Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இவர் என்னுடைய குமாரன்”

“இவர் என்னுடைய குமாரன்”

அதிகாரம் 5

“இவர் என்னுடைய குமாரன்”

ஒவ்வொருவருக்கும் ஒரு தகப்பன் இருக்கிறார். உனக்கு ஒரு தகப்பன் இருக்கிறார். எனக்கும் ஒரு தகப்பன் இருக்கிறார். ஒரு பெண்பிள்ளை நல்ல காரியங்களைச் செய்கையில், அவளுடைய தகப்பன் மற்றவர்களிடம்: “இவள் என்னுடைய மகள்,” என்று சொல்வதில் பிரியங்கொள்கிறார். ஒரு பையன் சரியானதைச் செய்கையில் அவனுடைய தகப்பன்: “இவன் என்னுடைய மகன்,” என்று சொல்வதில் பெருமை கொள்கிறார்.

இயேசு எப்பொழுதும் தம்முடைய தகப்பனுக்குப் பிரியமானதையே செய்கிறார். ஆகவே அவருடைய தகப்பன் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகிறவராக இருக்கிறார். இயேசுவின் தகப்பன் என்ன செய்தார் என்று உனக்குத் தெரியுமா?“இவர் என்னுடைய குமாரன்” என்று மனிதருக்குச் சொல்லும்படி அவர் தூர பரலோகத்திலிருந்தேயுங்கூட பேசினார்.

இயேசு தம்முடைய தகப்பனை உண்மையில் நேசிக்கிறார். தாம் பூமிக்கு வருவதற்கு முன்பாகவேயுங்கூட அவர் இதைக் காட்டினார். பரலோகத்தில் தம்முடைய தகப்பனாகிய யெகோவா தேவனோடு அவருக்கு ஒரு அதிசயமான இடம் இருந்தது. ஆனால் இயேசு செய்யும்படி அவருக்கு ஒரு விசேஷித்த வேலையைக் கடவுள் வைத்திருந்தார். இந்த வேலையைச் செய்ய, இயேசு பரலோகத்தைவிட்டுப் போகவேண்டியதாக இருந்தது. அவர் பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டியதாயிருந்தது. இயேசு இதைச் செய்ய மனவிருப்பமுள்ளவராக இருந்தார். ஏனென்றால் அவர் அதைச் செய்யும்படி யெகோவா விரும்பினார்.

பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்க இயேசுவுக்கு ஒரு தாய் இருக்கவேண்டியதாக இருந்தது. அவருடைய தாய் யார் என்று உனக்குத் தெரியுமா?அவளுடைய பெயர் மரியாள்.

மரியாளிடம் பேசும்படி யெகோவா தம்முடைய தூதனாகிய காபிரியேலை பரலோகத்திலிருந்து அனுப்பினார். காபிரியேல் மரியாளிடம் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கப்போகிறது என்று சொன்னான். அந்தக் குழந்தை இயேசு என்று பெயரிடப்படவேண்டும். அந்தக் குழந்தையின் தகப்பன் யாராக இருப்பார்?யெகோவா தேவனே அந்தக் குழந்தையின் தகப்பனாக இருப்பார் என்று தேவதூதன் சொன்னான். இதன் காரணமாகவே இயேசு கடவுளுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்.

இதைப்பற்றி மரியாள் என்ன விதமாக உணர்ந்தாள் என்று நீ நினைக்கிறாய்?‘அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை,’ என்று அவள் சொன்னாளா? ‘இயேசுவின் தாயாக இருக்க எனக்கு மனமில்லை,’ என்று சொன்னாளா?

