உண்மை பேசாத இருவர்
அதிகாரம் 17
உண்மை பேசாத இருவர்
“சரி, பள்ளிக்கூடம் முடிந்தவுடனே நான் வீட்டுக்கு வந்து விடுகிறேன்,” என்று ஒரு பெண் தன் தாய்க்கு வாக்கு கொடுக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பின்பு மற்றப் பிள்ளைகள் அவளை, இருந்து தங்களுடன் விளையாடும்படி கேட்கின்றனர். அவ்விதம் இருந்து விடுவது சரியாகுமா? — கொஞ்ச நேரம் மட்டுமே அவ்விதம் இருப்பது சரியா? —
அல்லது ஒருவேளை ஒரு பையன், “நான் இனிமேல் பந்தை வீட்டிற்குள் எறிய மாட்டேன்,” என்று தன் தகப்பனுக்கு வாக்கு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். தன் தகப்பன் பார்க்காதபோது இன்னும் ஒரு சில தடவைகள் மாத்திரமே வீட்டிற்குள் அதை எறிவது சரியாயிருக்குமா? —
செய்ய வேண்டிய சரியான காரியம் என்னவென்பதைப் பெரிய போதகர் காட்டினார். அவர் சொன்னதாவது: “உங்கள் பேச்சில் ஆம் என்பதை ஆம் எனவும் இல்லை என்பதை இல்லை எனவும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயோனால் விளைவதேயாம்.”—மத்தேயு 5:37.
இதன் மூலம் இயேசு கருதினது என்ன? — நாம் எப்பொழுதும் நம்முடைய வாக்குகளைத் தவறாமல் நிறைவேற்றவேண்டும்; நாம் எப்பொழுதும் உண்மையைப் பேசவேண்டும் என்பதையே கருதினார்.
உண்மை பேசுவது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிற ஒரு கதை இருக்கிறது. இது தங்களை இயேசுவின் சீஷர்களென்று சொல்லிக் கொண்ட இரண்டு ஆட்களைப் பற்றியது.
இயேசுவின் மரணத்திற்குச் சிறிது காலத்திற்கப்பால், பலர் அவருடைய சீஷர்களானார்கள். இவர்களில் சிலர் தூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தனர். இங்கே முதல் தடவையாக அவர்கள் இயேசுவைப் பற்றிக் கற்றிருந்தார்கள். மேலும் அதிகம் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். இதன் பலனாக அவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நீண்ட காலம் எருசலேமில் தங்கிவிட்டார்கள். இவர்களில் சிலருக்குப்
பணம் செலவாகிவிட்டது. உணவு வாங்குவதற்கு உதவி தேவையாக இருந்தது.எருசலேமிலிருந்த சீஷர்கள் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினர். ஆகவே, இந்த சீஷர்களில் பலர் தங்களுக்குச் சொந்தமாயிருந்த பொருட்களை விற்று அந்தப் பணத்தை இயேசுவின் அப்போஸ்தலரிடத்தில் கொண்டுவந்தார்கள். பின்பு அப்போஸ்தலர் அந்தப் பணத்தைத் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள்.
அனனியா என்ற ஒரு சீஷனும் அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுக்குச் சொந்தமாயிருந்த ஒரு நிலத்தை விற்றார்கள். அவர்கள் அதை விற்கவேண்டுமென்று ஒருவரும் அவர்களுக்குச் சொல்லவில்லை. அதைச் செய்ய அவர்கள் தாமே தீர்மானித்தனர். ஆனால் அவர்கள் அப்படிச் செய்தது அந்தப் புதிய சீஷர்களை அவர்கள் நேசித்ததன் காரணமாக அல்ல. உண்மையில், தாங்கள் மெய்யாக இருப்பதைப் பார்க்கிலும் மேலானவர்களாக மற்ற ஆட்கள் தங்களைப் பற்றி நினைக்கும்படி செய்விக்க அவர்கள் விரும்பினர். ஆகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு இந்தப் பணம் முழுவதையும் தாங்கள் கொடுப்பதுபோல் தோன்றச் செய்ய அவர்கள் தீர்மானித்தனர். ஆனால் உண்மையில் அதன் ஒரு பாகத்தை மாத்திரமே கொடுத்துவிட்டு மீதியைத் தாங்கள் வைத்துக்கொள்ளப்போகிறவர்களாக இருந்தனர். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? —
இயேசுவின் அப்போஸ்தலரைக் காணும்படி அனனியா முதலாவதாக வந்தான். அவன் அந்தப் பணத்தை அவர்களிடத்தில் கொடுத்தான். ஆனால் அனனியா முழுப் பணத்தையும் கொடுத்து விடவில்லை. கடவுளுக்கு இது தெரியும். ஆகவே அவர், அனனியா உண்மையுள்ளவனாக இல்லை என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு அறியும்படி செய்தார். அதன்பேரில் பேதுரு பின்வருமாறு கூறினான்:
‘அனனியாவே, இதைச் செய்யும்படி சாத்தான் உன்னைச் செய்விக்க நீ ஏன் இடங்கொடுத்தாய்? நிலம் உன்னுடையதாக இருந்தது. நீ விற்கவேண்டியதில்லையே. அந்த நிலத்தை நீ விற்றப் பின்புங்கூட, அந்தப் பணத்தைக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்பதைத் தீர்மானிப்பது உனக்குரியதாய் இருந்ததே. ஆனால் அந்தப் பணத்தில் ஒரு பாகத்தை மாத்திரமே நீ கொடுக்கையில் பணம் முழுவதையுமே கொடுப்பதுபோல் நீ ஏன் பாசாங்கு செய்தாய்? இதனால் நீ பொய் சொன்னாய், எங்களிடத்தில் மட்டுமல்ல, கடவுளிடத்தில்தானே பொய் சொன்னாய்.’
