்ன செய்வான்?

அவன் இணங்கிப் போகிறான். முதலாவதாக அவன், இயேசு வாரினால் அடிக்கப்படும்படிச் செய்கிறான். பின்பு அவர் கொல்லப்படும்படி அவரை போர்ச் சேவகரிடத்தில் ஒப்புவிக்கிறான்.

சுமந்துகொண்டு போகும்படி ஒரு பெரிய கம்பத்தை அல்லது கழுமரத்தை அவர்கள் இயேசுவுக்குக் கொடுக்கின்றனர். கடைசியாக அவர்கள், நகரத்திற்கு வெளியில் இருக்கும் கபாலஸ்தலம் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்கின்றனர். அங்கே அவர்கள் இயேசுவின் கைகளையும் பாதங்களையும் கழுமரத்தோடு சேர்த்து ஆணி அறைகின்றனர். பின்பு இயேசு அதில் தொங்கிக் கொண்டிருக்கும்படியாக அதை அவர்கள் நிறுத்தி வைக்கின்றனர். அவருக்கு இரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது. மிக அதிக வேதனையாக இருக்கிறது.

இயேசு உடனே மரித்து விடவில்லை. அவர் அங்கே கழுமரத்தில் வெறுமென தொங்கிக் கொண்டிருக்கிறார். தலைமை ஆசாரியர்கள் அவரைக் கேலி செய்கின்றனர். ‘நீ கடவுளுடைய ஒரு குமாரனானால், கழுமரத்திலிருந்து இறங்கி வா!’ என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் தான் என்ன செய்யும்படி தன் தகப்பன் தன்னை அனுப்பினார் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். நித்திய ஜீவனை அடையும்படி நமக்கு வாய்ப்பு கிடைக்கும்படியாக அவர் தம்முடைய பரிபூரண உயிரைக் கொடுக்க வேண்டுமென்று அவர் அறிந்திருக்கிறார். கடைசியாக, பிற்பகல் ஏறக்குறைய மூன்று மணிக்கு, இயேசு தம்முடைய தகப்பனை நோக்கிக் கூப்பிட்டு மரணமடைகிறார்.—மத்தேயு 26:36–27:50; லூக்கா 22:39–23:46; யோவான் 18:1–19:30.

இயேசு ஆதாமிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவராக இருந்தார்! ஆதாம் கடவுளிடத்தில் அன்பைக் காட்டவில்லை. அவன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போனான். ஆதாம் நம்மிடத்திலுங்கூட அன்பைக் காட்டவில்லை. அவன் பாவம் செய்ததனால், நாமெல்லோரும் நம்மில் பாவமுள்ளவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். ஆனால் இயேசு கடவுளிடத்திலும் நம்மிடத்திலும் அன்பைக் காட்டினார். அவர் எப்பொழுதும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். ஆதாம் நமக்குச் செய்திருந்தத் தீங்கைத் தாம் நீக்கிப் போடும்படியாக அவர் தம்முடைய உயிரைக்கொடுத்தார்.

இயேசு எப்பேர்ப்பட்ட அதிசயமான காரியத்தைச் செய்தார் என்பதை நீ நன்றியோடு மதிக்கிறாயா? — நீ கடவுளிடத்தில் ஜெபிக்கையில், அவருடைய குமாரன் செய்த இந்தக் காரியத்திற்காக நீ அவருக்கு நன்றி செலுத்துகிறாயா? — இது நீ அதை நன்றியோடு மதிப்பதைக் காட்டும். மேலும் பெரிய போதகர் சொல்வதை நாம் உண்மையில் செய்வோமானால் அவர் நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்ததை நாம் எவ்வளவு அதிக நன்றியோடு மதிக்கிறோம் என்பதை நாம் இன்னும் அதிகமாகக் காட்டுவோம்.

(இயேசு நமக்காகச் செய்த அதற்கு நம்முடைய நன்றியுணர்வைப் பெருகச் செய்ய யோவான் 3:16; ரோமர் 5:8, 19; 1 தீமோத்தேயு 2:5, 6; மத்தேயு 20:28 ஆகியவற்றை வாசியுங்கள்.)