இல்லை, கடவுள் விரும்பினதைச் செய்ய மரியாள் ஆயத்தமாக இருந்தாள். கடவுளுடைய தூதன் சொல்வதற்குச் செவிகொடுக்க அவள் முற்றிலும் மனமுள்ளவளாக இருந்தாள். அது கடவுளுக்குச் செவிகொடுப்பது போல் இருந்தது! மரியாள் கடவுளுக்குச் செவிகொடுக்க விரும்பினாள். அவள் கடவுளை நேசித்தாள். அவள் என்ன செய்யும்படி யெகோவா தேவன் விரும்பினாரோ அதைச் செய்ய அவள் சந்தோஷமுள்ளவளாக இருந்தாள்.

ஆனால் பரலோகத்திலிருந்தத் தம்முடைய குமாரன் பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்கும்படி யெகோவா எப்படிச் செய்யக்கூடும்?யெகோவா எங்கும் மிக அதிக வல்லமை வாய்ந்தவர். வேறு எவரும் செய்யமுடியாத காரியங்களை அவர் செய்யமுடியும். ஆகவே யெகோவா தம்முடைய குமாரனின் உயிரை பரலோகத்திலிருந்து எடுத்து அதை மரியாளுக்குள்ளே வைத்தார். மற்றக் குழந்தைகள் தங்கள் தாய்மாருக்குள் வளர்ந்து வருவது போலவே இயேசு மரியாளுக்குள் வளர ஆரம்பித்தார். அதன்பின்பு மரியாள் யோசேப்பை விவாகஞ்செய்துகொண்டாள்.

பின்பு இயேசு பிறப்பதற்கான காலம் வந்தது. அவர் பெத்லகேம் ஊரில் பிறந்தார். மரியாளும் அவளுடைய கணவனாகிய யோசேப்பும் அந்த ஊருக்குப் போயிருந்தனர். பெத்லகேம் ஜனங்களால் நிறைந்திருந்தது. இயேசு பிறந்த அந்த இரவிலே மரியாளும் யோசேப்பும் தங்குவதற்கு ஒரு அறையுங்கூட இருக்கவில்லை. குழந்தையாகிய இயேசுவை அவர்கள் ஒரு முன்னணையில் கிடத்தவேண்டியதாக இருந்தது. முன்னணையானது, பசுக்களும் மற்ற மிருகங்களும் உண்பதற்கு உணவைக் கொள்ளும் ஓர் இடமாகும்.

இயேசு பிறந்த அந்த இரவிலே பரபரப்பூட்டும் காரியங்கள் நடந்தன. பெத்லகேமுக்கு அருகில் ஒரு தூதன் சில மேய்ப்பர்களிடம் பேசினான். இயேசு எப்பேர்ப்பட்ட ஒரு முக்கிய ஆள் என்பதை அவன் அந்த மேய்ப்பருக்குக் கூறினான். அவன் சொன்னதாவது: ‘இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஒருவர் பிறந்திருக்கிறார், அவர் ஜனங்களை இரட்சிப்பார்.’ கடவுளை நேசிக்கும் ஜனங்களுக்கு இயேசு பல நல்ல காரியங்களைச் செய்வார்.—லூக்கா 2:10, 11.

இது நற்செய்தியாக இருந்தது! பரலோகத்திலிருக்கும் மற்ற தூதர்களும் கடவுளைத் துதிப்பதில் ஒன்றாகச் சேர்ந்துகொண்டனர். அவர்கள் சந்தோஷப்பட்டனர்! அவர்கள் சொன்னதை அந்த மேய்ப்பர்கள் கேட்கமுடிந்தது.

இப்பொழுது இந்த மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பினர். அவர்கள் இயேசுவைப் பெத்லகேமில் காணலாம் என்று அந்தத் தூதன் அவர்களுக்குச் சொன்னான். ஆகவே அவர்கள் அங்கே சென்றனர். மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்க்க அங்கே வந்து சேர்ந்தபோது, தாங்கள் கேட்ட எல்லா நல்ல காரியங்களையும் யோசேப்புக்கும் மரியாளுக்கும் சொன்னார்கள். இது யோசேப்பும் மரியாளும் கடவுளுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கும்படி செய்தது. தான் இயேசுவின் தாயாக இருக்க மனமுள்ளவளாக இருந்ததற்காக மரியாள் எவ்வளவு சந்தோஷமுள்ளவளாக இருந்தாள் என்பதை நீ கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