இது விளையாட்டல்லாத ஒரு காரியமாயிருந்தது. அனனியா பொய் சொல்லிக் கொண்டிருந்தான்! தான் செய்யப் போவதாகச் சொன்னதை அவன் செய்யவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் அதைச் செய்வதாக வெறுமென பாசாங்கே செய்தனர்.
அடுத்தபடியாக என்ன நடந்ததென்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அது சொல்வதாவது: ‘அனனியா பேதுருவின் வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான்.’ அனனியா மரணம் அடையும்படி கடவுள் அடித்தார்! அவனுடைய உடல் வெளியே கொண்டுபோய் அடக்கம் செய்யப்பட்டது.
ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கப்பால் அவனுடைய மனைவியாகிய சப்பீராள் வந்தாள். தன்னுடைய கணவனுக்கு என்ன சம்பவித்ததென்பது அவளுக்குத் தெரியாது. ஆகவே பேதுரு: ‘நீங்கள் இருவரும் அந்த நிலத்தை, எங்களிடத்தில் கொடுத்த அந்தப் பணத் தொகைக்குத்தான் விற்றீர்களா?’ என்று அவளைக் கேட்டான்.
சப்பீராள் பதிலளித்து: ‘ஆம், அந்தத் தொகைக்குத்தான் நாங்கள் அந்த நிலத்தை விற்றோம்,’ என்றாள்.
ஆனால் அது ஒரு பொய்! அவர்கள் பணத்தில் சிறிதைத் தங்களுக்காக வைத்திருந்தார்கள். ஆகவே கடவுள் சப்பீராளும் மரணமடையும்படி அடித்தார்.—அப்போஸ்தலர் 5:1-11.
அனனியாவுக்கும் சப்பீராளுக்கும் சம்பவித்த இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறதென்று நீ நினைக்கிறாயா? — ஆம். கடவுள் பொய்யர்களை விரும்புகிறதில்லை என்று இது நமக்குக் கற்பிக்கிறது. நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
பொய் சொல்வது பெரிய குற்றமல்ல என்று பலர் சொல்லுகின்றனர். அவர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பொய்களைச் சொல்லுகின்றனர். ஆனால் அது சரியென்று நீ நினைக்கிறாயா? —
பூமியில் இருக்கும் எல்லா வியாதியும், வேதனையும்,
மரணமும் ஒரே பொய்யின் காரணமாக வந்ததென்று உனக்குத் தெரியுமா? — பிசாசானவன், முதல் மனுஷியாகிய ஏவாளிடத்தில் கடவுளைப் பற்றிப் பொய் சொன்னான். இதன் விளைவாக அவள் கடவுளுடைய சட்டத்தை மீறினாள். பின்பு அவள், ஆதாமும் கடவுளுடைய சட்டத்தை மீறும்படிச் செய்தாள். இப்பொழுது அவர்கள் பாவிகளாக இருந்தார்கள், அவர்கள் பிள்ளைகள் யாவரும் பாவிகளாகப் பிறப்பார்கள், பாவத்தின் காரணமாக இவர்கள் பாடுபட்டு மரிப்பார்கள். இதெல்லாம் எப்படித் தொடங்கிற்று? — ஒரே பொய்யில்.பிசாசு “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கி”றான் என்று இயேசு சொன்னதில் அதிசயம் ஒன்றுமில்லை. அவனே முதல் பொய் சொன்னவன். எவனாவது பொய் சொல்லுகையில், அவன் பிசாசு செய்ததையே செய்கிறவனாக இருக்கிறான். பொய் சொல்லத் தூண்டப்படுகிறவர்களாய் நாம் எப்பொழுதாவது உணருவோமானால் இதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.—யோவான் 8:44.
அநேகத் தடவைகளில், ஒரு ஆள் ஏதாவது தவறு செய்கையிலேயே அதைப் பற்றிப் பொய் சொல்லத் தூண்டப்படுகிறவனாய் அவன் உணரக்கூடும். உதாரணமாக நீ ஒருவேளை எதையாவது உடைத்து விடுவாய். அப்படிச் செய்யும்படி நீ கருதியிருக்கமாட்டாய், ஆனால் எவ்விதமோ அந்தப் பொருள் உடைந்துவிட்டது. நீ என்ன செய்யவேண்டும்? — நீ அதை மறைத்து வைக்க முயன்று ஒருவரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?—
நாம் அனனியாவையும் சப்பீராளையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் உண்மையை மறைக்க முயன்றார்கள். அவர்களை மரிக்கும்படி அடிப்பதன் மூலம் அது எவ்வளவு கெட்ட காரியம் என்பதைக் கடவுள் காட்டினார்.
ஆகவே, நாம் என்ன செய்தாலும் கவலையில்லை. நாம் அதைப் பற்றி ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது. “மெய்யைப் பேசக்கடவன்,” என்று பைபிள் சொல்லுகிறது. மேலும், “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள்,” என்றும் சொல்லுகிறது. யெகோவா எப்பொழுதும் உண்மையைப் பேசுகிறார். நாமும் அதையே செய்யும்படி அவர் எதிர்பார்க்கிறார்.—எபேசியர் 4:25; கொலோசெயர் 3:9.
(நாம் எப்பொழுதும் உண்மையைப் பேசவேண்டும். இந்தக் குறிப்பே யாத்திராகமம் 20:16; நீதிமொழிகள் 6:16-19; 14:5; 12:19; 16:6 ஆகியவற்றில் கொடுக்கப்பட்டிருக்கிறது.)