பின்னால், யோசேப்பும் மரியாளும் இயேசுவை நாசரேத்தூருக்குக் கொண்டுசென்றனர். அங்கேதான் இயேசு வளர்ந்து வந்தார். அவர் பெரியவராக வளர்ந்தபோது, தம்முடைய பெரிய போதக வேலையை ஆரம்பித்தார். இது பூமியில் தம்முடைய குமாரன் செய்யும்படி யெகோவா தேவன் விரும்பிய வேலையின் ஒரு பாகமாக இருந்தது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கப்பால், இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களில் சிலரும் ஓர் உயர்ந்த மலையின் மேல் ஏறினார்கள். அங்கே என்ன நடந்தது?மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், இயேசுவின் உடைகள் பளிச்சென்று பிரகாசிக்க ஆரம்பித்தன. அப்பொழுது கடவுளுடைய சொந்தக் குரல் கேட்டது. யெகோவா இயேசுவைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “இவர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர்.” கடவுள் தம்முடைய குமாரன் பேரில் பிரியமடைந்தவராக இருந்தார்.—மாற்கு 9:2-8.

இயேசு எப்பொழுதும் சரியானதையே செய்தார். தான் உண்மையில் இல்லாத ஒருவரைப் போல் தம்மைக் காண்பித்துக்கொள்பவராய் அவர் பாசாங்கு செய்யவில்லை. தான் கடவுள் என்று அவர் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. இயேசு கடவுளுடைய குமாரன் என்னப்படுவார் என்றே காபிரியேல் தூதன் மரியாளுக்குச் சொல்லியிருந்தான். இயேசுதாமே, தான் கடவுளுடைய குமாரன் என்று சொன்னார். தம்முடைய தகப்பனைப் பார்க்கிலும் தமக்கு அதிகம் தெரியுமென்று அவர் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. “என் பிதா என்னிலும் பெரியவரா”யிருக்கிறார் என்றே அவர் சொன்னார்.—யோவான் 14:28.

இயேசுவின் தகப்பன் அவருக்கு வேலை கொடுத்தபோது, இயேசு அதைச் செய்தார். ‘சரி, நான் செய்கிறேன்,’ என்று சொல்லிவிட்டு, பின்பு வேறு எதையாகிலும் அவர் செய்யவில்லை. அவர் தம்முடைய தகப்பனை நேசித்தார். ஆகவே தம்முடைய தகப்பன் சொன்னவற்றிற்கு அவர் செவிகொடுத்தார்.

நாமுங்கூட யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிறோம் அல்லவா?அப்படியானால், இயேசு செய்ததுபோல நாம் உண்மையில் கடவுளுக்குச் செவிகொடுக்கிறோம் என்பதைக் காட்டவேண்டும். பைபிளின் மூலமாய்க் கடவுள் நம்மிடம் பேசுகிறார். கடவுளுக்குச் செவிகொடுப்பது போல் பாசாங்கு செய்துகொண்டு, பின்பு பைபிளுக்கு எதிர்மாறான காரியங்களை நம்பி செய்துவருவது சரியாக இராது அல்லவா?நாம் யெகோவாவை உண்மையில் நேசிப்போமானால் அவரைப் பிரியப்படுத்துவதைக் கடினமாகக் காணமாட்டோம் என்பதை நினைவில் வை.

(இயேசுவைப் பற்றி பைபிள் உண்மையில் சொல்வதை நாம் ஏன் தெரிந்துகொள்ளவும், நம்பவும்வேண்டியது என்பதைக் காட்டும் மற்ற வசனங்கள்: மத்தேயு 7:21-23; 1 தீமோத்தேயு 2:5, 6; யோவான் 4:25, 26.)